கட்டுரைகள்

மச்சடோ டி ஆசிஸ் எழுதிய “மனநல மருத்துவர்” நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்

கட்டுரைகள் | வாசகசாலை

“பைத்தியக்காரர்களின் கூடாரம்”

தலைப்பை வைத்து இது ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். அதிலும் முக்கியமாக ஆள்கிறவர்களையும், ஆள்கிறவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறவர்களையும் பற்றியது அல்ல. அதையும் மீறி இந்தத் தலைப்பில் அரசியல் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக இருந்தால் அரசை எதிர்க்கிறவர்கள்தான் பைத்தியக்காரர்கள் என்று உங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஒரு மனிதன் பைத்தியம் ஆவதற்குத் தேவையான முக்கிய பண்புகளாய் ஞானம், பொறுமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அநியாயத்தைக் கண்டு கோபம் கொள்ளுதல் போன்றவைகள் இருக்கின்றன என்று இந்நூலின் ஆசிரியர் “மச்சடோ” நிறுவுகின்றார். அதிகாரத்தின் பயங்கர ஆபத்தைக் புரிந்து கொள்வதை காட்டிலும், இப்போது வாழுகிற வாழ்க்கையின் புலப்படாத பாதுகாப்பே சௌகரியமாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிற மனிதர்கள் பைத்தியமாவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சமநிலை குறையாமல் வாழுகிறவர்கள் நிச்சயம் பைத்தியங்கள் அல்ல. சரி இப்போது பைத்தியங்களின் கூடாரத்திற்குள் செல்லலாம்.

பல நாடுகளில் பணிபுரிந்த அனுபவத்தைப் பெற்ற மனநல மருத்துவர் “சீமோன் பக்காமார்த்தே” தன் நாடான பிரேசிலின் இத்தாகூய் நகரத்திற்கு மருத்துவ சேவை புரிவதற்காக திரும்புகிறார். அந்நகரில் வன்முறை மனோபாவம் கொண்ட பைத்தியக்காரர்கள் வீடுகளிலும், அமைதியான பைத்தியக்கார்கள் தெருவிலும் விடப்பட்டிருக்கிறார்கள். வன்முறையோ அமைதியோ இருசாராருமே எவ்வித அக்கறையும் சிகிச்சையுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். மனநலம் குன்றியவர்களை அரசும், குடும்பத்தினரும் இப்படி நடத்துவதைக் கண்ட மருத்துவர் மிகுந்த வேதனைக்குள்ளாகிறார். இவை எல்லாவற்றையும் மாற்ற விரும்பிய அவர் மனநலம் குன்றியவர்களுக்காக ஒரு மருத்துவமனை கட்ட நகர சபையிடம் அனுமதி கோருகிறார். மனநலம் குன்றியவர்களை ஒரே இடத்தில் வைப்பது என்பதே பைத்தியக்காரத்தனமான எண்ணமாக பலருக்குத் தோன்றியது. ஆனால் எல்லோரின் இந்த எண்ணங்களையும் பொய்யாக்கி மருத்துவர் அந்த மருத்துவமனையை அரசின் அனுமதியுடன் திறந்துவிடுகிறார். அந்த மனநல காப்பகத்துக்கு “​கி​ரீன் ஹவுஸ்” என்ற பெயரையும் சூட்டுகிறார்.

முதலில் சில வாரங்கள் பைத்தியங்கள் என்று தெளிவாக அறியப்பட்ட மனிதர்கள் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டார்கள். வெளிப்படையாக பைத்தியம் என்று தெரியாத மக்கள் இதை வரவேற்றார்கள். ஆனால் சில வாரங்களில் மருத்துவரின் தேர்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. செல்வச்செழிப்பிலிருந்து வறுமைக்கு தள்ளப்பட்ட “கோஸ்தா” என்ற மனிதனை காப்பகத்தில் அடைத்தார். கோஸ்தாவை மருத்துவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் தன்னிடம் இருந்த எல்லா செல்வங்களையும் அந்த மனிதர் மற்றவர்களுக்கு வட்டி இல்லாத கடனாகக் கொடுத்திருந்தார். கொடுத்த கடனை திரும்பக் கேட்கும் வழக்கம் இல்லாததால் கடன் வாங்கியவர்கள் யாரும் அதை அவருக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. செல்வந்தராக இருந்த வரை அவருக்கு மரியாதை கொடுத்த இந்த மனிதர்கள், வறுமையின் பிடியில் அவர் சிக்கிய பிறகு அவரை மிகவும் கண்ணியக் குறைவாக நடத்தலானார்கள். ஆனால் கோஸ்தாவோ தன்னிடம் கடன் பெற்றவர்கள் பெறாதவர்கள் என்று எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியமாக நடத்தினார். தன்னிடம் மீதம் இருந்த கடைசி பணத்தையும், ஏற்கனவே கடன் வாங்கி திரும்பத் தராத ஒரு மனிதனுக்கு கொடுத்து விடுகிறார். சில நாட்களில் அவர் மருத்துவரால் காப்பகத்துக்கு கொண்டுவரப்படுகிறார். மருத்துவர் இதற்கு சொன்ன காரணம் “கோஸ்தா உறுதியாகப் பைத்தியம்தான்: இல்லையென்றால் எல்லா பணத்தையும் அவர் இப்படி வீணாக்கியிருக்க மாட்டார்”.

Mananala maruthuvar cover page1

அடுத்தது மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து கடும் உழைப்பின் மூலம் வசதியான நிலையை அடைந்த ஒரு மனிதனைப்பற்றி மருத்துவர் கேள்விப்படுகிறார். அந்த மனிதனின் லட்சியம், ஓய்வு பெறும்போது தனக்காக ஒரு வீட்டை கட்டிக்கொள்ளவேண்டும் என்பதுதான். அந்த வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அந்த வீட்டைக் கட்டி இருந்தார். அந்த நகரத்தின் சிறந்த வீடு அது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த மனிதனின் ஒரே பொழுதுபோக்கு தான் கட்டிய வீட்டைப் பார்த்துக்கொண்டே இருப்பதுதான். அந்த மனிதனை மருத்துவர் காப்பகத்தில் அடைக்கிறார். அதற்கு மருத்துவர் சொன்ன காரணம் தான் கட்டிய வீட்டை அந்த மனிதன் வெறித்துப் பார்த்து கொண்டேயிருக்கிறான். அந்த மனிதனின் வீடு கற்களால் கட்டப்பட்டிருப்பதால், அவன் ‘பெட்ரோபிலியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவனுக்கு நிச்சயம் நாம் சிகிச்சை அளிக்கவேண்டும்.

மருத்துவரின் வேட்டை தொடர்ந்தது. தன் மனைவியை ரொம்பவும் புகழ்ந்த ஒருவனை, உண்மையை மட்டும் பேசும் இன்னொரு மனிதனை, மற்றவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் ஒருவனை, நேர்மையுடன் நடந்து கொண்ட ஒருவனை என்று எல்லோரையும் காப்பகத்தில் அடைக்கிறார்.​ ‘​கி​ரீன் ஹவுஸ்​​’ என்பது ஒரு தனியார் சிறைச்சாலை என்று கூறி ஒரு மனிதன் மருத்துவருக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபடுகிறான். புரட்சி செய்கிறவன் நிச்சயம் சமநிலை தவறியவனாகத்தான் இருப்பான். எந்த ஒன்றிலும் சமநிலை இழந்து ஒருவன் நடந்துகொண்டால் அவனை பைத்தியக்காரன் என்று அழைக்கலாம் என்று கூறி அவனையும் காப்பகத்தில் அடைக்கிறார். இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு நாள் தன் மனைவியையும் காப்பகத்தில் அடைக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம், “அவளொரு நோய்வாய்ப்பட்ட பெண்ணோ என்று எனக்கு நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதுவும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து வந்ததிலிருந்து அவளுக்கு பட்டுத்துணிகள், வெல்வெட், ஜரிகை மற்றும் நகை மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. எப்போதும் பொருட்களை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். அதுவும் எங்காவது விருந்துகளுக்கு செல்லும் முந்தைய நாள் என்ன உடை உடுத்துவது, என்ன ஆபரணம் அணிவது என்று என்னையும், அவளுக்குள்ளும் கேட்டு கொண்டேயிருக்கிறாள். மனத்தளர்ச்சி நோயின் தெளிவான அறிகுறி. அதனால் அவளை உடனே அடைக்கும்படி ஆகிவிட்டது.” என்கிறார்.

மக்கள் மிகுந்த குழப்பத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகிறார்கள். யார் பைத்தியம் யார் பைத்தியம் இல்லை என்பதே எவருக்கும் தெரியாமல் போயிற்று. மற்றவர்களை அடைத்தது மட்டுமல்லாமல் தன் மனைவியையே காப்பகத்தில் அடைத்த மருத்துவரை என்ன சொல்வது என்று தெரியாமல் மக்கள் கலக்கத்தில் இருந்தனர். எப்போது தாங்கள் இழுத்து செல்லப்படப் போகிறோமோ என்ற பயத்திலேயே அவர்கள் நாட்கள் சென்றன. திடீரென்று ஒரு நாள், மருத்துவர் தன் ஆய்வின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தார். அதில் அவர் கூறிய விவரங்கள் என்னவென்றால், புள்ளிவிவரத்தை எடுத்து சோதித்துப் பார்த்ததில் மக்கள்தொகையில் ஐந்தில் நான்கு பங்கு மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சமநிலை இல்லாத மனிதர்கள் மனநோயாளிகள் என்ற தன்னுடைய கோட்பாட்டை மறுஆய்வு செய்ததில் தான் முன்வைத்த கோட்பாடு மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அதற்கு நேரெதிரான கோட்பாடு உண்மையாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதாவது சமநிலை குலைந்தவர்கள் இயல்பானவர்கள் என்றும், சமநிலை குலையாதவர்கள் மனநோயாளிகள் என்று முடிவுக்கு வருகிறார். இந்த புதிய கோட்பாட்டின்படி ஏற்கனவே காப்பகத்தில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, வெளியே இருக்கும் மக்கள் காப்பகத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்று அறிவிக்கிறார்.

புதிதாகக் கொண்டுவரப்பட்டவர்களுக்கு மருத்துவர் அளித்த சிகிச்சைமுறையை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. ஒவ்வொரு நோயாளிக்கும் தீர்வாக அவர்களின் பண்புகளுக்கு நேரெதிரான பண்புகளைப் பயிற்சி செய்யச் சொன்னார். அதாவது அமைதியானவன் மூர்கமானவனாகவும், கஞ்சன் வள்ளல் போலவும், மற்றவர்களைப் புகழுபவன் தூற்றுவது போலவும், சிகிச்சைக்கு இழுத்துவரப்பட்டவர்களைப் பயிற்சி செய்யச் சொன்னார். யார் சரியான முறையில் இந்த சிகிச்சையை பின்பற்றினார்களோ அவர்களை விடுவித்தார். சில மாதங்களில் காப்பகத்தில் அடைக்கப்பட்ட எல்லா மனநோயாளிகளையும் பூரண குணமடைந்ததாக கூறி மருத்துவர் விடுவித்தார். இந்நகரில் யாரும் இப்போதும் பைத்தியம் இல்லை.பைத்தியமாய் இருந்தவர்கள் எல்லாம் குணமாகி விட்டார்கள் என்று அறிவித்தார். அந்நகரில் இருந்த எல்லோரும் மருத்துவரை கடவுளுக்கு இணையாகக் கொண்டாடினர். இது நடந்த சில நாட்களில் மருத்துவருக்கு பல கேள்விகள் எழுகின்றன. ‘தான் சிகிச்சை கொடுத்த மனிதர்கள் எல்லாரும் உண்மையில் மனநிலை பிறழ்ந்தவர்களா? நான் உண்மையிலேயே அவர்களைக் குணப்படுத்தினேன் என்று சொல்லமுடியுமா? அல்லது மனநிலைப் பிறழ்வு மிகவும் இயல்பானதா? என் உதவி இல்லாமலேயே அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் வல்லமை கொண்டதா? ‘ கடைசியாக அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். இந்நகரில் மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று எவரும் இல்லை. அவர்களின் நோய் என்பது சஞ்சலமும் அதீதமும் தான்.

மறுக்க முடியாத சமநிலை கொண்ட ஒரு மனிதனை கண்டுபிடிக்க முடிந்தால் தன்னுடைய ஆய்வு முற்றுப்பெறும் என்று நம்பினார். ஆனால் அப்படிப்பட்ட ஒருவன் இந்நகரில் இல்லையென்று அவருக்கு முன்னமே தெரிந்திருந்தால் கடும் மனஇறுக்கத்திற்கு உள்ளானார். சில நிமிடங்களில் மனநல மருத்துவரின் இறுக்கம் குறைந்து முகம் பிரகாசிக்கத் தொடங்கியது. மருத்துவர் என்ன நினைத்தார் என்றால், மறுக்கமுடியாத சமநிலை கொண்ட மனப்பிறழ்வின் பொருத்தமான உதாரணமாகத் தான் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். ஒரு மனிதன் பைத்தியம் ஆவதற்குத் தேவையான எல்லா பண்புகளும் தன்னிடம் இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். தனக்கு நெருங்கிய நண்பர்கள் எல்லோரையும் சந்தித்து தன்னிடம் என்ன குறை இருக்கிறது என்று கேட்டார். உங்களிடம் எந்த குறையும் இல்லை. எல்லா விதங்களிலும் நீங்கள் சரியாகத்தான் இருக்கிறீர்கள் என்று அவர் சந்தித்த மனிதர்கள் ஒன்றுபோல் கூறினர். குறைகளற்ற மனிதன் என்று ஒருவனும் கிடையாது. அப்படி குறைகளற்று இருப்பது தான் பைத்தியமாவதற்கான முழு தகுதி என்று சொல்லிவிட்டு தன்னையே காப்பகத்தில் ஒப்படைத்துக் கொண்டார். கிரீன்ஹவுசில் நுழைந்து கதவைத் தாழிட்டு கொண்டு தன்னை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். சில மாதங்களில் மோசமாகப் பைத்தியம் பிடித்த நிலையில் மருத்துவர் இறந்து போனதாகக் கதை முடிகிறது.

இக்கதையை வாசிக்கும்போது எனக்கு மிக நெருக்கமாக தோன்றிய கதை செகாவின் “ஆறாவது வார்டு”. ஆறாவது வார்டு நாவலிலும் ஒரு மனநல மருத்துவர் வருவார். இருபது வருடங்களுக்கு மேலாக அந்த மனநல காப்பகத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான சிகிச்சையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பார். நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருக்கு இடம் மனிதர்கள் வாழுவதற்கே தகுதியற்ற இடமாய் இருக்கும். தன்னுடைய வாழ்க்கை எந்த வித பிரச்சனைகளையும் சந்திக்காதவரை மற்றவர்களின் வாழ்வைப் பற்றி யோசிக்காத மனிதராய் இருப்பார். அவரைப் பொறுத்தவரை எல்லாம் தானாக மாறும். அந்த மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருப்பதை மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்றவேண்டும். அது மட்டும் இல்லாமல் வலி, பசி, நிராகரிப்பு, அவமானம் இவை எல்லாம் நம் மனதின் கற்பனைகள். நம் மன​​ம் இலகுவாக இருந்து, புறத்தின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நிச்சயம் நம்மால் வாழ்வின் மகிழ்ச்சியை சுவைக்கமுடியும் என்று தத்துவார்த்தமாக பேசுகிறவர். மருத்துவருக்கு முற்றிலும் நேர்மாறாக ​சிறுவயதில் ​இருந்தே ​பல துன்பங்களை எதிர்கொண்டு​,பிற்காலத்தில்​ ஒரு கௌரவமான பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மனிதர் ‘இவான்’. சிறுவயதில் இருந்தே துன்பங்களை எதிர்கொண்டதாலோ என்னவோ எப்போதும் ஒரு பாதுகாப்பின்மையில் உழலும் ஒரு மனிதனாக அவர் இருக்கிறார். அந்த பாதுகாப்பின்மை உச்சத்தில் இருந்த நாளில் மிகவும் அழைக்கழிக்கப்பட்டு மன அயற்சிக்கு உள்ளாகிய அவரைக் கொண்டுவந்து ஆறாவது வார்டில் அடைக்கின்றனர். யதார்த்தமாக ஒரு நாள் ஆறாவது வார்டுக்கு வருகிறார் மருத்துவர். அதன் பிறகு இவானுக்கும் மருத்துவருக்கும் இடையே நிகழும் உரையாடல்தான் நாவலின் முக்கிய அம்சம். மருத்துவரின் வறட்டு தத்துவங்களையும், பயனில்லாத அறிவுரைகளையும் முற்றிலும் நிராகரிக்கிறார் இவான். மனநோயாளி என்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவரிடம் இதை சற்றும் எதிர்பார்க்காத மருத்துவர், இவான் தன் முன் வைக்கும் தர்க்கங்களை அவரால் மறுக்கமுடியவில்லை. இவானை தினமும் சந்திக்கவும், அவருடனான உரையாடலை சிந்திக்கவும் தொடங்குகிறார். இவானின் மீது அவருக்கு பெருமதிப்பு உண்டாகிறது. தான் இதுவரை சந்தித்த மனிதர்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இவான் ஒரு மேம்பட்ட மனிதராக தெரிகிறார். இவானுடனான மருத்துவரின் தினசரி சந்திப்பு அங்கு பணிபுரியும் சகமருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் சந்தேகத்தை கொடுக்கிறது. ஒரு பைத்தியக்காரனை தினமும் ஒரு மருத்துவர் சந்திக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் என்று பேச்சு எழுகிறது. ஒரு நாள் மருத்துவரை பிடித்து இவான் இருந்த ஆறாவது வார்டிலேயே அடைக்கின்றனர். இவ்வளவு நாள் இவானுக்கு சொன்ன அறிவுரைகள் எதையும் மருத்துவரால் தனக்கு சொல்லிக்கொள்ள முடியவில்லை. துன்பத்தை பற்றிய அவருடைய வெற்று தத்துவங்கள், தர்க்கங்கள் எல்லாம் தோற்றுப்போயின. தன்னை விடுவிக்கச் சொல்லி அங்கு இருந்த பணியாளர்களை மிரட்டுகிறார், கெஞ்சுகிறார், அழுகிறார். எதுவும் செல்லுபடியாகவில்லை. அடுத்த நாள் அவர் ஆறாவது வார்டிலேயே இறந்துவிடுவதாக கதை முடியும்.

பிரேசிலில் பிறந்த மச்சடோவும், ருசியாவில் பிறந்த செகாவும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள். இருவரிடமும் இருக்கும் பெரிய ஒற்றுமை இவர்கள் எழுத்தில் இருக்கும் பகடி. அதிகபட்சம் நூறு பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிற நாவல். எழுதப்பட்டு நூறு வருடங்களைக் கடந்திருந்தாலும் இன்றைய காலத்திற்கும் நூறு சதவீதம் அப்படியே பொருந்திப் போகிறது. மச்சடோவே சொல்லுவது போல ‘கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கழித்துவிட்டு ஒரு காலத்தை உருவாக்க முடியுமென்றால் அது இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம்: கலைதான் நம் மீட்சிக்கான ஒரே வழி’. தமிழில் இந்நூலை ராஜகோபால் மொழிபெயர்த்திருக்கிறார். நான் இது வரை வாசித்த சிறப்பான மொழி பெயர்ப்புகளில் இதுவும் ஒன்று. சற்று பிசகினாலும் நம் வாசிப்பை தொய்வாக்கக்கூடிய ஒரு படைப்பை மிகச்சிறந்த முறையில் தமிழாக்கம் செய்த ராஜகோபால் அவர்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும்.

ஜப்பானிய எழுத்தாளர் ‘ஹாருகி முரகாமி’ தன் ‘நோர்வீஜியன் வுட்​’ ​நாவலில் சொல்வது போல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநல காப்பகத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது, தங்களிடம் இருக்கும் குறைபாட்டை சரிசெய்வதற்கா அல்லது அந்த குறைபாட்டிற்கு தங்களை பழகிக்கொள்வதற்கா? மச்சடோ டி ஆசிஷ்’ன் “மனநல மருத்துவர்” நாவலை வாசித்து முடிக்கையில் உங்களுக்கு ஒருவேளை உண்மை தெரியவரலாம்.

மனநல மருத்துவர் ​ ​(Psychiatrist​)

நூல் ஆசிரியர்: ​மச்சடோ டி ஆசிஸ் (​Machado De Assis /Brazil​)

தமிழில்: ​ராஜகோபால்

பதிப்பகம்: ​சந்தியா பதிப்பகம்

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Back to top button
Close