இணைய இதழ்இணைய இதழ் 60சிறுகதைகள்

பூரண பொற்கொடி – சுரேஷ் பரதன்

சிறுகதை | வாசகசாலை

பொம்பளைக்கு எதிரின்னு யாரும் வெளியிலேர்ந்து தனியா வரத் தேவையே இல்லை. அவளை பொம்பளைன்னு சொல்ல வைக்குற அந்த உடம்பு ஒன்னே போதும். வழி நிறைய சம்பாதிச்சு வச்சுருக்குற எதிரிங்க ஒவ்வொருத்தரா வர்ற மாதிரி வயசு ஏற ஏற இந்த உடம்பு படுத்துற பாடு இருக்கே சொல்லி மாளாது. வயிறு பொதும பொதும தண்ணி குடிச்சாச்சு. இந்த லேப் டெக்னீசியன் இன்னும் ஒரு பாட்டில் குடிச்சுட்டு வான்னு சொல்லி உக்கார வச்சுருக்கா. தண்ணி நிறைய குடிச்சதுல ஒன்னுக்கு வேற முட்டிக்கிட்டு வருது. இப்பப் போக முடியாது. போனோம்ன்னு சொன்னாலோ அல்லது அத அந்த டெக்னீஷியன் பாத்தாலோ அப்படி ஒரு கத்து கத்துவா. ஏற்கனவே வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு. எப்ப ஸ்கேன் எடுக்குறது எப்பப் போறதுன்னு வெளியே சிகரெட் புடிக்கப் போயிருக்குற செல்வம் வந்தா திட்டும். 

ஸ்கேன் சென்டரில் காத்திருந்த புவனாவுக்கு படபடப்பாய் வந்தது. கடைசியாய் குளித்து அறுபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாதாமாதம் சரியான கணக்கில் முப்பது நாட்களுக்குள் வந்து கொண்டிருந்தது, இந்த மாதம் இப்படி வராமல் தள்ளிப் போயிற்று. ஐம்பது ரூபாய் கொடுத்து மெடிக்கலில் வாங்கிய டெஸ்ட் ஸ்டிக் ‘பாசிட்டிவ்’ என்று சொல்லிவிட்டது. மூத்ததாய் பையனும் அடுத்தடுத்து இரண்டு பெண்களுமாய் இருக்கையில் இது நான்காவதாய் தேவைதானா என்று கேட்கத் தெரிந்த செல்வத்துக்கு அவ்வேளைகளில் பாதுகாப்பாய் இருக்கத் தெரியவே இல்லை. நாள் கணக்கை மட்டும் கேட்கும். பல வேளைகளில் நாள் கணக்கெல்லாம் இப்படித்தான் தப்பு தப்பாய்ப் போய்விடுகிறது. ஆறு மாதங்களுக்கு முன் இதே மாதிரி தள்ளிப் போனபோது காலையிலும் மாலையிலும் குத்துகுத்தாய் எள்ளள்ளி மென்று கலைத்த போது உடலில் உண்டான பெரும் வலி மனதோடு நிரந்தரமாய் தங்கிவிட்டது. இப்போது மீண்டும். எள்ளிற்கும் பச்சைப் பப்பாளிக் காய்க்கும் மசியவே இல்லை இந்த முறை வயிற்றுக்குள் இருப்பது. 

‘டோக்கன் நம்பர் பதினேழு யாரும்மா? எத்தனை தடவை கூப்புடுறது?’ . டெக்னீஷியனின் சத்தம் கேட்டு புவனா நினைவுக்கு வந்தாள். அவளது டோக்கன் செல்வத்திடம் இருந்தது. அது பதினேழுதான். டோக்கன் வாங்கும் போது பார்த்தது ஞாபகத்தில் இருந்தது. மெதுவாய் எழுந்தாள். ஸ்கேன் ரூம் வாசலுக்குப் போனாள். அங்கிருந்த டெக்னீசியனிடம் புவனா சொன்னாள்… ‘பதினேழாம் நம்பர் டோக்கன் நாந்தான். ஆனா, டோக்கன் என் வீட்டுக்காரர்கிட்ட இருக்கு. அவர் வெளியில போயிருக்கார். போன் பண்ணி சொல்லீட்டேன். வந்து கிட்டே இருக்கார்.’

‘டோக்கன் இல்லாம எப்படிம்மா நம்புறது? எத்தனை பேர் வெயிட் பண்றாங்க பாருங்க. வேற யாருகிட்டயாவது பதினேழாம் நம்பர் டோக்கன் இருக்காங்க?’ 

காத்திருந்த எல்லாரையும் பார்த்துச் சத்தமாய்க் கேட்டாள் டெக்னீஷியன். யாரும் பதில் சொல்லாமல் இருக்கவே புவனாவைப் பார்த்து ‘பணம் கட்டுன இரசீதாவது நீங்க வச்சிருக்கீங்களா. இல்ல அதுவும் உங்க வீட்டுக்காரர் கிட்ட தான் இருக்கா..?’ 

‘வச்சுருக்கேன். இந்தாங்க.’ 

‘சரி வாங்க. வயிறு நிறைய தண்ணி குடிச்சிட்டீங்களா.. ?’

‘ஆமாங்க. ரொம்ப நேரமா பாத்ரூம் போகனும் போல இருக்கு. ஆனா போகலை. ‘

‘நல்லதும்மா. ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சிரும். அப்புறமா போயிக்கலாம். இங்க ஏறிப் படுங்க. சேலையை லூஸ் பண்ணுங்க. பாவாடை நாடாவையும் கழட்டிடுங்க. போதும். ‘

அடி வயிறு வரை ஜெல்லைத் தடவி ஸ்கேன் எடுக்க ஆரம்பித்தவளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாள் புவனா. 

‘குழந்தை தெரியுதுங்களா? கன்ஃபார்ம் தானுங்களா..?’ 

‘அதெல்லாம் நான் சொல்லக் கூடாதும்மா. ரிப்போர்ட் கொடுப்போம். அதை ஸ்கேன் ரெக்கமெண்ட் பண்ணுன டாக்டர் கிட்ட காட்டி அவங்ககிட்டேயே கேளுங்க.’ 

‘உங்களுக்குத் தெரியும்தானே. அதான் கேட்டேன். கன்ஃபார்ம்ன்னு தெரிஞ்சா டிஅன்ஸி பண்ணனும் அதான் கேட்டேன்’ – சொல்லும் போதே புவனாவுக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டுவிட்டது. 

அதைப் பார்த்த டெக்னீஷியனுக்கு உள்ளே உடைந்து விட்டது போல. ‘நாஞ்சொல்லக் கூடாது. நீங்க கேக்குறீங்கன்னு சொல்றேன். எத்தனை நாளாச்சு குளிச்சு. .?’

‘அறுபது நாளுக்கு மேல ஆச்சு. ப்ரெக்னன்ஸி கிட் பாஸிட்டிவ்ன்னு தான் சொல்லுச்சு.’ 

‘அறுபது நாளா. அப்படின்னா கரு இந்நேரம் யூட்ரஸுக்கு வந்திருக்கும். ஆனா, யூட்ரஸ்ல இல்லையேம்மா. நல்லாத் தெரியுமா..? கிட்டுல ரிசல்ட் பாசிட்டிவ்ன்னுதான் வந்துச்சா..?’ 

‘ஆமாம். இன்னிக்கு காலையில கூட ஒரு தரம் டெஸ்ட் பண்ணினேன். எதுக்கும் இருக்கட்டுமேன்னு அதை என் ஹேண்ட் பேக்கில் இன்னும் வச்சுருக்கேன். பாருங்க.’

‘அதெல்லாம் வேண்டாம்மா. ஆனா வயித்துல குழந்தை இல்லை. இதுக்கு மேல டாக்டர்கிட்ட கேட்டுக்கோங்க. ஸ்கேன் முடிஞ்சிருச்சு. எழுந்திருங்க. ட்ரெஸ் சரி பண்ணிக்கிட்டு வெளிய வெயிட் பண்ணுங்க. இருபது நிமிஷத்துல ரிப்போர்ட் ரெடியாயிரும். ரிஷப்ஷனல வாங்கிக்கோங்க. பதினெட்டாம் நம்பர் டோக்கன் வச்சுருக்குறவங்களை வரச் சொல்லிருங்க.’ 

டெக்னீஷியன் படபடவென்று பேசினாள். புவனாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிட் ரிசல்ட் பாஸிட்டிவ். ஸ்கேன் ரிசல்ட் நெகட்டிவ். அப்படின்னா இப்ப என்ன பண்றது.. குழம்பிப் போய் நின்றாள் புவனா. 

-2-

‘சிச்சுவேஷன் இஸ் ஸீரியஸ் மிஸஸ் செல்வம். எவ்ரி மன்த் ஓவரியிலேர்ந்து எக் ஃபெல்லோப்பியன் ட்யூப் வழியா யூட்ரஸுக்கு ட்ராவல் பண்ணும் போது தான் யூ வில் கெட் ப்ரெக்னென்ட். டூ த்ரீ டேய்ஸ்ல எக் யூட்ரஸுக்கு வந்துரும். உங்களுக்கு இந்நேரத்துக்கு யூட்ரஸுக்கு வந்திருக்கனும். ஆனா, வரலை. திஸ் இஸ் கால்ட் அன் எக்டாபிக் ப்ரெக்னன்ஸி. யூ டோன்ட் வொர்ரி. ட்ரீட்மெண்டஸ் ஆர் தேர். பட் வி ஹவ் டு ஆக்ட் ஃபாஸ்ட். மொதல்ல கரு முட்டை எங்க இருக்குன்னு கண்டுபுடிக்கனும். அல்ட்ரா சவுண்ட் எடுத்தா தெரிஞ்சிரும். ஃபெல்லோப்பியன்லேயே இருந்துச்சுன்னா மெடிக்கேஷன்ல சரி பண்ணிரலாம். அதைத் தவிர வேற எங்கயாச்சும் லைக் அப்டமன்லேயோ அல்லது ஓவரிஸ்லேயோ இருந்துசுன்னா வி மஸ்ட் கோ ஃபார் ஆபரேஷன் இம்மீடியேட்லி. உடனே ஆபரேஷன் பண்ணலைன்னாத்தான் ரிஸ்க். லைஃப் த்ரெட்டனிங்க். ஐயாம் ரைட்டிங்க் ஃபார் அல்ரா சவுண்ட். நாளைக்கே எடுத்துட்டு வந்துருங்க. ஓகே.?’ 

பாதி மட்டுமே புரிந்து கொள்ளும்படியான ஆங்கிலத்திலும் மருத்துவ மொழியிலும் பேசிய டாக்டரின் அறையிலிருந்து வெளிவந்த செல்வத்தின் முகத்திலும் புவனாவின் முகத்திலும் பயத்தின் ரேகைகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. புவனாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. பெருஞ்சத்தமாய் அழ வேண்டும் போல இருந்தது. க்ளினிக் என்பதால் சத்தத்தை அடக்கிக் கொண்டாள். ஆனாலும் கண்ணீர் தாரை தாரையாய் வழிவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

‘அழாதே புவனா.. அழுது ஒன்னும் ஆகப் போறதில்லை. வா வீட்டுக்குப் போவோம்’ – என்றான் செல்வம். 

புவனாவுக்கு சுள்ளென கோவம் வந்தது. அப்போதே அவனை நறுக்கென்று நான்கு கேள்விகளாவது கேட்க வேண்டும் என்று தோன்றியது. அடக்கிக் கொண்டாள். 

‘வீட்டுக்கு வேண்டாம்’ – ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் 

‘அப்ப, இங்கேயே உக்காந்து அழப் போறீயா.. ?’

‘இல்லை. ஆனா, இப்ப என்னால வீட்டுக்கு வர முடியாது.’ 

‘உன்னையக் கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு தான் நா ஆபீஸுக்கு போகனும்’ – செல்வம் சொன்னான். 

‘நீங்க வேணா ஆபீஸுக்கு போங்க. நா தனியா போய்க்கிறேன்.’ 

‘எங்க போற..?’ 

‘எங்கயாச்சும் போறேன்.’

செல்வம் பயந்து போய்விட்டான் என்று அவனது பார்வை சொல்லியது. புவனாவே மீண்டும் சொன்னாள். ‘பயப்படாதீங்க.. செத்தெல்லாம் போய்ட மாட்டேன். நீங்க ஆபீஸுக்குப் போங்க. சாயங்காலம் வீட்டுக்கு வர்றப்ப நான் அங்க இருப்பேன். போயிட்டு வாங்க.’ – கைப்பையைத் திறந்து காசிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு செல்வத்தை விடாப்பிடியாக அனுப்பி வைத்தாள். அவன் போனதும் கொஞ்ச நேரம் க்ளினிக்கிலேயே உட்கார்ந்திருந்தாள். கண்களைத் து த்தாள். இந்நேரத்தில் பூரணத்தக்காளைத் தவிர வேறு யாரும் அவளுக்கு ஆறுதல் தந்துவிட முடியாது என்று தோன்றியது. செல்போனை எடுத்து பூரணத்தக்காளை அழைத்தாள்.

-3-

‘என்ன புவனா.. உன் குரல் நல்லா இல்லையே.. உடம்புக்கு எதும் முடியலையா..?’ 

பூரணத்தக்காள் எப்போதும் இப்படித்தான். பேசும் தொனியிலிருந்தே எல்லாவற்றையும் எளிதில் கணித்துவிடுவாள். 

‘இல்ல.. வேற எதுனாச்சும் பிரச்சனையா.. செல்வம் திட்டுனானா..அழுதியா.. குரல் கம்மிப் போனாப்புல இருக்கே ..?’

கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருந்தாள் பூரணத்தக்காள். புவனா பதிலே சொல்லாமல் மௌனமாய் இருந்தாள். 

‘பதிலே சொல்லாம இருக்கத்தான் என்னையக் கூப்பிட்டியா?’ 

திரும்பவும் பூரணத்தக்காள் கேட்டாள். இனிமேல் பேசாமல் இருக்க முடியாது என புவனாவுக்குத் தெரிந்தது. போனிலும் இந்த விசயத்தை பேச முடியாது. 

‘ஸ்கூல்லயா இருக்கீங்க..?’ மெதுவாகக் கேட்டாள் புவனா. 

‘ஆமா.. என்ன விசயம்..? அவசரமா..? நீ இங்க வர்றியா.. இல்லை நான் லீவு சொல்லிட்டு வரட்டுமா..?’ 

‘லீவு சொல்ல முடியுமா.. ?’

‘ஒன்னு பண்ணு.. ஒரு ஆட்டோ எடுத்துட்டு ஸ்கூலுக்கு வந்துரு, அதுக்குள்ள நான் லீவு சொல்லிட்டு ரெடியா இருக்கேன். அதே ஆட்டோவுல வீட்டுக்குப் போயிரலாம். சரியா..?’

‘சரிக்கா..’ – என்றாள் புவனா…

பூரணத்தக்காள், புவனாவுக்கு அண்ணி முறை. ஆனால், செல்வம் அவளை அக்கா அக்கா என்றழைக்க புவனாவும் அவளை அக்கா என்றே அழைத்தாள். ஒரு நாத்தனாரைப் போல் அல்லாது தன் தங்கையைப் போலவே புவனாவைப் பூரணத்தக்காள் நடத்தி வந்திருக்கிறாள். திருமணமான இந்த பதினான்கு வருடங்களிலும் ஏதேனும் பிரச்சினை என்றால் புவனா நேரடியாய் பூரணத்தக்காளிடம் தான் பேசுவாள். புவனாவுக்கு ஆறுதலாயும் அவளின் பிரச்சைனைகளுக்கு தீர்வு சொல்பவளாயும் பூரணத்தக்காள் இருந்ததானாலேயே இப்போதும் புவனா அவளின் தோள் தேடிப் போனாள். புவனா ஆட்டோவில் ஸ்கூல் வாசலில் போய் நிற்கவும் பூரணத்தக்காள் ஸ்கூல் கேட்டிற்கும் வரவும் சரியாய் இருந்தது. பூரணத்தக்காள் ஆட்டோவில் ஏறியதும் அவள் தோளில் சாய்ந்து விம்மி அழுத் தொடங்கினாள் புவனா.

‘இங்கேயே அழணுமா.. வீட்டுக்குப் போற வரைக்கும் நிறுத்தி வைக்க முடியுமா .. இல்லை இந்த ஆட்டோக்கார தம்பியை கொஞ்ச நேரம் கீழே இறங்கி தள்ளிப் போய் நிக்க சொல்லட்டுமா..?’ 

புவனா கண்களைத் துடைத்தாள்.

‘எங்க போகனும்.. உன் வீட்டுக்கா இல்லை என் வீட்டுக்குப் போலாமா.. ?’

‘உங்க வீட்டுக்கே போகச் சொல்லுங்கக்கா.. ‘

ஆட்டோ கிளம்பியது. 

-4- 

பூரணத்தக்காள் வீட்டு வாசலில் ஆட்டோ நின்றதும் தோட்டத்தில் மாமர நிழலில் படுத்திருந்த அவள் வளர்க்கும் நாய் தன் வாலை ஆட்டியாட்டி ஓடி வந்து அவளைச் சுத்திச் சுத்தி வந்தது. ‘சுகி… ஏஞ்செல்லம். என்னடா அம்மா சீக்கிரம் வந்துட்டேன்னு பாக்கிறியா..?’ – என்று அதனைக் கொஞ்சியாவாறே வீட்டுக் கதவைத் திறந்த பூரணத்தக்காள் ‘உள்ள வா புவனா’ என்று திரும்பி அழைத்தாள். சுகி என்கிற அந்த நாயும் புவனாவிடம் வந்து அவள் தொடைகளில் தன் முன்னங்கால்களை தூக்கி வைத்துக் கொண்டு வாலை ஆட்டியவாறு நின்றது, புவனா அதன் தலையை வாஞ்சையாய்த் தடவினாள். இரண்டு மூன்று முறை தடவியது போதாமல் சுகி அவளை மீண்டும் தன் தலையைத் தடவச் சொல்லி மீண்டும் அவள் மீது தன் கால்களைத் தூக்கி வைத்தது. 

‘போதும் சுகி.. போ.. போய் படுத்துக்கோ..’ – பூரணத்தக்காள் சொன்னதும் தான் அது புவனாவை விட்டு நகர்ந்து போனது. 

‘ஆட்களைக் கண்டா சுகிக்கு தலைகால் புரியாம சந்தோசம் வந்துரும். நாளெல்லாம் பகல் பூரா தனியா கெடக்குல்லா. அதாம். இப்படி யாராச்சும் வந்துட்டாங்கன்னா அவன் அவங்களை விடுறதே இல்லை,’ – செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து புவனாவிடம் கொடுத்த பூரணத்தக்காள் கேட்டாள்.. ‘தண்ணி குடிச்சிட்டு அழுறியா இல்லை, அழுது முடிச்சிட்டு தண்ணி குடிக்கிறியா புவனா.. மொதல்லேயே தண்ணி குடிச்சீன்னா அழ முடியாது .. பாத்துக்கோ.. ‘

புவனாவுக்கு சின்னதாய் சிரிப்பு வந்தது. 

‘இல்லைக்கா.. இனி அழ மாட்டேன்.’ 

‘அது நல்ல புள்ளைக்கு அடையாளம்… இப்ப சொல்லு.. என்ன உன் பிரச்சினை.. ?’

‘அக்கா.. என்னன்னு சொல்றது.. எப்படி சொல்றதுன்னு தெரியாம நிக்கன். துக்கம்ன்னு வந்ததும் உங்ககிட்ட தான் வரனும்ன்னு தோணுச்சு, வந்துட்டேன். ஆனா, இந்த விசயத்தை உங்ககிட்ட சொன்னா அது உங்களுக்கு இன்னும் பெரிய துக்கமா இருக்கும்ன்னு அப்ப தோணலை.’

பூரணத்தக்காள் புவனாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள். 

‘என்ன திரும்பவும் முழுகாம இருக்கியா..?’ என்று கேட்டாள். இப்போது புவனாவுக்கு அழுகை வந்தே விட்டது. 

‘ஆமாக்கா.. ஆனா, வேணாம்ன்னு தோணுது. உங்க தம்பியும் அதையே தான் சொல்றாங்க.’ – என அழுதாள். 

பூரணத்தக்காள் சற்று தூரத்தில் படுத்திருந்த சுகியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கும் கண்ணில் நீர்க் கோர்த்திருந்தது. புவனா அவள் மடி சாய்ந்தாள். அவள் தலையைத் தடவியவாறே பூரணத்தக்காள் பேசினாள். 

‘எதிலேயுமே நான் பூரணமா இல்லை. ஒரு கொடி மாதிரி பருவத்துல பூத்தனா.. காய்ச்சனா.. கனிஞ்சனா.. எதுவுமில்லை. ஆனா, பேரு மட்டும் பூரண பொற்கொடி. முப்பத்திரண்டு வயசுல ஒரு கல்யாணம். அவர்கிட்ட கொறை இருந்துச்சோ… இல்லை ஏங்கிட்ட தான் குறையிருந்துச்சோ.. தெரியலை. என் வயித்துல ஒரு புழு பூச்சி கூட தங்கலை. போகாத கோயிலுமில்லை.. பாக்காத வைத்தியமில்லை.. ஊரும் உறவும் பேசாத பேச்சுமில்லை. பெத்து இறக்குனாத் தான் புள்ளையா.. ஒலகத்துல எத்தனைக் குழந்தைங்க அப்பனாத்தா இல்லாம ஆதரவுக்கு ஆளுக இல்லாம ஏங்கிக் கெடக்குதுங்க.. அதுல ஒன்னை கூட்டிக்கிட்டு வந்து வளத்துக்கலாம்ன்னு எத்தனை தரம் இந்த மனுசங்கிட்ட போராடியிருப்பேன். மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. காரணம்ன்னு பாத்தா எதுவுமே இல்லை. ஆனா, வேணாம். அது ஒன்னுதான் பதிலா வரும். வேற வழியில்லாம இந்தா இந்த சுகியைத் தான் வளக்குறேன். என்னையை மாதிரியே தான் இந்த சுகியும். எதுவும் பேசாது. சந்தோசமோ இல்ல துக்கமோ வாலாட்ட மட்டும் தான் தெரியும். சரி. நமக்கு விதிச்சது அவ்வளவு தான்னு நானும் பேசாம இருந்துட்டேன். நா வேணும் வேணும்ன்னு தவமா தவங்கெடெக்கேன். வேண்டாம்ன்னு நினைக்குற உனக்கு அள்ளிக் கொடுத்துருக்கு. இயற்கையோட விளையாட்டை பாத்தியா புவனா..’

புவனா சத்தமில்லாமல் அழுதாள். பூரணத்தக்காளின் மடிச் சேலை அவள் கண்ணீரில் நனைந்தது. இரண்டு பேரும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாய் அப்படியே இருந்தார்கள். பின் புவனா எழுந்தாள். ‘அக்கா.. காபி குடிக்கனும் போல இருக்கு.. போடவா.. ?’ – என்று கேட்டவாறே அடுப்பறைக்குப் போனாள். 

‘எனக்கும் குடிக்கனும் போலத்தான் இருக்கு. சக்கரை கொஞ்சம் குறைச்சலா போட்டு எடுத்துட்டு வா புவனா.. எத்தனை நாளாச்சு நீ குளிச்சு.. ?’

மீண்டும் முக்கிய புள்ளிக்கு வந்தாள் பூரணத்தக்காள். புவனா எல்லாம் விவரமாகச் சொன்னாள். ‘அப்படியா.. எங்கன தங்கியிருக்குன்னு தெரியலையா. அப்படின்னா அடுத்தால என்ன பண்ணனும். சரி. ஒன்னு பண்ணுவோம். ஒரு நடை அந்த சித்தா டாக்டரிடம் போயிட்டு வருலாம்.’ 

இருவரும் காபி குடித்துவிட்டு சித்த மருத்துவரிடம் போனார்கள். டாக்டருக்கு ஒரு அறுபது வயதுக்கு மேலாவது இருக்கும். அவரது வயதின் முதிர்ச்சி முகத்தில் சுருக்கங்களாக ஓடிக் கொண்டிருந்தது. அவர் புவனாவின் நாடி பிடித்து பார்த்தார். 

‘ஒரு நாடி தான துடிக்குது.. இரண்டாவது நாடி தெரியவே இல்லையே.. கண்டிப்பா இவங்க கர்ப்பமா இல்லை. இது வேற பிரச்சினை. மருந்து தாறேன்.. இரண்டு மூனு நாள்ல சரியாயிரும். கவலைப் படாம போயிட்டு வாங்க’ என்றார். 

புவனாவுக்கு அப்போது தான் ஆசுவாசமாக இருந்தது. 

******

sureshbarathan@gmail.com – 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close