நூல் விமர்சனம்

ஷான் கருப்பசாமி யின் ‘பொன்னி’ நாவல் வாசிப்பு அனுபவம்

அம்மு ராகவ்

நாவலின் தொடக்கமான இரண்டாம் நூற்றாண்டில், இளங்கோவதி முத்தரையர் என்ற பெயரிலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறார் ஷான் கருப்பசாமி. முதல் வரியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு நாவலின் இறுதி வரை தொடர்கிறது.வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து இரவெல்லாம் தூங்காமல் விடிய விடிய வாசித்திருக்கிறேன்….

கோலார் தங்க வயலை கதைக்களமாகக் கொண்டு, இந்திய உளவு அமைப்பான ‘ரா’ ,அமெரிக்கா உளவுத்துறையான CIA, சோழர்களின் இரகசியப் படையான இரண்ய சேனை ஆகிய மிகப்பெரிய சக்திகளின் தடைகளை ஒற்றை ஆளாக  தகர்த்தெறியும் துணிச்சல் மிக்க பெண்ணாக பொன்னி….

ஒரு பெண்ணை கதையின் நாயகியாக உருவாக்கியதற்கே ஆசிரியருக்கு நிறைய அன்புகள்…

ஒரு ஆணை இந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அந்தளவிற்கு வாசிப்பவர்களைக் கவர்கிறாள் பொன்னி.

செல்லம்மா,பொன்னி இந்த இரண்டு பெண்களே கதையின் மொத்த கனத்தையும் தாங்குகிறார்கள்.

உலகின் அத்தனை நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் ஒரே கரன்சி தங்கம்தான்.பல ஆயிரம் ஆண்டுகளாகத் தன் மதிப்பை சிறிதும் இழக்காமல் பல நாடுகளிலும் மனிதனுடன் பயணித்து வரும் ஒரே சொத்து தங்கம்தான்.இத்தகைய காரணங்களினாலேயே எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பலிகொடுத்து பூமிக்கடியில் இருந்து தங்கத்தை எடுக்க எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.

கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளாக தங்கம் கொடுத்த பூமி கோலார்.4,5 ஆம் நூற்றாண்டுக்குப் பின் அங்கு தங்கம் வெட்டியெடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பின் பிரிட்டிஷ் காலத்தில்தான் தங்கச் சுரங்கங்கள் திரும்ப செயல்பட ஆரம்பிக்கின்றன என்பது போன்ற தகவல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன.

பலகோடி அவுன்ஸ் தங்கம் இந்த வினாடியில் நம் காலடிக்குக் கீழே கூட இருக்கலாம்.ஆனால் நம்மால் என்ன முயன்றாலும் அதைக் கண்டிபிடிக்க இயலாது.அந்த அற்புத உலோகம் தானாக விரும்பித்தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். நம் இடைவிடாத தேடலைப் பார்த்து இரக்கப்பட்டுத்தான்,அது தன்னை கண்டுபிடிக்க நம்மை அனுமதிக்கும்.

அது வரை நாம் தேடித்தான் ஆக வேண்டும்.இதுவே நிதர்சனம்.

//ஒவ்வொரு பவுன் தங்கமும் குறைஞ்சது ஒரு மனுசனையாவது கொன்னுட்டுதான் மண்ணுக்கு மேல வருது// போன்ற வரிகள் இந்நாவலை வாசிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் குற்றவுணர்வைக் கொடுக்கும்.நாம் இன்று அணிந்திருக்கும் தங்கத்திற்காக பலியான உயிர்கள் எத்தனையோ??

முன்னுரையில் வரும் சுரங்கத் தொழிலாளர் ஒருவரின் பாடல்

உயிர் வதை….

இதுவரை சொல்லப்படாத சுரங்கத் தொழிலாளர்களது இருண்ட வாழ்க்கையை நாம் அறிந்து கொள்ள உதவும் ஆவணம் இந்நூல்.

மலையகத் தமிழர்களின் துயரை ‘எரியும் பனிக்காடு’ மூலமாக தெரிந்து கொண்டதுபோல், கோலார் தங்கச்சுரங்கத் தொழிலாளர்களின் இரத்த வரலாற்றை இந்த ‘பொன்னி’ பறைசாற்றுகிறாள்.

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஷான்.

இப்படிக்கு

அடுத்து இரண்யசேனை கரிகாலனுக்குப் பரிசளித்த இரண்யஹாசத்தை தரிசிக்கும் ஆவலோடு …..உங்கள் பொன்னிகளில் ஒருத்தி. 🗡🗡🗡🗡🗡🗡🗡

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close