கவிதைகள்
Trending

விக்டோரியா சேங் கவிதைகள்; தமிழில் – அனுராதா ஆனந்த்

மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை

இரங்கல் அறிவிப்பு ( கவனிப்பாளர்)
————————————————————
2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015,2016, 2017
ஆம் ஆண்டுகளில் வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்பாளர்கள்
இறந்து போனார்கள்.
ஒருவர்  அவருடைய கணவன் ஜெயிலுக்குப் போன பின் வரவேயில்லை.
ஏனையவர்கள் பெரும்பாலும் கடிகாரத்தை முறைத்துக்கொண்டிருந்தனர்.
வாழ்பவர்களுக்கு இறுதியான ஒரு கட்டத்திலாவது, நேரம்
உடைந்து விடை கொடுக்கிறது, அவர்கள் கதவைத் திறந்து
வெளியே செல்லலாம்.
இறப்பவர்களுக்கோ நேரக் கதவின் பிடி  கையால் தொட  முடியாத
அளவிற்கு தகிக்கிறது.
வெளியேற அனுமதிக்காத கதவிருந்து என்ன பயன்?
திறக்க முடியாத கதவிற்கு சுவர் என்று பெயர்
அப்பா சுவற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கிறார்.
அங்கு தக்காளிகள் விளைந்து பழுத்திருக்கின்றன
திறக்க முடியா ஜன்னல்கள் வழி அதைப் பார்க்கிறேன்
திறக்க முடியா ஜன்னல்கள் அதன் ஊடாக பார்க்க அனுமதிக்கும் சுவர்கள் அன்றி வேறில்லை.
சில வேளைகளில் ஒரு விமானத்துள் இருப்பதைப் போல உள்ளே அடைந்து கிடக்கிறோம்.
பிற வேளைகளில் நாய் காப்பகங்களில் உள்ள நாய்களைப் போல வெளியே இருக்கிறோம்.
தக்காளிகள்  அவருடைய மொழியின் புதிய வடிவமா அல்லது வழமையாக உண்ணுவதற்காகவா என்று புரியவில்லை.
அவரிடம் இதைக் கேட்க முடியாது ஏனென்றால் அந்த பக்கத்தில் வார்த்தைகளில்லை
வண்ணங்களால் வெடிக்கும் பெயரற்ற தக்காளிகளைப் பார்ப்பதும், அதுவே போதுமானது என்று புரிந்து கொள்வதும்
மட்டுமே என்னால் செய்யக்கூடியது.
***
எட்வார்ட் ஹூப்பரின் ஓவியங்கள் ..’நியூயார்க்கில் ஒரு அறை’
——————————————————————————————————–
பெண்ணின் விரல் பியானோ வின் F கட்டைக்கு மேல் தொக்கி நிற்கிறது
அவள் எப்பொழுதும் அதே சிவப்பு உடை அணிந்திருக்கிறாள்
ஆணின் கைகள் செய்தித்தாளின் இருமுனைகளைப் பற்றியபடி..
அவன் முகம் வெளிறி, உண்ணத் தகுந்ததோர் கேக் போல…
அவனுடைய குனிந்த தலைக்கு தன் முதுகைக் காட்டியபடி அவள்…
பால் நிறத்தில் பருத்த கைகள் அவளுக்கு
வெயிலில் காய்ந்து பொன்னிறமான தோள்களும் மெலிந்த இடுப்புகளும்
ஆண்களுக்கு பிடிக்கத் தொடங்குவதற்கான  வெகு முந்தைய காலம்.
அவளால் அவனை விட்டு நீங்க முடியாது
அவளுக்கு அதை எப்படி செய்ய வேண்டுமென்று கூடத் தெரியாது
இதை நீங்கள் எத்தனை முறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்…
மறுபடியும்  மறுபடியும் பல முறை கேட்கப் போகிறீர்கள்…
இதோ அடுத்த நொடி
துடிக்கும் தன்  வாயின் ஒளிர்பூச்சால் அந்த அறைக்கு மெருகூட்டப்போகும்
F -கட்டையின் த்வனியைப் போல.
***
இரங்கல் அறிவிப்பு (கடிகாரம்)
—————————————————
கடிகாரம் – ஜுன் 24 2009 யில் அகாலமாக இறந்தது.எத்தனை முறை அப்பா கடிகாரச் சோதனையில் தோற்றிருக்கிறார். ஒரு முறை ரேடியோவில்  ஆழ்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட விஞ்ஞானி ஒருவர், தன்னால் ஒரு கடிகாரத்தை சரியாக  ஏன் வரையமுடியவில்லை என்று விளக்கிச் சொல்வதைக் கேட்டேன். அது மூன்று வகைமைகள் மேலணைவாக பொருந்தியதால் ஏற்படும் சிக்கல். 1 லிருந்து 12 – மணிநேரங்களைக் குறிக்கும், ஆனால் இதே 1 நிமிடங்களை குறிக்கும் பொழுது 5 ஆக மாறும். விநாடி முள் 1 முதல் 60 ஐ குறிக்கும் . போக்குவரத்து நிறுத்தத்தில் கடிகாரத்தைப்  பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதன் துல்லியமான வட்டம், நம் நினைவு தளத்தில்  மூன்று அடுக்குகளில் நேரத்தை குறிக்கும் பாங்கு ஆனால் நம்மால் தயக்கமின்றி ஒரு விநாடியில்
நேரத்தைப் படிக்க முடியும். அப்பாவால் தயக்கமின்றி ஒரு நொடியில் எதையும் செய்ய முடியாது. அவரது எல்லா செயல்களும் இரண்டாம், மூன்றாம் எண்ணங்களில் தான் உருவாகின்றன.முதலும் முக்கியமானதுமான எண்ணத்தை  அவரால் நினைவில் இருத்த முடியுமா என்று தெரியவில்லை. ரேடியோவில் பேசும் விஞானியின்  மூளை  இத்தனை நாட்களில்  எவ்வளவு  சிதைவுற்றிருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை.
மொழியை  நம் மூளை தன்னுள் எவ்வளவு தூரம் நீரில் அலைய விடுகிறது… திரும்பிப் பார்ப்பதில்லை என்றாலும் வாராவதித் தூண்கள் எங்கிருக்கன்றன என்ற பிரக்ஞையோடே சுதந்திரமாக அலைகிறது மொழி.
ஓரிகேமி அன்னத்தை விரித்து, திறந்து  மறுபடி தட்டையான தாளாக்கினால்,
அன்னமாக இருந்த தாள் கவலைப்படுமா? அன்றி மடித்த தடங்கள் சுருக்கங்கள் கூட இல்லாத தட்டையான தாளாகவே மாற ஆசைப்படுமா?
அப்பாவும் அந்தத் தாள் போல தான்
அவருக்கு அன்னம் நினைவிலிருக்கிறது ஆனால் அதன் பெயர் மறந்துவிட்டது.
உண்மையில் அன்னம் என்ற பறவையைக் குறிப்பது ஓரிகேமி அன்னம் தான் என்று இப்போது தெரியவில்லை.அவருடைய மூளை தான், முன்பு அன்னம் நீந்தி விளையாடிய குட்டை, அது எல்லாவற்றையும் தன்னுள் பொதிந்து  இறுக்கி வைத்திருந்தது.  உருகிய பின்  எல்லா மீன்களும் காணாமல் போயின.
நாம் உச்சரிக்கும் எல்லா வார்த்தைகளும் மீன்களோடு தொடர்புள்ளனவையே.
ஆனால் அவை போனபின் அவை போயேபோயின.
***
இரங்கல் அறிவிப்பு ( லட்சியம்)
—————————————————-
லட்சியம் – ஆகஸ்ட் 3 2015 ல் இறந்தது. எதிர்பாரா மறணம்.
அதை காட்டில் பதற்றத்தின் அருகில் புதைத்தேன். இரண்டும் சேர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டன.  ஒரு சமயம் தடுப்புச்சுவரைத் தாண்டி பதட்டத்தை நீரில் தள்ளி கொன்றது.
அப்பாவின் கணுக்காலில் இப்போது ஒரு வளையம் மாட்டியிருக்கிறார்கள். அவர் கதவுக்கு மிக அருகில் சென்றால் எச்சரிக்கை மணி ஒலிக்கும். அவருடைய சுயசார்ப்பு மிகுந்துள்ள குணத்தால் அடிக்கடி கதவருகில் செல்கிறார். எச்சரிக்கை மணி ஒலித்தால் பதற்றமடைகிறார். என்னுடைய வீட்டைக் கண்டு அடைய வேண்டும் என்று ஞாபகமிருக்கிறது. அது தன்னால் முடியும் என்று நம்புகிறார். என் வீட்டில் அவருடைய கை ரேகை தடங்கள்  கூட அழிந்து வெகு நாட்களாகிவிட்டன.சில திருடர்கள் தங்கள் ரேகைகளை அழிப்பதற்காக  தங்கள் விரல்களை மின்சார அடுப்புகளின் சுருள்களில் பொசுக்கிக் கொண்டனர். ஆனால் அவர்களை சுலபமாகக் கண்டுபிடிக்க இது  உதவியது. போன மாதம்  அப்பாவை  எங்கோ ஒரு தெருவின் நடுவில்  கண்டுபிடித்தார்கள்… உறைந்த நிலையில், தன் பயன்பாடு என்னவென்று உணராத பல்பு இல்லாத ஒரு மின் விளக்கைப் போல, நிலவைப் போல குழம்பிய மனதுடன். மிருகக் காட்சி சாலையில்  சிறகு ஒடிந்த வெண்தலைக் கழுகொன்று ஒரு சிறிய கூண்டில் அமர்ந்திருக்கிறது , மீதமிருக்கும் ஒற்றைச் சிறகான அதன் துயரத்தை நீவிக்கொண்டு.  அதன் நினைவுகளில்  ஒரு பறவை பறக்கிறது, எதிர்காலம் என்ற தன் இரையைத் தேடி.
***
இரங்கல் ( நினைவுகள்) 
—————————————-
நினைவு – ஆகஸ்ட் 3, 2015 ல் இறந்தார்.
இறப்பு உடனடியாக வரவில்லை. பத்தாண்டுகளாக இழுத்ததுக்கொண்டிருந்தது. உயிர் பிரியும் அந்த நொடியில் மணிச்சத்தம் ஏதும் கேட்குமா? இனிப்பு சுவை உணர்வோமா? தெரியவில்லை.
இல்லை இரு கூறாக வெட்டப்படுவதைப் போல உணர்வோமா… தட்டையான கேக்கை வெட்டுவது போல சதையைப் பிய்த்து ஒரு கத்தி இழுத்துப் போகுமா?
அம்மாவின் மரணத்தைக் கூட இருந்து பார்த்த கவனிப்பாளர் இப்போது இங்கில்லை. அவள் அம்மாவின் நினைவுகளையும்,சாயலையும் தன்னுள் வைத்திருக்கிறார்.
கவனிப்பாளரின் மீதமுள்ள வாழ்நாள் வரை அந்த நினைவுகள் அவளுடையது.
ஒரு கட்டத்தில் அம்மாவால் மூச்சு விட முடியவில்லை. எல்லாம் அடங்கியது போல இருந்தது பின் இருபது விநாடிகள் கழித்து தன் கடைசி மூச்சை விட்டு இறந்தாள் அம்மா… என்று அவள் சொன்னாள்.
நான் முத்தமிடாத ஆண்களின் முத்தம் இப்படித்தான் இருக்கும் என்று கனவுகண்டிருக்கிறேன்.அம்மாவின் மரணத்தின் நினைவுகள் எனக்கு எப்படி
நினைவுகளாக இருக்க முடியும் அது என் கற்பனை தானே.
ஒவ்வொரு முறை காற்றடிக்கும் போதும் இலைகள் வேறு வேறு விதமாக
விரிந்து மடங்குகின்றன.
***

விக்டோரியா சேங்க்;

என்னிடம் ஏராளமான ரகசியங்கள் உள்ளன, ரகசியங்கள் உள்ளவர்கள் சிறந்த எழுத்தாளராவதற்கு சாத்தியக்கூறு நிறைய உள்ளதுஎன்று பகடியாக தன்னைப் பற்றிக் கூறும் சேங்க், “நான் கவிதையைக் கண்டுகொண்டது முதல் அது என்னை விட்டகலவில்லைஎன்றும், தாமஸ் ட்ரான்ட்ராமர் தன்னை மிகவும் பாதித்த கவிஞர் என்றும் குறிப்பிடுகிறார்

விக்டோரியா சேங்க் 1970 ல் அமெரிக்காவின் டெட்ராயிட்டில் பிறந்த கவிஞர் மற்றும் குழந்தை படக்கதை எழுத்தாளர். பெற்றோர்கள் டாய்வானிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்.

ஐந்து கவிதைத் தொகுப்புகளும், குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள் இரண்டும் எழுதியுள்ளார். Push Cart prize, commonwealth California book award, முதல் பல விருதுகளை வென்றுள்ளார். மார்கெட்டிங் துறையில் வேலைப் பார்த்த அனுபவம் உள்ளவர். இப்போது Antioch university யில் முதுகலை  ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கான  பேராசிரியராக பணியாற்றுகிறார்.

***
குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close