கவிதைகள்
Trending

ஷிசுக்கு கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சாத்தானின் அன்பு

நான்
சாத்தானுடன் இணைந்துவிட்டதாக
முடிவுகள் எட்டப்பட்டுவிட்ட பின்
மீட்கும் பணிகளுக்கிடையில்
என் அறையில் கிடத்தப்பட்டிருந்தேன்.
என் வாய் உலர்ந்து
தொடர்ச்சியான உராய்வில்
மேலுதட்டின் புண்
விரிந்து இருந்தது.
இருளின் மத்தியில்
மேல்தட்டில்
ஓர் உருவம்
வெறுமையில் அதிர்ந்துகொண்டிருந்தது.
நான் கைநீட்டினேன்.
ஒருகணத்திற்குப் பின்
கைபற்றி
அருகில் வந்து படுத்தது.
அச்சத்துடன்
நான் திரும்பியபோது
அது
இயல்பிலின்றி நடுங்கிக்கொண்டிருந்தது.
நான் அனிச்சையாக
அணைத்துத் தட்டிக்கொடுத்தேன்.
அதன் கொம்புகளில்
என் கை தடவிப் போனது.
என்ன செய்யவேண்டுமென
புலப்படாதபோது,
அதன் ஒரு கொம்பைப் பற்றி
வாயினுள் வைக்க முயன்றேன்.
அது
என்னை மெதுவாய்க் கீழே இழுத்து
அதன் நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டது,
உச்சந்தலையில் முத்தமிட்டது,
என் வாயினுள் கைவிட்டு
புண்ணைத் தொட்டது,
நாவால் விரவியது,
தட்டிக்கொடுத்து
கண்மூடச் சொன்னது.
நான்
சாத்தானின் குழந்தையாயிருந்தால் என்ன?
அதன் அன்பும்
அளவிடமுடியாததாய் இருக்கிறதே.

***

உங்களுக்கு அருமையான நாவு வேண்டுமா?

அருமையானவர்களே!
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
என்னிடம்
அருமையான ஒரு நாக்கு இருக்கிறது.
என் நாவால்
எப்பேர்பட்ட
காயத்தையும்
வன்முறையையும்
மிருகத்தனத்தையும்
நக்கித் துடைக்க முடியும்.
ஆகையால்,
நான் மண்டியிட்டு
அமர்ந்துகொள்கிறேன்.
உங்களுடைய
இருண்ட பக்கங்களை
என்னிடம்
வரிசையாய்க் காட்டுங்கள்.
நான் மென்மையாய்
உங்களை வருத்தாதவாறு
நக்கித் துடைத்து விடுகிறேன்.
நான்
துடைத்து முடிக்க முடிக்க
என்னருகில்
நீங்கள் ஒவ்வொருவராய்
மண்டியிட்டு அமருங்கள்,
காத்திருப்பவர்களின்
இருண்ட நேரங்களை
நாம் நக்கித் துடைப்போம்.
ஏனென்றால்,
ஒருமுறை
அன்பைத் தாங்கிவந்த
ஒரு நாவும் எச்சிலும்
என்னை
அப்படித்தான் கழுவித் துடைத்தது,
அதன் பிறகுதான்
எனக்கு அருமையான நாவு கிட்டியது.

***

நன்றியுணர்வு

ஒரு ஆற்றல் மிகுந்த
காட்டாறு
உடலின் ஒரு ஓரத்தை
அமைதியின் முழுவீச்சில்
தொட ஆரம்பிக்கும்போது
அந்த உடல்
மண்டியிட்டு,
கரங்களை அள்ளி
கண்ணில் ஒற்றிக்கொள்ள விழைகிறது.
குறியை மெதுவாகத் தொட்டு
கன்னத்தின்
கண்ணீர் ஓடும் தடங்களைக்
காட்ட விழைகிறது.
இடுப்புடன்
சேர்த்து அணைத்து
அடிவயிற்றில் முகம் பதித்து
இருக்க விழைகிறது.
குறியை
வாயுடன் வாரியெடுத்து
கொஞ்ச விழைகிறது.
கைகளுக்குள்
விரல்களுக்குள்
பொதிந்து அமைதிப்படுத்த விழைகிறது.
உலகின் தாலாட்டுகளைக்
கோதிக்கொடுத்துக்கொண்டே
கூற விழைகிறது.
அந்த காட்டாறின் பெயர்
நன்றியுணர்வாக
இருக்கலாமென நினைக்கிறேன்.

***

ஒரு உள்ளங்கை, எச்சில், கண்கள்

உலகின் கன்னங்களை
எந்நேரமும் தொட்டுக்கொண்டேயிருக்கும்
உள்ளங்கைகளுக்குள்
எல்லா உணர்வுகளும் தஞ்சமடையும்
ஏகாந்தமொன்று ஒன்றியிருக்கிறது.
அந்த ஏகாந்தத்திற்கு
எந்த உதடுகளாலும்
எச்சிலாலும்
நாவுகளாலும்
நன்றியுரைக்க முடியவில்லை.
பிறந்த நேரத்திற்கு அருகில்
தோலில் சார்ந்த
ஓர் எச்சிலின் ஈரம்
அழைத்துச் செல்கிறது.
நாவில் திரண்டு சொட்டும்
ஒரு துளி
தாழ்வுகளைக் கழுவும்போது
அதன் சிறுமடியில்
நெஞ்சு ஒண்டிக்கொள்கிறது.
உலகத்து அன்பின்
மடியில் அமர்ந்திருக்கும் கண்கள்
காற்றின் வெளியில்
முத்தங்களையும்
சப்பி நக்குவதையும்
அணைப்பதையும்
அரங்கேற்றிக்கொண்டே இருக்கின்றன.
அவை
சமயங்களில் இடைவெளிக்குள்
காட்டாறின் வெள்ளத்தை
ஒட்டிவிடுகின்றன.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close