கவிதைகள்
Trending

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

புத்தகம்

அதோ அந்த மனிதன்
புத்தகத்தின் அட்டையில்
நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்
மற்றும் புத்தகத்தின் உள்ளே
படிப்பவனின்  மனதில்
விழும் வார்த்தைகள்
எண்ணங்களாக உருமாறி உருமாறி
வருவதற்குள் அவன் உள்ளே
நுழைந்து  அந்தப் புத்தகத்தில்
சிக்கி  இருக்கும்
புதிர்களை விடுவிக்கிறான்
ஒரு புத்தகம் என்றும்
படிக்க வேண்டிக்
காத்துக் கிடக்கிறது
அதன் கனம் அதன் காகிதம்
அதன் அச்சு அதன் சொற்கள்
என அதன் மீது
விளையாடும் அர்த்தங்கள்
சரித்திரத்தில் எரித்த
புத்தகம் போக
மீதி இருப்பவை
ஒவ்வொரு தனித்தனி மனிதனுக்கும்
ஒரே புத்தகம்
வெவ்வேறு வெளிச்சத்தைக்
காட்டுகிறது.

***

அப்பாவி

நாம் ஏன்
இவ்வாறு இருக்கிறோம்
எல்லோருக்கும் இது
ஆகி வரும்வரை
நாம் ஏன் காத்திருக்கவேண்டும்
என் விருப்பத்தின்
நேர்மை அது நகர்த்தும்
புள்ளியில் அசையாதிருக்கிறது
இந்த வாழ்க்கை
வந்து சேரும்
எனக்கான சுதந்திரம்
என் மனம் மட்டுமே
என் பார்வை களங்கமற்றது
அது கட்டுப்படுத்தாத போது
இயல்பானது
இயற்கை எனில்
அது சிக்கலானது
வரலாற்றில் இடம் பெற்ற
ஒவ்வொன்றையும் நாம்
விட்டு விலக முடியாது
இவற்றைப் பற்றி எதுவுமே
அறியாத மனிதன்
இதைச் சொன்னான்.

***

கனவு  

தானாக நினைத்துக்கொள்ளும்
ஒரு காலத்தை
ஏந்திய நாடகத்தில்
உயிருள்ளவர்கள் நடமாடினர்
அவர்களில் ஒவ்வொருவருக்கும்
ஓர் உலகம் இருந்தது
வாழ்க்கை இருந்தது
நான் விழிப்பதற்குள்
அவர்கள் வாழ்ந்தாக வேண்டும்
என்னைப் பாதித்தால்
அவர்கள் தன் இருப்பை
இழந்துவிடுவார்கள்
தொடாமல் தொடும்
விளையாட்டு இது
இதற்குள் எல்லாவிதமான
உணர்ச்சிகள் உண்டு
என்னில் தேங்கிய
அது என் கற்பனை
நான் நினைவு கூர்கிறேன்
மறதியில் மிச்சமாகிப் போன
ஒரு கனவைப் பற்றி.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button