கவிதைகள்
Trending

க.ரகுநாதன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

நஞ்சேறிய முகங்கள்

என் நடையில் தெரியும்
பிட்டசைவுகளில் குத்தின
ஓராயிரம் கண்ணீட்டிகள்.
இழுத்துச் சென்ற பாதையோரம்
ஊளையிட்ட நாயின்
தொண்டையில் சிக்கியிருப்பது
என் குரல்.
ஒடிந்த தண்டுவடத்தின்
துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது
ஆதிமிருகத்தின் கோரைப் பல்.
உடைந்து திரும்பிவிட்ட கால்கள்
கோடிழுத்த ஈரமண் தடத்திலோ
எறும்புகளின் மௌன ஊர்வலம்.
பாலமுதம் ஊட்டும் முன்னமே
உங்கள் வெறி நகங்கள் பட்ட
முலைகளில் குருதிச்சாரல்.
வயிற்றினுள் தவழும்
உடல் பிரதி தசைப் பைக்கு
நான் கொண்ட வழிதான்
உறுத்தியது உங்கள்
தசைக் கோல்களை.
சிதைக்கப்பட்ட அவ்வழியில்
செம்புலமாகி பெருகியோடுகிறது
நீங்கள் பீய்ச்சியடித்த திரவம்.
முதுகை ஒடிக்கும் முன்
காலை உடைக்கும் முன்
நாக்கை அறுக்கும் முன்
உயிரை எடுக்கும் முன்
கண்களைப் பிடுங்க மறந்தது ஏன்?
கூற்றின் தீர்ப்புக்காக
அறத்தின் நினைவில்
பதிந்து காத்திருக்கின்றன
உமது நஞ்சேறிய முகங்கள்.

(மனீஷாக்களின் நினைவுக்கு…)

*** *** *** *** 

விருப்பக் குறிகள்

என் குலை நடுக்கத்தின் சுவையையும்
வெண்மஞ்சள் பூத்து நிற்கும்
மனப் புரையின் வீச்சத்தையும்
வெளி எங்கும் பரவி ஓடும்
நரம்புகளில் ஏற்றிப் பகிர்கிறேன்
விருப்பக் குறிகளைத் தேடியவாறு.

நீலம் தோய்ந்த கட்டைவிரல்
குருதி வாசத்தின் இதய வடிவம்
மனப்புண் ஆற்ற இறங்கி ஓடும்
கண்ணீர்க்காரன்
இதழ் குவித்த வட்ட வாயன்
உதிரக் கொதிப்பை
வரித்துக் கொண்ட செம்முகன் என
ஏதேனும் குறி ஒன்றில்லாமல்
அமைதி அடைவதில்லை
என் ரத்த நாளங்களின் அதிர்வு.

பகிரல்களும் ஊட்டங்களும்
ஊட்டத்திற்குப் பின்னான ஊட்டமும்
இல்லாத ஒரு நாளில்
வாழ்வையே துண்டங்களாக்கி
பைசாசங்களின் உதடுகளுக்கு
குருதியோடு படைக்கிறேன்
இந்தச் சதை போதுமாவென.

அசையா முகங்களுக்கு
அந்தரங்க விம்மல்களும்
தளர் நரம்புடன் முகம்
இழைபவர்களுக்கு
வேட்கையின் முனகல்களும்
பரிசளித்த பின்னரும் கூட
குறிகளுக்கு குறிகளும்
குறியிடாத குறிகாரர்களை
உள நூலில் குறித்தும் வைக்கிறேன்
கோரைப் பற்களை மறைத்தபடி.

*** *** ***

இப்போது என்பது இப்போதல்ல

இப்போது விழும் சூரிய ஒளி
இப்போது விழும் ஒளி அல்ல.
இன்றைக்குத் தெரியும்
நட்சத்திரங்கள்
இன்றைக்கானவை அல்ல.
இப்போது வந்த ஒலி
எப்போதோ துவங்கியது.
இப்போது ஓடும் நதி
இப்போதும் ஓடுகிறது
எங்கோ ஓரிடத்தில்.
இந்த நொடியில் எனும்போதே
கடந்துவிடுகிறது இந்த நொடி.
இப்போது தழுவும் காற்று
துவங்கிய இடத்தில்
இப்போது இல்லை.
இப்போது தெரியும் நான்
இப்போதைய நானும் அல்ல.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close