சிறுகதைகள்
Trending

பிரிவோம் சந்திப்போம்

சேவியர் ராஜதுரை

ஜூன் மாதம் வந்துவிட்டாலே பீவிஎம் என அழைக்கப்படும் பூவாத்தாள் பஸ்ஸிற்கு கொண்டாட்டம் தான். வேடசந்தூரிலிருந்து வடமதுரை வரை செல்லும் பூவாத்தாள் அதன் டேப் செட்டிற்கே பேமஸானது. தூதுவளை இலையரச்சு தொண்டையில் நனைத்து அது போடும் பாடல்களைக் கேட்பதற்காகவே மணிக்கணக்காக அந்த பஸ்ஸில் போகலாம். எரியோடு வேடசந்தூர் அரசுப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களை ஏற்றுவதற்காகவே ஸ்கூல் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியிருந்தனர். மற்றவர்களுக்கு ஐந்து ரூபாய் என்றால் மாணவர்களுக்கு நான்கு ரூபாய் தான். இப்படிப் போட்டாலும் எல்லா மாணவர்களும் கவர்மென்ட் பஸ்ஸில் தான் செல்வர். ஆனால், பஸ் பாஸ் தரும் வரையில் பூவாத்தாள் தான் ராணி. எல்லா மாணவர்களும் பிவிஎம்மில் தான் வருவர். பூத்தாம்பட்டியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. அதற்குமேல் படிக்க அவர்கள் வலதுபுறம் வேடசந்தூருக்கோ இல்லை இடதுபுறம் எரியோடிற்கோ செல்ல வேண்டும். இடதுபுறம் எரியோடு பள்ளிக்கு செல்பவர்கள் ரோட்டுக்கு இந்த புறமும் வேடசந்தூர் பள்ளிக்கு செல்பவர்கள் எதிர்புறமும் நின்றிருந்தனர். மணிமொழி இடதுபுறத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.

அதற்கு அவள் தோழிகளே காரணம். முதல் நாள் தனியாக பள்ளிக்குச் செல்கிறாள். அவளைத் தனியாக இதுவரை வெளியே செல்ல அனுமதித்ததேயில்லை. செவ்வாய்க்கிழமை நடக்கும் ஊர்ச்சந்தைக்குத் தான் செல்ல அனுமதிப்பார்கள். வயதுக்கு வந்தபிறகு அதுவும் இல்லை.
“மாப்ள மணிய பாத்துக்கடா” என அப்பா சொன்னாலும் சொன்னார் இந்த மனோஜ் ஏதோ அவளுக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி பஸ்ஸுக்காக நின்றிருந்த அத்தனை பிள்ளைகள் முன்னிலையிலும்,

“நான் ஒனக்கும் சேத்தே டிக்கெட் எடுத்தறேன். மாமா காசு கொடுத்திருக்காரு. தண்ணிபந்தம்பட்டி தாண்டுனதும் முன்னாடி வந்தறேன். ஒண்னா இறங்கிடலாம்” என்றான்.

“இங்க நிக்கிற எல்லா பிள்ளைகளும் அங்கதான வராங்க. அவங்களோட சேந்து இறங்கிறேன். நீ ஒண்ணும் வர வேணாம்.சொல்லிட்டேன்.”

‘அட,மாமனுக்கு உன் மேல பாசம்மா’ என பொறிகடலைக்கார அண்ணன் சொல்லவும் சுற்றி நின்ற அனைவரும் சிரித்தனர்.

“நீ வராதன வராத. வந்தா திட்டிருவேன் பாத்துக்கோ!” என கோவமாக லேசாக கண்கலங்கப் பேசினாள்..

ம்ம்,,அப்பறம் மாமாக்கு யாரு பதில் சொல்றது?

அந்த நேரம் தனக்கேயுரிய வித்தியாசமான ஹாரன் சத்த்த்தோடு பூவாத்தாள் வந்து நின்றாள். அத்தனை கூட்டமும் ஏறியது. மனோஜ் பின்புறமாக ஏறி படியில் நின்று கொண்டான். அவனைப் பார்க்கவே இப்பொழுதெல்லாம் மணிக்கு பிடிக்கவேயில்லை. ”வயதுக்கு வந்த பிறகு அவன் பார்க்கிற பார்வையே சரியில்லை. ஊருக்குள் நாந்தான் மணிய கட்டிக்கப் போறேன்னு சொல்லிட்டு திரியறான். அப்பாவும் கூறுகெட்டத்தனமா அவனேயே பாத்துக்க சொல்றாரு. நான் ஆறாப்பு படிக்கறப்பவே மாரியப்பண்ணே கடை சைக்கிள்ள ஒரு மண்நேர வாடகைக்கு எடுத்துட்டு எரியோடு ஸ்கூல் தாண்டி பாலம் ஏறி ரயில வேடிக்க பாத்துருக்கேன். வந்துட்டான் எனக்கு எரியோட்டு ஸ்கூல சொல்லிக் குடுக்க” என மனதிற்குள் நினைத்துக் கொண்டே கம்பியைப் பிடித்து அவனை எட்டிப் பார்த்தாள்.

இறுதிப் படிக்கட்டில் வலது காலை வைத்துக் கொண்டு இன்னொரு காலை அந்தரத்தில் பறக்கவிட்டு வலக்கையால் கம்பியை பற்றிக் கொண்டே மற்றொரு கையால் காற்றில் அசைந்து கொண்டிருந்த முடியைக் கோதினான்.

இரண்டு வருடம் முன்பு முதன்முதலில் எரியோட்டிற்கு பள்ளிக்குச் செல்லும் போது பஸ் பாஸை பீவிஎம் பஸ்ஸில் காண்பித்து மனோஜ் அசிங்கப்பட்டதை நினைத்து சிரித்தாள். அந்த நேரம் மனோஜ் அவளைப் பார்க்க தன்னைத் தான் பார்த்து சிரிக்கிறாள் என தன் முடியை மீண்டும் கோதினான். உடனே வேறுபக்கம் தன் பார்வையைத் திருப்பினாள்;.

சொன்ன மாதிரியே தண்ணீர்பந்தம்பட்டி தாண்டியதும் வந்து விட்டான். பள்ளியில் நின்றதும் அவளை இறங்க சொன்னான். அவள் அவனைக் காணாதது போலவே இறங்கினாள். அந்த இடத்திலிருந்து பாலம் ஏறும். பள்ளிக்குள்ளிருந்தே தண்டவாளத்திற்கு செல்ல முடியும். அதனைப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அவள் நினைவு பொன்னுமணியிடம் சென்றது. மணி சித்தப்பா அவள் சந்தையைத் தாண்டி வெள்ளைய வாத்தியார் கேணியருகே இருந்த மரத்தில் வேப்பம்பழம் பொறுக்கச் சென்றதற்காக அடிக்க பொன்னுமணி அவரைக் கடித்து விட்டது. அதனால் சித்தி பொன்னுமணியைக் கொல்ல வேண்டும் என பிரச்சனை பண்ண, கொல்ல மனமில்லாமல் இதோ இந்த மேம்பாலத்தினை தாண்டி ஆட்டோவில் விட்டு வந்தனர். இந்த பள்ளி வரை பின்னாடியே ஓடி வந்தான். ஆட்டோ கண்ணாடியில் அதைப் பார்த்து அழுதுகொண்டே ஆட்டோ கண்ணாடியிலே டாட்டா காட்டினாள். அதற்குப் பிறகு பொன்னுமணியைப் பார்க்க முடியவில்லை. அதை நினைத்துக் கொண்டே வகுப்பை நோக்கிச் சென்றாள்.

அவள் வகுப்பு வரை அவனும், கூடவே வந்தான். அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

“ஏன் என் கூடவே வர, நான் போய்க்கிறேன். ப்ளீஸ் போயேன்.”

“சரி நான் சாப்பாட்டு நேரத்துக்கு வரேன்.”

“நீ மட்டும் சாப்புடுறப்ப வந்தேன்னு வையேன். அப்பறம் மாமா பையன்னு கூட பாக்கமாட்டேன். பாத்துக்கோ!”
அவளின் பிடிவாதம் பற்றி அவனுக்குத் தெரியும். கோவம் வந்தாள் மிளகாய் அரைச்சுப் பூசுன மாசாணி தான். ஒருத்தர விடமாட்டாள்.

“சரி சரி பள்ளிக்கொடம் முடிஞ்சதும் வரேன் பாக்கலாம்..”
தன் ஊர் தோழிகளோடு ஒன்றாக இருந்தாள். அந்த பள்ளியிலேயே படித்தவர்கள், வேறு பள்ளியிலிருந்து வந்தவர்கள் அனைவரும் பேசிக்கொண்டனர்.

ரயில் வரும் சத்தம் கேட்கவும், கண்ணை மூடி அந்த ரயிலுக்கு சைக்கிளில் வந்து டாட்டா காட்டியதை நினைத்துக் கொண்டு உடனே கிரவுண்டிற்கு வந்து ரயில் நகர்வதைப் பார்த்தாள்.

ஊமத்தஞ்செடியை பிடுங்கி அரைத்து அதனோடு கரியைச் சேர்த்துக் கொண்டிருக்கும் போது கருப்பணன் மீது அவன் சகாக்கள் கரியைப் பூச அவனும் சேர்ந்து அவர்கள் மூஞ்சியில் கரியைப் பூச துரத்தினான். இப்படியெல்லாம் நடக்கும் என்பதாலேயே அவர்கள் சட்டையையும் பேன்ட்டயும் கழட்டிவிட்டு வீட்டிலிருந்து இதற்காகவே கொண்டு வந்திருந்த டவுசரை அணிந்திருந்தனர். ஒரு கட்டத்தில் விளையாட்டு தீவிரமடைய அவர்கள் கையில் இருந்த சாந்தையே எறியத் தொடங்கினர். ரயிலை வேடிக்கை பார்க்க நின்றிருந்த மணிமொழி மீதும் அவன் வீசியது பட்டிருக்கும். லாவகமாக ஒதுங்கி விட்டாள்.

“நிக்கறதுக்கு வேற இடமே இல்லாத மாறி இங்கனக்குள்ள வந்து நிக்கிறா பாரு. அங்கிட்டு போ புள்ள.” என கத்தினான்.
கோவத்தில் வாய்க்குள்ளே, “ஆளயும் மண்டயும் பாரு ஆதிவாசி மாறி” என அவனைத் திட்டிவிட்டு வகுப்பிற்குள் சென்றாள்.
முதல் நாள் என்பதால் பாடம் நடத்தவில்லை. புத்தகம் கொடுத்து விட்டு அனைவரது பெயரையும் ஒவ்வொரு ஆசிரியரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

தன்னுடய பெயரை மூன்றாவது முறையாக சொல்ல அவள் முன் வந்து நின்ற பொழுது “டீச்சர்…” என ஒரு குழுவாகக் குரல் கேட்டது.
அந்த ஆதிவாசிக் கூட்டம் தான். போர்டில் அந்த சாந்தைப் பூச வந்திருந்தனர். அவர்களில் அவளைத் திட்டிய நாட்ராயனை முறைத்துப் பார்த்தாள். முறைக்கும் பொழுது மூக்குத்தி அணிந்திருந்த அவள் அழகாகத் தெரிந்தாள். அவன் மூக்குத்தியைப் பார்த்தான். முகத்தைக் கழுவிருந்தாலும் இன்னமும் அந்த சாந்து ஒட்டியிருந்தது.

அவர்கள் பூசும் பொழுது அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ சொல்லுமா ஏன் நிறுத்திட்ட?”

அவள் டீச்சரைப் பார்த்து விட்டு மெல்ல அவர்களைப் பார்த்தாள்.

“அட அவிங்களும் நம்ம பசங்க தான. சொல்லு”

ஒரு அசூசையோடு, “என் பேரு மணிமொழி…பூத்தாம்பட்டியில்ருந்து வரேன். இதுக்கு முன்ன பூத்தாம்பட்டி அரசு உதவிபெறும்
நடுநிலைப்பள்ளியில படிச்சேன்” கரும்பலகையின் பக்கம் இருந்த அவன் பார்வை திரும்பியது.

அவள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். முறைப்போடு இருந்த அவன் முகம் அவளை நோக்கி சிரிப்பை உதிர்த்த்து. முதல் நாள் என்பதால் பள்ளி அரைநாளோடு முடிந்தது. ஆனால், மாணவர்கள் அனைவரும் சத்துணவு சாப்பிட்டு விட்டுச் செல்ல வேண்டுமென்பது தலைமையாசிரியரின் ஆணை. அவள் வகுப்பிலிருந்து வெளியே வந்ததும் அங்கேயே காத்துக் கொண்டிருந்த மனோஜ்,
“நான் வெளிய பஸ் ஸ்டாப்ல நிக்கிறேன். நீ சாப்பிட்டுட்டு வா” என கூறினான்.

ஒரு தொல்லை ஒழிந்தது என நிம்மதியாக சத்துணவு வரிசையில் நின்றவளுக்கு அடுத்த தொல்லையாக நாட்ராயன் வந்து நின்றான்.

சத்துணவிற்கு ஆண்களுக்கென ஒரு வரிசையும் பெண்களுக்கென ஒரு வரிசையுமிருந்தது. ஆண் வரிசையில் ஒருவருக்கு சோறு அடுத்து பெண் வரிசையில் ஒருவருக்கு சோறு என அளிக்கப்பட்டிருந்தது. அவளுடைய தோழிகளுக்குப் பின்பாக வரிசையில் இருந்ததால் அவள் தோழிகள் அனைவரும் உணவு வாங்கி அமர சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற பிறகு முட்டையை வாங்கி விட்டுப் போகாமல் மணிமொழிக்காக நின்றிருந்தான் கருப்பணன். கருப்பணன் தனக்காக நிற்கிறான் என்பதை உணர்ந்த மணிமொழி வாங்கிவிட்டு வேகமாக அவனைக் கவனிக்காத்து போல, “யேய் நில்லுங்கடி நானும் வரேன்” என ஓடத் தயரானாள்.

“இந்தாள நில்லேன், உங்கூட பேசனும்”

தன் முயற்சி தோல்வியடைந்த வருத்தத்தில் தன் கண்ணைச் சுருக்கி நாக்கைக் கடித்துக் கொண்டே திரும்பினாள்.

“எனக்கு முட்ட வேணும்.”

“அங்க வாங்கிக்கோங்க”

“நீதான் எனக்கு தருவேன்னு சத்தியம் பண்ணி சொன்ன. என்னய நியாபகமில்லையா?”

” இல்ல யாரு நீங்க?”

“கருப்பணன்” எனத் தன்னைக் காண்பித்துக் கூறினான். “வருண் மணிமொழி. உங்க ஸ்கூலுக்கு கூட வந்திருந்தேனே. ஈச மாவு, காசு மிட்டாய், நீ கூட தட்டுல அடிச்சியே”.”

“வவுன்” என வலது கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு இடது கையை வாயில் மூடி சிரித்தாள்.

வவுன். அப்பொழுது அவனுக்கு ர வராது. அம்மாபட்டியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அம்மாபட்டியைத் தாண்டாத அவன் முதல் முதலில் பூத்தாம்பட்டி சென்றது ஒரு டெம்ப்போவில் தான். எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. அன்று யார் கேட்டாலும் பூத்தாம்பட்டி பள்ளியில் படிப்பதாய் கூறவேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தி ஆசிரியர் அழைத்துச் சென்றார்.

அவனை விட பெரியாள் போட வேண்டியது போல இருந்த டவுசர் எப்படியும் இன்னும் இரண்டு வருட வளர்ச்சியைத் தாங்கும். இரண்டு நாள் அழுக்கோடு இருந்த வெள்ளைசட்டை. நெற்றியில் சிவப்பு நிற சாந்துப் பொட்டு. மூக்கில் வெள்ளை நிற சளி, வாயில் உப்புமூட்டை போல் முதுகில் சுமந்திருந்த பையின் கைப்பிடி. இப்படித்தான் முதலும் கடைசியுமாக அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான்.

வந்திறங்கியதும் அங்கிருந்த அனைவருக்கும் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. அட்டனென்ஸில் பெயரளவில் இருந்த லாசர்களுக்கு ஜோதி டீச்சரும் ஹச்.எம் டீச்சரும் இயேசுவைப் போல் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பள்ளியின் மூன்றாவது அப்பாய்ண்மென்ட்டிற்குப் போட அந்த பள்ளி தகுதியானதா?அட்டனன்ஸில் உள்ளபடி உண்மையிலேயே அவ்வளவு மாணவர்கள் அங்கு இருக்கிறார்களா? என சோதனையிட அதிகாரி வருவதாயிருந்தார். அட்டன்ன்ஸ்படி மாணவர்களை வகுப்பு வாரியாகப் பிரித்தார் ஜோதி டீச்சர்.

பிரித்ததில் கருப்பணனை மட்டும் இரண்டாவதில் நிற்க சொல்லிவிட்டனர். அவன் நண்பர்கள் அனைவரையும் மூன்றாவதில் நிற்கச் சொன்னார். ஒரே யூனிபார்மில் ஒன்றாக நின்றபொழுது ஒரே பள்ளி மாணவர்கள் போலவே தெரிந்தனர்.

ப்ரேயர் பெல் அடிக்கச் சொல்ல வேகமாக ஓடி ஒருவன் அடித்தான். பள்ளியின் முன்னால் ஒரு கொடிக்கம்பம். அதற்கு அரணாக நிற்பது போல இரண்டு பெரிய வேப்பமரங்கள். அந்த வேப்பமரங்கள் ஒரு பொழுதும் அந்த மாணவர்களை வெயிலில் நிற்க விட்டதில்லை. ப்ரேயர் தொடங்கியது.

சுற்றி பள்ளியை பார்த்தான். அவன் பள்ளியிலிருந்து நிறைய வேறுபட்டிருந்தது. நீண்ட செவ்வக வடிவ கட்டிடம். அவ்வளவு அகலத்திற்கும் படிக்கட்டுகள். வெளியே அதே அகல திண்ணை. அதில் தான் சத்துணவை சாப்பிடுவர். உள்ளே பெரிய தட்டிகளைப் போட்டு ஆறாகப் பிரித்திருந்தனர். முதல் அறை தலைமையாசிரியர் அறை. மீதி ஐந்தும் ஐந்து முதல் ஒன்றாம் வகுப்பு வரை வரிசையாக இருந்தன. உள்ளே செல்வதற்கு இரண்டு வழிகள். தலைமையாசிரியர் அறையிலிருந்து ஒரு வழி. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒரு வழி. பள்ளியின் இடதுபுறத்தில் ஒரு அடிகுழாய். பின்புறத்தில் ஆசிரியைகளுக்கென தனியாக ஒரு கழிவறை. அதற்கு அருகில் மாணவிகளுக்கு மட்டும் ஒரு கழிவறை.இவ்வளவுதான் பூத்தாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி.

ப்ரேயர் முடிந்து வகுப்பு வாரியாக உள்ளே சென்றனர். இரண்டாவதில் சென்று அமர்ந்ததும் அவன் அந்த தட்டியின் கீழிருக்கும் இடைவெளி வழியாக உள்ளே சென்று மூன்றாவதில் தன் நண்பர்களோடு அமர்ந்து கொண்டான். ஒவ்வொரு வகுப்பாக வந்து பார்த்த ஜோதி டீச்சர் இரண்டாவதில் ஒரு ஆள் குறைந்திருப்பதை பார்த்துப் புதிதாக வந்தவன் எங்கே என கேட்க

“அவன் மூனாம்ப்புக்கு போய்ட்டான் டீச்சர்” என கூறினாள் மணிமொழி.

உடனே மூனாம்ப்புக்கு அவளை அழைத்துச் சென்று “எங்கே அவன்” என கேட்க, தன் மூன்று விரல்கள் தன்னைக் காட்டியவாறும் ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் அவனைக் குறிப்பிடுமாறு அடையாளம் காட்டினாள்.

அவள் அவனைக் காட்டும் பொழுது தன் மூக்கிலிருந்து வழிந்த சளியைத் தன் நாவால் நக்கிக் கொண்டே முறைத்துப் பார்த்தான்.
ஜோதி டீச்சர் அவனிடம் வந்து, “துரைய அங்க உக்காரச் சொன்னா இங்க என்ன பண்ணுறிங்க! ” என தன் சேலை முந்தானையால் மூக்கில் ஒட்டியிருந்த சளியை துடைத்துவிட்டு அவன் கண்ணத்தைக் கிள்ளி கேட்டாள்.

ஜோதி டீச்சர் பார்ப்பதற்கு வேணியக்கா மாதிரியே இருந்தாள். வேணியக்கா அவன் பெரியப்பா மகள். அவளும் இப்படித் தான் அவன் கண்ணத்தை கிள்ளி விளையாடுவாள்.

மூக்கை உறிஞ்சிக்கொண்டே, “அக்கா நா மூணாம்ப்பு தான் படிக்கிவேன்க்கா. நான் இங்கவே இவுந்துக்வேன்க்கா” எனக் கேட்டான்.
“இன்னைக்கு ஒரு நாளு தான வா அங்க உக்காந்துக்கலாம்” என அவன் கையைப் பிடித்து 16 பேர் இருந்த மூன்றாம் வகுப்பிலிருந்து 11 பேர் இருந்த இரண்டாம் வகுப்பிற்கு 12 வது ஆளாக அழைத்துச் சென்றாள். அன்று முழுக்க அங்கேயே சமத்தாக இருந்தால் பெரிய சாக்லேட் தருவதாகக் கூறினாள்.

அவன் சென்று அங்கு அமர்ந்த்தும் அட்டன்ன்ஸை செக் செய்து அவன் பெயர் யார் கேட்டாலும் வருண் எனக் கூற வேண்டும் என சொன்னார்.

“அவன் பெயர் யாராவது கேட்டாக்க என்ன சொல்லணும்?”

“வருண்”

“குட். அவன் எந்த ஸ்கூல்ல படிக்கிறான்.”

“இந்த ஸ்கூல்.”

“ஸ்கூலுக்கு பெயரில்லையா! என்னது”

“அரசு தொடக்கப்பள்ளி,பூத்தாம்பட்டி..”

“கேக்கல!”

ஐந்து வகுப்புகளுக்கும் கேட்பது போல அரசு தொடக்கப்பள்ளி பூத்தாம்பட்டி என சத்தம் வந்தது. அடுத்த வகுப்பிற்கு நகரும் சமயத்தில் ஓடி வந்த கருப்பணன்

“யக்கா,எனக்கு வேவ நேம் சொல்லுங்க கா.எனக்கு இந்த நேம் வேணாம்

“ஏன்?”

“எனக்கு வ வராது.வவுண் வேணாம்.வேவ சொல்லுங்க.”

“ஒரு நாளைக்கு தான பொறுத்துக்கோ.” எனக் கூறிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றாள்.

சாக்லெட்டை அவன் பையில் மறைத்து வைத்து விட்டு ரீசஸ் பிரேக்கிற்காகக் காத்திருந்தான். அவ்வப்பொழுது தட்டி வழியே குனிந்து மூன்றாவதில் இருந்த அவன் நண்பர்களை கிள்ளியோ அடித்தோ சிரித்துக் கொண்டான்.கோவமான அவன் நண்பன், “போடா பொடிப்பயலே,ரெண்டாது படிக்கிறல அண்ணானு கூப்பிடுறா?” என கூற மூனாம்ப்பில் இருந்த இதர நண்பர்கள் சிரித்தனர்.
அவ்வாறு கிண்டல் செய்ததால் அவன் அவர்களிடம் பேசாமல் அமைதியாக அமர்ந்து தன் சட்டையின் நுனியை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருந்தான்.

அவனுக்கு பொழுது போகாத சமயங்களில் இது ஒரு பொழுதுபோக்கு. அருகில் அமர்ந்திருந்த மணிமொழி மெல்ல தன் ப்ரண்ட்ஸ்களிடம், “அந்த புது பையன பாரேன். சட்டையை மென்னுட்டு இருக்கான் புள்ள”

“ஆமாப்ள்ள,ச்சீ” என சிரித்தார்கள்.

சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்த பொழுது அவன் வாயில் சட்டை நுனியிருந்தது.

“காலையில சாப்புல்லையா டா நீ?”

“சாப்புட்டேனே. ” என வாயில் வைத்திருந்த சட்டையை மென்றுகொண்டே கூறினான்.

“அப்பறம் ஏன்டா சட்டைய தின்னுட்டு இருக்க?” உடனே அவள் ப்ரண்ட்ஸ் சிரித்தனர்.

“இன்னொரு டைம் டா சொன்ன முகரையப் பேத்துவுவேன் டி”

“அதுவர என் கை பூ பறிச்சிட்டா இருக்கும். அடிச்சேன்னு வை” எனக் கைகளை ஓங்கினாள்.

உடனே தன் காலரை தூக்கிக் கொண்டு , எச்சில் ஈரமாய் இருந்த சட்டையின் இரண்டு நுனியையும் சேர்த்து கட்டி அவளை அடிக்க “ஏய்…” என கத்திக் கொண்டே போர்வீரனைப் போல நெருங்கினான்.

எதிராளி தாக்க வருவதை உணர்ந்ததும் உறையிலிருந்து வாளெடுப்பதைப் போல தன் பையிலிருந்து சடாரென தட்டை எடுத்து தலையில் அடித்தாள்.

வாங்கிய அடியில் அடிவயிற்றிலிருந்து கத்தி அழ ஆரம்பித்தான். “நான் எங்க ஸ்கூலுக்கு போவேன்” என மூக்கு சளியை உறிஞ்சிக் கொண்டே எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தான். அந்த அழுகுரலை கேட்டு ஜோதி டீச்சர் வேகமாக வர அவளைப் வேணியக்காவாக நினைத்து ஓடி அவள் கால்களில் கட்டிக் கொண்டு அழுதான்.

“அக்கா நான் எங்க ஸ்கூலுக்கு போவேன்க்கா. அம்மா கூட்டிட்டு போம்மா “ என அழ ஆரம்பித்தான்.

அவனைத் தூக்கி வைத்து சரி சரி என சமாதானம் செய்தாள்.

“வா,யார் உன்னைய அடிச்சது” என கோவமாக அவனை அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்று நடந்ததைக் கேட்கவும் மாணவர்கள் கூறினர். மணிமொழியும் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் கோவமெல்லாம் பறந்து போனது.

“நீ போய் உன் ப்ரண்ட்ஸ் ஓட உக்காந்துக்க” என அவன் தலையைக் கோதி கூறினாள்.

அவன் மூன்றாம் வகுப்பிற்கு செல்லத் தயாராகும் போதே அழுகை நின்றுவிட்டது. அடுத்து மணிமொழியிடம் சென்றாள்.

“சாரி டீச்சர். அவந்தான் என்னய அடிக்க வந்தான்” என அழுதாள்.

“அவன் நம்ம ஸ்கூலுக்கு நம்மள நம்பி தான வந்துருக்கான். நீ வேற ஸ்கூல் போவியா? பாரு எப்படி அழுறான்னு?”

“தெரியாம அடிச்சுட்டேன் டீச்சர்.”

“சரி, அவனை இன்னைக்கு பூரா நீ தான் பாத்துக்கணும். அதுக்கு முன்னாடி போய் அவன்ட்ட சாரி கேளு”
ரீசஸ் பெல் அடித்தது. அவன் நண்பர்களோடு வெளியே சென்றான்.

இவள் அவனிடம் சாரி கேட்க தேடினாள்.அவன் நண்பர்களுக்கு தண்ணிகுடிக்க தண்ணீர் அடித்து கொண்டிருந்தான்.அவர்கள் தண்ணி குடித்துவிட்டு ஓடிவிட்டனர்.அவர்கள் குடித்ததில் வீணாகியிருந்த தண்ணீரை காக்காய்கள் குடித்துக் கொண்டிருந்தன.
இவன் தண்ணீர் அடித்து தண்ணீர் வந்ததும் குடிக்க ஓடினான். தண்ணீர் நின்றுவிட்டது. எனவே தண்ணீர் வந்தும் சிறிது நேரம் அடித்தான். அப்போது ஒரு காகம் குழாயின் வாயிலேயே தலைகீழாக லாவகமாக திரும்பி தண்ணீர் குடித்தது.
ச்சூ என விரட்ட அப்படியே தலைகீழாக விழுந்து பதறியடித்து திரும்பி இரண்டடி ஓடி பின் பறந்தது. வந்த தண்ணீரைக் குடித்தான்.
அவள் அவன் பக்கத்தில் சென்று காயா பழமா என விரலை வைத்துக் கேட்டாள்.
காய் நின்றான்.

மணியடித்தது. வேகமாக அவன் மூன்றாம் வகுப்பிற்குச் சென்றான். அவன் நண்பர்களோடு அமர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து ஜோதி டீச்சர் வந்து அவனை அழைத்து இன்னொரு சாக்லேட் கொடுத்து, “இரண்டாம் வகுப்புக்கு போலாமா?” எனக் கேட்க, “அக்கா நா இங்கவே இவுக்கேன்க்கா” என பாவமாக வைத்துக் கேட்டான்.

“எப்பவும் இவிங்களோட தான இருக்க? இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்க இரு. நாளைக்கு இவங்கள்ல பாப்பியா..வா ”
என அவன் பையை எடுத்துத் தர சொல்லி அவனை அங்கு அமர வைத்தாள். மணிமொழி அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவனை அமர வைத்துவிட்டு மூன்றாம் வகுப்பு செல்வதற்குள்ளேயே இவன் தட்டி வழியாக சென்று அங்கு அமர்ந்தான். கடக்கும் போது அவனைப் பார்த்து ஆச்சரியத்தில், “டேய் வருண்,அதுக்குள்ள எப்படிடா வந்த?”

“இதுக்குள்ளவுந்து..” என தட்டி சந்தினைக் காட்டி சிரித்தான். தரையில் தேய்த்து வந்ததற்கான தடயங்கள் அவன் சட்டையில் அழுக்காய் தெரிந்தன.

“நீ குட் பாயா டீச்சர் சொல்றத கேட்டியனா உனக்கு போறப்ப பெரிய சாக்லேட் வாங்கித் தருவேன்.
ரெண்டாவது போ.” எனச் சொல்ல அந்த சந்தினுள் திரும்பச் செல்லப் போக அவனை அப்படியே தூக்கி சென்று இரண்டாவதில் அமர வைத்தாள். எல்லோரும் சிரித்தனர்.

“நா சொல்ற வர இங்கேருந்து நகரக் கூடாது!”

“சவிக்கா” என்றான். உடனே அவன் தலையைக் கோதினாள். சுற்றியிருந்த பிள்ளைகள், “யே இவன் ட்ரெய்னிங் டீச்சர அக்கானு கூப்புறாண்டி” எனப் பேசினர். ஜோதி கடந்த வருடம் அந்தப் பள்ளிக்கு ட்ரெயினிங்கிற்க்காக வந்தவள். லீலா டீச்சர் மாசமாக இருப்பதால் லீவ் போஸ்டாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு எக்காரணம் கொண்டும் விடுப்பு கிடையாது.

பின்னே இரண்டு பேர் மட்டுமே வேலை பார்க்கும் பள்ளியில் ஒருவர் மட்டும் 78 மாணவர்களை எப்படி சமாளிக்க முடியும். அந்த சிக்கலைத் தீர்க்கத் தானே மூன்றாவது அப்பாய்ண்மெண்ட். இப்போது வந்து பார்த்து அதிகாரி கையெழுத்திட்டால் சுபம் தான்.

ஆபிஸிலிருந்து கிளம்பி விட்டார் எனக் கூறியவுடன் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இரண்டு டீச்சரும் புது மாணவர்களுக்கும் அவர்கள் மாணவர்களுக்கும் பயிற்சியளித்தனர். பெயரை சரியாகக் கூறுகின்றனரா என சரி பார்த்தனர்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த்தை விட சுபமாக முடிந்தது. எல்லோரும் சரியாக நடந்து கொண்டனர். வந்தவர் எந்த பிரச்சனயும் செய்யவில்லை. அப்பாய்ண்மெண்ட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே வந்தது.

அவர் போன மகிழ்ச்சியில் பத்து நிமிடம் முன்னமே சாப்பாட்டு பெல் அடிக்கச் சொன்னார் ஹெச் எம் டீச்சர்.
வருண் தட்டைப் பள்ளியிலேயே வைத்து விட்டு வந்திருந்தான். சத்துணவு சாப்பாட்டிற்கு மாணவர்கள் வரிசையாக நின்றிருந்தனர்.
“டேய் உன் தட்டுல உன்னா உக்காந்து சாப்புடுக்கவா?” தட்டு கவலதா முட்ட கவல.
அவன் பாவமாக பார்த்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமொழி வேகமாக வீட்டிற்கு ஒடிச் சென்று அவனுக்கு ஒரு தட்டை எடுத்து வந்து நீட்டினாள்.

சிறிது தயக்கத்தோடு அவன் வாங்கிக் கொண்டான். இருவரும் கடைசியாக வரிசையில் நின்றனர். வரிசையில் நிற்கும் போது காயா பழமா என கேட்டாள். பழம் என்றான். மணிமொழி தன் ஓட்டைப் பல் தெரிய சிரித்தாள். அந்த கிப்பி மண்டையில் வைத்திருந்த டிசம்பர் பூக்கள் கிளிப்பிலிருந்து விலகி முகத்தில் வர சரி செய்து மாட்டினாள். அவன் நண்பர்கள் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அவள் தோழிகளும் வழக்கமான இடத்தில் அமர்ந்து உண்டனர். சாப்பாடு வாங்கிவிட்டு இவர்கள் இருவரும் தனியாக அமர்ந்தனர்.

“கோபி தட்டுல வச்சு சாப்பணும்னா என் முட்ட வேணும்னு கேட்டான். நல்ல வேள நீ தட்டு குடுத்த.” என முட்ட ஓட்டை தட்டி அகற்றிக் கொண்டிருந்தான்.

“உனக்கு முட்ட ரொம்ப புடிக்குமா?”

“ம்ம்ம்..”

“அப்போ இந்தா இதயும் சாப்புடு” எனக் கொடுத்தாள்.

“உனக்கு வேணாமா? இல்ல நீ சாப்பிடு”

” அடுத்த வாவம் முட்ட போடும்போதும் தவுவியா?”

“தருவேன்.. ஆனா நீ தான் இனி வரமாட்டியே”

“நீ முட்ட குவுப்பீன்னா சத்தியமா வவுவேன்.” என தன் இடக்கையைத் தலையில் வைத்து சத்தியம் செய்தான்.

“நொட்டாங்கையில சத்தியம் பண்ணுற ”

“இதுல தான் சாப்புடுவேன்ல” என முட்டையே வாய்க்குள் மென்று கொண்டே பேசினான்.

” நீ வருவியினா நானும் சத்தியமா தருவேன்.” என அவள் வலதுகையைத் தலை மேல் வைத்து சத்தியம் செய்தாள்.

“தினமும் முட்ட குடுத்தா சூப்பவா இவுக்கும்ல ”

“ம்ம்ம் ஆசயப் பாரு…டெய்லியும் குடுத்தா புடிக்காமப் போயிடும் வருணு”

“நான்லாம் டெய்லியும் சாப்பிடுவேன்.”

“ம்ம்.அப்பிடி குடுத்தா நான் டெயிலியும் உனக்கே குடுக்கறேன் நீ எங்க ஸ்கூலுக்கு வருவியா?”

“நீ எங்க ஸ்கூலுக்கு வவலாம்ல!..”

“உனக்கு முட்ட குடுக்க நான் உங்க ஸ்கூலுக்கு வரணுமாக்கும்.ஆசயப் பாரு..” இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு அடிகுழாயில் தட்டைக் கழுவினர். சிட்டுக்குருவிகளும் காக்கைகளும் வீணான நீரையும் சாதத்தயும் தின்று கொண்டிருந்தன.

தட்டைக் கழுவி அவளிடம் கொடுத்தான். அவள் தட்டை வீட்டில் வைத்து விட்டு வீட்டிலிருந்து ஈச மாவை கேரி பேக்கில் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

ஈச மாவைத் தின்னும் போது அவன் மூக்குச் சளியோடு ஒட்டி மூக்கிலிருந்து கோடாக வழிந்திருந்தது. சீ என மூஞ்சியைச் சுழித்தாள். அதைத் தொட்டு அவள் மேல் தடவப் போனான். கத்திக் கொண்டு ஓடினாள். இவன் விரட்டினான். அடிகுழாயருகே சென்று நின்று கழுவிக்க என அடித்தாள், அவன் கழுவி விட்டு தண்ணியை அவள் மேல் தெளித்தான். பிறகு மரத்தடியிலிருந்த பாட்டி கடைக்கு சென்றனர். அவள் தன்னிடமிருந்த ஒரு ரூவாய்க்கு வாங்கிக்க சொன்னாள். கடையில் உள்ள பொருட்களை ஆராய்ந்தான். ஒரு கூடை அதில் சில மாங்காய்த் துண்டு , காசுமிட்டாய், கடலைமிட்டாய், வெள்ளரி தேன்மிட்டாய்கள் இருந்தன.

அவன் காசுமிட்டாய் நாலு எடுத்து அதில் இரண்டில் காசில்லையென மீண்டும் வைக்க போன பொழுது பாட்டி, ” எடுத்தா எடுத்தது தான் திரும்ப வச்சா நான் எப்புடி விப்பேன்” எனத் திட்டினாள்.

மதியபெல் அடித்த்து. ஜோதி டீச்சர் இனி வேணும்னா போய் உன் ப்ரண்ட்ஸ் ஓட உக்காந்துக்க போ என கூறினார்.

ஆனால் அவன் அவளோடவே சென்று அமர்ந்து கொண்டான். சாயங்காலம் வரை அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தனர். அன்று வகுப்பு நடக்கவில்லை.

சாயங்காலம் விளையாட்டு பெல் அடிக்கவும் வெளியே சென்று இவர்கள் இருவரும் தனியே விளையாடினர். அப்போது நாலாம் வகுப்பு மனோஜ் சிவாவை அடித்துக் கொண்டிருந்தான்.

“ஏன் அவன போட்டு அடிக்கிற?”

“நாந்தான் இப்போ பெல் அடிக்கணும் டீச்சர். ஆனா இவன் போய் அடிச்சுட்டான்.”

“அதுக்கு இப்பிடி அடிப்பியா? ஸ்கூல் முடியறப்ப பெல் அடிக்க வேண்டிதான” என ஹெச் எம் டீச்சர் அவனைப் போட்டு அடித்தார். மனோஜ் “டீச்சர் அடிக்கமாட்டேன் டீச்சர்” எனக் கெஞ்சினான். அவள் அவனை வேடிக்கை பார்த்தாள்.

“இவனுக்கு வேற வேலயேயில்ல” என்றாள் மணிமொழி.

“யாவு அந்த அண்ணன்?”

“என் மாமன் மவன் தான்.” ம்ம்… எனக் கூறி நகரும் போது ஜோதி டீச்சர் அவனைக் கூப்பிட இவளும் போனாள்.
அவளை அனுப்பிவிட்டு ஜோதி டீச்சர் அவனுக்கு 5 ரூபாய் சாக்லேட் கொடுத்தாள். மகிழ்ச்சியில் அவன் முகம் மலர்ந்தது. வெளியே மணிமொழியிடம் ஓட அவனைப் பிடித்து

”டேய் நில்லுடா , எங்கடா ஓடற , நாளைக்கு உங்க ஸ்கூலுக்கு போயிடுவல, கொஞ்ச நேரம் அக்கா கூட இருடா” என்றாள்.
அதை வெளியே கேட்டுக் கொண்டிருந்த மணிமொழி முகம் மாறியது. அவர்களைக் காலையில் ஏற்றி வந்த வண்டி வந்தது.
ஹெச்.எம் டீச்சர் மனோஜை மணியடிக்க சொல்ல அவன் சிரித்துக் கொண்டே ஒடி மணியடித்தான்.

அங்கே இருவருக்கு மட்டும் முதல் முறையாக பள்ளி முடிந்து அடித்த மணி வருத்தத்தை தந்தது.

ஹெச் எம் டீச்சரும் அந்த சாரும் சிறிது நேரம் சிரித்துப் பேசினர். பின் அவர் தன் மாணவர்களை எண்ணி ஏற்றினார். டெம்ப்போவின் உள்ளே சிக்கிக் கொண்டதால் அவனால் பார்க்க முடியவில்லை. வண்டி கிளம்பியது. மணிமொழி சோகமாக அதைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
ஒரு கை மட்டும் மேலே தூக்கி டாட்டா காட்டியது. மணிமொழி சிரிப்புடன் டாடா காட்டினாள். அவனுக்கு அது தெரியாது.

அதற்குப் பிறகு இதோ இன்று தான் சந்திக்கிறார்கள். “வவுன் அடையாளமே தெரியலடா. மாறிட்ட!”

“நீயும் தான். என்ன ஊதா கலர்க்கு மேட்சிங்கா டிசம்பர் பூ மாறி இந்த ட்ரஸுக்கு ஏத்தமாறி கனகாம்பரம். மூக்குத்தி லா குத்தி அழகா மாறிட்ட.”

வெக்கப்பட்டு சிரித்து அவள் தோழிகளை நோக்கி ஓடினாள்.அவன் நண்பர்கள் அங்கிருந்து கிண்டல் செய்தனர்.தோழிகளிடம் பேசி விட்டுத் திரும்ப இவனை நோக்கி ஓடி வந்து “தனியா சாப்புடலாம்” என்றாள்.

இப்போது இவன் அவன் நண்பர்களைப் பார்த்து சிரிக்க அவர்களும் ஒரு மாறி, “டேய்” என சிரித்தனர். அவள் அவர்களைப் பார்த்தாள். அவர்களும் அந்தப் பள்ளிக்கு வந்தவர்கள் எனத் தெரிந்த்து.

“என்ன சிரிக்கிறாய்ங்க?”

“ஒண்ணுமில்ல.வா உக்காரலாம்.”

“இந்து ரா” அவன் நண்பர்கள் கத்தினர்.

“கொஞ்ச நேரம் கழிச்சு ஒச்சேனு”

“என்னவாம் அவிங்களுக்கு”

“அவிங்கள விட்டுத்தள்ளு” ம்ம்ம் , இந்தா முட்ட..

“யேய் சும்மானாச்சிக்கும் தான் கேட்டேன்.”

“ஆனா நான் நிஜமா தான் தரேன்.உனக்கு தரேன்னு சத்தியம் பண்ணிருந்தேன்ல .. இந்தா”

“அப்ப டெய்லியும் தருவியா”

“ம்ம்ம் தருவேன்.”

“கவர்மெண்ட் தினமும் முட்ட தராங்கனு சொன்னதும் உன்ன தான் நினச்சேன்.”

“சும்மா சொல்லாத.”

“சத்தியமா டா..”

“என்ன நினைச்சியா?”

“ஆமாண்டா. “அவனுடய முட்டையை எடுத்து அவளுக்கு வைத்து இனிமே நானும் உனக்கு டெய்லி முட்ட தருவேன் சத்தியம் .”என அவள் தட்டில் வைத்தான்.

“இப்போ டெய்லியும் சாப்புடுறப்ப பிடிக்குதா?”

“பிடிக்குது.ஆனா தினமும் தரனால முட்டைய பார்த்தா சகஜமாயிடுச்சு..”

“ஒரு தடவ உங்கூர்க்கு வாடகை சைக்கிள்ள வந்தேன். உன் உண்மையான பேரு தெரியாதனால யார்ட்ட கேக்கறதுனு தெர்ல.”

“கருப்பணன்”

“எங்க மாமா பேர்கூட கருப்புச்சாமி தான்.”

“ம்ம்ம்.”

” யே,வருண் உனக்கு தெரியுமா,? ”

“என் பேரு வருணில்ல.கருப்பணன்.”

“எனக்கு வருண் தன் புடிச்சிருக்கு.நான் அப்பிடிதான்.கூப்பிடுவேன்.”

“சரி உன் இஷ்டம்.. ”

“ஜோதி டீச்சர் அங்கேயே வேலைக்கு சேந்துட்டாங்க வருண்”

“சூப்பர்.ஒரு நாள் அப்ப அவங்கள பாக்க வரேன். என்னய நியாபகம் வருமானு தெர்ல.”

“ம்ம்..அதெல்லாம் நியாபகம் வச்சிருப்பாங்க..ஸ்கூலும் அப்பறம் கொஞ்ச வருஷத்துல மிடில் ஸ்கூலா மாத்திட்டாங்க.”

“எங்க ஸ்கூலயும் தான்.”

அத்தனை வருட மாறுதல்களை பேசிக்கொண்டே சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு அவளை பஸ் ஏற்றிவிட வெளியே வந்தான். தன் பாக்கெட்டில் ஒரு சாக்லேட் எடுத்து கொடுத்தான். வாங்கித் திறந்தாள். உள்ளே கல் இருந்த்து. ஏமாற்றிய சந்தோசத்தில் சிரித்தான். ஏமாற்றத்தில் பொய்யான கோவத்தில் முகத்தைத் திருப்பினாள். “சரி சரி. இந்தா..” என வேறு சாக்லெட் தந்தான். அவள் மறுபடி ஏமாற விரும்பாமல் போ என்றாள்.

“சாக்லெட் இருக்கு புள்ள” தயங்கிக் கொண்டே வாங்கினாள்.”சாப்புடுபுள்ள”. தடவிப் பார்த்தபோது உண்மையான சாக்லேட்டா இல்லை கல்லா எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற மனமில்லாது, “போடா நான் அப்பறம் சாப்புட்டுக்கறேன்” என கையில் வைத்துக் கொண்டாள். பஸ்ஸ்டாப்பிற்கு வந்தனர். பொன்னுமணி பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள். அப்போது வந்த மனோஜ், “பஸ் அந்த பக்கம் தான ஏறனும், இங்க ஏன் நிக்கிற அந்தப்பக்கம் வா”.

“வா போலாம்” என அவள் அவனையும் கூப்பிட, நீ போ என அவளிடம் கூறிவிட்டு பின்னால் வந்த அவன் சட்டையைப் பிடித்து “என் அத்த பொண்ணுகிட்ட உனக்கு என்னடா பேச்சு, இனிமே பேசுன ”

“அவன விடுடா” என கத்தினாள்.

சடாரென அவன் கையை முறுக்கி, “என்னடா சட்டையை பிடிக்கிற “ என பொடணியில் அடித்தான்.
அவள் வருணைப் பார்த்தாள். அவன் முன்னைப் போலயில்லை. தட்டில் அடி வாங்கிவிட்டு அழுத வருணில்லையிவன். தன்னை விட ஒரு வயது பெரியவனை அடிக்கிறான். ர வருகிறது.

பூத்தாம்பட்டிக்காரய்ங்க மொத்தமாக சப்போர்ட்டுக்கு வர கூட்டம் கூடியது. அப்போது சுரேஷ் அண்ணன் வந்து “என்னடா” என விசாரித்தது. அனைவரும் அமைதியாகினர். சுரேஷண்ணன் வருண் ஊர்தான். ஆளு பாக்க மதுரவீர சாமி மாறியே தான் இருக்கும். பன்னென்டாவது படிக்குது. ஸ்கூல்ல அதப் பாத்தா எல்லாப் பயலும் பயப்புடுவான். அது கேட்கவும் மனோஜும் அமைதியானான். வருண் எல்லாவற்றையும் சொன்னான். கேட்டுவிட்டு மனோஜை பார்த்து, “தம்பி உன் அத்த பொண்ணு பேசுதுனா அதுகிட்ட கேக்கணும். இவன் சட்டையப் பிடிச்சா.. ரொம்ப தப்பு தம்பி”

“அவன்ட்ட சாரி கேளு” இல்லனா இனிமே நடக்காது என மற்றவர்கள் பேசினர். அவன் பேசமாட்டானாமா? சாரி சொல்றா என அவர்கள் அவனிடம் கூறினர்.

“இனி பண்ண மாட்டேன்.” போடா.. அவன் அவளை இழுத்துக் கொண்டு, “உன்ன மாமாட்ட சொல்றேன், நம்ம பண்ணையாளு மவன் கூடலாம் சிரிச்சு பேசுறான்னு…உனக்கு இருக்கு..”

“இனிமே அவன்ட்ட பேசு உனக்கு இருக்கு.” சுற்றி அனைவரும் அவளிடம் அதையே சொன்னனர்.

“ஏன்டா சட்டைய பிடிக்கிறான்,பொளிச்சு பொளிச்சுனு நாலு இறுக்கு இறுக்க வேண்டிதான..”

“இறுக்கிவுட்டேண்ணே. சுத்தி அவிங்க ஊர்க்காரய்ங்க வன்டாய்ங்கணே.”

“இனிமே அப்புடி எவன வந்தான்னா நான் பாத்துக்கறேன்டா.. சரிண்ணே”

“உள்ளே வாடா..மணியடிக்கப் போகுது..போணே வரேன். .”

பேருந்து வந்தது. அவளுக்கு இடம் போட்டு அமர வைத்தான் மனோஜ். அவள் அவனைத் திரும்பி பார்க்கிறாளாவென அனைவரும் அவளேயே பார்த்தார்கள். பேருந்து நகர்ந்தது… கையிலிருந்த சாக்லேட் கவரைப் பிரித்து உள்ளே இருந்த கல்லை வாய்க்குள் போட்டுக் கொண்டு கவரைத் தூக்கிப் போட்டாள்..காத்திருந்த வருண் அந்தக் கைகளைப் பார்த்தான்.தூக்கி வீசிய கைகள் உடனே உள்ளே செல்லாது மெல்ல உயர்ந்து அசைந்தன. இவனும் டாடா காட்டினான். பேருந்து கண்ணாடி வழியே பார்த்தாள். அவனருகில் பொன்னுமணியும் நின்றிருந்தது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close