நேர்காணல்கள்

பிரயாணத்தில் சிறு உரையாடல்

நேர்காணல் :பாவண்ணன் ; நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி

முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர் எழுத்தாளர் பாவண்ணன். மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். எளிய மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் நிலத்துடனும் வரலாற்றுடனும் இணைத்து தனக்கான புனைவுலகத்தை கட்டமைத்துக் கொண்டவர். அவர் எழுதிய நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளிலிருந்து சிறந்தவற்றை எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் “பிரயாணம்” எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார். அந்நூல் குறித்து பாவண்ணனிடம் மேற்கொண்ட உரையாடல் புனைவு குறித்தும் சிறுகதை உலகம் குறித்தும் புதிய வாசலை திறந்துவிடுகிறது. பதில்களில் தெரியும் எளிமை அவருடைய புனைவுலகின் சாட்சியாய் எஞ்சுகிறது.

 

கேள்வி: நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் இயங்கியிருக்கிறீர்கள். அவற்றுள் சிறுகதைகள் குறித்த உங்களுடைய அனுபவமும், பொதுவாக சிறுதைகள் குறித்த உங்களுடைய அபிப்பிராயமும்.

பதில்: சிறுகதை வடிவம் எனக்கு விருப்பமான வடிவம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில முக்கியமான கணங்கள் இருக்கும். அவை மகிழ்ச்சியானவையாகவும் இருக்கலாம். வேதனை அளிப்பதாகவும் இருக்கலாம். அல்லது திகைக்க வைப்பதாகவோ மெய்மறக்கச் செய்வதாகவோ இருக்கலாம். அக்கணங்களை எழுதிப் பார்ப்பதில் எனக்கு தொடக்கத்தில் மிகவும் ஆர்வமிருந்தது. எனது சொந்த வாழ்க்கையனுபவங்களில் நிறைந்திருந்த அத்தகு கணங்களை சற்றே புனைவம்சங்களைக் கலந்து எழுதினேன். பிறகு புனைவின் வழியாகவே கதைக் கணங்களை உருவாக்கி உச்சத் தருணத்தை நோக்கி வளர்த்தெடுக்கும் கலையில் தேர்ந்து, அந்த வழிமுறையிலும் கதைகளை எழுதினேன். எழுதுமுறையில் எத்தனை மாற்றங்களைக் கொண்டுவந்தபோதிலும் சரி, அது ஒரு வாழ்க்கைக்காட்சியை முன்வைக்கவேண்டும் என்பது என் விருப்பம். அக்கணத்தின் வழியாக நாம் மனிதனை மதிப்பிடலாம். சமூகத்தை மதிப்பிடலாம். மனிதர்கள் எத்தனை மகத்தானவர்கள் என்பதையும் எத்தனை அருவருப்பானவர்கள் என்பதையும் எவ்வளவு மோசமான விலங்குகள் என்பதையும் அத்தகு கணங்கள் உணர்த்துகின்றன. வானத்தை அண்ணாந்து நேரிடையாக பார்ப்பதைவிட, உருட்டி உருவாக்கப்பட்ட ஒரு தாள்குழாயின் வழியாக நாம் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் ஒரு துண்டு வானம் சற்றே கூடுதலான வசீகரம் கொண்டதாக இருப்பதுபோல, ஒரு சிறுகதை புலப்படுத்தக்கூடிய வாழ்க்கையின் உச்ச கணம் நமக்கு சில புதிய புரிதல்களை வழங்குவதாக இருக்கின்றன. புதிய வெளிச்சங்களை வழங்குவதாகவும் இருக்கின்றன.

கேள்வி: தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளிடமிருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட அம்சம் என்ன ? உங்களின் ஆதர்சம் குறித்து சில வார்த்தைகள்.

பதில்: நம்முடைய சிறுகதை முன்னோடிப் படைப்பாளிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, மெளனி, அழகிரிசாமி, ஜானகிராமன், அசோகமித்திரன், வண்ணதாசன், வண்ணநிலவன் என நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.  அனைவரையும் நான் விரும்பிப் படித்தவன். தோன்றும்போதெல்லாம் இப்போதும் எடுத்துப் படித்துக்கொண்டிருப்பவன். அவர்களுடைய படைப்புகளில் நிறைந்திருக்கும் கருணையும் கனிவும் என் மனத்தை நிரப்பும் அம்சங்கள். அத்தகு கதைகளை மீண்டும் மீண்டும் தேடியெடுத்துப் படிக்கிறேன். அழகிரிசாமியின் தரத்திலோ புதுமைப்பித்தன் தரத்திலோ ஒரு பத்து பதினைந்து சிறுகதைகளை எழுதும் கனவே என்னைச் செலுத்தும் விசை.

கேள்வி: உங்களது கதைகள் யதார்த்தவாத அம்சங்களிலும் நேர்க்கோட்டு தன்மையிலும் பெருவாரியாக நிலைகொண்டுள்ளது. இவை முன்முடிவுகளுடன் தீர்மானிக்கப்படுவதா ?

பதில்: தமிழில் பெரும்பாலான நம் முன்னோடிகள் அனைவரும் யதார்த்தவாத அடிப்படையில் எழுதியவர்கள்தானே. அவர்களின் தொடர்ச்சியாக நான் எழுதத் தொடங்கியபோது இயல்பாகவே நானும் அந்த வடிவத்திலேயே எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். மாற்று எழுத்துமுறையைப்பற்றி சிந்திக்கத் தேவையில்லாத அளவுக்கு எதார்த்தவாத எழுத்துமுறை வசதியாகவும் இருந்தது. ஒரு கதைக்கான ஒரு நல்ல தொடக்கத்துக்காக பல நாட்கள் காத்திருப்பேன். ஒரு நல்ல தொடக்கம் என்பது நம் உடலெங்கும் இறக்கைகளாக முளைத்து பறக்கவைப்பதற்கான விசை.

கேள்வி: வேறு வேறு வடிவங்களில்  சொல்லப்படும் கதைகள் குறித்த உங்கள் பார்வை ?

பதில்: ஆரம்பக் காலத்தில் நானும் அத்தகு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். நேற்று வாழ்ந்தவர்கள், வெளிச்சம் போன்ற தொகுதிகளில் அத்தகு கதைகள் சில உள்ளன.  தொடக்கத்தில் இருந்த அந்த ஆர்வம் பிறகு படிப்படியாக குறைந்துவிட்டது. என் இலக்கு வடிவச்சோதனை அல்ல என்று எனக்குத் தோன்றியது. பிறகு வழக்கமான எதார்த்த வழிமுறையிலேயே எழுதத் தொடங்கினேன்.  ஆனால் பிறர் எழுதும் அத்தகு படைப்புகளைப் படிப்பதில் எனக்குள் எந்தத் தடையுமில்லை.

கேள்வி: உங்களது கதைமாந்தர்கள் அதிகாரத்திற்கு அஞ்சி தங்களுக்குள்ளாகவே ஒடுங்கும் மனிதர்களாக இருக்கிறார்கள். கதைகளும் அவர்களுடைய ஒடுங்குதலின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறதே அன்றி அதற்கான மீட்சியில் கவனம் குவிய மறுக்கிறது. இத்தன்மையை அதிகாரத்தின் மீது படைப்பாளிக்கு இருக்கும் அவநம்பிக்கையாக எடுத்துக்கொள்ளலாமா ?

பதில்: அதிகாரத்தைக் கண்டு அஞ்சி ஓரமாக ஒதுங்கி நடப்பவர்களோடுதான் நானும் நடந்துகொண்டிருக்கிறேன். அதிகாரத்தின் அழுத்தமான காலடிகளின் கீழே நசுக்குண்டு மட்கி மண்ணாகவே போயிற்று, எமது பழைய தலைமுறைகள். ஒரு சின்ன இடைவெளியில் பச்சை பிடித்து வளர்ந்து வெளிக்காற்றைச் சுவாசித்து காற்றிலசையும் தளிரென இன்று மனிதர்கள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகள் முன்பு வரைக்கும் கூட இவர்கள் அடையாளமற்ற கூட்டம் என்றே வாழ்ந்துவந்தவர்கள் இவர்கள். இப்போதுதான் ஒரு மனித முகத்தின் அடையாளத்தோடு நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எக்கணத்திலும் இடித்து ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு பறந்துபோகக்கூடும் என்னும் அச்சம் தானாகவே எழும் அளவுக்கு வாகனங்கள் விரைந்தோடும் நெடுஞ்சாலையின் விளிம்பில் விலகிச் செல்வது என்பது ஒருபோதும் கோழைத்தனமல்ல. அவநம்பிக்கையும் அல்ல. தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்த விவேகம். நான் உயிர்த்திருக்கிறேன், இந்த மண்ணுலகில் நானும் ஒரு துளியாக எங்கோ இருக்கிறேன் என்னும் எண்ணங்களை வளர்த்தெடுக்கும் தன்னம்பிக்கை. எதிர்ப்பைக் காட்டி அடையாளமே இல்லாமல் அழிந்துபோவதைவிட, இருட்டுப் பாதையெனினும் ஓரமாக ஒதுங்கிச் சென்று உயிர்த்திருப்பதைப் பெரிதென நினைக்கவைக்கும் சூழலில் மனிதர்கள் வேறு எப்படி வாழ்ந்துவிடமுடியும்.

கேள்வி: உங்களின் பார்வையில் வரலாற்று மனிதர்களும் புராணமாந்தர்களும் கூட ஒடுங்குதலை இயல்பாக ஏற்றுக்கொள்கின்றனர். அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பில்லை எனும் நிலையில் இந்தப் பார்வையை படைப்பாளியிடமிருந்து ஒருமுகமாக வெளிப்படுவது என்று கொள்ளலாமா ?

பதில்: அதிகாரம் இந்த மண்ணில் உருவான கணத்திலேயே, ஒவ்வொரு உயிரும் தான் வாழவேண்டிய விதம்பற்றி தன்னைத்தானே தகவமைத்துக்கொண்டுவிட்டன. பறவைகள்போல, விலங்குகள்போல மனிதர்களும் தனக்குரிய நெறிகளை தாமே வகுத்துக்கொண்டனர். அவர்களில் சிலர் அதிகாரத்தை நோக்கி மெல்லமெல்ல நடந்தார்கள். சிலர் அதிகார வட்டத்தின் விளிம்பிலேயே உழன்றுகொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அந்த வட்டத்தைவிட்டு வெளியேறி கடப்பது தெரியாமல் கடந்துபோனார்கள். மாறாத விதியென இந்த மண்ணுலகைக் கட்டியாள்கின்றன இத்தகு விதிகள்.

 

கேள்வி: எளிய விஷயங்களால் திருப்தி அடைபவர்களாகவும் உங்களது கதாபாத்திரங்கள் அமையப்பெற்றிருக்கிறார்கள். சைக்கிள், கண்ணன் பொம்மை, ஒரு சவாரி, பூனை பொம்மை முதலியனவற்றை உங்கள் கதைகளிலிருந்து பட்டியலிடலாம். குடும்பத்தில் தொடங்கி அரசு வரை நீளும் அதிகாரங்களை கதைகள் பேசினாலும் இந்த எளிய விஷயங்கள் அவர்களின் உண்மையான தேவைகளை மறைத்துவிடுகின்றன. இந்த திருப்தியே எளிய மனிதர்கள் அதிகாரத்திடம் ஒடுங்கி செல்வதற்கு காரணமாக அமையுமா ?

பதில்: குடும்ப உறவுகளில் மனிதர்கள் அடைய விரும்பும் மனநிம்மதி அல்லது மனநிறைவு என்பது வேறு. புற வாழ்க்கையில் அதிகாரம் விரித்திருக்கும் வலையில் விழாமலும் அதிகாரத்தின் வெளிச்சக்குழலை பால்பாத்திரம் என நினைத்து முட்டிமோதிக் குடிக்கச் சென்று ஏமாந்து விழாமலும் கவனத்தோடு விலகி நடப்பது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. அல்லது ஏதோ ஒன்று இன்னொன்றைத் தீர்மானிக்கிறது என்பதும் சரியல்ல. இப்படியும் சிலர் வாழ்கிறார்கள், இப்படியும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்வதுதான் சரி. அதிகாரம் என்னும் கோட்பாட்டுச்சொல்லின் துணையோடு இவர்களை ஒருபோதும் புரிந்துகொள்ள முயற்சி செய்யக்கூடாது.

கேள்வி: காலத்திற்கேற்ப நிகழும் நகரமயமாக்கல் அதற்கு முன்பிருந்த தொழில்களை சமூகத்திலிருந்து எளிதாக பிடுங்கி எரிந்துவிடுகிறது. இந்தத் தன்மை உங்களுடைய கதைகளில் பாதிக்கப்பட்டவர்களின் இடத்திலிருந்து பேசப்படுகிறது. வெளியேற்றம் கதையில் வரும் வண்ணான் ஆகட்டும், வண்டி கதையில் வரும் குதிரை வண்டிக்காரன் ஆகட்டும் இந்தத் தன்மை பொருந்தும். இந்தக் கதைகளின் வழியே விவாதிக்கப்படும் நகரமயமாக்கல் குறித்த உங்களின் பொது விமர்சனத்தை பகிர்ந்துகொள்ளமுடியுமா ?

பதில்: நகரமயமாகும்போது அல்லது வாழ்க்கை நவீனமயமாகும்போது சில மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை என்பதையும் சில இழப்புகள் தவிர்க்கமுடியாதவை என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக, நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதைத் தொகுத்துப் பார்க்க விரும்புகிறேன். அதில் இருக்கும் பண்பாட்டு அம்சங்களை நாம் வேறு எவ்வகையிலும் புரிந்துகொள்ள முடியாது. நகரத்தில் ரயில் நிலையங்களில் ஏறி இறங்கும் படிக்கட்டுகளில் கணம்தோறும் நூறு பேர் பரபரப்பாக இறங்கி நடந்துபோகிறார்கள். அதே படிகளில் நூறு பேர் கிடைக்கும் இடைவெளிகளில் பரபரப்பாக ஏறிச் செல்கிறார்கள். இடிபாடுகளில் சிக்கி நடக்கமுடியாமலும் புறங்கைகளால் இடித்துத் தள்ளிவிடப்பட்டும் ஒன்றிரண்டு பேர்கள் தடுமாறி கீழே உட்கார்ந்துவிடுகிறார்கள். கடந்துபோய்விட்டவர்களைவிட கடக்கமுடியாமல் தவிப்பர்கள்மீது என் கவனத்தைக் குவிக்கிறேன். அது எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. அத்தகையோரைப்பற்றிய பதிவுகள் நமது இலக்கியவெளியில் இருக்கவேண்டும் என்பது என் விருப்பம். இது நகர்மயமாக்கம் பற்றிய விமர்சனமே அல்ல. இவர்களுக்கென இருந்த வாழ்க்கைவெளியை நாம் இல்லாமலாக்கிவிட்டோமே என்னும் குற்ற உணர்வு. அவ்வளவுதான்.

கேள்வி: முன்குறிப்பிட்ட இரண்டு கதைகளையே எடுத்துக்கொள்ளலாம். வயல் நிலங்களை வைத்திருக்கும் நிலச்சுவான்தார்கள் வண்ணான்களின் இடத்தை எடுக்கின்றனர்.  டாக்ஸிக்கள் குதிரை வண்டியின் இடம் ஏற்கின்றன. சமகாலத்தில் இவற்றிற்கும் ஒரு மாற்றை நகரம் முன்வைத்த வண்ணம் இருக்கிறது. அந்நிலையில் உங்களுடைய கதைகள் குறிப்பிட்ட காலத்தோடு நின்றுவிடும் களமாக எடுத்துக்கொள்ளலாமா அல்லது நகரமயமாக்கல் எனும் தொடர் சங்கிலியின் சிறு பகுதியாக அர்த்தம் கொள்ளலாமா ?

பதில்: கிராமங்கள் நகரங்களாக மாற்றம் பெறுவதும் நகரங்கள் பெருநகரங்களாக மாற்றம் பெறுவதும் இயற்கை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த மாற்றங்களால் விளைந்த நன்மைகளும் உண்டு. இழப்புகளும் உண்டு. இந்த இழப்புகளை குறியீடாக வாசிப்பதுதான் நல்ல வாசிப்பு. மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் இந்த இழப்புகள் நம்மை எப்படித் தொடர்கின்றன என்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக சலவைத்தொழிலாளிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தைப் பற்றிய கதையை யோசித்துப் பாருங்கள். இன்று நகரம் விரிவாக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழும் முதல் நிகழ்ச்சி இப்படிப்பட்ட நிலப்பறிப்புகளே. அனைத்தையும் இழந்து அல்லற்படுபவர்கள் எளிய மக்களே. அப்படிப்பட்ட தருணங்களிலெல்லாம் வெளியேற்றம் சிறுகதையை நீங்கள் ஒருகணம் நினைத்துக்கொள்ளலாம்.

கேள்வி: அநேக கதைகளில் குதிரைகள் இடம்பெருகின்றன. அவற்றுடன் ஃப்ரெஞ்சு காலனியும் இடம் பெறுகிறது. சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் உவமையாகவும். குதிரைக்கும் ஃப்ரெஞ்சு காலனிக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் நினைவுகள் பற்றி.

பதில்: பேருந்துகள், புகைவண்டிகள் எல்லாமே எங்கள் சிற்றூரில் நான் பள்ளிக்குச் செல்லும் காலத்திலேயே வந்துவிட்டன. நான் பிறந்த ஆண்டு 1958. அறுபதுகள் முழுதும் தொடக்கப்பள்ளியில் நான் பயின்ற காலம். அப்போது வில்வண்டிகளும் குதிரைவண்டிகளும் சாலைகளில் ஓடிக்கொண்டே இருக்கும். பெரிய மனிதர்களின் வாகனமாக அது இருந்தது. இப்போது இருசக்கர வாகனங்களில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை ஏற்றிவந்து விட்டுச் செல்வதுபோல அந்தக் காலத்தில் குதிரை வண்டிகளிலும் வில் வண்டிகளிலும் பிள்ளைகள் பள்ளிக்கு வந்து இறங்குவார்கள். பள்ளி முடியும் தருணங்களில் அந்த வண்டிகள் வெளியே காத்திருந்து அவர்களை மீண்டும் அழைத்துச் செல்லும். நாங்கள் அவ்வண்டிகளுக்குப் பின்னால் சிறு ஓட்டமாகவே சிரிப்பும் கதையுமாக பேசிக்கொண்டே ஓடுவோம். மருத்துவமனைகள், ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள் எல்லா இடங்களிலும் ஆலமரத்தடியிலோ அல்லது பூவரசமரத்தடியிலோ நின்றிருக்கும். குதிரைகளின் கழுத்திலும் நெற்றியிலும் பொருத்தப்பட்டிருக்கும் கரிய பட்டைகளையும் ஜல்ஜல் என்று ஓசையோடு அசையும் கழுத்துமணியையும் தொட்டுப் பார்க்க சின்னப் பிள்ளைகளான எங்களுக்கு ஆசையாக இருக்கும். ஆனால் வண்டிக்காரர்கள் எங்களை நெருங்கவே விடமாட்டார்கள். வைக்கோலை அடர்த்தியாகப் பரப்பி அதன்மீது போர்வையை மடித்து விரித்து மெத்துமெத்தென ஆக்கப்பட்ட இருக்கைகளை யாருக்கும் தெரியாமல் தொட்டுப் பார்ப்பதே எங்களுக்கு ஆனந்தமாக இருக்கும். அவற்றில் ஏறி பயணம் செல்வதைப்போல எனக்கு சிறுவயதில் அடிக்கடி கனவுகள் வருவதுண்டு. என் கனவுகள் நிறைவேறியதே இல்லை. இப்படிப்பட்ட காட்சிகளை எழுதும்போது, அந்த இளமைக்கால வாழ்க்கையை இன்னொருமுறை வாழ்வதுபோல இருக்கும்.

பிரெஞ்சு காலனியை நேரடியாக அறியாத தலைமுறை என்னுடையது. எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே இரு தேவாலயங்கள் இருக்கின்றன. இன்றும் வழிபாட்டில் உள்ள தேவாலயங்கள். பூசை சமயங்களில் அந்த ஆலயங்களிலிருந்து எழும் மணியோசை மனத்தை அமைதிப்படுத்துவதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அந்த ஆலயங்களை ஒட்டி வாழ்ந்த பிரெஞ்சுக்காரர்களைப்பற்றியும் அவர்களால் வளம்பெற்ற சில குடும்பங்கள் பற்றியும் தன் உரையாடல்களின்போது தாத்தா சொன்னதுண்டு. எப்போதாவது என் கதைகளுக்கு அந்த நினைவுகளிலிருந்து சிறுசிறு பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்வேன். அவ்வளவுதான்.

கேள்வி: எளிய மனிதர்களின் வாழ்க்கையை தமிழ் இலக்கியம் பதிவு செய்யப்படத் தொடங்கிய காலந்தொட்டே அதன் முடிவுகள் வாழ்வின் அபத்தத்தை நோக்கியும், அல்லது புரிதலுக்கு அப்பால் இருக்கும் தத்துவச் சிக்கல்களை குறித்துமே அமைந்திருக்கின்றன. இந்நிலையில் உங்களுடைய கதைகள் மரபார்ந்த அம்சமான இனிமையான முடிவுகளை வாசகர்களுக்கு அளிக்கின்றன. கதைகளின் முடிவு குறித்த இவ்வடிவத்தை எங்ஙனம் அடைந்தீர்கள் ?

பதில்: இனிமையான முடிவுகளை உடையவை என்று நீங்கள்தான் முதன்முதலாகச் சொல்கிறீர்கள். இதுவரை வாசித்தவர்கள் பலரும் இக்கதைகள் துயரார்ந்தவையாக உள்ளன என்றும் வேதனையின் பதிவுகளாக உள்ளன என்றும் சொன்னதையே கேட்டு வந்திருக்கிறேன். உங்களை அப்படி நினைக்கத்தூண்டியது எது என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி வேர்கள் தொலைவில் இருக்கின்றன. அந்தத் தலைப்புக்கதையில் அன்பான கணவன், மனைவி, பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம் இடம்பெற்றிருக்கும். குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு கணவன் எங்கோ வெளியூரில் வேலை செய்யும் சூழல். குடும்பத்துக்காக உழைப்பவன் குடும்பத்தோடு வாழ வழியில்லை. எவ்வளவு பெரிய அபத்தம். பல கதைகள் வறுமையை முன்வைப்பவை. இயலாமையை முன்வைப்பவை. வெறுமையை முன்வைப்பவை. அதே சமயத்தில் அப்படி வாழ நேர்ந்துவிட்ட அபத்தத்தைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பவை. ஏழு லட்சம் வரிகள் என்னும் கதையை நீங்கள் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஒருகணம் அதை அசைபோட்டுப் பாருங்கள். பெருங்கதை என்னும் பெருங்காவியத்தை அல்லும் பகலும் உறக்கமோ ஓய்வோ இல்லாமல் ஒரு புலவர் எழுதிக்கொண்டு அரசனைச் சந்திக்கச் செல்கிறார். அந்தக் காவியத்தை அரச அவையில் அரங்கேற்ற முடியாது என மறுக்கிறான் அரசன். அக்காவியம் அரச அவை ஏற்றுக்கொள்ளும் வகையில் சமஸ்கிருதத்தில் எழுதப்படாமல் காட்டில் புழங்கும் மொழியில் எழுதப்பட்டிருப்பதுதான் காரணம். மனம் குமைந்து திரும்பும் கவிஞர் தான் எழுதிய ஏடுகளை நெருப்பிலிட்டுக் கொளுத்தத் தொடங்குகிறார். ஒரு காலத்தில் எதற்காக, எதை மறுத்திருக்கிறார்கள் பாருங்கள். எவ்வளவு பெரிய அபத்தம். வாழ்க்கையே அப்படி ஏராளமான அபத்தங்களால் நிறைந்திருக்கிறது.

கேள்வி: இந்த வடிவத்தை மீண்டும் மரபு நோக்கி திரும்புதலாக எண்ணலாமா?

பதில்: அப்படி அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை. நிகழ்ந்தவற்றை கணம்கணமாகத் தொகுத்து வாழ்க்கையை மதிப்பிட இந்த வடிவம் சற்றே எளிய வழிமுறையாக இருக்கும். அவ்வளவுதான்.

கேள்வி: முப்பதுக்கும் மேலான ஆண்டுகள் எழுத்தில் இயங்கியிருக்கிறீர்கள். அப்பயணத்தில் சிறுகதைகள் உங்களுக்கு விடுத்த சவால்கள் என்ன ? புதிதாக  சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கும் முன் உங்கள் முன்நிற்கும் சவால்கள் குறித்து சில வார்த்தைகள்.

பதில்: முப்பது ஆண்டு எழுத்தனுபவம் எல்லாம் சிறுகதையின் முன் செல்லவே செல்லாது. ஒவ்வொரு கதையும் எனக்கு முதல் கதையைப் போன்ற பதற்றத்தையே அளிக்கின்றன. இச்சம்பவத்தைக் கதையாக்கலாம் அச்சம்பவத்தைக் கதையாக்கலாம் என எதையும் பார்த்து நான் தீர்மானிப்பதே இல்லை. எதை எழுதுவது என்பதை மனம் தீர்மானிக்கும் தருணம் ஓர் அபூர்வமான தருணம். அந்த நெருப்பின் அனலால் மனத்தில் வெப்பம் படியும்போது முதல் வரியை எழுதத் தொடங்கிவிடுவேன். முதல் பத்தியைக் கடப்பது என்பது ஒரு பெரிய பயணத்தில் வாய்க்காலின் குறுக்காக வைக்கப்பட்டிருக்கும் பனைவாரிலான பாலத்தைக் கடப்பதுபோல. பிறகு வேகவேகமாக ஓட்டமெடுத்துவிடும். ஆனால் அந்த அனல் தீண்டாமல் ஒருபோதும் ஒரு கதையை எழுதிவிட முடியாது. இதுவே மிகப்பெரிய சவால். அனைத்துக்கும் மேல் அந்த முதல் வரி. அது இன்னொரு சவால். இவை இரண்டும் நம் கையில் இல்லை. மற்றபடி அனைத்தும் நம் கையில் உள்ளன. எவ்வளவு பெரிய விடம்பணம்.

கேள்வி: சமகால சிறுகதைகளின் போக்கு குறித்து.

பதில்: புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் பல இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வாசித்தபடியே இருக்கிறேன். சிலருடைய கதைகளை ஒன்றிரண்டாவது வாசித்திருப்பேன். அனைவரும் திறமையோடு எழுதுகிறார்கள். மிகவும் தன்னம்பிக்கையோடு எழுதுகிறார்கள். மிகக் குறைவான கதைகளை எழுதிமுடிக்கும் தருணத்திலேயே தனக்குரிய கதைமொழியைக் கண்டடைந்துவிடுகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. இலக்கிய இதழ்களில் உயிர் எழுத்து பத்திரிகை தொடர்ந்து புதிய சிறுகதை ஆசிரியர்களுக்கு இடமளித்து வருகிறது. யாவரும் பதிப்பகம் பல புதிய படைப்பாளிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். ஜெயமோகனின் தளத்தில் பல புதிய எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமும் அவர்களுடைய படைப்புகள் பற்றிய விவாதமும்  தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழல் மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. அசோக்குமார், தூயன், சுனில்கிருஷ்ணன், கலைச்செல்வி, காரல்மார்க்ஸ், அ.கரீம், பாலகுமார் போன்றோரின் சிறுகதைகளை நான் மிகவும் விரும்பிப் படித்தேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close