சிறுகதைகள்
Trending

பெயரற்றது – ரெ.விஜயலெட்சுமி

சிறுகதை | வாசகசாலை

 

ஜன்னல் வழியே தெரிந்தது அந்த தூரத்து மொட்டை மாடி. காலை நேர வெயிலில் அதன் வெண்மை இன்னும் கொஞ்சம் பளீரென வாய் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.

தரை முழுவதும் வெள்ளைத் தட்டோடுகள் பதிக்கப்பட்டு இருந்தன. தரை, கைப்பிடி, சுவர் என எங்கும் எதிலும் வெண்மை. அந்த மாடியில் மூலைக்கொன்றாக இரண்டு சின்டெக்ஸ் டேங்குகள். அவையும் வெண்ணிறத்தில் தகித்தன. இவ்வளவு வெண்மை ஒருசேர ஓரிடத்தில் கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சத்தில் பார்த்ததேயில்லை.

அந்த வெண்மையைக் கேலி செய்யும் எண்ணமே இல்லாத சாம்பல் நிற அணிலொன்று எங்கிருந்தோ வந்து மொட்டை மாடியில் தொபீரென குதித்து சுற்றிச் சுற்றி வளைய வரத் தொடங்கியது.

மீண்டும் மீண்டும் அதை மொட்டை மாடி என்று சொல்ல சற்று சங்கடமாக இருக்கிறது. ஏனெனில் அது ஒன்றுமில்லாமல் இருந்தாலும் தன் மீது வெண்மையைப் படர முழுமையாக அனுமதித்து இருக்கிறது. நிறமும் இடமும் தனித்தனியென பிரிய முடியாமைக்குள் அது சென்றுவிட்டது போலத் தோன்றுகிறது. அதை இனி மொட்டை மாடி என அழைப்பது அதற்கும் சரி, அழைப்பவருக்கும் சரி, மரியாதையல்ல. அதனால் அதற்கு இக்கணம் முதல் வெள்ளை மாடி எனப் பெயர் சூட்டி விடுவோம்.

வெள்ளை மாடியும் சாம்பல் அணிலும் விரோதமோ நட்போ பாராட்டாமல் செவ்வனே ஆதிப் படைப்பின் இரு வேறு ஆகிருதி நிலைகள் போல ஒட்டிக்கொள்ளாமல் தொட்டுக் கொண்டிருந்தன.

வெள்ளையும் சாம்பலும் வெட்டிக் கொள்ளாமல் இருப்பதில் கொஞ்சம் ஒத்துப் போய்க் கொண்டிருந்த வேளையில், வேகமாகப் பறந்து வந்த காக்கை அந்த வெண்ணிற சின்டெக்ஸ் டேங்க் மீது அமர்ந்தது.

இப்போது வெண்மையும், சாம்பலும், கருமையும் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டன. மூவருக்குள்ளும் வெவ்வேறு எண்ணங்கள் அசையத் தொடங்கின.

அமைதியாக அசைபோடத் தெரியாத கருமை சட்டென சத்தம் போட்டு சிரித்துத் தொலைத்தது. கருமையின் திடீர் சத்தத்தால் வெண்மையும் சாம்பலும் திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தன. கருமை சட்டென தலை திருப்பி வேறு திசையில் நோக்குவது போல தன்னை மறைத்துக் கொள்ள முனைந்தது. வெண்மையும் சாம்பலும் ஒன்றுக்கொன்று யதார்த்தமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதை சற்றும் விரும்பாத வெண்மை சட்டென தலை திருப்பிக் கொண்டது.

வெண்மையும் கருமையும் வெவ்வேறு திசைகளில் முறுக்கிக் கொள்வதைப் பார்த்த சாம்பலுக்கு அங்கிருக்கும் விருப்பம் இல்லாமல் போனது.

இது எதையும் அறியாத அணிலோ மீண்டும் மீண்டும் அந்த மொட்டை மாடியில் (இப்போது வெள்ளை மாடி என்று கூறினால் பிறகு சாம்பல் அணில் என்றும் கருப்பு காகம் என்றும் கூற வேண்டியிருக்கும். சூழ்நிலை மாறி விட்டதால் இட்ட பெயரை தற்போதைக்கு ஒத்தி வைப்போம்.) வளைய வந்தபடியே இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் சாம்பலும் அங்கேயே திரிந்து கொண்டு இருந்தது.

கருமைக்கு தன் அடர்த்தியில் எப்போதும் அகம்பாவம் உண்டு. வெண்மைக்கு தன் தெளிவினில் எப்போதும் ஆனந்தம் உண்டு. இவ்விரண்டிலும் தனக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போலவே சாம்பல் நடந்து கொள்வதுண்டு.

சாம்பல் மற்ற நிறங்களை, (அதிலும் குறிப்பாக வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களை) சந்திப்பதை விரும்புவதே இல்லை. இவ்விரண்டு நிறங்களுக்கும் நிறந்தோன்றிய காலத்திலிருந்து பனியுத்தம் நடந்து கொண்டு இருக்கின்றது. சாம்பலின் தலையீடு மட்டும் இல்லையென்றால் ஒன்றுக்கொன்று மோதி, சண்டையிட்டு மிக நீண்ட நேரடி யுத்தத்தைத் துவங்கியிருக்கும். நிச்சயமாக யுத்தத்தின் இறுதியில் எல்லா நிறங்களும் அழிந்துபோய் இந்த பிரபஞ்சம் நிறம் அற்றுப் போயிருந்திருக்கும். பிரபஞ்சமே நிறங்களில்தான் வாழ்ந்து கொண்டிருப்பதால் நிறங்கள் அழிந்துவிட்டால் அதன் பிறகு கால இடைவெளி ஏதுமின்றி ஒட்டு மொத்த பிரபஞ்சமும் மறைந்து போகும். இந்த ரகசியம் தெரிந்தது சாம்பலுக்கு மட்டும்தான். அதனால்தான் அந்நிறத்திற்கு இன்றுவரை பெயரிடப்படவில்லை.

சாம்பல் என்பது பெயர்தானே என்று கேட்காதீர்கள். சாம்பல் என்பதே எஞ்சி நிற்பதுதானே. திடமும் இல்லாத திரவமும் இல்லாத நிலைமைதானே சாம்பல். சாம்பல் என்பது பொருளின் பெயரே தவிர நிறத்தின் பெயர் இல்லைதானே. அதனால்தான் அந்நிறத்திற்கென்று எப்போதும் ஒரு தனித்துவம் உண்டு. ஆனாலும் அந்நிறம் தனக்கு பெயரில்லாததைக் கண்டு ஒருபோதும் விசனம் கொண்டதில்லை.

சுப காரியங்களோ அசுப காரியங்களோ அங்கே யார் அழைத்தாலும் அழைக்கா விட்டாலும் அப்பெயரில்லா நிறம் சென்று விடும். அதன் இருப்பை எந்த நிறமும் கண்டுகொள்ளாது. கண்டுகொள்ளாததை எதையும் அதுவும் கண்டுகொள்ளாது.

ஒருவேளை என்றைக்காவது முக்கிய நிகழ்வில் பெயரற்றது இல்லாமல் போய்விட்டால் அந்நிகழ்வு முழுமையாக நிறைவடைந்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் நிறமற்றதின் இன்மையே காரணம் என்பதை எந்த நிறமும் எடுத்துப் பேசியதே இல்லை. உள்ளுக்குள் அதை உணர்ந்தனவா என்பதைக் கூட காட்டிக்கொண்டது இல்லை. நிகழ்வின் நிறைவின்மையைக் கேள்விப்படும்போது நிறமற்றதின் மனதுக்குள் வேதனை அப்பிக் கொள்ளும்.

வேதனையைப் போக்க என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக தனித்திருக்கும். பொதுவாகவே தனிமையில் அமைதியாக இருப்பதே அதன் பழக்கம் என்பதால் வேதனைக்கென்று ஒரு தனி நிலை ஒன்றில்லை.

இப்படியான எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தபோது ஒரு மெல்லிய விசும்பல் சத்தம் தொட்டு எழுப்பியது. அது வெண்மையின் விசும்பல்தான். பெயரில்லா நிறத்திற்குப் புரிந்து போனது. வழக்கம் போல கருமை வம்பிழுத்து வெண்மையை விசும்பச் செய்திருக்கிறது.

எள்ளின் முனையளவு இடம் கிடைத்தாலும், அதிலும் தன் பலத்தை நிரூபித்துக் கொண்டே இருப்பது கருமையின் இயல்பு. கடுகளவு உராயப்பட்டாலும் காயப்பட்டுக் கொள்வது வெண்மையின் இயல்பு. இவ்விரண்டும் சந்தித்துக்கொண்டால் துயரம்தான். ஆனால் பிரபஞ்ச கணக்கில் அவை சந்தித்துக் கொள்ளாமல் எதுவுமே சாத்தியமில்லை.

விசும்பல் இப்போது தேம்பல் ஆகிவிட்டது. அப்படியே விட்டால் சற்று நேரத்தில் அதுவே கதறலாக மாறிவிடும். ஆனால் தலையிட்டாலும் எதையும் பெரிதாக மாற்றிவிட முடியாது. தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விட இன்னும் பெயரற்ற நிறமும் பழகிக் கொள்ளவில்லை. ஆனாலும் பல்லைக் கடித்தபடி பொறுமை காத்தது.

நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை விட நிறமற்றதின் புறக்கணிப்பு இரு நிறங்களுக்கும் பெரும் வலியைத் தந்தது. வார்த்தைக்கு வார்த்தை பேசி வாயாடும் இடங்களில் எப்போதும் சண்டையோ அணுக்கமோ நீர்த்துப் போவதில்லை. ஆனால் புறக்கணிப்பு எல்லாவற்றையும் நிர்மூலமாக்கிவிடும். புறக்கணிப்பினால் முடிந்து போவது பிரச்சனைகள் மட்டுமல்ல. பல சமயங்களில் நெருக்கங்கள் பிளந்து போவதும் உண்டு.

அவ்விரு நிறங்களுக்கும் இப்போது ஒரு சேர நிறமற்றதின் பெயரில் ஆத்திரம் கொப்பளித்தது.

வெண்மையின் ஆத்திரத்தில் மாடி கொதித்தது. கருமையின் ஆத்திரத்தில் காகம் கரைந்தது.

ஏதுமறியா அணில் இரண்டையும் தாங்க முடியாமல் ஓடித் தப்பிக்க எத்தனித்துக் கொண்டிருந்தது. ஆனால் முடியவில்லை. காலடியில் வெண்மையின் தாக்கம் வீரியமானது. மேலிருந்து கருமையின் தாக்கம் கணீரென ஒலித்தது. ஒளியும் ஒலியும் சேர்ந்து அதை நிர்மூலமாக்கப் போராடிக் கொண்டிருந்தன.

இன்னும் சற்று நேரம் பொறுத்தால் உருகி ஓடி ஒன்றுமில்லாமல் போய் விடுவோம் என்பதை பெயரற்றது உணர்ந்தது. கடைசி விநாடியில் கூட தப்ப விடக்கூடாது என முடிவெடுத்த கருமை விர்ரென பறந்து கொத்த வந்தது. வெண்மையின் அதிக வெப்பத்தில் அணில் கருகியது. கருகிய இடத்தில் கருமை அப்பிக்கொள்ள நிறமற்றது சடாரென வானில் ஊடுருவியது.

வானில் ஊடுருவிய நிறமற்றது நீலத்தோடு சேர்கையில் அங்கு மீண்டும் சாம்பலாகப் பெயரற்றது பிறந்தது. கருமையும் வெண்மையும் செய்வதறியாது விக்கித்துப்போய் இருக்கையில், மேல் வானம் முழுவதும் நிறமற்றது படர்ந்து விரிந்து தோகை விரித்தது.

கருமையும் வெண்மையும் கொஞ்சம் பயந்துதான் போயின. ஆனால் அதை வெளிக்காட்ட விரும்பவில்லை. எப்போதும் எதையும் வெளிக்காட்ட விரும்பாத நிறமற்றது மெல்ல மெல்ல உக்கிரமாகியது. வான் அவயம் முழுதும் தன் ஆயிரமாயிரம் கரங்களை நீட்டிக்கொண்டே சென்றது.

பிரபஞ்சத்தின் அத்தனை நிறங்களும் பயந்து போய் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நடுங்கியபடி முன் நின்றன. கருமையும் வெண்மையும் தங்கள் ஆதியும் அந்தமும் என்பதால் எதுவும் கேட்க முடியாமல் வாயடைத்துப்போய் அவ்விரண்டு நிறங்களுக்குப் பின்னால் பதுங்கி நின்றன.

வானம் முழுவதும் நீலம் மறைந்து போனது. நிறமற்றதைக் குளிர்விக்க இனி யாதொரு சாத்தியமும் இல்லை. ஒட்டு மொத்த பிரபஞ்சமும் இனி நிறமற்றதாகி இல்லாமல் போகப் போகிறது. முதலில்லாததும் முடிவில்லாததும் ஆகியதன் மையம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அப்போதுதான் அது வந்தது. நீலம் முழுமையாக மறையும் போது வானில் இருந்து முதல் முத்து விசும்பிடை உதிர்ந்தது. பெயரற்றது மெல்ல குளிரத் தொடங்கியது. குளிர்ச்சியின் நிறத்தில் ஒட்டு மொத்தமும் நனையத் தொடங்கியது.

அப்பொழுது உருக ஆரம்பித்த அகிலம் இன்னும் உறையவே இல்லை.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. எள்ளின் முனையளவு இடம் கிடைத்தாலும், அதிலும் தன் பலத்தை நிரூபித்துக் கொண்டே இருப்பது கருமையின் இயல்பு. கடுகளவு உராயப்பட்டாலும் காயப்பட்டுக் கொள்வது வெண்மையின் இயல்பு. இவ்விரண்டும் சந்தித்துக்கொண்டால் துயரம்தான். ஆனால் பிரபஞ்ச கணக்கில் அவை சந்தித்துக் கொள்ளாமல் எதுவுமே சாத்தியமில்லை.

    எல்லாவற்றுக்குமான விடை இதில் அடங்கியுள்ளது.

    மிகச்சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close