சிறுகதைகள்
Trending

பருத்தி மூட்டை- விஜய் வேல்துரை

கோபி தன் குறும்படத்தின் கதையைச் சொல்லி முடித்து லேசாகச் சிரித்தபடி வேலனின் கருத்தைக் கேட்கக் காத்திருந்தான். வேலனின் முகத்தில் எந்த வினையும் இல்லை. கை விரல்களுக்கிடையில் கரைந்து கொண்டிருந்த சிகரட்டையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.

“ப்ரோ கதை எப்படி, தாறுமாறா இருக்குதுல்ல?”

என்று ஆர்வம் மிகுதியில் கோபி கேட்டான். வேலன் சற்று தயங்கியபடி சிகரட்டை மேலும் இழுக்க மனம் இல்லாமல் கீழே போட்டான், தாடியை சொறிந்தபடியே அமைதியாக நின்றான்.

“‘சிகெரட் பிடிச்சா கான்சர் வரும்’ன்னு நிறைய படங்கள்ல சொல்லியிருக்காங்க ஆனால் எரிக்ஸன் ப்ராப்ளம் வரும்னு நாமதான் குறும்பட வரலாற்றிலேயே முதன் முதலா சொல்லப் போறோம். கன்டன்ட் எப்படி, நல்லா ஃப்ரஷா இருக்குல?” என்று கோபி சொல்லி முடித்ததும் “இல்ல கோபி” என்று வேலன் மௌனம் கலைத்தான்.

“தியேட்டர்ல படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போடுற நோ-ஸ்மோக்கிங் முகேஷ் ஆட் மாதிரி இருக்குது இந்தக் கதை” கோபியின் முகம் மாறியது. “என்ன பிரதர் சொல்றீங்க? இந்த மாதிரி ஸ்ட்ராங்க் சோசியல் மெசேஜ் உள்ள ஷார்ட் ஃபிலிம்ஸ்தான் அவார்டு வாங்கிக் குவிக்கும். கலைக்குக் கலையும் ஆச்சி, காசுக்குக் காசும் ஆச்சி” என்று சொல்லிச் சிரித்த கோபியின் சிரிப்பை வெறுத்தவனாய் தன் போனை நோண்டியபடி இருந்தான் வேலன்.

“அதைவிட முக்கியமா அந்த மெயின் கேரக்டர் கால்-கேர்ளிடம் பேசுற டயலாக் எல்லாம் டிரென்டிங் கன்டன்ட், யூடியூப்ல வியூஸ் அள்ளப் போகுது” என்று சொல்லிக் கோபி புளகாங்கிதம் அடைந்த போது,

“ஆனா மெயின் கேரக்டருக்கு எந்த வடிவமும் இல்ல அதனால கொஞ்சம் வீக்கா ஃபீல் ஆகுது” என்றான் வேலன் தயக்கத்தோடு. சற்று கூடுதலாகவே கோபம் கொண்ட கோபி சிரிப்புத் திரையை விரித்து மறைத்தபடி, “ஸ்கிரிப்ட் பவுண்ட் பண்ணிட்டேன் ப்ரோ. ஒரு நாள் ஷூட், டபுள் கால்ஷீட். ஆல்ஃபா மார்க் த்ரீ கேமராவுல போறோம். உங்களுக்கு 4000 ரூபாய் தாறேன்” என்றான்.

வேலன் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கியபடி நின்றான். “இல்ல கோபி அந்த கேரக்டர் ரொம்ப மேலோட்டமா இருக்கு…” என்று இழுத்துக் கொண்டிருந்தான். அப்போது வேலனின் போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான் அது அலாரம். அதை அணைத்துவிட்டு போனை காதில் வைத்து யாரிடமோ பேசுவது போல் பாவனை செய்தான்.

“சொல்லுடா ரவி… அய்யையோ அப்படியா…? உண்மையாவா சொல்லுற? அடக்கடவுளே! சரி இரு நான் உடனே கிளம்பி வாரேன்.” என்று சொல்லிவிட்டு போனை பாக்கெட்டில் வைத்தபடியே

“கோபி, ஒரு அவசர வேலை. நான் உடனே கிளம்பனும்” என்று சொல்லி அவசர அவசரமாக அங்கிருந்து நகர முயன்றான்.

“நீங்க பண்ணுறீங்களா இல்லையானு சொல்லிட்டு போங்க ப்ரோ” என்றான் கோபி.

“நான் போன்ல சொல்லுறேன் கோபி, கொஞ்சம் அவசரம்” என்று தலை தெறிக்க ஓடினான். கோபி முழித்தபடி நின்றான். சினிமா துறையில் இல்லை, நடக்காது, முடியாது என்ற வார்த்தைகள் நேரடியாகக் கிடைப்பதில்லை என்பது தன் இரண்டாவது குறும்படத்தை எடுக்கும் கோபிக்குத் தெரியுமோ என்னவோ, வேலனுக்கு நன்றாகத் தெரியும்.

வேலன் கடந்த 10 வருடங்களாக சினிமாவை அல்லது சினிமாவில் தன் இருப்பைத் தக்க வைக்கத் தேவையான அந்த வெற்றியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறான். வெற்றியின் அருகே வரும் போது அது எட்டி மிதித்து தூரே தள்ளி விடுகிறது. இது ஒரு முடிவில்லாப் பயணம் போலவும், இதன் இலக்கு ஒரு மாயை என்பது போன்ற பிரக்ஞைகள் இப்போது அவனுக்கு அடிக்கடி வருவதுண்டு.

ரோட்டுக்கடையில் நின்று ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து, தலையை மேலே உயர்த்தி, கண்களை மூடி புகையை உள்ளே முழுக்க இழுத்தான். புகையின் துகள்கள் வேகமாக மூச்சுக் குழலில் பரவி, நுரையீரலைத் தொட்டு இரத்தத்தில் பாய்ந்த போது அவனின் எண்ணங்களும் எங்கெங்கோ பாய்ந்தன. எண்ண ஓட்டத்தில், ‘கூத்துப் பட்டறையில் தொடங்கிய நடிப்புப் பயணம்… முதல்முறை காட் ஃபாதர் பார்த்து வியந்து அல் பசினோவை தன் மானசிக குருவாக ஏற்றது… ஸ்வேதாவின் முகம்… காரணமே சொல்லாமல் அவள் தன்னை விட்டு விலகி, பிரிந்து சென்றது… கேவலமான கதையைக் கொண்ட ‘தேவைக்குக் காதலா’ என்ற படத்தில் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன்… ஏன் அந்தப் படம் பாதியிலே நின்று போனது… அந்த பிராடு தாயோளி டைரக்டருக்கு நான் கொடுத்த 5 இலட்சம் ரூபாய் எனக்குத் திருப்பிக் கிடைக்குமா…?’ என்ற கேள்விகளால் மூச்சடைத்தபடியால் பிடித்து வைத்திருந்த புகையை வெளியே விட்டான். புறத்தில் கலைந்திருந்த அவனின் முடியும் தாடியும் அவன் அகத்தின் குறியீடாகக் காட்சி அளித்தன.

சட்டையில் ஒரு பட்டன் இல்லை. பிய்ந்து போன பழைய செருப்பு ஒன்றை அணிந்திருந்தவன் பார்க்கப் பிச்சைக் காரன் போல இருந்தாலும் கேமரா முன் அவனோர் மகாநடிகன். தன் தனித்துவமிக்க முக பாவனைகளால் பார்வையாளரைக் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவன். நிறைய ஆடிஸன்களில் வேலனை ‘மிகையான நடிப்பு’ என்று நிராகரித்துள்ளனர். அதீத மது, கஞ்சா பழக்கத்தினால் வசனத்தை மனப்பாடம் செய்யும் திறனையும் இப்போது இழந்திருந்தான். ஆனாலும் “ஒரு நாள் ஒரு டைரக்டர் வருவான். தன்னைக் கட்டுப் படுத்தாமல் இயல்பாக நடிக்க விடுவான். கேமராவின் அசைவிற்குத் தன்னை இசைக்காமல், தன் இசைவிற்கு கேமராவை அசைப்பான்” என்று ஏதுமில்லாத இடத்தில் பூக்கும் பூ போல ஒரு ஆசையை உயிர்ப்புடன் வைத்திருந்தான். அது அவனையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது.

இனி குறும்படங்களில் நடிப்பதில்லை என்று சில நாட்களுக்கு முன்புதான் முடிவெடுத்திருந்தான். பின் சில பொருளாதார பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக நல்ல குறும்படங்களில் மட்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்தான். “காசுக்காக, பழக்கத்துக்காகக் கண்ட கண்ட குப்பை படங்களில் நடிக்குறத மொதல்ல நிப்பாட்டு, அப்போதான் நீ உருப்படுவ” என்று நெருங்கிய நண்பனின் கடிதலுக்குப் பின்னரே இந்த முடிவுகளை எடுத்திருந்தான்.

அதுபோல் ‘பைலட்’ படங்களில் நடிப்பதை ஒரு வருடத்திற்கு முன்னமே நிறுத்தி இருந்தான். போன மாதம் வெளியாகி ஹிட் அடித்த “வாரிசு” திரைப்படத்தின் பைலட் வெர்சனில் வேலன் தான் நடித்திருந்தான். பைலட்டிற்கு இயக்குநரே தயாரிப்பாளராகவும் இருந்ததால் பட்ஜட் மிகவும் குறைவு. வேலன் மிகவும் சிரமப்பட்டு இரவு பகலாய் தூங்காமல் நடித்துக் கொடுத்தான். பைலட்டைப் பார்த்த அந்த தயாரிப்பாளருக்கு பைலட் மிகவும் பிடித்துப் போய் தயாரிக்க முன் வந்து தன் மகனையே நாயகனாக்கினார். அந்த இயக்குநர் அதன் பின் வேலனைச் சந்திக்கவே இல்லை. பைலட் எடுக்கும் போது அவன் வேலனுக்குத் தருவதாய் சொன்ன 2000 ரூபாயையும் இன்னும் தரவில்லை.

பஞ்சின் கருகிய வாசம் “டேய் போதும் டா, கீழ போடுடா” என்று சிகரட் கெஞ்சுவது போல் இருந்தமையால் அதைக் காலில் போட்டு மிதித்தான். பின் போனை எடுத்து ரவிக்கு போன் செய்தான்

“ரவி”

“சொல்லு மச்சான்”

“அந்த ஆடிஸன் எப்போடா? எனக்கு ஞாபகப்படுத்த மறந்துடாத” என்று வேலன் ரவிக்கு நினைவூட்டினான்.

“மச்சான் அது முடிஞ்சதுடா. காஸ்டிங் ஃபைனல் பண்ணியாச்சி”

“என்னடா சொல்லுற” என்று ஏமாற்றத்தில் குமைந்தான் வேலன்.

“டேய் ஆடிஸனே நடக்கலடா. ‘கலகலாயிடீஸ்’ யூடுயூப் சேனலில் இருந்து 4 பசங்கள டைரக்டர் செலெக்ட் பண்ணிட்டாரு. அது அவரோட ஃபேவரைட் சேனலாம். சாரி மச்சான்” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.

“சரிடா பரவால்லை. அடுத்து ஏதாவது இருந்தா சொல்லு.” என்று சொல்லி ஏமாற்றத்துடன் கட் செய்தான். பின் தன் போனிலிருந்து அடிக்கடி டயல் செய்த “பிராடு தயோளி” என்ற எண்ணுக்கு டயல் செய்தான். எப்போதும் போல “switch off” என்று ஒலித்தது. பல்லைக் கடித்துக் கொண்டு கண்களை விரித்தபடி நின்றான். அந்தக் கண்களில் ஏமாற்றம், கோபம், விரக்தி கூடவே பசி என அனைத்தும் தாண்டவமாடி கண்களைக் கலக்கியது. கண்களைத் துடைத்தபடி அருகிலிருந்த தட்டுக் கடையில் குஸ்கா வாங்கி சாப்பிட்டுவிட்டு வீடு நோக்கி நடந்தான்.

அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் இருக்கும் வீட்டை அடைந்தான். அது சரவணனின் வீடு, இங்கு தான் கடந்த இரண்டு வருடங்களாக வாடகை ஏதும் கொடுக்காமல் தஞ்சம் புகுந்துள்ளான் வேலன். சரவணன் வேலனின் முன்னாள் நெருங்கிய நண்பனும், இந்நாள் துரோகியுமான பார்த்திபனின் நண்பன். இப்போது அவர்கள் இருவரின் நட்பை விட, இவர்களின் நட்பு சிறந்ததாய் விளங்குகிறது.
வேலன் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் எதிர் வீட்டு கோவிந்து மாமா திறந்திருந்த அவர் வீட்டுக் கதவைக் கோபத்தில் ஓங்கி அடைத்தார். வேலன் அதைப் பெரிதாய் கண்டு கொள்ளாமல் உள்ளே வந்தபோது டீவியில் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் வண்ண ஸ்டிக் நோட்ஸ்களைப் பார்த்தான். மொத்தம் ஐந்து இருந்தன. ஒன்றை எடுத்துப் பார்த்தான். அதில்,

“அன்புள்ள வேலா, தயவு செய்து பிட்டு படம் பார்க்கும் போது டீவியை மியுட் செய்து பார் அல்லது அந்த மேசையில் இருக்கும் என் இயர் போனை எடுத்துக்கொள்.” அடுத்த நோட்,

“இனிமேல் எக்காரணம் கொண்டும் ஹோம் தியேட்டரில், லவுடாக பிட்டு பாக்காதே அது எதிர் விட்டு கோவிந்து மாமாவை டிஸ்டர்ப் செய்கிறதாம்” அடுத்தது,

“அவர் காலையில் என்னை வார்ன் செய்தார். சோ ப்ளீஸ் லவுடா பாக்காதே” அடுத்தது,

“ப்ளீஸ்”

அடுத்ததும் அதே “ப்ளீஸ்” மட்டுமே. எதிர் வீட்டு மாமாவின் கதவடைப்பின் காரணம் கிடைத்தது. வேலனுக்குச் சற்று விகாரமாக இருந்தது. அதே நேரத்தில் சரவணனை எண்ணி ஆச்சரியமும் கூட. “எவ்வளவுதான் பொறுமை அவனுக்கு. எனக்காகத் திட்டு வாங்குகிறான், என்னையும் கடிந்து கொள்ளவில்லை” என்று எண்ணியபடி இருந்தான். சரவணன் வேலன் என்னும் கலைஞனை முழுமையாக நம்பினான். அவனின் லட்சிய வாழ்க்கைக்குத் தன்னாலான எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான். “ஏன் என்னிடம் இவ்வளவு நல்லவனாக நடந்து கொள்கிறான்?” என்று வேலன் தனக்குள் அடிக்கடி கேட்டுக் கொள்வதுண்டு. தான் ஆசைப்பட்டு அடைய நினைத்த கனவை குடும்பச் சுமைகளால் தவறவிட்ட அறிவார்ந்த பெற்றோர் தன் பிள்ளைகளின் கனவை நிறைவேற்ற அவர்களுக்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுப்பார்களே அப்படியான ஒரு தன்மையைச் சரவணன் தன்னிடம் காட்டுவதாக வேலன் அனுமானித்துக் கொள்வான். அதேவேளை வேலனும் தங்கும் இடத்தைத் தவிர வேறு எதற்கும் சரவணனைச் சார்ந்திருந்ததில்லை.

அந்த ஸ்டிக் நோட்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருக்கையில் “இன்னும் 6 மாதத்தில் சரவணனுக்கு திருமணம், அதன் பின் நம் நிலைமை எப்படி இருக்கும்” என்று நினைத்து வருத்தம் கொண்டான் வேலன். பின் “6 மாசம் இருக்குள்ள, அதுகுள்ள கண்டிப்பா எதாவது ஒரு ப்ராஜக்ட்ல கமிட் ஆயிருவேன்” என்று கடந்த 5 வருடங்களாகத் தன்னை எப்படி சமாதானப்படுத்திக் கொண்டானோ அப்படியே இப்போதும் சமாதானப்படுத்திக் கொண்டான். தன் அறையிலிருந்த குப்பைத் தொட்டியில் ஸ்டிக் நோட்ஸ்களைப் போட்டான். பின் அந்த குப்பைக் கூடையில் கையை விட்டுக் கசங்கிய, உருண்ட திசு பேப்பர் ஒன்றை வெளியே எடுத்து மேசையில் வைத்து அதை மெதுவாக விரித்தான். அதிலிருந்த கஞ்சாவை எடுத்து உலர்த்தினான். பையிலிருந்த சிகரட்டை எடுத்து இரு கைகளுக்கிடையில் தலை கீழாக வைத்து உருட்டி உள்ளே இருந்த புகையிலையை வெளியே எடுத்தான். அது மிகுந்த பொறுப்புடன் கையாள வேண்டிய வேலை. ஒரு பெண்ணை கையாள்வதற்கு ஒத்தது. வேகமாக, அழுத்தி உருட்டினால் சிகரட் காகிதம் கசங்கிவிடும் அல்லது கிழிந்துவிடும். மெதுவாக விசையின்றி உருட்டினால் எதுவும் நடக்காது. கல்லூரி நாட்களிலிருந்தே வேலனுக்கு இது தலைவலியை உண்டாக்கும் வேலை. பார்த்திபன்தான் இதில் கைதேர்ந்தவன். பார்த்திபன் இருந்தவரை வேலனுக்கு அவன் தான் சிகரட்டில் கஞ்சா ஏற்றிக் கொடுத்துள்ளான். இதில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே கெட்டிக்காரனாய் இருந்தான் பார்த்திபன்.

ஸ்வேதா வேலனைப் பிரிந்த 3 மாதத்தில் பார்த்திபனைத் திருமணம் செய்து கொண்டாள். அவன் அப்போது யுஎஸ்ஸில் இஞ்சினியராக பணி புரிந்து வருகிறான். வாழ்வில் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள முயல்வது மரணத்திற்கு ஒப்பானது என்று வேலன் நன்றாக அறிந்திருந்தான். அவன் அந்த சிக்கலான உறவுகள் முறிந்ததைப் பற்றி அதன் பின் ஆராய்ந்ததே கிடையாது. “ஸ்வேதா வாழ்கையில வெற்றிய மட்டும் தேடிப்போற பொண்ணுடா. காலேஜ்ல, கல்சரஸ்ல நீ சீனு அதனால அவ உன் பின்னாடி அலஞ்சா. இப்போ நீ ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கே, அவளுக்கு அதெல்லாம் புரியாது.” என்று ரவி சில வருடங்களுக்கு முன் அட்வைஸ் செய்தது வேலனுக்கு ஞாபகம் வந்தபோது புகையிலையையும் கஞ்சாவையும் 40:60 என்ற கலவையில் எடுத்து வெற்று சிகரட் குழலினுள் பொறுமையாக, அண்டிக் கரையாத தூக்கணாங்குருவிக்கு இரையூட்டுவது போல மெல்லத் திணித்தான்.

கஞ்சா கலந்த சிகரட்டை பற்றவைத்து இழுத்தான். புகையை விட மனமில்லாமல் சற்று நேரம் உள்ளேயே வைத்திருந்தான். சிறிது நேரத்தில் மெதுவாகப் புகையை வெளியே விட்டான், லேசாக இருமினான். மெதுவாக எழுந்து கண்ணாடி முன் போய் நின்றான். வாயில் சிகரட் வைத்தபடியே கண்ணாடியில் அவன் கண்களைப் பார்த்தபடி நின்றான். தான் சேமித்த மொத்தப் பணத்தையும், நேசித்த பெண்ணையும் இழந்த விரக்தி அவன் கண்களின் கருவிழியைச் சுற்றி சிவப்பாய் கரை போலப் படிய ஆரம்பித்தது. அது காகிதத்தில் பற்றிய நெருப்பு போல வேகமாக உடலெங்கும் பரவத் துவங்கியது. அந்த நெருப்பு வேலனுள் தூங்கிக் கொண்டிருந்த கலைஞனைச் சுட்டு எழுப்பியது. ஒரு நொடியில் கைகளை மடித்து துப்பாக்கி போல் வைத்து கண்ணாடியின் முன் நீட்டினான். தலையை லேசாகச் சரித்து, மேலே தூக்கி, வாயிலிருந்த சிகரட்டை உதட்டோரம் ஒதுக்கி “Are you talking to me?” என்று டாக்ஸி டிரைவர் படத்தின் அந்த பிரக்தேக காட்சியை தனக்கே உரித்தான பாணியில் நடித்தான். அவனுள் உயிர்கொண்ட அந்த கலைஞன் அவன் உடலெங்கும் பரவ முயன்ற விரக்தி தீயைத் தற்காலிகமாக அணைத்தான்.

சற்று நேரத்தில் வேர்த்து விறுவிறுத்தான். அந்த வீட்டில் சரவணனின் அறையில் மட்டும் தான் ஏசி இருந்தது. அவன் வெளியே செல்லும்போது எப்போதும் அறையைப் பூட்டிக் கொள்வான். வேலன் லேசாக தள்ளாடியபடியே தலையணையையும், போர்வையையும் எடுத்த கொண்டு சமையலறைக்கு வந்தான். அங்கிருந்த ஃப்ரிட்ஜை திறந்த படி தலையணையை முன்னால் வைத்துப் படுத்தான். இப்போதெல்லாம் இரவுகளில் அவனால் தூங்க முடிவதில்லை. பகலில் இப்படி 50-60 நிமிடங்கள் மட்டுமே இந்த மனம் அமைதி கொள்கிறது.
சிறிது நேரத்தில் தலையில் இடி விழுந்தவன் போல திடீரென எழுந்தான். அருகிலிருந்த போன் சிணுங்கியது. ரவியாகத்தான் இருக்கும் என அவசர அவசரமாக எடுத்துப் பார்த்தான். இல்லை, அது அவன் அம்மா

“எலேய் தம்பி வேலையா இருக்கியோ?”

“இல்ல, சொல்லுமா”

“வடக்கூருல இருந்து ஒரு பொண்ணு துப்பு ஒன்னு வந்துருக்கு பாத்துக்க, புள்ள நல்லா லட்சணமா இருக்குல”
வேலனுக்கு எந்த ஆர்வமும் இல்லை. இது போன்ற செய்தி மாதம் ஒருமுறை வரும். இதனால் எந்த பலனும் இல்லை. அரேஞ் மேரேஜ் செய்வதற்கான எந்தத் தகுதியும் தன்னிடம் இல்லை என்பதை தீர்க்கமாக நம்பினான் வேலன். குருட்டுத் தைரியமும், முரட்டு புத்திசாலித்தனமும் கொண்ட பெண் தான் தனக்கானவள், அவள் தான் தன்னை புரிந்து கொள்ள முடியும் என்றிருந்தான். ஆனால் அது போன்ற பெண் இந்த திருமண வியாபாரத்தைக் கண்டிப்பாக வெறுப்பவளாக இருப்பாள் ஆனாலும் அம்மாவுக்காக

“சரிமா போட்டோ அனுப்பு பாக்குறேன்”

“சின்னவன் கிட்டச் சொல்லி அனுப்ப சொல்லுதேன். பொண்ணு ரைட்டருல”

இப்போது வேலன் புத்துணர்வு பெற்றான். எழுத்தாளர் என்றால் கண்டிப்பாகத் தான் நினைத்த மாதிரி பெண்ணாகத்தான் இருப்பாள் என்ற எண்ணம் தலைக்கேறியது.

“அப்படியா!? எங்க… என்ன மாதிரி ரைட்டர்…? பத்திரிக்கையிலா வேலை பாக்குறாங்க?”

“ஆமா பத்திர ஆபிசுலதான் வேல பாக்குறா”

“எது பத்தர ஆபிசா?” வேலன் கடுப்பானான்.

“ஆமால, நம்ம கோர்ட்டுக்கு எதுத்தாப்புல இருக்குற குமரன் பத்தர ஆபிசுல ரைட்டரு”
வேலனின் ஏமாற்றம் அம்மாவின் மீது கோபமாக மாறியது. கோபத்தில் வார்த்தைகள் முட்டின

“அம்மா… முதல்ல நீ… சரி விடு… இனிமே இதெல்லாம்… செம காண்டாவுது”
என்று சொல்லி முடிப்பதற்குள் அம்மா போனை கட் செய்தாள். வேலன் பல்லைக் கடித்தபடி இருந்தான். மீண்டும் அம்மாவிடம் இருந்து போன் வந்தது.

“எலேய் தம்பி சிக்னல் இல்ல போல, விட்டு விட்டு கேட்டுச்சி அதான் கட் பண்ணிட்டு கால் போட்டேன்” என்று அவள் சொன்னபோது வேலன் தலையில் அடித்துக் கொண்டான்.

“ம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ண நான் தேடிகிறேன். தயவு செஞ்சி நீ இதுல இனிமே தலையிடாத”

“அது இல்லல தம்பி 30 வயசு ஆவுதுள்ளா?”

“எனக்குத் தெரியும்… சரி பைய்”

“இருல இருல… அது இருக்கட்டும்… நான் சொல்ல வந்தத மறந்துட்டேன் பாத்தியா”

“டக்கு புக்குனு சொல்லிட்டு கெளம்பு” என்றான் வேலன் எறிச்சலுடன்.

“இந்த கண்ணுக்குக் கண்ணாடி போடாட்டா கண்ணு சீக்கிரமா போயிரும்னு சொல்லிட்டான் அந்த டாக்டரு. இப்பவே ரொம்ப தலவலியா இருக்கு பாத்துக்க. ஒரு 5000 ரூவா இருந்தா அனுப்புல. கழுத இந்த கண்ணாடிய வாங்கிப் போட்டுருதேன்” என்றாள். வேலன் கண்களை உருட்டினான், தாடியைச் சொறிந்தான்.

“எப்போ வேணும்”

“இந்த வாரத்துக்குள்ள அனுப்பு போதும்”

“சரி நான் அனுப்புறேன். நீ ஒழுங்கா மாத்திரையெல்லாம் போடு” என்று சொல்லி போனை கட் செய்த வேலன் ஆழ்ந்த யோசனையிலிருந்தான். பின் அங்கிருந்து எழும்பி ஃப்ரிட்ஜ் கதவை மூடிவிட்டு ஹாலுக்கு வந்தான். பீன் பேக்கில் அமர்ந்தபடி டீவியை ஆன் செய்தான். டீவியில் சந்தானத்தின் “பருத்தி மூட்டை” காமெடி காட்சி ஓடிக்கொண்டிருந்தது. “இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்துருக்கலாம்ல” என்று விமல் சொல்லும் அந்த வசனத்தை தீவிர யோசனையிலிருந்த வேலன் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் திடீரென எழுந்து பால்கனிக்கு சென்று சிகரட் பற்றவைத்தான். போனை எடுத்து சற்றுத் தயங்கியபடி கோபிக்கு டயல் செய்தான்.

“கோபி”

“சொல்லுங்க ப்ரோ” என்றான். வாகனங்களின் இரைச்சல் அதிகமாய் கேட்டது.

“பிசியா இருகீங்களா கோபி?”

“டிராபிக்ல இருக்கேன் ஆனா பேசலாம். சொல்லுங்க ப்ரோ”

“உங்களோட ‘You Can’t Stand Up’ கதையை மறுபடியும் பலமுறை யோசிச்சி பாத்தேன், அதுல ஒரு தனித்துவமான கலை நயம் இருக்கு, புரட்சிகரமாகவும் இருக்கு”

“ஓ அப்படியா!”

“அத திரும்பத் திரும்ப யோசிக்கும் போது இன்னும் கூர்மை ஆகிட்டே போகுது”

“ரொம்ப நன்றி ப்ரோ. உங்க வாயால இத கேட்டதுல எனக்கு ரொம்ப சந்தோசம்.” என்றான் கோபி. வேலன் தானே போலியாக ஏற்படுத்திக் கொண்ட மேட்டிமைத்தனமான பாவனையோடு

“நானே அத பண்ணுறேன் கோபி”

“சாரி ப்ரோ… உங்களுக்கு இண்டரஸ்ட் இல்லைனு நினைச்சி இப்போதான் காசி பிரதர் கிட்டப் பேசி கமிட் பண்ணிட்டு வாரேன்”. வேலனின் முகம் லேசாக வாடி பழைய நிலையை அடந்தது.

“ஹே சூப்பர்பா… செம செம… கலக்குங்க கோபி” என்று வாழ்த்தினான்.

“தாங்ஸ் ப்ரோ”

“ஆமா, காசி யாரு?” என்று லேசாக இழுத்தபடிக் கேட்டான்.

“எது காசி பிரதரை தெரியாதா உங்களுக்கு!?”
வேலன் யோசித்தபடி முழித்தான். கோபி தொடர்ந்தான்.

“டிக்டாக் புகழ் காசி… காசி _யோயோ. 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்காங்க அவருக்கு. அடுத்த சிவா படத்துல கூட அவருக்கு பிரண்டா நடிக்கப் போறாராம்” கோபியின் பேச்சில் உற்சாகம் மிகுந்திருந்ததை வேலன் கவனித்தான்.

“ஓ அப்படியா… நல்லது” என்று போனை கட் செய்த வேலன், தன் விரல்களுக்கிடையில் கரைந்த படியே இருந்த சிகரட்டை பார்த்தபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தான்.

~~~

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close