சிறுகதைகள்

பறிக்கப்பட்ட அறிவு

சேவியர் ராஜதுரை

பழம் அது பறிக்கப்படவுமில்லை. கீழே விழவுமில்லை.

‎நல்லது கெட்டது மக்களுக்கு தெரியவுமில்லை.

‎விலக்கப்பட்ட கனி பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அப்படியே உள்ளது. அந்த மரத்திலிருக்கும் கனியை சுவைக்க யாருக்கும் விருப்பமில்லை. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கடவுள் ஒருவருக்கு மட்டுமே நன்மை தீமை தெரிந்திருந்தது.

அவருக்கு மட்டுமே மக்களின் நிர்வாணம் தெரிந்தது. அவர்கள்ஆடைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டதில்லை. ஆதாமும் ஏவாளும் தன் சந்ததிகளுக்கு தங்கள் கதைகளை கூறுவர். கடவுள்  தங்கள் சந்ததிகளை ஆசிர்வதிப்பார். ஆதாம் ஏவாள் வராத நாட்களில் காயினும் ஆபேலும் வந்து ஆசிர்வதிப்பார்கள். அங்கு நன்மையே சுற்றி இருந்தது.  பிரசவத்தின் போதும் பெண்கள் சாதாரணமாக தான் இருப்பர். வலியும் அங்கு கிடையாது. வஞ்சகம், சூழ்ச்சி, கெடுதல், துன்பம், மரணம் எதுவுமே இல்லை.

‎இவை எதுவுமே இல்லாத ஒன்றான வெறுமையினை  அவர்கள் மகிழ்ச்சியாக நினைத்தனர். உண்மையான மகிழ்ச்சியை கூட உணராத உலகம் அது. ஆதாம் முதல் கடைசி மனிதன் வரை எல்லாரும் கீழ்ப்படிந்திருந்தனர். எல்லாரும் ஒரே மாதிரியாகவே செயல்படுவர். உருவங்கள் மட்டுமே வேறு. அவர்கள் யோசிக்கும் அனைத்தும் ஒன்றே. ஒரு கேள்வி கேட்டால் அவர்கள் அனைவரும் ஒரே மாதரியான பதிலைத்தான் சொல்வார்கள். கேள்வி கேட்பதற்கான அறிவு இல்லை..

ஒருவேளை இந்த அறிவுதான் துன்பத்திற்கெல்லாம் காரணமோ!  இல்லை அப்படி நினைக்க வைத்திருக்கிறாரா?

‎அங்கு திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும். அவர்கள் சொல்லிவிட்டால் மறுபேச்சு யாரும் பேசமாட்டார்கள் . அவர்களையே திருமணம் செய்துகெள்வார்கள். அதுதான் கீழ்ப்படிதல்.

‎அப்படியான நேரத்தில் தான் காயினின் வழிவந்த எலியாவுக்கும் ஆபேலின் வழிவந்த லோத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் செய்துவிட்டால் அவர்கள் சேர்ந்துவாழ்வார்கள். அங்கு காதல் என்பது கிடையாது. கடவுள் ஒருவேளை அவனை அல்லது அவளை பலிகொடு என்றால் கொடுத்துவிடுவார்கள். மறுகேள்வி கேட்கமாட்டார்கள். திருமணம் என்பது ஒப்பந்தம் . கணவனுக்கு உரிய கடமையோடும் மனைவிக்கு உரிய கடமையோடும் வாழவேண்டும் அவ்வளவுதான். காதல் அங்கு இல்லை. கடவுளின் மேல் பக்தி தான் இருந்தது .

அவர்கள் முடிவுசெய்தால் அதை அப்படியே ஏற்றுகொள்வார்கள்.யாரும் மறப்பு தெரிவிக்கமாட்டார்கள். எனவே  , அந்த ஒப்பந்தத்தால் யாருக்காவது விருப்பமில்லையா என்ற கேள்வியெல்லாம் யாரிடமும் கேட்கமாட்டார்கள் கேட்டிருந்தால் அன்றே லூசி கூறியிருப்பாள். எனக்கு இதில் உடன்பாடில்லயென்று. ஏன் என்று கேட்டால் லூசிக்குத் தெரியாது. அவனை லோத் திருமணம் செய்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அதற்கான காரணம் அங்கு அதுவரை இல்லாத ஒன்று. கேள்விப்படாத அறியப்படாத ஒன்று  ….

காதல்

எலியாவை லூசிபருக்கு பிடித்திருந்தது. அவனிடம் நீ என்னை திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில் ” நாமாக எதுவும் முடிவெடுக்கக்கூடாது. பெரியோருக்கு கீழ்ப்படிய வேண்டும்.. இதுவே காயின் ஆபேல் முதல் ஆதாம் ஏவாள் வரை கூறியது. அவர்கள் அத்தனை பேரிடமும் கேட்டு வெறுத்துப் போன அவளிடம் ஏவாள் வாரியணைத்து சொன்னாள், “கீழ்ப்படிந்து நட! இதை இத்தோடு விட்டுவிடு, கடவுளிடம் போய் கேட்காதே,  அவர் கோபப்படுவார்” என்றாள்.

‎கடவுளிடமே சென்று அவள் இதைப் பற்றி கூறினாள். “தயவுசெய்து என்னை அவனுக்கு திருமணம் செய்து வையுங்கள்.

‎அவனிடம் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால்  நிச்சயம் என்னை திருமணம் செய்துகொள்வான். உங்களுக்கு கீழ்படிந்து தான் அவனை திருமணம் செய்யப் போகிறேன்” என்றாள்.

உடனே கடவுள் மகளே லூசி ” “பெரியவர்களுக்கு கீழ்படிந்து நட; அவர்கள் கூறுவதை செய்வது தான் சரி. அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. ஆதாமின் வழித்தோன்றலே ! அவனைப் போல கீழ்படிந்திரு” என கூறிவிட்டு புன்னகையோடு சென்றார். அந்த புன்னகையில் கருணையிருந்தது.

ஏதேன் தோட்டம் முழுதும் அவளைப் பற்றி பேசினார்கள். “கடவுளிடமே சென்று இப்படி கேட்கிறாள்!கீழ்படிந்து நட என எல்லாரும் அறிவுரை வழங்கினார்கள்.

வருத்தப்பட்டாள், உலகில் முதன முறையாக அவள் வருத்தப்பட்டாள். அப்போது அவளருகில் ஒருபாம்பு வந்தது. அவளுக்கு ஆறுதல் கூறியது. அதுதான் முதல் ஆறுதல். அவள் பாம்பிடம் கேட்டாள்,  ” ஏன் ஆதாமைப் பார்த்து கற்றுக்கொள்”? என்கிறார் கடவுள்.

அப்போது பாம்பு அந்த விலக்கப்பட்ட மரத்தைப் பற்றி கூறியது.

ஆமாம் அந்த மரத்து பழத்தை சாப்பிடக்கூடாது  என தெரியும் கடவுள் கூறியிருக்கிறார் என்றாள் லூசி.

ஆதாம் வயதுள்ள அந்த மரத்தின் கனியை இன்னும் யாரும் உண்ணவில்லை. அதற்கு ஆதாமும் அவன் சந்ததிகளாகிய நீங்களும் காரணம். உங்கள் கீழ்ப்படிதல் தான். கடவுள் உங்களை கண்டு பெருமைப்படுகிறார்.

அந்த மரத்தின் கனியை நான் பறிக்கிறேன். என கோபமாக சென்றாள் அவள். அதை பறிக்க மரத்தின் அருகே சென்றாள். பாம்பு வேண்டாம் என கூறிக்கொண்டே பின்னால் ஓடிவந்தது.

வேண்டாம் அப்படி செய்தால் கடவுள் கோபப்படுவார் என்றது. ஆதாமும் வருத்தப்படுவார் என்றது.

ஆதாமின் வழித்தோன்றலே கீழ்ப்படி என்ற வார்த்தை அவளுக்கு கேபமூட்டியது. இதை நான் சாப்பிடாமல் ஆதாமை சாப்பிட வைத்தால்!

லூசி பாம்பாக மாறி உலகம் படைக்கப்பட்ட காலத்திற்கு போனது. ஆதாமிடம் சென்று பழத்தை சாப்பிடுமாறு ஆசைக்காட்டியது.

அவனுக்கு ஆசைக்காட்டி விட்டு லூசி தன் காலத்திற்கு வந்துவிட்டாள்.

அறிவு பறிக்கப்பட்டது.

ஆதாம் பழத்தை பிடுங்கி சாப்பிட்டான். அதை ஏவாளுக்கும் கொடுத்தான்.

இருவரும் சாப்பிடதும் உலகம் மாறியது.மனிதன் அறிவைப் பெற்றான்.

உலகம் சுழல ஆரம்பித்தது.

நிர்வாணம் வெட்கத்தை உண்டு பண்ணியது. எல்லாரும் ஒரு மிகப்பெரிய சுழலுக்குள் சிக்கி ஏதேன் தோட்டத்தில் இருந்து எறியப்பட்டனர். எறியப்பட்டவள் வேகமாக கீழே முடிவில்லாத தூரத்தில் சென்று கொண்டிருந்தாள். திடீரென ஒரு உடலுக்குள் தூக்கியெறிப்பட்டாள்.

அந்த உலகம் வித்தியாசமாக இருந்தது. பகல் இரவை படைத்த பிறகு ஒரு நாள் கழித்து சூரியனையும் சந்திரனையும் படைத்த உலகிலிருந்து சூரியன் இருப்பதால் தான் பகலே உள்ளது என்ற உலகிற்கு வந்தாள். எல்லாமே வித்தியாசமாக இருந்தது.

அவளுக்கு இந்த உலகம் பற்றிய எல்லாச் செய்திகளும் அவள் யார் என்பது பற்றியும் தெரிந்தது..அவள் தற்போது ஆலயத்திற்குள் அமர்ந்திருக்கிறாள். ஈஸ்டர் திருப்பலி நடந்துகொண்டிருந்தது. அவள் கையில் ஒரு மெழுகுவர்த்தியும் இருந்தது.  தன்னைச் சுற்றி இருந்த அந்த புது உலகத்தை அவள் வித்தியாசமாக பார்த்தாள். அங்கு அமர்ந்திருந்த அனைவரது ஆடையையும் பார்த்தாள்.  அப்போது விளக்குகள் அணைக்கப்பட்டன. பாதிரியார் கையில் மெழுகுவர்த்தியை ஏற்றி “அ கரமும் ன கரமும் இவரே” என்றார் ..

கூடியிருந்த அனைவரும் கையில் மெழுகுதிரியை ஏற்றினார்கள். அப்போது இவளும் ஏற்ற சென்றாள். ஒருவன் வந்து அவள் மெழுகுதிரியை தன் மெழுகுவர்த்தியால் ஔி ஏற்றினான். அவளையறியாமல் அவள் வாயிலிருந்து “தாங்க்ஸ் ” என்ற வார்த்தை வந்தது.

“வெல்கம்” என்ற பதில் அவனிடமிருந்து வந்தது. அந்த குரல்…ஆம் அது எலியா வினுடையதுதான் …

வேகமாக தலையை உயர்த்திப் பார்த்தாள். அந்த மெழுகுவர்த்தியின் ஔியில் அவன் முகம் ஜொலித்தது. ஆடையில்லாது அவனைப் பார்த்த போது வராத வெட்கம் காமம் எல்லாம் இப்போது அவனைப் பார்க்கும் போது வருகிறது. அவனைப் பார்த்து சிரிக்கமுடியவில்லை. அவள் கண்கள் கலங்கின. அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் அவன் கைகளில் விழுந்தது. மெழுகு உருகி வருகிறதோ என கையை பார்த்தான். அது மெழுகாய் இருந்தால் சுட்டிருக்குமே.

சுடவில்லை. மீண்டும் கண்ணீர்துளி விழுந்தது. அது மெழுகுவர்த்தியை அணைத்தது. மீண்டும் அவன் பற்ற  வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

அவனிடம் சொல்ல  பல்லாயிரக்கணக்காண வருடக் கதைகள் உண்டு. அதை அவன் கேட்பானா?  மெதுவாக அவனைத் திரும்பி பார்த்தாள்  . அவனும் தன் நண்பனோடு இவளைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டே இவளைப் பார்த்தான். இருவரும் சிரித்தனர். அந்த சிரிப்பிற்குத் தான் எத்தனை காலம்!!!

திருப்பலி நடந்துகொண்டிருந்தது.

கடவுள் உயிரத்தெழுந்தார். இவர்கள் இருவரின் கண்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தன. இதழ்கள் சிரிப்பை உதிர்த்துகொண்டன.

அப்போது பாதிரியார் ” ஓ ஆதாமின் பாக்கியாமான குற்றமே ! ” என்றார்

அதைக் கேட்டதும் இவளுக்கு தன்னையறியாமல் ஒரு வித உணர்வு தோன்றியது. காலம் எவ்வளவு விந்தையானது. ஒருவரின் தவற கூட ஒரு கட்டத்தில் நன்மையாக முடிகிறது.

திருப்பலி முடிந்தது. அனைவரும் கைகுலுக்கி ஈஸ்டர் தின வாழ்த்துக்களை கூறிக்கொண்டனர். அவன் அவளிடம் வந்து ஹேப்பி ஈஸ்டர் என கைகளை நீட்டினான். அவனை கட்டிப்பிடிக்க வேண்டும்  போல் இருந்தது அவளுக்கு. அவள் தன் கைகளை நீட்டிக் கொண்டே கேட்டாள்!

வில் யூ மேரி மீ !     என்று.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close