சிறுகதைகள்

பன்றியின் விதி

தாமு

கல்ல போட்ருவோமா, வேணாமா?…”

மதியம் இரண்டு மணிக்கு கொளுத்தும் வெயில், ரயில் பாலத்தின் நடுவில் சுமார் இருபது கிலோ எடையுள்ள கல்லைத் தன் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து நின்று காத்துக் கொண்டு இருக்கிறான் தர்மராஜ். ஆள் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆள். அதனாலே அந்த கல் அவனுக்கு தூசு போலத் தான் இருந்தது.

திருச்சியின் அருகில் இருக்கும் இந்த அச்சுப்பட்டி கிராமம் மழையில்லாமல் வறட்சியால் வெய்யிலின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்த பகுதி நிலத்தின் குடிமக்களாகிய தாவரங்களும், விலங்குகளும் ங்களது இயல்பு நிலையிலிருந்து சற்று தொங்கலாக விலகித் தான் இருந்த. வற்றிப்போன அந்த ஆற்றைக் கடக்கத் தான் ஒரு பாலம், அந்த பாலமானது அரசாங்கத்தால் கட்டப்பட்ட ஒரு சிமெண்ட் ரயில் பாலம். அதை வடிவமைத்த என்ஜினியருக்கு அணை கட்டவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருக்க வேண்டும்.

கீழே ஆற்றின் ஓட்டத்தைத் தடுக்காமல் மேலே கடந்து செல்வது போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆற்றில் தண்ணீர் இருந்தால் அங்கே  பல்டி அடிக்கும் பல சிறுவர்களையும், ஒரு பகுதியை ஆக்கிரமித்த மாடுகள் மற்றும் எருமைகளையும், துணியைத் துவைத்துக் கொண்டிருக்கும் ஆட்களையும் காணலாம். ஆற்றின் அகலம் குறைவு, ஆனால் மழை வருவதற்கான சூழல் தற்போது இல்லை. இன்னும் கொஞ்சம் காலத்திற்கு இங்கு இல்லை என்பது போல வெயிலில் தழைத்து கொழுந்து விட்டு ஆங்காங்கே வளர்ந்து இருந்தது சீமை கருவேலமரம்.

அங்கே தண்ணியை உறிஞ்சி மற்ற தாவரங்களை கட்டுப்படுத்தித் தான் மட்டும் வளர்ந்து நிழல் தருவதும் அது தான். அந்த கருவேல மரத்தின் நிழலில் கல்லைப் போட்டு விடுவானா இல்லையா என சலசலப்புடன் வேவு பார்த்துக்கொண்டும், காத்துக்கொண்டும் இருந்தனர் நான்கு பேர்.

சொந்தமாக வீட்டு உபயோக பொருள்களை தவணை முறையில் விநியோகிக்கும் தொழில் செய்யும் சரவணக்குமார், தன் பண்ணையில் மாடுகளை பார்த்துக்கொள்ளும் ஒச்சு, இரண்டாம் ஆண்டு இளங்கலை வர்த்தகம் படிக்கும் கதிரேசன் மற்றும் அவனது நண்பன் சுகுமார். தனது ஏரியா விசேச சேட்டைகளைக் கண்டு கல்லூரியில் தனது நிலையை அடுத்த தளத்திற்குள் எடுத்துச் செல்ல வேண்டி சுகுமாரை அழைத்து வந்து இருந்தான் கதிரேசன்.

இவர்கள் ஐந்து பேரையும் இணைத்தது சீட்டு விளையாட்டு, பெட் கட்டி சீட்டு விளையாடுவது தான் இவர்கள் பொழுதுபோக்கு. வார இறுதியில் ஒவ்வொருவரின் கையிலும் சீட்டுக்கட்டுடன் துணைக்கு ஒரு கோப்பையையும் காணலாம். ரயில் பாலம் தண்டவாளத்தில் அவ்வப்போது ஆடு, மாடு மற்றும் பன்றி என ஏதாவது அடிக்கடி அடிபட்டுக் கிடக்கும். ரயில் வருவது ஒரு சில நொடிகளுக்கு முன் தான் தெரியும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அவ்வப்போது விலங்குகளுடன் மனிதர்களையும் காவு வாங்கி விடும் இந்த ரயில். இவர்கள் சீட்டு விளையாடும் இடமானது பாலத்தின் கீழ் மற்றும் ரயில் தண்டவாளத்தைக் கண்காணிப்பது போல தான் இருக்கும்.

இது போல விபத்து சமயத்தில், விரைந்து செயல்பட்டு கறியை அங்கே இருந்து எடுப்பது, பக்கத்தில் நெருப்பு தயார் செய்வது, பாத்திரம் எடுத்து வருவது, மசாலா பொருள்கள் ரெடி செய்வது என மின்னல் வேகத்தில் செயல்பட்டு கறியை சுட்டாம் போட்டு விடுவார்கள். அதிர்ஷ்டத்தைப் பொறுத்து ஆடு கிடைக்கும் ஆனால் எந்த கறியையும் விட்டு விடுவதில்லை. ஆடு மற்றும் பன்றி சம்பவம் என்றால் அன்று சண்டை உண்டு.

ஆட்டையும், பன்றியையும் வளர்த்தவர்கள் கூப்பாடு போடுவார்கள். ஆனால் சுட்ட கறியையும், அதிகாரத் தொனியில் இருப்பவர்களையும், கோப்பையின் துணையேந்தி நிதானத்தில் ல்லாதவர்களையும் அவர்களால் என்ன செய்ய முடியும்?. ஆடு இழந்து வருபவர்கள் பெரிதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால் பன்றி வளர்ப்பவர்களால் பங்களிப்பு சண்டை, கைகலப்பு வரை சென்றுவிடும். ஆம்.! அவர்கள் பாவம், ஆளுக்கு நான்கு குட்டி வளர்த்து வருபவர்கள் அதைச் சுற்றி தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை செதுக்கி வைத்து இருப்பார்கள். அதில் ரயில் வந்து ஏறினால் இவர்கள் யாரை சாடுவது?

மேலும் அந்த பன்றி வளர்ப்பது கறிக்குத் தான். பன்றியை வளர்த்து நல்ல எடை வந்ததும் வெட்டி கறிக்கு விற்பது இவர்கள் தொழில். இதில் கறியைச் சூறையாடியவர்களை அடிக்கத் தானே தோன்றும், அவர்களால் அது மட்டுமே முடியும். ஆனால் தர்மராஜ் குழு சாதி பேதம் எல்லாம் பார்ப்பது இல்லை, அவர்கள் அவர்களை கறியின் ஓனர்களாக தான் பார்ப்பார்கள். ஒவ்வொருவரும் சண்டையின் முடிவிலும் கறி கொடுத்தவர்கள் சாதிக் குரோதத்தை ஒவ்வொரு முறையும் ங்களது கணக்கு நோட்டில் குறித்துக் கொண்டு சென்றார்கள். என்றாவது ஒரு நாள் வெடிக்கும்.

இந்த கிராம கூட்டத்தில் தொழில் நொடிந்த அய்யாவு தனது தங்கை கணவரிடம் கடன் வாங்கி இரண்டு பன்றிக் குட்டிகளை வளர்த்து வருகிறார். குறிப்பிட்ட எடை வரும் வரை மேய்த்து, வளர்ப்பது தான் குடும்பமாகிய அவர் மனைவி, இரண்டு குழந்தைகள் (எழிலரசன், துர்கா) கனவு மற்றும் எதிர்காலம். அய்யாவுக்கு தற்போது ஆங்காங்கே சென்று தனது சகாக்களுடன் சென்று மரம் வெட்டி விறகு விற்பது தான் பிரதான வேலையாக  இருக்கிறது. உடல் உள்ளவரை இந்த தொழில் உண்டு, ஆனால் குடும்பம் எனும் அமைப்பு அய்யாவு ஈட்டும் வருமானத்தில் கரையேறாது. அதற்கான முனைப்பு தான் இந்த பன்றி வளர்ப்பு.

அய்யாவு மகன் எழிலரசனுக்கு இந்த பன்றிக்குட்டிகள் மேல் அவ்வளவு ஈர்ப்பு. அதனை மேய்ப்பது அவன் வேலை. இதற்காக அவன் அதனை ஓட்டிச் சென்று, தினம் ஒரு இடத்தில் மேய்ப்பான்.  இவனுக்கான இடம் என்று சொன்னால்., ரோட்டின் ஓரம் வீடு இருப்பதால் அதைச் சுற்றியும், கொஞ்சம் ரோட்டின் உள்ளே சென்றால் இருக்கும் கொஞ்சம் காட்டிலும், இந்த ரயில் தண்டவாளத்திலும் என மொத்தம் இரண்டு மூன்று இடங்கள் தான்.

இது போல சில விபத்துகள் அவ்வப்போது நடப்பதால் சுதாரித்த மேய்ப்பவர்கள் தனது விலங்குகளுடன் இந்த ரயில் தண்டவாளத்தின் வழியைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். ஆனாலும் சில சமயம் அவற்றுடன் ஆட்கள் இருப்பதில்லை, ரயில் வரும் நேரத்தில் ஆடு மாடுகளை மேய விடுவதில்லை. அதனால் விபத்துகள் நடப்பது குறைந்தது. கடந்த மாதம் சரவணக்குமார் ரயில் பாலத்தின் மேல் நின்று சரியாக ஆள் இல்லாத போது ஆட்டின் தலை மேல் குறிவைத்து பெரிய கல்லை தூக்கி போட்டு கறியாக்கினான். ஆட்டைக் காணவில்லை என தேடிவிட்டுச் சென்றார்கள் கறியின் ஓனர்கள்.

கதிரேசன் தனது பகுதிக்கு வந்திருக்கும் சுகுமாருக்கு ஏதாவது சாகசங்கள் காட்ட வேண்டும் எனும் தருணத்தை எதிர்நோக்கி கொண்டு இருந்தான். சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கும் போது குடிப்பதாகவும் பேச்சு வந்தது, தினக்கூலி தர்மராஜுக்கு காசுக்கு எங்கு செல்வது என யோசனை. எழிலரசன் தனது பன்றி குட்டிகளுடன் விளையாடி வரும் போது கருவேல முள் கீறி  ஒரு பன்றி குட்டி கத்த, எழிலரசன் மண்ணை எடுத்து அப்பி சமாதானம் சொல்கிறான். துவண்ட காதுக்கு தேன் வார்த்தை கிடைத்தது போல கதிரேசனுக்கு பன்றி சத்தம் கேட்டது.

கதிரேசன்: ”சரவணா, பன்னி வருது அடிச்சுலாமா?”

சரவணக்குமார்: ”டேய், பிளான் படி போ. தேவை இல்லாத வேலையெல்லாம் வேணாம். ஏதோ அன்னைக்கு பண்ணோம் அது ஆடு, இது பன்னி. கண்டிப்பா சண்டை வரும். இன்னைக்கு என்னால முடியாது. இந்தா, தர்மன் கிட்ட தான் காசு இல்ல அவனை தாட்டி விடு.”

கதிரேசன்: ”டேய் தர்மா, எனக்கு பண்ண தெரியாது. நான் உன் செலவை ஏத்துக்கிறேன்”.

(சுகுமாரை பார்த்து, நம்ம பார்த்துக்குவோம் என கைஜாடை காட்டுகிறான். அவனும் வழியில்லாமல் தலையாட்டுகிறான்)

தர்மராஜ்: (புகைத்துக் கொண்டு, கையில் சீட்டு கட்டுடன்) ”சரி நீ பாத்துக்கோ. ஒச்சு! சாமானம் ரெடி பண்ணு.”

எழுந்து வேக ஓட்டம் எடுத்த தர்மராஜின் கையில் பாலத்தின் அருகில் சிக்கியது இருபது கிலோ எடைக்கல். அதை தூக்கிக் கொண்டு தண்டவாளத்தின் இடையில், பாலத்தில் நடுவில் சென்று தலையின் மேல் கல்லைச் சுமந்து கொண்டு, நின்று கொள்கிறான்.

எழிலரசன் பன்றிகளை முன்னே  செல்லவிட்டு, தங்க நிற பட்டான்களை தனது குச்சியில் அடிக்க முற்பட்டு விளையாடுகிறான். வெயிலின் உச்சியில், வேர்வையில் எங்கே பன்றி வரும் முன்னமே போட்டு விடுவானோ, சரியா போடுவானா என சலசலப்புகள் வேறு, இந்த படியாக அந்த நண்பர் குழுவும் வேவு பார்த்துக் கொண்டு இருக்கிறது.

தலைக்கு மேலே சுமந்து கொண்டு இருக்கும் கல் இருமுடி அல்ல, கனமாக இருக்கிறது. கைகள் வலியால் நடுங்குகின்றன, சரியான நொடியில் ராக்கெட்டை செலுத்துவார்களே இதோ கல்லை செலுத்தும் நேரம் வந்தது. க்கின்ன்காதை சுற்றும் வண்டின் சத்தம் இல்லை. அது வேட்டை பரவசத்தில் கேட்க மறந்த ரயிலின் சத்தம் பசியில் அப்படி கேட்கிறது போலும். நெருங்கி முத்தமிட வந்த ரயிலின் அருகாமையை பார்த்ததும் தர்மராஜின் முகத்தை பார்க்க வேண்டுமே. அவர்கள் கல்லை தூக்கி போட்டு கொன்ற ஆட்டின் கடைசி சில நொடிகள் போல இருந்தது அந்த பார்வை.

கல்லின் பிடிப்பு தளர்ந்தது

கல்ல போட்ருவோமா, வேணாமா?…”

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close