இணைய இதழ்இணைய இதழ் 52தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 1 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

சென்னைச் செந்தமிழ்..!

மிழ் மொழியானது கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ் என்று பலவித உச்சரிப்புகளில் பேசப்பட்டு வந்தாலும், அவற்றில் தனித்துவமானது, சென்னைத் தமிழ் போன்று இனிதானது வேறொன்றுமிராது.

சென்னைத் தமிழ் என்றால் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கும் சோ, சந்திரபாபு, லூஸ்மோகன், கமல், மனோரமா, இன்னோரன்ன நடிகர்கள் பேசி நடித்திருக்கும் தமிழ் அல்ல. அது மாறுவேடம் போட்ட எம்ஜியார் மாதிரி எல்லா மாவட்டத்துக்காரனும் புரிந்து கொள்கிற கலப்பட சென்னைத் தமிழ். ஒரிஜினல் சென்னைத் தமிழ் என்பது உங்கள் கற்பனையின் எல்லைக்குள்ளும் வராதது.

இன்றைய சென்னையில் இந்த ஒரிஜினலை நீங்கள் காண்பது அரிதினும் அரிது. பல ஊர்க்காரர்களும் கலந்த கலவையாகி விட்டதில், பண்டையத் திரைப்படங்களில் காட்டப்படுகிற பிராமண பாஷையை எப்படி எந்த பிராமண வீட்டிலும் இப்போது பேசுவதில்லையோ, அதுபோலத்தான் சென்னையர்களும் தங்கள் தமிழை மாற்றிக் கொண்டு விட்டனர். அசல் சென்னைச் செந்தமிழைக் கேட்க, நீங்கள் வடசென்னைப் பக்கம் சென்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது கடலோரக் குப்பத்து வாழ் எளிய மக்களிடம் பேசிப் பழகியாக வேண்டும்.

பல்லாண்டுகளுக்கு முன் இந்த ‘ஒரிஜினல்’ பரவலாகப் புழக்கத்திலிருந்த காலத்திலேயே அதைச் சந்தித்து, அதன் ‘இனிமை’யை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரு வில்லில் பல அம்புகளை பாகுபலி தொடுப்பாரே, அதுமாதிரி ஒரே நாளில் பலப்பல அப்ளிகேஷன்களை கம்பெனிகள் தோறும் எறிந்து கொண்டிருந்த காலம் அது. 1988 இருக்கலாம் என்பது நினைவு. அப்போது சென்னையில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகக் கடிதம் வந்திருந்தது.

வீட்டினர் தாராளமாகப் பணத்தைத் தந்து, ‘வென்று வா மகனே’ என்று வீரத்திலகம் இடாமலேயே வழியனுப்பி வைக்க, நண்பனொருவன் சென்னையிலுள்ள அவனது அக்கா வீட்டு முகவரியைத் தந்து என்னை அங்கு சென்று தங்கிக் கொள்ளச் சொல்ல, முதன்முதலாக சென்னையைத் தரிசிக்கும் பிரசவத்தில், ஸாரி, பரவசத்தில் பேருந்துப் பயணத்தை மேற்கொண்டு இப்புண்ணியத் தலத்தில் பாதம் பதித்தேன்.

சென்னையைச் சுற்றிப் பார்க்கிற ஆசையில் நேர்முகத்துக்கு ஒருநாள் முன்னதாகவே வந்துவிட்டதால், ந.அக்கா வீட்டில் குளித்துத் தயாராகி கடற்கரையைப் பார்க்க ஓடினேன். அங்கிருந்து கால்நடையாக திருவல்லிக்கேணி புத்தகக் கடைகளை மேய்ந்து, கடந்து மவுண்ட்ரோடு வரை வந்துவிட்டேன் யாரிடமும் வழி விசாரிக்காமலே.

மதிய உணவை அங்கொரு சுமாரான உணவகத்தில் முடித்துக் கொண்டு சாந்தி திரையரங்கில் ‘மைடியர் மார்த்தாண்டன்’ என்றொரு அற்புதக் காவியத்தைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன். குரோம்பேட்டைக்கு பஸ் பிடிக்கலாம் என்று தியேட்டரின் வெளியிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றேன். ‘தாம்பரம்’ என்று போர்டு போட்ட வண்டிகள் எல்லாம் அந்த நிறுத்தத்தைத் தவிர்த்துத் தாண்டி ஓடின. குறுக்கே நின்று கையாட்டி நிறுத்தச் சொன்ன என்னை அவை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், நிறுத்தத்தில் நின்றிருந்த மகானுபவர்களின் முகங்களில் கேலிச் சிரிப்பையும் காண முடிந்தது.

ஒன்றும் புரியாமல் பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவரிடம் மதுரைத் தமிழில் வினவினேன், “அண்ணே, தாம்பரம் போற பஸ்லாம் கையாட்டினாக்கூட நிறுத்த மாட்டின்றியானுங்க. ஏன்ணே..?” அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, சென்னைத் தமிழிலே பதிலுரைத்தார். “தாம்பரத்துக்கு போற பச்சு இங்க நிக்காது. எல்லீச்சாண்ட போ. அங்க நிக்கும். ஏறிக்கினு போய்க்கினே இரு..” 

‘ஓ… இது ஸ்டேஜ் இல்லையா..?’ – கேலிச் சிரிப்புச் சிரித்து, ஒரு வார்த்தையும் பேசாத சென்னையன்களைச் சபித்தபடியே அவர் கைகாட்டிய திசையில் நடந்தேன். சிறிது தூரம் நடந்தும் ஓட்டல்கள், கடைகள் வந்தனவே தவிர, அவர் சொன்ன ‘எல்லீச்சு’ எதுவென்று தெரியவில்லை. வேறு வழியின்றி, எதிரே வந்த ஒருவரை நிறுத்திக் கேட்டேன். “சார், இங்க எல்லீச்சு எங்கருக்கு..?” 

அவர் ‘ழே’யென்று விழித்தார். “என்ன கேக்கறீங்கன்னே புரியலியே சார் நீங்க..”

“இல்ல சார். அங்க சாந்தி தியேட்டர்கிட்ட தாம்பரம் பஸ் நிக்கல. எங்க நிக்கும்னு கேட்டதுக்கு எல்லீச்சாண்ட நில்லுன்னாங்க. அதான்…”

அவர் தலையில் நோகாமல் தட்டிக் கொண்டு, “அது எல்ஐசி சார். அதோ, அங்க பதினெட்டு மாடி உயரக் கட்டடம் தெரியுதா வெள்ளையா..? அதான் எல்ஐசி. அதோட வாசல்ல இருக்கற பஸ் ஸ்டாப்ல நில்லுங்க. தாம்பரம் பஸ் வரும்” என்று அருஞ்சொற்பொருள் உரைத்துச் சென்றார். நான்தான் இப்போது ‘ழே’யென்று விழிக்கும்படி ஆயிற்று. எல்ஐசி சென்னைச் செந்தமிழில் ‘எல்லீச்சு’ ஆன அழகை வியந்தபடியே குரோம்பேட்டைத் திருத்தலத்தைச் சென்றடைந்தேன்.

மறுநாள் நேர்முகத்தைச் சந்தித்து, மீண்டும் மதுரைக்கே சென்று, அந்த வேலை கிடைக்காமல் போனதெல்லாம் பின்குறிப்புக்கான விஷயங்கள். அதை விட்டுவிட்டு, மறுமுறை சென்னைத் தமிழும் நானும் சந்தித்துக் கொண்ட அழகிய அனுபவத்துக்கு வரலாம்.

சென்னையில்தான் இனி செட்டிலாவது என்று முடிவு செய்து வந்து சேர்ந்திருந்த சில நாட்களில் பழகிய ஒருத்திக்குச் சென்னையில் திருமணம். “மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில்ல காலைல 9 மணிக்கு வந்துட்ரா..” என்றிருந்தாள். திடீர்த் திருமணமாகையால் பத்திரிகை அடிக்க அவகாசப்படவில்லை. சரியென்று, சமீபத்தில்தான் புதிதாக வாங்கியிருந்த என் மூஞ்சூறு வாகனத்தைக் (டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர்) கிளப்பி புறப்பட்டேன்.

மயிலாப்பூர்

உண்மையில் இருசக்கர வாகனத்தைச் சென்னைச் சாலைகளில் செலுத்துவதென்பது எனக்கு மிகச் சவாலாக இருந்த காலகட்டம் அது. வண்டியும் புதிது, நானும் சென்னைப் போக்குவரத்துக்குப் புதிது, ஏரியாக்களும் முழுமையாக அறிமுகமாகாத காலம். செல்போனில் லொகேஷன் பார்க்குமளவு அன்று விஞ்ஞானம் வளராமல், எப்.எம்.ரேடியோவும், ஆதார் கார்டில் தெரிகிற லட்சணத்தில் புகைப்படம் எடுக்கிற காமிராவும் கொண்ட செல்போன் வைத்திருந்தாலே வசதியானவன் என்று அசந்து பார்க்கிற காலம். 

எனவே, இரு கால்களை அகட்டி நின்றால் உள்ளே புகுந்து பறந்துவிடக் கூடிய அளவில் கன்னாபின்னாவென்று விரையும் ஆட்டோக்களையும், ஷேன் வார்ன் போட்ட ஸ்பின் பால் போல கன்னாபின்னாவென்று கட் அடித்து உருளும் பைக்கர்களையும், அருகில் ஓடினாலே க்ளோசப்பில் பயமுறுத்தும் லாரிகளையும் சமாளித்து வண்டி ஓட்டுதல் என்பது என்னளவில் பெரிய சாதனையாகவே இருந்தது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இரண்டு மெகா இயந்திரங்களுக்கிடையில் உடலை குலுக்கிக் கொண்டு தங்கவேலு நடப்பாரே…. நினைவிருக்கிறதா..? அதுபோல கன்னாபின்னாவென்று என் மூஞ்சூறைக் குலுக்கிக் கொண்டு ஒரு வழியாக மயிலாப்பூரைச் சென்றடைந்து விட்டேன். வண்டியில் போகும்போதே கடை போர்டுகளை வைத்து ஏரியாக்களைப் பார்க்கும் வழக்கத்தில், நான் மயிலாப்பூர் வந்துவிட்டதை உணர்ந்து பார்த்தால், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தின் அருகில் இருந்தேன்.

காரணீஸ்வரர் கோயில் எங்கிருக்கும்..? ஆங்கோர் ஆசாமி தள்ளுவண்டியொன்றை நடைமேடையில் பதித்து, அதில் பலரது துணிகளை இஸ்திரித்துக் கொண்டிருந்தார். வாகனத்தை ஸ்டாண்டிட்டு நிறுத்திவிட்டு அவரருகே சென்று பவ்யமாக, “சார், காரணீஸ்வரர் கோயில் போகணும். எந்தப் பக்கம்..?” என்று கேட்டேன். அன்னார் ஒரு சென்னைச் செந்தமிழன் என்பது அவர் பதிலைச் செப்பியதில் தெரிந்தது. “தோ, ஸ்ட்ரெய்ட்டுக்காப் போயி, சிக்னல்ல சோத்தாங்கைப் பக்கம் வல்ச்சுக்க. கொஞ்சத் தொல போனீன்னா போலீசு டேசன் வரும். அத்தாண்டி போனயின்னா மசூதி ஒண்ணு வரும். மசூதியாண்ட போய், ‘கட் தெரு’ எங்கக்குதுன்னு யாராண்ட கேட்டாலும் சொல்லுவாங்க. கட் தெருல லெப்ட்டுக்கா பாத்துகினே போனயின்னா கோயிலாண்ட போய்ருவ..”

“தாங்க்ஸ் சார்” என்றுவிட்டு வண்டியைக் கிளப்பினேன். சோத்தாங்கை – உணவுண்ணும் கை. சரி, சிக்னலில் வலதில் வளைத்தாயிற்று. சற்றுத் தொலைவு போனதும் போலீஸ் ஸ்டேஷன் கண்ணில் பட்டதும், அவர் சொன்னதில் நம்பிக்கை வந்தது. மேலும் போனேன். மசூதி வந்தது. அங்கே யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் என்றாரே… யாரைக் கேட்பது..? சாலையோரப் பெட்டிக்கடை (பங்க் கடை என செ.செ.தமிழ் செப்பும்) ஒன்றினருகே வாகனத்தை நிறுத்தி, கடைக்கார முதியவரிடம் கேட்டேன்.

தலையைச் சொறிந்தார். “என்னடா இது..? நானும் இங்க பத்து வருஷமா இருக்கேன். கட் தெருன்னு ஒண்ணு கேள்விப்பட்டதே இல்லியே…” எனக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் ‘ழே’யென விழிக்க, சுதாரித்த அவர் கேட்டார். “ஆக்சுவலா எங்க போகணும் நீங்க..?”

“காரணீஸ்வரர் கோவிலுக்கு சார்….”

“அதா..? நேராப் போயி, ஃபர்ஸ்ட் லெஃப்ட் எடுத்தீங்கன்னா பதினஞ்சு பில்டிங் தாண்டினதும் காரணீஸ்வரர் கோவிலப் பாத்துடுவீங்க.” என்றார். அவருக்கும் ஒரு நன்றியை நவின்றுவிட்டு வண்டியைச் செலுத்தி முதல் இடதைப் பிடித்து வண்டியை நகர்த்தினேன். வழக்கம்போல் நிமிர்ந்து கடை போர்டுகளைப் பார்க்க, ஷாக் வாங்கினேன். அதிலொன்றில் கடை பெயர் எழுதி, ‘கடைத் தெரு, மயிலாப்பூர்’ என்று இருந்தது. 

அடப்பாவி…!!! கடைத் தெரு என்ற வார்த்தையைத்தான் அந்த இஸ்திரியான் மென்று முழுங்கி ‘கட் தெரு’வாக்கி சென்னைச் செந்தமிழில் இயம்பியிருக்கிறான். வாய்விட்டுச் சிரித்தபடி காரணீஸ்வரர் கோவிலை அடைந்தேன். கல்யாணத்தையும் அட்டெண்ட் செய்தேன். கல்யாணப் பெண்ணானவள், விடைபெறச் சென்ற என்னைத் தடுத்தாள். “கொஞ்சம் இரு. உன்னை ஒருத்தருக்கு இன்ட்ரட்யூஸ் செய்யணும்..”

“யார்றீ அது..? நான் எதுக்கு அவரைப் பாக்கணும்..?”

“உனக்கு வேலைக்குச் சொல்லி வெச்ருக்கேன்டா. அவருக்குத் தெரிஞ்ச இடத்துல உன்னை நுழைச்சிடுவார். அவர் என் ஒண்ணுவிட்ட ஃப்ரெண்டு.”

“என்னது..? ஒண்ணு விட்ட ஃப்ரெண்டா..?”

“அட, ஆமாண்டா. ஒண்ணு விட்ட மாமா, ஒண்ணு விட்ட சித்தப்பான்னு சொல்வாங்கல்ல… அது மாதிரி இவர் என் ப்ரெண்டோட ப்ரெண்டு. அதான் ஒண்ணுவிட்ட ப்ரெண்டு..”

“உன்னைய…” என்று கை ஓங்கி, “கல்யாணப் பொண்ணாச்சேன்னு விடறேன்.” என்று கையைத் தழைத்தேன். அவள் அறிமுகப்படுத்திய நண்பரால் எனக்கொரு வேலை கிட்டியதும், சிலகாலம் கழித்து வழக்கம் போல நான் அங்கிருந்து வேறு நிறுவனம் மாறியதும், வழக்கம் போலவே பின்குறிப்புக்கான சமாச்சாரங்கள்.

சரக்கு இன்னும் உண்டு…

balaganessh32@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close