இணைய இதழ்இணைய இதழ் 73தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 20 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

நானும் எழுத ஆரம்பித்தேன்!

‘ஊஞ்சல்’ இதழ் வாசக உலகில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ஒரு நாவலுடன் வார இதழ் போன்று பல்சுவை அம்சங்களைச் சேர்த்து வடிவமைப்பது எனக்கு ரசனையாகவும் சுவாரசியமாகவும் அமைந்தது. ஓரிரு இதழ்கள் இப்படிப் போனது.

பதிப்பக அலுவலகத்திலும் பணிகள் டேபிளில் குவிந்த வண்ணமிருக்கும். ஓய்வான நேரம் என்பதை நாமே உண்டாக்கிக் கொண்டால்தான் உண்டு. அப்படி ஒரு கேப்பை நான் சாமர்த்தியமாக அவ்வப்போது உருவாக்கிக் கொள்வேன். அப்போதுதானே வேலையின் சுவாரஸ்யம் கெடாமலிருக்கும். அப்படிக் கிடைத்த ஒரு இடைவெளியில்தான் ஓர்நாள் சேட்டைக்காரன் எழுதிய ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்கிற போஸ்ட்டைப் படித்தேன். வரிக்கு வரி சிரிக்க வைக்கிற தரமான நகைச்சுவையுடன் இருந்தது அந்த போஸ்ட்.

அன்று மாலை பிகேபி ஸாரைச் சந்தித்தபோது, அந்த போஸ்டைப் பற்றிச் சொல்லி, அவரைப் படித்துப் பார்க்கச் சொன்னேன். படித்தார், சிரித்தார், ரசித்தார். பிறகு அழுத்தமான குரலில் சொன்னார். “இந்தக் கதையை நம்ம ‘ஊஞ்சல்’ல இந்த இஷ்யூல சேர்க்கறோம். இந்தச் சேட்டைக்காரன் யார்ன்னு கண்டுபிடிச்சு அவர்ட்ட பர்மிஷன் வாங்கிடுங்க..”. ‘அவ்ளவுதானே… செஞ்சிட்டாப் போச்சு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு தலையாட்டி வைத்தேன்.

ஆனால் அது அத்தனை எளிய வேலையாக இருக்கவில்லை. இன்றைக்கு ஃபேஸ்புக்கில் இருப்பதைப் போலத்தான் அன்றைய ப்ளாகிலும். சிலர் தங்களின் போட்டோ போட்டு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பார்கள், சிலர் பூ, புய்ப்பம் என்று ஏதாவது ஒரு படத்தை வைத்து புனை பெயருடன் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருப்பார்கள். இந்தச் சேட்டைக்காரன் என்கிற ஆசாமி தன் அறிமுகத்தில் நாகேஷ் போட்டோவை வைத்திருந்தார். நாகேஷை எங்கே போய்த் தேட..?

இன்றுபோல் கமெண்ட் போட்டவுடன் பதில் கிடைக்கிற ஊடக வசதிகள் அப்போதில்லை. ப்ளாகில் கமெண்ட் போட்டால் சம்பந்தப்பட்டவர் அதைப் பார்த்து, பதிலளிக்க ஒருநாள்கூட ஆகலாம். அதன்பின் அதை நாம் பார்த்துப் பதிலளித்து, அவர் பதிலளிக்க, இப்படி ஒரு தகவல் பெறவே நான்கைந்து நாட்களாவது இயல்பு. நானறிந்த ஒரு ப்ளாகரிடம் சேட்டைக்காரனைச் சந்திக்க வேண்டுவது பற்றிச் சொல்ல, அவர் வலையுலகில் யாருக்குமே அவர் இயற்பெயரோ, அட்ரஸோ தெரிய வாய்ப்பில்லை என்று பதில் தந்தார். ஆனாலும் ஒரு சிறிய நம்பிக்கை வெளிச்சமாக, அன்னாரது ஈமெயில் முகவரியை மட்டும் எனக்குத் தந்தார்.

அது போதாதோ.? சட்டென்று அவருக்கு ஒரு மெயில் அனுப்பினேன் என் தேவையை விவரித்து. மறுநாளே பதில் கிடைத்தது- ‘தாராளமாகப் பிரசுரித்துக் கொள்ளுங்கள். எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று. சாரிடம் அதைச் சொல்லி, மிகச் சிறிதே எடிட் செய்து அடுத்து வந்த ஊஞ்சலில் பிரசுரித்தோம். ‘ஆஹா, அவர் நமக்குத் தந்த பெரிய அசைன்மெண்ட்டை நிறைவேற்றி விட்டோம்’ என்று சந்தோஷம் என் மனதில். இதழ் வந்ததுமே அதிலும் ஒரு குண்டு விழுந்தது.

அந்த மாதத்துக்கான படைப்புகள் பங்களித்தவர்களுக்கு சன்மானப் பட்டியல் தயார் செய்தார். சன்மானம் என்றால், மிகப்பெரிய தொகை அல்ல. சிறு பத்திரிகை என்பதால் எளிய தொகைதான். ஆனாலும் அது சரியாக உரியவருக்குச் சென்றுசேர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் பிகேபி சார். சேட்டைக்காரனுக்கான சன்மானத்தையும், இதழின் பிரதியையும் என்னிடம் தந்து அவரிடம் சேர்ப்பித்துவிடச் சொன்னார். என்னிடமிருப்பது ஈமெயில் ஐடிதான் என்பதை அவரிடம் சொன்னேன். “அப்ப மறுபடி மெயில் எழுதி, சந்திக்க டைம் கேட்டுக் குடுத்துடுங்க.” என்று எளிதாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

நல்ல ஐடியாதானே என்று உடனே சன்மானமும், ஊஞ்சல் பிரதியும் காத்திருப்பதாக மெயில் ஒன்று அனுப்பினேன். அடுத்த இரண்டு தினங்கள் பதில் வருமென்று தினம் மெயில் பாக்ஸைத் திறந்து பார்த்து ஏமாந்து கொண்டிருந்தேன். ம்ஹும்… சரி, ஒருவேளை ஸ்பாமாகியிருக்கலாம் என்று மறுபடி அதே கன்டென்ட்டை ரிப்பீட் செய்தேன். அதன்பின் நான்கு நாட்கள் சென்றன. அதற்கும் பதிலே இல்லை.

என்னை யாராவது புறக்கணித்தார்கள் என்றால், எனக்குக் கடுங்கோபம் வந்துவிடும். நான் கடுங்கோபம் கொண்டால்… அழுதுவிடுவேன்! ஹி… ஹி… அப்படித்தான் ஆனது. மூன்றாவது மெயிலை கடுங்கோபத்துடன் புலம்பலாக டைப்பினேன். “ஐயா, நீர் யாரென்கிற ரகசியத்தைப் பிறரிடம் உடைப்பதால் எனக்கு யாதொரு பலனுமில்லை. நானும் ரகசியம் காக்கத் தெரிந்த நபர்தான். எனக்கு மட்டுமேனும் உங்கள் உருவத்தைக் காட்டக் கூடாதா..?” என்று துவங்கி ஒரு நீண்ட மெயிலை அதே விவரங்களுடன் அனுப்பினேன்.

அடுத்த நாளே பதில் வந்தது. “உங்கள் கடிதம் பார்த்ததும் எனக்கு லேசாகக் குற்ற உணர்வே வந்துவிட்டது. கம்பெனி ஆடிட்டிங் இருந்ததால் நாலைந்து நாளாக பிசியாக இருந்துவிட்டேன். என் பெயர் வேணுகோபாலன். இது என் முகவரி….” என்று கீழே அவர் முகவரியைத் தந்திருந்தார். “எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று போன் நம்பரையும் தெரிவித்திருந்தார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், போன் செய்துவிட்டு காலையிலேயே அவர் வீட்டைக் கண்டுபிடித்துப் போனேன். அழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்தவர்- அட, நாகேஷ் போலவே இருந்தார். அதே ஒல்லியான தேகம்! “வேணுகோபாலன்..?” என்று இழுத்தவனை, “நான்தான்..” என்று வரவேற்றார். பேச்சிலும் நாகேஷ் போலவே சிறப்பான நகைச்சுவை. அவரது கதைக்கான எளிய சன்மானத்தையும், ஊஞ்சல் இதழ் பிரதிகளையும் தந்துவிட்டு விடைபெற்றேன். வழக்கம்போல் முதல் சந்திப்பில் அதிகம் பேசாமல் நல்ல பிள்ளையாக விடைபெற்றிருந்தேன்.

சேட்டைக்காரன் – வேணுகோபாலன்

அதன் பிறகான வேலைகளில் மூழ்கியதில் நான் அவரை மறந்திருந்தேன். இரண்டு வாரத்தின் பிறகான ஒரு ஓய்வு தினத்தில் மறுமுறை அவரைச் சந்திக்க விருப்பம் வந்தது. போனேன். நிறையப் பேசினோம். அப்போதுதான் மெதுவாக என் ஆசையைச் சொன்னேன். “எனக்கும்கூட உங்களை மாதிரி ப்ளாக் எழுதணும்னு ஆசை இருக்கு. ஆனா எப்டிச் செய்யறதுன்னுதான் தெரியலை..” ஒரு நிமிஷம் என்னை உற்றுப் பார்த்தவர், பக்கென்று சிரித்தார். “அதென்ன பெரிய விஷயம்..? ஈசியா எழுதலாம்” என்று அவரது கம்ப்யூட்டர் அருகே அழைத்துப் போய், ஈமெயில் அக்கவுண்ட்டைத் திறந்ததும் எப்படி ப்ளாக்கருக்குள் செல்வது, எப்படி போஸ்ட்டை வெளியிடுவது, இன்னபிற விஷயங்களை எளிமையாக விளக்கினார்.

நமக்குத்தான் சிறு வயதிலிருந்தே கிரகிக்கும் சக்தி அதிகமாயிற்றே. அதன் உதவியால்தானே பட்டதாரியாகவே ஆனோம். ஹி.. ஹி… எனவே, அவர் சொன்னதை பளிச்சென மனதில் ரெகார்ட் செய்து கொண்டேன். “இப்பவே உங்களுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுத் தர்றேன். ஏதாவது ஒரு பேர் சொல்லுங்க ப்ளாகுக்கு..” நான் ‘ழே’யென்று விழித்தேன். இப்படித் திடீரென்று கேட்டால் என்ன பதில் சொல்ல..?

அப்போது ‘ஊஞ்சல்’ இதழில் என்னை ஒரு தொடர் பகுதி எழுதப் பணித்திருந்தார் எடிட்டர் பிகேபி. நான் தீவிர வாசகனானதால் வெவ்வேறு புத்தகங்களில் நான் ரசித்த வரிகளை ‘மின்னல் வரிகள்’ என்ற தலைப்பில் எழுதச் சொல்லியிருந்தார். ‘புத்தகக் காதலன்’ என்றொரு புனைபெயரையும் சூட்டியிருந்தார். இப்போது ‘சட்டென்று பேரைச் சொல்லு’ என்று சேட்டை சார் கேட்டதும், அந்தப் பகுதியின் பெயர் மனதுக்கு வந்தது. பட்டென்று சொன்னேன். “மின்னல் வரிகள்”.

“அட, நல்லாருக்கே பேரு..” என்றவர், உடனே ஒரு ப்ளாகை ஓப்பன் செய்துவிட்டார்- சில நிமிஷங்களிலேயே. “இவ்ளவுதான் கணேஷ். இனிமே எப்ப வேணாலும் உங்க ஈமெயில் ஓப்பன் பண்ணதும் ப்ளாகர் கணக்கைத் திறந்து உங்க போஸ்ட்களை எழுத ஆரம்பிக்கலாம்.” நெகிழ்ச்சியோடு அவரைப் பார்த்துச் சொன்னேன். “இன்னைக்கே ஆரம்பிச்சுடறேன். ரொம்ப தேங்ஸ்ண்ணா..” அந்த நிமிஷத்திலிருந்து அவர் எனக்கு ‘வேணு அண்ணா’ ஆனார்.

இப்படியாகத்தானே என் ப்ளாக்கை ஆரம்பித்து, தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அவற்றை அதற்கென இருக்கும் திரட்டிகளில் இணைக்கத் துவங்கியதும் நிறைய கமெண்ட்ஸ்களும் வரத் தொடங்கின. மிக அபத்தமாக எழுதத் துவங்கிய என் எழுத்தானது, எழுத எழுத சற்றே மெருகேற ஆரம்பித்தது. இது நிகழ்ந்த அதே சமயத்தில் மிக இயல்பாக ஊஞ்சலிலும் என்னுடைய எழுத்துப் பங்களிப்பு அதிகமாகியிருந்தது.

அது ஆரம்பித்த விதம் வினோதமானது. அப்போது வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தில் இருந்தேன். அடுத்தடுத்து சந்தித்த சோதனைகள் என்னை மூட்அவுட் ஆக்கியிருந்தது. அந்தச் சமயத்தில் என்னைத் தேற்றி, பழைய ஆசாமியாக்கியதின் முழு பெருமையும் பிகேபி ஸாரையே சேரும். முன்பே சொல்லியிருந்தபடி இருந்த இரண்டு உதவி ஆசிரியர்களும் வேறு வேறு காரணங்களால் விலகிவிட்டிருக்க, வடிவமைப்பாளன் பதவியுடன் கூடுதலா ‘ஊஞ்சல்’ இதழின் உதவி ஆசிரியராகவும் என்னை ஆக்கியிருந்தார். பரிசீலனைக்கு வருகிற ஜோக்குகள், கவிதைகள், இன்ன பிறவற்றைப் படித்து, வடிகட்டி அவரிடம் தருவேன். அவர் ‘டிக்’ செய்பவற்றை இதழில் சேர்ப்பேன். இப்படிச் சென்று கொண்டிருந்த சமயத்தில், வேலைநேரம் முடிந்ததும் ஒரே உதவியாளனாகிய என்னுடன் சிலசமயம் சினிமா பார்க்கச் செல்வார் பிகேபி சார்.

அப்படி ஒருதினம் சினிமா பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் படம் பற்றிக் கருத்துக் கேட்டார். நாலு வரி சொல்லியிருக்க வேண்டிய நான் நாற்பது வரிகள் விரிவாக நான் ரசித்ததை, ரசிக்காததைச் சொன்னேன். மெல்லிய ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, “இப்ப சொன்னதையே கொஞ்சம் விரிவா எழுதி நாளைக்குக் குடுங்க. ஊஞ்சல்ல சினிமா விமர்சனத்துல போட்றலாம்.” என்றார். நாற்பது வரிகளில் சொன்னதை நூறு வரிகளாக விரித்து எழுதித் தந்தேன். ‘நன்றாயிருக்கிறது’ என்று உற்சாகப்படுத்தி, அதை வெளியிட்டார்.

இதேபோலவே, ஒருசமயம் எல்லா மேட்டர்களையும் லேஅவுட் செய்த பின்பும் ஒன்றரைப் பக்கம் காலியாக இருந்தது. “நீங்களே ஏதாச்சும் எழுதிடுங்க.” என்றார். அந்த நேரம் மனதில் மின்னிய ஒரு சின்ன ப்ளாஷை டெவலப் செய்து, ஒன்றரைப் பக்க க்ரைம் சிறுகதையாக்கி அவரிடம் காட்டினேன். “குட்” என்று சுருக்கமாகப் பாராட்டிவிட்டு, “ஓகே” என்றார்.

இப்படியெல்லாம் என் படைப்புகள் ஊஞ்சலில் தொடர்ந்து வெளியாகத் துவங்கிய நேரத்தில், ப்ளாக் உலகிலும் சற்றே பாப்புலர் ஆகியிருந்தேன். நாம் நினைத்ததை எழுதி நாமே வெளியிடும் சுதந்திரத்தில், கடுகு ஸார் சொல்லித் தந்த டெக்னிக்குகளின் படியும், சேட்டைக்காரன் அண்ணாவிடம் ரசித்துச் சிரித்த விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டும் நானும் நகைச்சுவையாக போஸ்ட்கள் போட ஆரம்பித்தேன். நான் சற்றும் எதிர்பாராத வகையில் அவை மிக அதிகமான வரவேற்பைப் பெற்றன. நூறு கமெண்ட்டுகளுக்கு மேல் வந்தது. லைக்குகளும் அதற்கிணையாக.

-இந்த நீண்ட விவரணை நான் எழுத்தாளனாக வடிவமைக்கப்பட்ட விதத்தை மிக விளக்கமாக உங்களுக்கு அறியத் தந்திருக்கும். அதன் பிறகு நடந்த விஷயங்களை…

-தொடர்கிறேன்.

balaganessh32@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close