இணைய இதழ்இணைய இதழ் 80சிறார் இலக்கியம்

பாட்டி வீடு – ஜெயபால் பழனியாண்டி

சிறார் இலக்கியம் | வாசகசாலை

விமல் ஒரு சுட்டிப் பையன். ஆனால் கொஞ்சம் சாதுர்யமானவன். விடுமுறை தினத்தன்று தன் பாட்டி வீட்டிற்கு செல்வதாக அம்மாவிடம் அனுமதி கேட்டான். தனியே அவனை அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை. நான் பாட்டி வீட்டிற்குச் சென்றே தீருவேன். அடம்பிடித்தான். அவன் காட்டு வழியாக செல்லவேண்டும் என்பதால் அவன் அம்மா அவனை நினைத்து பயந்தார். ஆனால் அவன் கொஞ்சம் தைரியம் மிக்கவன். ஒரு வழியாக அம்மாவிடம் அனுமதி பெற்று காட்டின் வழியே பயணித்தான். குழந்தைகளா நீங்க காட்டின் வழியா தனியா பயணிப்பீர்களா? ஆனால் விமல் பயப்படவில்லை. நெடிய உயரமான மரங்கள் கொண்ட பாதையில் பாடிக்கொண்டே பாட்டியைக் காணும் ஆவலாய் விமலின் பயணம்.  ஒரு வழியாக காட்டைக் கடந்து விட்டான். ஓர் ஆற்றை அவன் கடக்க வேண்டியிருந்து. அதற்கு ஒரு மரப்பாலமும் இருந்தது. அதில் ஏறி நடந்தான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே. திடீரென்று ஒரு சத்தம். யாராடா நீ சுட்டிப் பையன். விமல் சுற்றும் முற்றும் விழித்துப் பார்த்தான். யாரையும் காணவில்லை. டேய் தம்பி கொஞ்சம் கீழே பாரடா. பார்த்தால் ஒரு பெரிய முதலை அவன் கண்ணில் பட்டது. பயந்து நடுங்கினாலும் முதலையிடம் அந்த பயத்தை காட்டவில்லை அவன். இந்த உச்சிவெயில் நேரத்துல எங்கடா போற நீ என்றது முதலை. முதலை அண்ணே! முதலை அண்ணே! நான் எங்க பாட்டி வீட்டுக்குப் போறேன். ஓ! ஓ! அப்படியா? ஆனா எனக்கு இப்போ பயங்கர பசி. என்னைத் தாண்டி நீ எப்படி போவ. அண்ணே! எங்க பாட்டி நிறையா பலகாரம் எனக்காக செஞ்சு வச்சுருப்பாங்க. நீங்க என்ன போக விட்டீங்கனா. நான் உங்களுக்காக அதைக் கொண்டு வந்து தருவேன். நீ என்ன ஏமாத்தீட்டனா உன்னை என்ன செய்றது என்றது முதலை. அண்ணே! நம்புங்கண்ணே. நம்பிக்கைதான் வாழ்க்கை.. சரி போயிட்டு வாடா தம்பி.

ஒரு வழியாக முதலையிடமிருந்து தப்பித்து பாலத்தில் மெதுவாக நடந்தான். ஹலோ குட்டிப்பையா எங்கே போறீங்க.. தண்ணீரிலிருந்து ஒரு தாமரை மலர் எட்டிப்பார்த்தது. நானா எங்க பாட்டி வீட்டுக்குப்போறேன். அப்படியா என்னயும் உன் கூட கூட்டிப்போறயா என்றது தாமரைப்பூ. உன்னயா இல்ல இல்ல எங்கப்பாட்டி திட்டுவாங்க. நா வேணும்னா எங்கப்பாட்டி வீட்டுல தோட்டம் இருக்கு. அங்க நெறயா பூ இருக்கு.. அதெல்லாம் கொண்டு வந்து உனக்குத் தரேன்.. சரி மறக்காம கொண்டு வா. அப்படி வந்தாதான் நீ உன் வீட்டுக்குப் போக முடியும். ம்ம்ம்…

என்னடா இது வம்பா போச்சு.. இனி யார் கண்ணலயும் சிக்கீரக்கூடாது என நினைக்கும் போதே.. ஆத்துல  இருக்குற மீன்கிட்ட மாட்டிக்கிட்டான். என் கண்ணுல சிக்குன யாரையும் நா விட்டதுல்ல. நீ மட்டும் தப்பிச்சுறலாம்னு பாத்தியா.. மீன் அண்ணே! மீ்ன் அண்ணே! நா எங்க பாட்டி வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன். எங்க பாட்டி எனக்காக பொறி கடலையெல்லாம் வாங்கி வச்சுருப்பாங்க. அதுல உனக்கு கொஞ்சம் தரேன். என்ன இப்போ அனுப்பி விடு. சரி போயிட்டு எனக்கு எடுத்துட்டு வா.

ஆற்றைக்கடந்து ஊருக்குள் புகுந்து பாட்டி வீட்டை அடைந்தான் விமல். பாட்டியைக் காணவில்லை. தோட்டத்தில் எட்டிப்பார்த்தான். அங்குமில்லை. கொஞ்சம் பூக்களைப் பறித்து தன் பைக்குள் வைத்துக்கொண்டான். பாட்டி வந்து விட்டாள். வாடா பேராண்டி எப்போ வந்த. இப்போதா பாட்டி. நா கோவிலுக்குப் போயிருந்தேன். சரி வா உள்ளே போலாம். பாட்டி அம்மா உங்களுக்காக வெற்றிலைப் பாக்கும் கொஞ்சம் காய்கறியும் கொடுத்தாங்க. எனக்கு எதுக்குடா ராசா. இது கிராமம்டா இங்கே எல்லாமே கிடைக்குமே. சரி வா உனக்காக நெறையா பலகாரம் வச்சுருக்கேன். பலகாரத்தைத் தின்ன கொடுத்துவிட்டு பாட்டி அடுப்படிக்குச் சென்றாள். இதுவே தக்க சமயமென்று கொஞ்சம் பலகாரங்களை முதலைக்காகப் பதுக்கிக் கொண்டான். மாலை நேரமாகி விடவே இருட்டுவதற்குள் வீடு செல்ல வேண்டுமென்பதால் கிளம்ப ஆயத்தமானான். திடீரென்று மீனின் நினைவு வரவே. பாட்டி பூஜைக்கூடையில் வைத்திருந்த பொறி பொட்டலத்தை எடுத்துக்கொண்டான்.

பாட்டியிடம் விடைபெற்ற விமல் ஆற்றைக் கடக்கும் போது மீனிற்கு கொஞ்சம் பொறியும் தாமரைப் பூவிற்கு கொஞ்சம் மலரும் தூவினான். மீனிடமிரும் மலரிடமிருந்தும் தப்பித்த மகிழ்ச்சியில் முதலையை மறந்து விட்டான். ஆற்றிலிருந்த முதலை அவன் காலை கவ்வுவதற்காக பாய்ந்தது. அதிர்ச்சியில் பையை கீழே போட்டான். பையில் மறைத்து வைத்திருந்த பலகாரங்கள் சிதறவே. முதலைக் குட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாவிக் குதித்தன. பலகாரம் குட்டிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் முதலை அவனை தாக்காமல் விட்டுவிட்டது. அப்பாடா என்று முதலையை மறந்து வீட்டிற்கு ஓட்டம் பிடித்தான். 

வழி நெடுக ஆபத்து இருக்கும் என்பதாலே அம்மா எச்சரித்தாள் என்பதை உணரந்துகொண்டான் விமல். திருட்டு முழி முழித்த அவனைப் பார்த்து அம்மா என்னடா முதலைமாறி முழிச்சுட்டு இருக்க என்றாள்.. ஆயா என்று வாயைப் பிளந்தான் விமல்..

*********

jaayapal@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close