சிறுகதைகள்

பாகன்

தாமு

“ஒரு காலத்துல திருவாங்கூர் மாகாணத்துல சக்தியோட குடும்பம் யாருக்கு மாலை போடுதோ அவங்க தான் மன்னரா ஆவாங்களாம். இப்ப பாரு பாவம் இந்த ஸ்ரீதர் பயலுக்காக கடைசி நேரத்துல அழுதுட்டு இருக்கு. இதெல்லாம் முன்னமே தெரிஞ்சு இருக்கனும், சரி அதுக்கு அறிவு இருந்தா தானே” என கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

ஸ்ரீதர் தனது மரணப் படுக்கையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரிந்து விடலாம் எனும் நிலையில் உள்ளான், மூச்சை பிடித்து வைத்துக் கொண்டு. 47 வயதான ஸ்ரீதருக்கு உடலில் பெரிய நோய் குறைபாடுகள் இல்லை, திடகாத்திரமான கருப்பு உடம்பு.

நாடி மருத்துவர்: “ தேறாது, இன்னும் 1 மணி நேரமோ, அரை மணி நேரமோ அவ்ளோ தான்…”

ஊர் தலைவர் (நல்ல தம்பி):  “நம்ம ஊர் வழக்கப்படி பாகனோட சமாதி செலவ இந்த ஊர் கோவில் ஏத்துக்கும் ஆக வேண்டிய காரியத்தை பாருங்க…”

“டேய் மாயா, உன்ன பாடை தான ஏற்பாடு பண்ணச் சொன்னேன். போடா(கோவமாக), பீடி கேட்குதா இப்ப உனக்கு. போய் சட்டுன்னு ரெடி பண்ணு. சக்திய பத்திரமா நாமா தான் பாத்துக்கணும் அப்பறம் சாமி குத்தம் கித்தம் ஆகிற போகுது. இப்ப தான் வெள்ளாமை போட்டு இருக்கு மழை வேணுமா, வேணாமா?”

 “வேணும்” (ஊர் மக்கள் கூட்டமாக).

சரி ஆக வேண்டியதை பாருங்க…

துக்க வீட்டிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் சக்தி மேல் தான் கண். சக்தி அந்த ஊர் கோவில் யானை. தனது பாகனை இழக்க போகிறோம் என தெரிந்து கண்ணீரால் அந்த இடத்தை நனைக்கிறது, தற்காலிக மண்வாசனையுடன் அந்த இடம். 

கரோலில் இரட்டை சங்கிலியால் பூட்டப்பட்ட சக்தி அங்கே நடப்பவைகளை சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

ஸ்ரீதர் குடும்பம் தலைமுறை தலைமுறையாக யானைப் பாகனாக இருப்பவர்கள். அப்போது இருந்த கோவில் யானை திருமேனி இறந்து விட்டது, அவரின் அப்பா கோபாலனுக்கு ஊர் மக்கள் ஒரு வேலையைக் கொடுக்கின்றனர். புது யானையை கொண்டு வர வேண்டும், அப்போது இருந்த ஊர் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கேரளாவில் இருந்து சக்தியை கொண்டு வர ஏற்பாடு செய்தார். அப்போது சக்திக்கு 7 வயது. பெரும்பாடுபட்டு கேரளாவில் இருந்து லாரியில் ஒரு வழியாக கொண்டுவந்து விட்டனர்.

ஸ்ரீதருக்கு 18 வயது இருக்கும் போது கோபாலன் சங்கிலியில் கட்டிய சக்தியுடன் கோவிலுக்கு வருகிறார். ஊரே திரண்டு புது கோவில் யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

பழகாத யானை அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறான் கோபாலன். யானையின் அருகில் சராசரியாக 150 பேர் கூடி உள்ளனர்.

அந்த ஊர் கூட்டத்தின் முன் தலைவர் பேச,

ஈஸ்வரமூர்த்தி: “சரி, சரி சுப்பிரமணிக்கு அப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டு சக்திய திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வந்து இருக்கேன். சக்தியோட குடும்பம்தான் வாரிசு இல்லா மன்னர்கள் நாட்டுக்கு அரசனை தேர்ந்தெடுக்குறது வழக்கம். ரொம்ப ராசியான வகையறா.”

பேசி கொண்டு இருக்கும் போதே சக்தி, ஈஸ்வரமூர்த்தியின் வேட்டியை அவிழ்த்து தலையை சுற்றி தூக்கிப் போட, அங்கே ஒரே சிரிப்பும், தலைவருக்கு சின்ன அவமானமும்.

ஈஸ்வரமூர்த்தி:  “இங்க பாரு கோவாலு, உனக்கு ஒரு மாசம் அவகாசம் தர்றேன். அதுக்குள்ள இந்த சேட்டை புடுச்ச யானைய வழிக்கு கொண்டு வரணும் சரியா?”

கோபாலன்: ”சரிங்கய்யா” (துண்டை கக்கத்தில் வைத்து கொண்டு, கும்புடுகிறான்)

ஒரு யானையை பழக்குவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. கோபாலன் யானையை பழக்குவதில் வல்லவன், ஊர் ஊராக சென்று யானையை பழக்குவது இவன் பகுதி நேர வேலை. ஆனால் எப்போதாவது தான் சிரத்தை எடுத்து அந்த வேலையை பணத்திற்காகப் பார்ப்பான். இந்த முறை அவனுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை, தட்டி கழிக்க முடியாது. தலைவர் உத்தரவு.

யானை பழக்க கோபாலன் கேட்ட அனைத்தையும் தலைவர் செய்து கொடுத்துவிட்டார். 5 கும்கி யானை மற்றும் 8 பாகன்கள், ஒரு குச்சி, ஒரு அங்குசம். நடுவில் சக்தியை நிறுத்தி வைத்து சுற்றியும் 5 கும்கி யானைககளும் 8 பாகன்களும் நின்று உள்ளனர். இந்த யானையை பழக்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அங்குசம் கோபாலன் கையில் உள்ளது.

ஆறடி உயரத்தில் மூங்கில் குச்சி அதை விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைப்பார்கள், பின் அதை நெருப்பில் வாட்டுவார்கள். தயார் செய்த அங்குசத்தை வளைத்தால் மறுமுனையை சுலபமாக வளைந்து தொடும். ஓங்கி ஒரேயொரு அடி விழுந்தால் போதும் ஒருவன் உயிரை பறிக்க, அந்த அங்குசம் தான் யானையை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம்.

பத்து நாட்கள் சக்தி பயந்தும், மிரண்டும், இரண்டு காலால் என்னை விட்டுவிடுங்கள் என்றும் கதறியது அடிதாங்காமல், பாவம் ஊர் மக்களுக்கு யானை பாஷை புரியாததால் கண்டுகொள்ளவில்லை, வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். 2003ம் ஆண்டு தமிழக அரசு இனி வருடா வருடம் யானை முகாம்கள் இனப்பெருக்க காலமாகிய செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை நடக்கும் என அறிவிக்கிறது. இதனால் பாகன்களுக்கு உடனே தட்டுப்பாடு நிலவ ஆரம்பிக்கிறது. தேவை மற்றும் அதிக பணத்தால் கோபாலனை தவிர மீதி 5 பாகன்களும் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் அமைக்கப்பட்ட முகாமில் தற்காலிக அரசு பாகன்களாக வேலைக்கு செல்கின்றனர்.

கோபாலன் விசயத்தை ஊர் தலைவரிடம் சொல்கிறான்.

ஊர் தலைவர்: “ஆட தெரியாத சிலுக்கு இடுப்பு சுலுக்குன்னு சொன்னாளாம்”. போடா போய் வேலைய பாரு, நீ இருக்கேல போதும், போதும் போ..”

செய்வதறியாது மீதி இருக்கும் 2 பாகன்களுடன் தனது மச்சான், மாமா மற்றும் ஸ்ரீதர் என இந்த யானை குழுவில் புது ஆட்களை இணைத்து கொள்கின்றான் கோபாலன்.

சுற்றி உள்ள கும்கி யானைகள் கீழே போடப்பட்ட குச்சியை எடுத்து பாகன் கையில் எடுத்து கொடுக்கும். யார் கையில் குச்சியை எடுத்துக் கொடுக்கிறதோ அவன் தான் பாகன் அன்றில் இருந்து. இது போல சக்தியும் செய்ய வேண்டும் அதாவது பாகனிடம் கீழே உள்ள குச்சியை எடுத்து தர வேண்டும். நாட்கள் குறைவாக உள்ளது, 30 நாள் முடிய இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில்.

அன்று யானை பயிற்சிக்கு பின் வீட்டில்,

ஸ்ரீதர்: ”அப்பா, இப்படி போட்டு யானையை அடிக்கிறீங்க பாவம் இல்லையப்பா?”

கோபாலன்:  “பாவம் தான், ஊரு மக்களுக்கு கோவிலுக்கு உள்ள இருக்குற சிலை தான் சாமி. ஆனா நமக்கு இது தான் சாமி. யானை சந்தோசமா, சோகமாவோ, கோவமாவோ இருக்கிறத முதல்ல சொல்றது பாகன்கிட்ட தான். சிலர் புரிஞ்சுக்குவாங்க, சிலர் எரிஞ்சுக்குவாங்க. யானை எல்லாத்தையும் நியாபகம் வச்சு இருக்கும். இந்த பயிற்சி முடிஞ்சதுக்கு அப்பறம் கரோல்ல போட்டு மூணு நாள் சோறு தண்ணி இல்லாம அடச்சுருவோம். 3 நாள் கழிச்சு கொஞ்சோண்டு வெல்லம் கொடுக்கணும், பசில சாப்பிடும். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பசில நம்ம சொல்றத கேட்கும். இதெல்லாம் பாவம் தான், நமக்கு வேற வழியில்ல.”

மறுநாள் ஸ்ரீதர் படுத்து இருந்த யானையின் காதின் அருகில் சென்று ஏதோ முனுமுனுத்து வந்தான். பயிற்சி ஆரம்பம் ஆகிறது,

கோபாலன்: (யானை முன் கையை எடுத்து கும்பிட்டு)” அய்யா விநாயகா, நீ தான் துணை இருக்கனும். குச்சியை எடுத்துருய்யா.”

கோபாலன் மச்சான் மற்றும் மாமா கும்கி அருகில் நிற்க, கோபாலன் சக்தியின் அருகில் குச்சியை கீழே போட்டு நின்று கொண்டு இருந்தான். எடு, எடு என கோவம் வந்தவனாய் கோபாலன் சக்தியை அடிக்க சட்டென்று எடுத்த குச்சியை பக்கவாட்டில் நின்று இருந்த ஸ்ரீதர் கையில் கொடுத்தது சக்தி.

இதனை கவனித்து கொண்டு இருந்த ஊர் மக்கள் ஆச்சரியத்தில், 18 வயது நிரம்பிய ஸ்ரீதர் தான் இனி அந்த ஊர் பாகன். கோபாலனுக்கு கோவம் வந்தாலும் ஒரு பக்கம் சந்தோசம். தன் மகன் தன்னை போலவே பாகன் ஆகிவிட்டான் என்று. ஆனால் இன்னும் முடியவில்லை, குச்சியை எடுத்து குடுத்து விட்டால் மட்டும் போதாது. பாகன் தன் யானையின் முதுகில் ஏறி அமர்ந்து வரவேண்டும். அப்போது தான் அது முழுவதும் பழகிய யானையாக கருதப்படும்.

அன்று இரவு மீண்டும் ஸ்ரீதர் யானையின் காதில் ஏதோ முனுமுனுத்து வந்து படுத்தான். இதை கோபாலன் கவனித்துக் கொண்டே இருந்தார்.

கோபாலன்: ”டேய், இங்க வா.”

(ஸ்ரீதர் அருகில் வந்து அமைதியாக நின்றான்)

”என்ன யானைக்கு பக்கத்துல போய் என்னமோ பண்ணிட்டு வந்த? என்ன?”

”ஒன்னும் இல்லப்பா…”

(சில நொடிகள் அவனை அமைதியாக பார்த்தவர்), ”யானையை என்னைக்குமே அடிக்காத, சரியா?”

”சரிப்பா.”

”சரி போய் தூங்கு.”

மறுநாள் கரோலில் அடைக்கப்பட்ட யானையின் மேலே அமர்ந்து வந்தான் ஸ்ரீதர். இவ்வாறாக ஸ்ரீதர் பாகனானான். இதுவரை யானையை அடித்தது இல்லை. அது குடித்ததால் நடந்த ஒரு அசம்பாவிதம் பல வருடங்கள் முன். அன்று கோவத்தில் ஸ்ரீதர் அடித்த அடியில் அங்குசமே உடைந்து விட்டது. சக்தி வலியில் துடி துடித்தது, கண்ணில் ஆறு.

காலப்போக்கில் கோபாலன் மரணம், ஊர் தலைவர் தலைமுறைகள் மாற்றம் என எல்லாம் மாறினாலும் அந்த ஊர் பாகனாக ஸ்ரீதர் மட்டுமே இருந்தான். சுழலும் காலசக்கரத்தில் வறுமையின் பிடியில் சிக்கினான். கோவில் யானைக்கு கொடுக்கப்படும் காணிக்கைகள் தான் அவனுக்கு வருமானமாக இருந்தது. அதில் யானையா, குடும்பமா என்றால் குடும்பம் தான் என்றது அவன் நிலை.  

வருடா வருடம் அழைத்து செல்லும் யானைகள் முகாம் இனி இல்லை என்றது ஆட்சி மாற்றம். அதே நேரம் யானைக்கு மஸ்து வரும் நேரம், யானைகள் வருடத்தின் 3 மாதம் இயற்கையான சூழலில் வாழ விருப்பப்படும். ஸ்ரீதர் அந்த முகாம் ஒன்றை மட்டுமே நம்பி இருந்தான், இப்பொது அந்த முகாம் இல்லை என்றதும். யானையை இரட்டை சங்கிலியால் கட்டி வைத்தான். தினமும் தலையில் இருந்து வழியும் மஸ்த்தை யானை சுவைக்க ஆரம்பித்தது.

ஒன்றரை மாத காலம் இப்படியே சென்றது. ஸ்ரீதர் அன்று மனைவியுடன் சண்டையிட்டு நெப்போலியனுடன் துணை நின்றான் மாலையில். மயக்கத்தில், துக்கத்தில், வறுமையில் யானை பக்கத்தில் நின்று கொண்டு தனது கஷ்டங்களை எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறான்.

செல்லம்மாள்: ”யோவ், யானை தூக்கி போட்டு மிதிச்சு சாணிய பிதுக்க போகுது, ஒழுங்கா வீட்டுக்கு வா…”

ஸ்ரீதர்: (போதையில்) ”நீ போடி, உனக்கு இங்க என்ன வேலை…”

செல்லம்மாள்: ”என்னமோ பண்ணித் தொல.”

தனது சிறுவயதில் சக்தியின் காதில் எது சொன்னாலும் நடக்கும், அப்படி தானே அவன் பாகன் ஆனது. சரி, நமக்கு இருக்கும் வறுமையை போக்க சொல்லி சொல்வோம் என நினைக்கிறான். பக்கத்தில் செல்லும் போது, சக்தி கோபத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக பிளிறுகிறது. அருகில் ஸ்ரீதர் செல்கிறான் காதை நோக்கி. சட்டென்று எழுந்து துதிக்கையால் ஸ்ரீதரை தூக்கி தலை மேல் வரை கொண்டு சென்று ஓங்கி கீழே போட்டு நெஞ்சில் ஏறி ஒரே மிதி ஸ்ரீதர் அங்கே உயிரை விட்டது போல ஆனான்.

இழவு வீட்டில் இனி கோவில் யானை இருக்க கூடாது என கரோலில் இருந்த யானையை கோவில் மடத்தில் கட்டி வைத்தனர். அதே நேரம் ஸ்ரீதரின் இறுதி சடங்குகள் மயானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

வனத்துறையினர் சென்றதும் கோவிலில் சங்கிலியை அறுத்துக் கொண்டு மயானம் வரை வந்த சக்தியின் தும்பிக்கையில் அங்குசம். மதம் கொண்ட யானையை பார்த்ததும் மக்கள் மயானத்தில் தெறித்து ஓட. தன் கையில் இருந்த அங்குசத்தை அவன் சடலத்தின் அருகில் கிடத்தி அருகில் அமர்ந்தது சக்தி.

மீண்டும் வனத்துறையினர் விரைந்தனர் மயக்கம் செய்யும் மருந்து, துப்பாக்கியுடன்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. அருமையான நடையில் எளிமையாக புரிந்துகொள்ள கூடிய உணர்வுகள்..

    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close