கட்டுரைகள்
Trending

யாருக்கு லாபம் இந்த ஓ.டி.டி?- கேபிள் சங்கர்

“என் தலைவன் படம் முத நாளே இருநூறு கோடி, உன் ஆளு படம் ஊத்திக்குச்சு” என்றெல்லாம் யாராலும் இனி சண்டை போட முடியாதபடி ஒரு காலம் வரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? அப்படியான காலம் வந்துவிட்டது. எல்லா சினிமாவும் இனி உள்ளங்கையிலோ, அல்லது வீட்டுத் திரையிலோ என்றாகிவிட்டது. சினிமா ரசிகர்கள் அத்தனை பேர் வாயிலும் புழங்கும் வார்த்தை ஓ.டி.டி. அப்படின்னா? யூட்யூபா? என்று கேட்கிறவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்று மக்களின பொழுதுபோக்கிற்கு இருக்கும் ஒரே ஆதரமாய் மாறிப் போனது அமேசான், சோனி, நெட்ப்ளிக்ஸ், போன்ற ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள்தான். கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஓ.டி.டி.ப்ளாட்பார்ம்கள் இயங்கிக்  கொண்டிருக்க, இன்னும் பல புதிய ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் களம் இறங்கத் தயாராக உள்ளன.

ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வளர்ச்சியை கொரானாவுக்கு முன் கொரானாவுக்குப் பின் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன் திரையரங்குகளில் ரிலீஸான படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தவர்கள் ஒரிஜினல் மூவீஸ் எனும் கேட்டகிரியில் ஒரு சில தமிழ்ப் படங்களை நேரிடையாய் தங்களது ப்ளாட்பார்ம்களில் வெளியிட்டிருந்தாலும், மெயின்ஸ்ட்ரீம் நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தது இந்த கொரானா காலத்தில்தான். ஆழமான நிதி நிலை ஆதாரம் உள்ள நெட்ப்ளிக்ஸ், அமேசான், ஜீ5 போன்ற ப்ளாட்பார்ம்கள் மட்டுமே இப்போது இந்த ஆட்டத்தில் உள்ளது என்றாலும், மூடியிருக்கும் திரையரங்குகள் என்றைக்கு திறக்கும் என்று தெரியாத நேரத்தில் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு  இது ஓர் வரப்பிரசாதம். தியேட்டர்கள் இருந்த காலத்திலேயே வலியவனுக்கு மட்டுமே திறந்தன இந்த அரங்குகள். ஒரே நேரத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் படங்கள் வெளியாவது என்பதும், அதுவும் படத்திற்கான முதலீட்டில் சின்ன லாபத்தோடு எனும் போது மீடியம் பட்ஜெட் படங்களுக்கு அத்தனை சுலபமாய் இந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அப்படி நேரிடையாய் ரிலீஸ் ஆன படங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றதா? என்று கேட்டீர்களானால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த கொரானா சமயத்தில் ஜீ5யில் நவாசூதீன் சித்திக், அனுராக் காஷ்யப் நடித்த கும்கேது படம், ஒரு தெலுங்குப் படம், யாதுமாகி நின்றாய் என்கிற தமிழ் படம் ரிலீஸானது. இந்த மூன்று படங்களைப் பொறுத்தவரை விமர்சன ரீதியாய் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. அதேபோல அமேசான் ரிலீஸ் செய்த அமிதாப், ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான குலாபோ சித்தாபோ, தமிழில் வெளியான பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்களும் விமர்சன ரீதியாய் பெரும் தோல்வியே.  அப்படியானால் இத்தனை விலை கொடுத்து வாங்கிய படங்களின் தரம் குறித்த கேள்வி எழுந்த நிலையில், “நல்லவேளை இதெல்லாம் தியேட்டர்ல போய் பார்க்கலை?” என்று குடும்பஸ்தர்களும் சினிமா ரசிகர்களும் சந்தோஷப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

எப்படி அமேசான் இந்த முதலீட்டை எடுக்கும்? இப்படங்களின் தரத்தினால் இனி அமேசான் போன்ற தளங்கள் படங்கள் வாங்குவதை நிறுத்திவிடுமா? இல்லை, இனி அவர்கள் வாங்கும் படங்களின் தரத்தை சோதித்து வாங்குவார்களா? அவர்களுக்கு லாபமா? நஷ்டமா? விற்றவர்கள் மொக்கைப் படத்தை விற்று விட்டார்கள் என்று விமர்சனங்களும், விவாதங்களும், இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் சொல்லப் போனால் இம்மாதிரியான ஓ.டி.டி தளங்களுக்கு படத்தின் தரத்தை விட அதிகப்படியான பார்வையாளர்களை தங்கள் வசம் பெறுவதற்கு இந்தப் படங்கள் உதவும் என்கிற நம்பிக்கையில்தான் அத்தனை பெரிய முதலீட்டை அவர்கள் செய்கிறார்கள். அமேசான் தளம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ‘ப்ரீத்’ எனும் மாதவன் நடிக்கும் இந்திய வெப்சீரீஸை தயாரித்தது. மாதவனுக்கு மட்டுமே நான்கு கோடி சம்பளம். மொத்த வெப் சீரீஸின் பட்ஜெட் சுமார் எட்டு கோடிக்கு மேல் என்றார்கள். ஆனால் அந்த வெப் சீரீஸை இந்திய அளவில் சுமார் இருபது கோடிக்கும் மேல் செலவு செய்து மார்கெட் செய்தது அமேசான். அதன் மூலமாய் இந்தியாவெங்கும் ஒரு லட்சதிற்கும் மேலான வாடிக்கையாளர்களைப் பெற்றதாம் அமேசான். யோசித்துப் பாருங்கள். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் கொண்டு வந்தது இருபத்தி எட்டு கோடி ரூபாய் செலவில். உள்ளே வந்தவர்களை தக்க வைக்க, தொடர்ந்து அடுத்தடுத்து புதிய தொடர்கள், படங்கள், இந்திய அளவில் உள்ள அத்துனை மொழிகளிலும் உள்ள கண்டெண்டுகளை தங்கள் வசம் ஒளிபரப்ப, மெல்ல இந்தியாவெங்கும் அமேசான் வளர ஆரம்பித்தது.  இன்றைக்கு சுமார் 17 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. நெட்ப்ளிக்ஸ் சுமார் 13 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தாலும் இந்திய அளவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் எது என்று கேட்டீர்களானால் ஆச்சர்யப்படுவீர்கள். அது ஜியோவும், ஹாட்ஸ்டாரும்தான். கிட்டத்தட்ட 35 சதவிகித மார்கெட் ஷேரை இவர்கள் இருவரும் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜியோ டிஜிட்டல் மார்க்கெட்டில் விலகியிருந்தாலும் இவர்களது ப்ளாட்பார்ம் மூலமாய் நிறைய ஓ.டி.டி. நிறுவனங்கள் இணைக்கப்படுகிறது. அதே போல் ஹாட்ஸ்டார் இன்று டிஸ்னியுடன் சேர்ந்ததால் உலகளாவில் டிஸ்னி ரசிகர்கள் இவர்கள் வசம் இன்னும் சேர, அமேசான், நெட்ப்ளிக்ஸுக்கு கொஞ்சம் ஆட்டம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜியோவுக்கோ, ஹாட்ஸ்டாருக்கோ, ஜீ5க்கோ இருக்கிற டிவி சேனல் ஒளிபரப்பு வசதி, அமேசானுக்கும், நெட்ப்ளிக்ஸுக்கும் கிடையாது. அதனால்தான் அமேசானும், நெட்ப்ளிக்ஸும் அதிரடியாய் தங்கள் இருப்பை நிலைநிறுத்த மெயின்ஸ்ட்ரீம் படங்களோடு மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புகிறது. இம்மாதிரியான நேரிடைப் படங்களை வாங்கி வெளியிடுவதன் மூலம் அப்படங்களைப் பார்க்க வேண்டுமென்றால் அமேசானையோ, நெட்ப்ளிக்ஸையோ தவிர வேறெங்கும் பார்க்க முடியாது என்ற நிலை உண்டாவதால் அவற்றின் தராதரத்தையும் தாண்டி இப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்.

நூறு தியேட்டர்களில், நானூறு இருக்கைகள் கொண்ட அரங்குகளில், நான்கு காட்சிகள் என்ற கணக்கில் ஒரு படம் வெளியிடப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 40 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரு காட்சிக்கு. அதுவும் அரங்கு நிறைந்த காட்சிகள் எனும் பட்சத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் பேர் படம் பார்ப்பார்கள். படம் பார்த்து மக்களுக்குப் பிடித்துவிட்டது, ‘ஹிட்’ எனும் பட்சத்தில் வாரத்திற்கு பத்து லட்சம் பேர் இரண்டு வாரங்களுக்கு 15 லட்சம் பேர் வரை பார்க்கக்கூடும். ஆனால் அதே படம் அமேசான் போன்ற ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் பட்சத்தில் வெளியான அன்றே மக்களின் ஆர்வம் காரணமாய் குறைந்த பட்சம் உலக அளவில் பத்து லட்சம் பாரவையாளர்களுக்கு மேலேயே பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் இது முதல் நாள் கணக்கு மட்டுமே. அப்படத்தின் விமர்சனத்தைப் பொறுத்து, தினம் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் படத்தின் விமர்சனங்களையும் மீறி ஒருமுறை பார்த்து விடலாமே என்று அவர்களின் விருப்ப நேரத்தில் விரும்பிய கால நேர இடைவெளியோடு குடும்பத்தோடோ, அல்லது அவரவர் விருப்ப நேரத்திலோ பார்ப்பார்கள். இதுதான் ஓ.டி.டியின் மிகப் பெரிய சாதகம். திரையரங்குகளில் வெளியாகி நேர் மறை விமர்சனங்களைப் பெறும்போது எல்லா பார்வையாளர்களும் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க விரும்புவதில்லை. காரணம், அதற்கான செலவு. குறைந்த பட்சம் இருநூற்றி ஐம்பது ரூபாய் இல்லாமல் ஒரு படம் பார்க்க முடியாது என்கிற நிலையில் பின்னாளில் டிவியிலோ, வேறு ஏதாவது ஓ.டி.டி. ப்ளாட்பார்மிலோ, பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பார்வையாளன் அப்படத்தைத் தவிர்த்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தியேட்டரில் பார்க்க வேண்டும்னெறால் அவர்கள் போடும் காட்சி நேரத்திற்கு ஏற்ப அவன் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இத்தனை இடர்பாடுகள் ஓ.டி.டியில் படம் பார்பதற்கு கிடையாது. யார் விமர்சனத்தையும் பற்றி கவலைப்படாமல் அவன் தன் விருப்பத்திற்கு படம் பார்க்க முடியும். பார்பார்கள்.

எனவே ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களுக்கு எல்லாவிதமான படங்களுக்கும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கண்டெண்டின் வெற்றி தோல்வி என்பதை விட, எத்தனை விதமான பார்வையாளர்களுக்கான கண்டெண்ட் அவர்களிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அப்படியானால் அதன் தரம் முக்கியமில்லையா? என்று கேட்பீர்களானால் நிச்சயம் அதுவும் முக்கியம்தான். தொடர்ந்து விமர்சன ரீதியாய் தோல்விப் படங்களை வெளியிடும் ப்ளாட்பார்ம்கள் மீது மக்கள் விருப்பம் குறையக் கூடும். ஆனால் இப்படங்களின் விமர்சனங்களை மீறி அதிகமான பார்வையாளர்களை சென்றடைய பின்னாளில் இப்படங்களின் மீதான மிதமான விமர்சனப் போக்கு இவர்களுக்கு சாதகமாகவும் அமையும். எப்படி ஒரு படம் தயாரிக்கும் போது அதன் வெற்றி தோல்வி தெரியாதோ, அது போலத்தான் நேரடியாய் ஓ.டி.டியில் வெளியாகும் படங்களின் வெற்றி தோல்வியும். முன்னதில் அதன் வசூல் வியாபாரம் போன்றவை அளவுகோலாய் இருக்கும். பின்னதில் எத்தனை பேர் அப்படத்தை இத்தகைய விமர்சனங்களையும் மீறி பார்த்திருக்கிறார்கள்? எத்தனை புதிய சந்தாதாரர்கள் இப்படத்தின் அறிவிப்பின் நேரம் தங்களுடன் இணைந்திருக்கிறார்கள் என்பதில்தான் அந்தந்த ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வெற்றி தோல்வி அமைந்திருக்கிறது. அதற்கேற்பத்தான் எதிர்காலத்தில் அவர்களின் படங்களின் கொள்முதல் விலை இருக்கும்.

எனவே ரசிகர்கள் அத்தனை வசூல், இத்தனை  வசூல், அவர்களுக்கு லாபமா? நஷ்டமா? என்கிற கவலையெல்லாம் இல்லாமல், உங்களை இன்ப்ளூயன்ஸ் செய்யும் விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு,  உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதைப் பார்த்து மகிழ ஒர் வாய்ப்பு ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களில் வாய்த்திருக்கிறது. கொண்டாடி மகிழுங்கள். ரசனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close