இணைய இதழ்இணைய இதழ் 52கட்டுரைகள்

ஒரு கோப்பை காதல் ஒரு கோப்பை கவலை – அ.ஜெ. அமலா

கட்டுரை | வாசகசாலை

வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் மூலமாக என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நினைவுகள் எனக்கு கிடைத்தன. வேள்பாரி வாசகர் மன்ற முகநூல் பக்கத்தின் மூலம் நிறைய உறவுகள், நட்புகள், தோழிகள் என அத்தனை பேரும் வரமாக கிடைத்தார்கள் எனக்கு.

அந்த மன்றத்தில் “தேக்கன்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற திரு. திருப்பதி வாசகன் அவர்கள் வேள்பாரி வாசகர் மன்றத்திற்கு தேக்கனாக மட்டுமல்ல, எங்கள் அனைவரின் மனதையும் வென்றவராக, அனைத்து வயதினரையும் சமமாக பாவித்து அன்பு காட்டுவதில் பாரியை போலவே எங்கள் அனைவராலும் பார்க்கப்படுகின்றவர். அவர் முகநூலில் அவ்வப்போது கவிதைகளைப் பதிவிடுவார். நாங்கள் படித்து, இரசித்து, மகிழ்ந்து பின்னூட்டமிடுவோம். அதற்கும் அவர் அத்தனை அழகாய் விடையளிப்பார்.

அப்படி உருவான கவிதைகள் காலத்திற்கும் பெட்டகமாக எங்களின் கைகளில் வேண்டும்; புத்தகமாக்குங்கள் என்று அன்புக் கோரிக்கை வைத்தோம். எங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள முதல் கவிதை தொகுப்பு தான் “ ஒரு கோப்பை காதல் ஒரு கோப்பை கவலை” 

நூலின் அட்டைப் படமே உள்ளடக்கத்தை சொல்கிற மாதிரி அத்தனை பொருத்தமாய் வடிவமைத்துள்ளார் ஓவியர் ஆலங்குடி சுப்பிரமணியம். முதலில் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

‘கனவிலேறி நனவிலிறங்கியவனின் பயணக்குறிப்புகள்’ என அர்த்தபூர்வமான தலைப்பில் மிக அழகான அதே சமயம் மிக ஆழமான அணிந்துரை எழுதியிருக்கிறார் கவிஞர் ரத்திகா அவர்கள்.

இக்கவிதை நூலில் வருகிற காதல் அனைத்தையும் தன் ஆதினியான எங்கள் அண்ணி மகாலெட்சுமிக்கு சமர்ப்பிக்கின்றார் பாரியான எங்கள் அண்ணன் தேக்கன் அவர்கள். 

வெற்றுக் கவலையாக அல்லாமல் , இச் சமூக அவலங்களைக் குறித்து உண்மையிலேயே வருந்துபவராகவும், அதனுடன் நம் வாழ்க்கை, நம் இன்றைய அரசியல், ஆன்மிகம், இயற்கை, உறவுகள், பெண் மொழியிலேயே பெண்களின் துயர் என அனைத்தையும் வெளிப்படுத்தி தனது அத்தனை கவிதைகளுக்கும் நியாயம் செய்திருக்கிறார் கவிஞர்.

இத்தொகுப்பில் மொத்தம் 102 கவிதைகள் உள்ளன. அதை 11 தலைப்புகளாக நான் பிரித்ததில்

காதலுக்காக – 20 கவிதைகளும், சமூக கவலைகளுக்காக – 12 கவிதைகளும், நம் வாழ்க்கை குறித்து – 30 கவிதைகளும், பெண் மொழியில் – 14 கவிதைகளும், அரசியல் குறித்து – 12 கவிதைகளும், ஆன்மிகம் குறித்து – 4 கவிதைகளும், கவிதைகள் குறித்து – 4 கவிதைகளும், இயற்கைக்காக – 2 கவிதைகளும், 

இரு இளவரசர்களுக்காக – 2 கவிதைகளும், மகளுக்காக – 1 கவிதையும், தனது அப்பாவிற்காக – 1 கவிதையும் சமர்ப்பித்துள்ளார் கவிஞர்.

‘கவிதைப் பெண்’ணிலிருந்து தொடங்கும் கவிதைகள் தனித்தனி பூக்களாக மலர்ந்துள்ளன இத்தொகுப்பு முழுவதும்.

உனக்காக எதைச் செய்தாலும் 
எல்லாவற்றையும் வாங்கினாலும்
என் திறன் மொத்தத்தையுமே 
உன் காலடியில் வைத்தாலும்
வாமனன் காலடி பூமியாக
சிறுத்தே கிடக்கிறது…….

அடடா… என்ன காதல் இவ்வரிகளில். காதலை விட பெரியது ஒன்றுமில்லை என்பதை இதைவிட அழகாய்ச் சொல்ல முடியுமா?

நேற்று காலையில்
முற்றத்தில் கரைந்த
ஒற்றைக்காகத்திற்கு வீசியெறிந்த வடையை போல
எனக்கும் ஒரு புன்னகை எறிந்துவிடு
பிழைத்துப் போகிறேன்……!!

 – ஊடலையும் இத்தனை காதலாய் சொல்லியது எங்கள் கவிஞர் தான்.

‘கடந்து போகும் ஒவ்வொரு ராக்கெட் நொடிகளிலும் கூட மத்தாப்பு கொளுத்த தெரிந்தவனுக்கு பௌர்ணமி நிலா வந்து குடை பிடிக்கிறது.’

‘கணந்தோறும் வாழ்க்கையை இரசித்து வாழ்பவர்களுக்கு வாழ்தல் என்றும் கொண்டாட்டம்தான்.’

கக்கத்தில் உறங்கும்
சிறு நிலவைப் பார்த்து பெரிய நிலவு
நமுட்டுச் சிரிப்போடு கடந்து போகின்றது.

– என்று மருமகன்களைப் பற்றி நம் கவிஞர் எழுதுவது அமர்க்களம்.

அ.ஜெ. அமலா

முன்னாள் காதலியைப் பார்த்து உருகும் காதலனாய்

நம் காதலை
ஆதி தினத்திலேயே உறைய வைத்து விட்டு 
நம்மை உருமாற்றி வைத்திருக்கிறது
இந்தப் பொல்லாக் காலம்.

– என்று நம் மனதில் உறைந்த அந்த பிம்பம் நேரில் உருமாறி நிற்கும் போது வருகிற வலிமிகு வரிகளை வடித்துள்ளார்.

 முதுமை எல்லோருக்குமே வரும். ஆனால், இளமை வேகத்தில் ‘சட் சட்’ என்று பேசி விடுகிறோம் நாம் அவர்களின் வலியை உணராமல். அதை,

காட்டிலுதிர்பவைகளையும் 
முதிர் மழலை நிறை வீட்டில்
நிரம்பும் சொற்களையும் கட்டுப்படுத்தவோ
அள்ளியெறியவோ
மெனக்கெடாதீர்கள்…..
உதிர்வன
குப்பையல்ல
உரமென உணர்க….!!

– இவ்வரிகள் கடத்தும் உணர்வு மிக மென்மையாக நம் தோள்தட்டி நமக்கு அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது. அதிலும் “முதிர் மழலை நிறை” என்கிற வார்த்தை பிரயோகம் மிகச்சிறப்பு.

நன்றி கூறுதல் என்பது நம் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்தது. அதை நாம் எப்படி சொல்ல வேண்டும் எனக் கூறுவதோடு அப்படி கூறினால் அந்த நன்றி என்னவாக மாறும் என்பதை மிக நுட்பமாக கூறுகிறார்

“புத்தனின் பல்” என்கிற கவிதையில். நீங்களே படித்து இரசியுங்கள் அவ் வரிகளின் அர்த்தத்தை.

‘பெருவலஞ்சுழி’ என்கிற அரசியல் கவிதையில், “குப்பைக்கு வந்த வாழ்வென” சுளீர் சாட்டையடி மூலம் இன்றைய அரசியல் நிதர்சனத்தை துல்லியமாக விளக்குகிறார்.

‘உண்ண அறியாதவர்கள்’ கவிதையில், இந்த சமூகம் மீதான கவலை வெளிப்படுகிறது. தனக்குத் தெரியாத விஷயம் மற்றவர்களுக்கும் தெரியக் கூடாது ; அப்படியே தெரிந்தாலும் அதை வெளியில் காட்டவே கூடாது என்று நம்மை நினைக்க வைக்கிற அளவிற்கு இந்த சமூகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதை,

நீ மட்டும் எப்படி சிரிக்கலாமென
அழுகிய முட்டையை அவன் மீதெறிகிறார்கள் அவன் போல்
உண்ண அறியாதவர்கள் …!! 

– இவ்வரிகள் மூலம் விளக்குகிறார்.

‘உலரும் குளம்’ , ‘ஆணாதிக்க அம்பு’, ‘பூமாலை தொடுப்பவள்’ , ‘ஆண் புருவம்’ , ‘உடையும் சொற்கள்’, ‘திசையற்றவள்’ இக்கவிதைகளை எல்லாம் படிக்கின்ற போது கவிஞருக்கு “பெண்ணின் மொழி” எப்படி கை வந்தது என்கிற ஐயம் எழாமல் இல்லை. அந்த அளவிற்கு அடர் மௌனத்தையும், ஆழ்ந்த பெருமூச்சையும் நமக்குள் ஏற்படுத்தும் அதி காத்திரமான வரிகள் அவை.

“மதயானைக்கூட்டம்” கவிதையை முகநூலில் பகிர்ந்த பொழுதே அத்தனை சிறப்பான பின்னூட்டங்கள் வந்திருந்தது. மதத்தை வைத்து இன்று நடக்கும் அரசியல் அவலங்களுக்கு பகுத்தறிவுப் பாகன்கள் தான் தேவை என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உரைக்கும் வரிகள்.

 நடக்காத ஒன்றை நடத்திக் காட்டிட துடிக்கும் எதேச்சதிகார அரசின் ஆணவத்திற்கு மணி அடிக்கிறது ‘ஒற்றை அட்டை ஒற்றை நாடு’ கவிதை.

கூழைக்கும்பிடு போட்டு ஊரை ஏய்த்துப் பிழைக்கும் அற்பமானவர்களுக்கு ‘நரிப் புலி’ கவிதை சமர்ப்பணம்.

நம் வாழ்க்கையில் நாம் பேசும் சொற்கள் எத்தனை முக்கியமானது என ‘சொல்வாள்’ கொண்டு நமக்குள் இறக்குகிறார் கூமுட்டை கற்களை.

நம் நாட்டின் தலைநகரில் மிக அமைதியான முறையில் போராடிய இந்த தேசத்தின் பாவப்பட்ட மனிதர்களான விவசாயிகளின் போராட்டம் பற்றி ‘தேசபக்தி’ கவிதையில் கூறுகிறார். அவ்வரிகள் அனைத்தும் அக்மார்க் உண்மை. 

எளிய மனிதர்களின் துயர் கூறும் ‘சிறுபான்மை எலிகள்’ கவிதை கண்ணீர் விட வைக்கின்றது.

‘அசலான பெருந்துயரக் கதை’ – இது வெறும் கவிதை அல்ல. நம் சமூகம் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் சந்தித்து வருகிற அவலம். இதோ “ஜெய்பீம்” என்கிற உண்மைப்படம், சாதியெல்லாம் யார் சார் பார்க்கிறா என்று சொல்கிற அந்த பகட்டான வார்த்தைகளின் மீது சாணியடித்துச் சொல்கிறது “சாதிகள் இருக்குதடி பாப்பா” என்று. கர்ணன், காலா, அசுரன் என்று திரைப் பாத்திரங்களாகவே இருந்தாலும் நமக்குள் ஏற்படுத்தும் அந்த தாக்கம் இன்றும் பெரும் துயரக் கதைதான் என வேதனையுடன் தவிக்க வைக்கிறது. 

அத்துயரின் நீட்சியாகத்தான் ‘புழுபுழுத்த கேள்வி’ கவிதையும்.

‘கழுதைப்புலிகளின் கும்பல் மேளா’ கவிதை கொரோனா நோய்த்தொற்றை நம் அரசு எத்தனை அலட்சியமாகக் கையாண்டது என்பதையும், அதனால் நிகழ்ந்த கோர மரணங்களையும் நம் கண்முன் நிறுத்துகிறது.

‘வாதாம் பழங்கள்’ , ‘சத்திய சோதனை’ கவிதைகள் இரண்டும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கவிதைகள்.

‘சஞ்சீவினி’ கவிதை….. கவிதையா அது ? அது ஒரு வாழ்க்கை. இதையும் அவர் முகநூலில் பதிவிட்ட போதே அத்தனை அனுபவங்கள் பின்னூட்டங்களாய்…. எனக்கும் என் விடுதி வாழ்க்கை நினைவிற்கு வந்தது.

இப்படியாக இத் தொகுப்பு பற்றி நான் சொன்னதெல்லாம் ஒரு சோற்றுப் பருக்கை தான். ஒரு பருக்கை பசி தீர்க்காதில்லையா ? அப்படியானால் முழுவதையும் இரசித்து ருசித்து படித்தால் தான் “ருசி பெயர்ப்பாளராக” முடியும் என்பதையும் தன் கவிதை வழி காட்சிப்படுத்துகிறார் கவிஞர். 

இப்படியாக நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட அத்தனை உணர்வுகளையும் இத்தனை நுட்பமாக வார்த்தைகளால் படைக்க முடியுமா என்று சாதாரணன் சிந்திக்கும் போது… அந்த ஐயங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி பளீர், சுளீர், வன், மென், காதல், கவலை என அனைத்துமாக்கி வார்த்தைகளில் செதுக்கியிருக்கும் இந்த, “ஒரு கோப்பை காதல் ஒரு கோப்பைகவலை” தொகுப்பினை முழுவதுமாய் பருகுங்கள்; அதன் சுவையை உணருங்கள். நிச்சயம் அதன் சுவை உங்கள் அடிநாக்கு தாண்டியும் நீளும். 

வாழ்த்துகள். வாழ்த்துகள். மேன்மேலும் தொடரட்டும் உங்கள் காதல்; தீரட்டும் கவலைகள்.

******

நூலின் பெயர்: ஒரு கோப்பை காதல் ஒரு கோப்பை கவலை
நூலின் வகை : கவிதைத் தொகுப்பு
நூலின் ஆசிரியர்: தேக்கன் (எ) திருப்பதி வாசகன்
மொத்த பக்கங்கள்: 128
நூலின் விலை : ரூ. 130/-
வெளியீடு : நம் பதிப்பகம், சென்னை.
பதிப்பு : முதற் பதிப்பு அக்டோபர் 2021

******

-amalajesu2020@gmail.com

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close