சிறுகதைகள்
Trending

ஒரு இனிய நாள் – Ada Cambridge

தமிழில் - கீதா மதிவாணன்

தாமஸ் போஹன் பிரபுவுக்கு இல்லற வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. சொல்லப் போனால் அவனுக்குப் பெண்களிடத்தில் அலுப்பும் சலிப்பும் தட்டியிருந்தது. நாகரிகத்தின் சுவடுபடியாதவொரு நாட்டுக்குப் பயணித்து அங்கே சில வருடங்களைக் கழிப்பதன் மூலம் ஆடம்பர வாழ்க்கையினின்று விடுபட்டு, சற்றே ஆசுவாசங்கொள்ள எண்ணினான். அதனாலேயே அவன் ஆஸ்திரேலியாவுக்கு வந்தான். போதாக்குறைக்கு, தாமஸ் பிரபு மீது வெகுபிரியமாயிருந்த அவனது இரண்டாவது மனைவி இறந்துபோனதன் பிரிவுத்துயரும் அவனை வாட்டியது.

மேலே சொன்னவற்றைக் கொண்டு அவனை ஒரு பரத்தன் என்றோ பாதகன் என்றோ எண்ணிவிடலாகாது. நல்லியல்புகளுடைய, மிகவும் வசீகரமான இளைஞன் அவன். நாற்பதின் வலப்பக்கத்திலிருக்கும் வயதினன். செல்வச்செழிப்புள்ள சீமான் வீட்டுப் பிள்ளையான, பிரபு வர்க்கத்தைச் சார்ந்த அவனுக்கு செய்வதற்கு வேலை எதுவுமில்லை. என்ன செய்வான் அவன், பாவம்!

ஆஸ்திரேலியா அவன் எதிர்பார்த்தபடி இல்லை. அங்கேயும் அவன் கோட்டும் சூட்டும் அணிந்து ஒரு கோமகனைப் போல் நகரத்து சூதாட்டமையங்களிலும் மதுவிடுதிகளிலும் நடமாடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தான்.

ஒருவழியாக கிராமப்புறத்துக்கு தப்பி வந்த பின்பு தான் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. முரட்டுக் காற்சராயும் தொளதொளா சட்டையும்,  அகல விளிம்புத் தொப்பியும் அணிந்து கொண்டு, பாதணியில் குத்துமுட்சக்கரங்களைப் பொருத்திய படி குதிரையில் அமர்ந்து கங்காரு வேட்டையிலும், கால்நடை மேய்ச்சலிலும் ஒரு காடுறை மனிதனைப் போல் பொழுதைக் கழித்தபோது தான் இதுவரை அனுபவித்திராத வகையில் பரிபூரணமாக தான் இருப்பதாய் உணர்ந்தான்.

ஒரு மாலைப் பொழுதில் காடுறை விடுதியொன்றில், சில விவசாயிகளுடன் உற்சாகமாய் மதுவருந்திப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான் தாமஸ் பிரபு. பிரபு பட்டத்தைத் துறந்து அங்கிருந்தவர்களிடம் தன் பெயர் போஹன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவர்களது பேச்சு விவசாய உபகரணங்களைப் பற்றித் திரும்பியது. ஆஸ்திரேலிய விவசாயியான கெம்ப், தன்னிடமிருக்கும் ஐந்து சால் கலப்பையையும் இன்னபிற நவீன உபகரணங்களையும் தாமஸ் பிரபுவிடம் காட்டப் பேராவல் கொண்டிருந்தார்.

“என் வீட்டுக்கு வாங்க மிஸ்டர் போன், அவை வேலை செய்வதை  நீங்களே கண்கூடாகப் பார்ப்பீங்க. சம்பிரதாயமான அழைப்பில்லை தான். இருந்தாலும் உங்களை உளப்பூர்வமாய் வரவேற்கிறேன்” அந்தப் பெரியவர் உற்சாகத்துடன் அழைப்பு விடுத்தார்.

“ஆனால் உங்கள் குடும்பத்தார் என்ன சொல்வாங்களோ…?” அவன் தயங்கியபடி கேட்டான், “இந்த அகால இரவில் ஒரு அந்நியனை அதுவும் எவ்வித முன்னறிவிப்புமின்றி வீட்டுக்கு அழைத்துப் போனால் அவங்களுக்கு அசௌகரியமாக இருக்காதா?”

“ஒருபோதும் இருக்காது, மிஸ்டர் போன். எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் தங்குவதற்கு ஏதுவாக ஒரு படுக்கை எப்போதும் தயாராக இருக்கும். மேலும் என் மனைவி உங்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவாள்.”

“அப்படியானால்… நான் உங்கள் அழைப்பை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்.” தாமஸ் பிரபு சொன்னான்.

கலகலத்துப் போன வண்டியொன்றில் இரண்டு முரட்டுக் குதிரைகள் பூட்டப்பட்டு, விளக்கு வெளிச்சமோ, நிலவொளியோ இல்லாத காட்டுப்பாதையில் பத்துமைல் தூரப் பயணத்திற்கு ஆயத்தப்படுத்தப்பட்டன. பராமரிக்கப்படாத பரிதாபமான அந்த இரு விலங்குகளும் பதறிப் பாய்ந்து விரையாமல், அதே சமயம் தளர்வாய் சோம்பி நடைபோடாமல் மிதமான வேகத்தில் சீரான பாய்ச்சலுடன் ஒரு மணி நேரத்தைப் பயணித்து, கிளம்பியது முதல் இறுதி வரை அதே புத்துணர்வோடு வந்து சேர்ந்தன.

மர்மமான இருள்வெளியும், ஏகாந்தமும் லண்டன் வாசிக்குப் பெரிதும் பரவசமூட்டியிருந்தன. ஆனால், கெம்ப்பின் வீட்டைப் பார்த்த மாத்திரத்தில் அவனது உற்சாகம் வடியத் தொடங்கியது. ஒரு பழைய எளிய கூரைக் கொட்டகையை எதிர்பார்த்து வந்தவனின் முன்னால் ஒரு பெரிய உயரமான கட்டடமொன்று நள்ளிரவில் நட்சத்திர ஒளியில் காணக் கிடைத்தது.

“என் தந்தையால் கட்டப்பட்ட வீடு இது. இந்த வட்டாரத்திலேயே முதன் முதலாய்க் கட்டப்பட்ட பெரிய வீடு இது தான். நாங்கள் ஒருகாலத்தில் செல்வச் செழிப்புடன் இருந்தோம். ஆனால், வாழ்க்கையில்… ஏற்ற இறக்கம் சகஜம் தானே.. பழைய வாழ்க்கை இப்போது இல்லை, ஆனாலும் தலைக்கு மேலே ஒரு கூரை இருக்கிறது. அதை ஒரு நண்பனுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

வீட்டார் உறக்கத்திலிருந்தனர். குடிமயக்கத்திலிருந்தவனை அவன் தங்கவிருக்கும் மேல்தள அறைக்குப் பத்திரமாய் அழைத்துப் போனார் கெம்ப். நேர்த்தியான படுக்கை விரிப்பும், மெத்தென்ற தலையணைகளும் பளபளக்கும் ரோஸ்வுட்டினாலான மரச்சாமான்களும் அறையில் நிலவிய லாவண்டர் மணமும் அந்த இல்லத்தின் தலைவியைப் பற்றிய சான்றுகளைப் பகர்ந்து கொண்டிருந்தன. மறுநாள் அவளைச் சந்திக்கப் போகும் தருணத்தை எண்ணி அவனுள் சங்கோஜத்தை உண்டாக்கின. இதுவரையில் அவன் படுத்துறங்கிய எல்லாப் படுக்கைகளையும் விட மிகவும் மென்மையானதாக இருந்தது அப்படுக்கை. சன்னல் வழி வந்த மண்ணின் மணம், அவனைப் பரவசத்தில் ஆழ்த்தியது. ஒரு குழந்தையைப் போல ஆழ்ந்த நித்திரைக்குப் போனான் அவன்.

அதற்குள் விடிந்துவிட்டதா? வெளியில் ஏதேதோ சத்தம் கேட்டது. சன்னல்களுள் ஒன்றில் தலையை நீட்டி வெளியே பார்த்தான்.

என்னவொரு அழகான அப்பழுக்கற்ற உலகம் இது! அன்று தான் புதிதாய்ப் பிறந்தவன் போல் அவன் தன்னை உணர்ந்தான். படிகத்தைப் போன்று பரிசுத்தமான காற்றும், மின்னும் பனித்துளிகளை ஏந்திய செடிகளும் மரங்களும், பூக்களும் அவ்வில்லத்தை அழகுறப் போர்த்தியிருந்தன. இன்னமும் விடிகாலை நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது. இரவில் இரவுப்பறவைகளின் அலறல்களையும் அதிகாலையில் தவளைகளின் கத்தல்களையும் கேட்டான். இப்பொழுதோ அப்பிரதேசமெங்கும் மேக்பை பறவைகளின் இனிய கானங்களும், உற்சாகமான சேவற்கூவல்களும், கூக்கபராவின் கெக்கலிப்புகளுமாக நிறைந்திருந்தது. என்னவொரு மனமயக்கும் ஓசைகள்!

“ஓ… இதுதான்… இதுதான் உண்மையான புதர்க்காடு.. இதுகாறும் நான் ஏராளமாய்க் கேள்விப்பட்டிருந்த ஆஸ்திரேலியப் புதர்க்காட்டுப் பிரதேசத்துக்கு ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்டேன்.” அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

வெளிவராந்தாவின் இரவாணத்தில் படர்ந்திருந்த திராட்சைக் கொடிகளில் சிட்டுக்குருவிகள் தத்தி விளையாடிக் கொண்டிருந்தன. சரளைக்கல் பாதையில் தாவித் தாவிச்சென்று கொண்டிருந்தது ஒரு பெருமுயல்! தோட்டத்தின் புதர்வேலிக்கப்பால் தெரியும் புல்வெளியில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. புதிதாய் உழுத நிலத்தில் காக்கட்டூப் பறவைகள் கூட்டம் கூட்டமாய் கிறீச்சிட்டபடி வந்தமர்ந்தன. கரும்பறவைக் கூட்டமொன்று திராட்சைத் தோட்டத்தில் புகுந்திருந்தது. அவற்றின் உற்சாக மிழற்றல்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன.

வானத்துப் பிறைநிலவைக் கலைத்தபடி, தூரத்து மலைகளின் நீலத்தை மங்கச் செய்தபடி… அதிகாலையின் இளஞ்சிவப்பொளி எங்கும் மெல்லப் பரவி ஒளிரத் தொடங்கியது. போர்க்களத்துப் பாசறைக் கூடாரங்களைப் போன்று, பூந்தோட்டத்தின் வலப்புறத்தில் ஒழுங்குமுறையுடன் வரிசையாய் அமைக்கப்பட்டிருந்தன பளீர் வெள்ளை நிறத்தில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள். ஆயிரக்கணக்காயிருந்த அவற்றின் ரீங்காரத்தை அவனால் துல்லியமாய்க் கேட்க முடிந்தது. கூடவே, தேனீ வளர்ப்புப் பெட்டிகளை ஒட்டியிருந்த ஒரு சிறிய அறையினுள் யாரோ புழங்கும் ஒலியும் கேட்டது.

கோரைப்புல் வேயப்பட்ட கூரையும், வாயிற்கதவும் இரண்டு சன்னல்களும் கொண்டிருந்த அந்தக் கொட்டகை,  நிச்சயம் தேன் சேகரிக்கும் அறையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. யாரோ இந்த விடிகாலையிலேயே பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவன் அந்தக் குரலைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே அந்த அறையிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். பெரிய விளிம்புக் குல்லாயுடனும், முகத்தை மூடிய தேனீ வலையுடனும், இறுக்கிக் கட்டிய ஏப்ரானுடனும் அவளைப் பார்க்கையில் ஒரு பொம்மை போல் இருந்தாள். இரண்டு தகரப்பெட்டிகளை இரு கைகளாலும், அவற்றின் மேலே இருந்த கம்பிகளின் உதவியோடு தூக்கியபடி தேன்கூடுகளுக்கு மத்தியில் நடந்து சென்றாள். கெம்ப் பேச்சுவாக்கில் லெட்டி என்று தனக்கொரு மகள் இருப்பதை சொல்லியிருந்தார். நிச்சயமாக இவள் அவளாகத் தான் இருக்க வேண்டும்..

அவள் தேனீப் பெட்டியின் மேற்பலகையைத் தூக்கியதும் ஆக்ரோஷத்துடன் தேனீக்கள் அவளது முகத்திரையின் மேல் முற்றுகையிட்டன. அக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தாமஸ் பிரபுவை மயிர்சிலிர்க்கச் செய்தது. அவளோ சூரிய ஒளியில் மிதக்கும் தூசுகளைப் போல் அவற்றைப் புறங்கையால் ஒதுக்கித்  தள்ளினாள். எதையோ ஊதி புகை உண்டாக்கி பெட்டியின் துளை வழியே அனுப்பினாள். சற்று நேரம் என்னென்னவோ செய்தாள். பிறகு அந்தத் தகரப்பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போனாள். சுமையைக் குறைக்க ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றிக் கொண்டே நடந்தாள். அவளுடைய மென்னுடலை மேலும் வளைத்து, தள்ளாட்ட நடையுடன், மூச்சுவாங்கிக் கொண்டு செல்வதை அவன் பார்த்தான்.

“ஐயோ.. பாவம்!” உள்ளுக்குள் உலுக்கப்பட்டான். சட்டென்று அறைக்குத் திரும்பி, அங்கிருந்த குளியற்தொட்டியில் புகுந்து குளித்துவிட்டு அவசர அவசரமாக உடை மாற்றினான். வீடு நிசப்தமாயிருந்ததன் மூலம், மற்றவர்கள் யாரும் இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை என்று புரிந்தது. மெல்ல அடியெடுத்து படிகளில் இறங்கி கூடத்துக் கதவின் கைப்பிடியை சத்தமில்லாமல் திருகி வெளியேறினான்.

அற்புதமான இலையுதிர்கால காலைப்பொழுது அவனை வரவேற்றது. அவன் வராந்தாவில் நின்று, யூகலிப்டஸ் மரங்களின் தைல வாசத்தையும், பழத்தோட்டம் செல்லும் வழியில் பச்சை மதிலாய் படர்ந்திருந்த செடிகளில் நட்சத்திரங்களெனப் பூத்துக் கிடந்த செம்மஞ்சள் பூக்களின் நறுமணத்தையும் முகர்ந்தான். நறுமணங்களை முகர்ந்தபடியே தேனீ வளர்க்குமிடத்தை நெருங்கினான். முற்றுகையிடும் தேனீக்களை விரட்டும்வண்ணம் தேன் பிழிந்தெடுக்கும் அறையின் கதவைப் படாரென்று அறைந்து சாத்தியபடி, ஒரு தகரப்பெட்டியுடன் கெம்ப்பின் மகள் வெளியே வந்தாள்.

அவள் அவனைப் பார்த்து ஒருகணம் திகைத்து நின்றாள். அவள் அணிந்திருக்கும் முரட்டுத்துணியிலான ஏப்ரானும், நைந்து போன தலைக்குல்லாயும் அவள் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும். சற்றே தயங்கிய அவன், சட்டென்று அதிலிருந்து விடுபட்டான். அவன் மரியாதை நிமித்தம் தொப்பியைத் தூக்கி இறக்கிய நொடிப்பொழுதில் ஒரு தேனீ உள்ளே நுழைந்துவிட்டது.

“காலை வணக்கம்… சனியனே..” அவனால் அதைத் தான் சொல்ல முடிந்தது.

“நீங்க வந்திருப்பதாக சொன்னாங்க, மிஸ்டர் போன்! இரவு நன்றாகத் தூங்கியிருப்பீங்க என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியாவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, இதுவரை நீங்க பார்த்தவரையிலும்?”

சில நிமிடங்கள் சம்பிரதாயப் பேச்சுகளில் கழிந்தன. அவன் தன்னுடைய முன்னறிவிப்பில்லா வருகைக்காக அவளிடம் மன்னிப்புக் கோரினான். அவளோ அந்தக் குடும்பத்தின் சார்பாய் மீண்டும் அவனுக்கு வரவேற்பின் உறுதியளித்தாள். அவன் அவளுடைய பணிகளில் தானும் பங்கு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான். “அந்த கனமான பெட்டியைத் தூக்கவாவது உங்களுக்கு ஒரு ஆள் தேவைப்படும்.. அடச்சே… நான் புதியவன் என்பதை இந்தத் தேனீக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றன.”

“இங்கிருந்து முதலில் போங்க” அவள் சொல்லி விட்டு சிரித்தாள். “உங்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. எனக்கு உதவி தேவையில்லை. இந்த வேலைகளையெல்லாம் செய்து எனக்குப் பழக்கமாகிவிட்டது. நீங்க போய் வராந்தாவில் உட்கார்ந்தால் தேனீக்கள் தொல்லை இல்லாமல் நிம்மதியாய் இருக்கும். அல்லது புகைபிடித்தபடி கொஞ்சம் காலாற நடந்துவாங்க”

“நீங்க எனக்கு சுற்றிக் காட்டுவீங்களா?”

“மன்னிக்க வேண்டும். என்னால் முடியாது. இங்கே எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இந்தப் பருவத்தில் தான் தேனடைகளில் தேன் வெகு சீக்கிரமாக சேர்ந்து கொண்டிருக்கும். நான் அவற்றை உடனுக்குடன் சேகரிக்க வேண்டும். ஒருநாளைக்கு தோராயமாக கால் டன் அதாவது இருநூற்றைம்பது கிலோ தேன் எடுப்பேன்.”

ஐந்து நிமிட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவள் அவனுடைய இடுப்பில் ஒரு பெரிய ஏப்ரானைக் கட்டி விட்டாள். அதற்கு உள்ளே அவனுக்குப் பொருத்தமில்லாத ஒரு பெரிய பழைய மேலங்கி அணிவிக்கப்பட்டிருந்தது. மேட்டிமை தாங்கிய அவனுடைய தலை மேலிருந்தது ஒரு நைந்த நார்த்தொப்பி. அதனோடு பிணைக்கப்பட்டிருந்த கொசுவலை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. உடைக்கான ஆயத்தங்கள், அவனுடைய நேர்த்தியான கையுறைகளினால் முடிவுக்கு வந்தன. அவற்றை இழக்க அவன் உளப்பூர்வமாய் சம்மதித்திருந்தான். அவன் தேனீக்கள் இருக்குமிடத்துக்கு வரவும், ஒரு தகரப்பெட்டியைத் தூக்கவும் அனுமதிக்கப்பட்டான். சூரியன் தலைக்கு மேலே கதிர்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது.

அவள் உற்சாகத்தோடு தன் வேலையைத் தொடரலானாள். தேனீப் பெட்டிகளூடே நடந்து, அடுத்து தேன் எடுக்க வேண்டிய பெட்டியை அடைந்தாள். உள்ளுக்குள் உதறலெடுத்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிறு கம்பீரத்துடன் அவன் அவளைத் தொடர்ந்து சென்றான்.

“இப்போது கவனமாக இருங்க” அவள் உரக்கச் சொன்னாள், “முதலில் உங்கள் முன் தொங்கிக் கொண்டிருக்கும் கொசுவலையை உங்கள் சட்டையின் முன்பகுதிக்குள் சொருகிவிட்டுக் கொண்டு, பிறகு இந்த மூடியைத் தூக்குங்க”

அவள் ஆணையிட்டபடி அவன் செய்தான். அங்கே கண்ட காட்சி அவனைப் பெரும் வியப்பிலாழ்த்தியது. இந்தக் குறுகிய இடத்தில் இவ்வளவு தேனீக்களும் நகர முடியாமல் மூச்சுவிட முடியாமல் வாழ்ந்து கொண்டு தங்கள் வேலைகளையும் தவறாமல் செய்து கொண்டு எப்படித்தான் சமாளிக்கின்றன என்பதை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. அது எப்படியென்று அவனுக்குப் புரிய வைக்க அவளுக்கு அப்போது நேரமில்லை. அவள் புகை போட்டு தேனீக்களை அங்கிருந்து துரத்தும் முயற்சியிலிருந்தாள். பல தேனீக்கள் புல்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவன் தன் கால்சராய்க்குள் அவை போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலையோடு அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவள் தேனீ சேகரச் சட்டத்தை எடுத்து அதில் ஒட்டியிருந்த ஆயிரக்கணக்கான தேனீக்களை புருசு கொண்டு விரட்டி விட்டு தகரப்பெட்டியில் வைத்தாள். எல்லாச் சட்டங்களையும் சேகரித்த பின் தான் கொண்டுbவந்திருந்த வெற்றுச் சட்டங்களை அங்கு பொருத்தினாள்.

“அதே சட்டத்தை மீண்டும் ஒருமுறை பயன்படுத்துவீங்களா?” அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான்.

“பலமுறை!” அவனுடைய அறியாமையைத் தெளிவுபடுத்துவதில் அவள் மகிழ்ந்தாள். “அந்தத் தேனடை இன்னும் பத்து நாட்களில் நிறைந்து விடும். இப்போது அந்த மூடியை மெதுவாக மூடுங்க. கவனம்… அவற்றை நசுக்கிடாதீங்க. அடுத்து…”

அவள் நிமிர்ந்து நின்று அவனைப் பார்த்தாள்.

“அடுத்து… என்ன?” அவன் ஆர்வத்துடன் கேட்டான்.

“நான் உள்ளே சென்று தேனைப் பிழிந்து வடித்தெடுக்கும் வரை நீங்க அடுத்தப் பெட்டியில் நான் செய்ததைப் போலவே செய்யலாம்”

அவன் அதைப்பற்றி தனக்கு அதிகமாக எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதால் பயப்படுவதாகச் சொன்னான்.

“அப்படியானால் நல்லது. நாம் போய் இதுவரை சேகரித்த தேனை பிழிந்தெடுத்து வடிகட்டும் வேலையைப் பார்ப்போம்.”

அவர்கள் தேன் சேகரிக்கும் அறைக்குச் சென்றார்கள். இருவரும் உள்ளே நுழைந்த மறுநொடியே அவள் பட்டென்று கதவை மூடினாள். அங்கே வேலையைத் தவிர வேறு உணர்வுகளுக்கு இடமில்லை என்று அவன் அறிந்திருந்த போதும் அவளின் அந்தச் செய்கை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவன் தனக்குத் தானே புன்னகை புரிந்து கொண்டான்.

அந்த இடம் முழுவதும் அடைசலாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. அந்த அறையின் சிறிய சன்னல்களும் கதவும் தேனீக்களுக்குப் பயந்து அடைக்கப்பட்டிருந்தன. கோரைப்புல் வேயப்பட்ட கூரையிலிருந்த சிறு சாளரம் ஒன்று தான் மூச்சுவிடும் காற்றுக்கு வழி.

வடிகட்டப்பட்ட தேன், அங்கிருந்த திருகு வழியாக கீழே உள்ள பெரிய உருளையில் நிரம்புவதற்கு வசதியாக அறையின் பாதிப்பகுதி தரைத்தளத்தை விடவும் உயர்த்திக் கட்டப்பட்டிருந்தது. ஐந்து டன் கொள்ளளவு கொண்ட பல பெரிய உருளைகள் நிறைக்கப்பட்டு, மூடியுடன் உலோகப்பற்று வைக்கப்பட்டு வரிசையாய் கீழ்த்தளத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இதைப்போன்று இன்னும் பல உருளைகள் வீட்டினுள் இருப்பதாக கெம்ப்பின் மகள் சொன்னாள்.

“முன்பெல்லாம் ஒரு பவுண்டு எடை தேனுக்கு ஆறு பென்சுகள் வாங்கிக் கொண்டிருந்தேன்.” அழகிய சாம்பல் நிறக்கண்களில் ஆர்வம் மின்ன அவள் அவனிடம் சொன்னாள். “ஆனால் இப்போது கடைகள் எல்லாம் மூன்று பென்சுகளுக்கு மேல் தரமறுக்கின்றன. பார்க்கப் போனால் அந்த விலைக்கு லாபமே கிடையாது. போக்குவரத்துச் செலவையும் கழித்தால் என்ன மிஞ்சும், நீங்களே சொல்லுங்கள்!”

தாமஸ் பிரபுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“அதனால் நான் ஏற்றுமதி செய்யலாம் என்று யோசிக்கிறேன். ஒரு உருளைக்கு 56 பவுண்டுகள் எடை, ஒரு பெட்டிக்கு இரண்டு உருளைகள்.. ஏற்றுமதி விதிமுறைக்கு ஏற்ற முறையான டப்பாக்களும் உருளைகளும் என்னிடத்தில் இருக்கின்றன. இங்கு எனக்கு வேலை முடிந்து கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் போதும், நான் லண்டன் நிறுவனமொன்றுக்கு அனுமதி கேட்டு எழுதி விடுவேன். அவங்க பணம் அனுப்புவாங்க என்று நம்புகிறேன். மிஸ்டர் போன்,  நீங்களே ஒரு லண்டன்வாசிதானே! ஆஸ்திரேலியத் தேனுக்கு இங்கிலாந்தில் விற்பனை வாய்ப்பு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?”

அதைப் பற்றிய எந்த விஷயஞானமும் இல்லாத நிலையில், தாமஸ் பிரபு, இங்கிலாந்தில் ஆஸ்திரேலியத் தேனின் ஆரம்ப விற்பனையே அமோகமாக இருக்குமென்று அவளிடத்தில் அடித்துக் கூறினான். அவன் சொல்கிறான் என்பதற்காகவே அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அநேகரின் அறிமுகம் அவனுக்கு இருந்தது. ஒரு இடைத்தரகனின் நிலையிலிருந்து அவளுடைய சரக்கை அவனுடைய உறவினர்களிடத்திலும் எண்ணற்ற தோழியரிடத்தும் விற்பனை செய்யவும் அவன் தயாராயிருந்தான்.

“ஆஹா… நீங்க இப்படி சொல்வதைக் கேட்கையில் என் மனம் நன்றியால் நெகிழ்கிறது.” அவளுடைய ஆழ்நெஞ்சிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன. “இப்போது கம்பளி ரோமத்தின் விலை மிகவும் குறைந்து விட்டது. கால்நடை வளர்ப்பில் ஆதாயம் ஏதுமில்லை, இதுபோன்ற இடங்களின் மதிப்போ வாங்கிய கடனை விடவும் சரிந்து கொண்டே போகிறது. எனவே வேறு ஏதாவது தான் செய்தாக வேண்டும். நான் தேன் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறேன். இதிலேயே தொடர்ந்து செல்ல விரும்புகிறேன். தொடர்ந்து எனக்கு சீரான வருமானம் கிடைக்கும்பட்சத்தில் எந்த எல்லைக்கும் என்னால் போக முடியும்.”

ஒரு அழகான பெண், தன் எதிர்காலம் பற்றிய அறிவுப்பூர்வமான சிந்தனையை இது போன்றதொரு கோணத்தில் முன்வைத்துப் பேசுவதை, தன் வாழ்நாளில் இதுவரைப் பார்த்திராத காரணத்தால் அவன் நெகிழ்வும், பரவசமும் வியப்பும் ஒருங்கே அடைந்திருந்தான். அவன் பார்த்திருந்த பிற பெண்களைப் போல, ஆணழகனான அவனை வசீகரிக்கும் நோக்குடன் அவள் எதையும் சொல்லவில்லை. அவள் உண்மையிலேயே உழைக்க விரும்பினாள். நவநாகரிகப் பெண்களிடத்தில் காணப்படும் எதுவும் அவளிடத்தில் காணப்படவில்லை. அவள் பழங்காலப் பெண்களைப் போன்று பழகுவதற்கு இனியவளாக இருந்தாள்.

பேச்சுக்கிடையில், அவன் தனக்கு பத்து மாதக் குழந்தையொன்று இருப்பதாகவும், அதை இங்கிலாந்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பதாகவும் சொன்னபோது அவள் வெளிப்படையாகவே தன் அதிர்ச்சியைக் காட்டினாள்.

“என்ன? கவனித்துக் கொள்ள அப்பாவும் இல்லாமல் அம்மாவும் இல்லாமல் தனியாகவா?” அவள் வருத்தத்துடன் வினவினாள்.

“குழந்தையைப் பார்த்துக்கொள்ள அங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்”

“ஆனால்… யார்… யாரால்… அதைப் பெற்றவர்களைப் போல் பொறுப்புடன் பார்த்துக் கொள்ள முடியும்?”

“குழந்தையைக் கூடவே வைத்துக் கொண்டு ஒருவனால் இது போன்ற உலகப் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?

“இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்களால் எப்படிப் பயணிக்க முடிகிறது என்பதையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

அவள் பேசுவது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் அவள் பேச்சை ரசித்தான். தாமஸின் முதல் மனைவிக்கு குழந்தைகள் என்றாலே வெறுப்பு. இரண்டாவது மனைவியோ குழந்தை பிறந்த அதே நாளில் மறைந்து விட்டாள். இவன் இப்படி பொறுப்பற்ற பிரம்மச்சாரியைப் போல் ஊர்சுற்றி வீணே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், இவன் அறியாமலேயே குழந்தைக்கு கக்குவானோ வலிப்போ ஏற்பட்டு இறந்துவிட்டால் என்னாவது என்ற அந்தப் பெண்ணின் கவலை அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் அக்கறையுடன் கேள்விகளைக் கேட்ட விதம், அவனுள் கொஞ்சம் பொறுப்புணர்வையும் தந்தைமையையும் தோற்றுவித்தது. உண்மையிலேயே தன் சின்னஞ்சிறு குழந்தை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்ற ஐயம் அவனுள் எழ, தனது அடுத்த கடிதத்தில் அதைப் பற்றி சற்று அழுத்தமாகவே விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

உரையாடல்களால் வேலை தடைபடவில்லை. பேசிக் கொண்டிருந்தாலும் லெட்டி தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள். இதுவரை இப்படியொரு உழைப்பாளியான பெண்ணை அவன் கண்டதுமில்லை; பிறந்த நாள் முதலாய் அவனும் இப்படி வேலை செய்ததுமில்லை.

மண்ணெண்ணெய் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரும் அதனுள் ஒரு பெரிய கத்தியும் இருந்தன. ஒரு கையில் தேனடைச் சட்டத்தைப் பிடித்தபடி மறுகையால் அந்தக் கத்தியைக் கொண்டு விரைவாகவும் தேர்ந்த லாவகத்துடனும் தேனடையை மேலோட்டமாய் வழித்தெடுத்து உள்ளே தேனீக்கள் இருக்கும் அந்தப் பகுதிகளைத் தனியே வைத்தாள். பிறகு சட்டங்களை எடுத்து தேன் பிரித்தெடுக்கும் சக்கரம் போன்ற இயந்திரத்தின் உள்ளே நுழைத்து கைப்பிடியை பலமாகச் சுழற்றினாள். அவள் அடுத்த சட்டங்களைத் தயார் செய்யும் வரை அவன் அவளுக்காக அந்த வேலையைச் செய்தான். அவள் அடுத்த சுழற்சிக்கான சட்டங்களை தயார் செய்து விட்டு, காலியானவற்றை எடுத்து தகரப்பெட்டியில் அடுக்கி விட்டு கீழே சிந்தியிருந்த தேனடைத் துகள்களை சுத்தம் செய்தாள். அவள் பணியின் சிரமம் பற்றியோ, சிக்கல் பற்றியோ புலம்பிக் கொண்டிருக்கவில்லை. தாமஸ் பிரபுவை அவனுக்காக அன்றி அவன் செய்யும் வேலைகளின் பொருட்டே மதிப்பிட்டாள். இந்த அனுபவம் அவனுக்கு சிறு மனக்கிலேசத்தைத் தந்தாலும் பெருமளவில் அதை ரசித்தான். தற்சமயம், தான் ஒரு பிரபுவாக இல்லாமல் மிஸ்டர் போன் -ஆக இருப்பதையே விரும்பினான்.

காலைச் சிற்றுண்டிக்கு அழைக்கப்பட்டபோது தான் அந்த வீட்டின் தலைவியுடனான பரிச்சயம் உண்டானது. அவன் எதிர்பார்த்தபடியே வெளுப்பான தேகமும், மாசற்ற முகமும், குரலுமுடைய, இங்கிலாந்தில் பிறந்த, இன்னும் தன் தாயகத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிற ஒரு பெண்மணியாக அவள் இருந்தாள். தாமஸ் பிரபுவுக்கு கைவந்த கலையான முகத்துதியினால் அவளைப் பெரிதும் மகிழ்வித்தான். அவனால் மிகவும் வசீகரிக்கப்பட்ட அப்பெண்மணி, இன்னும் சிலநாள் அங்கேயே தங்குமாறு அவனை வேண்டிக் கொண்டாள். ஒருவன், விருந்தினனாய்த் தங்குவதற்குரிய பண்புகளை அறிந்திருக்கிறானா என்பதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத காடுறை இல்லத்தின் விருந்தோம்பலுக்கிணங்க, அவளுடைய கணவரும் மனைவியின் வேண்டுகோளை ஆமோதித்தார்.

“நான் என்னுடைய விவசாயத்தின் நவீனங்களை உங்களிடம் காட்டுகிறேன். ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் என்ன, ஒரு நாள் பொழுதே ஓடிவிடும்!”

“மிகவும் நன்றி மிஸ்டர் கெம்ப்”  தாமஸ் பிரபு முணுமுணுப்பாய் சொன்னான். “இப்போதைக்கு எனக்கு மற்ற எல்லாவற்றையும் விட, தேனீ வளர்ப்புத் துறையில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. நான் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றதும் இதில் தான் ஈடுபடலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது இங்கு அது தொடர்பான எல்லாவற்றையும் நேரடியாகவே பார்த்துத் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அட, இது எவ்வளவு தெள்ளந்தெளிவாக அழகாக உள்ளது..!” சதுரவடிவத்தில் அழகாய் வெட்டப்பட்டு, காலையுணவோடு உண்பதற்குத் தயாராக மேசையில் வைக்கப்பட்டிருந்த தேனடையைப் பார்த்தபடி அவன் சொன்னான். லெட்டி அவசரமாய் அதை அவன் பக்கத்தில் நகர்த்தி வைத்தாள்.

“ஆமாம், இல்லே?” அவள் தாய்மையின் பரிவுடன் அதைப் பார்த்தபடி சொன்னாள். “உள்ளூர் சந்தையில் இதன் மதிப்பு வெறும் மூன்று பென்சுகள் தான். இது போன்ற தேனடைத் துண்டங்களையும் மிகுந்த கவனத்தோடு டப்பாவில் அடைத்து ஏற்றுமதி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இங்கிலாந்தின் உணவு மேசைகளில் காலையுணவோடு தேனடைத் துண்டங்களும் இருந்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்? எங்களுடைய தேனின் ருசிக்கு உங்கள் தேனின் ருசி ஈடாகாது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.”

தாமஸ் பிரபுவுக்கும் அது உறுதியாகத் தெரிந்தது. ஏனெனில் இங்கிலாந்து தன் வாழ்நாளில் இதையெல்லாம் ருசித்துப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவன் நம்பினான். கெம்ப்பின் மனைவி பிரிட்டனுக்குரிய உயர்மனப்பான்மையுடன் புன்னகைத்தாள். கெம்ப் மகளின் ஒப்பீட்டு உளறல்களை சிறு ஏளனப் புன்னகையுடன் அலட்சியப்படுத்தினார். ஒரு விவசாயிக்கு, பசுந்தீவனப் பாதுகாப்புமுறை, நீர்ப்பாசனம் மற்றும் ஆறுசால் கலப்பை இவற்றை விடவுமா தேன் பற்றிய உரையாடல் ஆர்வந்தருவதாய் இருக்கக்கூடும்? விவசாயம் பற்றிய கெம்ப்பின் உரையை செவிமடுப்பதிலேயே தாமஸ் பிரபுவின் விலைமதிப்பில்லா இரண்டு மணி நேரங்கள் செலவாகிப் போயின. தேனீ வளர்ப்பு தான் தன் குலத்தொழில் என்பது போலவும், தேனெடுப்பதுதான் தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்பது போலவுமான கருத்தை நாசுக்காகத் தெரிவித்துப் பேச்சை திசை திருப்பினான்.

பதினொரு மணி வாக்கில் மறுபடியும் பழைய மேலங்கியும், கொசுவலையுடனான தொப்பியும், பிசுபிசுக்கும் ஏப்ரானும் கையுறைகளுமாக உற்சாகமாக கிளம்பினான். இதுபோன்ற உடைகளை இதுவரை அணிந்திராத அவனைப் பார்க்க அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு அவசரமாக வெக்கை நிறைந்த அந்த தேன் சேகர அறைக்குள் நுழைந்தான். அரசகுடும்பத்தினர் பங்கேற்கும் உயர்தர கேளிக்கை விருந்து நடக்கும் பூங்காவுக்குள் கூட அவன் அவ்வளவு அவசரமாக நுழைந்ததில்லை.

லெட்டியின் முகம் அவனைக் கண்டதும் மலர்ந்தது. அவளுடைய அழகிய கண்களுக்குக் கீழேயும், உதடுகளுக்கு மேலேயும் வியர்வைத் துளிகள் பனித்துளி போல் திரண்டிருந்தன.

“உங்களுக்கு எவ்வளவு நல்ல மனம்!” அவள் வியந்தாள். அடுத்த நிமிடமே அவனை வேலையில் ஈடுபடுத்தினாள். அவனும் மூச்சைப் பிடித்துக் கொண்டு கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். அவர்கள் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டே வேலை செய்தனர். ஒவ்வொரு நிமிடமும் நட்பு வளர்ந்து அவர்களை நல்ல நண்பர்களாக்கியது.

அவள் மீண்டும் மீண்டும் தேன் வியாபாரம் குறித்தே பேசினாள். தேனைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் கைப்பிடியை சுழற்றுவதை விடவும் கடினமாக இருந்தது, அவளுடைய பேச்சை திசை திருப்புவது. ஓரிரு முறை பேச்சு, மையத்தை விட்டு விலகிச் செல்வது போல் தோன்றினாலும் மறுபடியும் அவள் அதைப் பழைய இடத்துக்கே இழுத்து வந்தாள்.

மதிய உணவுக்குப் பின் நிலைமை இன்னும் மோசமானது. ராணுவ உயரதிகாரி தன் சிப்பாய்களுக்குக் கடுமையான முறையில் கட்டளையிடுவது போல் அவள் அவனுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தாள். “இப்போது தேன் சேகரிக்கும் அறையில் என்னென்ன செய்யவேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து கொண்டீங்க. எனவே நான் போய் மற்ற தேன் சேகரச்சட்டங்களை எடுத்து வரும் வரை இந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்க. தகரப்பெட்டியைத் தூக்கி வருவது குறித்து கவலைப்படாதீங்க. என்னால் எளிதாகத் தூக்கி வர இயலும். நாம் இருவரும் ஆளுக்கொரு வேலை செய்தால் இருமடங்கு வேகத்துடன் வேலை நடக்குமல்லவா?”

அவள் போய் வரும் வரை சூடான கத்தியைக் கொண்டு சட்டங்களில் இருக்கும் தேனடைகளை வெட்டி எடுக்க வேண்டும் எனப் புரிந்துகொண்டான். அன்றைய பிற்பகல் பொழுது மிக நீண்டதாய்த் தோன்றியது. அந்த சிறிய அறைக்குள் அவனுக்குத் திணறியது. புருவத்துக்கு மேலாய் திரண்ட வியர்வைத் துளிகள் கழுத்து வழியே இறங்கிக் கொண்டிருந்தன. அவள் ஒவ்வொரு முறை பெட்டி நிறைய தேனடைச் சட்டங்களுடன் வர வர, அவனுக்கு நரம்புகள் புடைத்துக் கொண்டு நின்றன. அவன் செய்யும் வேலைக்குக் கூலியும் கிடையாது.

ஒருவாறாய் சூரியன் அஸ்தமனமாக, தேனீக்கள் தங்கள் உழைப்பை நிறுத்திக் கொள்ள, அவனுடைய அன்றைய நீண்ட கடுமையான போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது.

களைப்பும் திருப்தியுமான பெருமூச்சொன்றை வெளியிட்டபடி லெட்டி சொன்னாள், “இன்று வேலை நல்லவிதமாக முடிந்தது, இல்லையா? உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை, மிஸ்டர் போன்.”

ஒரு சாதாரணத் தொழிலாளியாகவும் மிஸ்டர் போன் ஆகவும் இருப்பதில் ஒரு சலிப்புணர்வு ஏற்பட்டு விட, அவன் வெடுக்கென்று சொன்னான், “நீங்க இன்னும் என் பெயரை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். என் பெயர் போஹன், தாமஸ் போஹன்.”

“ஓ… அப்படியா? மன்னியுங்க.” அவள் மெல்லிய குரலில் சொன்னாள், “மிஸ்டர் போஹன், யூகலிப்டஸ் தேன் பற்றி இப்போது தான் பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது. அதனுடைய மருத்துவக் குணங்களைப் பற்றி வேதியியல் நிபுணர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்ள வேண்டும்.”

“ஆ… ஆமாம்..” இழுத்தான் தாமஸ் பிரபு, வேறங்கோ கவனத்தை வைத்துக் கொண்டு. அவனைப் பற்றி அவள் அறிந்து கொள்ள முயலவும் இயலாதபடி, தேனீக்களால் முற்றிலும் ஈர்க்கப்பட்டிருந்தாள். அவர்கள் தங்கள் பிசுபிசுத்த மேலாடைகளைக் களைந்து விட்டு, இரவு உணவுக்கு ஆயத்தமாக வீட்டுக்குள் சென்றார்கள்.

லெட்டி குளித்து, தலைவாரி முடித்து படியிறங்கி வந்தாள். வெளிர் நீல நிற கவுனும், வெள்ளை நிற சல்லாத்துணியிலான சால்வையும், ரோஜா மலரும் அணிந்து வந்த அவளைப் பார்த்தபோது அவள் மிகவும் அழகாக இருப்பதாக தாமஸுக்குத் தோன்றியது. ஆம், முகத்தில் பழுப்புநிறப் புள்ளிகளையும் மேல்நோக்கி சற்றே வளைந்த மூக்கையும் கொண்டிருந்தபோதும் கூட!

தன்னைப் பற்றிய, தன் அழகைப் பற்றிய சுவாதீனமற்ற, அபாரமான  ஆரோக்கியமான தேகக்கட்டு கொண்டதொரு பெண்ணை அவன் இதுவரை பார்த்ததே இல்லை. அவனைச் சூழ்ந்திருந்த அநேக அற்புத வசீகரங்களில் அதிவசீகரமானது இந்தத் தருணமே என்று தோன்றியது.

“எப்பேற்பட்ட அற்புதப் பிறவி அவள் என்பதை அவளே உணர்ந்து கொள்ள இயலாத அளவுக்கு மிகுந்த வேலைப்பளுவுடன் விளங்குகிறாள் என்று நினைக்கிறேன்.” அதீதப் பசிக்கு ஏற்றாற் போல் பரிமாறப்பட்டிருந்த நெய்யொழுகும் ஆட்டிறைச்சியின் முன் அமர்ந்திருந்தபடி தாமஸ் நினைத்துக் கொண்டான். அந்த வரவேற்பறையின் பழைய நைந்த இருக்கைகளில் அமர்ந்து தேனீக்களின் எவ்விதக் குறுக்கீடுகளும் இன்றி, அவளுடன் தான் கழிக்கவிருக்கும் இனிமையான ஓய்வுப் பொழுதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.

இரவுணவுக்குப் பின்னர் அவன் எதிர்பார்த்திருந்த தருணமும் வந்தது. உழவு பற்றியும் பாசனம் பற்றியும் பேச பேரவா கொண்டிருந்த கெம்ப், தாமஸையும் தன்னோடு புகைபிடிக்க வெளியே வருமாறு அழைத்தார். தாமஸுக்கும் புகைபிடிக்க பெரு விருப்பம் இருந்தும், மூட்டுக்கு மூட்டு வலி பின்னியதால் அதைத் தவிர்த்தான். கெம்ப்பின் மனைவி, தன் மகளை பியானோ இசைக்கப் பணித்தாள். லெட்டியும் அதி அற்புதமாய் இசைத்தாள்.

தாமஸ் அப்பெண்ணின் பன்முகத் திறமைகளை வியந்து, இசையை ரசிக்க முனையும் போதெல்லாம், திருமதி கெம்ப் வளவளவென்று அவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அப்போதைய இங்கிலாந்தைப் பற்றி அறிந்துvகொள்ளும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். தேம்ஸ் ஆற்றங்கரையின் கட்டுமானம் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருக்கையில், லெட்டி அறையை விட்டு காணாமல் போயிருந்தாள்..

“அவள் உண்மையிலேயே என்னை விட்டுப் போய்விட்டாளா?” அவன் உள்ளுக்குள்ளேயே மருகினான்.

‘பேசுவதற்கு இந்த முதியவள் இருக்கையில் தன் இருப்பு இங்கு தேவையில்லையென்று கற்பனை செய்து கொண்டு மிகுந்த மன வேதனையுடன் போய்விட்டிருப்பாளோ?’

ஒரு உயர்குடி ஆடவனை வேதனையின் விளிம்புக்குக் கொண்டு செல்ல அந்த எண்ணமொன்றே போதுமானதாக இருந்தது. அவன் அறையை விட்டு வெளியேறி அவளைத் தேடியபடி வராந்தா முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தான். வீட்டின் அறைகளுக்குச் செல்லும் நடைபாதையெங்கும் பார்த்தான். இளந்தென்றலோடு வரும் பூக்களின் சுகந்தத்தை சுவாசித்தவாறு தோட்டத்தைச் சுற்றி வந்தான். எங்கும் அவளைக் காணாமல் அலுத்துப் போய் சில கெட்டவார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டான். இறுதியாக, வீட்டை விட்டு தனித்திருந்த ஒரு சிறிய அறையின் வாயிற்கதவையொட்டி மெல்லிய கம்பி போல் வெளிச்சம் புலப்பட, அவன் அங்கு சென்று கதவைத் திறந்தான்.

அவள் அங்கு தான் இருந்தாள். அறையின் நடுவே ஒரு கோணியை விரித்து அதன்மேல் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள். அவளுடைய நீலநிறக் கவுனுக்கு மேலே ஒரு பெரிய ஏப்ரானைச் சுற்றியிருந்தாள். அவளைச் சுற்றிலும் மராமத்துச் சாமான்களும் தச்சுத்தொழில் உபகரணங்களும் இறைந்து கிடக்க, தேன் டின்களில் தன்னுடைய நிறுவனப் பெயரை எழுதுவதில் முனைப்பாயிருந்தாள். அங்கு எரிந்து கொண்டிருந்த ஒரு மண்ணெண்ணெய் விளக்கு அவளுடைய அழகிய உருவத்தில் பட்டு, முகத்தையும், பளீரென்ற மேனியையும், பளபளக்கும் பொன்னிறக் கூந்தலையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது.

தாமஸ் பிரபு, மந்திரத்தால் கட்டுண்டவன் போல் அங்கேயே நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான அழகியரைக் கண்டு மயங்கியிருக்கிறான் என்றபோதும் இப்படியொரு பின்னணியிலிருந்தோ வாழ்க்கைத் தரத்திலிருந்தோ வந்த எந்தப் பெண்ணும் இந்த அளவுக்கு அவனை வசீகரித்ததில்லை. அவன் அவளைப் பார்த்தவுடனேயே தன் கண்டனத்தைத் தெரிவித்தான்.

“அட, இன்று இதுவரை செய்த வேலைகள் போதாதா? நீங்க மேலும் மேலும் வருத்திக் கொண்டு உங்களையே அழித்துக் கொள்ளப் போறீங்களா?”

அவள் அவனை ஒரு சிரிப்புடன் பார்த்தாள். அப்போது விளக்கொளியில் ஒளிர்ந்த அவளுடைய கண்கள் நட்சத்திரங்களைப் போல் மின்னின.

“என்னை மன்னிக்கவேண்டும் மிஸ்டர் போஹன். நீங்க அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் நான் ஒரு அரைமணி நேரத்துக்கு அங்கிருந்து நழுவினால் உங்க கவனத்துக்கு வராது என்று நினைத்தேன்.”

“அப்படியா நினைத்தீங்க?” தாமஸ் உள்ளே வந்து கதவை சாத்தினான்.

“அடுத்த வாரம் அனுப்ப வேண்டியவை இன்னும் தயார் நிலையில் இல்லை. இப்போதே இவற்றுக்கு வர்ணம் பூசி வைத்து விட்டால் நாளைக் காலைக்குள் காய்ந்து விடும். பிறகு பெட்டியில் எடுத்து வைக்க சரியாக இருக்குமென்று நினைத்தேன்.”

துத்தநாகத் தகட்டின் மேலே தன்னுடைய கருவண்ணத் தூரிகையைத் தொடர்ச்சியாய் ஓடவிட்டபடி சொன்னாள். அவளுடைய கைகளில் எழுந்த மெல்லிய நடுக்கத்தையும், அவளிடத்தில் படர்ந்த நாணச் சிவப்பையும் அந்த மங்கிய ஒளியிலும் பார்க்க முடிந்தது.

தாமஸ் பிரபுவுக்கு தான் ஒரு பிரபு என்கிற எண்ணமே ஏற்படாது, சாதாரண ஆடவனாக, உற்சாகமான இளைஞனாக வளைய வருவதும், வழக்கத்துக்கு மாறாய், திடகாத்திரமான, நல்ல மனநிலையுடைய பெண்ணொருத்தி, அவனுடன் நீண்ட நேரம், மிக அந்நியோன்னியமான தருணங்களைக் கழித்த போதும் தன்னிலை மாறாதிருப்பதும் அவனால் இன்னும் நம்பவியலாத உண்மைகள். இப்போதும் கூட காதலுணர்வை விடவும் தேனீக்களே அவளிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவளுடைய சிரமத்தில் தானும் பங்கு கொண்டு குறைப்பதன் மூலம் அவள் உள்ளத்தில் காதலுண்டாக்க இயலும் என்று தோன்றவில்லை. இருப்பினும் அவன் தன்னுடைய மேல் கோட்டை கழற்றி வைத்துவிட்டு, முழுக்கை சட்டையின் கைப்பகுதிகளை மடித்து விட்டுக் கொண்டு, அவளிடமிருந்த கருவண்ணத் தூரிகையை வாங்கிக் கொண்டு வர்ணம் பூச ஆரம்பித்தான். அவள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.

“எனக்கு இதுபோன்ற வேலைகளைச் செய்து பழக்கமில்லை.” அவன் குற்றவுணர்வுடன் ஒத்துக் கொண்டான். “நான் செய்வது சரியாக இல்லையெனில் என்னிடம் சொல்லுங்க.”

“நான் வேலை செய்வதை யாராவது பார்க்கையில் எனக்குண்டாகும் நடுக்கம் போலத் தான் உங்களுக்கும் உண்டாகிறது. மற்றபடி சரியாகவே செய்றீங்க.”

“நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.” அவன் யோசனையோடு ஆமோதித்தான்.

லெட்டி மீது அவள் பெற்றோர் வைத்திருந்த பெருநம்பிக்கை காரணமாக

அவர்களது இடையூறு இன்றி அந்தப் பொழுது இனிதே கழிந்தது. தாமஸ் பிரபு அனைத்து டின்களிலும் வெற்றிகரமாய் வண்ணம் பூசி முடித்து விட்டான். டின்னில் பெயர்ப்பட்டியை நேராக ஒட்ட அவளுக்கு உதவினான். அவர்கள் குனிந்து வேலை செய்கையில் அவர்களிருவரின் தலைகளுக்கிடையில் அங்குல இடைவெளியே இருந்தது. அவர்களுடைய நான்கு கரங்களும் வேலையில் ஈடுபட்டிருந்த போது ஒரு கைக்குட்டை அகலத்தில் அடங்கி விட்டிருந்தன.

லெட்டி சொன்னாள், “உங்க கைவிரல்களோடு ஒப்பிடுகையில் என்னுடையது சற்றுக் கடினத்தன்மை வாய்ந்தது. இதுபோன்ற அழகான நகங்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை. நீங்க இங்கு வரும் வரை ஒரு வேலையும் செய்ததே இல்லை என்று நான் நினைக்கிறேன்.”

“ஆமாம்.. நான் இன்னும் கூட அதிக வேலை செய்யவில்லை. என்னை நினைத்து நானே வெட்கும்படி வைத்துவிட்டீங்க, லெட்டி.”

அவர்கள் மிகவும் சிரத்தையான கருத்தாடலில் ஈடுபட்டார்கள். தாமஸ் பிரபு, தன் அனுபவத்தில் ஒரு பெண்ணுடன் முதன் முதலாய் நிகழ்த்திய கருத்துப்பூர்வமான உரையாடல் அது தான் எனலாம். அவன் சட்டென்று உணர்வுப் பெருக்குடன் சொன்னான், “உன்னைப் போலவே நானும் உபயோகமாய் ஏதாவது செய்ய எனக்கும் கற்றுத் தருவாயா?”

அவன் மறுபடி தன் நாட்டுக்கு எப்போது திரும்பிப் போவான் என்று கேட்டாள். அது இன்னும் உறுதியாகவில்லை என்றான் அவன்.

“கூடிய விரைவில் போவீங்க தானே?”

“அப்படித் தான் நினைக்கிறேன்.”

“நீங்க சீக்கிரமாகவே போக வேண்டும். கட்டாயம் போக வேண்டும். பணத்துக்காக வேலை செய்பவர்களிடம் விட்டு வந்திருக்கும் அந்தக் குழந்தைக்காகவாவது..”

“சரி, நான் போகிறேன்.”

“அப்படியென்றால் உங்களுக்கு மிக மிக உபயோகமான ஒரு வேலைவாய்ப்பு கிடைத்து விடும். நீங்கள் என்னுடைய தேன் வியாபாரத்தை லண்டனிலிருந்து கவனித்துக் கொள்ளலாம்.”

அவன் தூரிகையை வர்ணக்குவளைக்குள் விட்டெறிந்தான்.

“தேனையும் தேனீக்களையும் தவிர உன்னிடத்திலிருந்து வேறு எதைப் பற்றியும் ஒரு துரும்பளவும் எதிர்பார்ப்பது வீண்!” அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

ஒரு தன்மானமிக்க, உயர்குடி ஆடவனுக்குத் தெரிந்த இரண்டே வழிகள் – ஒன்று அவளை தன் விருப்பத்துக்கு வீழ்த்துவது, அல்லது அந்த முயற்சியில் தானே வீழ்வது.

லெட்டி இப்போது தாமஸ் பிரபுவின் மனைவியாகிய சீமாட்டி! பேரம் பேசுவதில் அதிசமர்த்தான சீமாட்டி. ‘தன் நிலை இன்னதென்று அறியாத பேதை’ என்று மக்கள் அவளைக் கண்டு சிரித்தார்கள், ஆனால் தாமஸ் பிரபு சிரிக்கவில்லை. அவர்களை விடவும் அவள் அதிகமாகவே அறிந்திருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்திருந்தான். தன் அரண்மனைத் தோட்டத்திலேயே ஒரு பிரம்மாண்டமான தேனீப் பண்ணையை அமைத்து அவளுக்குப் பரிசாக அளித்தான். ஆனால் அவள் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டாதது அவனுக்கு வியப்பும் ஏமாற்றமும் அளித்தது.

தான் வாழும் சூழ்நிலையைத் தனக்கு சாதமாக்கிக் கொண்டு, அதற்கேற்ப தன் திறமையைப் பழுதின்று முழுமையாய்ப் பயன்படுத்தலின் ஒரு அங்கமே தேனீக்கள் மீதான ஈடுபாடு என்பதையும் மாறுபட்ட சூழலின் போது அது மாறும் என்னும் உண்மையையும் அவன் விரைவிலேயே புரிந்து கொண்டான். இல்லத்தை நிர்வகிப்பதிலும், இளம்பிரபுக்களை வளர்த்தெடுப்பதிலும் பெரும் ஈடுபாடு காட்டிய அவள், தங்கள் ஊழியர்களின் மனைவியரிடத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஆர்வத்தைப் புகுத்தினாள்.

“ஆனால் அவர்களால் ஒருபோதும் என்னுடையதைப் போன்ற தேனை உற்பத்தி செய்ய இயலாது. அதற்கு ஆஸ்திரேலிய யூகலிப்டஸின் ருசி தேவைப்படும்.” அவள் சிறு மகுடமணிந்த தன் தலையை அசைத்துப் பெருமிதம் பொங்க சொல்லிக்கொண்டாள்.

 

* * * * * * * * * *

 

மூலக்கதை – A sweet day (1897)

மூலக்கதையாசிரியர் – ஆஸ்திரேலிய எழுத்தாளர் Ada Cambridge (1844 -1926)

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close