கட்டுரைகள்
Trending

நுரையீரலுக்குத் தீ வைப்போம் வாருங்கள்!

அமிதா

அமேசான் – இந்தப் பெயரைக் கேட்டவுடன் புத்தகக் காதலர்களுக்கு அமேசான் நிறுவனமும் சூழலியல் ஆர்வலர்களுக்கு அமேசான் காடுகளும் நினைவுக்கு வரும். இணையத் தேடுபொறிகளில் அமேசான் என்ற பெயரைத் தட்டச்சிட்டவுடன், முதலில் வந்து விழும் இணையதளங்கள் அமேசான் நிறுவனத்தினுடையதாகவே இருக்கின்றன. ஒரு வகையில் அமேசான் காட்டின் அழிவை இது சூசகமாக முன்னறிவித்தது எனலாம். எதிர்காலத்தில் அமேசான் காடு இருக்கப்போவதில்லை, அமேசான் என்ற நிறுவனம் இருக்கும்.

இவ்வளவு அவநம்பிக்கை தொனிக்கப் பேசத் தேவையில்லைதான். ஆனால், அமேசான் காட்டின் அழிவை கையறு நிலையுடன்தான் இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பின்னணியில் உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசானுக்கு, உலகின் நுரையீரலுக்கு எதிர்காலம் இல்லாத நிலையில், பூமிக்கு மட்டும் எதிர்காலம் இருப்பதாக எப்படிப் போலியாக நம்ப முடியும்?

நமக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவில் இருக்கும் மழைக்காடுகள் 13 கோடி ஆண்டுகள் பழமையானவை. இந்தக் காடுகளில் 30 சதவீதம் 1973-க்கு முன்பாகவே அழிக்கப்பட்டுவிட்டது, தொடர்ந்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பல சமையலறைகளில் ‘பாமாயில்’ பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மூலப்பொருளைத் தரும் செம்பனை மரங்களை வளர்ப்பதற்காகவே போர்னியோ காடுகள் இன்றைக்கும் அழிக்கப்படுகின்றன. இப்படி உலகின் வேறு ஏதோ ஒரு பகுதியில் அழிக்கப்படும் காட்டும் நமக்கும் மறைமுகமாக அல்ல, நேரடியாகவே தொடர்பு இருக்கறது.

போர்னியோ காடழிப்பால் இந்தோனேசியா, மலேசியா பகுதிகளில் மட்டுமே வாழும் வாலில்லா குரங்குகளான ஓராங்ஊத்தன்கள் கொல்லப்படுகின்றன, அவற்றின் வாழிடம் துடைத்தழிக்கப்படுகிறது. மனிதர்களின் காடழிப்பு வெறி குறித்து விரிவாக அறிய சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதியுள்ள ‘காடோடி’ தன்வரலாற்று நாவலைப் படிக்கலாம். இந்திய மொழிகளில் ஒரு காட்டின் அழிவை மிக நெருக்கமாகப் பதிவுசெய்துள்ள முக்கிய நூல்களில் ஒன்று இது.

ஒப்பிட முடியாத காடு

எல்லா திக்குகளிலும் தீ வைத்து எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் இன்றைக்கும் அமேசான்தான், உலகின் மிகப் பெரிய மழைக்காடு. உலகின் பணக்கார நாடான அமெரிக்காவின் பாதி அளவு பரப்பைக் கொண்டது இந்தக் காடு. இந்தக் காட்டின் பெரும்பகுதி பிரேசிலில்தான் இருக்கிறது.

25 லட்சம் பூச்சி வகைகள், 16,000 மர வகைகள், 3,000 மீன் வகைகள், 1,500 பறவை வகைகள், 400 பாலூட்டி வகைகளுக்கு அமேசான் காடு வாழிடமாகத் திகழ்கிறது. பொதுவாக மலைகளே மழை மேகங்களைத் தடுத்து நிறுத்தி மழை பொழிய வைக்கும். ஆனால், அமேசானைப் பொறுத்தவரை, இந்தக் காடுகளே மழை மேகங்களை நிறுத்தி மழை பொழிய வைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

உலகின் மிக நீளமான இரண்டாவது ஆறான அமேசான் இந்தக் காட்டுக்கு உயிரளித்து நகர்ந்துகொண்டிருக்கிறது. அமேசான் காட்டில் பெய்யும் மழை, மரங்களிலிருந்து கீழே வழிந்து தரையிறங்குதவற்கு 10 நிமிடங்கள் ஆகும் என்றால், அமேசான் காட்டின் மரங்களின் அடர்த்தி, உயரம் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளலாம்.

இந்தக் காட்டை ‘உலகின் நுரையீரல்’ என்று ஏதோ உருவாகத்துக்காக மிகையாகச் சொன்னதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். 40,000 கோடி மரங்கள் அமேசான் காடுகளில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவை தாவரங்களே உற்பத்தி செய்கின்றன. ஒரு மனிதர் நான்கு நாட்கள் தண்ணீர் இல்லாமலும், 3 வாரங்கள் உணவு இல்லாமலும் உயிருடன் இருந்துவிட முடியும். ஆனால், 5 விநாடிகூட சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாது. அப்படியிருக்கும்போது கோடிக்கணக்கான மரங்களைக் கொண்ட அமேசானை புவியின் நுரையீரல் என்று சொல்வதில் எந்தத் தப்பும் இல்லை.

அழிவின் கொடுங்கரம்

உலகில் பணம், சொத்து, செல்வம் போன்றவை வானத்தைப் பொத்துக்கொண்டு கொட்டுவதில்லை என்று நமக்குத் தெரியும். காட்டையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்தே அன்றைய மேற்கத்திய காலனியாதிக்க நாடுகள் முதல் இன்றைய உலகப் பெருமுதலாளிகள் வரை காலம்காலமாகச் செல்வம் சேர்த்து வருகின்றனர்.

அமேசான் காட்டின் 70 சதவீதக் காடழிப்புக்கு வர்த்தகக் கால்நடைப் பண்ணைகளும் வர்த்தக வேளாண்மையுமே காரணம். ‘ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு கால்பந்து மைதான அளவுக்கு அமேசான் காடு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்ற கூற்று, அந்த அழிவின் கொடூரத்தை சற்றே கற்பனை செய்து பார்க்க உதவும். ஆனால், இது வெறும் கணக்கல்ல கணம்தோறும் நிஜத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பழங்குடிகள்தான் காடழிப்புக்கு, காட்டுத்தீக்குக் காரணம் என்ற மூடநம்பிக்கை உலகம் முழுவதும் நீண்ட காலமாகப் பரப்பப்பட்டு வருகிறது. எந்தப் பழங்குடியும் காட்டை அழித்து மாட மாளிகை கட்டிக்கொள்ளவில்லை. ஆனால், நம் நாட்டுப் பெருமுதலாளிகளான ரிலையன்ஸ் அம்பானி, அதானி தொடங்கி உலகப் பெருமுதலாளிகள், பெருநிறுவனங்கள் இன்னும் இன்னும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே போகின்றன.

வலதுசாரி-பழைமைவாதியான ஸெய்ர் போவ்சோனரு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரேசில் அதிபர் ஆனார். அப்போது முதல் அமேசான் காட்டை பாதுகாப்பது அவசியமற்றது என்று தொடர்ந்து அவர் பேசி வருகிறார். இப்போது அமேசானில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்ட காட்டுத்தீ வளர்ந்து பெருகி, தன் நாக்கு பட்ட அனைத்தையும் சாம்பலாக்கி நிற்கிறது. அப்போதும்கூட போவ்சோனரு எதையும் மாற்றிக்கொள்ளவில்லை.

முதலாளித்துவ மூளை படைத்த அதிகார வர்க்கத்தினருக்கு இந்த உலகைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ எந்தக் கவலையுமில்லை என்பதற்கு அமேசான் அழிவைத் தவிர வேறெந்த சாட்சியமும் தேவையில்லை.

என்ன செய்யப் போகிறோம்?

பருவநிலைப் பேரழிவு ஏற்கெனவே நம்மை அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது. பருவநிலைப் பேரழிவைத் தடுக்கக்கூடிய ஆற்றல் காடுகளுக்கே உண்டு. ஆனால், நமக்குத்தான் காடுகள் அழிவதைப் பற்றியோ, காடழிப்பைத் தடுப்பதைப் பற்றியோ கவலையேதுமில்லையே. பிறகு எப்படி பருவநிலைப் பேரழிவைத் தடுத்து நிறுத்துவது?

அமேசான் காடுகளில் 400 பழங்குடி இனங்களைச் சேர்ந்த 10 லட்சம் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். ஊழிக்காலமாக காடுகளின் உண்மையான காவலர்களாக அவர்கள் திகழ்ந்துவருகிறார்கள். என்றைக்கு அவர்கள் கையில் காடுகளை ஒப்படைத்துவிட்டு, ‘நாகரிக மனிதர்’களான நாமெல்லாம் ஒதுங்கி நிற்கிறோமோ, அப்போதுவரை அமேசான் காடுகளைக் காப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. நாம் செய்வோமா?

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close