கட்டுரைகள்
Trending

நுரை… நோய்… நொய்யல்

மணிஷங்கர்

ஒரு ஆற்று வடிநிலத்தின் சிறப்பு பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. அவற்றுள் நீர் மகசூல், வண்டல் மகசூல், நிலத்தின் தரம் மற்றும் அளவு, மேற்பரப்பு நீர், தாவரங்களின் ஆரோக்கியம், மண் வளம் போன்றவை இன்றியமையாதவையாக இருக்கின்றன. ஆனால்,, ஒரு ஆற்று வடிநிலத்தின் அழிவிற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது மனிதனின் பேராசை மட்டும் தான்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி குன்றில் பிறந்து, திருப்பூர் மற்றும் கோவை வழியாக, கரூரில் காவிரியோடு கலக்கும் நொய்யல் ஆறு, மேற்குத் தமிழகத்தின் தொப்புள் கொடி ஆகும். சுமார் 180 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும், 3500 சதுர கி.மீ பரப்பளவும் கொண்ட நொய்யல் ஆற்று வடிநிலம், 1800 சதுர கி.மீ பாசன நிலத்தை பசுமைப்படுத்துகிறது. கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்னும் சிற்றூரில் காவிரியுடன் சங்கமிப்பதால் இப்பெயர் பெற்றது.

நொய்யல் ஆற்றின் இடவமைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் குதித்தோடும் நொய்யல், கிழக்குச் சமவெளிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் வீறுநடை போடுகிறது. மிதவெப்ப மண்டல பருவநிலையில் உயிர்ப்புடன் இருக்கும் நொய்யலின் மேற்குப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரக்காற்றாலும், கிழக்குப் பகுதி கதிரவனின் வெப்பகாற்றாலும் மனித மனங்களை மயக்குகிறது. ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் தென்மேற்குப் பருவமழையும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வடகிழக்குப் பருவமழையும் நொய்யலின் நோன்பை முடித்து வைக்கின்றன. நீரியல் கட்டமைப்புகளைப் பொறுத்தவரை 20 கால்வாய்கள் மற்றும் 2 நீர் தேக்கங்களால் நொய்யல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆறுகளில் நொய்யலும் ஒன்று. சங்ககாலத்தில் “காஞ்சிமாநதி” என்ற பெயரால் நொய்யல் அழைக்கப்பட்டுள்ளது. நொய்யல் நதி நாகரிகத்தின் தொன்மைக்குச் சான்றாக கி.மு. 1500 க்கு முந்தைய காலத்தில் இருந்து மனிதர்கள் இங்கு வசித்துவருவதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “நொய்யல்” என்ற பதத்திற்கு “நோயற்ற” என்று பொருள்.

சோழ சாம்ராஜ்யத்தின் முடியாட்சியில், 30க்கும் மேற்பட்ட குளங்கள், 14 கால்வாய்கள் நொய்யல் ஆற்றில் வெட்டப்பட்டு, அதன் மூலம் நீர் போக்குவரத்து, நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் கட்டமைப்பு என ஆகச்சிறந்த நீர் மேலாண்மையை சோழர்கள் கடைபிடித்து வந்துள்ளனர். ஆனால், சுதந்திர இந்தியாவின் மக்களாட்சியில், நீர் மேலாண்மையை நவீனமயமாக்குவதில் தோல்வியுற்றதோடு, ஏற்கனவே இருந்த நீர் நிலைகளையும் அழித்த பெருமை நம் தலைமுறையையே சாரும். குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பின், கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஆலைக்கழிவுகளாலும் சாயப்பட்டறைகளாலும் நொய்யல் நலிந்து போய்விட்டது. இதன் விளைவாக கொங்கு மண்டலத்தில் வேளாண்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு. வெப்ப நிலை, புவியியல் அமைப்பு, மண்ணின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஆற்று வடிநிலங்களின் நீரியல் சூழல் மற்றும் காலநிலை சூழல் வேறுபடுகின்றன. எனவே தான் ஒவ்வொரு ஆறுக்கும் தனித்துவமான சூழலியல் அமைப்பு உள்ளது அதுவே, பூமியின் உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாத்து வருகிறது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நொய்யலில், ஒரத்துப்பாளையம் மற்றும் ஆத்துப்பாளையம் நீர் தேக்கங்கள் விவசாயத்திற்குத் தேவையான பாசன நீரை வழங்கி வருகின்றன. 90களின் தொடக்கத்தில் திருப்பூரில் அமையப்பெற்ற ஆடைத் தொழிற்சாலைகளின் கழிவு நொய்யலில் கலந்ததையொட்டி, ஒரத்துப்பாளையம் நீர் தேக்கத்திலிருந்து தண்ணீரைத் திறக்கக்கூடாதென விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 1941 ஆம் ஆண்டு திருப்பூரில் வெறும் 2 சாயப்பட்டறைகள் மட்டுமே இருந்த நிலையில், 1997 ஆம் ஆண்டு 866 சாயப்பட்டறைகள் புற்றீசல் போல் பல்கிப் பெருகின. ஆடைத் தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் நாள் ஒன்றுக்கு 9 கோடி லிட்டர் நீரை நொய்யலில் இருந்து எடுத்து பயன்படுத்திவிட்டு, 8.7 கோடி லிட்டர் கழிவு நீரை திறந்துவிடுகின்றன. நீரின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், ஒரத்துப்பாளையம் நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரைத் திறக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், நொய்யல் ஆற்றின் செயல்திட்டங்களை மீன்வளத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இன்றைய நிலையில், ஒரத்துப்பாளையம் நீர் தேக்கம் என்பது கழிவு நீரை சேமித்து வைக்கும் நீர் நிலையாக மாறியுள்ளது. ஆனால், மாசடைந்த நீரை ஆற்றில் திறந்துவிடாமல் தேக்கி வைத்தால், மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை பாதித்துவிடக்கூடும். திருப்பூரில் நிலவும் முறைப்படுத்தப்படாத தொழிற்சாலைக் கழிவு மேலாண்மையால், நொய்யல் ஆற்றின் இயல்பு நிலை மாறியதோடு, அதைச் சார்ந்த விவசாயப் பொருளாதாரமும் சேதமடைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஆலைக்கழிவுநீரைத் தூய்மைபடுத்தும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 160 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. எனினும், நச்சு வேதிப்பொருட்களும் குளோரைடுகளும் தண்ணீரைத் தொடர்ந்து மாசுபடுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலைக் கடுமையாக பாதிக்கும் தொழிற்சாலைகள் அருகில் இருக்கும் நீர் நிலையத்திலிருந்து குறைந்த பட்சம் 1 கி.மீ. தொலைவில் இருக்க வேண்டுமென தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. ஆனால், 2007 ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 239 சாயப்பட்டறைகள், நொய்யல் ஆற்றிலிருந்து 300 மீட்டருக்குள் இயங்கிவருகின்றன. 83 சதவீதத்திற்கும் அதிகமான தனியார் சாயப்பட்டறைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நொய்யலை அசுத்தப்படுத்துகின்றன. இதன் விளைவாக நொய்யலின் உயிர்பன்மையம் பாதிக்கப்பட்டு பல அரிய வகை மீன்கள் ஆற்றின் மேற்பரப்பில் செத்து மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இம்மாதிரியான நீர் மாசுபாட்டுக் கேடுகள் ஆரம்ப கட்டத்திலேயே தீர்க்கப்படாததால் நிலத்தையும் மாசுபடுத்தி விடுகின்றன. இதனால், அந்நிலத்தில் வாழும் மக்களும் பல்வேறு சுகாதாரச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

மெட்ராஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில், நொய்யல் ஆற்று வடி நிலங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் வயிற்றுப்போக்கு, காலரா முதலான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், நான்கில் மூவருக்கு சரும நோய்கள் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவையனைத்தும் குறுகிய கால சுகாதாரச் சீர்கேடுகள் என நாம் எளிதில் கடந்து சென்றுவிட இயலாது. ஏனெனில், இது மலட்டுத்தன்மை போன்ற கொடிய உடல் உபாதைகளுக்கும் வித்திடுகின்றன. அசுத்தமான தண்ணீரால் ஏற்படும் மலட்டுத்தன்மை, பாலின பேதமின்றி அனைவரையும் பாதிக்கிறது. இது சமூக நலத்தையும், மன நலத்தையும் பெரிதும் காயப்படுத்துகிறது.

நொய்யலின் அருகாமையில் இருக்கும் மக்கள், மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் வாழும் ஆண்களின் உயிர் அணுக்கள் எண்ணிக்கை 120 மில்லியனிலிருந்து 40 மில்லியனாகக் குறைந்துள்ளதாகவும் அப்பகுதி மருத்துவர்கள் விவரிக்கின்றனர். சாயப்பட்டறைக் கழிவுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், 80 சதவீதத்துக்கும் அதிகமான கருத்தரித்தல் குறைபாடு நீர் மாசுபாட்டால் உண்டாவதாகத் தெரியவந்துள்ளது. பெண்கள் நலத்தைப் பொறுத்தமட்டில், சினைப்பை சார்ந்த நோய்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பெரும் சூழல் மாற்றங்களுக்கு எளிதில் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மனிதர்களுக்கே இப்படியொரு நிலையெனில், பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களும், தாவரங்களும், விலங்குகளும் சந்தித்துக் கொண்டிருக்கும் துயரங்களை எவ்வாறு விளக்குவது? வெறும் நீர் மாசுபாடாக இருந்த இப்பிரச்சனை, அரசுகளின் அலட்சியத்தால் பரிணாம வளர்ச்சி அடைந்து நிலத்தைப் பாதித்து, பின் நிலத்தில் வாழும் சிறு உயிர்களை வதைத்து, இறுதியாக மனிதர்களையும் சாகடிக்கும் வலிமையுடன் விளங்குகிறது. மாசடைந்த நீருடன் போராடிக்கொண்டிருக்கும் விவசாயத்தை மீட்டெக்க முடியாமல், எந்தத் தொழிற்சாலைகளால் விவசாயத்தை விடுத்து மக்கள் வெளியேறினரோ, அந்தத் தொழிற்சாலைகளுக்கே வேலைக்குச் சென்று வறுமையைப் போக்க முயலும் அவலத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

மணிசங்கர்
மணிசங்கர்

இந்தியாவின் அனைத்து நதிகளும் ஏதோ ஒரு சூழலியல் பிரச்சனைக்கு உள்ளாகின்றன என்ற போதிலும், நொய்யலின் சூழலியல் சீர்கேடு சற்று தனித்துவமானது. பருவமழைப் பொழிவால் நொய்யலில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் போது, சாயப்பட்டறைகள் சட்டவிரோதமாக கழிவு நீரை திறந்துவிடுகின்றன. இதனால், மேகங்கள் உடைந்து கீழே விழுந்தது போலக் காட்சியளிக்கும் நுரை பொங்கிய நீரால் நிறைந்து வழிகிறது நொய்யல். இதனால், அப்பகுதி மக்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் முறையிட்டனர். அதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக செயல்பட்ட 300க்கும் அதிகமான சாயப்பட்டறைகளை நிரந்தரமாக மூடியது.  மேலும் 2011 ஆம் ஆண்டு, 700க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளுக்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்து சில தினங்களாக கோவை மற்றும் திருப்பூரில் பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் நுரை பொங்கிய நிலையில் சாயக்கழிவுகளுடன் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் இந்த சூழலியல், சுகாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளைக் களைய அரசாங்கம் எவ்வித ஆய்வுகளையும் முன்னெடுக்கவில்லை. பொது மக்களும் பல்வேறு போராட்ட வடிவங்களில் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், 25 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்படுவதை அரசாங்கம் அலட்சியமாகக் கையாள்கிறது. பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் கொடுத்த அழுத்தத்தின் பயனாக, நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க 150 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதன் செயல்திட்டம் குறித்தோ, நிதி மேலாண்மை குறித்தோ எவ்வித அறிவிப்புகளையும் அரசு வெளியிடவில்லை.

உணவுப் பாதுகாப்பின்மை, மேற்பரப்பு நீர் மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு, நிலத்தடி நீர் குறைதல், காற்று மாசுபாடு, மண்வளம் குன்றுதல், உயிர்ப்பன்மையம் பாதித்தல் என நச்சுக் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் இந்த மரத்தின் ஆணி வேர், முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையே ஆகும். எனினும், அனைத்து சாயப்பட்டறைகளையும் உடனடியாக மூடுமாறு அரசாணை பிறப்பித்தலும் இதற்கு நிரந்தரத் தீர்வாகாது. ஏனெனில், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களையும், ஆடைத்தொழிற்சாலைகளின் ஏற்றுமதியால் வரும் அந்நிய செலாவணியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களின் மூலம் மாற்று வேலைகளில் பணியமர்த்திவிட்டு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை சாயப்பட்டறைகளை நிறுவ வேண்டும். தவிர்க்க முடியாத சூழல்களில், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டுமாயின் அவற்றின் கழிவுகளை தூய்மைப்படுத்தி சுத்திகரிக்கும் தொழில்நுட்பங்களும் உள்கட்டமைப்புகளும் கட்டாயம் நிறுவப்பட வேண்டும். அப்போது தான் துருப்பிடித்த மம்பட்டியை உழவர்கள் தூசிதட்டி எடுப்பார்கள்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close