சிறுகதைகள்
Trending

இதுவோர் இரவுப் பணி- ஜொனிட்டா மாலே, உகாண்டா

மொழிபெயர்ப்பு: லதா அருணாச்சலம்

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. என்னுடைய இளம் பிராயம் ஒரு வகையில் இந்தப் பணிக்கு என்னை ஆயத்தப் படுத்தி இருக்கிறது எனலாம்-இதைப் பணியென்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால்.. என் அம்மாவும் இதே பணியில் இருந்தார், அவருடைய அம்மாவும் கூட. அதனால் இதிலிருந்து தப்புவதெல்லாம் இயலாத காரியம் என்றே தோன்றியது.

குளிரான மாலை. ஏழு மணி இருக்கலாம். நிச்சயமாக இன்று மழை பெய்யப் போவதில்லை. மழை,  தொழிலை சுத்தமாகக் கெடுத்து விடும்.மழை கொட்டும் போது தெருவோரம் நிற்பதற்கு உகந்த இடமில்லை தானே.. ஆழ்ந்த நீலத்தில் இருந்த ஆகாயத்தில் ஆங்காங்கே சில நட்சத்திரங்கள் சிதறியிருந்தன. அதனால் தான் மழை வராது எனத் தெரிந்தது. நட்சத்திரங்கள் நிரம்பிய ஆகாயம் நிச்சயம் மழையைத் தடுத்து விடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நல்ல வேளை ! எனது இடுப்பின் வளைவுகளை எடுப்பாக வெளிக்காட்டும் உடலை ஒட்டி ,இழுத்துப் பிடிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்திருக்கிறேன். மற்ற பெண்களுக்கிடையே, அதுவும் அனைவரும் ஒன்று போலவே கறுப்புத் தோல் கொண்டவர்களாக இருக்கையில் பார்வைக்குப் பளிச்சென்று தெரிய இந்த வெண்மைதான் தகுந்த நிறம். நேர்த்தியாக ஒப்பனை செய்துள்ளேன்.எப்படி ஒப்பனை செய்து கொள்வதென்பதை அம்மா தான் கற்றுக் கொடுத்தார். அடர் சிவப்பு வண்ண லிப்ஸ்டிக் ( இளஞ்சிவப்பு வெளுத்த நிறமுடையவர்களுக்கு) மற்றும் கொஞ்சமாக இமைகளின் மீது வண்ணத் தீற்றல். ஆறு அங்குலம் உயரமுள்ள காலணியை அணிந்திருக்கிறேன். இது நாகரிகத்திற்காகவெல்லாம் இல்லை, மற்றவர்கள் கண்ணில் தெரிய வேண்டுமென்பதற்காக மட்டுமே. அங்குள்ள குட்டையான பெண்களில் 5’1 அங்குலமே உள்ள நானும் ஒருத்தி. நான் இடுப்புக்குக் கீழே உள்ளாடை ஏதும் அணியவில்லை; சில சமயங்களில், நான் வழங்கவிருப்பதை முன்னோட்டமாகக் காண்பிப்பதே வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான ஒரே வழி என்று அறிந்து வைத்திருந்தேன்.

பர்ட்டன் வீதியில் ,யூசுஃப் லுலு சாலைக்குச் சற்று அருகிலுள்ள ரவுண்ட்டானாவின் அருகே நின்று கொண்டிருந்தேன். நிறையப் பெண்கள் தயாராக நின்றிருந்தார்கள். தெரு விளக்குகள் ஒன்று கூட இல்லை. எனக்கு அது பிடித்திருந்தது. ஒரு சிறிய விளக்கொளி தெரிந்தாலே, வாடிக்கையாளர் கிடைக்க சாத்தியம் என்று அர்த்தம். இந்தத் தெருவிலுள்ள கட்டிடங்கள் முன்பு வீடாக இருந்து இப்போது கடைகளாக மாற்றப் பட்டு விட்டன. கம்பீரமான கேட்டுகளுடன் முகப்பில் பெரிய பெயர்ப் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் அங்கிருந்து சிறு சப்தம் கூட எழவில்லை. வெளிச்சம்! சட்டெனக் குனிந்து, என்னைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கப் போவதென்னவென்று காரை ஓட்டுபவர் அனுமானம் செய்யுமளவு கண நேரக் காட்சி தந்தேன். மேலும் சற்றுக் குனிந்து எனது முகமும் கொஞ்சம் தெரியும்படி சற்றே உடலை வளைத்தேன். இப்போது மெலிதாகப் புன்னகைத்தேன். அதில் தேர்ந்தவளாகி விட்டேன்.அதெல்லாம் நாளான பயிற்சியில் தானாக வந்து விடுகிறது.புன்னகைப்பதற்கு நான் மகிழ்ச்சியாகவெல்லாம் இருக்கத் தேவையில்லை. உங்களுடைய சிறிய அழைப்புக்கே உடனடியாகப் புன்னகையை வரவழைத்துக் கொள்ள இயலும்…அது பணிக்குத் தேவையான தகுதி. ஒரு புன்னகை.

வெண்மை நிற கரோனா கார் வேகத்தைக் குறைத்தவாறு அணுகியது. வண்டியைப் பார்த்ததுமே அதில் வருபவர் நான் எதிர்பார்க்குமளவு பெருந்தொகையை தரக் கூடியவர் அல்ல என்று புரிந்து கொள்ள முடியும், ஆனாலும் என்னால் வாய்ப்பை நழுவ விட முடியாது என்பதை வெகு நாட்களுக்கு முன்பே அறிந்து கொண்டேன்.அப்படி விட்டுவிடுவதென்பது பட்டினியில் தள்ளக் கூடும்.கறுப்பு முகமொன்று என்னை வெறித்துப் பார்த்தது, என் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அகன்ற விழிகளும் , மின்னும் பற்களும் தான். “உள்ளே வா” என்று பொறுமையின்றிக் கத்தினான். மற்றவர்கள் யாரும் பார்த்து விடும் முன் கிளம்பிச் செல்லும் அவசரம், சிரிப்பு மாறாமல் ஏறிக் காருக்குள் அமர்ந்தேன், எங்கே போகிறோம் என்று தெரியவில்லை, இருப்பினும் எனக்குச் சேர வேண்டிய தொகை பற்றி நான் தெளிவாக இருக்க வேண்டும், புருவத்தை உயர்த்திக் கொண்டே, சத்தமாகக் கேட்டேன், கொஞ்ச நேரமா, இல்லை நீண்ட நேரமா?வழக்கமாக நான் செய்யும் செயல் இது.. ’நேரமாகலாம், எவ்வளவு?’ இது சிரமமான காரியமாகத் தான் இருக்கப் போகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டே , ஐம்பதாயிரம்* என்றேன். சரி என்று உடனடியாகச் சொல்லிக் கொண்டே காரைச் செலுத்தியவன், திந்தா என்ற இடத்திற்குப் போகிறான் என அனுமானித்தேன். நால்யா என்னும் பகுதியில் நான் வசிக்கிறேன், அங்கிருந்து அது மிகவும் பக்கம், வீட்டுக்குப் போவதற்கு அதிகம் செலவளிக்கத் தேவையில்லை. மேக்ஸ் மோட்டலை அடைந்தோம். திந்தாவில் வசிக்கும் எல்லோருமே இந்த இடத்தைத் தான் எடுப்பார்கள். காரிலிருந்து இறங்கி வேகமாக நடந்தான். அவனுக்கு விருப்பமற்ற நாய்க் குட்டியைப் போல பின் தொடர்ந்தேன். இப்படித் தான், ஏதோ உபகாரம் செய்வது போல ஆரம்பத்தில் நடந்து கொள்வார்கள்.இது எனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கும். அறையை அடைந்ததும், நேரத்தை சற்றும் வீணடிக்காமல் ஆடைகளைக் களைந்தான். இரட்டைப் படுக்கையில், கெட்டியான பழுப்பு வண்ணப் போர்வையை சுற்றிக் கொண்டு படுத்திருந்தான். இந்த மோட்டலில் எல்லாமே சோபையற்று இருக்கும். படுக்கை விரிப்புக்குப் பொருத்தமான அழுக்கான பழுப்புத் திரைச் சீலைகள்,வெளுத்த மஞ்சள் வண்ணம் பூசியிருக்கும் சுவர்கள், மலிவான மர அறைகலன்கள், எல்லாமே ஏதோ பக்கத்திலிருக்கும் ஆரம்பப் பள்ளியிலிருந்து நகர்த்தி வந்து இங்கு போடப்பட்டது போல இருக்கும். இந்த மோட்டலைச் சார்ந்த அனைத்துமே மந்தமாக இருக்கும், இங்கு வரும் மனிதர்களைத் தவிர..அதாவது வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்கள். நாள் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தைத் தன் உல்லாசத்துக்காக செலவு செய்ய முடிவு செய்து வரும் போடா போடா *மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முதலாக , இந்த இடத்திற்கு வருவதையே ரகசியமாக வைத்திருக்க முயலும் பெரும் செல்வந்தர்கள் வரை..அவனைப் பார்த்தேன், நல்ல உடல் கட்டுடன்,வழக்கமாக வருபவர்களைக் காட்டிலும் நன்றாக இருந்தான். கண்களில் காத்திருப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு வெறுப்பாக இருப்பதில் இதுவும் ஒன்று. ஆரம்பம்..எனது ஆடைகளைக் களைந்தேன். அவன் நீண்ட நேரத்திற்குப் பேசியிருந்தாலும் கூட குறுகிய நேரமே இருக்க முடிவு செய்தேன். அதிகமாக ஈடுபடும் மனநிலையில் நான் இல்லை. அவனுக்கு நேர வித்தியாசம் தெரியாத அளவுக்கு மகிழ்வித்து விட வேண்டியது தான்.அதில் தான் ஈடுபட்டிருந்தோம். இது அவ்வளவாக நான் வெறுக்காத செயல். நான் அவர்களுக்கு அளிக்கும் திருப்தி,அனைவருக்கும்..மோட்டலின் கட்டில் சப்தமிட்டது. அடுத்த அறையின் கட்டிலும் இதே போன்ற சப்தமெழுப்பியது அரைகுறையாகக் காதில் விழுந்தது . இணைந்த சந்தம் போல,இணையான தாளம் போல…அவன் முகம் வலியால் கோணியது..நான் எனது பணியைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று பொருள்..அவனுக்கு இது முதல் முறை, அது உறுதியாகத் தெரிந்தது. எவ்வளவு தொகை தர வேண்டுமென்று கேட்டான். யாருமே அப்படிக் கேட்டதில்லை. எல்லாம் முடிந்தது.

அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது, உண்மையில், நான் மிக மிக வெறுப்பது இதைத் தான் என்று தோன்றியது. சுய வெறுப்பு. இவை அனைத்திற்கும் காரணமென்று அம்மாவின் மீது பழி போடத் துவங்கும் போதெல்லாம், ஒவ்வொரு இரவும் வருபவர்கள் சென்றபின் அவள் அழுவதைப் பார்த்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும்.வெவ்வேறு மனிதர்கள்..எது அவளை அப்படி ஒரு துயரம் கொள்ள வைத்தது என்று எனக்கு வியப்பாக இருக்கும். யாருடைய தயவுமின்றி தன் சொந்தக் காலில் நின்று எங்களைப் பார்த்துக் கொள்ளுமளவு அவளிடம் போதிய பணம் இருந்தது, அவள் ஒரு நல்ல அம்மாவும் கூட.. இப்போது , நான் வளர்ந்த பின்பு தான் எனக்குப் புரிகிறது. “பணத்தைக் கொடு” நான் கத்தினேன். இப்போது நான் புன்னகைக்கவில்லை. பண விஷயம் என்று வரும் போது புன்னகை வேலை செய்யாது.அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன், முறைத்தேன் எனச் சொல்லலாம். கசங்கிய ஐம்பதாயிரம் ஷில்லிங் நோட்டுகளை எடுத்தான். பழைய நோட்டுகள், மங்கிய தாள்கள். அவன் மனது மாறுவதற்குள் வெடுக்கென அதைப் பிடுங்கி என் உள்ளாடைக்குள் செருகிக் கொண்டேன்.அங்கிருந்த சிறிய குளியலறைக்குச் சென்றான். அவன் உண்மையிலேயே முதல் முறையாக வந்திருக்கிறான். நான் நேரத்தை வீணடிக்காமல் அங்கே கிடந்த அவன் கால் சட்டைப் பையைத் துழாவினேன்.ஒன்றும் கிடைக்கவில்லை. சட்டைப் பையைத் தேடியதில் பர்ஸ் இருந்தது. அதில் சில கசங்கிய பத்தாயிரம் நோட்டுத் தாள்கள் இருந்தன. எடுத்துக் கொண்டு, உடனே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். சாலையிலிருந்து சற்று உள்ளே தள்ளி வசதியான இடத்தில்  மேக்ஸ் மோட்டல் அமைந்திருந்தது, அல்லது வசதியற்ற இடம் என்று சொல்லலாமோ, ஏனென்றால் நான் ஒரு போடா போடா ஆளைக் கூவி அழைக்க வேண்டும்.

ஆஹா, இப்போது வீடு வந்து சேர்ந்து விட்டேன். வீட்டுக்கு வரும் முன் அவசரமாக லெக்கிங்ஸ் அணிந்து கொண்டேன். லெக்கிங்ஸ் நடைமுறையில் இல்லாத காலத்தில் பெண்கள் என்ன செய்திருப்பார்களோ என்று வியந்து கொள்வேன். கதவைத் திறந்த அம்மா முகத்தில் புன்னகையுடன் என்னைப் பார்த்தாள்.அவளுக்குப் பணம் கொடுக்கப் போகிறேன் என்று அறிவாள். வீட்டிற்கு மனிதர்களை அழைத்து வருவதை என்றோ நிறுத்தி விட்டாள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை.நான் எப்படி இதற்குள் நுழைந்தேன்? என்னாலேயே விளங்கிக் கொள்ள முடியவில்லை.ஒருவேளை பல அப்பாக்கள் எனக்கு இருந்ததாலா,தினமும் அம்மா தன்னை ஒப்பனை செய்து கொள்வதையும் எப்படியோ எங்களைக் கவனித்துக் கொண்டதையும் கண்ணால் பார்த்த காரணமா, அல்லது உன் உடலை நன்றாகப் பேணிப் பாதுகாத்துக் கொள், வாழ்க்கையை ஓட்டுவதற்கு அது எப்போது தேவைப்படுமென்று உனக்கே தெரியாது என்று சொல்லிச் சொல்லி அம்மா வளர்த்த காரணத்தாலா?அதுவாகத்தான் இருக்கக் கூடும். நான் வரவேற்பாளராகப் பணி புரிகிறேன், அதிலிருந்து தான் வருமானம் கிடைக்கிறது. இப்படித் தான் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன், நம்புவதாக அவளும் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறாள். நம்பியிருக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை.தன்னுடைய சிறிய கரங்களை எதிர்பார்ப்புடன் நீட்டிக் கொண்டிருந்தாள். இந்த ஐம்பது வயதில் முன்பு இருந்தது போல அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும் கட்டான உடல் வடிவுடன் இருந்தாள் அம்மா. அவள் செய்து வந்த பணியால் உடல் துவண்டு விட்டது. அவளின் ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னாலும் எப்போதும் வருத்தத்தின் சாயல் நிழலாக ஆடும், அவளது இரவுப் பணியின் பாதிப்பாக இருக்கலாம். அதனால் தான் நான் இதை நிறுத்தி விடப் போகிறேன், உறுதியாக, விரைவில்… என்றேனும் ஒரு நாள்…

அம்மாவுக்கு முகமன் சொல்லிய பின் ஐம்பதாயிரம் நோட்டுத் தாளை கையில் தந்தேன். மலர்ந்த புன்னகையுடன் நான் அவளை எப்படியெல்லாம் பெருமிதப் படுத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். இப்போது சந்தேகமறத் தெரிந்து போனது. இது தான், இதைத்தான்..அம்மா என்பால் தெரிவிக்கும் இந்த மதிப்பும் ஆராதனையும் தான் நான் மிக மிக வெறுக்கும் பகுதி. அறையை நோக்கி நடந்தேன். நாளை மிக நீண்ட , களைப்பான நாளாக இருக்கப் போகிறது, எனது கல்லூரி வகுப்பில் நடக்கவிருக்கும் சமூகவியல் தேர்வை  நான் எழுத வேண்டும்.

ஷில்லிங்- உகாண்டா நாட்டுப் பணம் ( ஐம்பதாயிரம் ஷில்லிங் , ஏறத்தாழ ஆயிரம் ரூபாய்)

*போடா போடா- மோட்டார் சைக்கிள் டாக்ஸி

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close