கட்டுரைகள்
Trending

நேசமித்ரனின் துடிக்கூத்து

பழனிக்குமார்

கவிஞர் நேசமித்ரன் எழுதிய “துடிக்கூத்து” கவிதைத் தொகுப்பை முன் வைத்து….

25/8/2019 அன்று வாசகசாலை ஒருங்கிணைத்த “துடிக்கூத்து” கலந்துரையாடல் நிகழ்வில் வழங்கிய சிறப்புரையைக் கட்டுரையாக எழுத எத்தனித்தது.

what is next? என்பது மேலை நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சூத்திரம். சூத்திரம் என்பதை விட அதை ஒரு வாழ்வியல் முறையாகவே தொன்றுதொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கலத்தைக் கண்டார்கள், கடலைக் கண்டார்கள், கப்பலைக் கண்டார்கள், பயணத்தைக் கண்டார்கள், இன்னொரு நாட்டைக் கண்டார்கள், வாணிபத்தைக் கண்டார்கள், காலணியாதிக்கத்தைக் கண்டார்கள். அடுத்து என்ன என்பதை ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அடுத்தப் புத்தகத்திற்குச் சென்ற காலகட்டத்தில் எழுதிய புத்தகத்தைத் தள்ளி நின்று பார்த்திருக்கக் கூடும். what is next  என்ற உளவியல் ரீதியான தர்க்கத்தை  இப்படி பொருத்திப்பார்த்தால் எழுதப்பட்ட இலக்கிய வகைகளை அவர்கள் எப்படிப் பகுப்பாய்வு செய்திருப்பார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பல பண்பாட்டு வாழ்வியல் முறைகளை நாகரிகக்கூறுகளை மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நம் நாடும் இவ்வழிமுறையைச் செய்து பார்க்கத்தான் ஆசைப்படும்.

ஆனால், நம் தமிழ் மொழிக்கான வாழ்வியல் கூறு இலக்கியத்தோடு சார்புடைத்து. பரணியும் அகம், புறம் நானூறும் வாழ்வியலை ஆவணப்படுத்தியதோடு வாழ்வியலும் இலக்கியமும் எப்படி ஒன்றாய் இயைந்து போயின என்பதற்கான பாங்காகவும் இருக்கின்றன.

இருப்பினும், இலக்கியங்களைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் பின்நவீனத்துவ உலகம் பல உத்திகளைக் கவிதையின் வடிவில் கொண்டு வந்தது.

புனைவு, படிமம், தொன்மம் வகையறாக்களின் வழியே கவிதைகளை ஒழுங்குபடுத்தியும், கவிஞர்களை செம்மைப்படுத்தியும், விமர்சனப்போக்கு திகழ ஆரம்பித்தது.

ஒரே சீரான விமர்சனப்போக்கு இருக்கிறது என்பதில் மாறுபாடுகளோ, முரணோ இருந்தாலும் எடுத்த படைப்பை விடுத்து படைப்பாளியையும், படைப்பாளி சார் இலக்கிய அமைப்பையும், அது சார் படைப்பைப் புகழும் அல்லது விமர்சிக்கும் வாசகனின் வாசிப்புலக பின்புலத்தையும் அலசி ஆராயும் அழுக்கு இலக்கிய அரசியலுக்கு வாய்ப்பின்றி வெறும் படைப்பை மட்டும் திறனாய்வு செய்யும் விமர்சனப்போக்குகள் இலக்கியத்திற்கு வளர்ச்சியைத் தரும். மேலை நாட்டின் விமர்சனப்போக்குகளோடு உடன்பட்ட பல இலக்கிய விமர்சன அளவைகளில் இரசனைகளின் வாயிலாகவும், நம் பண்பாட்டு அளவைகளைப் போல் உணரப்படும் அனுபவ வாயிலாகவும், உணர்வுகளின் வாயிலாகவும் துடிக்கூத்தை நான் அணுகினேன்.

இரசனைகளின் வழி துடிக்கூத்து

 

பொதுவாய் கவிஞர் நேசமித்ரனின் சொற்ப்ரயோகங்களுக்கு நான் ரசிகன். இரசனையே ஒரு கவிதையின்பால் என்னை ஈர்க்கிறது. அதற்குப் பின்பான அனுபவங்கள் என் உளவியல் சார்ந்தோ, அனுபவம் சார்ந்தோ, கவிதையின் உளவியல் சார்ந்தோ இல்லை எல்லோர்க்கும் பொதுவான சூழல் சார்ந்தோ அமைகிறது. முதலில் ஈர்க்கப்படும் உணர்ச்சியை நான் இரசனை என்றழைப்பது உங்களுக்குத் தடங்கலாக இருக்காது என்பது என் நம்பிக்கை.

ஒரு காட்டின் இரவை,

“ பனிக்காலக் காட்டிற்கு வேறு காது

இரவுக்கு வேறு குரல்

வசந்த காலத்திற்கு வேறு சிறகுகள் ‘

நண்ப

காடென்பது செங்குத்துப் பூங்கா அல்ல.

காடென்பது பூமியின் எஞ்சிய திமில்

காடென்பது நம் நுரையீரலுக்கு மிஞ்சிய முலைவாசம்” என்று ஒரு கவிதை இருக்கிறது.

இன்னொரு கவிதையில்

“எலும்புக்கூட்டிலிருந்து ஒரு நதியை உயிர்ப்பிக்க

ஆறு கோடி பேரின்

நவகண்டம் கேட்கிறாள்

நூறு கோடி முகமுடையாள்”  என்று எழுதியிருக்கிறார்.

நவகண்டம் என்பது உடலை ஒன்பது பாகங்களாகத் துண்டித்து குலதெய்வத்திற்கு படையல் கொடுப்பது. பரணி இலக்கியத்தில் கொற்றவைக்கு நவகண்டம் செய்தபடிக்கும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நவகண்டச் சிற்பங்களும் ஆதாரங்கள் இருக்கின்றன.

என் பார்வையில் அந்தக் கவிதையில் நவகண்டம் என்ற வார்த்தைக்குப் பதில் வெறுமனே பலி என்று சொல்லாடியிருந்தால் கூட கவிதை முழுமை பெற்றிருக்கும்.

முழுமை என்பது வேறு அடரழகு என்பது வேறு.

நவகண்டம் என்பது கவிதைக்கான வலியைப் பூர்த்தி செய்கிறது. அடர் இறகுகள் கொண்ட பறவை தன்னலகால் தன் சிறகையின் அடர்த்தியைக் குறைத்துக் கொண்டே இருப்பதே பறவை உயர உயர பறக்கக் காரணமென்பார்கள். அதுபோலவே சொற்சிக்கனமே சில சமயங்களில் கவிதையை உயர்த்திக் காண்பிக்கிறது.

“scenery is fine . but human nature is finer”  என்று கீட்ஸின் வாசகம் இருக்கிறது.

கடலின் நடுவே திக்கற்று துடுப்புகளற்று கைவிடப்பட்ட படகு அலைகளினடுவே அலைக்கழிக்கப்படுவதை நேசமித்ரன் மனிதச் செயல்களின் விளைவாய் கொண்டு போக முடியாத சடலங்களின் சவப்பெட்டிகள் புதைக்கப்பட்ட ஓர் ஊரினை அந்தப் படகின் படிமத்திலேற்றுகிறார்.

புதுக்கவிதை என்பது வடிவத்தில் புது வடிவங்கள் காட்டுவதோ அல்லது புதுப்புது வார்த்தை ஜாலங்கள் விளையாடுவதோ அற்று பாடுபொருளை புதுவிதமாய் அணுகுவது அல்லது புது பாடுபொருளை கவித்துவத்தில் நுழைப்பதே ஆகும்.

பறவையின் அலகையும் தோட்டாவையும் ஒப்பிடும் நேசமித்ரன் தன் துடிக்கூத்தில் மரம் துளைத்து கூடு செய்ய முடிகிறதை விட வெறும் ஒரு தோட்டாவின் பயணம் எவ்வளவு குறுகியது என முடிக்கிறார்.

அனுபவங்களின் வழி துடிக்கூத்து

அறுபது வருடங்களுக்கு முன்னதாகவே புதுமைப்பித்தன் போகிற போக்கில் கவிதைக்கான விமர்சனங்களின் மீது தன் கருத்தை ஏற்றிவிட்டுப் போயிருக்கிறார். “கவிதைக்கான விமர்சனங்களில் நாம் தோய்ந்து கவிதையின் வடிவங்களைப் பற்றி ஆராய்ந்தோமே தவிர அந்தக் கவிதை கூற வரும் கருத்தை நாம் ஆராய்வதில்லை” என்பதே அது ஆகும்.

வடிவங்கள் தவிர கவிதையின் உட்புகக் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.

ஒரு கவிதையின் வழி கவிஞன் தன் அனுபவத்தை மட்டும் கூறினால் அது ஆவணம். கவிதையைப் படிப்பது ஓர் அனுபவமென வாசகனுக்கு உணரப்படுமாயின் கவிதை எழுதப்பட்டதற்கானப் பேற்றை கவிஞன் உணர்கிறான்.

அசௌகர்யங்களுக்கு வருந்தும் அரசர் என்ற கவிதையில்

நீண்ட நெடிய ATM  வரிசையில் நிற்கும் கால்களை எழுதுகிறார்கள். கண் முன் காட்சிப்படுத்தப்படும் நெடிய நிரலை நாம் நின்ற நிரலையோ அல்லது நாம் கண் முன் கண்ட நிரலையோ அனுபவிக்க உணர்த்துவதுடன் அது சார் அசௌகர்ய சூழலை ஏற்படுத்திய ஓர் அரசை நம் முன் தலை குனிய நிறுத்துகிறது. இப்படி நிற்க வாய்ப்பு வழங்கிய அரசின் கொடுமைகளை நாம் அனுபவித்ததை நமக்கே உணர்த்துகிறது.

விருந்தோம்பும் அரசர் என்ற கவிதையில், அரசரின் விருந்தோம்பல் உணவுகளும் அது நடக்கும் இடத்தையும் விவரிக்கும் நேசமித்ரன் விருந்தோம்பலின் வெளியே ஒரு தற்கொலைத்த விவசாயியின் இறுதிச்சடங்கு இவ்வழியாய்த்தான் போகுமென முடிக்கையில் கையறு நிலையில் இருக்கும் விவசாயிகளின் அனுபவத்தையோ அல்லது ஓர் அரசு, தற்கொலைத்த விவசாயிகளின் மண் மீது எள்ளளவும் அக்கறையற்று விருந்தோம்பிக் கொண்டிருக்கும் உணர்வின் மீதான வெறுப்பையோ பிரக்ஞையற்ற ஒரு குரலுக்கான அனுபவத்தையோ நம் மீது ஏற்றுகிறார்.

உணர்வுகளின் வழி துடிக்கூத்து

கவிதை என்பது குழந்தைகளின் முன் கொடுக்கப்படும் பந்தைப் போன்றது. இங்கு பந்து என்பது ஒரு குறியீடு. குழந்தை பந்து இல்லாதத் தருணங்களில் பந்து போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு வீசிவிளையாடும். எதுவுமே அற்ற தருணங்களில் கூட குழந்தை பந்து இருப்பதாய் கைகளை வீசி ஆடும். கவிதையும் அப்படியான குழந்தைமை கொண்டது. படிப்பவனை அப்படியொரு குழந்தைமைக்குள் ஆட்டி வைக்கிறது. ஒவ்வோர் அனுபவமும் ஒவ்வொருவருக்கும் அனுபவித்த ஞாபகங்களை அல்லது அதுவரை அனுபவித்திராத ஓரனுபவத்தை வெறும் புனைவுகளின் வழியே அனுபவத்திற்குள் அனுபவிக்க அனுமதிக்கிறது.

மெல்ல மெல்ல அனுபவங்களை கவிதை மூலம் படிக்கப் படிக்க ஏதேனும் ஒரு கவிதையில் அந்த அனுபவம் நம் உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு நாம் உணர்வுகளுக்காளாவது தவிர்க்க முடியாததாகிறது.

ஓர் எதேச்சதிகாரப் பேரரசர் தற்கொலைத்த விவசாயிகளின் முதுகெலும்புகளாலான செங்கோலை வைத்துக் கொண்டு தன்னை பொதுவுடைமைவாதியாக போலியாகக் காட்டிக் கொண்டு ஆட்சி செய்கிறார்.

“நம்மைப் பிதுக்கி பிறந்தாக வேண்டிய காலத்தை பரிசளித்திருக்கிறார் நம் அரசர்”

என்று ஒரு வரி ஒரு கவிதையில் தருகிறார்.  நம்மைப் பிதுக்கி என்பது நமக்குள்ளிருந்து…நமக்கு நாமே பிறந்தாக வேண்டிய கால கட்டம் என்பது இது தான் என்றும் அர்த்தப்படுகிறது.

ப்ரார்த்தனையைக் கேட்க தெய்வம் இல்லாத ஊரில் யாரோ உருட்டும் சொக்காட்டானில் பிரஜைகள் வெட்டப்படுவதை யாரோ கடையும் அமுதிற்கு பிஞ்சு மண்டையோடுகளை மத்தாக்கி  இருள் எங்கும் இருளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெறுமனே எழுதித் தீரும் ஒரு கையாலாகாத கவிஞனுக்கு என்ன தண்டனை என ப்ரக்ஞை அற்ற ஒரு சாமான்யனின் குரலைத் தன் குரலாகப் பாவித்து உணர்வுகளில் ஒரு கவிதை கலந்து போகிறது.

ஈட்டியதெல்லாம் காலில் வைத்து

வாமனனுக்கு தலை நீட்டிய

மகாவலித்தருணமென

ஒரு தேசத்து மக்களின் வரிகளை உயிரைப் பிடுங்கும் வலியென உணரச் செய்கிறது.

ஒரு தலைமுறையை அகதிகளாக்கி எந்தப் பிள்ளையை வளர்க்கிறார் எனப் பேரரசரை நோக்கி கோபக்கணையில் கேள்வி கேட்கும் பொழுதும்,

கெடுக நின் ஆயுள் எனச் சபிக்கும் பொழுதும், துடிக்கூத்தின் உணர்வு வழி நாம் ஆளப்படுகிறோம்.

துடிக்கூத்தில் சில கவிதைகளின் பின்புலத்தில் நிகழ்ந்த அவலச்சூழலை நேசமித்ரன் நேரடியாகப் பதியாவிட்டாலும், அவலச்சூழலுக்கான ஒரு வலியின் குரலாக அல்லது ஆற்றுப்படுத்தும் ஓரிலக்கியக் கவிதையாகவே துடிக்கூத்து நிகழ்கிறது.

இன்றைய அரசியல் களத்திற்குப் பொருந்துவதோடு மட்டுமல்லாமல் நேசமித்ரனின் இந்த துடிக்கூத்தை எத்தனை ஆண்டுகள் கழித்து மீள் வாசிப்பிற்கு ஆட்படுத்தினாலும் கூட  மக்கள் விரோத ஆட்சிக்கெதிராகத் தன் துடிக்கூத்தை இளமை குன்றாமல் ஆடிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு எதார்த்த அரசியலின் பின்புல எதேச்சதிகாரத்தை

நலிந்தவன் மேல் பாயும் வன்ம ஏகாதியபத்தியத்தை

ஒரு சாமான்யனின் வலியோடு ஆடி நிமிர்ந்து நிற்கிறது நேசமித்ரனின் துடிக்கூத்து.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close