சிறுகதைகள்

நெஞ்சம் மறப்பதில்லை – விஜய் வேல்துரை

சிறுகதை | வாசகசாலை

கசப்பான இரசாயனங்களாலும்,  அமிலங்களாலும் கரைத்துத் தொலைத்த அந்த நினைவுகளின் மிச்சம் சிறு துளி உள்ளே ஒளிந்து கிடந்ததென்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஐந்து வருடங்கள் கழித்து அது மூளையின் ஆழத்தில் கசிந்து, பல்கிப் பெருகி தலையை வெடிக்க வைக்கும் அளவிற்கு வந்து நிற்கிறது.

கீதா காரை நிதானத்துடன் வேகமாக ஓட்டி வருகிறாள். அவளருகே நான் எதிலும் ஆர்வமில்லாதவனாய் தலையை இடப்புறம் கார் கண்ணாடியில் சாய்த்தபடி வேகமாகப் பின்னோக்கி நகரும் உலகை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தேன். காரில் பழைய தமிழ் சோகப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. எனக்கு இந்தப் பயணத்தில் எந்த விருப்பமும் இல்லை. கீதாதான் “பழனி சார் நமக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்காரு. அவர் வைஃப் இறந்து ஒரு வாரம் ஆகுது. நேர்ல பாத்து ஆறுதல் சொல்லனும். உன்னைய பார்த்தா கண்டிப்பா சந்தோசப்படுவாரு” என்று சொல்லி வற்புறுத்தினாள். ஆனால் அங்கு செல்வதில் எனக்கு வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.

“JAIN ABHINAVAM APARTMENTS” என்று ஊதா நிறப் பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் குடியிருப்பு வளாகத்தின் பிரதான வாசற்கதவு மூடி இருந்தமையால் கீதா ஹார்ன் ஒலி எழுப்பினாள். தங்கப்பாண்டி அண்ணன்தான் வருவாரென்று ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் அவரில்லை. ஒரு வட இந்திய இளைஞன் பல்லிளித்தபடியே கதவைத் திறந்து வணக்கம் வைத்தான். அவன் கையில் ஒரு பீடி மறைந்திருந்து புகைந்துகொண்டிருந்ததைக் கவனித்தேன். சிரித்தேன்.

பிரதான வாசலை அடுத்து வரும் ரவுண்டானாவில் வலப்புறம் திரும்பி நேரே சென்றால் எட்டாவது பிளாக் வரும். அந்த பிளாக்கின் இரண்டாவது தளத்தில்தான் பழனி சாரின் வீடு இருக்கிறது. கீதா இண்டிகேட்டர் போட்டு வலப்புறம் திரும்பிக்கொண்டிருந்தபோது “இந்தப் பக்கம் (இடப்பக்கம்) திரும்பிப்பார், பார்க்காதே” என்று இரு குரல்கள் மண்டையினுள் சத்தமாய் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. “அங்கிட்டு தள்ளிப் போய் சண்ட போடுங்கடா” என்ற தொனியில் என் தலை அதை மதிக்காமல் இடப்புறம் திரும்பி இரண்டாவது பிளாக்கில் முதல் தளத்திலுள்ள வீட்டு சன்னலைப் பார்த்தது. என் தேவதை! சன்னலில் மாட்டப்பட்டிருந்த முகக்கண்ணாடியின் முன் நின்று கைகளைத்தூக்கி பின்னந்தலையில் வைத்தபடி தலை பின்னிக் கொண்டிருந்தாள். வண்ணத்துப் பூச்சி வடிவிலான நீல நிற கிளிப்பை உதட்டில் கடித்தபடி இருந்தவள், சற்று குனிந்து தலையைப் பக்கவாட்டில் சரித்து சன்னல் வழியாகக் கண்களை விரித்து என்னைப் பார்த்தாள். என்னை அடையாளம் கண்டுவிட்டாள் போல. வாயிலிருந்த கிளிப் தவறி கீழே விழுந்தது, அதைப் பொருட்படுத்தாமல் அவள் என்னையே பார்த்தபடி இருந்தாள். என் கருவிழியின் மையப்புள்ளி ஊதிப் பெருத்தது. அவள் கண்களின் கதிர்வீச்சின் வீரியம் இன்னும் அப்படியேதான் இருக்கின்றது. அது என் மூளையைத் தாக்கியது. அவளைத் தவிர அனைத்தும் காட்சியிலிருந்து கரைந்து ஒழுகின. மூச்சு விட முடியவில்லை, இதயம் துடிக்கவில்லை..

“என்னாச்சி?”

என்ற கீதாவின் வார்த்தை மூச்சடைப்பை நீக்கியது.  கீதாவைப் பார்க்கும்படி பெருமூச்சு விட்டுக் கொண்டேன். பின் தலையைத் தொங்கவிட்டு “ஒன்னும் இல்ல” என்று சொல்லும்போது என் உடம்பில் லேசான நடுக்கத்தை உணர்ந்தேன். பால் நிலவை சில வினாடிகள் பார்த்த பின் பார்வையைத் திருப்பிக் கொண்ட போதிலும் அது நம் கண்களின் காட்சியிலிருந்து நீங்காமல் இருக்குமே, அது போல என் தேவதையின் முகம் இன்னும் காட்சிகளின் மேலடுக்கில் பதிந்திருந்தது.

என்னை எட்டாவது பிளாக் வாசலில் இறக்கிவிட்டு வண்டியை பார்க் செய்வதற்காக கீதா சென்றாள். வண்டியிலிருந்து நடுக்கத்துடன் இறங்கிய எனக்குள் பல எண்ணங்கள் ஓடின.

“அவள் ஏன் இன்னும் இங்கேயே இருக்கிறாள்? திருமணம் ஆகியிருக்குமா? கணவன் உள்ளே இருப்பானோ?  கழுத்தில் தாலி இருந்ததா? ஐயோ, கவனிக்கவில்லையே! முகத்தின் எழில் இன்னும் மறையாமல் அப்படியே இருக்கிறது. கண்டிப்பாக இன்னொருவன் அவள் வாழ்க்கையில் இல்லை.” என்ற முடிவிற்கு வந்தேன்.

“நான் வருவதை அறிந்திருப்பாளோ? கண்டிப்பாக! எட்டு வருடத்திற்கு முன் இந்த வளாகத்திற்குள்  வீடு தேடி தரகருடன் வந்த போதும் இதே மாதிரிதான் சன்னலருகே நின்று தலைவாரிக்கொண்டிருந்தாள். அதை நினைவு படுத்தத்தான் இன்றும் அப்படியே செய்திருக்கிறாள்.” என்று நினைத்த போது உள்ளூர மகிழ்ந்தேன்.

“இன்னும் என் மேல் கோபத்தில்தான் இருப்பாளோ? என்னை மன்னிக்க மாட்டாளா? ம்… மன்னித்தால் மட்டும் என்ன நடக்கப் போகிறது” என்று நினைக்கையில் மனம் வலித்து கண்கள் கலங்கின. பதற்றத்தில் வியர்த்தது, உள்ளங்கை ஈரத்தால் குளிர்ந்து கையில் யாரோ வெதுவெதுப்பான கோந்தைப் பூசுவது போல இருந்தது. ஒரு கருப்பு நாட்டு நாய் ஒன்று வாலாட்டியபடி என் கைகளை நக்கிக் கொண்டிருந்தது. கையை வேகமாக மேலே தூக்கிக் கொண்டேன். அது என்னைப் பார்த்துச் சிரித்தது. நானும் சிரித்தேன். ஆ… இவனைக் குட்டியிலிருந்தே நன்றாகத் தெரியும். “நான் தூக்கி வளத்த பய” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே குனிந்து அவன் காதுக்குப் பின்னால் கையை வைத்துத் தடவி விட்டேன்.  நெற்றியில் முத்தம் கொடுத்த போது அவன் என் காதை நுனிப் பல்லால் கடித்தான். “ஆ” என்று சத்தமிட்ட படி சிரித்தேன். சின்னதா இருக்கும்போதிருந்தே இவன் இப்படிதான், காத கடித்துக்கொண்டு இருப்பான். “அது சரி நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ன?” என்று என் மனம் புத்தியைக் கேட்டுக் குழப்பியது.

“மாரி… என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே?” என்று முகத்தைச் சுழித்துக் கொண்டு கத்தியபடி வந்தாள் கீதா.

“கீதா, இவன எனக்குச் சின்ன வயசுல இருந்தே தெரியும். மூளக்காரன், பாசக்காரன். இவன் பேரு…” தலையில் கைவைத்து யோசித்தேன்.

“ஐயோ மறந்து போச்சே… ஒரு நல்ல தமிழ்ப் பேரு”

“சரி, சரி, அத அப்புறம் யோசிச்சுக்கலாம். வீட்டுக்குள்ள போனதும் முதல்ல கையக் கழுவனும். அப்புறம்தான் யாரையும் எதையும் தொடனும். புரியுதா?”

“சரி” என்று தலையாட்டினேன்.

~

இந்தக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பதினாறு பிளாக்குகளும் ஒரே வடிவத்திலானவை, மூன்று தளங்கள் கொண்டவை. தரைத் தளத்தில் வீடுகள் எதுவும் கிடையாது. மற்ற இரண்டு தளத்திலும், தளத்திற்கு நான்கு வீடுகள் வீதம் மொத்தம் ஒரு பிளாக்கிற்கு எட்டு வீடுகள். இந்த எட்டாவது பிளாக்கில், இரண்டாவது தளத்தில் இருக்கும் பழனி சார் வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டில்தான் நான் முன்பு வாடகைக்கு இருந்தேன்.

கீதா முன் செல்ல நான் அவளைப் பின் தொடர்ந்து படிக்கட்டுகளில்  காலெடுத்து வைத்தேன். கால்கள் கனத்தன. ஈர்ப்பு விசை அதிகமானது போல் உணர்ந்தேன். தரைதளத்தின் இந்தப் பதினெட்டுப் படிக்கட்டுகளும், அதன் பக்கவாட்டு சுவர்களும் சுமந்திருக்கும் நினைவுகள் அத்தனை அடர்த்தியானது. அது என்னைத் தன்னுள் இழுத்துக்கொள்ள முயற்சி செய்தது. சுவரில் கையை உரசியபடி நடந்தபோது அதில் படிந்திருந்த நினைவுச் செதில்கள் உதிர்ந்து, காற்றில் பறந்து கண்களில் விழுந்தன. நாங்கள் இருவரும் பேசிப் பழகிய நாட்கள் முதல், பிரிவதற்கு ஒருநாள் முன்பு வரை நள்ளிரவுகளில் இங்குதான் சந்தித்துக் கொள்வோம். கைகள் தொட்டுக்கொள்வதில் ஆரம்பித்து, கட்டி உருண்டு புணர்ந்தது வரை அனைத்து அந்தரங்கங்களும் இந்தச் சுவர்களுக்குத் தெரியும். சிரிப்பும், கண்ணீரும் இன்னும் ஈரம் காயாமல் இந்தப் படிக்கட்டுகளில் படர்ந்து கிடக்கின்றன. மன வலியுடன் அதைக் கடக்க முயல்கிறேன். ஆனால் என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. நல்லவேளையாக கீதா அதைக் கவனித்து கை கொடுத்து உதவினாள்.

வீட்டு வேலைக்காரர் கதவைத் திறந்தவர், பழனி சார் படுக்கை அறையில் இருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்தினார். அவரிடமே “வாஷ் ரூம் எங்கே?” எனக் கேட்டு, என்னை கை கழுவி விட்டு வரும்படி வற்புறுத்தினாள். ஹாலில் சில வயதானவர்கள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கீதா போலியாகச் சிரித்துக்கொண்டாள். நான் கைகளைக் கழுவிக் கொண்டே கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். பிச்சைக்காரனுக்கு பேண்ட் சர்ட் போட்டது போல இருந்தேன். என்னை நானே திட்டியபடி தலை முடியையும் தாடியையும் சற்று ஈரமாக்கிப் படிய வைத்தேன். முகத்தைத் துடைத்தபடியே வெளியே வந்த எனக்கு மீண்டும் அதிர்ச்சி.

மீண்டும் அவள்! “நீங்க இன்னும் ஊருக்குப் போகலையா? சாப்பிட ஏதும் வேணுமா?” என்று அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தாள். சிரித்தபடி அவர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தவள் போகிற போக்கில் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தாள். மீண்டும் எங்கள் கண்கள் சந்தித்தன. ஆனால் இம்முறை சில மைக்ரோ வினாடிகளே.  ஐந்து வருடத்திற்கு முன்னால் எப்படிப் பார்த்தேனோ அப்படியே இருக்கிறாள். அழகிலும், ஆடையிலும், எத்தனிப்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. சிறிய கல் வைத்த கம்மல் போடும் வழக்கத்தை மாற்றியிருக்கிறாள். பெரிய வட்ட வடிவ தோடும் அதற்குச் சற்று மேலே காது மடலின் ஓரத்தில் புதிதாய் வெள்ளி ஒன்று முளைத்துள்ளது. அதை வெள்ளி என்பதை விட நிலா எனலாம். வட்டத் தோடு பூமி போலவும், அந்தப் புள்ளி அதன் துணைக்கோள் போலத்தான் காட்சியளித்தது.

“மாரி” என்று கீதா என் கையைப் பிடித்து ஆட்டினாள்.

“ஐயோ! கீதா இதையெல்லாம் கவனித்திருப்பாளோ? நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். என் உள்ளப் பாய்ச்சல்களை அவள் உணர்ந்தால் பெரும் மன உளைச்சலுக்குள்ளாவாள்” என்று எண்ணி எச்சரிக்கை கொண்டேன். கீதாவின் பின்னாடியே பழனி சார் அறையை நோக்கிச் சென்றேன். அறையினுள் நுழைவதற்கு முன்னால் கடைசியாக ஒரே ஒரு முறை மட்டும் பார்த்து விட வேண்டும் என்றெண்ணித் திரும்பிப் பார்த்தேன். அங்கே அவள் என்னையே பார்த்தபடி இருந்தாள். அந்தப் பார்வையில் கனிந்திருந்த ஏக்கம் என் ஒவ்வொரு செல்லையும் சுட்டது போல உணர்ந்தேன். பழனி சாரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது என் உடல் மட்டும்தான் அங்கிருந்தது. மனம் பின்னோக்கிக் காலப்பயணம் செய்து கொண்டிருந்தது.

~

சிதறிக்கிடந்த என்னைத் தொகுத்தவள் அவள். என் காதலியாய், வழிகாட்டியாய், இன்னொரு மனசாட்சியாய், என் மொத்த உணர்வுகளும் சரணடையும் ஒரு இடமாய் இருந்தாள். வாழ்வின் பெரும் ஏக்கத்தின் முடிவுப் புள்ளி, பெருந்தேடலின் தொடக்கப்புள்ளி அவள் என்றெண்ணி அவளின் கைகளைப் பற்றி இந்த நகரம் முழுவதும் நடந்தே திரிந்திருக்கிறேன். போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருக்கையில் முன்னால் நிற்கும் ஆட்டோவின் பின்னால் இருக்கும் கண்ணாடியில், திரையில் தெரிவது போல் தெரியும் எங்கள் முகங்களைப் பார்த்து “We are made for each other!” என்று சொல்லி உச்சிக் கொட்டிக்கொண்டதை எண்ணி இப்போது சிரித்துக் கொள்கிறேன்.

உண்மையில் காதல் சம்பந்தப்பட்ட இருவரிடம் மட்டும் இருக்கும்போதுதான் அது அழகாய் இருக்கிறது. அதை குடும்பங்களுக்குள் திணித்து உறவுகளின் கையில் போகும் போது ஒரு குரங்கு பொம்மை போன்ற பரிதாபமான காட்சிக் கொள்கிறது. எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.  உற்றார் உறவினர், சொந்த பந்தம் ஏதுமில்லா அனாதை அல்லது தனிக்காட்டு ராஜா நான். ஆனால் அதுவே அவள் வீட்டில் பூதம் போல் பிரச்சனை செய்தது.

“நல்ல வேலைல இருக்கான், யோக்கியமான பையன் எல்லாத்துக்கும் மேல எனக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு. என் ஆசைக்கு மரியாத தரமாட்டீங்களா?” என்று அவள் சொன்னதும் அவளது அப்பா கத்த ஆரம்பித்துவிட்டார்.

“என்ன நீ வெவரம் தெரியாத பிள்ளையா இருக்கே? கல்யாணத்துக்கு இதெல்லாம் மட்டும் போதாது. நல்ல குடும்பம், சொத்து பத்து, நல்ல சொந்தக்காரங்க எல்லாம் வேணும். என் புள்ள காலம் முழுக்க அங்க நல்லா வாழுறான்னுற நம்பிக்கை வரனும்.”

“அப்படி சொத்து பத்து சொந்தக்காரங்க இருக்குற வீட்டுல என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது. எனக்கு அவன்தான் வேணும். அவன் என்ன நல்லா பாத்துக்குவான்னுற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று இவள் பொரிந்து தள்ளினாள்.

“உன் பிள்ளைக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று அவள் அம்மாவிடம் திரும்பினார் “அவனோட அப்பா எய்ட்ஸ் வந்து செத்துருக்கான், அம்மாவுக்குப் பேய் பிடிச்சு தூக்கு மாட்டிக்கிட்டா. எங்கெங்கலாமோ இருக்குற அனாத ஆசிரமத்துல போடுற சோத்த வாங்கித் திண்ணு வளந்த பரதேசிக்கு கிளி மாதிரி பொத்திப் பொத்தி வளத்த என் பொண்ணக் கட்டிக் கொடுக்குறதுக்கு நான் என்ன பைத்தியக்காரனா? அவனுக்கு என்னென்ன நோயெல்லாம் இருக்குன்னு இவளுக்கு எப்படித் தெரியும்…?”

“பரதேசினுல்லாம் சொல்லுற வேல வைச்சிக்காதீங்க. எப்படி இருந்தாலும் அவன் எனக்குப் புருசனா வரக்கூடியவன்.” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவர் கத்த ஆரம்பித்தார். அவர் கத்திக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து,

“உங்களோட இருபத்தாறு வயசு வரைக்கும் நீங்க உங்க அப்பன் காசுலதான் வாழ்ந்தீங்க. அவன் பதினெட்டு வயசிலிருந்து சொந்தக் கால்ல நிக்குறான். அந்த ஆம்பளத்தனம்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. அவனுக்கு எந்த நோயுமில்லை, மெடிக்கல் சர்டிபிகேட் என் டேபிள்ல இருக்கு பாத்துக்கோங்க.”

என்று கத்தியபடி அழுதுகொண்டே அவள் வீட்டிலிருந்து  வெளியே வந்தபோது வெளியே கண் கலங்கியபடி மறைந்து நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த என்னை அவள் கவனிக்கவில்லை. அன்று முழுவதும் அவளது போன் அழைப்பை ஏற்கவில்லை. தீவிர யோசனைகளால் குழம்பிக் கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்தே பணிந்து பயந்து அடிமையாய் வாழ்ந்து வந்தவன் நான். சிறுவனாய் இருந்தபோது பசிப் பேயை அடக்குவதற்காகப் பட்ட அவமானங்களனைத்தும் அன்று என் கண்முன் வந்து போனது. ஒருவகையில் அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர் பேசியது ஒன்றுமே இல்லைதான். ஆனாலும், நிறையப் படித்திருக்கிறேன், மாதம் ஐம்பதாயிரம் ஊதியம் பெறுகிறேன் இருந்தும் இச்சமூகம் என்னை இப்படி அசிங்கமானவனாய் பார்க்கிறது அல்லது சில நல்லவர்கள் பரிதாபமாய் பார்க்கிறார்கள். (இதில் பரிதாபப்படுபவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். அது வேறு கதை.) எங்கள் காதல் கதை அவள் அப்பாவுக்குத் தெரிவதற்கு முன்புவரை “இந்தப் பையன் பாவம், சின்னதுலயே அப்பாம்மா இல்ல, ரொம்ப கஷ்டப்பட்டு வளந்துருக்கான்” என்று சொல்லி என் மீது பாவப்பட்டுக்கொண்டார். இப்போது அசிங்கமாய்ப் பார்க்கிறார். என் வாழ்நாள் முழுவதும் இப்படியான மனிதர்களை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கிறேன். முகமூடி அணியாத உண்மைச் சமூகம் மிகவும் கொடியது, கோர முகம் கொண்டது, ஆபத்தானது. கடவுளை வைத்து ஒரு முகமூடி தைத்து இச்சமூகத்திற்கு மாட்டிவிட்ட பின்னரே என்னால் பயமில்லாமல் இங்கு வாழ முடிந்தது. “ஏசுவே, அவள் அப்பா மிகவும் நல்லவர். அவர் செய்த பாவங்களை மன்னியும். அவர் மனதில் என்னைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும். அவள் என்னை இரட்சிக்க வந்த தேவதை. அவளின்றி ஒருநாள் கூட இவ்வுலகில் என்னால் வாழ முடியாது. தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தது போல என் வாழ்விலும் அற்புதத்தை நிகழ்த்துவீராக. ஆமென்” என்று அன்றிரவு அழுது ஜெபித்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அந்தச் சம்பவம் நடப்பதற்கு  இரு நாட்களுக்கு முன்னர் அவள் அப்பாவின் நண்பரின் மகள் திருமணம் பதினைந்து கோடி ரூபாய் செலவில் நடந்துள்ளது. அங்கு சென்று வந்ததால் ஏற்பட்ட மன மாற்றத்தின் விளைவுதான் அந்தச் சண்டை என்பது எனக்குப் பின்னரே தெரிய வந்தது.

அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் எப்போதும் சந்திக்கும் என்னுடைய (எட்டாவது) பிளாக்கின் தரைதளத்தின் படிக்கட்டுகளில் சந்தித்தோம். அவள் அழுது கொண்டே இருந்தாள்.

“அப்பா அப்படி பேசினதுல எந்த தப்பும் இல்ல” என்று  நான் சொன்னதும் அதிர்ச்சியுடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் அங்கதான் நின்னுக்கிட்டு இருந்தேன்” என்றதும் எழுந்து என்னைத் தோளில் சாய்த்தபடி உடைந்து அழுதாள்.

“இவ்வளவு ஆசையா பொண்ண வளத்திட்டு, பெரிய இடத்துல நல்லபடியா கட்டிக்கொடுக்கனும்னு ஆசைப் படுறதுல்ல என்னத் தப்பு?” என்று கேட்டு முடிப்பதற்குள் என் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அறை விழுந்தது. நான் அமைதியானேன், அவளும். வார்த்தைகளின்றி ஒருவரையொருவர் அணைத்தபடி அப்படியே நின்றோம்.

இன்னும் அரைமணி நேரத்தில் வாட்ச்மேன் தங்கப்பாண்டி அண்ணன் வருவாரு. அதற்குள் கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் இருவரிடமும் இருந்தது. நான் என் உதட்டை அவள் கழுத்தில் பதித்தேன். அவள் என் பிடறி முடியைப் பிடித்து தோளில் சாய்ந்தாள். இருவர் மனதிலும் இருந்த குழப்பங்களும் வலிகளும் காமத்தீயை எழ விடாமல் அழுத்தி வைத்திருந்தன. காமத்தீ பரவாமல் உடல்கள் உறவுக்காக உரசிக்கொள்வது நகைப்புக்குரியதாய் இருந்தது. அந்த அசைவுகள் வெட்கப்படுத்தியது. அவள் புட்டத்தில் நான் கை வைத்தபோது இருவருமே சிரித்தோம். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், இன்னும் பதினைந்து நிமிடங்களே இங்கு இருக்கமுடியும். எரிபொருளின் கட்டாயத்தேவையை உணர்ந்தேன்.  அவள் இடுப்பை வலிக்கும் படி அழுத்திப் பிடித்து, பல்லைக் கடித்தபடி உதட்டை அவள் காதருகே கொண்டு சென்ற போது அவளின் முனகல் சத்தம் என் காதை அடைந்தது. “கிட்ட வாடி தேவடியா முண்ட” என்று உரத்த குரலில் சொல்லி அவளின் காதைக் கடித்தேன். மரத்திலிருந்து நழுவி விழும் சாரைப் பாம்மை போல் நழுவி என் மடியில் விழுந்தாள். தெருவில் சண்டைபோடும் வெறிப்பிடித்த தெரு நாய்களைப் போல் அந்த குறுகியப் படிக்கட்டுகளில் உருண்டு, பிரண்டு கடித்துக் குதறிக் கொண்டோம். திடீரென எதையோ கவனித்தவள் என்னைத் தள்ளினாள், ஆடைகளை சரிச் செய்து கொண்டு வாசலைப் பார்த்து “கரிகாலன்” என்றாள். பயந்து திரும்பிப் பார்த்தேன்.

பழனி சார் நான் நிகழ்காலத்தில் இல்லாததைக் கண்டுபிடித்து விட்டார் போல. என்னைப் பற்றி ஏதோ கீதாவிடம் ரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இல்லை… தெரியலை… ஒருவேளை வேறு ஏதும் கூட பேசிக் கொண்டிருக்கலாம். பழனி சார் மூலமாகத்தான் எனக்கு கீதாவைத் தெரியும். அப்பா அம்மா இல்லாத கீதாவை சார்தான் படிக்க வைத்திருந்திருக்கிறார். நிறைய சொல்லுவாள். சரி, அது இருக்கட்டும். இப்போது அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே நான் அங்கிருந்து எழுந்து ஹாலுக்கு வந்தேன். அவள் இப்போது அங்கு இல்லாததால் ஏமாற்றம் கொண்டேன். என் அனுமதி இல்லாமலே கண்கள் அவளைத் தேடின. கால்கள் அந்தப் படிக்கட்டுகளில் இறங்கின, மனம் கடைசிப் படிக்கல்லில் மாட்டித் தவித்தது. அங்கேயே அமர்ந்து வெடித்து அழ வேண்டும் போலத் தோன்றியது, அழுதேன். அந்தக் கருப்பு நாயும் வந்து என்னுடன் அமர்ந்து கொண்டது. என் காதை செல்லமாகக் கடித்தது. நான் அதை ஆரத் தழுவிக் கொண்டேன். ஐயோ சொல்ல மறந்துட்டனே… இவன்தான் கரிகாலன். அன்று எங்கள் காதல் சவாரியை இடைமறித்தவன்.  அப்போது நான்கு மாதக்குட்டியாக இருந்தான்.

அப்போது அவள் வீட்டினில் நடந்த குழப்பங்களால் ஒரு நன்மை என்னவென்றால் அது எங்கள் உறவைச் சீராக்கியது. நிறையப் புரிதல்களால் பக்குவமடைந்து வந்தோம். ஒருநாள் இரவு அவள் அப்பாவை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. வேகமாக நிதானமில்லாமல் வந்தவரைக் கீழே விழுந்து விடக்கூடாது என்றெண்ணிப் பிடிக்கக் கையை நீட்டியபோது அதைத் தட்டிவிட்டு என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கீழே விழுந்தேன். திருப்பி அடிக்க வேகமாக எழுந்தபோது அவர் என் சட்டையைப் பிடித்தார்.  நான் கையை ஓங்கியபோது அவர் கண்கள் கலங்கியிருந்ததைக் கவனித்தேன். அவர் என்னை நோக்கி இரு கைகளையும் எடுத்துக் கூப்பி “என் பொண்ண விட்டிடுடா, உனக்கு நான் என்ன வேணாலும் தாறேன்” என்று சொல்லிக் கதறி அழுதார். கண்ணீரைத்தவிர என் உடலில் எதுவும் அசையவில்லை.

“அவள ஒரு நல்ல இடத்துல கட்டிக் கொடுக்காட்டி என் கட்ட வேகாது… உன்கிட்ட காலம் முழுக்க அவ பாதுகாப்பா இருக்க முடியாது… அவ என் சாமிடா… விட்டுரு” என்று சொல்லி அவர் என் காலில் விழுந்தபோது எனக்கு என்ன சொல்ல, செய்ய என்று எதுவும் தெரியாமல் நின்றேன். நல்லவேளையாய் தங்கப்பாண்டி அண்ணன் எங்கோ இருந்து ஓடிவந்து அவரைத் தூக்கினார். வேறு யாரும் அந்த நிகழ்வைப் பார்க்கவில்லை. தங்கப்பாண்டி அண்ணன் என்னை வீட்டிற்குப் போகச் சொல்லி, நல்ல போதையிலிருந்த அவரை கைத்தாங்கலாக அழைத்து வீட்டில் கொண்டு விட்டார்.

“பாதுகாப்பா இருக்கமாட்டா, என் சாமி” இந்த வார்த்தைகள் அவர் குரலில் என் காதுகளில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தன. அது என்னுள் குற்றவுணர்வை ஏற்படுத்தியது. அவளிடம் அந்த நிகழ்வைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லை. அவரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவள் எப்போதும் போலவே மகிழ்ச்சியாய் இருந்தாள். குற்றவுணர்வு என்னைச் சுற்றியுள்ள அழகியலை எரித்தழித்தது. எங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் அவ்வாறு உணர்ந்தேன்.

~

கீதா வெளியே வருவது போல் தெரியவில்லை. கரிகாலனுடன் நடந்தே இரண்டாவது பிளாக்கிற்கு செல்லலாம் என முடிவு செய்து நடந்தேன். அவளிடம் பேச வேண்டும் என்பது போல் இருந்தது. பேசுவதில் தவறொன்றும் இல்லையே! காதலனாக இல்லாததால் எப்படி இந்த உரையாடல் இருக்கப் போகிறதோ என்று சிரித்தபடியே நடந்த என்னைக் கரிகாலன் வழி நடத்தினான்.

சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் சினிமாவிற்குச் சென்று கொண்டிருந்தோம். “எங்கப்பா இதுவரைக்கும் நான் ஆசையா கேட்ட எதையும் வேணானு சொன்னது இல்ல. உன்னைத் தவிர” என்று சொல்லிக் கண்கலங்கினாள். “ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்காருன்னு புரிஞ்சிக்க முடியல.” என்றவள் என் முதுகில் தலை பதித்து இருக்க அணைத்துக் கொண்டாள். கலவையான உணர்ச்சிகளுடன் பைக்கை வேகமாக ஓட்டினேன்.

கரிகாலனுடன் வீட்டை வந்தடைந்தேன். சன்னல் பூட்டப்பட்டிருந்தது. “அவளுக்கு என் மீதிருந்த கோபம் தணிந்திருக்காது. என்னை அவள் வெறுக்கிறாள்.” என்றெண்ணி விரக்தியானேன். வீட்டிற்குப் போய் கதவைத் தட்டலாம் என முடிவு செய்தேன். பின் “அது நாகரீகமாக இருக்காது, மேலும் கதவை அவள் அப்பா திறந்தால்?” என நினைத்துக் கொண்டேன். “நான் திருமணம் செய்து கொண்டதை நினைத்து வருந்தியிருப்பாளோ?” எனப் பல எண்ணங்கள் மனதைப் பதற்றப்படுத்தின. மனதைப் போலவே கால்களும் நிலையாக நில்லாமல் அங்கும் இங்கும் அலைந்தன, கூடவே கரிகாலனும்.

அருகிலிருந்த வீடுகளிலிருந்தவர்கள் என்னையே பார்த்தபடி இருந்தனர். அது என்னை மேலும் பதற்றப்படுத்தியது. அவசரமாக ஏதோ தேவைப்பட்டது. பைகளில் தேடினேன், கிடைக்கவில்லை. கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டேன். அருகில் பெட்டிக்கடை ஏதும் இல்லை என்பது தெரியும். வட இந்திய செக்யூரிட்டி இளைஞனிடம் ஒரு பீடியை வாங்கிப் பற்ற வைத்தேன். “அவள் கண்டிப்பாக சன்னல் கதவைத் திறந்து என்னைத் தேடுவாள்” என மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

“என்கூட நீ பாதுகாப்பா, சந்தோசமா கடைசி வரைக்கும் இருப்பேன்னு நம்புறியா?” என்று ஒரு நாள் மாலை கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டேன்.

“கண்டிப்பா நம்புறேன்.” என்றாள்

அதன் பின் நான் ஏதோ சொல்ல முயன்றேன். ஆனால் வார்த்தைகள் கோர்வையாக விழவில்லை, தொண்டை அடைத்தது, தடுமாறினேன். என் வாயை மூடியவள் என்னை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.

“இவ்வளவு அவமானம், புறக்கணிப்புக்கு மத்தியில தனி ஆளா, சுயாதீனமா லைஃப்ல இந்த இடத்துக்கு நீ வந்துருக்கே. சத்தியமா சொல்லுறேன், நான் உன்னை மாதிரி வேற யாரையும் இதுவரைக்கும் பாத்ததில்ல. இன்னும் நீ பெரிய பெரிய உச்சத்துக்கு போய்க்கிட்டேதான் இருப்ப…” என்று என் தலையைப் பிடித்தபடி என் நெத்தியில் அவளின் நெத்தியைப் பதித்து அவள் பேசிக்கொண்டிருந்தபோது இருவரும் கண் கலங்கி நின்றோம். “ஒரு பெண்ணின் வாயிலிருந்து வரும் வார்தைகளிலே ஒரு ஆணின் வாழ்க்கை அடங்கியுள்ளது. அவள் சாபமிட்டால் அழிகிறான், வாழ்த்தினால் வாழ்கிறான்.” என்பதை நான் ஆழமாக நம்புபவன்.

ஒரு வழியாக அவளது அப்பா திருமணத்திற்குச் சம்மதித்து விட்டார். இல்லை, அப்படிச் சொல்ல முடியாது, சம்மதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்று சொல்லலாம். பதினைந்து கோடி ரூபாய் செலவழித்து திருமணம் செய்து கொண்ட நண்பனின் மகள் திருமணம் ஆறே மாதத்தில் முறிவுற்றது. ஒருவேளை அந்த முறிவு இவர் மனதை மாற்றியிருக்கலாம். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

பீடி உதட்டைச் சுடும் போது கண்கள் நனைந்திருந்தன. கீதா காரில் கேட்டுக்கே வந்துவிட்டாள்.

“மாரி, எங்க போயிட்ட நீ? போன் அடிச்சா எடுக்க மாட்டியா?” என்று கீதா சொன்னதும் அவசர அவசரமாக போனை எடுத்துப் பார்த்தான்.

“போன் சைலண்ட்ல இருந்துருக்கு, பாக்கல. ஸாரி…” என்று சொல்லிவிட்டு கேட்டுக்கு உள்ளே நின்ற கரிகாலனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விடை பெற்றேன். உண்மையில் அந்த சாக்கில் அவள் வீட்டு சன்னலைத்தான் மீண்டும் பார்த்தேன். அது இன்னும் திறக்கவில்லை.

”ஸாரி கரிகாலா. பைய்.”

ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டேன். “ஆர் யு ஓகே, முகம் சோர்வா இருக்கு?” என்றாள் கீதா.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை”

“தம் அடிச்சியா? ஸ்மெல் வருது” என்று அவள் கேட்ட போது நான் ஏதும்  பதில் சொல்லவில்லை. நகருக்கு வெளியே உள்ள அந்த நீளமான பாலத்தில் கீதா வண்டியை வேகமாக ஓட்டியது எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. வார்த்தைகள் தடுமாறியபடி அவளை மெதுவாக ஓட்டச் சொன்னேன். கீதா அதை உடனடியாக ஏற்றுச் சிரித்தாள்.

இதே பாலத்தில் அன்று ஒருநாள் நள்ளிரவு பைக்கில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது மழைக்கு வழியாக இருந்தமையால் குளிர்ந்த காற்று தேகத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கி அணைத்துக் கொண்டாள். வேகமாக வீசிக் கொண்டிருந்த காற்றைக் கிழித்தபடி சென்று கொண்டிருந்தோம். அவள் திடீரென என் காதருகே வந்து “எனக்கு ear side ring போட்டுக்கனும்னு ஆசையா இருக்கு, கல்யாணத்துக்கு முன்னாடி குத்திகலாமா?” என்று கேட்டவளின் கையைப் பிடித்துச் சிரித்து முத்தமிட்டேன். அப்போது திடீரென ரோட்டின் ஓரத்தில் நட்டு வைத்திருந்த கட்சிக் கொடி சரிந்து என் முன்னால் பத்து மீட்டர் தொலைவில் விழுந்தது. வண்டி நிலை தடுமாறிச் சரிந்து விழுந்து, வழுக்கி ஓடியது. சில வினாடிகளில் ஏதோ ஒரு பெரிய சத்தத்திற்குப் பின் எல்லாம் கருப்பானது. மயக்கம் தெளிந்த போது என் வலது கால் உடைந்திருந்தது. நான் அதைப் பொருட்படுத்தாமல் அவளைத் தேடினேன். அவள் என் முன் அமர்ந்து என் தலையைப் பிடித்துக் கொண்டாள். நான் பதற்றத்தில் அவள் உடல் முழுவதும் தடவியபடி “உனக்கு ஏதும் அடி படலயே” என்று புலம்பிக் கொண்டே இருந்தேன்.

“எனக்கு ஒன்னும் இல்ல” என்று சொல்லி தேவதை போலச் சிரித்தாள். என் உடல் முழுவதும் இரத்தமாக இருந்தது. அவளை அணைத்துக் கொள்ளப் போகும் போது எனக்கு இடபுறம் ஒரு உருவம் இரத்த வெள்ளத்தில் தலை சிதைந்து, கை கால்கள் ஒடிந்து,  பிய்த்துப் போட்ட சோழக்காட்டு பொம்மை போல் கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த மறு கணமே என் முன்னால் இருந்த அவள் என்னைத் தோள்களில் சாய்த்து அணைத்துக் கொண்டாள். “ஒன்னும் இல்ல… நான் இங்க இருக்கேன் அங்க பாக்காதே” என்றாள்.

இப்போது நான் நடுங்கி அழ ஆரம்பித்ததும் கீதா காரை நிறுத்தி பையிலிருந்த சோலியன் மாத்திரையை எடுத்து என் வாயில் திணித்தாள். என்னை அவள் தோள்களில் சாய்த்து அணைத்துக் கொண்டாள்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close