தொடர்கள்

நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 1 – சுமாசினி முத்துசாமி

தொடர்கள் | வாசகசாலை

என் பெயர் சுமாசினி. நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலியில். நெல்லை மாநகரம்தான் என்னைத் தன் மனதோடு வளர்த்தது. தொண்ணூறுகளின் கடைசியில் வீட்டினுள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட நெல்லைச் சிறுமிகளுக்கு ஜீன்ஸ் பாண்ட் அறிமுகம் ஆனது. சிறு பெண் குழந்தைகள் பலர் பாண்ட் போட்டு தலையில் கனகாம்பரப்பூ வைத்துக் கொள்வர். அவ்வாறு அணிவது பேஷன் உலகத்திற்கு சரியா என்பது வேறு கேள்வி. ஆனால் அந்த பாண்ட்டோடு, ரெட்டைச் சடையில் பூவும், நெற்றியில் பொட்டும் வைத்துக் கொண்டு நடமாடிய தங்கைகளை, தாவணி அணிந்து வியப்போடு கண்ட வெகுளித்தனமான மனது கொண்ட பட்டாம்பூச்சிகளின் உலகத்தின் மிச்சம்தான் நான்.

எங்களுக்கெல்லாம் அங்கிருந்து கோவையும் சென்னையுமே ஏதோ வெகு தூரத்தில் ஏழு மலைக்கப்பால் என்பதுப்போல் தான். அப்படியேதான் இன்ஜினியரிங், பின்னர் மேல் படிப்பு அதன் பின் வேலை என்று நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது. நெல்லையில் இருந்து படிப்பின் நிமித்தம் வெளியேறிய நாள் முதல் இந்த நிமிடம் வரை முங்கு நீச்சல் போட்டுக் கடந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வில் படிப்போ, முயற்சியோ, தன்னம்பிக்கையோ அல்ல, கலாச்சாரப் படிமங்களே தனித்து இயக்குகிறது. தற்பொழுது அமெரிக்காவில், மெகா மெட்ரோ சிட்டியான நியூயார்க் நகரத்தின் அருகில் வசிக்கிறேன். ஆனால் நெல்லையின் மிச்சமாகவே இன்றும் வாழ்கிறேன்.

“கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு, கொண்டாட கண்டுபிடிச்சி கொண்டான் ஒரு தீவு” என்று துள்ளிக் குதித்து பிரசாந்த்கள் ஆடி தமிழ் சினிமா அறிமுகப்படுத்திய அமெரிக்காவும், பிழைப்பின் தேடலுக்காக வந்து நியூயார்க் நகரின் தெருக்களில், “சாப்ட்வேர் வாங்கலையோ சாப்ட்வேர்… ஐய்யாமாரே, அம்மாமாரே எங்க கம்பெனிகாரங்க code எழுதினா கன்னுனா கன்னு, கின்னுனா கின்னு!! நாங்க உங்க கம்ப்யூட்டர் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரை (computer infrastructure), அப்ளிகேஷன்களை எங்க கண்ணுக்குள்ள வச்சு பொத்தி பொத்தி அப்படி பாத்துப்போம்…” என்று விற்கவும், அவற்றை நிர்வகிக்கவும் ஆரம்பிக்கப் பழகிய பொழுது, பார்த்துப் புரிந்து கொண்ட அமெரிக்காவும் வேறு வேறு! பல நேரங்களில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட அளவிற்குப் பல வித்தியாசங்களை என்னால் உணர முடிந்தது.

portofentry

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது “கற்றதும் பெற்றதும்” புத்தகத்தில், அறுபதுகளில் அமெரிக்கா வந்து குடியேறி, நண்பர்கள் பலருக்கும் உதவிய, சொந்தமாகத் தனி விமானம் வைத்து இருந்த ஒரு தமிழரைப் பற்றி எழுதி இருப்பார். அதைப் படித்தவுடன் இரண்டு விஷயங்கள் மனதோடு ஒட்டிக்கொண்டது. ஒன்று, அறுபதுகளில் இங்கு வந்து குடியேறியவர்கள் தொண்ணூறுகளில் தனி விமானம் வைத்து இருந்தால், 2016ல் இங்கு வந்த நான், இன்னும் முப்பது வருடத்தில் தனி விமானம் வாங்கிவிடலாம் என்ற பொய் கணக்கு (ச்சும்மா சொல்லி வைப்போமே). இரண்டாவது, தனி விமானம் வைத்து தனியே பறந்தாலும் பலருக்கும் உதவும் ஒரு தமிழர்! அப்படிப்பட்ட உதவி மனம் கொண்ட இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் உடன் பிறவா சகோதர சகோதரிகளும், (2016 அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 2,40,000 தமிழர்கள் அமெரிக்காவில் இருந்தனர்.) பிறகு நமக்கு பக்கத்து மாநிலம், பக்கத்துக்கு அடுத்த மாநிலம் என்று 40 லட்சம் அங்காளி பங்காளிகளும் (அதே கணக்கெடுப்பின்படி இந்தியர்களின் எண்ணிக்கை) இருக்கும் தைரியத்தில், துணிகளை மூட்டை கட்டிக் கொண்டு, ஊறுகாயையும் வத்தக்குழம்பையும், கல்விச் சான்றிதழ்களையும், வேலையும் வாழ்க்கையும் கொடுத்த அனுபவங்களையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு விமானத்தில் ஏறி விட்டேன்.

கொஞ்சம் நிற்க. இங்கு 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பு இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. நமது ‘ஆல் இன் ஆல்’ அதிபர் டிரம்ப்பின் பலவாறான விசா சம்பந்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் இந்த எண்ணிக்கைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது ஏர்போட்டுக்கு மீண்டும் வருவோம். ஒரு பெட்டியில் இருந்த ஊறுகாயும் வத்தக்குழம்பும் நுழைவுத்துறை சோதனையில் (port of entry checking)மாட்டி அப்படியே அங்கு இருந்த குப்பைக்கூடைகளுக்குப் படையலாக்கப்பட்டது. இன்னொரு பெட்டியிலிருந்த மற்ற சில ஊறுகாய்களும் பருப்புப் பொடியும் அடுத்து சிலவாரங்களுக்கு ஹோட்டலில் தங்கி இருந்த வரை அரும்பசி ஆற்றக் கை கொடுத்தது. “என்னம்மா, உனக்கு என்ன சமைக்கத் தெரியாதா? வெளிநாடு போறவங்க எல்லாம் ஏன் இந்த ஊறுகாய் புராணம் பாடுறீங்க?”என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது!

விஷயம் என்னவென்றால் இங்கு இருப்பதிலேயே சாதாரண கடைகளில், அதாவது ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் கைரோ (Gyro- கிரேக்க நாட்டு உணவு, நம்மூரில் கிடைக்கும் ஷவர்மா போன்றது.), சப்வே, டொமினோஸ் பிஸ்சா (ஆச்சரியம் வேண்டாம்!!), பர்கர் கிங் பர்கர்கள் போன்றவையே உத்தேசமாக ஒரு ஆறிலிருந்து பத்து டாலர் வரை பிடிக்கும். எந்த வெளிநாட்டுக்கும் வந்து ஒரு சில மாதங்களுக்கு, சுவாசிக்கும் காற்றில் ஆரம்பித்து, பார்க்கும் பல்லுயிர்கள் அனைத்தையும் நம் நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை நம் மனதின் ஆதி படிமங்களில் ஒன்று. இந்த படிமங்களின் தன்மை சிலருக்கு சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரையும், பலருக்கு அவர்கள் மனதின் ஓரத்தில் எங்கோ எடுத்த எதோ ஒரு முடிவு (கடன் கழிவதோ, வீடோ, நிலமோ, பேங்க் பேலன்ஸ் அல்லது இவற்றில் அனைத்துமோ ) நிறைவாகும் வரையும் மாறாது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் யாராயினும் தன் வேரை விட்டு வேறு ஊரில் ஒட்டி உயிர் வளர்க்க வருவதற்கு மிகப்பெரிய காரணம் காசு, துட்டு, மணி- money தான்.

ny -liberty statue

புதிதாய் வந்தவுடனேயே இந்த 1 டாலர்= 70 – 75 ரூபாய் மனதை எல்லாவற்றிற்கும் போட்டுக் குடையும். எவ்வளவுதான் பிஸ்சா பர்கர் பிடித்தாலும், ஒரு நாள் ஒரு வேளையாவது சாதம்/ சோறு வயிற்றின் சுவர்களை முட்டி மோதாவிட்டால் நமக்குத் தூக்கம் வேறு வராதே! இதில் ஒரு சின்ன முரண் என்ன என்றால், நம்மூரிலிருந்து அமெரிக்கா வந்த உடனேயே இங்க தக்காளி இவ்வ்ளோ விலை என்றும், இங்க நல்ல இட்லி, சட்னி எங்கு கிடைக்கும் என்று தேடுவோம் – பின், லீவுக்கு நம்மூருக்கு வந்தால் பிஸ்சா எந்த கடையில் சாப்பிடலாம் என்று தேடுவோம், “ஹப்பா, நம்மூர் விலைவாசி எவ்வ்வ்வ்ளோ அதிகம்…” என்று நடிகை தேவயானி ‘பஞ்சதந்திரம்’ படத்தில் “எவ்ளோ பெரிய மாத்திரை…” என்று மாத்தி சொன்னது போலவே ‘ரிட்டர்ன்’ காமெடி பண்ணும் நிறையப் பேரைப் பார்க்கலாம்!

அமெரிக்கா என்பது உழைக்க விழைபவர்களுக்கு வளமான நாடு தான். கண்டிப்பாக இங்கு பெரும்பான்மையானோர் (ஆம், அனைவரும் அல்ல) வேலை, சம்பளம் மூலமாக ஓரளவுக்கு வசதிகளோடு வலம் வர முடிகிறது. ஆனால், இங்கு வந்து தங்கி பணிபுரிபவர்களுக்கு இது எல்லாமே, “அவர்கள் எந்த விசாவில், எத்தனையாவது ஆண்டில் இங்கு இருக்கிறார்கள்? உடல் நலம் பண நலத்தைக் காக்கும் அளவுக்கு உள்ளதா இல்லை வருடா வருடம் மருத்துவக் காப்பீடு போக எத்தனை ஆயிரம் டாலர்களை மருத்துவமனையில் இழக்கிறார்கள்? ரோட்டில் யாரையும் இடிக்காமல் நம்மையும் யாரும் இடிக்காமல் வண்டி ஒட்டி வருகிறோமா?” எனப் பல விஷயங்களைச் சார்ந்தது. இங்கு பணம் காய்க்கும் மரம் இல்லை என்பதையும், யோசித்தே டாலரில் சம்பாதிப்பதை ரூபாயில் செலவழிக்க வேண்டும் என்பதையும் ஊரின் வேரோடு விட்டு வந்த விழுதுகள் உணரத்தான் வேண்டும். அதுமட்டுமல்ல, “பள்ளி முடிந்து கல்லூரி செல்லும் வயதில் எத்தனை பிள்ளைகள் அமெரிக்காவில் அவர்களது வீட்டில் இருக்கிறார்கள்? இந்த டாலர் டூ ரூபாய் கணக்கை, ஏதாவது வேண்டும் என்று பெற்றோர்களிடம் அடம் பிடிக்கும் முன் அவர்கள் சிறிதேனும் யோசிக்கிறார்களா?” என்பது போன்ற இன்னும் சில பல கேள்விகளோடும் இந்த விஷயம் சம்பந்தப்பட்டது.

அக்கரை சீமை அழகினில் மனம் ஆட ‘ஜீன்ஸ்’ முதல் இப்பொழுது சமீபத்தில் வந்த விவேக் சார்லி நடித்த ‘வெள்ளைப் பூக்கள்’ படம் வரை, பெரிய்ய்ய்ய வீடு, ஆடம்பரமான கார் என்று காட்டி விடுகிறார்கள். வெளிநாட்டு ‘ரிட்டர்ன்’ என்றால் பலரும் ஒரு பிம்பத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த அமெரிக்கா என்ற ஊதி பெரிதாக்கப்பட்டு விட்ட ஒரு பிம்பத்தின் ஓரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளதை உள்ள படி காட்டும் மாயக்கண்ணாடிகள் சில தோன்றிக்கொண்டுதான் இருந்தன/ இருக்கின்றன. ஆனால் இந்த கொரோனா என்ற ஒரு சிறு கிருமி ஓட்டையைக் கொஞ்சம் பெரிதாக்கி உலகத்திற்குக் கொஞ்சம் அதிகமாய் இப்பொழுது படம் போட்டுக் காட்டிவிட்டது போல் தோன்றுகிறது.
செல்வம், அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வளம், நில வளம், நீர் வளம், சுதந்திரம், கல்வி, மேலாண்மை திறன் எல்லாவற்றிலும் சிறந்தது என்று நம்பப்படும் அமெரிக்கா, எப்படி கொரோனா பட்டியலிலும் முதலில் உள்ளது என்பதுதான் அநேகமாக இன்று பெரும்பான்மையாகக் கேட்கப்படும் கேள்வி. இதற்கான விடை பலரிடம் இல்லை, என்னிடமும் இல்லை. ஆனால் ‘மாஸ் ஹீரோ’ போல் எதிர்கொண்டுவிடலாம் என்று எண்ணிய அமெரிக்காவின் படம் ‘பிளாப்’ ஆனது எப்படி என்பதைப் பற்றி நேரடியாக உணர்ந்ததை வைத்துப் பேச முடியும். இனி வரும் அத்தியாயங்களில் பேசுவோம்.

பத்து பன்னிரண்டு வயதில் நெல்லை டவுனுக்குப் போவது என்பது பெரிய உற்சாகம் தரும் விஷயம். எத்தனை மனிதர்கள், எவ்வளவு கடைகள், ஒவ்வொன்றும் புதிதாய் ஒவ்வொரு முறையும் தோன்றும். இன்று இந்த நியூயார்க் தெருக்களும் அதே உற்சாகத்தைத்தான் தருகின்றன. திருநெல்வேலியில் ஒரு சின்ன வட்டத்தில் பிறந்து வளர்ந்த என் கண்களின் மூலம் இன்று நியூயார்க் மாநகரத்தின் ஆத்மாவை, அதன் தெருக்களில் உணரும் போது வியந்ததை விவரிக்க நூறுவித நிகழ்வுகளும், உணர்வுகளும் உள்ளது. ரெட்டை சடை போட்டுக் கொண்டு நெல்லை ரத வீதிகளில் நடந்து வரும் போது கண்ட ஆத்மாவும், இங்கு காண்பதும் ஒன்றா என்பதைக் கண்டுவிடவே ஒவ்வொரு நாளும் நானும் இங்கே அடிகள் எடுத்து வைக்கிறேன்.

sumasini

சிறந்த நாடு நமக்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்கும் என்று எண்ணி ‘அமெரிக்கக் கனவு’ (American Dream) கண்டு, சிறந்ததில் கலந்து விட எண்ணி நாம் கொண்டு வரும் மூட்டையில் நம்முடைய பெருமைகளோடு சிறுமைகள் சிலவும் பொதிந்து வந்து விடுகிறது. பெறுவதற்கும் கொடுப்பதற்கும் எந்தவொரு சமூகத்திற்கும் எவ்வளவோ உள்ளது. இங்கு லாஸ் ஏஞ்செல்ஸ்சிலும், சிகாகோவிலும், அட்லாண்டாவிலும், மன்ஹாட்டனிலும் இந்த பெருமை சிறுமைகளின் தொகுப்பை அறிந்தோ அறியாமலோ அரவணைத்துக்கொண்டோ, அள்ளி தெளித்துக் கொண்டோ பலரும் கடந்து கொண்டே வருகிறோம். பிரம்மாண்டங்களின் வெறுமையும், சிறு புன்னகைகளின் பின் இருக்கும் நேசமும், சிறிதும் பெரிதுமாய் இந்தப் புது உலகத்தில் புதிதாகவும், வேறுபட்டும் நிறைய ஒற்றுமையோடும் வேற்றுமையோடும் மனதில் நிறைந்துவிட்ட நினைவுகளைப் பேச எவ்வளவோ உள்ளது… வாங்க பழகலாம், பேசலாம்!

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

  1. Neatly done Suma… Could relate very well .. beautiful choice of words and very nicely narrated…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button