தொடர்கள்

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;19 ‘உடம்பை வளர்த்தேனே’ – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

ஒரு சினிமாவில் முதல் காட்சி.  ஒரு ஊரைக் காண்பிக்கின்றார்கள்.

நம்மூரை எப்படிக் காண்பிப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக விடிவது போல், கோவில் மணி, பேப்பர் போடுபவர், அம்மக்கள் பால் காய்ச்சுவது, பூக்கடை, டீக்கடை, பள்ளிகள் என்று காண்பிப்பார்கள். நம்மூரின் பெரு நகரங்கள் என்றால் கூடவே சில சமயம் வயதான சிலர் வாக்கிங் போவது போலக் கூட இப்பொழுது வருகிறது.

அதுவே அமெரிக்காவில் ஒரு நகரம் என்றால் உடனே பெரிய கட்டிடங்கள், வேகமாகப் போகும் கார்கள், கூடவே யாராவது காபி கடையில் (Starbucks, Dunkin Donuts) காபி வாங்க நிற்பது போலவும், இரண்டு மூன்று பேர் உடற்பயிற்சி செய்வது (பெரும்பாலும் ஓடுவது)  போலவும் காண்பிப்பர்.

அமெரிக்காவில் எப்பொழுதும் நம் கண்ணில் படும் ஒரு காட்சி இந்த உடற்பயிற்சி செய்யும் மனிதர்கள். காலையோ, மாலையோ, இரவோ எப்பொழுது வெளியே சென்றாலும் சிலராவது ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பனி அல்லது மழை கொட்டும் வேளைகளைத் தவிர்த்து எப்பொழுது வெளியே சென்றாலும் ஓடிக் கொண்டோ, வாக்கிங் போய்க் கொண்டோ இருக்கும் யாரவது ஒருவரை இதுவரை நான் இங்குப் பார்த்துள்ளேன். இது போதாதென்று உடற் பயிற்சிக் கூடங்களும் எப்பொழுதும் பரப்பாக இயங்குகின்றன. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் உடலுழைப்பை ஊக்குவிக்கின்றன. ரோடுகள், பீச்சுகள், பார்க்குகள் என்று நிலத்தில் எங்கும் மக்கள் நடைப் பயிற்சி, ஓட்ட பயிற்சி செய்கின்றனர். கோடைக் காலம் என்றால் இதோடு நீர் நிலைகளில் நீச்சல் படகு வலித்தல் (kayaking) போன்றவையும் சேர்ந்து விடும். காணும் எங்கும் மக்கள் சுறுசுறுப்பாக இயங்க ஏதோ செய்துகொண்டே இருப்பது போல் ஒரு தோற்றம் இங்கு உள்ளது.

இப்படி இருந்தும் ஒரு முக்கிய தரவு (CDC Data), வெறும் 23.2% மக்கள் தான் ஏரோபிக் உடற்பயிற்சிகள், தசையை வலுப்படுத்தும் எடை பயிற்சிகள் என்று அரசின் ஒட்டுமொத்த வழிகாட்டுதல் படி செயல்படுகின்றனர் என்கிறது. உடற்பயிற்சி செயல்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை அமெரிக்க அரசு வெளியிட்டு, இன்னும் அதிகமாக நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று மக்களிடம் கூறுகிறது.

மொத்த அமெரிக்காவையும் ஒரு கோணத்தில் இரண்டாகப் பிரித்து விடலாம். துரித உணவுகள், பிஸ்சா, பிரெஞ்சு பிரைஸ், அதிக சீனி அளவுள்ள குளிர் பானங்கள் என்று வாழும் மக்கள் ஒரு பக்கம். சாலட், வித்தியாச வித்தியாசமான டயட்கள், மிகுந்த உடற்பயிற்சி என்று வாழும் மற்றுமொரு சாரார் இன்னொரு பக்கம். இங்குள்ள உணவுப் பழக்கத்தால் உடல் பருமன் எந்தளவிற்குப் பிரச்சனை என்று சொல்லப்படுகிறதோ, அதைப் போல் இங்கு ஆரோக்கியமான  சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் முக்கியத்துவம் உள்ளது. இங்கு வந்து சில வருடங்கள் ஆகி விட்ட நம் நாட்டு அங்காளி பங்காளிகளும் ‘Do you exercise daily?, Do you work out? Whatz your fitness schedule? ‘ போன்ற கேள்விகளை பொதுவாக, இயல்பாகக் கேட்பார்கள். நாம் உடற்பயிற்சி எல்லாம் செய்வது இல்லை என்றால் அவர்கள் பார்வையில் நாம் அறிவிலிகள் போல் தெரிகிறோமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. இவர்களிடம் இருந்து ‘Start small’ என்ற இலவச அறிவுரை நிச்சயம். அலுவலக மீட்டிங்களில் கூட இப்பொழுது எல்லாம் அரை மாரத்தான், மலை ஏறுதல் (hiking) போன்றவை பற்றிய உரையாடல்கள் வெகு சாதாரணமாகி வருகிறது. என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு மிகத் தேவையான ஊக்கம் இது.

சிறு வயதில் வளரும் காலத்தில், இந்த அளவிற்கு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் இருந்து நான் பார்க்கவில்லை. உழைக்கும் பாட்டாளி வர்க்கமும், விளையாட்டு வீரர்களும், வீட்டு வேலை செய்யும் பொழுது நம் வீட்டுப் பெண்களும் தான் வியர்வை சிந்திப் பார்த்து வளர்ந்தேன். இப்பொழுது உடல் நலமும், மன நலமும் எவ்வளவு முக்கியம் என்று நல்ல புரிதலும் விழிப்புணர்வும் உள்ளது. இருந்தும் அனைவரும் உடற்பயிற்சி செய்கிறோமோ என்றால், கிடையாது.

இங்கு இப்பொழுது குளிர் காலம். இந்த குளிர் காலம் வந்து விட்டால் எழுந்து வீட்டிற்குள் நடமாடுவதே பெரும் காரியம். இதில் வெளியே எல்லாம் செல்ல வேண்டும் என்றால் மிகப்பெரிய கஷ்டம். இந்த வருடம் பலரும் கொரோனாவின் பெயரைச் சொல்லி சோம்பேறித் தனத்தை மூடி மறைத்தாகிவிட்டது. அடுத்த வருடத்திற்கு நாங்கள் அனைவரும் கூட்டமாக வேறு ஒரு சாக்கு கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த வாரம் ஒரு முக்கிய வேலையாக அடுத்த மாநிலத்திற்குப் போக வேண்டி இருந்தது. இந்தக் குளிருக்குப் பயந்து நானும் கடந்த இரு வார இறுதிகளாக சாக்கு சொல்லித் தள்ளி வைத்துக்கொண்டே இருந்தேன். இதற்கு மேல் வழியில்லை என்று போன வாரத்தில் ஒரு நாள் செல்ல வேண்டியதாகி விட்டது. அன்று நல்ல குளிர். அதோடு சேர்த்து நம் குற்றால சாரல் போல் மெல்லிதாக மழை வேறு விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. சூரியனும் அன்று முழுவதும் ஸ்லீப்பிங் மோடில் வேறு இருந்தார். கஷ்டப்பட்டுக்  கிளம்பிச் சென்றேன். வழியில் அங்கும் இங்கும் சைக்ளிங் செய்து கொண்டும், ஓடிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்துக்கொண்டே கடந்தேன். டப்பன்  ஸி பாலம் (Tappan zee பிரிட்ஜ் @Governor Mario M. Cuomo Bridge) நியூயார்க்கையும் நியூ ஜெர்சியையும் இணைக்கும் பாலம். அந்த பாலத்தில் Bicycle-pedestrian path என்று ஒரு பாதசாரி பாதை தனியாக உண்டு. நதியின் மேலே அந்த குளிரிலும், மழைச் சாரலுக்கு நடுவிலும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேண பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தனர்.  இவர்களுக்கு எல்லாம் இந்த உந்துதலும், ஊக்கமும், மன ஒழுங்கும் எப்படி கிடைக்கின்றன என்ற அந்த ரகசியம் தான் எனக்குத் தெரியவில்லை.

நான் அடிக்கடி குறிப்பிட்டுள்ளது போல அமெரிக்கச் சமூகத்திற்கு ‘சராசரி’ என்பதின் அர்த்தம்  முழுவதும் புரியவில்லை. உடலைப் பேணுவதிலும் அவர்கள் அப்படியே. இருக்கும் இடத்தை விட்டு இப்படி அப்படி நகருவதில்லை என்று வருட கணக்கில் சபதத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவரும் மக்களும் இங்குள்ளனர்.  மிக மிக அதிக அக்கறையோடு தினமும் உடற்பயிற்சி, எடைகள் தூக்கி பயிற்சி, மிகக் கட்டுக்கோப்பான உணவு முறை, புரதச் சத்து பவுடர்கள் என்று இருப்பவர்களை இங்கு இயல்பாகப் பார்க்கலாம். அவர்கள் நாடி நரம்பு முதல் மூச்சுக் காற்று வரை இந்த உடற்பயிற்சி ஒழுங்கு அவர்களோடு இரண்டற கலந்துள்ளது. பதின் பருவம் வயது முதல்  வாழ்வின் கடைசி நாள் வரை இங்கு மக்கள் உடற்பயிற்சி செய்ய முயல்கின்றனர். நம் ஜட்ஜ் பாட்டிமா ரூத் பேடர் கின்ஸ்பர்க் அவர்கள் தன் 85 வயதில் தினமும் செய்த ஒரு மணி நேர உடற்பயிற்சி முறை தான் உடனே என் கண் முன்னே வருகிறது.

உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைப்பதற்காய் மட்டும் இல்லை என்ற புரிதல் இங்கு உள்ளது. பலரும் உடல்நலத்தையும், வாழ்க்கை முறை மேம்படவுமே உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். நம் சென்னை உடற்பயிற்சி கூடங்களில் ‘வெயிட் லாஸ் பேக்கேஜ்’ விளம்பரங்களைப் பார்த்திருந்த எனக்கு இந்த மாற்றம் புத்துணர்வு அளித்தது. வித விதமான உடற்பயிற்சி வகுப்புகள், வித விதமான முறைகள் அதற்கான உபகரணங்கள் என்று பல இங்கு உள்ளது. நம் நாட்டின் யோகக்கலை இங்கு மிகப் பிரசித்தி.

இந்த நோய்த்தொற்று காலத்தில் சில மாதங்கள் இங்கு உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டன. அப்பொழுது சிலர் , உடற்பயிற்சி மட்டும் தான் இந்த நோயிலிருந்து மக்களைக் காக்கும் என்று கூறி, அனைவரும் உடற் பயிற்சி செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்கிற அளவிற்கு எல்லாம் வாதிட்டனர். அந்த அளவிற்கு உடற்பயிற்சி அவர்களுக்கு முக்கியமாக உள்ளது என்று நான் நினைத்துக்கொண்டேன்.

பல மக்கள் உடனடியாக இங்கு உடற்பயிற்சி உபகரணங்களை வாங்கி குவித்தனர். நம் உடல் உழைப்பைக் கணக்கிடும் fitbit போன்ற ஸ்மார்ட் கடிகாரங்கள் இங்குப் பலருக்கு கர்ணனின் கவச குண்டலம் போல் உடலோடு ஒட்டிவிட்டது. சில பிராண்ட் ட்ரெட்மில், உடற்பயிற்சி சைக்கிள் போன்றவை வாங்க மூன்று, நான்கு மாதம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பெலோடோன் (Peloton) என்ற உடற்பயிற்சி கருவிகள் செய்யும் கம்பெனியின் பங்கு கடந்த 52 வாரங்களில் $17.70யில் இருந்து $142 வரை உயர்ந்தது. இப்படியாக அனைத்தும் முடங்கியுள்ள கொரோனா காலத்தில் இந்த உடற்பயிற்சியைச் சுற்றியிருக்கும் வணிகம் மேன்மேலும் உயர்ந்துள்ளது. ஆனால் நிஜமாகவே மக்களின் உடல்நலன் உயர்ந்துள்ளதா என்பது கேள்விக்குறி.

இந்த உடலைப் பேணும் மனப்பான்மையைக் குறிவைத்து மிகப்பெரிய சந்தை உலகம் முழுவதும் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இங்கு யார் அதிக உடற்பயிற்சி செய்கிறார்கள், யார் செய்வதில்லை என்ற தரவுகளுக்குப் பின் அமெரிக்காவின் ‘ஏற்ற தாழ்வுகள்’ வெட்ட வெளிச்சத்திற்கு வருகின்றன என்று தெரியுமா?

தேசிய சுகாதார புள்ளிவிவர அறிக்கை 2018 வெளியிட்ட தரவுகளை ஆராய்ந்தால் இவை தெளிவாகப் புரியும். அதிக உடற்பயிற்சி செய்யும் மக்களைக் கொண்ட மாநிலங்கள் பெரும்பான்மையாக அமெரிக்காவின் சராசரி வருமானத்தை விட அதிக பொருளீட்டும் வாய்ப்புகள் உள்ளவை. உடற்பயிற்சி செய்பவர்களில், பெரும்பான்மையானவர்கள் அதிக தனி நபர் வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் வெள்ளை நிறத்தவர்கள். அதிக தனி நபர் வருமானமும், வெள்ளை நிறமும் இங்கு உயர் சமூக பொருளாதார நிலையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட நபர்கள் ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை மிகவும் எளிதாக்கும் வாய்ப்புள்ள சூழலில் வாழ்கின்றனர். நேரெதிராக, சமூக பொருளாதார நிலையில் கீழே உள்ளவர்கள், அதாவது குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், வாழ்வாதார சிக்கல்கள் உள்ளவர்கள்,  கறுப்பர்கள், புலம் பெயர்ந்த தென் அமெரிக்கர்கள் இந்த தரவுகளில் நல்ல மதிப்பெண்களோடு இடம் பிடிக்க முடியவில்லை.  இதற்கும் கீழ், பெண்களின் உடற்பயிற்சி எண்கள் இடம் பிடித்துள்ளது.

குறைந்தபட்ச ஊதியத்தை தன் சம்பளமாக பெரும் ஒரு மனிதன் தன் வயிற்றுப்பாட்டுக்காக நிறைய நேரம் உழைக்க வேண்டி உள்ளது. இந்த வாழ்வுப் பாட்டில் பெருகும் தேவைகளுக்காக தன் உடல் நலத்தைதான் ஒருவனால் அடகு வைக்க முடிகிறது. சமூக அடுக்கின் நிர்ப்பந்தத்தின் வாழும் பெண்கள் பலருக்கு பொது இடத்தில் உடற்பயிற்சி செய்யச் செல்வது என்பது எல்லாம் பெண்ணிய விடுதலை போல் தான். ஒரு பெண் நடைப் பயிற்சி செல்லக் கூட தயங்கும் நிலையில் சமூகம் அவளை வைத்துள்ளது. இப்படி போன்ற தரவுகளின் பின்னே உள்ள உண்மைகள் சமூகத்தின் கழுத்தை நெருக்கும் சுருக்கு கயிறு. அன்றாட நெருக்கடிகளை மீறித் தான் சமூக அடுக்கில் ஏதோ ஒரு வகையில் கீழிருக்கும் ஒருவனோ, ஒருத்தியோ தன உடல்நலத்தைக் கூட பேண வேண்டியுள்ளது.  இதற்கும் மேல், சமூக பொருளாதார அடுக்கின் கீழே இருப்பவர்களின் மன நலம் என்ற மாயை வேறு இங்குள்ளது!

வாதம், பித்தம், கபம் என்ற மூன்றில் ஒன்று ‘மிகினும் குறையினும்’ நோய் என்றார் வள்ளுவர். நிஜத்தில் பணமும், சமூக நிலை என்ற இரண்டும் தான் பெரு நோயாக மக்களை வாட்டுகிறது.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button