தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;15 ‘கொடிது கொடிது’ – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

உலகில் பெரும்பகுதி இப்பொழுது அமெரிக்கத் தேர்தலைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னும் இந்தியத் தேர்தலில் ஓட்டுப் போடும் வயது வராத அல்லது ஒருமுறை மட்டும் ஓட்டு போட்டுள்ள வீட்டின் ‘பெரியவங்க’ எல்லாம் பள்ளி, கல்லூரி ஆன்லைன்  வகுப்பிற்கு நடு நடுவே அமெரிக்கத் தேர்தல் முடிவுகளைப் பார்த்துவிட்டு  ‘வாட்ஸ் ஆப்’ அனுப்புகிறார்கள். “நெவாடா மட்டும் கிடைச்சாலே போதும், ‘பைடன்’ தான்”. “பென்னிசிலவேனியா முதல்லயே தபால் ஓட்டுகளை ‘சிக்னெட்ச்சர்’ சரி பார்த்து இருக்கணும். அது தானே ‘லாஜிக்’? ‘ரிஸல்ட்ஸ்’ எவ்ளோ லேட் ஆகுது??? அமெரிக்கா ஏன் இதக் கூட ‘திங்க்’ பண்ணல?” என்று எல்லாம் பேசும்போது, வடிவேலு அவர்களின் பாணியில், “கண்ணு வேர்க்குது!, விட்டுங்க கண்ணுங்களா…” என்று சொல்லத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சிறிது நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நியூ ஸிலாண்ட், பொலிவியா தேர்தல்களோடு ஒப்பிட்டு கேள்விகள் கேட்டபொழுது, அவர்களின் உலக அரசியல் அறிவை விட, சமூக ஊடகங்களின் தாக்கம்தான் கண் முன்னே நிழலாடுகிறது. பைடனிடம் ஆரம்பித்து இனி வரும் அமெரிக்க அதிபர்களுக்குப் பொருளாதார மேம்பாடு, குடியேற்ற சட்டங்கள் சீரமைப்பு, பொதுச் சுகாதார கட்டமைப்பு, போன்றவற்றோடு அமெரிக்காவின் பெருமையை நிலை நிறுத்துவதும் பெரும் பணிதான்! (லிஸ்டில் முதல் வேலையான தீவிரவாத ஒழிப்பை மேலே விட்டுவிட்டேனே, சேர்த்து வாசித்துக்கொள்ளுங்கள்…!)

எழுபத்தி எட்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பைடனும், எழுபத்தி நான்கு வயது டிரம்ப்பும் போட்டியிடும் இந்த தேர்தல், அமெரிக்காவிற்கு வித்தியாசமானது. ஆனால் இந்த வாரம் இவர்கள் போட்டியிடும் தேர்தலின் அரசியல் பற்றி நாம் பேசப்போவது இல்லை. மாறாக உலகின் சிறந்த நாடு, ‘யூத்’களின் நாடு என்று கருதப்படும் இந்த நாட்டின் முதுமையைப் பற்றி பேசப் போகிறோம். இருவரின் வயது இந்தத் தேர்தலில், சமூகத்தில் எழுப்பிய கேள்விகளைக்  காணும்பொழுது நம் தமிழ் மண்ணில் நம் மூத்தவர்களை நாம் நடத்தும் விதமும் கண்முன்னே வந்தது. என்னளவில் கொஞ்சம் குற்றவுணர்ச்சியும், பல கேள்விகளும் உள்ள ஒரு விஷயம் இது.

2020ம் ஆண்டை வரலாறு ‘கொரோனா தொற்றின் ஆரம்ப ஆண்டு’ என்றுதான் கணக்கில் வைக்கப்  போகிறது.  உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் தங்களின் முதியவர்களை வீடுகளில் இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றன. அதாவது, உங்கள் வயது அறுபதைத் தாண்டி விட்டதா? நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதாவது உள்ளனவா? அப்படியானால், வீட்டோடு முடங்கி இருங்கள் என்று அரசுகள் தன்மையாக அறிவுறுத்துகின்றன. ஆனால், இதே நோய் தொற்றுக் காலத்தில்தான் பைடனும், டிரம்ப்பும் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.  எளிதாக, இது பணத்திற்கும், அதிகாரத்திற்கும் கிடைக்கும் சலுகைகள் என்று சொல்லி விட்டுக் கடந்துவிடலாம்.  ஆனால், அதை விடுத்து நெல்லை முதியவர்களின் வாழ்க்கை முறையை இங்கிருப்பவர்களோடு ஒப்பிட்டால் பொதுவாக முதுமையின் மேல் ஒரு பட்சாதாபம்தான் வருகிறது. நியூயார்க்கிற்கும், நெல்லைக்கும் உள்ள தூர அளவைப் போல் இரண்டு இடங்களில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

‘இளமை’ என்பதை அமெரிக்கச் சமூகம் கொண்டாடுகிறது.  முதுமையை இவர்கள் வெறுப்பதில்லை. ஆனால் அதைப் பார்த்து பயந்து, ஒதுக்குகிறார்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளிப்போடப் பிரயத்தனப்படுகிறார்கள். முழு வீச்சில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இந்த சமூகம் முனைப்பாக இருக்கிறது. தளர்ந்து விடும் எதுவும் தேவை இல்லாதவை என்ற தோற்றம் இங்குள்ளது. இதனால், நாற்பதோ, ஐம்பதோ, அறுபதோ இயங்கிக்கொண்டே இருக்கும் அளவிற்கு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்கின்றனர். இயங்கிக்கொண்டே இருப்பதென்பது சம்பாதிப்பது மட்டும் அல்ல.

பேங்க் வேலையை விட்டுவிட்டு தச்சுத் தொழில் ஆரம்பிக்கலாம். வேலை வேண்டாம், யோகா வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘pole dance’ கற்றுக்கொள்ளலாம். வருடத்தில் 6 மாதங்கள் வேலையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரசு கொடுக்கும் வேலை இல்லாதவர்களுக்கான மானியத்தோடு ‘Recreational vehicle’ எனப்படும் கேரவன்கள் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றலாம். இங்கு இவை எல்லாமும் சாத்தியம். தனிமனிதர்களுக்குத்  துணையாக இருக்கும் அவர்களுக்கான ‘தனி’ உலகங்கள் இங்கு புருவங்களை உயர்த்துவதில்லை. அவர்களுக்குப் பிரியப்பட்டதைச் செய்யும் பொழுது ஒருவரும் கேள்வி கேட்கவில்லை என்பதனால் அவர்கள் செய்வதை அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர் என்ற அர்த்தம் இல்லை. அதிகமாக சட்டை செய்வதில்லை என்பதும் ஒரு காரணம்.

இங்கு வேலைக்கு புதிதாகச் சேர வருவோரிடம் நடத்தும் நேர்காணலில் கண்டிப்பாக அவர்களின் வயதை கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால், அவர்கள் வயதை வைத்து நாம் பாரபட்சம் காட்டிவிடக்கூடும் என்பதற்காக இது தவிர்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் சமூகத்தில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் எழுபது வயதிற்கு மேற்பட்ட இருவரையும் ஊடகங்கள் தயவு தாட்சண்யம் இல்லாமல் கேள்விகள் கேட்டு வருத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.  அக்கேள்விகளுக்கான காரணங்கள் எந்த சமூகத்தின் பார்வையிலும்  நியமானவை என்று கருதப்படுகிறது.

வயதினால் வரும் தனி மனிதனுக்கான தொந்தரவுகள் மொத்த சமூகத்தின் பின்னடைவாக ஆகி விடக்கூடாது. அதே நேரத்தில், வயதினால் வரும் அனுபவத்தை விட, நாட்டை நிர்வகிப்பதற்கு எது மிக உதவியாக இருந்து விட முடியும் என்று எதிர்க் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. 56 வயதிலிருந்த ஜிம்மி கார்ட்டரை தோற்கடித்து ரொனால்ட் ரீகன் அதிபர் ஆகும் பொழுது அவரது வயது 69. ரீகன் நினைவுக் குறைபாடுகள் மற்றும் சுய கருத்து முரண்பாடுகளுக்காக பெரிதும் கேலி செய்யப்பட்டார். இதே ஊடகம் இனி பைடனுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

நம்மூரில் கல்யாணம் தள்ளிப் போனால், பொதுவாக “கால காலத்தில் அதது நடக்க வேண்டிய வயசில நடக்கனும்’ என்று சொல்லி அவர்களைப் படுத்துவார்கள். ஆனால் இங்கோ, “கடைசில தனியா செத்துப் போயிராத – யார் கூடவாது கடைசி வரைக்கும் இருந்துரு” என்பார்கள். வார்த்தைகள் நம் சிந்தனையின் வெளிப்பாடுதானே. இளமை  என்பது  ஒரு பருவம் என்பது தான்  நம் சமூகத்தின் மனநிலை. இங்கு, அறுபது வரை இளமை என்னும் பூங்காற்று தான்…. பின்னர் எழுபதிற்கு அப்புறம் முழுமையாக முடக்கும் முதுமை என்பது போல்தான் உள்ளது. இது பொதுவான உள்ளடக்கம். கண்டிப்பாக இரு இடங்களிலும் ‘Aging gracefully ‘ என்ற விஷயம் நடக்கத்தான் செய்கிறது.

அது சிறு வயதில் ‘சிவிக்ஸ்’ எனப்படும் சமூக அறிவியல் பாடங்கள் ஆரம்பித்து, கொஞ்சம் சுற்றி நடப்பவற்றில் கவனம் வர ஆரம்பித்த காலக்கட்டம். ஆறாவதோ, ஏழாவதோ படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். குடும்பத்தில் ஒருவரின் சுபாவத்திற்கு ஏற்ப பட்டப் பெயர் வைத்து விளையாடிக்கொண்டிருந்த காலம். நாட்டை நிர்வகிப்பதற்கு தனித்தனி அமைச்சர்களும், இலாகாக்களும் இருக்கின்றனர் என்றது பாடப்புத்தகம். எல்லோர் வீட்டிலும் அதுபோலத்தானே? வீட்டு இலாகாக்களுக்கு நடுவில் கொஞ்சம் அரசியலும் இருக்கும்தானே…? அதை வம்பிழுப்பதற்காக குடும்பத்தில் அனைவருக்கும் அவரவரின் தனித்தன்மையின் பெயரில் ‘இலாகா அமைச்சர்’ என்ற பட்டப்பெயர் வைத்தோம். இதில் என் அக்காவும், தாத்தாவும் கூட்டு. ஆனால், மாட்டிக்கொண்டதால் வாங்கிக் கட்டிக்கொண்டது என்னவோ கடைசியில் நான் மட்டும்தான்!.

உள்துறை மாமாவிற்கு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உறவுகள் அம்மாவிற்கு, நிதி தாத்தாவிற்கு, தகவல் தொடர்பு ஒரு அத்தைக்கு, விவசாயமும் அறநிலையத்துறையும் சித்தப்பாவிற்கு, வீட்டு வசதி நலத்துறை அப்பாவிற்கு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகள் வகித்தனர். இது விளையாட்டாகச் சொல்ல ஆரம்பித்து கடைசியில் குடும்பத்தில் சுய எள்ளல், கேலி, கிண்டல் என்று அனைத்திற்கும் இலாகா சம்பந்தப்பட்டே ஒருவரை விளிக்க ஆரம்பித்தோம். சொந்த வீடு போதாதென்று, அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கும், சொந்த பந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் இதே ‘இலாகா’ ஒதுக்கும் படலம் தொடர்ந்தது. இன்றும் நினைத்தால் புன்னகையை வரவழைக்கும் இந்த வேடிக்கைப் பழக்கம், எப்படி விட்டுப்போனது என்று இப்பொழுது நியாபகமில்லை.

இதில் முக்கியமாக எங்கள் அனைவருக்கும் பிடித்தது ‘சுற்றுலாத்துறை’ தான். கல்யாணம், கருமாதி, காது குத்து, மொட்டை, உறுதி செய்வது, பொன் உருக்குவது, நிச்சயதார்த்தம், வெற்றிலை கை மாறுவது, வீடு கட்டுவதில் ‘நிலை’ விடுவது, கிரக பிரவேசம், பிறந்தநாள், கோயில் கொடை, திருவிழாக்கள் என்று  குடும்பத்தின், நண்பர்களின், சொந்த ஊரின் பெரும்பான்மையான பல பல நிகழ்வுகள் அனைத்திற்கும் செல்லும் அல்லது செல்ல விரும்பும் குடும்ப நபருக்கு, இந்த ‘சுற்றுலாத்துறை’ ஒதுக்கப்படும். அதிகமாக குடும்பமே கிண்டல் செய்வதும் இந்த ‘சுற்றுலாத்துறை அமைச்சரை’ தான். பெரும்பான்மையாக, ஒவ்வொரு குடும்பத்திலும் அது எங்கள் ‘ஆச்சிகளிடம்’ தான் இருந்தது. ஆச்சிக்கள் என்பதினால் அவர்களை நாங்கள் அடித்த கேலி, கிண்டலுக்கும் குறைச்சலேயில்லை. நான் முதலில் கூறியது போல் இதற்கான குற்றவுணர்ச்சி இன்றும் உள்ளது.

நம் பெரியவர்கள் அழைப்பு வந்துவிட்டால், பத்திரிக்கை வைத்துவிட்டால் கண்டிப்பாக அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. காலப்போக்கில் இது மிகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தனிக்கதை. ஒருவேளை ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் ஆகிவிட்டால், கண்டிப்பாக இன்னொரு நாள் அங்கு சென்றுவிட்டு வருவார்கள். அந்த காலத்தில் அடுப்பங்கரையைத் தவிர வேறு எந்த உலகமும் இல்லாத பாட்டிகளுக்கு மிகப்பெரிய வடிகால் இந்த சிறு சிறு நிகழ்வுகள்தான். இந்த உளவியல் தெரியாமல், அவர்களைக் கிண்டல் செய்திருக்கிறோம் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.   இன்று வீட்டிற்குள் முடங்கிக் கிடந்து ‘ஸ்ட்ரெஸ்’ எகிறுகிறது என்று சொல்லும் பொழுது, ஏன் அவர்களின் அழுத்தத்தைக் கேலி பேசினோம் என்று வருந்துகிறேன்.

இன்றும் கோரோனோ களேபரங்களுக்கு நடுவில் வயதில் மூத்தவர்களுக்கு ‘முடங்கி இருங்கள்’ என்றுதான் அறிவுறுத்திக்கிறோம். அவர்களின் விருப்பத்திற்கு இன்னும் அதிகமாக செவி சாய்க்காத நிலை ஆகிவிட்டது. பலர் சொந்தங்களை, நண்பர்களைப் பார்க்க முடியாமல் வெளியில் கூடப் போக முடியாமல் மனம் வெம்பிச் சிக்கி தவித்தனர்/தவிக்கின்றனர். டிவிக்கும், இணைய அலைவரிசைக்கும் பேரன், பேத்திகளிடம் மன்றாடிக்கொண்டு இருக்கின்றனர். நம் வீடுகள் ஒன்றும் பல அறைகள் கொண்ட மாட மாளிகைகள் இல்லையே. ஒரு அறையில் உட்கார்ந்து பிள்ளைகள் பாடம் படித்தால், மறு அறையில் பெற்றோர்கள் வேலை செய்துகொண்டிருந்தால் வீடு முடிந்துவிட்டது. அங்கு தாத்தா, பாட்டி நடமாடினால் கூட பிள்ளைகளின் படிப்பிற்கு தடங்கல்தான் என்ற எண்ணவோட்டம்தான் உள்ளது. கூட்டுக் குடும்பங்களில் இப்படி பிரச்சனை என்றால், தனியாக இருக்கும் முதியோர்களின் பிரச்சனை அதற்கும் மேல். இன்னும் பத்து அத்தியாயங்களுக்கு எழுதலாம்…

பெரும்பான்மையாக நம் கருத்துக்கள் எல்லாம், ‘வயதானவர்கள் வெளியே அடிக்கடி சென்று வந்தால் உடம்பு சரி இல்லாமல் போய்விடலாம். கீழே விழுந்து ஏதாவது அடிபட்டு விட்டால், அவர்கள் கஷ்டப்படுவது மட்டும் இல்லாமல் அவர்களைப் பார்த்துக்கொள்வதில் நமக்கும் கஷ்டம். பிள்ளைகள் தலை எடுக்கும் பொழுது ’சிறியவர்களுக்குத்தான் அனைத்திலும்  முன்னுரிமை’ என்பது போல்தான் இருக்கிறது. இங்கே வராதீர்கள், அங்கே போகாதீர்கள் என்று நாம் அவர்களுக்கு விதிமுறைகள் மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அவர்களின் விருப்பங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இடமளிக்கும் வகையில் நம்  செயல்பாடுகளை மாற்றிக்கொள்கிறோமா என்பதே இங்கு கேள்வி. எங்கும் போக வேண்டாம், எதுவும் செய்யாதீர்கள் என்றால் இயங்காமல் ஒரே அறையில் உயிரோடு, உணர்வில்லாமல் இருங்கள் என்று கூறுகிறோமா?  நாளை எனக்கும், உங்களுக்கும் வயதாகும் பொழுது அப்படியான நிலையை ஏற்றுக்கொள்வோமா? ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவோமா? தெரியவில்லை!

இப்படியான எந்தக் கேள்விகளுக்கும் அனைவரையும் திருப்திப் படுத்தும் நேரடி ஒற்றை பதில் யாரிடமும் இல்லை. கண்டிப்பாக என்னிடம் இல்லை. இன்றைய கொரோனா காலத்தில் பெற்றோர்கள் வெளியே சென்றால் அவர்களிடம் கோபப்பட்டுவிட்டு, பின்னர் மீண்டும் அழைத்து, “சரி விடுங்க, உங்களுக்கு தெரியாததா? இன்னும் கொஞ்சம் கவனமா இருங்க” என்றுதான் கூறுகிறேன். கோவில், சாமி என்று அதைச் சுற்றி தன் உலகத்தை கட்டமைத்துக்கொண்ட பல முதியவர்கள் நம்மூரில் உண்டு. இப்பொழுது தனக்கும், தன் சந்ததியருக்கும் கொரோனா வரக்கூடாது என்று கடவுளிடம் இறைஞ்சவே கோவில் செல்கிறேன் என்பவர்களைப் பாசத்தோடு  ‘இது எல்லாம் தேவையா?’ என்பதா,  இல்லை, ‘உங்களுக்கு வேற வேலை இல்லையா’ என்று கேட்பதா? எனக்கு எது சரி என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு கேள்விகளிலும் பாசம் ஏதோ முகமூடியோடு உள்ளது  என்று மட்டும் புரிகிறது.

இங்கு கொரோனா முடக்கிப் போட்டிருந்த ஏப்ரல், மே மாதங்களில் வெளியே வாக்கிங் போகும்போது ஒரு அமெரிக்கப் பாட்டியைப் பார்த்தேன். ஒரு வாரத்தில் அவர் பெயர், வீட்டு விலாசம் தவிரப் பலவற்றைப் பேசினார். பேச ஆளே இல்லாமல் பார்த்தவுடன் தோன்றிய பலவற்றையும் பேசினார். அந்த ரோடு முதலில் எப்பொழுது போட்டார்கள், அருகில் ஒரு பள்ளி உள்ளது – அது அங்கு வந்த கதை என்று பல விஷயங்கள் பற்றி அவர் பேச நான் கேட்டேன். அவர் கணவர் இறந்து ஏழு வருடங்களாகத் தனியாக வாழ்ந்து வருகிறார். அவர் பேசுவதைக் கேட்பதற்கு யாரோ ஒருவர் அவருக்குத் தேவைப்பட்டார்.

இன்னொரு பாட்டி, தாத்தாவை நாங்கள் மலையேற்றம் (ஆமாம், அவர்களும் அந்த மலையேற்றத்திற்கு வந்திருந்தனர்!) சென்ற பொழுது பார்த்தேன். நான்கு குடும்பங்களாக சேர்ந்து அந்த மலையேற்றத்திற்கு நாங்கள் சென்று இருந்தோம். அவர் என்னைதான் பிடித்தார்! 76 வயதான அவர் தன்  71 வயது கணவர் மேல் கொண்டிருந்த காதல், ஒரே மகளையும் அவரின் குழந்தைகளையும் பார்க்க முடியாத வருத்தம், உலகின் மேல்  அவரின் நம்பிக்கை, என் பூர்வீகம் பற்றிய கேள்விகளுக்குப் பின் இந்தியாவில் கொரோனா கூடினால் நம் ஜனத்தொகை அளவிற்கு என்ன ஆகிவிடும் என்ற பதற்றம், மக்கள் இயற்கையை மதிக்காமல் நடப்பதில் அவருக்குள்ள கோபம்,  மேலும் சிலவற்றையும் சேர்த்து ஒரு பதினைந்து நிமிடங்களில் பேசிவிட்டார். என் கணவர் எங்கள் உரையாடலை முடித்தவுடன் என்னை என்ன சொல்லிக் கிண்டலடித்திருப்பார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

Thoughtful elderly man sitting alone at home with his walking cane

முதுமை கொடிது… முதுமையில் தனிமை கொடிதிலும் கொடிது. நம்மூரில் அனைவரும் சுற்றி இருந்தும் இயங்காமல், உணர்ச்சிவசப்படாமல் இருங்கள் என்று கூறுகிறோம். வளர்ச்சி பெற்று விட்டதாய் இயங்கும் இந்த நாட்டின் சமூகம், தங்களின் தனிப்பட்ட இயக்கத்திற்காக முதுமையை தனியே கழிக்கச் சொல்கிறது. கூடிச் சேர்ந்து வாழ்ந்து, முதுமையின் தனித்தன்மைக்கும் வழி விடும் சமூக அமைப்பு எங்காவது உள்ளதா? அப்படி இருந்தால், வாருங்கள், நம் முதுமையின் தளர்வைக் கழிக்க அங்கு சென்று விடுவோம்… முதுமையும், தனிமையும் இப்பொழுதே பயத்தைக் கொடுக்கிறது.

 

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close