தொடர்கள்

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 6 – நேர்கோட்டு நெடுஞ்சாலைகள் – சுமாசினி முத்துசாமி

தொடர்கள் | வாசகசாலை

‘ராஜபாட்டை’ என்ற சொல் நம்மில் பலருக்கு வரலாற்றுப் புதினங்கள் மூலமாக அறிமுகம் ஆகி இருக்கும். ஒரு ஆயிரம் வருடங்கள் முன்பே சிறப்பான திட்டமிடலோடு ’ராஜபாட்டை’ என்ற தேர் மற்றும் படைகள் செல்லும் பாதைகள் இருந்தன என்றும், அவை எத்தனை அகலமானதாக இருந்தன என்றும் அந்தப் புனைவு எழுத்துகளுக்குள் ஒளிந்து பார்க்கும்பொழுது ஒரு பிரம்மிப்பு இருந்தது. சில நேரங்களில், சோழர் காலத்து ஹைவேக்களில் வந்தியத்தேவனோடும், குந்தவையோடும், அருள்மொழிவர்மனோடும், மற்றும் பலரோடும் குதிரையிலோ, தேரிலோ, யானையின் முதுகிலோ நானும் பயணித்திருக்கிறேன், பகற் கனவுகளில்.

இந்த கொரோனா பேரிடர் காலத்து முடக்கம் பலரைப் பல்வேறு வகைகளில் வதைத்துவிட்டது. பசி, பிணி, பலநாள் பட்டினி, வேலை/ வருமானம் இழப்பு, கல்வி முறிவு இதற்கு எல்லாம் மேலாக, தொடர் மரணங்கள்! போர்களின் கொடூரம் எத்தனை மூர்க்கமானது என்றும், போர்ச்சூழலில் எப்படி ஒவ்வொரு உயிர்வாழும் ஆத்மாவும் இருள் சூழ்ந்து இருக்கும் என்றும் நம்மில் பெரும்பான்மையானோர் வரலாற்றிலிருந்து  வாசித்துதான் அறிந்துள்ளோம். அந்தத் துயரின் சாரத்தை இன்று உயிர் வாழும் பலரும் ஏதோ ஒரு ரூபத்தில் உணர்ந்து வருகிறோம்.

துயர் என்பது  ஒப்பீடுகளுக்கு உட்பட்டது. மேற்சொன்ன பெருந்துயர் இல்லாவிட்டால், நமக்கு இருப்பதில் ஒரு துயரை மனது பிடித்துக்கொண்டு  தொங்கும். உணவிருந்தால், அது பிரியாணியாக இல்லையே என்ற  வருத்தம். அது பிரியாணியாக இருந்தால் ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு ’ஸ்பெஷல் கடை’ பிரியாணியாக இல்லையே என்ற வருத்தம். அப்படியே அந்தக்கடை பிரியாணியாக இருந்தால், அதை, தான் நினைத்த நேரத்தில் சென்று வாங்க முடியவில்லையே என்ற வருத்தம். இவ்வாறு ஒப்பிட்டு ஒப்பிட்டே நாம் துயரின் அளவை மனதில் நிறுத்திக்கொள்கிறோம்.  எத்தனையோ உண்மையான பெரும் இடர்களுக்கு நடுவில், அப்படியான ஒரு சிறு துயர்தான் உல்லாசப் பயணங்கள் செய்ய முடியவில்லை என்பது. உல்லாசப் பயணங்களாய்  இல்லாவிட்டாலும், ஒரு சிறு  தூரம் கூட சொந்த வண்டியில் ரசித்துப் பயணிக்க முடியவில்லை என்று பலர் புலம்பும்பொழுது பயணங்கள் எவ்வளவு நம் மனத்தினை நிறைந்துள்ளன என்பதை உணர முடிகின்றது.

வீட்டில் ஏதோ பிரச்சினை, அழுத்தம் என்றால் ஆபீஸ் செல்லும் பயணத்தின் நடுவிலேயே கொஞ்சம்  மனது இலகுவாகிவிடும். பின்னர் அலுவலக சூழலில் ஒரு மணி நேரத்தில் தெளிவாக மனம் மாறிவிடும். அதேபோல், ஆபீஸில் பிரச்சினை என்றால், வீட்டிற்குள் வரும் வழியிலேயே பாதி கரைந்து போய், பல நேரம் அவை செருப்போடு வீட்டிற்கு  வெளியே நின்று விடும். ஆனால் இன்றோ இரண்டு இடங்களின் பிரச்சனைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி, சிறு பிரச்சனைகளும் பெரும் அழுத்தத்தைத்  தருகின்றன.

அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆட ஆரம்பித்த நாட்களிலும் சரி, இப்பொழுதும் சரி, சாலை வழிப் பயணங்கள் பெரிய பிரச்சனை இல்லை. பெரும்பான்மை மாகாணங்கள் பயணங்களைத் தடை செய்யவில்லை. அப்படியே பயணம் செய்தாலும் ஈ-பாஸ் போன்ற விஷயங்கள் இல்லை. ஒரு விதத்தில், இங்கு கொரோனா தாக்கம் குறையாமல் இருப்பதிற்கு இதுவும் ஒரு சிறு காரணம் என்று கூட சொல்லலாம். ஆனால் மனப்புழுக்கங்கள் கொஞ்சம் குறைவதற்கு முக்கியமான காரணம் என்றும் சொல்லலாம். வெளியில் எங்கும் இறங்காவிடினும் காரை எடுத்துக்கொண்டு பலர் மாலை நேரங்களில் ஒரு ரவுண்டு போய் விட்டு வருகின்றனர்.

இங்கு ஹைவே சாலைகளில் பயணம் செய்வது ராஜபாட்டையில் யானையின் மீது அம்பாரியில் ஒய்யாரமாக பயணம் செய்வது போலத்தான். நான்கு வழி, எட்டு  வழி, சில இடங்களில் பன்னிரண்டு வழி  என்று பெரும்பான்மையான ஹைவேக்கள் அகலமானவை. சுற்றி இருக்கும் இயற்கையின் அழகில் மனதிற்கு ரம்மியமானவையும் கூட. எதாவது ஒரு தருணத்தில், அமெரிக்காவில் வாழ்பவர்கள் ஹைவேயில் செல்லும்பொழுது ஒரு சில நிமிடங்களுக்காவது பக்கத்தில் எந்த வண்டிகளும் இல்லாமல் தனியாக தன் கார் மட்டும் செல்லும் ஒரு சில நிமிடங்களை வரமாகப் பெற்று  இருப்பார்கள். அப்படியான ஒரு பொழுதில் என் பல பகற் கனவுகள் நிஜமானது போல் நான் உணர்ந்துள்ளேன்.

அமெரிக்காவில் தற்பொழுது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல வேண்டும் என்றால் வழி காட்டும் GPS கருவிகள், கூகிள் மேப்ஸ், வேஸ் (Waze) போன்ற செயலிகள் இல்லாமல் முடியாது. மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகள் எல்லாம் எண்களினால் சுட்டப்படும்(Numbered interstate highways). இந்தக் கட்டமைப்பு சிறப்பானது. புளோரிடாவில் இருந்து பாஸ்டன் நகருக்கு ‘டீ பார்ட்டி’ நடந்த இடம் என்று தப்பாக நினைத்து டீ குடிக்க யாராவது வர வேண்டும் என்று நினைத்தால் i95 என்னும் ஒரே ரோடு , ஒரே அழுத்து – கிட்டத்தட்ட 1400 மைல்கள், ஒரு பதினெட்டு -இருபது மணி நேரத்திற்குள் வந்துவிடலாம்.

முன்னாள் அதிபர் ஐஸேன்ஹோவர் (இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க அதிபர்) 1956ல் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பிற்கு அடித்தளம் இட்டவர். அவரின் நினைவிலேயே இன்றும் அது ‘ஐஸேன்ஹோவர் மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலை முறை’ (Eisenhover interstate system) என்று அழைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 49000 மைல்கள், 50 மாகாணங்களிலும் உள்ளது. 48 மாகாணங்களை வலைப் பின்னல் போல இது இணைத்துள்ளது.

சுங்கச்சாவடிகள் இங்கும் உண்டு. ஆனால் சாவடிகளில் பணம் கட்ட வேண்டாம் என்றால் மாற்றுச் சாலை வழிகள் உண்டு. மாற்றுச் சாலை வழிகள் சில நேரங்களில் கொஞ்சம் சுற்று! சிறிது நேரம் அதிகம் பிடிக்கும். அதாவது பணம் செலவழிக்க வேண்டுமா, இல்லை பணம் கட்டாமல் கொஞ்சம் நம் மணித்துளிகளைச் செலவழிக்க வேண்டுமா என்ற முடிவு நம்முடையது.

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் ‘பேண் அமெரிக்கன் ஹைவே’ (Pan American Highway) என்று ஒரு பெரு கூட்டு வழித்தடம் உள்ளது. இது கிட்டத்தட்ட முப்பதினாயிரம் கிலோமீட்டர்கள் நீளம் உள்ளது. அலாஸ்காவில் இருந்து அர்ஜென்டினா வரை இணைக்கும் சாலை இது. ஒரு மிக மிகப் பெரிய ரோடு ட்ரிப் போக வேண்டும்  என்று நினைப்பவர்களுக்கு மிக ஏற்ற வழித்தடம் இது. மிகப் பரந்த புவியியல் மாற்றங்களையும், விரவிய கலாச்சாரங்களின் கூட்டையும் இந்த வழித்தடத்தில் கண்டு களிக்கலாம்.

ரோட்டின் நடுவே இருக்கும் கம்பிகளை வளைத்து எதிர் பகுதிக்குச் செல்லும் வழிமுறைகள் இங்கு மக்களுக்குத் தெரியவில்லை. அதனால் நேர்கோட்டில் 500 மீட்டரில் இருக்கும் ஊருக்கு, யூ டர்ன் (U-turn) எடுத்து மூன்று நான்கு மைல் சுற்றித்தான் வருகிறார்கள். குப்பை போட்டால், சாலை விதிகளைப் பின்பற்றா விட்டால், சேதம் விளைவித்து விட்டால் அபராதங்கள் அதிகம் (நாங்களும் பார்க்கிங் விதிமுறையை ஒரு முறை கவனிக்காமல் விட்டதிற்கு அபராதம் கட்டி உள்ளோம்). போலீஸ் எல்லாம் அபராதம்தான் கட்ட சொல்கிறார்கள் – ‘அபராதம் கட்ட வேண்டாம் என்றால் எனக்கு கிபராதம் காணிக்கையாக்கு’ என்று சொல்வதில்லை.  தொழில்நுட்பத்தின் துணையோடு கண்காணிப்பு கெடுபிடிகள் கொஞ்சம் கறார்தான். சராசரி வேகம் 55 மைல்கள்- அதாவது கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர்கள். நெடுஞ்சாலையில் இருந்து வழியில் உள்ள ஊர்களுக்கு இணைச் சாலைகள் பிரியும். அவையும் எண்களாலேயே சுட்டப்படும். ஒரு இணைச் சாலையைத் தவறி விட்டோம் என்றால் திருப்பி ஒரு சுற்று சுற்றிவிட்டுத்தான் அதே சாலைக்கு வர முடியும். அல்லது பக்கத்துக்கு ஊருக்குச் சென்று அங்கிருந்து பின்நோக்கி நாம் போக நினைத்த ஊருக்கு வர வேண்டும்.

அமெரிக்கர்கள் நம்மைப்போல் அல்லாது வலது சாலையில் பயணிப்பர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வந்திறங்கிறங்கிய ஒரு இரு வாரத்திற்குள் ‘டெஸ்ட் டிரைவ்’ என்ற பெயரில் நான் வண்டி எடுத்தேன். முதல் பத்து நிமிடங்களுக்குள் தலை வலி வந்துவிட்டது. இடதில் இருந்து மூளை வலத்திற்கு மாற்றி செயல் படுத்துவதற்கு கொஞ்சம் திணறியது. (தயவுசெய்து நம்புங்கள், இந்த சொற்றொடரில் அரசியல் இல்லை)!

இங்கேயும் ரோடு போடுவதில் ஊழல், தினமும் சாலையைச் சுத்தப் படுத்தும் கான்ட்ராக்ட்டில் ஊழல், சாலைகளிலும், பாலங்களிலும் தரம் இல்லை என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆனால் ரோடு போட்ட இரண்டாவது தினம், சாலைகள் இங்கு பொலபொலவென்று கையில் எடுத்து உதிர்த்துத் தள்ள முடிவதில்லை. குறுக்குச் சந்து, கிராமத்திற்கு எட்டடி சின்ன இணைப்பு சாலைகள் என்றாலும், பழைய ரோடு இருந்தால் அவற்றை முற்றிலும் பெயர்த்து வெளியே எடுத்து, தளத்தை  சமன் ஆக்கி பின்னரே சாலை போடுகின்றனர். திருநெல்வேலியில் எங்கள் வீட்டின் வாசலுக்கு அரை அடி  கீழிருந்த சாலை இன்று இரண்டாவது வாசல் படியில் தொக்கி நிற்கிறது. அங்கு தண்ணீர் வடிவது ‘கடவுளின்’ செயலால்’ நடக்கின்றது. ஊழலே இருக்கக்கூடாது என்று சொன்னால் ‘ லூசாம்மா நீ?’ என்று பலர் கேட்பதால், ஊழல் இருந்தால் கூட அதில் ஒரு சிறு நியாயம் இருந்தால் பரவாயில்லை என்று மனம் இப்பொழுது மரத்துவிட்டது.

 

சாலைகளைச் செப்பனிடும்பொழுது, சாலையில் உள்ள மின் கம்பங்கள் விளக்குகளைப் பராமரிக்கும்பொழுது கண்டிப்பாக போலீஸ் அங்கு பணியில் இருப்பார்கள். அங்கு போக்குவரத்தை ஒழுங்கு செய்ய உதவுவார்கள். பராமரிப்புப் பணி செய்வதற்கு முன்பே மாற்று வழி அங்கு இல்லை என்றாலோ அல்லது தண்ணீர் வசதி  தடைபடும் என்றாலோ, அந்தத் தெருவில்   உள்ள அனைவருக்கும் வெகு முன்பே தெரிவித்துவிடுவார்கள். மிச்சம் பணி மறுநாள் இருந்தாலும், மாலை பணி முடிந்து செல்லும்பொழுது அனைத்து பணிச்சாமான்களையும் பெரும்பாலும் எடுத்துச் சென்று விடுவார்கள். உண்மையைச் சொல்லுங்கள், சென்னை மதுரவாயில் அருகே பத்து வருடங்களாக பெருத்த நீண்டு உயர்ந்த வேலை பாதியில் நிறுத்தப்பட்ட அந்தத் தூண்களின் மிச்சத்தைப் பார்க்கும்பொழுது, நாம் அனைவரும் மனதில் ஓரத்தில் கொஞ்சம் நம்மை ஆட்சி செய்பவர்களை வையாமல் சென்றிருக்க மாட்டோம். அதைப்போல் இந்த சுத்தமான விரிந்த சாலைகளைப் பார்க்கும்பொழுது இங்கிருக்கும் ஆட்சியாளர்களை வாழ்த்தாமலும் செல்ல முடியாது.

அமெரிக்காவின் வரலாறு என்பது ஒரு நானூறு வருடங்களைக் கொண்டது. அதில் இந்த சாலைகளின் வரலாறு ஒரு நூறு வருடங்களை இப்பொழுது தொட்டு நிற்கிறது. சிறப்பாகச் செயல்பட்டு வந்ததாக நாம் நினைத்துக்கொண்டாலும் தொய்வுகள் பல இருக்கத்தான் செய்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், அடிக்கடி சாலைகளின் தரம் குறைந்து விட்டதாகக் குற்றச்சாட்டுகளை நிறைய தினசரிகளில் வாசிக்க முடிகிறது. அடிப்படை வசதி, உள்கட்டமைப்புகளுக்குத் தேவையான பணம் ஒதுக்கப்படுவதில்லை போன்ற குற்றச்சாற்றுகளின் குரல் உரத்துக் கேட்கின்றது. அல்லது, நான் இப்பொழுதுதான் அவற்றை வாசிக்க ஆரம்பித்துள்ளேனா என்று தெரியவில்லை. அதேபோல் பெரு சாலைகளுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும்பொழுது பல எதிர்க்குரல்களும் பதிவாகி உள்ளதை வாசிக்க முடிகிறது. ஆனால், நம் சேலம் எட்டு வழிச்சாலை போல் பெரிதும் விவசாய நிலங்களின் மேல் இந்தக் கட்டமைப்பு உள்ளதுபோல் வாசிக்க முடியவில்லை.

சாலைகள், நகரங்களையும் சிறு ஊர்களையும் இணைக்கும்பொழுது, வணிகங்கள் தங்களைப் பிணைத்து வளர்ச்சி பரவலாகும். ஒவ்வொரு முறை பண்டிகைகளின பொழுது காலியாகும் சென்னையைக் காண்கையில் ஏன் தென் மாவட்டங்களில் இவற்றில் ஒரு கால் பங்கு மக்களுக்காவது வேலை வழங்க நிறுவனக் கட்டுமானங்கள் இல்லை என்று சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தோன்றும். ஆனால் இவை எவையும் நாட்டின் விவசாயம் என்னும் முதுகெலும்பின் மேல் பாலம் அமைத்து கட்டமைக்கப்படத் தேவையில்லை.

பல நாடுகளைக் கண்டு விட்ட நம் பிரதமரும், சென்ற வருடம் அமெரிக்காவிற்கு வந்த நம் முதல்வரும், பின்னர் வந்த துணை முதல்வரும்  இவை அனைத்தையும் கவனித்துச் சென்றிருப்பார்கள். கொரானா முடிந்ததும் திட்டங்கள் பல அணிவகுத்து நம் சாலைகளின் தரமும் கண்டிப்பாக முன்னேறும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

என் பேச்சை நீங்கள் கேட்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியே இல்லை என்று சொல்வதற்கு, ‘மை வே ஆர் ஹைவே (My way or highway)’ என்ற மரபு மொழி (idiom) அமெரிக்காவில் உண்டு.  நிஜமாக நாம் அடைய வேண்டிய சாலைகளின் தரம் அமெரிக்கன் வே (American way) மட்டும்தான்.

சரி, யாரவது சின்னதாக ஒரு நல்ல ரைடு முகக்கவசம் அணிந்து வெளியே செல்கிறீர்கள் என்றால், ECR ரோடையும், போரூர் பாலத்தையும், கோவை-பாலக்காடு ஹைவேவையும், நெல்லை-மதுரை ஹைவேவையும் கடக்கும்பொழுது கொஞ்சம் என்னையும் நினைத்துக்கொள்ளுங்கள்.  இதற்கு நடுவில் யாருக்காவது மதுரவாயில் தூண்கள் எப்பொழுது சாலைகளைத் தாங்கும் என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்! அதற்கு அன்புப் பரிசாக நான் அடுத்த முறை தமிழ்நாடு வரும்பொழுது உங்களுக்கு அட்லாண்டா நகரிலுள்ள இந்தப் பாலத்தின் போஸ்ட்டரை வாங்கி வந்து பரிசளிக்கிறேன்.

தொடரும்

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close