கட்டுரைகள்
Trending

நீர்த்திவலைகள் : சிங்கப்பூர் பிரேமா மகாலிங்கம் சிறுகதைகள்

சுப்ரபாரதிமணியன்

1. பிரேமா மகாலிங்கம் சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியிலும் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறார். 2013ஆம் ஆண்டில் தங்கம் உணர்வை கவிதைக்காகப் பெற்றவர், சிறுகதையிலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்து இருக்கிறார். ஒரு சிறுகதைத் தொகுப்பு ‘நீர்த்திவலைகள்’. இந்தக் கதைகளை பெரும்பாலும் குடும்பக் கதைகள் என்று சொல்லலாம். அவருடைய அலுவலகம் எல்லைக்குட்பட்டது என்பதை நாம் சீக்கிரம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அந்த எல்லைக்கு உட்பட்ட அனுபவங்களை சீராகச் சொல்வது தான் இவருடைய சிறப்பு என்று சொல்லலாம் சாதாரண இளம் பெண்களில் சமையல் கலையில் அவ்வளவு ஆர்வம் இல்லாமல் இருப்பதும், அதற்காக பல சமயங்களில் வேதனைப்படுவது, தன் குடும்பத்தாருக்கு நல்ல சுவையான சமையல் செய்து தர முடியாது என்ற வருத்தம் பல பெண்களிடம் இருக்கும். அதுவும் அப்பா அம்மா கூட இருக்கும் பெண்கள் அவர்களின் தயவு. திருமணம் முடித்துக் கொண்டு காலம் கடத்துகிற போது இருப்பின் வெறுமையும் மரணமும் அவர்களைப் பற்றி திரும்பத் திரும்ப நினைக்க தோன்றும். அப்படி ஒரு கதையை முதல் கதையாக எழுதி இருக்கிறார். தன் வீட்டில் இருக்கிற குழந்தைகள், கணவர் போன்றோர் அவளின் சமையலை எப்படி எதிர்கொள்கிறார்கள் அவர் எப்படி சமையல் குறிப்புகளை யூடியூப் மற்றும் புத்தகங்ளில் இருந்து பெற்று சமைக்க முயன்று தோல்வியோ வெற்றியோ காண்கிறார் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார். சாதாரண இயல்பான ஒரு அனுபவம் ‘காகிதப் பூக்கள்’ என்ற கதையில் சிறு அனுபவங்களை எல்லாம் கோர்த்துச் சொல்லியிருக்கிறார் . ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்படும் சில புதிய முறை பற்றிய எண்ணங்கள் அவருடைய வாழ்க்கையில் கணங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் கதை, அவர்கள் மேல் ஒரு அனுதாபத்தையும் பரிதாபத்தையும் கொண்டு வருகிறது . அதில் பணிகளைச் செய்யும் ஒரு ஆண் முதியவரும் ஒரு பெண் முதியவரும் கதை நெடுக அவரை எப்படி பாதித்து இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய நகர வாழ்க்கையில் பெரும்பாலும் வெளிநாடுகளில் முதியவர்களுக்கு ஏற்படும் மறதி நோய் பற்றி ஒரு கதையும் எழுதியிருக்கிறார். தன் வீட்டில் புறக்கணிக்கப்பட்ட ஒரு தாய் இருக்கிறார். தன்னுடைய கடவுச்சீட்டை கூட எடுத்துக் கொண்டு, பாக்கெட்டில் வைத்துக் கொண்டு எங்காவது கிளம்பும் போது தொலைகிற யோசனையில் கிளம்பிவிடுகிறார் . ஆனால், அவருக்கு இன்னொரு குடும்பமும் துணைக்குக் கிடைக்கிறது. அப்போது இந்த கடவுச்சீட்டு தேவையில்லை என்ற எண்ணம் கூட வந்து விடுகிறது. அப்படி ஒரு கதையை முக்கிய விஷயத்தை, ஒரு கதையில் சொல்லியிருக்கிறார். ‘முட்டையின் நிறம் கருப்பு’ என்று ஒரு கதையில் சில அதிர்ச்சிகரமான விவரங்களைத் தருகிறார், உடலை வருத்தி தனக்கென ஒரு வாரிசை பரிசாக அளித்து இருக்கும் அம்மாவின் தியாகத்தைப் பற்றி அந்தக் கதை சொல்கிறது செயற்கை கருத்தரித்தல் மூலம் கணவனின் விந்தை பாதுகாத்து சரியான நேரத்தில் அம்மாவின் கருப்பையில் செலுத்தி வெற்றிகரமாக இன்னொரு குழந்தை உருவாக்கித் தந்த மருத்துவர் சத்தியநாராயணனின் நடவடிக்கைகளைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது, தன் புதுக் குழந்தைக்காக அவர் எடுக்கிற பிரயத்தனங்கள் இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது, இந்தக் கதைகளின் முக்கிய அம்சம், இந்த கதைகள் முழுக்க சிங்கப்பூரில் நடப்பதாக இருப்பது தான். சிங்கப்பூர் தமிழ் குடும்பங்கள் சிங்கப்பூர் வாழும் பிற சமூகத்தினரை இணைத்து இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கதையின் பிரத்யேக தன்மைக்காகப் சிங்கப்பூர் வாய்மொழி பேச்சும் சீன வார்த்தைகளும் பெருமளவில் உபயோகிக்கப்பட்டு அவற்றிற்கான குறிப்புகள் சரியான இடங்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்புகளைச் சுற்றிய கதை தெளிவான எல்லை இல்லாத கதை என்றெல்லாம் சில விமர்சனங்கள் வரலாம். ஆனால், அவர் தன் எல்லைக்குள் இருக்கும் விசயங்களை நேர்த்தியாக விவரித்திருக்கிறார் என்பது தான் இதனுடைய முக்கிய பலமாகச் சொல்லலாம். இந்த தொகுப்பிற்கு ஆண்டியப்பன், ராம வயிரவன், சாபு சைமன், பாஸ்கர் சக்தி போன்றோர் முன்னுரை அளித்து சிறப்புச் செய்திருக்கிறார்கள்

Subrabharathi Manian
Subrabharathi Manian

2. விளிம்புநிலை மக்களைப் பற்றிய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வழக்கமாய் விளிம்பு நிலை என்றால் தலித்துகள், பெண்கள், திருநங்கைகள் போன்றோரைச் சொல்லலாம். ஆனால், இந்தத் தொகுப்பை முன் வைத்து இருப்பது சாதாரண குடிமக்கள் என்று உடல் ஊனமுற்றவர்கள், நோயாளிகள், அடிமை வேலையாய் இருக்கும் பெண்கள் (உதாரணம் சமையல்காரப் பெண்கள் ). இந்த விளிம்பு நிலை மக்களைப் பற்றி இத்தொகுப்பில் நிறைய கதைகள் உள்ளன. பிறகு வயதானவர்கள் சிங்கப்பூர் போன்ற சமூகங்களில் அதிகரித்து வருவதன் அடையாளத்தை இங்கே இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் சொல்லி உள்ளன. பல்வேறு காரணங்களால் வயதானவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது . அவர்களுக்கான மருத்துவ செலவுகள், போக்கிடங்கள் , புகலிடங்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன. இந்த வயதானவர்கள் பற்றிய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன . அதே சமயம் நோய்மை பற்றிய குறிப்புகள் இந்தத் தொகுப்பில் எங்கும் நிறைந்திருக்கிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றோர் படும் சிரமங்கள் அல்லது பெண்கள் , பெண் பிள்ளைகளாய் இருப்பதால் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் போன்றவை அதிகம் பேசப்பட்டு இருக்கின்றன. வழக்கமான நோயாளிகள் வயதானோர் என்பதால் மரணம் என்பது பற்றிய குறிப்புகளும் பல கதைகளும் உள்ளன. ஒரு டாக்ஸியின் எண் கூட மரணத்தை சம்பந்தப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அக்கதையிலும் இன்னொரு கதையிலும் இருக்கும் பேய்கள் பற்றிய நம்பிக்கை கொடுமையானதாக இருக்கிறது . சிங்கப்பூர் போன்ற சமூகங்களில் இருக்கும் மூடநம்பிக்கைகளில் பேய்கள் ஆவிகள் போன்றவை பெரும்பாலும் இடம்பெற்றிருப்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். பல உவமைகள் மனதைத் தொடும் சிறந்த படிமங்களாக இருக்கின்றன . உதாரணத்திற்கு, ஒரு ஊமை நிலவும் வீட்டில் நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கும் பெண் போல் மழை தரையை ஓங்கி அறைந்து கொள்வது.. இது போல பல படிமங்களையும் இந்தத் தொகுப்பில் பார்க்க முடிகிறது . முகநூல் அமைப்புகள் தருகிற சிரமங்கள் வாழ்க்கையில் அவை குறுக்கிடுவதைப் பற்றி சில கதைகள் உள்ளன. ஒரு பெண் தன்னை காத்துக் கொள்ள ஒரு ஏஜென்சி எடுத்துக் கொண்டு முன்னேறுவது பற்றி ஒரு புதிய தலைமுறையின் ஆதங்கமாய் இன்னொரு கதையும் இருக்கிறது. தினசரி வாழ்க்கையில் தென்படும் சமையல் சார்ந்த குறிப்புகள் எப்படி குடும்பத்திலுள்ளவர்களை பாதிக்கிறது என்பதும் முக்கிய அம்சமாக பல கதைகள் உள்ளன.

மரணம் வலி மிகுந்தது இறந்தவர்களுக்கு அல்ல இருப்பவர்களுக்கு. பிரியமானவர்களின் மரணத்தை நேருக்கு நேர் சந்தித்து வருவதால் இந்த வலியை உணர்ந்து கொள்ள முடியும் என்கிற ஆசிரியர், பல கதைகளில் நோய் சார்ந்த விஷயங்களையும் மரணத்தை எதிர் கொள்ளும் சிரமங்களையும் சொல்லியிருக்கிறார். இத்தொகுப்பின் தலைப்பான ‘நீர்த்திவலைகள்’ என்ற கதை தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று ஒரு தமிழ் குடும்பத்தில் சமையல்காரியாய், வேலைக்காரியாய் இருக்கும் ஒரு இளம்பெண் பற்றியது. எதேச்சையாய் அந்த வீட்டின் ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது அந்தப் பெண்ணைத் தவிர்ப்பதற்காக அவன் அவளை தமிழ்நாட்டிற்கு அனுப்பி விடுவதும், சில வருடங்கள் கழித்து தமிழ்நாட்டுக்கு வருகிற போது அவனுடைய சாயலிலே ஒரு பையனை பார்க்க நேர்வதும், அந்த வேலைக்காரப் பெண்ணை எதேச்சையாகக் காண முடிவதும் பற்றிய ரொம்பவும் அழுத்தமான கதை . ‘நீர்த்திவலைகள்’ என்ற இந்தத் தொகுப்பை சிங்கப்பூர் ஆரியா கிரியேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். ரூபாய் 150 விலை.

பிரேமா மகாலிங்கம்
பிரேமா மகாலிங்கம்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button