சிறுகதைகள்
Trending

நெகிழித்தாள் [குறுங்கதை]- T.A.B.சங்கர்

“நீ கால்பக்கந் தூக்குல, நான் தலப்பக்கந் தூக்குதென்” கரகரத்த குரலில் சன்னமாக அதட்டினார் சுப்பையா. 

“இரும்வே மருந்தடிக்க வேண்டாமா?” என்றான் கணேசன், எரிச்சலுடன்.

மருந்துக்கேனை தூக்கிக்கொண்டு ஓடியாந்த மூர்த்தியை “எலெய் மூதி, சீக்கிரம் வாலா, இன்னிக்கு இன்னும் ரெண்டு இருக்கு” பொங்கினார் சுப்பையா. தெளிப்பானைக்கொண்டு தலை முதல் கால் வரை பீச்சி அடித்தான், மூதியான மூர்த்தி. அரசு மருத்துவமனை பின்புற வாசலில் நின்ற அமரர் ஊர்தியில் இரண்டு உடல்களை நெகிழித்தாளில் சுற்றி, ஏற்றி கொண்டு இருந்தார்கள்.

“சுப்பையா மாமா, இந்த கொரானா வந்தாலும் வந்துது, நமக்குதான் டபுள் டூட்டியா போய்ட்டு இருக்கு.. ஆனா, கைல எதுவும் சேர மாட்டிக்கி” என்றபோதே, “ரெண்டு பாடி போதும். போய்ட்டு அடுத்த நடைக்கு மூணாவது ஏத்திக்கோங்க” என்றார் வார்டு பாய்.

“அட ஆமாலெ, முன்னெல்லாம் ஒன்னு ரெண்டு விழும், சொந்தக்காரங்க அக்கம்பக்கம் எல்லாம் கூடி வரும். நமக்கும் எதாது தேரும்.. இது வாரதெல்லாம் தனியால்லா போவுது..!” சலிப்புக்கு சலிப்பு கூட்டிய சுப்பையா, “இதுல இந்த மாஸ்க் வேற எப்ப பாத்தாலும் மொகமூடி கொள்ளக்காரணுவ மாறி.. மூச்சே முட்டிட்டு வருதுடே, மாப்ள” என்று களற்றி சீட்டுக்கு கீழே வைத்தார்.

“இப்பிடி எல்லாமே தனிப்பொணமாவே போனா, யாருதான் நம்மள கவனிப்பா? யாருகிட்ட போயி நாமளும் த்துட்டு கேக்க?” என்று வினவிய கணேசனை சட்டை செய்யாமல் அமரர் ஊர்தியின் சாவியை போட்டு அந்த பொத்தானை அமுக்கினார், சுப்பையா.

“இருக்கப் பட்டவனுவோலுக்கு மாலை என்ன, வண்டி என்ன, வேட்டு என்ன, மேளம் என்ன.. 

இல்லாதவனுவோ தான் இப்படி அனாதையா போயிட்டு இருந்தானுவ.. போற போக்குல எல்லா பயலுவோலயும் இப்படித்தான் அரவமில்லாம தூக்கி போடணும் போலயே”, வாழ்வின் மொத்த வெறுப்பையும் கொண்டு செல்லும் மரண ஊர்தியில், தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி கொள்ளும் இருவரும் புலம்பித் தீர்த்தனர். 

“இவனுவ யாரு என்னன்னு எதாவது தெரியுமா, மாமா?” கணேசன் நோண்டினான். “எவனுக்குலெ தெரியும், எல்லாம் ஒரே கவருத்தால்ல சுத்தி முடிஞ்சு கெடக்கு. அவனுக்கு விதி கையில இருந்து மூக்கு, தொண்டை வழியா உள்ள பூந்து விளாண்டுறுக்கு” என்றபடி வண்டியை மின்சார சுடுகாட்டு வாசலில் நிறுத்தினார், சுப்பையா.

“நம்ம கீழ ரத வீதி மிட்டாய்க்கட அண்ணாச்சி கூட இந்த பாழாப்போன கிருமி வந்துதான் நாண்டுக்கிட்டாறாம்லா, பாவம்.?” என்ற கணேசனிடம், “ஆனா, அவாள் பேரப்புள்ள அடுத்த 20 நாளுக்குள்ள கடைய தொறந்துட்டாவள்ளா..” என்று சொல்லி முடித்தார் சுப்பையா.

“நெசம்மாவே இந்த கிருமி இருக்கா மாமா.. நேத்து ராத்திரி வாட்சாப்ல படிக்கும்போது, இது எதோ வெளிநாட்டுக் காரணுவ கெலப்பி வுட்ட கட்டுக் கதைன்னு போட்டுருக்கு..” 

“யாரு கண்டாலே? நம்மூர்ல இருக்க கிருமி போறாதுன்னு, வெளிநாட்டுல இருந்து வேற கெளம்பி வந்திருக்கு இது? வாட்சாப்ல வந்துச்சுன்னா, ரைட்டாத்தாம்லே இருக்கும்!!

“நீ கால்பக்கம் தூக்குல, நான் தலப்பக்கம் தூக்குதென்” மீண்டும், கரகரத்த குரலில் சத்தமாக அதட்டினார் சுப்பையா..

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

7 Comments

  1. சூப்பர் சங்கர் அண்ணா நம்ம ஊரு திருநெல்வேலி பாஷைல பேசிருக்கிறது . சூப்பர் 👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close