இணைய இதழ்இணைய இதழ் 59கட்டுரைகள்

நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன் 

கட்டுரை | வாசகசாலை

டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த ஒன்று அவரது வெள்ளந்தியான மனம். அது அவரைப் பெரு நகரத்தில் வாழும் சிலரிடம் தோன்றும் பாசாங்குகளை உள்வாங்காமல் தனித்துவத்துவமாக இயக்குகிறது. எளிமையான சிக்கலற்ற நேர்படப் பேச்சுத் தன்மை அவரது நற்குணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துக்காட்டியது. டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் கவிஞர் பிருந்தா இளங்கோவனாகி எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு “எனக்கெனப் பொழிகிறது தனி மழை”. இந்த கவிதைகளில் நான் அவரிடம் உணர்ந்த எல்லா குணாதிசயங்களும் பொட்டுக் கூட மாறாமல் அப்படியே வெளிப்பட்டிருப்பது ஆச்சரியமற்ற ஒன்று. ஆனால், அந்தக் கவிதைகளில் வெளிப்படும் இயல்பான நேர்மையை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. காலம், சூழல், சமூக அந்தஸ்து, வேலை இவற்றின் காரணமாக கிராமத்தை விட்டுப் பெயர்ந்து நகரத்து நவீனத்தின் போலித்தனத்தால் தடுமாறும் உணர்வு சரளமாக பல கவிதைகளில் வெளிப்படுகிறது.

சங்க காலம் தொடங்கி தற்காலம் வரையிலான பெரும்பாலான கவிதைகளை நினைவில் வைத்துக் கொள்ள உதவுவதில் முக்கியப் பங்கு காட்சிப் படிமங்களுக்கு உண்டு. “கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் தோன்றும் காட்டிடை” என்ற நெடுவெந்நிலவினார் பாடலில் அது சித்தரிக்கும் “புலிக்குருளை பொய்த் தோற்றமளிக்கும் மலர்ந்த வேங்கை மலர்கள் உதிர்ந்த கரும் பாறைகள் நிறைந்த காடு” என்ற காட்சியே ஆயிரம் வருடம் கடந்தும் அந்தப் பாடலை நினைவில் கொள்ள உதவுகிறது. இது போன்ற உதாரணத்தை பல நவீன கவிதைகளில் காட்டிவிட முடியும். அப்படி நினைவில் நிறுத்திக் கொள்ள உகந்த சில காட்சிகளை பிருந்தா தனது சில கவிதைகளில் சொல்லியிருக்கிறார். 

“தெருவிளக்கின் 
மஞ்சள் வெளிச்சத்தைத் 
சுற்றியலைக்கின்றன 
ஈசல் பூச்சிகள்” 

என்ற ஒரு காட்சியை ‘மூன்றாவது கண்’ என்ற கவிதையில் சொல்கிறார். 

அதே போலவே ‘ரசிகை’ என்ற கவிதையில் 

“அண்ணாந்து விழிமலர்த்தி
ஒளி சிந்துமிந்தத்
தீப்பிழம்பு மலர்களால்
அந்தி சிவந்து குழைவதை”

என்று குல்மொஹர் மரங்களைப் பற்றி காட்சிப் படுத்துகிறார். அந்த மரம் வாகனக் கரும்புகைப் படலத்தால் மேனியெங்கும் கருமை அப்பியிருப்பதை அக்கறையோடு சுட்டிக்காட்டுகிறார். இயற்கை மீது காமத்தை அல்லது இழந்த காதலை படிமமாக ஏற்றிச் சொல்வது ஒருவித யுத்தி. அப்படிப்பட்ட கவிதையொன்று ‘குரல்’ அந்தக் கவிதையில் பேடைக் குயிலின் குரலில் மயக்கமுறுவது இணைப் பறவை மட்டுமல்ல, இவரது பெண் மனமும் தான். 

இவர் காட்டும் உவமைகள், உருவகங்கள் வித்தியாசமானவை. காம வேட்கையை நுரைத்துப் பொங்கும் மதுப்போத்தல் உவமையாகக் கொண்டு சொல்வதில் இருந்தும், சுவர்க்கோழிகள் எழுப்பும் ஓசையை சாமத்துப் பேய்களின் மெல்லிய சலங்கை ஒலி என்று உருவகம் செய்வதில் இருந்தும் இதை நாம் காண முடியும். நகர வாழ்க்கையின் சலிப்பை “இந்தப் பச்சைத் தேநீரைப் போல் நீர்த்துக்கிடக்கிறது” என்பதை விட சிறப்பாக சொல்லிவிட முடியுமா என்று வியக்கிறேன். ஆனாலும், திறந்த புத்தகம், கொட்டிக் கொட்டிக் குளவியாக்குதல் போன்ற கிளிஷேயான உவமை, உருவங்கள் இருப்பதையும் இந்த தொகுப்பில் காணமுடியும். தனது வாழ்க்கையைத் திறந்த புத்தகத்தின் மீது ஏற்றிச் சொல்லும் கவிதையில் இவர் அதன் கருப்புப் பக்கங்களைச் சார்ந்தும் பதிவு செய்திருப்பது இவரது கவிமனதின் நேர்மைக்கு சான்று.

தன்னை எதார்த்தமாய் எந்த குணம் எப்படியோ அப்படியே பகிரங்கமாய் காட்டுவதற்கு மிகப் பெரிய துணிவு வேண்டும். தன் பலகீனங்களை அப்படியே பதிவு செய்ய அப்பட்டமான தைரியம் வேண்டும். அப்படி தனது சுயம் சார்ந்து காட்டும் பிம்பங்கள் மிக இயல்பானவையாய் இந்த கவிதைகளின் நம்பகத்தன்மைக்கு பக்கபலம் சேர்ப்பவையாய் அமைந்துள்ளன. மேல் சொன்ன கவிதை, வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைக் காட்டத் தவறாததைப் போலவே, ‘நானெனப்படுவது யாதெனில்’ என்ற கவிதையில் எனக்குள்ளே ஒரு வெஞ்சினம் கொண்ட மிருகம் இருக்கிறது என்கிறார். அந்த மிருகத்தை அடக்கி வைக்கும் குழந்தையும் அவருள்ளே இருக்கிறது என்பது அந்தக் கவிதையின் முரண். ஆயினும் தன்னை மிருகமென்று சொல்லிக் கொள்ள ஒருவருக்கு அசாதாரணமான துணிச்சலும் ஆகச் சிறந்த நேர்மையும் வேண்டும். வெற்றியாளர்களோடு கை குலுக்க நேர்த்தியான உடையில் செல்லும் இவரது கவிதை, விழா முடிவில் தளர்ந்து சாலையோரமாய் மெதுவாக நடந்து செல்கிறது. அது மட்டுமல்லாமல் தனக்கே உரிய தனிமை வெளியில் தனது தோல்விகளின் மடியில் முகம் புதைத்து அழுகிறது. இந்த முரண் உணர்வுகளை அப்படியே கடத்தும் பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

பிருந்தா புனைந்திருக்கும் பெண்ணியம் சார்ந்த கவிதைகள் மிக வித்தியாசமான குரலில் இருப்பவை. அவை கொக்கரித்து ஆர்ப்பாட்டம் செய்பவையல்ல. அவரைப் போலவே மென்மையான குரலில் தன்னை முன்வைப்பவை. குல்மொஹர் மரங்கள் என்னைத் தவிர யாருக்காகப் பூத்திட முடியும் என்ற தன்னம்பிக்கையின் குரலாக அவை ஒலிப்பவை. “என்னிலும் அதிகமாய் என்னுள் இருக்கிறாய்” என்று அர்த்தநாரீஸ்வரம் பற்றி விட்டுகொடுக்கும் சலிப்பை பெருந்தன்மையை அடக்கமாய் தெரிவிப்பவை. குடும்ப அமைப்புக்குள் தனது இளமைக்கால கனவுகளை தொலைத்து விட்ட பரிதவிப்பை சொல்பவை ‘கனவுகளின் நகலை வைத்திருப்பவன்’ என்ற கவிதை. அந்த கவிதையில் வியப்பு என்னவென்றால் கனவைத் தொலைத்தவளுக்காக ஏங்குபவன் அவளுடைய இணையே தான். இந்தக் கவிதை குடும்ப அமைப்பை கேள்விக்குறியாக்கினாலும் அதை அவர் விட்டு விலகவும் இல்லை என்பதும் நகைமுரண். இதே போலவே குடும்ப அமைப்பையோ சமூக அமைப்பையோ சாடி எழுதப்பட்ட கவிதை ‘ஒரு வன ராணியைப் போல்’. அந்தக் கவிதையில் பெண் தன்னை, தன் ராஜ்யத்தை ஆள, வனமேகி வன ராணியாக, சமூகமே உங்கள் ஆதரவை மூட்டை கட்டி வைத்து விட்டு அவள் வனராணி வாழ வழி அனுப்புங்கள் என்று இறைஞ்சுகிறது. பெண் எப்போதும் வீட்டின் தனிமையை நாணத்தை மணக்கிறாள். வீடே அவளுக்கு சிறையாகிறது. ஆனால், ஆணுக்கு அவனுக்கென்ற உலகம் விரிந்து கிடக்கிறது. ‘நண்பர்கள்’ என்ற இந்தக் கவிதையில் பிருந்தா

“யாராவது சொல்லுங்கள்
என் காதலனிடம்..
வீடு திரும்பும் என்னை
எப்போதும் உடனிருக்கும்
அவர்கள் முன்பாக
முத்தமிட வேண்டாமென்று.”

என்கிறார்.

பிருந்தாவின் கவிதைகளில் ஆன்மிகத்தையும் தொட்டுக் காட்டுகிறார். 

“முல்லைப் பூக்கள்
இருளைப் பிளந்து
வெளீரிடுகின்றன”
 

என்று தொடங்கும் ‘மூன்றாவது கண்’ என்ற கவிதை இப்படி முடிகிறது.

“அது நானல்ல. 
உள்ளே கனன்று கொண்டிருக்கும் 
இறை நெருப்பின் சிறுபொறி அது” 

ஆன்மீக தத்துவங்கள் சொல்லும் எளிய விஷயம் “உனக்குள் இருக்கும் இறையை உணர்.” தவம் செய்து உணரும் தருணங்களை இவர் கவிதை மூலம் எளிதாக தரிசித்துவிடுகிறார். ‘இறை’ என்ற இன்னொரு கவிதையில் பரிசுப் பொருட்களோடும் தண்டனைகளோடும் இறுதித் தீர்ப்பு நாளில் காட்சி தரும் இறைவனைக் கட்டி அணைத்துக் கொள்வா என்று கேட்கும் போது அன்பே சிவம் என்பதைத் தாண்டி வேறு எதுவுமில்லை என்று சொல்கிறார். இறை கவிதையினை ஒரு காதல் கவிதை போல உருவகம் செய்து பார்க்கும் எல்லா வாய்ப்புகளையும் தனக்குள்ளே கொண்ட கவிதை. பிருந்தாவின் பெரும்பாலான கவிதைகளில் பாசாங்கற்ற அன்பும் கருணையும் தவறு செய்தவரையும் மன்னித்தருளும் குணமுமே இவர் காட்டும் இறை குணங்கள். 

தாய்மை பற்றிய சில கவிதைகள் இவரது தொகுப்பில் உள்ளன. அதில் சில தனது மகளுக்கு, ஒன்று இவரது அம்மாவுக்கு என்று பங்கிடப்பட்டிருகிறது. ஆனால், தந்தைமை பற்றிய ஒரு கவிதை உண்டு. 

பரிசு’ என்ற கவிதையில் 

“முத்தம் கொடுத்தால் 
மிட்டாய் தருகிறேனென்று 
விளையாட்டாய்க் கொஞ்சும் 
ஒரு தகப்பனைப் போல” 

என்ற வரிகளில் பதிவாகியிருக்கும் தந்தைமை இவர் தொகுப்பில் தனித்துத் தெரியுமொரு காட்சி. 

மருத்துவரான பிருந்தா தனது என்னுரையில் “Capsule” அளவில் இருக்கும் என்று கவிதையின் வடிவம் சார்ந்து குறிப்பிடுகிறார். தவிர ‘ஹார்மோன்’ என்ற ஒரே ஒரு தலைப்பு மட்டும் கொஞ்சம் மருத்துவக் கலைச்சொல்லுக்கு அருகில் வந்தாலும் அந்தக் கவிதை மருத்துவத்துறை சார் அனுபவக் கவிதையல்ல. மொத்தத் தொகுப்பிலும் தனது துறைசார் அனுபவக் கவிதைகள் ஒன்றைக் கூட பிருந்தா சேர்க்கவில்லை. அது தற்செயலானதா என்பது என் சந்தேகம் மட்டுமே. குழந்தையின்மை சிகிச்சை சார்ந்த ஒரே ஒரு கவிதையுள்ளது. ‘வெற்றுக்காமம்’ என்ற கவிதை முன்னுரையில் கலாப்ரியா சுட்டிக் காட்டியிருக்கும் கவிதை. அந்தக் கவிதை போன்று பிறர் எழுத முடியாத கவிதைகள் பலவற்றையும் பிருந்தா எழுத முயற்சி செய்ய வேண்டுமென்பது எனது ஆவல்.

இவரது கவிதைகள் பால்ய காலம், தற்காலம் இரண்டு காலநிலைகளுக்கு இடையே நகரும் மாபெரும் பெண்டுலம். பால்யத்தில் எளிய வாழ்க்கை முறையும், தற்கால நவீன சொகுசு வாழ்க்கையும் இரண்டு துருவங்கள். இரண்டுக்கும் இடையில் அசைந்தாடுவது அதே பெண்டுலம் தான். ‘பால்யமும் பச்சைத்தேநீரும்’, ‘சுவை நிறைந்த வீடு’, ‘வந்து கதை சொல் பாட்டி…’, ‘காணாமல் போன தெரு’ போன்ற கவிதைகளில் அந்த ஊசலாட்டம் பதிவாகியிருப்பதைக் காணலாம். நவீன வாழ்க்கையின் போலித்தனங்களை விதவிதமாய்ப் பட்டியலிடும் பல கவிதைக் காட்சிகள் இந்த தொகுப்பில் உள்ளன. ‘நவீனம்’, ‘உருமாற்றம்’, ‘முகம்’ போன்ற கவிதைகளில் அதை காணலாம்.

‘முகம் ‘ என்ற கவிதையை இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கவிதையென்று சொல்வேன். நவீன உலகத்துக்கு தேவையானது முகமல்ல; முகமூடி என்ற எதார்த்தைப் பதிவிடும் கவிதை. ‘உருமாற்றம்’, ‘நவீனம்’ போன்ற கவிதைகளில் சிறுவயதில் பெரும் கனவுகளோடு சலிப்பே இல்லாம் மருத்துவம், தொழில்நுட்பம் என்று படித்துவிட்டு பெரிய கார்ப்பரேட்களில் நல்ல சம்பளத்துக்கு வாழ்க்கைப்பட்டு, பின்னர் உயிர்ப்பிலாத இயந்திரத்தனமான தினசரி நடவடிக்கைகளுக்குள் இருந்து தப்பிக்க பழைய உயிர்ப்பான நினைவுகளில் ஏறி ஊஞ்சலாடுவது இந்த கவிதைகள் வழியே எனக்கு புரிகிறது. ஒவ்வொருவருக்கும் பால்யத்தில் வெவ்வேறு விதமான அனுபவங்கள் இருக்கும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது..எழுபது காலகட்டத்தில் பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த குழந்தைகளுக்கான அனுபவம் மிக பிரத்தியேகமானதாக, தங்களது எல்லாப் பருவத்திலும் நினைத்து நினைத்து மகிழும் வியப்புகளாக அந்த அனுபவங்கள் விரிந்து கிடக்கும். அவர்கள் தற்காலத்து நவீன வசதிகள் எல்லாமும் கிடைக்கப் பெற்றாலும் தன் பசும் பழமைக்குள்ளேயே வேர் பதித்து விருட்சமென வளர்ந்திருப்பார்கள். இந்த நவீன வாழ்க்கையின் போக்குகளை, அதன் விசித்திரங்களைக் காணும் போதெல்லாம் அதில் ஒட்டாத அவர்களது மனம் பழைமைக்கும் பால்யத்துக்கும் ஏங்கும். இன்றைக்கும் நேற்றைக்கும் இடையே ஆடும் ஊஞ்சல். அப்படி நவீனத்தில் ஒட்ட முடியாமலும் ஒட்டியே இருக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் ஒருத்தியின் கவிதைகள் என்று பிருந்தாவின் கவிதைகளை நான் வகைப் படுத்துவேன்.

தனிமை சார்ந்த பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அது இணையுடனான ஊடலைக் கடக்க உதவுகிறது. என் ராஜ்ஜியம் நானே ராணி என்று பெருமிதம் கொள்ளவும் இதே தனிமை பயன்படுகிறது. போலித்தனமான உறவுகள் நட்புகளிலிருந்து தப்பிக்க இந்தத் தனிமை தன் தொனியை விரிக்கிறது. தோல்விகளிடம் மடி புதைத்து அழவும் அது உதவி செய்கிறது. சில நிராகரிப்புகளை உண்டு செரிக்க அதுவே காரணமாய் இருக்கிறது. இது எல்லோருக்குமான அனுபவம் தான். அதை எப்படி கவிதையாக்க வேண்டுமென்பதில் தான் கவிஞரின் தனித்துவம் இருக்கிறது. அதுவே அக்கவிதைகளை வாசகர் மனதில் நீண்ட கவிதானுபவமாக மாற வழி செய்கிறது. தனிமை மட்டுமல்ல காதல் சார்ந்த கவிதைகளையும் அதே தொனியில் என்னால் சொல்ல முடியும். 

பிருந்தாவிடம் கவிதைக்கான கச்சாப் பொருட்கள் நிறைய இருக்கின்றன. அவை கவிதையாக வெளிப்படுவதில் இன்னும் கொஞ்சம் பக்குவமும் மெருகும் கூட்ட முடியும் என்பதை இந்தக் கவிதைகளை வைத்து என்னால் கண்டிப்பாகக் கூறிவிட முடியும். இந்தத் தொகுப்பில் முதல் தொகுப்புக்கே உரிய சில போதாமைகளை அவர் தவிர்த்திருக்கலாம். உரிய கவனத்தோடு இன்னும் கவிதைகளைக் கூர்படுத்தியிருக்கலாம். அவரது கவிதை வரிகள் வழியே அதனை நான் உதாரணம் காட்டிவிடவும் முடியும்.

“அழித்து அழித்துப்
பிழை திருத்தம்
செய்யப்பட்டதென் வாழ்வு.”

பிருந்தா தொடர்ந்து இன்னும் மிகச் சிறந்த கவிதைகளை எழுத முடியும் என்பதற்கு இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளே சாட்சி. அவர் மேலும் பல கவிதைகள் எழுதி இன்னும் பல தொகுப்புகளை தமிழ் கவிதையுலகுக்கு அளிக்க வேண்டும். நல்வாழ்த்துகள்.

எழுத்தாளர் லாவண்யா சுந்தர்ராஜன்

நூலின் பெயர்: எனக்கென பொழிகிறது தனி மழை
விலை: ₹. 110
வகைமை: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: டாக்டர் எஸ். பிருந்தா இளங்கோவன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்.

*******

lavanya.sundararajan@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close