கட்டுரைகள்
Trending

‘நடிகையர் திலகம்’ தந்த விருது

ஜா.தீபா

சமீபமாய் அல்லது கடைசியாய் எந்த நடிகையுடன் சேர்ந்து தேம்பினேன்? வழக்கமாய் என்னைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறகை கொடுக்கும் தெய்வம்படத்தின் சாவித்திரியோடுதான். ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கையிலும் நெகிழாமல் இருந்ததில்லை. ‘இத்தனை வெள்ளந்தியான பெண்ணும் இருக்க இயலுமா?’ என்கிற சந்தேகம் எதையும் நமக்குத் தராமல் அதனியல்பில் மிகச் சிறப்பாய் தன் கதாபாத்திரத்தை சாவித்திரி வெளிப்படுத்திய திரைப்படம். ஊரெல்லாம் அவளது அப்பாவித்தனத்தைப் புரிந்து கொள்ளாமல்நீ ஒரு மோசமான பெண்என்று சொல்கிறபோது, “அட போங்கப்பா..சொல்லிட்டுப் போங்க எனக்கென்ன?’ என்று தோள் குலுக்கலோடு கடக்கும் அதே சாவித்திரி, தன்னுடைய அப்பாவேநீ கெட்ட பெண்என்று சொல்லிக் கேட்கிறபோது அழும் அந்த அழுகை, தவறேதும் செய்யாத மூன்று வயதுக் குழந்தை நம் முன் கதறுகிறபோது கையறு நிலைக்குத் தள்ளப்படுகிற பதற்றத்தை நமக்கு ஏற்படுத்தக் கூடியதுசாவித்திரியால் மட்டுமே அது முடிந்திருந்தது.  

ஒரு நடிகைக்காக கதாபாத்திரத்தைத் தொடர்ந்து வடிவமைத்த வரிசையில் சாவித்திரிக்கு முக்கிய இடமுண்டு, முதலிடமும் கூட. ஒரு சிறிய புருவ உயர்த்துதல், அந்தடோன்ட் கேர்புன்னகை, சிறிய முறைப்பு, துக்கத்தில் வெடிக்கும் உதடுகள் என எல்லாவற்றிலும் சாவித்திரிக்கென தனி முத்திரைகள் உண்டு. ஒரு அப்பாவியான பெண், வாழ்க்கையின் அனுபவத்தில் முதிர்ச்சியை நோக்கிச் செல்லும் கதைகள் சாவித்திரிக்காகவே வடிவமைக்கப்பட்டவை. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கையாகவும் இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

சாவித்திரியின் பாதிப்பு இல்லாதவர்கள் நடிகைகள், பாதிப்பு கொண்டவர்கள் சிறந்த நடிகைகள். நாம் இன்று கொண்டாடும் எந்த நடிகைக்கும் அவரது நிழல் இல்லாமல் இருக்காது. மூன்றாம் பிறை ஸ்ரீதேவி எனக்குச் சில நேரங்களில்கை கொடுக்கும் தெய்வம்கோகிலாவாகத் தெரிகிறார். போலவே ஊர்வசியின் அப்பாவித்தனமான கதாபாத்திரங்களும்..!

சாவித்திரி போல் நடிப்பதே பெரிய சவால் எனும்போது, சாவித்திரியாகவே நடிப்பதென்பது எத்தனை அசாத்தியமானது? அதைச் சாத்தியப்படுத்த முடியும் என்று ஒரு இயக்குநர் நம்புகிறார் என்றால் , அது ஒரு நடிகையின் மேல் வைத்த நம்பிக்கையைக் காட்டிலும் வேறென்னவாக இருக்க முடியும்? அதே முகவெட்டு, அப்பாவித்தனமான முகம், சிறிய பாவனைகளில் எதையும் வெளிபடுத்த முடிகிற தோற்றம் என கீர்த்தி சுரேஷைநடிகையர் திலகம்படத்திற்கு இயக்குநர் நாக் அஷ்வின் தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் சாவித்திரியின் அந்த நடிப்பாளுமையை கீர்த்தியிடம் கொண்டுவந்துவிட முடியுமென்று அவர் நம்பிய நொடி கீர்த்தியின் வாழ்க்கையில் மிகப் பொன்னான தருணம்.

கீர்த்தியின் முதல் தமிழ் படத்தில் அவர் தனது முதிர்ச்சியற்ற நடிப்பின் காரணமாக விமர்சிக்கப்பட்டார். அவர் சிரிப்பினை ஒருவர் சமூக ஊடகத்தில், ‘கீர்த்தி சுரேஷ் சிரிக்கும்போது வாயால் எட்டு போடுவது போல இருக்கிறதுஎன்று எழுதியிருந்தார். பிறகும் கூட அவர் அவருடைய அழகுக்காக மட்டுமே படங்களில் வந்து போக பயன்படுத்தப்பட்டார். அவரே எதிர்பாராத வாய்ப்புநடிகையர் திலகம்’. தமிழ், தெலுங்கு திரைப்படத்துறையைத் தன் நடிப்பின் வசம் மாற்றிக்கொண்ட ஒருவரை மலையாளப் பெண் தாங்குவதென்பது எளிதல்ல

இதில் கீர்த்திக்கு இரண்டு சவால்கள், சாவித்திரியாக வாழ வேண்டும், சாவித்திரியாக நடிக்க வேண்டும். சாவித்திரி இயல்பிலேயே அப்பாவித்தனமும் முதிர்ச்சியும் ஒருசேரக் கொண்டவர் என்பது கீர்த்திக்கு ஓரளவு எளிமையைத் தந்திருக்கும். ஆனாலும் அந்த வேறுபாட்டினைநடிகையர் திலகத்தில்சரியாய்க் கொண்டு வந்திருந்தார் கீர்த்தி.

சாவித்திரியை ரசிகர்கள் கொண்டாடி யானை மேல் ஏற்றுகிற போது ஒதுக்கப்பட்ட ஜெமினியை கவனித்து மனதுக்குள் மருகும் அந்த பாவனையும், ‘வாராயோ வெண்ணிலாவேபாடலில் ஜெமினியின் மேல்உடைமைக் கோபம்கொள்ளும்போது கொண்ட நடிப்பும் பெரும் வித்தியாசத்தைக் கொண்டிருந்தவை

படம் பார்க்கத் தொடங்கி அறிமுகமான காட்சியில் மட்டுமே கீர்த்தி தெரிந்தார். போகப் போக நாம் சாவித்திரியைத்தான் திரையில் மீட்டுக் கொண்டிருந்தோம். சிவாஜியின் புகைப்படத்தின் கீழ் கைக்குழந்தையுடன் சோகமாக கீர்த்தி நிற்கும் ஷாட் நொடிகளில் மட்டுமே வரக்கூடியது. ஆனால் அந்த நொடி நேரத்திலும் சட்டென்று உள்ளே கேவல் புறப்பட்டதை அடக்க முடியவில்லை. அது படம் பார்த்த எல்லோருக்குமே எழுந்திருந்தது என்பது முக்கியம். ஏனெனில் அந்த ஒரு காட்சி காலம் கடந்தும் நிற்கும்பாசமலர்என்கிற உணர்ச்சிக் குவியலின் ஓர் அங்கம். ஒரு கணத்தில் அந்தக் காட்சி அந்தக் கதையின் மொத்தத்தையும் நமக்கு நினைவுக்குக் கொண்டு வந்தது. அதில் நாம் திரையில் பார்த்தது சாவித்திரியைத் தான். ஒரு சாண் கூடுதலாகப் போனாலும் கூட மிகையுள்ள நடிப்பாக மாறிவிடக் கூடிய அத்தனை அபாயமும் அதில் இருந்தது. அதைக் கீர்த்தி புரிந்து வைத்திருந்தார்

படத்தில் மிக முக்கியமான காட்சியாக குறிப்பிட வேண்டியது, ‘மாயா பஜார்காட்சிகளை. சாவித்திரிக்குள் ரங்கா ராவ் புகுந்துரங்க சாவித்திரியாய்வெளிப்பட்ட விதத்தை கீர்த்தி நன்கு உணர்ந்திருந்தார். கீர்த்திக்குள் சாவித்திரியும், ரங்கா ராவும் தன்னை ஒப்புக்கொடுத்த காட்சி அது

ஒருவரின் அழுகையை, துக்கத்தின் பாவத்தை, உடல்மொழியைப் பிரதி எடுத்து விட முடியும். ஆனால் ஒருவரின் புன்னகையை அவர் போலவே வெளிக்காட்டுவது என்பது இயலாத ஒன்று. சாவித்திரியின் புன்னகைகள் கூடுதல் விசேஷமானவை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. உதடு பிரியாமல் தரும் அமரிக்கையான ஒன்று, ஒரு உதடு மட்டும் கோணும் அலட்சியப் புன்னகை, இரண்டு வரிசைப் பற்களும் ஒன்றிணைந்த அப்பாவித்தனமான புன்னகை, மூக்கினை சுருக்கி கிறக்கும் குறும்புப் புன்னகை, வெட்கப் புன்னகைஎன இன்னும் இன்னும் உண்டு. கீர்த்தி அத்தனையையும் கொண்டு வந்தார். தன்னுள் சாவித்திரியை முழுமையாக கீர்த்தி வரித்துக் கொண்ட கணங்கள் அவை. ‘நிழல் வேண்டி நின்றேன்பாடலில் இவை அனைத்தையும் அடுத்தடுத்து காண இயலும். இந்தப் புன்னகைகளுக்காகவே விருதுகள் தந்துவிடலாம், தேசிய விருதில் அது கீர்த்தி சுரேஷுக்கு தொடங்கியிருக்கிறது

சாவித்திரி ஒருபோதும் கனவுக்கன்னியாக இருந்ததில்லை. நடிகையர் திலகம் அவர்…! அந்தப் பாத்திரத்தில் நடித்த கீர்த்தியை நாம் கொண்டாடி விட்டு, கனவுக்கன்னியாக மட்டுமே மாற்றுகிறோம் என்பதைக் குறிப்பிடாமல் இக்கட்டுரையை எவ்வாறு முடிக்க இயலும்?

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close