சிறுகதைகள்

நாளொரு கோலம்

மித்ரா

மவ கல்யாணம் பண்ணி போனதுல இருந்தே படுத்தவ தான் ஒரே அமுக்கா அமுக்கிருச்சு.. எழவு வீடு கணக்கா இல்ல அழுதா அன்னைக்கு

ஆமாக்காபொட்ட புள்ளய எப்படி வளத்த கூடாதுனு அம்சம்மாவ பாத்து தான் கத்துக்கணும்

ஊர் முழுவதும் அம்சம்மாவை பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தது. பேசிக் கொண்டிருந்தது என்பதை விட அங்கலாய்த்துக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த செல்வாக்கான குடும்பம். அம்சம்மா மகளின் திருமணத்திற்கு பிறகு அப்படியே சரிந்து போனது.

அம்சம்மாவின் கணவர் வில்லங்கத்திற்கு பெயர் போனவர். ஊரில் பெரிய கை. எந்தப் பஞ்சாயத்து என்றாலும் அது முதலில் அவரிடம் தான் வரும். எத்தனையோ ஜோடிகளை அவர் வீட்டுத் திண்ணையில் வைத்து  பஞ்சாயத்துப் பேசி அத்து விட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அம்சம்மா வீட்டின் உள்கட்டில் அமர்ந்து கொண்டு கத்தும்நாமளும் வீட்ல ஒரு பொம்பள புள்ளய வச்சுருக்கோமேன்னு கனம் இருக்கா? இப்டி ஓம்பாட்டுக்கு வரவகள எல்லாம் அத்து விடுறயேஎன்று. அதெல்லாம் அவர் காதில் வாங்கிக் கொண்டதே கிடையாது.

அம்சம்மாவிற்கு 9 வயது இருக்கும் போது அவரது முறை மாமனான இவர் அரிவாளைக் கொண்டு வந்து பரிசம் போட்டு விட்டு இரண்டு வருடம் கழித்து அம்சம்மா சடங்கான உடனே திருமணம் செய்தாராம். ஊரில் அவர் தொடாத பெண்ணே கிடையாது என்பது ஊரறிந்த ரகசியம். ஒருமுறை சாமத்தில் ஏதோ வேலையாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்களை அவர் துரத்த, அவர்கள் முள்ளுக்காட்டுக்குள் புகுந்து ஓடி கை காலெல்லாம் சிராய்ப்புக் காயமாக வந்து அம்சம்மாவிடமே வந்து தஞ்சம் புகுந்தனராம். அப்போது அம்சம்மா அவர்களுக்கு களிம்பு போட்டு அனுப்பிய கதை தான் சில நாட்களுக்கு அந்த ஊரில் பொரணியாக இருந்தது.

ஆனாலும் அவருக்கு கணவன் மேல் ஏக கரிசனம் தான். தான் பெற்ற குழந்தைகளுக்கு சாப்பிட போதவில்லை என்றால் கூட அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் கணவருக்கு தனியாக ஒரு கிண்ணத்தில் உணவு எடுத்து வைத்து விடுவார். இத்தனைக்கும் ஒரு நாள் அவர் கணவர் வீட்டுக்கே ஒரு தாசியை கூடி வந்து அம்சம்மாவை வெளியே உக்காந்து காவல் காக்க சொல்லியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஒரு பேச்சு அம்சம்மா தன் ஒரே மகளை வளர்க்கும் விதம் தான். அந்த ஊரில் இதுவரை எவரும் தன் பெண் பிள்ளைக்கு அப்படி பண்டிதம் பார்த்தது கிடையாது. நாளுக்கொரு அலங்காரம் பொழுதுக்கொரு சிருங்காரம் தான். தன் மகளை அம்சம்மா ஒரு வேலையும் செய்ய விட்டது கிடையாது. அவருக்கு பொழுதுபோக்கே தன் மகளை சிங்காரிப்பது மட்டும் தான். அவர் மகளுக்கு தன் தாய்க்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு ஏதும் பெரிதாக வேலை இல்லை. வேலைக்கு உணவும். தேவைக்கு பணமும் அளவுக்கு அதிகமாகவே வந்து கொண்டிருந்ததால் படிப்பதைப் பற்றி அவர்கள் இருவருமே சிந்திக்கவில்லை. அது தேவையுமில்லை வாழ்க்கை இப்படியே தான் செல்லும் என்பது அப்போதைய அவர்களது எண்ணம்.

ஆனால் நாம் நினைப்பது போலவே வாழ்க்கை நம்மை வாழ விடுவது இல்லையே. அப்படி நிகழ்ந்தால் அந்த வாழ்வில் சுவாரஸ்யமும் இருப்பதில்லை. ஒரு நாள் முழு சாராய போதையில் தன் பங்காளிகளிடமே தன் மொத்த சொத்தையும் இழந்தார் அம்சம்மாவின் கணவர். கொஞ்ச நஞ்சம் தெம்பு இருக்கும் போதே மகளின் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று அவசர அவசரமாக ஒரு வரனை முடிவு செய்தார். வரன் யாரென்று தெரிந்த அம்சம்மாவின் மகள் அதிர்ந்து போனாள். ஒரு முறை வீட்டில் யாருமில்லா நேரத்திலும், பின்பொருமுறை வெளிக்கி  ஒதுங்கும் வாய்க்காலோரத்திலும் கையை பிடித்து வம்பிழுத்த தூரத்து முறை மாமன்.

வீட்டில் சொல்லி வேண்டாமென கூடத்தில் நின்று அழுத போது, ‘ ஏலா நகைநட்டு வேணாம்னு அவன் கட்டிக்க வந்ததே பெரிய விசயம் இதுல உனக்கு உத்தமன் கேக்குதோ?” என கத்தியவாறு குடுமியை பிடித்து இழுத்து தனி அறையில் தள்ளி சடாரென மகள் காலில் விழுந்தார் தந்தை. ” ஒன்னய கெஞ்சி கேக்குறேன் இதை வேணாமுன்னு சொல்லாத ஆயா அப்பாக்கு பயமா இருக்கு ஒன்னய நெனச்சா.” என கதறிய தந்தையை தன் வாழ்வை பணயம் வைக்க சம்மதித்து தேற்றினாள் மகள்.

அம்சம்மாவின் வலுத்த எதிர்ப்பையும் மீறி பிடிவாதமாக திருமணம் நடந்து முடிந்தது . அன்று பெருங்குரலெடுத்து அழுத அம்சம்மாவின் சத்தம் இன்றும் அந்த வீதிகளில் எதிரொலிக்கும்.

புகுந்த வீடு சென்ற பின்பு தான், தான் இது வரை வாழ்ந்து வந்த வாழ்க்கை ஒரு கனவு என்பதே புரிந்தது அவர் மகளுக்கு. தன் வாழ்க்கை இப்படியே மகிழ்வாகவே கடைசி வரை செல்லும் என நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அது ஒரு மிகப்பெரிய அடி. பணம் தந்த வசதி, சௌகரியத்தில் வளர்ந்தவள் கணவன் வீட்டில் அதை வைத்தே குத்திக் கட்டப்பட்டாள். ” நீ உன் வீட்ல மகாராணியா இருந்தாலும் என் வீட்டுக்கு வேலைக்காரி தென்எனக் கூறியே ஒவ்வொரு முறையும் தன் கழிவிரக்கத்திற்கு தீனி போட்டுக் கொண்டான் அவள் கணவன். “என்னமோ அன்னைக்கு மூஞ்சில எச்சியை காறி துப்பிட்டு போனியே இனி நீ தான்டி  என் போதைக்கு ஊறுகாயேவும்.” என சித்ரவதை செய்யத் தொடங்கினான்.  ” நித்தம் ஒரு அலங்காரம். மருத மீனாட்சி அம்மன் தோத்து போயிரும்என ஊர் மக்கள் சொல்லக் கேட்டே வளர்ந்தவள் ஒரு கண்ணி பூ வைக்க கூடசீவி சிங்காரிச்சு எவன மயக்க போறவ ? யாத்தே குடும்ப பொம்பள செய்வாளா இம்புட்டு அலங்காரம் ?” என மாமியாரின் ஏளனப் பார்வையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

இதற்கெல்லாம் மேலாக, முதலிரவு அன்றே அவர்கள் அறைக்கு வெளியே நின்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் கண்களை உணர்ந்து கணவனிடம் சொன்னாள். அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்தக் கண்கள் அவளைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருந்தன. இதை அவள் கணவனிடம் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவன் சொல்லும் பதில், ” ஆமா பெரிய ஒலகத்துல இல்லாத அழகி இவ எல்லாப் பயலும் ஓம்பின்னாடி தான் சுத்துறானுகளாக்கும்.” என்பான், ஒவ்வொரு இரவிலும் அந்தக் கண்கள் இவள் அறைக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தன.

அதனூடேயே அவள் கணவனுடன் குடும்பம் நடத்த வேண்டியிருந்தது.ஒரு நாள் யாருமற்ற நேரத்தில் இவள் குளிக்கும் அறையையும் பார்த்துக் கொண்டிருந்த போது தான் அது தன் மாமனாரின் கண்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தினாள். ஏறக்கட்டிய பாவாடையோடு மேலே துண்டைப் போர்த்திக் கொண்டு வெளியே வந்தவள், மாமனாரை பார்த்து,வெக்கமா இல்ல ?” என்றாள் உடல் முழுவதும் கூசி போய்.

அவர் கோரமாக ஒரு சிரிப்பை உதிர்த்து, ” புடிச்சத திங்க எதுக்குல வெக்கம். எனக்கும் சேத்து தென் எம்மவன் உன்ன கட்டிக்கிட்டு வந்தான். நீ என்னைக்கா இருந்தாலும் எனக்கு முந்தி விரிக்க போறவ டி…” என சொல்லி முடிக்கும் முன்னே ஓடி சென்று தன்னறையில் தாழிட்டாள்.

கண்ணீர் வற்றி போயிருந்தது. உணர்வுகள் அற்று பாழடைந்த பழைய புகைப்படமாக மாறி போயிருந்தாள் ஊரே அழகியெனக் கொண்டாடிய அம்சம்மா மகள். போய் விடலாம் என நினைத்த போதெல்லாம் காலை நனைத்த அப்பாவின் கண்ணீரும், செத்து விட தோன்றும் போதெல்லாம்எப்பயும் சிரிச்சிட்டே இரு ஆயா நீ தான் என் உசுருஎன நெட்டி முறிக்கும் அம்மாவின் முகமும் வந்து தடுக்கும். வாக்கப் பட்ட இடம் தூரம் என்பதால் நினைத்த உடன் அம்மாவை சென்று பார்க்கவும் முடியாது. அப்போது தான் ஒரு கடிதம் வந்தது அம்சம்மாவிற்கு உடல் நிலை சரி இல்லை என்று. யார் அனுமதியும் எதிர்பார்க்காமல் உடனே கிளம்பினாள்.

கணவன் வீட்டில் நடப்பவை எல்லாம் அவள் அம்சம்மாவிடம் சொல்லி அழுத போது அடுத்த பேரிடி அவளுக்கு காத்திருந்தது. அப்போது  அம்சம்மா மார்புப் புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தார். சிகிச்சைக்கெனவே இருந்த வீட்டையும் விற்று விட்டு வாடகை வீட்டிற்கு வந்திருந்தனர். அடுத்தகட்ட சிகிச்சைக்கும் வழி இல்லை. அருகிலிருந்து பக்குவம் பார்க்கவும் பெண் துணை இல்லை என்ற நிலை. ஓயாத அழுகையினூடே அம்சம்மா திரும்ப திரும்ப ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ” நான் உன்னை அடிச்சு புடிச்சாவது படிக்க வச்சிருந்திருக்கலாம், தப்பு பண்ணிட்டேன். உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்.”

கணவன் வீட்டிற்கு திரும்பிய அம்சம்மாவின் மகள் , தன் கணவன், மாமியார், மாமனார் என அனைவர் முன்னிலையிலும் அறிவித்தாள்.

என் அம்மாக்கு ஒடம்புக்கு முடியல. பணக்கார வியாதி. அவுக பக்கத்துல இருந்து நல்லது கெட்டது பாக்கணும். மருத்துவம் பாக்கவும் பணம் வேணும். நான் எனக்கு என் அப்பன் போட்ட நகை நட்டுகளை எடுத்துட்டு கொஞ்ச நாள் என் அம்மா கூட போய் இருக்க போறேன்.”

பேச வாயெடுத்த மாமியாரை கையமர்த்தி விட்டு. ” போனா.. போறவ அப்டியே போயிரு. திரும்ப இங்கன வரணும்னு நினைக்காத.” என்றான் கணவன்.

அவன் அருகில் சென்று ஐந்து நொடி உற்றுப் பார்த்தவள், தாலியை கழற்றி அவன் கையில் கொடுத்து விட்டு தன் பெட்டி படுக்கையோடு கிளம்பி விட்டாள்.

என்னைய பத்தி கவலை படாதமா எனக்கு நீ தான் முக்கியம். நீ இருக்க வரைக்கும் நானும் உன் கூடவே ராசாத்தி மாறி இருந்துட்டு போயிடுறேன்.” என்று சொல்லிக் கொண்டே அன்றிரவு தன் தாய்க்கு சோறு ஊட்டினாள். அம்சம்மாவை படுக்க வைத்து போர்த்தி விட்ட பின் அவளும் கட்டிலின் கீழே தரையில் படுத்துக் கொண்டாள். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியாது. அம்சம்மாவின் குரல் கேட்டது.

ஏவ்ளதூங்கிட்டயா?”

இல்லமா சொல்லு என்ன வேணும்?”

ஏதுமில்லை அம்மா திடீர்னு செத்துட்டேன்னு வச்சுக்க அழுது ஓஞ்சு போய் உக்காந்துராத ஆயாஎன்னைய நீ தான் குளிப்படணும். மத்தவுக எல்லாம் என்னய தொட்டா நோய் ஒட்டிக்குமோனு பயப்படுவாக..”

பேசாம தூங்குமா.. இந்நேரத்துக்கு கண்டதையும் யோசிக்காதஅதெல்லாம் ஒன்னும் ஆகாது

விடிந்ததும் காபியோடு அம்சம்மாவை தொட்டு எழுப்ப முயற்சித்த போது அவர் உடல் சில்லிட்டிருந்தது.

மவ கல்யாணத்துக்கே அப்டி ஒப்பேரி வச்சு ஊரைக்கூட்டுன மகராசி போய்ச்சேந்துட்டா. ஆனா மவக்காரி ஒரு துளி கண்ணீ தண்ணி சிந்தலையே. கல் நெஞ்சக்காரி. பிள்ள மனம் கல்லுனு சும்மாவா சொன்னாகஇப்போதும் ஊரெல்லாம் அம்சம்மா மகள் தான் பேச்சாய் இருந்தாள்..

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close