கட்டுரைகள்

சமீபத்தில் நான் ரசித்த திரைப்படங்கள் – சாண்டில்யன் ராஜு

                      2020 ஆரம்பத்தில் இருந்து நிறைய படங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கல.சில திரைப்படங்கள் நண்பர்களின் பரிந்துரைப்படி நெட்ஃபிளிக்ஸ்,Zee5 மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ப்ளாட்ஃபார்ம்கள்ல பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.இப்போ கொரானாவின் தாக்கம் அதிகமாயிட்டு வர்றதால வீட்டில் இருக்கும் நண்பர்கள் இந்தப் படங்களைப் பார்த்து பொழுதைக் கழிக்கலாம்..

1.அவனே ஸ்ரீமன் நாராயணா (2019) – கன்னடம் 

                 இந்திய அளவில்  கமர்சியல் வெற்றியடைந்த கன்னடப்படமான கேஜிஎஃப் க்கு பிறகு  மற்ற மாநில சினிமா ரசிகர்கள் கன்னட சினிமாவையும் உற்று நோக்க ஆரம்பிச்சிருக்காங்க.நான்கு இந்திய மொழிகள்ல மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்த படம் இது.வெஸ்டர்ன் கவுபாய் டைப் ஃபேன்டசி படம்.ஆனா இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மாதிரி அரைவேக்காட்டுத்தனமா இல்லாம ஒரு கம்ப்ளீட் அட்டெம்ட் இந்தப் படம்.ஒரு புதையல் அதை இருபத்தைந்து வருடங்களாகத் தேடுற இரண்டு கொலைகார கும்பல் அவங்களுக்கு நடுவுல மாட்டிக்குற ஒரு போலீஸ்,அந்த கும்பலை தன்னோட புத்திசாலித்தனத்தால சமாளிச்சி எப்படி புதையலை அடையுறாங்குறதுதான் கதை.கன்னட ரசிகர்கள் பெரிய அளவுல கொண்டாடினாலும் மற்ற மொழிகள்ல வரவேற்பு குறைவாதான் இருந்தது.அதுக்குக் காரணம் புதையலை தேடுறதுலயும் அதை அடையுறதுலயும் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவா இருந்ததுதான்.நெட்ஃபிளிக்ஸ்ல இருக்கு.பாக்கலாம்.

2.அலா வைகுந்தபுரமுலோ (2020)- தெலுங்கு

பொழுதுபோக்கு..பொழுதுபோக்கு..பொழுதுபோக்கு.

சினிமாங்குறது முழுமையான பொழுதுபோக்குன்னு அழுத்தமா நம்புறவங்க தெலுங்குசினிமா ஆட்கள்.அங்க எடுக்கப்படுற தொண்ணூறு சதவீதப் படங்கள் அப்படிதான்னாலும் எல்லாப் படங்களுமே க்ளிக் ஆகுறதில்ல.அப்படி திரைக்கதை சண்டைக்காட்சிகள்,இசை, நேர்த்தியான இயக்கம், நடிப்புன்னு எல்லா விதத்துலயும் பக்காவா க்ளிக் ஆன படம்னுஅலா வைகுந்தபுரமுலோவை சொல்லலாம்.பிறந்தவுடன் இரண்டு குழந்தைகள் ஒரு சதியினால இடமாற்றப்பட்டு வேறு வேறு வீடுகள்ல வளர்க்கப்படுறாங்க.பணக்காரக் குழந்தையான அல்லு அர்ஜூன் ஏழையா வளர்றாரு.ஒரு கட்டத்துல உண்மை அவருக்குத் தெரிய வரும்போது அவர் என்ன பண்ண முடிவெடுக்குறார்ங்குறதுதான் கதை.இந்தப் படத்தை கிட்டத்தட்ட பத்து முறைக்கு மேல பாத்துட்டேன்.அந்த அளவுக்கு இதுல என்ட்டர்டெய்ன்மெண்ட் இருக்கு.படத்துல மிகவும் பிடிச்ச விசயம் கதாபாத்திரங்களோட வடிவமைப்புதான்.அல்லு அர்ஜூனுக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாம அவரின் தந்தையா வர்ற ஜெயராம்,ஜெயராமின் மனைவி தபு,தாத்தாவா வர்ற மராத்தி நடிகர் சச்சின் கெடேகர், சகுனி வில்லனாக முரளி ஷர்மா ன்னு கேரக்டர்களை மிக ஆழமா இயக்குனர் திரிவிக்ரம் வடிவமைச்சதாலதான் இந்தப் படம் பாகுபலிக்கு அடுத்து அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குப் படமா ஆகிருக்கு.இரண்டாம் பாதியில் அல்லு அர்ஜூனும் சுனிலும் போர்ட் ரூம்ல செய்யுற அட்டகாசங்கள் படத்தின் ஹைலைட்.படத்தின் பாடல்களும் பின்னனி இசையும் மிகவும் ரசிக்கத்தக்கவையா அமைஞ்சிருக்கு.நெட்ஃபிளிக்ஸ்ல சன் நெக்ஸ்ட் ரெண்டுலயும் இருக்கு.கொண்டாட்டமான மூவி இது.

3.ஓ மை கடவுளே (2020) – தமிழ்

 

               இந்த வருசம் இதுவரை வந்த படங்கள்ல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் மை கடவுளே ரெண்டுமே புதுமுக இயக்குநர்களால பக்காவான திரைக்கதையை மட்டுமே நம்பி வந்த படங்கள்.இதுல ‘ஓ மை கடவுளே’ மிக மிக நேர்த்தியான படம்.தன்னுடைய தோழியையே திருமணம் செய்து கொண்ட ஒரு இளைஞன் தன்னுடைய முட்டாள்தனத்தால திருமண பந்தத்தை விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகிறான்.அவனுக்கு தன்னுடைய தவறை சரிசெய்ய,மீண்டும் தன்னுடைய வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதே கதை.குஷி மாதிரியான ரொம்ப ஜாலியான படம் இது.காதல், அதுல கொஞ்சம் ஃபேன்டசி எலிமென்ட்டைக் கலந்து அருமையான ஒரு என்ட்டடெய்னரா தந்துருந்தார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.படத்தோட மிக முக்கியமான ஒரு காட்சியா நான் நினைக்கிறது எம்.எஸ். பாஸ்கர் கழிப்பறையோட அவசியத்தை அசோக் செல்வனுக்கு உணர்த்துற இடம்.இந்த மாதிரி ஜாலியான ஒரு படத்துல அப்படி ஒரு அழுத்தமான காட்சியை எதிர்பார்க்கல.கூடிய சீக்கீரம் அமேசான் ப்ரைம்ல வரலாம்.ஆபத்துக்கு பாவம் இல்ல.டோரன்ட்லயும் இருக்கு.

 

4.அஞ்சாம் பாதிரா (2020) – மலையாளம்

               இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் போயிருந்தப்போ அப்போ ரிலிசாகியிருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படத்தையும் ஓவர்டேக் பண்ணி ஒரு படம் ஓடிட்டிருந்தது.பிவிஆர் மல்ட்டிபிளெக்ஸ்ல கிட்டதட்ட ரிலீசாகி பதினைந்து நாள் ஆகியிருந்தாலும் பத்து ஷோக்களுக்கு மேல் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருந்தது.அந்த சினிமாதான் அஞ்சாம் பாதிரா.ஒரு சீரியல் கில்லர் படம்.மேக்கிங்கில் மிரட்டி எடுத்துருப்பாங்க.கொரியன் சினிமாவுக்கு இணையான மேக்கிங்னு தாராளமா சொல்லலாம்.வரிசையாக போலிஸ்காரர்கள் கடத்தி கொல்லப்படுறாங்க.போலிஸ்காரர்களுக்கு உதவியாக கிரிமினாலஜிஸ்ட் அன்வர் உசைன் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்க்க எதிர்பாராத திருப்பங்களும் உருக்கமான ஒரு கதையும் வெளியே வருகிறது.ஒருகட்டத்தில் யார் செய்வது சரி? யார் பக்கம் நீதி? என்ற கேள்விகள் மனதுக்குள் எழுகின்றது.படத்தின் கடைசி ஃபிரேம் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் என்பது உறுதி.ஏப்ரல் முதல் வாரத்தில் சன் நெக்ஸ்ட்ல் வரவிருக்கிறது.

 

5.Jojo Rabbit (2019) – ஆங்கிலம்

              ஜெர்மனியில் நாஜிக்கள் செய்த அட்டூழியத்தை சோகமாக அல்லாமல் வித்தியாசமான முறையில் ப்ளாக் காமெடியாக சொன்ன விதம்தான் இந்தப் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது.இயக்குனர் Taika waititi.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்,ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பத்துவயது சிறுவனின் பார்வையில் படம் ஆரம்பிக்கிறது.ஹிட்லரின் தீவிர ரசிகனான அவன் ஹிட்லரைப் போலவே யூதர்களை வெறுக்கிறான்.ஒரு கட்டத்தில் தன்னுடைய தாய் ஒரு யூத சிறுமியை வீட்டிலேயே மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடிக்கிறான்.அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சிரிப்புடனும் கொஞ்சம் சோகத்துடனும் படம் பேசுகிறது.

படம் நெடுக அந்த சிறுவனின் கற்பனை நண்பனாக ஹிட்லர் வருவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.ஹிட்லர் ஒரு கடவுள் என்ற மாயை எவ்வாறு சிறுவர் முதல் பெரியவர் வரை கட்டமைக்கப் பட்டிருந்தது என்பதை இயக்குநர் மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.Taika waititi,தான் ஒரு யூதர் என்பதால் ஹிட்லரை அவமானப்படுத்தவே தான் ஹிட்லராக நடித்ததாக நகைச்சுவையாகக் கூறுகிறார்.சிறப்பான நடிப்பு.படத்தில் ஒரு இடத்தில்யூதர்கள் வாழுமிடம் எங்கே உள்ளது .?”என அந்த சிறுவன் கேட்க அதற்கு யூத சிறுமிநாஜிக்களின் தலையில்என்கிறாள்.இதை இப்போதைய இந்திய சூழலுடனும் பொருத்திப் பார்க்கலாம்.இந்தத் திரைப்படம் சினிமா விரும்பிகளுக்கு விருந்து.கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.அமேசான் ப்ரைமில் ஏப்ரல் 2 ம் தேதி வரலாம்.

மேற்கண்ட திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவை.வாய்ப்புள்ள நண்பர்கள் பார்த்து மகிழவும்.

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close