Uncategorizedகட்டுரைகள்

கே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.

கட்டுரைகள் | வாசகசாலை

கே.வி.ஷைலஜாவின் `முத்தியம்மா’ என்ற நூல் புனைவுக் கதைகள் அல்ல; சாமானிய மனிதர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகளின் வாழ்வியல் தொடர்புடையது. ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டமாய் அமைந்துள்ளது இந்த நூல்.

நடிகர் மம்முட்டி தொடங்கி நா.முத்துக்குமார் வரை தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை அகழ்ந்தெடுத்துப் படைத்துள்ளார்.

`முத்தியம்மா’ என்ற தலைப்பிலுள்ள கட்டுரையில், ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து, குரலற்றவர்களின் குரலாக ஒலித்து, ஒரு களப் போராளியாக வாழ்ந்து மறைந்த, தனது பாட்டி முத்தியம்மாவின் வாழ்க்கைத் துயரங்களை பதிவிட்டுள்ளார். வாழ்வின் உன்னதம் அறியாத கணவன், முத்தியம்மாவை கைவிட்டபோதும், இந்தப் பூமி அவரைக் கைவிடவில்லை.

கல்யாணி என்ற பெயருடைய தனது பாட்டியை, இவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே `முத்தியம்மா’ என்று அழைத்துள்ளனர். பொறுமையும், காத்திருப்பும், போராட்டக் குணமும், எடுத்த காரியத்தில் உறுதி குறையாதிருக்கும் நிலைத்தன்மையும் கொண்டவளாய் விளங்குகிறாள் முத்தியம்மா. தன் கணவனின் நடத்தை பற்றி பிறர் சொல்ல கேட்டபோதும், முத்தியம்மா அவர்களுக்கு ஒரு கசந்த புன்னகையை மட்டுமே தந்தாள் என ஆசிரியர் உவமைப்படுத்துகிறார். முத்தியம்மா காலத்தால் நரைத்துப்போகாத பாட்டியாய் படிப்பவர் இதயத்தில் வாழ்கிறாள்.

`நினைவில் காடுள்ள மிருகம் நான்’ என்ற கட்டுரையில் இழப்பும் வலியும் எல்லா உயிர்க்கும், எந்த வரைபட மக்களுக்கும் ஒன்றுதான் எனப் புலம் பெயர்தலின் அவலத்த குறிப்பிடுகிறார்.

கே.வி.ஷைலஜா அவர்களின் பூர்வீகம் கேரளா. அவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே கேரள மண்ணைவிட்டு பிரிந்து, திருவண்ணாமலையில் வந்து வாழ்வை தொடங்கினார். வாழ்வின் உன்னத நிலையை அடைந்து விட்டபோதும், தன்னை ஈன்ற மண்னண, வளர்த்த பூமியை, நிழல் தந்த மரங்களை. கண்சிமிட்டிய நட்சத்திரங்களை, பட்டாம்பூச்சியாய் பறக்க நினைத்த குழந்தைப் பருவத்தை, பனித்துளி போர்த்திய பசும்புல் தரையில் பிஞ்சு கால் பட்ட தடங்களை… என இன்னும் தான் பயணித்து கொண்டிருப்பது கடவுளின் தேசமான கேரளா என்றும், தன்னுடைய வேர் பல காலங்களுக்கு முன்னால் பிடுங்கி நடப்பட்டு ஊன்றி நின்றாலும், தன் தாகம் இன்னும் தீரவில்லை என்கிறார், கண்களில் நீர் மல்க. கவி சச்சிதானந்தனனின், `நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது. என் நினைவில் காடுகள் இருக்கின்றன’ என்ற கவிதையின்படி, தானும் நினைவில் காடுள்ள மிருகம் எனக் குறிப்பிடுகிறார்.

`இரத்த நாளங்களில் ஊறிக் கிடக்கும் ஆசிரியம்’ என்ற கட்டுரையில், தன்னுடைய 17 வருடப் பள்ளி கல்லூரி வாழ்வில், தன் மனதுக்கு நெருக்கமான ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கையில், ஒரு சிலரைத் தவிர யாரும் இவரது ஞாபக அடுக்குகளை அலங்கரிக்கவில்லை. தனக்கு ஆசிரியம் என்பதில், தன் முதல் அனுபவம் வலி நிறைந்ததாக இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.

உலகின் புனிதமான இடங்களில் ஒன்று, ஆசிரியரின் வகுப்பறை. காரணம், வகுப்பறையில் ஒவ்வவெருவரும் அறிவைப் பெறுகிறார்கள்.

ஆம்! கற்பித்தல் என்பது மாணவர்களின் தனித்திறனை, பலத்தை கண்டறியக்கூடிய ஒரு கலையாகும். ஆனால், இது எத்தனை ஆசிரியர்களுக்கு தங்களின் பலம் இதுபோன்று தெரிந்திருக்கும் என்பது ஆச்சரியம்தான். புத்தகக் கல்வி மட்டுமல்லாது, சமூகத் தொடர்பு போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது ஆசிரியருடைய கடமை.

அந்த வகையில், கே.வி.ஷைலஜா அவர்கள் முதன்முதலில் ஒரு பள்ளியில் எல்.கே.ஜி ஆசிரியையாகப் பணிபுரிந்தபோது, உடல் முழுக்க குழந்தைகளாய்ப் பூத்திருக்கும் தன்னை தனக்கே பிடித்த காலமது எனக் குறிப்பிடுகிறார். மனிதச் சூழ்ச்சிகளற்ற அந்தக் குழந்தைகள், பச்சை மண்ணாய் தங்களை இவரிடம் ஒப்படைத்ததையும் நினைவு கூறுகிறார்.

`சாம்பலிலிருந்து பூத்த மலர் உமா ப்ரேமன்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரையைப் படிக்கும்போது, தீச்சுவாலையைவிடக் கொடுமை நிறைந்ததாய் மனம் கொதிப்படைகிறது. மனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மாபெரும் பெண்மணியின் வாழ்வினைப் பதிவிட்டுள்ளார்.

வாழ்வு தெளிந்த நீரோடையாய் செல்வதில் என்ன சுவாரஸியம் இருக்கிறது? அது தன் கோர நாக்குகளை நீட்டி, நம்மை சில நேரங்களில் தலைகீழாய் புரட்டிப் போட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி நின்று வேடிக்கை பார்க்கிறபோதுதான், வாழ்வின் அர்த்தம் நமக்கு புலப்படுகிறது எனப் பதிவிடுகிறார்.

உமா ப்ரேமன் கடந்துபோன பாதை எங்கும் கரடுமுரடானது. பறக்க நினைத்த இவரது இளமை, தாய்மையற்ற இவரது தாயால் புதைக்கப்படுகிறது. ஆனாலும், அதுகுறித்து எவ்விதமான கலக்கத்தையும் கோராத அந்தக் குரல், எல்லோரையும் தன்னோடு சேர்த்துக்கொள்கிறது. புறந்தள்ளும் உதாரணத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் மட்டுமே ஏற்று வளர்ந்த அவள், எப்படித் தன்னை ஓர் அன்பின் கூடாரமாக மாற்றிக்கொண்டார் என்பது பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். மனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட புரட்சிப் பெண் போராளியாக உமா ப்ரேமனை அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர்.

`வாழச் சொல்லித் தருகிறதா நம் கல்வி?’ என்ற கட்டுரையில் வரும்
பாட்டுக்கார லட்சுமியை வாசிக்கும்போது, மனதில் வலி, வேதனை, சந்தோஷம், துக்கம் என ஓர் உணர்வு நம்மை வசீகரிக்கிறது.

பாட்டுக்கார லட்சுமியின் கணவன், கள்ளச்சாராயம் காய்ச்சுபவன். எவ்வளவு சொல்லியும் அவன் திருந்தாமல் போக, இனி அவனை வைத்து வாழ முடியாது எனத் தெரிந்துகொண்ட பாட்டுக்கார லட்சுமி, தன் கணவனை பழஞ்சாக்கை உதறுவது போல உதறிவிட்டு தனியாக வாழப் பழகுகிறாள். வாழ்வின் பாடு தீர்க்க மூட்டை சுமக்கிறாள். கூடையில் தெருத் தெருவாக காய்கறி விற்கிறாள்.

ஊரில் சாவு என்றால், தன் வீட்டு இழவாய் எண்ணிக்கொண்டு ஒப்பாரி வைத்துப் பாடி, சலங்கை கட்டி ஆடுகிறாள். தன் சொற்ப வருமானத்திலும் ஐம்பது குரங்குகளுக்குத் தினமும் இட்லி வாங்கிக்கொடுக்கிறாள் எனச் சாமானிய பாட்டுக்கார லட்சுமியின் வாழ்வினை, ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டமாய் காட்டுகிறார் ஆசிரியர்.

`கையிலிருந்து தவறவிட்ட சூரியன்’ என்ற கட்டுரையில் காற்றில் ஒலியிருக்கும் காலம் வரை, தமிழ் மண்ணில் உச்சரிக்கப்படும் பெயரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பற்றி எழுதியுள்ளார்.

நா.முத்துக்குமாரின் உடலைவிட்டு அவர் உயிர் பிரிந்த நாளன்று, கண்ணீரால் அவரின் நினைவுகளை எண்ணி, அண்ணன் தம்பிகளற்ற என் வறண்ட வெளிகளில் இதற்காகவா கோடை மழை மாதிரி அன்பைக் கொட்டினாய்? ஒரு மின்னல் மாதிரி வந்து என் வாழ்வில் வெளிச்சம் தந்து ஏன் உறவை அறுத்துக்கொண்டோடினாய் என முத்துக்குமாரின் பிரிவை எண்ணி இதயம் தவித்து எழுதுகிறார்.
வளர்ச்சியின் உச்சத்தை, சிகரமாய் தொட்டபோதும் அதன் ஒரு துளிகூட தன் சட்டை காலரில் ஒட்டாமல் பார்த்துக்கொள்ளும் எளிமை நிறைந்த வாழ்க்கை முத்துக்குமாருடையது என்கிறார்.

சொற்றொடரைக் கையாளும் திறனில் தனித்தன்மைகொண்ட படைப்பாளராகவே கே.வி.ஷைலஜா விளங்குகிறார்.

இன்னும் பல ஆளுமைகளை வாசிக்க, புத்தகத்தைப் புரட்டுங்கள். உங்கள் மனதில் பூச்சொரியும்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close