சிறுகதைகள்
Trending

முதலாவது பெண் மலையாளம்:சிதார.எஸ்

தமிழில்: நறுமுகை தேவி

பச்சை முந்திரியின் மணம்.

என் நீண்ட வருட நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதைப் போலக் கனவு கண்டேன். நான் அப்போது கடற்கரையில் இருந்தேன். அலைகளும்,நுரைகளும்,வெய்யிலின் கொடுமையும் தீயாகக் கண்ணுக்குள் இறங்கத் துவங்கியிருந்தன. என்னைத் தவிர மற்ற எல்லாமும் ஓரங்க நாடக மஞ்சம் போல சிந்திச் சிதறிய துளிகளும், சிறு குட்டைகளுமாய்த் தேங்கியிருந்தன. அதன் நடுவில் எங்கேயோ மணலுடைய குளுமையோ,சூடோ, எரிச்சலோ வேறென்னவெல்லாமோ உடலின் அணுக்களுக்குள்ளே இழுத்தெடுத்து அவன் உடல் உப்பிப் போய் மேலாக மிதந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அது சாயங்காலமா, மதியமா என்றறியாத வகையில் சூரியனின் கனத்த துண்டுகள் அவன் மேலும், கடலின் மேல்புறமாகவும் விழுந்து கொண்டிருந்தன.கண்கள் அதிகம் திறந்திருந்தது போல் எனக்குத் தோன்றியது. அல்லது மூடியிருந்ததா என்றும் தெரியவில்லை.

ஒரு நிமிடம், பல வருடங்களுக்கு முன்பு பல்லாயிரம் தடவை எனக்குள்ளே இறங்கி வந்த அதே பார்வையை அங்கே மீண்டும் காணக் கிடைத்தது போலவும் தோன்றியது. கடலின் சுற்றுப்புறமும், கரைகளும் கவலையாயிருந்தது. அலைகள் நிசப்தமாக இருந்தன. கால்களை அகட்டி வைத்து வெட்கமில்லாதபடிக்கு அவன் கிடந்ததைக் கண்ட போது எனக்குக் கொஞ்சம் வெட்கம் கூடத் தோன்றியது. கடலில் விழுந்து இறந்து விட்டான். நான் அவனிடம்…இல்லையில்லை… நான் எனக்குள்ளேயே சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டேன். இல்லாவிட்டால் கடலுக்குள்ளே இறங்கிப் போயிருப்பானோ? கப்பல்களில் வேலை செய்திருந்த அவனை பார்ப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் நெடுநாள் முன்பாகவே நான் அவனைப் பற்றி எழுதியிருந்தேன். அவனுடைய அன்பு, அதில் ஊறிக் கிடந்த பச்சை முந்திரியின். மணம். அது சுற்றுவட்டாரத்தில் எங்கேயும் இருக்கிறதா என்று மூக்கை விரித்து முகர்ந்து பார்த்தேன். எனக்குக் கடலின் மணம் கூட உணர முடியவில்லை. என்றைக்கோ மறந்து போன அவனது பெயரைப் போலவே அவனது வாசனையும் என் நுகர்வு நரம்புகளுக்கு அந்நியமாகிப் போயிருந்தது. எனக்குப் பெரிய. வருத்தமேதுமில்லை. அவனைப் பார்ப்பதற்கு எத்தனையோ நாட்களுக்கு முன்பு நான் எழுதிய சிறுகதையில் அவனது பெயர் எழுதப்பட்டிருக்கிறது. பல வருடங்கள் நான் அவனை அந்தப் பெயரில் தான் அழைத்திருந்தேன். நான் மட்டும் அழைக்கும் பெயராக இருந்தது அது. ஒரு வேளை நானாகத் தான் அப்படி நினைத்துக் கொண்டேன். திடீரென்று ஒரு நாளில் அது அப்படியெல்லாம் இல்லை. நானாகக் கற்பித்துக் கொண்டது என்று தோன்றவே அந்தப் பெயரையும், அவனையும் வெறுக்கத் துவங்கினேன். ஒரு காலத்தில் தீயைப் போலக் காதலித்த ஒருவனைக் காரணமின்றி வெறுப்பது என்பதிலும் ஒரு உறுதியான காரணமிருந்தது.

கண்ட கனவு முழுமையாவதற்கு முன்பாகவே எனக்கு விழிப்பு வந்து விட்டது. என்னைச் சுற்றிலும் சூன்யத்தின் துணுக்குகளாயிருந்தன. அறையின் சுவர்களும், ஜன்னல் கண்ணாடிகளின் வழியே குளிர் வழிந்து இறங்கிக் கொண்டிருந்தது. என் தேகமெங்கும் கடல் அரித்தது போல் கொப்புளங்கள் உண்டாயிருந்தன. உண்மையிலேயே அவன் இறந்து போயிருப்பானா?எனக்கே அதிசயமாக இருந்த என் அமைதியோடு நான்
சிந்தித்துப் பார்த்தேன். தொலைபேசியில் ஒரு போதும் விரல்களால் அழுத்தாத அவனது எண்ணில் என்னுடைய கண்களும், கைகளும் இடறியது. அழைக்கலாம்..ஆனால், அழைத்த பிறகு அவனிடம் என்ன கேட்பது?

“நீ அங்கே இருக்கிறாயா?அல்லது இறந்து போய் விட்டாயா?” என்றா கேட்பது?

கடைசியாக அவன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாசமான வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்தன. ஒரு சின்ன மூச்சுத் திணறலுடன் நான் போனைக் கீழே வைத்து விட்டேன். மாலையாகி விட்டிருந்தது. நிறமில்லாத ஒன்று. வெயிலும்,உஷ்ணமும் கனவுகளில் மட்டும் உருகி வீணாகப் போகிற ஒன்று. ஆயிரம் ஒளிக்கைகளால் அதனுடைய சோம்பேறித்தனமும், அமைதியும் என்னுடையை வீட்டையும், மனதையும் இழுத்துக் கட்டியிருந்தது. கம்பளியின் துண்டுகள் சிலவற்றை உயர்த்தியும், மாற்றியும், நான் நிழல் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். என் ஒரு வயது மகள் அவளுடைய குட்டிக் கம்பளிச் சுருளுக்குள்ளில் இருந்து தலை தூக்கிப் பார்த்து தேவைக்கதிகமாகவே ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு அதட்டலில் அவளை அமைதியாக்கிய நான் படுக்கை விரிப்பையும், தலையணைகளையும் சரி செய்தேன். ஒரு தேவையும் இல்லாமல் சன்னலின் திரைச்சீலைகளைத் திறந்து மூடினேன்.

”அவன் இறந்து போயிருப்பானோ?”

ஒவ்வொரு முறை திரைச்சீலைகளை இழுத்து மூடும் போதும் மனதினுள் மீண்டும் மீண்டும் இதே கேள்வி தான். நான் மிக அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உள்ளுக்குள் இழைந்து கொண்டிருந்த கடல் ஆமைகள் இழுத்துக் கொண்டிருந்த தீயின் சூட்டைக் கண்களின் வழியாகவும் ஒவ்வொரு மயிரிழைகள் வழியாகவும் இப்போது வெளிவிடுமென்று தோன்றிய ஒரு நிமிடத்தில் அழைப்பு மணி ஒலித்தது.

அம்மிக்கல்லில் விழுந்த பால் கொத்து

நான் அங்கு சென்ற போது தீதி மதியத் தூக்கம் முடிந்த சோம்பலில் இருந்தாள்.திறந்த கதவுகள் என்னைக் கண்ட சந்தோஷத்தில் என் கன்னத்துக்கு நீண்டு ஒரு பிடிக்குள் இறுக்கிக் கொண்டது. அவர் திரும்பி வீட்டுக்குள் நடந்தார். அவருடைய பின்னால் நான் படுக்கையறைக்குச் சென்றேன். பாதி திறந்த சன்னல்கள் வழியே வெளியேயிருந்து காற்றும், மாலை நேரத்திற்கேயுரிய சில பெரிய நிழல்களும், குளிர்ந்து விறைத்துக் கொண்டு வீட்டுக்குள் விழுந்து கொண்டிருந்தன.

“சன்னல் அடைக்கலாம் அல்லவா தீதி?”

என்னை நோக்கி வழக்கம் போல் கைகாலை நீட்டி உதைத்த அவருடைய குழந்தையை எட்டிப் பிடித்து ஒரு முத்தம் வைத்த சமயத்தில் நான் அவரிடம் கேட்ட போது அவர் மயக்கத்திலேயே ”ம்” என்று முனகினார். அது அவரது வழக்கம் தான். நான் குழந்தையைக் குளிக்க வைக்கும் சமயத்தில் அவரை இடது கண்ணால் பார்த்த போது அவர் ஒண்ணும் இல்லை என்று சொல்லி கண்ணடித்துக் கொண்டே உடை மாற்றவும் செய்தார். அவருடைய கண்களில் ஏதோ ஒரு கடல் செத்துக் கிடப்பதையும், கன்னங்களில் வழிந்திறங்கிய சில மன அதிர்வுகள் மீண்டும் கிளறப்பட்டு முன்பு பலமுறை நடந்ததைப் போலவே நான் நிசப்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த மிகச் சரியான பதில், அவர் எளிதில் உணர்ச்சி வசப்படும் பெண்ணாக இருந்தார். சில பிரச்சனைகள், வாரக்கணக்கில் இருட்டுக்குள் தள்ளி கவலையென்னும் விஷத் துளிகள் கனத்து கனத்து தின்று தீர்க்கும். சில பிரச்சனைகள் நிமிஷங்களில் மின்னல்கள் போலே சட்டென்று மறைந்து விடும். சில சமயம் லாப்டாப் எடுத்து வைத்து பைத்தியம் போலே எதையாவது டைப் செய்து கொண்டு அவர் அழுது கொண்டிருப்பார். சில சமயம் என்னுடைய முகத்தைக் கூடக் காணப் பிடிக்காதவாறு தொடர் விடுப்பு எடுத்து அழுகின்ற குழந்தையையும் மார்பில் அணைத்துப் பிடித்தவாறு படுக்கையறையின் தரையில் கூனிக் குறுகி உட்கார்ந்திருப்பார்.

இங்கிருக்கும் பெரிய பள்ளியில் வட இந்தியாவில் இருந்து ஆசிரியராக வந்த தீதிக்கு வீதியில் கடைசியில் உள்ள இந்த வீட்டை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தது அதே பள்ளியில் பணிபுரியும் அலுவலக உதவியாளரான பாபா தான். பள்ளியில் கொடுக்கின்ற சம்பளத்துக்குள் அடங்குகின்ற கஷ்ட வாழ்க்கைக்கிடையில் காளான் மொட்டுக்களைப் போலே மறைவாகப் பூத்து மலர்ந்து நின்ற, ஒரே சமயத்தில் அமைதியும்,ஒளியும் தவழும் சிறிய வீடு. முதல்முறையாக குழந்தையையும் மார்பில் ஏந்தி அவர் என் வீட்டுப் படிகளுக்கு யாக்குவினுடையை டாக்சியில் வந்து இறங்கி என்னை அதிசயப்படுத்திய போது என் மார்புகள் துடிக்கத் துவங்கியது. அவருடைய சூன்யமான கண்கள், எங்கேயும் நிலை கொள்ளாத பார்வை, முகத்தில் அப்பிக் கிடக்கும் சோர்வு, கலைந்த கேசம். இவற்றிற்கிடையிலும் தளர்ந்து விடாத நடை. மார்பில் அணிந்திருக்கும் மஞ்சள் நிற மேலாடையின் மடிப்புகளுக்கிடையே உலகத்தின் பார்வைக்காய் குதித்திறங்கத் தயாராய் ஒரு புன்னகை.

என்னுடைய அடிவயிறில் இருந்து பெரும் பிரியம் சுரந்தது. என்னுடைய எல்லைக்கோடுகளுக்குள் வந்து சேர்ந்த அந்த இரண்டு பெண் பிள்ளைகள் என்னால் ஏமாற்றப்பட்டால் இனி அந்தப்பக்கம் போய்விடுவார்கள் என்று எனக்குத் தோன்றியது. நான் அவர்களை சேர்த்துத் தழுவிக் கொண்டு தெரிந்த வகையில் ஆங்கிலத்தில் ஆதரவான வார்த்தைகள் பேசினேன்.

”என்னைத் தீதி என்றோ தீது என்றோ அழைத்தால் போதும் மகளே”. பேசிக் கொண்டிருக்கையில் இடையிடையே நான் மேடம் என்று அழைத்ததால் அவர் இப்படிச் சொன்னார். என்னை அப்படி அழைத்த ஒரு பெண் பிள்ளை இருந்தாள். உங்களுடைய மொழியில் ஒரு அழைப்பு அல்லவா? ’தீதி’ என்று இரண்டு மூன்று தடவை உற்சாகத்தோடு அழைத்துப் பார்த்த பிறகு நான் கேட்டேன். இல்லை அவர் சிரித்தார். என்னுடையதும் அல்லாத உன்னுடையதும் அல்லாத ஏதோ ஒரு பாஷையில் பேசு. அதையே நீ சொந்தமாக்கிக் கொள்!.

தீதி பள்ளிக்குச் செல்லத் துவங்கிய போது பகலில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு பாபா என்னிடம் சொல்லியிருந்தார். சில மாதங்களேயான கைக்குழந்தையை கருணையோடு எத்தனை நேரம் பார்த்துக் கொள்ள முடியும்?..அவளுக்கு இணையாகச் சிரித்தும், களித்தும் விளையாடி, சில பால்புட்டிப் போராட்டங்கள் நடத்தியும் என்னுடைய பதற்றம் சில நாட்களுக்குள் மறைந்து விட்டது. விடுமுறை நாட்களில் தீதியுடைய வீட்டுக்குப் போய் சில சில்லறை வேலைகள் செய்து கொடுப்பேன். முன்பு தனிமையும்,வெறுமையும் சூழ்ந்திருந்த என் வாழ்க்கையில் சந்தோஷத்தையும்,மனிதர்களின் நடமாட்டத்தையும் பார்க்கத் துவங்கினேன். எப்போதாவது மனது திறந்து பேசத் தோன்றுகையில் எளிய வழிகள் தேடி கடந்தகால வாழ்க்கையைப் பற்றி தீதி தடுமாற்றத்தோடு சொல்லியிருந்தாள். அவருடைய வாழ்க்கையைப் பற்றி முழுவதும் கேட்டு விட்டு அவரைப் பற்றிப் பாதி மட்டும் புரிந்து கொண்டு நான் அவருடையை கண்களை மிகவும் அன்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் சொன்ன அவரது வாழ்வின் கதைகளை நான் பாபாவிடமோ, என் சுற்றம் இருப்பவர்களிடமோ கூறியதில்லை. உலகத்தின் கண்களில் விதவிதமான கட்டுக்கதைகள் நிரம்பிய ஒரு கொலைபாதகச் செயலின் நாயகி, மற்றவர்களுக்குத் தவறென்று தோன்றிய வழிகளினூடே பயணித்தவள். இங்கிருக்கும் அடங்கிப் போகிற மக்களுக்கு அப்படியொரு பெண்ணோடு, அதுவும் அந்நிய ஊர்க்காரியிடம் , பெரிய வாஞ்சையோ, அனுதாபமோ தோன்ற வழியேயில்லை.

எல்லாக் கதைகளையும் மறந்து விடுங்கள் தீது…அவர் புன்னகைக்கும் சில அபூர்வத் தருணங்களில் நான் அவரிடம் இப்படிச் சொல்வேன். இந்தக் குட்டி இளவரசியை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். என்றாலும் அவர் நினைவுகளைக் கைவிடுவார் என்று தோன்றவில்லை. நல்ல ஆசிரியர் என்றும் இந்த ஊரின் மொழியைத் தவறில்லாமல் கற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் வடஇந்தியாவில் இருந்து முன்பு வந்து பிரச்சனைகள் உண்டாக்கித் திரும்பிப் போன சில ஆசிரியர்களைப் போல அல்ல இவர் என்று பாபா அடிக்கடி என்னிடம் சொல்வார். என் அறையின் குளிர்ந்த சன்னல் திரைகளுக்குக் கீழே மறைத்து வைத்த சில நிசப்தமான நினைவுகளுக்குள் தள்ளாடும் அவர் வகுப்பறைகளுக்குள் செல்லும் போது தன் சிறகுகளை விரித்து, வீசி ஆடுகின்ற ஒரு பாய்மரக் கப்பல் போல் ஆவதெப்படி என்று நான் மனதுக்குள் கற்பனை செய்து பார்ப்பேன்.

“போகலாம்” என்றபடியே தீதி என் முன்னால் வந்து நின்றாள். குழந்தையை அதனுடைய கம்பளி ஆடைக்குள் பொத்தி தன் தோள்களில் கிடத்திக் கொண்டு நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பினோம் . யாக்கூப் டாக்சிக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தோம். குளிரில் ஒரு வயதான கிழவன் ஒரு கழுகைப் போலே குறுகி விறைத்துக் கொண்டிருக்கிற வித்தியாசமான சோர்வான சித்திரத்தைப் பார்த்த குழந்தை அதனுடைய மொழியில் ஏதோ சொல்லிச் சிரித்தது.

நடைபயிற்சி மேற்கொள்ளும் இரண்டு வாழ்க்கைப் பைத்தியங்கள்;

நாங்கள் கடைவீதி சென்று சேர்ந்த போது வெளிச்சம் மங்கத் துவங்கியிருந்தது. தகரக் கூரைகள் கொண்ட வெளிப் பகுதி, ஹால்களில் வியாபாரிகள், நூற்றுக்கணக்கான நுகர்வோர்கள். மீனும், காய்கறிகளும், பலசரக்குகளும், விலை குறைந்த துணிவகைகளும் அங்கு விற்கப்பட்டன. வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் விடுமுறையில் இங்கு நூர் கூட வந்து தான் நான் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிச் செல்வேன். கடந்த ஆறேழு மாதங்களுக்கிடையில் முன்பெல்லாம் என்னோடு இருந்த உற்சாகமும், கருணையும் நிறைந்த பார்வைகளுக்கு மிருதுத்தன்மை வருவதும், சில புன்சிரிப்புகள், சில சமயம் சில சிநேகம் நிறைந்த பார்வைகள் கூட எனக்கு எதிரே வெட்கத்தோடு வந்து சேரவும் செய்தது. நானும் இரண்டு வருடங்கள் முன்னோக்கிப் போயிருந்தேன். பொய்யான மொழிகளும், மசாலாக்களும் கடைபரப்பி விற்றுக் கொண்டிருக்கிற அப்துல்லாவும்,, அத்தர்களுடன் ஒரு கடையின் பின்புறத்தில் மனோகரமான கண்களை யாருக்கும் காட்டாமல் தாழ்ந்த பார்வையுடன் இப்போதும் பெயர் தெரியாத இளைஞன், குறும்பும், பிரியமும் நிறைந்த ஊடுருவும் சில பார்வையால் கூடுதலாக வெட்கப்பட வைத்தான். என்னுடைய குறும்புகள் எதுவும் அவனைத் தாண்டி செல்ல இயலவில்லை.வீட்டில் தானியப் பொடிகள் தீர்ந்து விட்டன. தீதி விலைபேசி வாங்கிய காய்கறிகளை என் கைகளில் இருந்த பெரிய பைகளுக்கு மாற்ற, நூர் சொன்னாள்… இனி போய் அதை வாங்கலாம். என் குழந்தை அவளுடைய கழுத்தினூடே கைகளைப் பிணைத்துக் கொண்டு சுற்றியுமுள்ள காற்றையும், மனிதர்களையும், இல்லாத மரங்களையும், எங்கே இருந்தோ கேட்கும் அழுகிற பூனைக்குட்டிகளையும் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

”தீது….இப்போதும் அந்தக் கனவைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?” நடந்து கொண்டிருக்கும் போது நூர் சிரித்துக் கொண்டே கேட்டாள். இல்லை! நான் கடலாமைகளுடைய கிடப்பினை, மனதினுடைய எத்தனையாவதோ உள்ளறைகளுக்குள் போய் அடைத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். பொய் தானென்று அவளுக்கும் ஒருவேளை புரிந்திருக்கக் கூடும். உங்களுக்கு அந்த ஆளுடன் காதல் இருந்ததா?

அவளுடைய இந்தக் கேள்வி எதிர்பார்க்காததாய் இருந்தது. ஒருபோதும் இல்லை. நான் அவனைச் சிநேகித்திருந்தேன். எரிமலை போலே வெடித்துச் சிதறி பூமியை எரித்து விட்டது காதல். “சிநேகமும், காதலும் வேறு வேறா தீது?” அவளுடைய மெல்லிய குரலிலும்,பேச்சுகளிலும் முன்பு பலமுறை கேட்ட அதே சப்தங்களுடைய நிழல். நான் பனியைப் போலே வெடித்தேன். என் கண்கள் பயத்தால் வறளவும் செய்தன. தெரியாது….நான் தடுமாற்றத்தோடு சொன்னேன். என்னுடைய கருத்துக்கள் தவறாகக் கூட இருக்கலாம். இரண்டும் ஒன்றாகக் கூட இருக்கலாம்.

வாங்கிய பொருட்களை யாக்குவின் வண்டியில் வைத்து வெறுமனே நடக்கும் அந்த வழக்கமான நடைக்காக நாங்கள் கடைவீதியின் பின் பக்கமாய் சென்றோம். மஞ்சள் நிறத்தில் உள்ள சோம்பலான வெளிச்சமும், உயர்ந்த, தாழ்ந்ததுமாக ஒலிக்கின்ற மனிதக் குரல்களையும் பின் தள்ளி நான் நடந்து கொண்டிருந்தேன். வரும் பொழுதுகளில் சென்று வழக்கமாய் அமர்கிற கல்நாற்காலி தான் அப்போது என் லட்சியமாய் இருந்தது.

“நீங்கள் சிந்திப்பது வித்தியாசமாய் இருக்கிறது தீதி” கல்நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது நான் இதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். இவ்வளவெல்லாம் பிரச்சனைகள் என் வாழ்க்கையில் உண்டான போதும் நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கப் பழகவில்லை? நேருக்கு நேராய் சொல்லி விடுவதல்லாமல் காரியங்களைப் பார்ப்பதற்கு இப்போதும் எனக்குத் தெரிவதில்லை. அவளுடைய முகத்தில் கேலியும்,க ழிவிரக்கமும் ஒன்று கூடி ஒரு நனைந்த புன்னகை தோன்றியது. அவளை சினேகத்தோடு பார்த்திருந்தேன். அவளுடைய வீட்டுக்கு முதன்முதலாகச் சென்ற தினத்தை நான் நினைத்துக் கொண்டேன். என்னை விட எத்தனையோ சிறியவள் ஆனால் கண்களில் என்னோடு கொண்ட விசித்திரமான அன்பு ஒளிர்ந்து மின்னி என்னை அதிசயப்படுத்திய மெலிந்து நீண்ட ஒருபெண்.

அவள் பக்கத்தில் இல்லாத ஒரு சமயம் நானும் அவளும் பாபா என்றழைக்கின்ற அவர் அவள் கடந்து போன காய்ந்த பாதைகளைப் பற்றி அங்கலாய்ப்புடன் சொன்னார். அவளது உற்சாகத்தைக் கசக்கி எரிந்த நெருங்கிய சொந்தத்தின் பலாத்காரம், மானக்கேட்டைத் தடுக்க விலை பேசி, நடத்திய ஒரு ஏமாற்றுத் திருமணம் கைவிட்டு போன ஒரு ஆழமான காதல். அன்றும் அதற்குப் பிறகுமான அவளுடைய அணுகுமுறைகளில் வாழ்க்கையின் வெம்மையோடு கூடிய புலம்பல்களோ,,குற்றப்படுத்துதலோ நான் கண்டதில்லை. அவனைக் குறித்து யோசித்து அவள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பது உண்மையே. ஆனாலும், அவளுடைய மனசில் உணர்ச்சிவயப்பட்ட கடல்கள் உருவாக்குகிறதே..,அதனுடைய சுழல்களுக்குள் குதித்து இறங்கியதும், மூழ்கி எழுந்தும், அவள் மனப்பூர்வமாக, ஒரு சங்கடமான வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாள்.

பனியின் கனத்த சில்லுகள் நிறைந்த ஒரு நீண்டு வீசிய காற்று எங்கிருந்தோ வீசியது. நாகம் போல் உயர்ந்தெழுந்த துணியைப் பிடித்து ஒதுக்க முயற்சி செய்து கொண்டும் ஒரு கையால் குழந்தையை இன்னும் இறுக்கமாய் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டும் நூர் சொன்னாள்; இல்லாவிட்டாலே குளிர் தாங்க முடியவில்லை..இதற்கிடையே ஒரு காற்றும் கூடச் சேர்ந்து விட்டது. போவதற்காய் நான் எழுந்தேன். குழந்தை நூருவின் தோளில் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தது. குளிரின் அதீதத்தில் அவளுடைய மூக்கு சிவந்தும், கன்னங்கள் துடிக்கவும் செய்தன. கடல் காற்று கொண்டது போல என்று மனதில் வெறுமனே ஒரு தோன்றல் சுற்றித் திரிந்தது. கரைகளுடைய விளிம்பில் வீர்த்துக் கிடந்த ஒரு கடலாமையுடைய பிம்பம் அதன் கூடவே மெதுவாக மேலெழும்பி வந்த நினைவுகளை நான் பாதியிலேயே விழுங்கிக் கொண்டேன்.

ஸ்னோ வொயிட்டின் கருமையான ரத்தம். கூடுதல் சக்தியுடன் வெட்டி வீசத் துவங்கிய பனிக்காற்றில் இருந்து குழந்தையை முடிந்த வரைக்கும் பொதிந்து அணைத்தவாறு தீதியுடன் கூடவே யாக்கூப் வண்டி காத்திருக்கும் இடம் நோக்கி நடந்தோம். பட்டணத்தின் பிரதான ரவுண்டானா அருகில் தான் டாக்சியை நிறுத்தியிருந்தோம். அதிகம் ஆட்களும்,கட்டிடங்களும் இல்லாத ஒரு மறைவான இடம்.கொஞ்சம் வறுமையில் இருக்கும் டூரிஸ்ட்டுகளை ஏற்றிச் செல்லும் அபூர்வமான சில டாக்ஸிகள்,இடையிடையே சில மலைச்சரிவுகள் எனக் கொஞ்சம் மூச்சிறைக்க அங்கு சென்று சேர்ந்தோம். யாருமே வாங்குவதற்கு இல்லாத அனாவசியமான சில விலையுயர்ந்த பொருட்களும், பட்டுத்துணிகளும் என அனைத்தையும் கொண்டு தாழ்வான பகுதியில் கிராமத்தில் இருந்து வந்த நாலைந்து வியாபாரிகள் ரவுண்டானாவின் உடைந்த கல் திட்டின் நிழலில் விறைத்தவாறு குத்தவைத்த அமர்ந்திருந்தார்கள். டாக்ஸிக்கு சில அடிகள் மட்டுமே பாக்கியிருக்கையில் கார் ஒன்று எங்கிருந்தோ வந்து கொஞ்சம் முன்னால் நின்றது.

கையில் பைகளுடன் நாலைந்து பேர் இறங்கினார்கள். அதில் மூன்று பேர் சாலையின்வலது புறமுள்ள பழைய கட்டிடத்துக்கு நடந்து போனார்கள். எப்போதாவது வருகிற டூரிஸ்ட்டுகளுக்கான சிறிய லாட்ஜ் ஒன்று அங்கிருந்தது. மீதமிருந்த இரண்டு ஆண்கள் சாலையோரமாக நின்று கைகால்களை நீட்டிச் சோம்பல் முறித்துச் சிகரெட் பற்ற வைத்தவாறு பாதி பேசி வைத்திருந்த தமாசுகளை மீண்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நேரம் முழுதும் தீதி என்னுடைய கைகளை இறுக்கிப் பிடித்தவாறு அசையாது நின்று கொண்டிருந்தாள். அவருடைய கண் இமைகளும்,புருவங்களும் பிசாசுகளையும்,பிரேதங்களையும் கண்டது போல எழுந்து நின்றது. சாலையோரத்தில் நிற்பவர்களை இவர் பயப்படுத்துவதைப் போல உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு விதத் தவிப்புடன் அவரை உலுக்கினேன். குழந்தை எழுந்து அழத் துவங்கியிருந்தது. பனிக்காற்றின் வேகமான ஒலியில் என்னுடைய, அவளுடைய சப்தங்கள் அடங்கிப் போயிருந்தது. ஒரு கையில் அவரைத் தாங்கியவாறு டாக்ஸிக்கருகில் இழுத்துச் செல்ல பலமாய் முயற்சி செய்தேன். டாக்ஸிக்குள் தூங்கிக் கொண்டிருந்த யாக்குவினை உரக்க அழைத்தேன். பயப்பட்ட ஒரு பறவைக் குஞ்சைப் போல தீதி என் கைகளில் இருந்து ஊர்ந்து ஊர்ந்து போனாள். இந்தக் கலவரங்கள் ஏதுமறியாமல் அந்த மனிதர்கள் லாட்ஜுக்குள் போய் விட்டிருந்தார்கள். அவர்கள் சென்ற வழியே தீதியுடைய பயம் நிறைந்த பார்வை மூச்சிரைத்துக் கொண்டே பின் தொடர்ந்தது. அவருடைய நாசித் துவாரங்களின் வழியாக சிறிய இரத்தக் கோடுகள் ஒழுகிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். தீது என்றழைத்தவாறே அழுது கொண்டே கூட வந்த யாக்கூவுடைய உதவியுடன் நான் அவரை டாக்ஸியில் ஏற்றினேன். ஸ்னோ வொய்ட் என்று தீதி பெயரிட்ட அவருடைய குழந்தை என்னுடைய நெஞ்சில் இருந்து வெளியே தாவி வேடிக்கை பார்க்கவும், நிலத்தின் கருத்த கல்பாதையில் விழுந்த நேரத்தில் இரத்தத் துளிகளுக்கு நேராகக் கைகளை நீட்டி அதைத் தொடவும் முயற்சி செய்தது.

செத்துப் போனவர் நூர் உடைய வீட்டில் அவளுடைய மிகச் சிறிய அறையில் நான் பாதி மயங்கிய நிலையில் கிடந்தேன். அவளுடைய அங்கலாய்ப்பு நிறைந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல யத்தனிக்கும் போதெல்லாம் கண்கள் நிறைந்து போனது. அவள் கொண்டு வந்து தந்த சூடுள்ள சுக்குக் காப்பி குடித்தும் பாபா இடையிடையே வந்து ஆதுர்யத்துடன் தலையில் தடவியதும், மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகியது பனியின் காரணமாகத் தான். அது ஒன்றும் பயப்படத் தேவையில்லை என்றெல்லாம் அவள் சமாதானம் சொன்னது, என்னவெல்லாமோ தெளிவில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். கருங்கல் பாறையுடைய கருப்பும், மஞ்சள் வெளிச்சத்தில் சிகரெட்டுப் புகையும் பின்னால் கண்ட பனியை விட தணுத்த கண்களும் ஆனால், அப்போதும் தெளிவாக நினைவு கூர்ந்தேன். இரத்தத்தை தீப்பிடிக்கச் செய்த அனேகம் மோசமான இரவுகளில் வேட்டையாடிய அதே குளிர்மையுடைய மோசமான தாக்குதல்கள். மனசு மீண்டும் ஒரு பனிப்புயலானது. தீது,என் முகபாவனைகளைக் கண்டு கொண்டு என் பக்கத்தில் இருந்து நூரு என்று பாசத்துடன் அழைத்தாள்.

“அது யார்?”

எப்படியும் அவர்கள் உங்கள் ஊர்க்காரர்கள் இல்லை.அப்படியென்றால் அவர்கள் யார்?

யாருமில்லை..!இல்லாவிட்டால் யாரென்று தெரியாது!எங்கேயோ வந்த பிறகும் பல ரூபங்களில் திரும்பி வருகிற மரண அவஸ்தை தருகின்ற நினைவுகள். ஒருபோதும் மன நிம்மதி தராத உன் பாவங்கள் இப்போதும் துரத்திக் கொண்டிருகின்றன என நிரந்தரமாக நினைவு படுத்தும் விதமாக பின் தொடர்ந்து வந்து சேர்கின்ற வேட்டைக் கண்களில் சில. நான் ஒன்றும் பேசாததைப் பார்த்து விட்டு நூரு சிரிப்புடன் மீண்டும் கேட்டாள்: ஒருவேளை அந்தக் கனவுகளில் வந்த ஆள் தீதுவைத் தேடி உலகத்தின் இந்தக் கடைசிக்கு வந்து விட்டானோ? நானும் மனம் விட்டுச் சிரித்தேன். ”இல்லை!”அது அவன் இல்லை! இல்லவே இல்லை!

என் கடல் சுழிகளின் கண்ணிகளிலிருந்து என்றோ துள்ளிக் குதித்து தப்பித்து விட்டிருந்தான் அவன்.

என்னுடைய சிரிப்புக்குள் கவலையின் துளிகள் மெதுவே துளிர்த்திருந்தன. கழிந்த பல்லாயிரக்கணக்கான தவணைகளில் என்னைப் போல அவனை நினைக்கும் போது மனதுக்குள் ஏற்படுகிற அவனோடு ஒரு பந்தமுமில்லாத அன்றைய மதியம் மீண்டும் மனதில் தோன்றியது. மந்திரவாதிகள் துர்மந்திரங்களால் இருட்டச் செய்தனரோ என்று தோன்றியது. மதிய வெய்யிலுடைய தீ திடீரென்று எப்போதோ அணைந்து போன,ஒன்றரை வருடம் முந்தைய பகல். பழையதொரு கலர்ப் படத்தை நினைவு படுத்துகிற ஒரு பழைய நீதிமன்றக் கட்டிடத்தின் வராண்டாவில் என்னவெல்லாமோ நடந்து விட்டதாலும், கர்ப்பத்தின் சோர்வினாலும் நான் அன்று தளர்ந்து நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் நீதிமன்றத்துடைய சிறிய வாசலில் என்னை நேசிக்கின்ற இரண்டு ஆண்கள் பகையோடு எதிரெதிரே நின்றிருந்தார்கள். ஒருவர் எனது கணவர். மற்றவர் எனது குழந்தையின் தகப்பன். இரண்டு பேரும் என்னை அளவுக்கதிகமாய் நேசிக்கவும், அளவுக்கதிகமாய் வெறுக்கவும் செய்தார்கள்.

இரண்டு பேரோடும் நான் விசுவாசமாய் இருந்தேன். எல்லாவற்றையும் விட நேசிக்கிற ஆண்களின் கண்களை நேசத்தோடு பார்த்து, அந்த ஆள் தன் நரக வேதனைகளை நினைத்துக் கொண்டு , “தந்தை இல்லாதவளே” என்று சத்தமில்லாமல் மனதுக்குள் அழைக்கும் போது நானே தான் பெண்களுடைய காதலைப் பூரணமாக்குகிறேன். என்னுடைய நிசப்தமான “பாஸ்டர்ட்” என்ற அழைப்பில் இரண்டு பேரும் இரண்டு காலங்களாய் பகுந்து வீழ்ந்திருந்தார்கள். பகுதியாகப் பிரித்தல் அசாதரணமான போது வழிகள் பரஸ்பரம் பிணைந்து வீழ்ந்து தவறிய போது பொறாமையும், பகையும், ஆக்ரோஷங்களும் என்னை மிகவும் தனிமைப்படுத்தி, என் தனிமையை நீதிமன்ற அறைகளுக்கு வலிய அழைக்கவும் செய்தார்கள். சிநேகத்தினுடைய,பஞ்சணையுடைய அளவெடுப்புகள் நடந்த தினங்களில் ஒன்றாகவே அந்த நாளும் இருந்தது. சுற்றியுள்ள பூமி, மனிதர்கள், நேர்ந்த மரணங்கள், தீப்பிடித்த வாயு. என்னைத் தவிர யாரும் அவர்களைக் கவனிக்கவேயில்லை. கர்ப்பத்தின் அவஸ்தைகள் மறந்து ஆர்ப்பரித்து ஓடிச் செல்வதற்குள் ஒரு ஆள் மற்றொரு ஆளைக் குத்தி வீழ்த்தியிருந்தார்.

குத்துப்பட்ட ஆள் நிலத்தில் கிடந்து கடைசித் துடிப்புகளோடு புரண்டு கொண்டிருந்தார். குத்திய ஆள் அனைத்தும் தகர்ந்த நிலையில் குத்துப்பட்ட ஆளின் அருகில் இருந்து அழத் துவங்கியிருந்தான். இரண்டு பேருடைய கண்களிலும் என் மேல் இருந்த சிநேகம் மரித்து விட்டிருந்ததை நான் கண்டேன். பனியின் குளிர்மை மட்டும் குறைந்திருந்தது. மண்ணில் சிதறிப் படர்ந்த இரத்தத் துளியில் இரண்டு பேருடைய பெயரையும் அழைத்து அலறி விழ என் யோனியில் இருந்து இரத்தம் ஒழுகியது. கர்ப்ப பாத்திரத்திலும் நிம்மதி கிடைக்காத என் குழந்தையின் இரத்தம். இரத்தம் படியாத வெளுத்த பூமிக்கு உடைந்து ஒழுகிய ஒரு பெரிய சிவப்பு இரத்தத் துளி. அவளை நான் ஸ்னோ வொயிட் என்று அழைத்தேன். வாழ்க்கையில் இது வரை வந்து போனதும், இனி வர இருப்பவைகளுக்குமான எல்லா பெண்களுக்கானது. ஒரு ஆணுக்கு மிகவும் பிரியப்பட்டவளாவது என்பது ஒரு கஷ்டமான நீதியாகும். துர்பாக்கியத்தோடு ஒரு பாக்கியம். ஓர் ஆணுடைய முதலாவது பெண்; அவனுக்கு யாரை விடவும் அதிகமாக அவனுடைய உலகம் சுருங்கிச் சுருங்கிச் சென்றடைகிற ஒற்றை அச்சு. என்னைச் சினேகித்திருந்த எல்லா ஆண்களுக்கும் நான் முதலாவது பெண்ணாக இருந்தேன். என் காலடிகளில் எல்லாப் பொழுதுகளிலும் வந்து வீழ்ந்த மிகவும் அதிகமான காதல்களையும் , சினேக பந்தங்களையும் உதைத்துத் தள்ளி நான் ஒரு ராஜ குமாரியுடைய அகந்தையோடு கடந்து போனேன்.

அகந்தைகள் அதிகம் நீண்டு நிலைக்கவில்லை. சூரியனும், துர்மந்திரவாதிகளும் பற்ற வைத்து எரிய வைத்த அன்றைய அந்த நாள் என் எல்லா கிரீடங்களையும் அழித்து வீழ்த்தியது. நான் அழுதேன், சத்தமிட்டேன், பைத்தியக்காரியானேன்.வழிதவறியவள் என்றும், தேவடியாள் என்றும் விளிக்கப்பட்ட போது தன்னிச்சையாக உதடுகள் விறைத்து, கண்கள் தாழ்ந்தன. துர் சொப்பனங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. பல்லாயிரக்கணக்கான மரணங்கள் பயத்திலும், மன வியாதிகளிலும், உடைந்து விழுந்த இரவுகளும், பகல்களும் ஏகாந்தத்தின் விஷம்.

தலையிலும்,நெஞ்சிலும் ஒரு போதும் காயாத காயங்களுடன், ஒரு போதும் பாப விமோசனம் கிடைக்காத அஸ்வத்தாமா போல,ஜென்மங்களோடு நீளும் துர் பயணங்கள். கொடும் பனியிலும் வியர்த்து நான் கண்கள் திறந்தேன். நூரு அப்போதும் பக்கத்தில் அமர்ந்து கொண்டு என் நெற்றியில் தடவிக் கொண்டிருந்தாள். என் மனசு சட்டென்று சாந்தமானது. ”தங்கையே,நீ என்னை மறக்கவில்லை அல்லவா?” அப்போது எங்கிருந்தோ மனதில் குதித்தோடி வந்த அந்த வரியை என் மொழியிலேயே நான் அவளோடு சிரித்துக் கொண்டே சொன்னேன்..

”என்ன?” அவள் புருவம் சுளித்தாள். ஒன்றுமில்லை. நான் அதை அவளுக்கு மொழிபெயர்த்துச் சொன்னேன்.என் பிரியமான புத்தகத்தில் வளைத்தொடித்த ஒரு வரி. அவள் வெடித்துச் சிரித்தாள்.,இனியும் வளைத்தொடியுங்கள். நான் தீதியுடைய தங்கையல்ல ..அம்மா அல்லவோ? என் நெற்றியிலும், பக்கத்தில் கிடந்த குழந்தையின் நெற்றியிலும் முத்தமிட்டாள். விளக்கணைத்து விட்டு அவள் சென்ற போது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முதலாவது பெண்ணாவதும், நல்லதொரு விசயம் தான் என்று நான் தனியாகச் சிரித்தேன்.

பிறகு, கொஞ்சம் கழிந்து கடலில் விழுந்து மடிந்து போயிருக்கக் கூடிய அந்த மனுஷனுடைய எண்ணுக்கு நான் டயல் செய்தேன்.வழக்கத்துக்கு மாறாக விபரீதமாய் இரண்டு ரிங்குகளில் அந்தப் பக்கமிருந்து போன் எடுக்கப்பட்டது. நான் தான்.. நான் மெதுவே சொன்னேன். என் சுவாசத்தின் ஒலியில் இருந்தே அவன் என்னை அடையாளம் கண்டிருப்பான் என்று தெரிந்த போதும் நானும்,என் மகளும் உலகத்தின் மற்றொரு மூலையில் உயிரோடு இருக்கிறோம். நீ என்னைப் பார்க்க வருவாயா? என்றேன்.

“உன்னைப் போன்ற தேவடியாளை எனக்கு ஒரு போதும் பார்க்க வேண்டியதில்லை..” என்று அந்தப்பக்கமிருந்து அலட்சியம் நிறைந்த அந்தக் குரலை பலவருடங்களுக்குப் பிறகு நான் கேட்கிறேன். ‘ஆனால், உன் மகள் உன்னைப் போலாக மாட்டாள் அல்லவா?எனக்கு அவளைப் பார்க்க வேண்டும். நான் அவளைத் தூக்கும் போது நீ என் கண் முன்னால் கூட வந்து விடாதே..” என்ற போன் குரலைச் சிரித்துக் கொண்டே துண்டித்து விட்டு போர்வைக்குள்ளே சரிந்து கிடந்தேன். அறையின் ஹீட்டரின் சூட்டில் அறை வெப்பமுறத் துவங்கியிருந்தது. எனது குழந்தை தூக்கத்தில் உதட்டைப் பிதுக்கவும், பிறகு கலகலவெனச் சிரிக்கவும் செய்தாள். என் நெஞ்சு பாசத்தால் விம்மியது, ஸ்னோ வொயிட் என்ற ராஜகுமாரி.

மரணத்தாலும், ஜீவிதத்தாலும் இல்லாமல் போன அவளது இரண்டு தந்தைமாருடைய சாம்ராஜ்யங்களை ஒரு இறகு போலே உதிர்த்து விட்டாள் அவள். என் வாழ்க்கையுடைய முதலாவது பெண்ணின் சிறிய கைகளுக்குள் மெதுவாகத் தலை வைத்து நான் உறங்குவதற்காகக் கண்களை மூடிக் கொண்டேன். நூற்றாண்டுகளுடைய இடைவேளைகளுக்குப் பிறகு நான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த அதிர்ஷ்டசாலியாகவும், பாக்கியசாலியாகவும் ஆனேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button