சிறுகதைகள்

முடத் தெங்கு

இரா.இரமணன்

“நீங்க ஏன் எல்லாத்துக்கும் பயப்படிறீங்க சார்?”

தனசேகரனின் கேள்வி காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருந்தது. . தனசேகரன் அவனுடன் வேலை பார்க்கும் நான்காம் நிலை பணியாளன். விசயம் ஒன்றும் பெரியதில்லை. மாதம் முதல் தேதியன்று நான்காம் நிலை பணியாளர்களுக்குச் சோப்பு கொடுப்பது அந்த அலுவலக வழக்கம். முதல் நாளே வவுச்சர் தயாரித்து மேலாளரிடம் கையெழுத்து வாங்கி வைத்துவிடுவான். அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் கேஷ் வாங்கி வழக்கமான கடையில் தனசேகரனோ இல்லை வேறு யாரோ வாங்கி வருவார்கள். நேற்று மேலாளர் மோசமான மூடில் இருந்தார். எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார். அவருக்கு ஊழியர்களுக்கு எது கொடுப்பதென்றாலும் பிடிக்காது. வேண்டா வெறுப்பாகத்தான் கையெழுத்துப் போடுவார். அதனால் அன்று அவரிடம் வவுச்சரில் கையெழுத்து வாங்க அவனுக்கு தைரியம் வரவில்லை. தனசேகரனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்துவிட்டான். ஆனால் அவன் இப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஐம்பது வயதாகும் தன்னைவிட பத்து வயது இளையவனின் கேள்வி சுரீரென்றது. வீட்டிற்கு போய் படுக்கையில் படுத்தான். இரவு பன்னிரண்டு மணி ஆகியும் உறக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். மனம் பின்னால் சென்று அவனுடைய பள்ளிப் பருவத்தில் போய் நின்றது.

மார்கழி மாதம். மணி காலை ஆறுதான் ஆகியிருந்தது. அம்மா தூக்குவாளியில் புழுங்கலரிசியைப் போட்டுக் கொடுத்து மிசினுக்கு போய் உப்புமாவிற்கு உடைத்து வரச் சொல்கிறாள். சட்டையில் நடு பட்டன் இல்லை. நடுங்கிக்கொண்டே போகிறான். பிள்ளையார்கோயில் தெருவைத் தாண்டிவிட்டால் போதும். நாய்கள் பயம் இருக்காது. ராத்திரி முழுவதும் ‘கடக் கடக்’னு சத்தம் கேட்கும் நிப்பு பாக்டரி அமைதியாக இருந்தது. பஜாரில் எந்தக் கடையும் திறக்கவில்லை. ஒவ்வொரு கடை முன்னாலும் குப்பை குவித்து வைக்கப்பட்டிருந்தது. காளியம்மன் கோயில் தெருவில் திரும்பினான். அந்த ஊரில் அதுதான் அகலமான தெரு. பொதுக்கூட்டங்கள்,நாடகங்கங்கள் எல்லாம் அங்குதான் நடக்கும். கிராமத்திலிருந்து சாமான்களை ஏற்றி வரும் வண்டிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதற்கு நடுவில் செல்லும் சந்தில் மாவு மிசினின் பெயர்ப் பலகை பெரிதாக இருந்தது.

மிசின்காரர் மப்ளரைச் சுற்றிக்கொண்டு ப்ளேட்டுக்களை கூர் தீட்டிக்கொண்டிருக்கிறார். க்ரீச் கிரீச்சென்று முன்னும் பின்னும் பல் சக்கரம் சென்று கொண்டிருக்கிறது. மத்தாப்புப் போலபொறி பறக்கிறது. . அவர் இவனைக் கண்டுகொள்ளவேயில்லை. தூக்குவாளியை கீழே வைத்துவிட்டு அவர்செய்வதை வேடிக்கை பார்க்கிறான். நான்கைந்து ப்ளேட்டுக்களை முடித்துவிட்டு வருகிறார்.

“ஏண்டா காலங்கார்த்தால வந்துடற?”

“அப்பா ராத்திரி வந்து பணம் கொடுத்து அரிசி வாங்க லேட்டயிடுச்சுங்க. காலைல அவரு வேலைக்கு போறதுக்கு முன்னாடி டிபன் பண்ணனும்”

“அப்பா என்ன வேலைக்கு போறாரு?”

“பஞ்சு மில்லுல வேலை பாக்குறாரு. ”

தலையாட்டிக்கொண்டு அரிசியை வாங்கி அரைத்துக்கொடுக்கிறார்.

அம்மா கொடுத்த பதினைந்து பைசாவில் பத்து பைசா கொடுத்துவிட்டு மீதி ஐந்து பைசாவை பையில் போட்டுக்கொள்கிறான். அம்மாவுக்கு தெரியும். இருந்தாலும் காலையில் குளிரில் போவதற்கு அவனுடய கமிசன் அது.

ஏழு மணி ஆனதும் ராமகிருஷ்ணா பவன் போகவேண்டும். ‘பிராமணாள் கிளப்’ ‘பெரு வியாதிஸ்தர்கள்’ உள்ளே வரக்கூடாது என்ற போர்டைப் படித்துக்கொண்டே உள்ளே போவான். பெரு வியாதிஸ்தர்கள் என்றால் எதோ பெரிய வியாதி உள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்வான். அது அவர்களது உறவினர் ஓட்டல்தான். நேற்று மீந்து போன சாம்பார் இருந்தால் தருவார்கள். வாசனையாக இருக்கும். ஸ்டாலில் ஸ்வீட் அடுக்கி வைத்திருப்பார்கள். அங்கு ஒரு லைட். பின்னால் இருக்கும் கலைடாஸ்கோப் போன்ற கண்ணாடியில் பல பிம்பங்கள் தெரிய சுழன்றுகொண்டிருக்கும். கொஞ்சம் தள்ளி கூல் ட்ரிங்க்ஸ் இருக்கும் ஐஸ் பெட்டி பெரியதாக இருக்கும்.

கல்லா பக்கத்தில் போய் நிற்பான். அங்கு காத்திருக்கவேண்டும். அவனுடைய ஸ்கூல் வாத்தியார் யாராவது வந்துவிடுவார்களோ என்று பார்த்துக்கொண்டே இருப்பான். அந்த ஓட்டல் பக்கத்தில் இரண்டு மூன்று வாத்தியார்கள் வீடு இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து கடை முதலாளி -அவனுக்கு மாமாவோ ஏதோ ஒரு உறவுமுறை-சர்வரை அழைத்து சாம்பார் ஊற்றி கொடுக்கச் சொல்வார். அவருக்கு இரண்டு மகன்கள். ஒருவன் அவனைவிட பத்து வயது பெரியவன். இன்னொருவன் அவன் வயதுதான். இரண்டுபேருமே குண்டு. நல்ல கலராக இருப்பார்கள். சமயத்தில் அவர்கள் இருவரும் கல்லாவில் இருப்பார்கள். அவனை ஏதாவது கிண்டல் செய்வார்கள். பெரியவர் இருந்தால் நிம்மதியாக இருக்கும்.

அது முடிந்து சித்தி வீட்டிற்குப் போய் மோர் வாங்கிக்கொண்டு வரவேண்டும். சித்தி என்றால் நேரடியாக சித்தி இல்லை. தூரத்துச் சொந்தம். . அவர்களும் எங்களைப்போலப் பிழைப்புக்காக அந்த ஊருக்கு வந்தவர்கள்தான். ஆனால் எப்படியோ முன்னேறி தனியாக ஓட்டல் நடத்தும் அளவுக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் வீடு பக்கத்தில்தான். சற்று பெரிய ஐந்தாறு வீடுகள் கொண்ட வளவு. முன்பக்கம் சின்ன மைதானம் போல் திறந்த வெளி. வாதா மரம் ஒன்று இருந்தது என்று நினைவு. சித்திக்கு இரண்டோ மூன்றோ மகன்கள். அவர்களில் ஒருவருக்கு குழந்தை பிறந்து சில நாட்கள் ஆகியிருந்தது. . நான் பெரிய மனுஷன் போல”என்ன குழந்தை சித்தி?”என்றேன்.

“நீயே பாரேன்”என்று சொல்லி டிரெஸ்ஸை தூக்கி காட்டினார்கள். நான் வெட்கத்தில் நெளிந்தேன்.

முதல் பத்து தேதிக்குள் பணம் கொடுக்காவிட்டால் சித்தியின் முகமே மாறிவிடும்.

“நாளைக்கு பணத்தோடு வந்தால் மோர் தருவேன். இல்லன்னா வராதே”

என்று கண்டிசனாக சொல்லிவிடுவார்கள்.

இதெல்லாம் பெரிய விசயமாக தோன்றாது. அரிசிக்கார அம்மா வீட்டிற்கு போய் அரிசி வாங்கி வரச் சொன்னால்தான் கஷ்டம். முதலில் அவர்களே எங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். வயதாகிவிட்டதோ இல்லை நாங்கள் பணம் சரியாக கொடுக்கவில்லையோ தெரியவில்லை அவர்கள் வீட்டிற்குப் போய் வாங்க வேண்டியதாகிவிட்டது. அவர்கள் வீடு மாதா கோயில் தெருவிலிருந்தது. காளியம்மன் கோயில் தெருவில் பாதி தூரம் போய் இடது பக்கம் திரும்பினால் அந்த தெரு தொடங்கும். நீண்ட தெரு. அப்படியே ரயில்வே ஸ்டேசன் வரை போகலாம். அங்குள்ள வீடுகள் எல்லாம் மாடி வைத்த கொஞ்சம் பெரிய வீடுகள். எங்கள் வீட்டிலிருந்து நல்ல தூரம். வாடகை சைக்கிள் எடுக்கவும் விடமாட்டார்கள். நான் சரியாக ஓட்டமாட்டேன்;அரிசி கொட்டிவிடும் என்று சொல்லிவிடுவார்கள். அரிசிக்காரஅம்மா கிறிஸ்துவர் என்று நினைக்கிறேன். கணவர் இல்லை. வெள்ளைச் சீலைதான் கட்டுவார். அவர் வீட்டில் அவரைத் தவிர யாருமே இருப்பதாகத் தெரியவில்லை. . பெரிய பீங்கான் ஜாடிகளில் ஊறுகாய்கள் போட்டு வைத்திருப்பார். வீட்டுக்குள்ளே போனதும் ஊறுகாய் வாசனைதான் வரும். இரண்டு மூன்று கடகப் பெட்டிகளில் அரிசி வைத்திருப்பார். அவரிடமும் எங்களுக்கு கடன் பாக்கி இருக்கும். அதனால் சில சமயங்களில் அரிசி இல்லை என்று சொல்லிவிடுவார். அரிசியை தூக்கிக்கொண்டு வருவது ஒரு சிரமம் என்றால் இந்த மாதிரி ஏமாற்றத்துடன் திரும்பி வருவது இன்னொரு சிரமம்.

மரத்தூள் வாங்கச் சொன்னால் மட்டும் எனக்கு சந்தோசம். ஏனென்றால் என் அண்ணனுடன் சேர்ந்து சைக்கிளில்தான் போவோம். பைபாஸ் ரோட்டில் சைக்கிளில் போவது ஒரு புது அனுபவம். மரத்தூள் கடையிலும் மெஷின் பெரிய பெரிய மரத்தை அறுப்பது வேடிக்கையாக இருக்கும். அவர் நெஞ்சில் போட்டுக்கொண்டிருக்கும் தோல் கவசத்தை ஒரு தடையாவது தொட்டு பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஸ்கூல் திறக்கும்போது மீண்டும் பணப்பிரச்சினை வந்துவிடும். பீஸ் என்னவோ ஐம்பது அறுபது ரூபாய்தான். ஆனால் அதை கடைசி தேதிக்குள் கட்ட முடியாது. ரைட்டர் கூப்பிட்டு அனுப்புவார்.

“கடைசி தேதி முடிஞ்சிருச்சே . ஏன் பீஸ் வாங்கிட்டு வரல்ல?”

“சார் நாளைக்கு வாங்கிட்டு வந்திறேன் சார்”

“உங்கஅப்பாகிட்ட சொல்லு நாளைக்கு வரலலைன்னா டிசி கொடுத்துடுவோம். ”

நான் அவர் முன்னால் தலை குனித்து நிற்பதை விட அதிகமாக என் அப்பா யார் யாரிடமோ கூசிக் குறுகி நின்றுதான் பணம் வாங்கிக் கொண்டு வருவார்.

புஸ்தகம் வாங்கவும் இதே கதைதான். முதல்ல வந்த கட்டுத் தீர்ந்து போய்விடும். என்னைப்போல வாங்காதவர்கள் சில பேருக்காக இரண்டாவது தடவை வரவழைப்பார்கள். அப்பொழுதும் வாங்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?புத்தகம் மாறவில்லையென்றால் பழைய புத்தகத்தை யாரிடமாவது பாதி விலைக்கு வாங்கிவிடலாம்.

அம்பலவாணன் சார்தான் தமிழ் வாத்தியார். கதர் வேட்டி,கதர் முழுக் கை சட்டை அணிந்து வருவார். காந்தியைப் பின்பற்றி தன்னுடைய வீட்டுக் கழிவறையை அவரே சுத்தம் செய்வாராம். நகைச்சுவையாகப் பேசுவார்.

“ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கிற பெரிய மனுசங்கெல்லாம் இந்தப் பக்கமாக உக்காருங்க”

“ஏன் சார்?”

“உங்க கண்ணெல்லாம் விஷக் கண்ணுங்க”

விசயம் என்னென்னா எங்கள் வகுப்பறையை ஒட்டி ஆற்றிலிருந்து செல்லும் சாலை இருந்தது. குளித்துவிட்டு செல்லும் பெண்களை மீசை முளைத்த எங்கள் வகுப்பு பையன்கள் சிலர் சைட் அடிப்பார்கள்.

இப்படி கேலியும் கிண்டலுமாக இருக்கும் அவரை சகஜமாக நினைத்துவிட்டேன். ஒரு நாள் புத்தகம் வாங்காதவர்களையெல்லாம் எழுந்து நிற்க சொன்னார். நானும் அவர்களில் ஒருவன்.

“புஸ்தகம் இல்லாம பள்ளிக்கூடம் வரீங்களே?பம்பரம் விளையாடணுமுன்னாக் கூட பம்பரத்தோடதானே வரணும்?”

நான் சும்மா இல்லாமல்”ஏன் சார் பக்கத்துப் பையன் பம்பரத்த வாங்கி விளையாடக்கூடாதா?”என்று கேட்டேன். மறு நிமிசம் என் கன்னத்தில் பளீரென்று ஒரு அறை விழுந்தது. அது நான் அவருடன் கொண்டிருந்த தோழமையின் மீது விழுந்த அடி.

பள்ளிக்கூடத்தில தமிழ்ல ஒரு பாடம் வந்துச்சு. ’முடத்தெங்கு’ன்னு. ஒரு தென்னை மரம் சின்னதா இருக்கும்போது எல்லாரும் அதில் ஏறி ஏறி விளையாடுவார்கள். அதனால அது மேல வளராம படுக்க வாட்டிலேயே வளந்திச்சு. நானும் அது மாதிரி ஆயிட்டேனோ?

மறுநாள் அலுவலகம் சென்றேன். தனசேகரன் தனியாக வந்து

“என்ன சார் நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா ?”

“இல்லை தனசேகரன். நீ சொல்லறது கரக்ட்தான். எனக்கு எல்லோர்கிட்டயும் ஏதோ ஒரு பயம் இருக்கு. ”

“சார் எல்லாரும் மனுசங்கதானே? எதுக்கு பயப்படணும்?. நானெல்லாம் உன்ன மாதிரி படிச்சிருந்தேன்னு வச்சுக்க. எப்படி இருப்பேன் தெரியுமா?”

“என்னை விட நீ நிறைய படிச்சிருக்கே தனசேகரன்”என்று நான் சொன்னது அவனுக்குப் புரிந்திருக்கும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close