கட்டுரைகள்

மொழிப்பாடங்களும், மானுட அறமும்

டாக்டர். சிவபாலன் இளங்கோவன்

மேல்நிலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் மொழிப்பாடத்தின் தேவை தொடர்பான விவாதம் சமீபத்தில் எழுந்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் பாடம் என்பது பதினொன்று, பன்னிரெண்டாம் பாடத்திட்டத்திற்கு அவசியமா அல்லது அது மாணவர்களின் மீது ஏற்றப்பட்ட தேவையில்லாத சுமையா என்பது தான் அந்த விவாதத்தின் மையம். இந்த விவாதம் வேண்டுமானால் இப்போது எழுந்திருக்கலாம் ஆனால் கடந்த பல வருடங்களாகவே மேல்நிலை வகுப்புகளில் இந்த மொழிப்பாடங்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தொழில்முறை மேற்படிப்புகளுக்குத் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்கள் தொழில்நுட்பப் பாடங்களில் இருந்து மட்டுமே பெறப்பட்டது முதலே இந்த புறக்கணிப்பு தொடங்கியது. இந்த தொழில்முறை மேற்படிப்புகளுக்காக மாணவர்களை தயார் செய்யும் பயிற்சி அமைப்புகள், தனியார் பள்ளிகள் தனது சந்தையை விரிவு செய்யத்தொடங்கிய காலம் முதலே மொழிப்பாடங்களின் மீதான மாணவர்களின் ஆர்வம் குறையத் தொடங்கியது என சொல்லலாம். “தமிழில் தேர்ச்சியடையும் அளவிற்குப் படித்தால் போதும்” என்ற மனப்பான்மையை இந்த நிறுவனங்கள் ஊட்டி வளர்த்தன.

நான் படித்த பள்ளியிலேயே பத்தாவது வகுப்பு மாணவர்களுக்கு தமிழை கற்றுவிப்பதில் இருந்த ஆர்வம் அதே ஆசிரியருக்கு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கற்றுவித்தலில் இருக்காது. “எப்படியும் உங்களுக்குஇதில் ஆர்வம் இருக்காது, ஏன் உங்களை சிரமப்படுத்த வேண்டும்?” என்பது போலவே அவரது உடல்மொழி இருக்கும். ஆனால் பத்தாம் வகுப்பை விட மிக நேர்த்தியான பாடத்திட்டத்தைக் கொண்டது பதினொன்றாம் வகுப்பு தமிழ் பாடத்திட்டம். புதுமைபித்தன், மு.வ, பாரதிதாசன், அறிஞர் அண்ணா என பல ஆளுமைகளின் சிறுகதைகளை உள்ளடக்கிய துணைப்பாடங்கள், தொகைநூல்கள், அற இலக்கியம், சிற்றிலக்கியங்கள் என அத்தனை அழகியலோடு கட்டமைக்கப்பட்டிருந்தது அந்த பாடத்திட்டம். ஆனால், அவை படிக்கப்படாமலேயே புறக்கணிக்கப்படுவதை அல்லது வெறும் மதிப்பெண்களுக்காக ஆங்காங்கு கொஞ்சம் படிக்கப்படுவதை நம் மொழிக்கு செய்யும் துரோகமாக நான் பார்க்கிறேன். இந்தப் புறக்கணிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே வந்து இன்று தமிழ் மொழிப் பாடமே நமக்குத் தேவையா என்ற கேள்வியில் வந்து நிற்கிறது.

நிறைய ஆளுமைகள் ‘தமிழ் பாடம் மட்டுமல்ல மொழிப்பாடங்களே மாணவர்களுக்கு தேவையில்லாத சுமைதான்’ என்ற கருத்துக்களை முன் வைக்கிறார்கள். மாணவர்களுக்கு எது தேவை என்பதை இவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்? மொழிப்பாடங்கள் மாணவர்களுக்கு பயனற்றது என்பதை எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்? ஒரு பாடத்தின் தேவை அல்லது பயன் என்றால் இவர்களைப் பொறுத்த வரையில் மாணவர்களின் மேல்படிப்பிற்கு தேவையான மதிப்பெண்களைப் பெற்றுத் தருவது மட்டுமே. ‘தமிழில் பெறும் மதிப்பெண்களால் என்ன பயன்?’ என்ற கேள்வியை மதிப்பெண்களை அடிப்படையாகக்கொண்டே கேட்க முடிகிறது. “கற்றல் என்பது மதிப்பெண்களுக்காகத்தான்” என்பது அபத்தமானது. உண்மையில் நமது கல்வி முறை இந்த அபத்தத்தைத் தான் தாங்கியிருக்கிறது. அதன் விளைவாக மொழிப்பாடங்களின் தேவை பற்றியும், பயன் பற்றியும் நாம் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

‘கல்வி என்பது பொருளீட்டலுக்கான வழி’ என்ற கருத்தாக்கத்தின் வழி வந்த ஆபத்தான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தான் இத்தகைய சிந்தனை போக்குகள் காட்டுகின்றன. கல்வி என்பது அறிவு இல்லையா? நாம் கற்ற கல்வி நமது சிந்தனையிலும், எண்ணத்திலும், செயல்களிலும், மதிப்பீடுகளிலும், வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டாமா? கல்வி என்பது ஒழுக்கத்தை, வாழ்வியல் நெறிகளை நமக்கு கற்றுத் தர வேண்டாமா? மனிதர்களின் மீதான பாகுபாடற்ற நிலையை, சமத்துவத்தை நமது கல்வி ஏற்படுத்த வேண்டாமா? மனிதன் ஒரு சமூகமாக இயங்குவதற்கும், சமூகத்தின் நலனுக்காக தன் சுய விருப்பங்களை விட்டு தரும் மேம்படுத்தப்பட்ட உயிரினமே மனிதன் என்ற புரிதலை கல்வி நமக்கு ஏற்படுத்த வேண்டாமா? இவையெல்லாம் நமது கல்வி முறை செய்கிறதா? அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் நல்ல நேரம் பார்த்து செய்யும் நிறைய மருத்துவர்களை எனக்கு தெரியும். அவர்கள் கற்ற அறிவியலும், மருத்துவமும் அவர்களின் சிந்தனையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாதது ஏன்? அவர்களது தர்க்க ரீதியான அறிவை மேம்படுத்தாதது ஏன்? அப்படி என்றால் அவர்கள் கற்ற மருத்துவமும், அறிவியலும் அவர்களைப் பொறுத்த வரையில் பொருளீட்ட ஒரு வழி மட்டுமே. அந்தக்கல்வி ஒரு அறிவாக அவர்களுக்குள் உறையவில்லை. இது தான் இந்தக் கல்வி முறையின் போதாமை.

கல்வியை சீர் செய்ய வேண்டுமென்றால் அந்த கல்வி நிமித்தம் நமக்கிருக்கும் இந்த வகைஎதிர்பார்ப்புகளை எல்லாம் பகுத்துப் பார்க்க வேண்டும். கல்வியின் உண்மையான நோக்கத்தை மீள் வரையறை செய்ய வேண்டும். அப்படி மீள்வரையறை செய்யும்போது தான் மொழிப்பாடங்களின் அவசியத்தை நம்மால் உணர முடியும்.மொழிப்பாடங்கள் அந்த மொழியின் இலக்கணத்தை, நுட்பத்தை மட்டுமே கற்றுத் தருவதல்ல. அவை தான் ஒழுக்க நெறிகளை போதிப்பவையாகவும், வாழ்வியல் நெறிகளை கற்றுத் தருபவையாகவும் இருக்கின்றன. “வரையா மரபின் மாரி போல…” என்ற புறநானூற்று பாடல் வெறும் வாழ்த்துப்பாடல் மட்டுமல்ல ஒரு அரசன் தனது மக்களிடம் மழையைப் போல பாகுபாடில்லாமல் இருக்க வேண்டும் என்ற அறத்தைச் சொல்கிறது. மனிதர்கள் மீதான இந்த அறங்களை ஒரு மாணவன் வேறு எங்கிருந்து பெற முடியும்? மொழிப்பாடங்களே ஒரு மாணவனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவனை பக்குவப்படுத்தும் ஒன்றாக, நெறிகளை ஊட்டி வளர்க்கும் ஒன்றாக இருக்கிறது.

கால்பெர்க் என்ற உளவியல் அறிஞர் குழந்தைகளின் ஒழுக்க நெறிகளின் வளர்ச்சி (Moral development)  ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை என்கிறார். சிறுவயதில் எதுவெல்லாம் தண்டிக்கப்படவில்லையோ அவையெல்லாம் “நல்லசெயல்கள்” (Good behavior) என நினைக்கும் ஒரு குழந்தை அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலையின் போதும் அந்த வயதிற்குத் தகுந்தது போல இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்கிறது. ஒன்பதில் இருந்து பதினொன்று வயது உள்ள குழந்தைகளைப் பொறுத்த வரையில் பெரியவர்கள் செய்யும் செயல்கள் எல்லாமும் அல்லது அவர்கள் சொல்லிக் கொடுப்பவை எல்லாம் நல்ல செயல்கள். பதினொன்று வயதுக்கு மேல் வளர்ந்த, வளரிளம் பருவத்தை அடைந்த பிறகு தான் அந்த குழந்தை தனக்கான சொந்தக் கருத்துகளை உருவாக்கிக்கொள்கிறது. மனிதர்களைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி, சமூகத்தைப் பற்றியான தங்களது சுய சிந்தனைகள் அதன் வழியே மதிப்பீடுகளை அவர்கள் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.  ஒரு மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவன் அப்போது தான் தன்னிச்சையாக யோசிக்கத் தொடங்குகிறான், தனக்கான அடையாளத்தை தேடிக்கொள்கிறான். அதனால் அந்த வயதில் அவனது சிந்தனை போக்கை செழுமைப்படுத்துவதும், அறத்தைக் கற்பிப்பதும் அவசியமானது. ஏனென்றால் அப்போது அவனுக்குள் ஏற்பட்ட அறிவைக் கொண்டு தான் அவன் தன்னை சுற்றியுள்ள அத்தனையையும் மதிப்பிடுகிறான். அந்த வயதில் அவனுக்கு யார் அதையெல்லாம் கற்பிப்பது? சுய சிந்தனையின் கிளர்ச்சியில் ஏராளமான எண்ணவோட்டங்கள் அவனுக்குள் நிறையும் அதே நேரத்தில் அவன் புறவுலகில் இருந்து கொஞ்சம்கொஞ்சமாய் தன்னைத் துண்டித்துக்கொள்ளவும் முற்படுகிறான். வாழ்க்கையின் மீதான ஏராளமான தத்துவார்த்தமான கேள்விகளை அவன் தனக்கு தானே கேட்டுக்கொள்ளும் போது அவனுக்கு கிடைக்கும் அதற்கான பதிலில் மானுட அறம் நிச்சயம் இருக்க வேண்டும். அந்த வேலையைத் தான் நமது மொழி அதன் இலக்கியங்கள் வழியாக செய்ய வேண்டும்.

மதிப்பெண்களைப் பிரதானமாக எண்ணிக்கொண்டு மொழிப்பாடங்களைப் புறக்கணிக்கும் போது இந்த மானுட அறங்களை அவனுக்குச் சொல்லிக்கொடுக்கும் அமைப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. அதன் விளைவாக, தனக்கான தன்னிச்சையான அடையாளத்தை உருவாக்கும் முனைப்பில் பல்வேறு அடையாள சிக்கல்களுக்குள் அந்த மாணவன் மாட்டிக்கொள்கிறான். சமீப காலங்களில் ஜாதி, மதம், இனம் போன்ற பல்வேறு அடிப்படைவாத பெருமிதங்கள் மாணவர்களிடையே அதிகமாகிக்கொண்டே செல்வதை நாம் பார்க்கலாம் அதற்கு காரணம் கூட அறத்தையும், ஒழுக்கத்தையும், மானுட நெறிகளையும் நாம் அவர்களுக்கு கற்பிக்காததின் விளைவே. நிரம்ப படித்த இளைஞர்களிடமே கூட இன்றைய காலகட்டத்தில் சகிப்புத்தன்மை வெகுவாக குறைந்திருக்கிறது. மாற்று மதத்தினர் மீது, மாற்று சாதியினரின் மீது, மாற்று இனத்தவரின் மீது, மாற்று பாலினத்தவரின் மீதான வெறுப்பும், வன்மமும் எப்போதையும் விட இப்போது மிக அதிகமாக நமது மாணவர்களிடம் இருக்கிறதோ என நினைக்கிறேன்.

இன்றைய காலம் சமூக வலைதளங்களின் காலம். மனிதர்களுக்கான மதிப்புகள் என்பது மிகவும் சுருங்கி போய்விட்ட காலகட்டம் இது. ஒரு பரஸ்பர எதிர்பார்ப்பைக் கொண்டே இன்று உறவுகள் அமைகின்றன. அன்பு என்பதே நிபந்தனை அடிப்படையிலானது என்று மாறிவிட்டது. சுயநலமில்லாத அன்பும், உறவுகளும் இன்று சாத்தியமல்ல என்ற நிலையை சமூக வலைதளங்கள் உருவாக்கி வைத்து விட்டன. அதன் விளைவாக இன்றைய காலத்தின் இளைஞர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களைப் போல மனிதர்களுக்கான மதிப்புகள் தெரியாது. ஒரு விருப்பக்குறி இடுவதின் வழியாக தன்னை அங்கீகரிக்கும் மனிதர், வேறு எந்த நிஜ மனிதர்களை விட சிறந்தவர் என்ற எண்ணம் இன்றைய தலைமுறையினருக்கு இருக்கிறது. தனது கருத்துக்கோ எதிராகவோ அல்லது அதை பகடியோ ஒருவர் செய்துவிட்டால் அவர் மீது அளவற்ற வன்மமும், வெறுப்பும் கொட்டப்படுகிறது. “அத்தனையும் தனக்கு சாதகமாக தனக்கு ஏற்றார்போல நடக்க வேண்டும், அத்தனையும் எனக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும்” என்ற எண்ணம் இன்றைய இளைஞர்கள் எல்லாருக்கும் இருக்கிறது. இந்த மனநிலை என்னவிதமான தாக்கத்தை இந்த சமூகத்தின் மீது ஏற்படும்? இயல்பாக ஏற்படக்கூடிய சமூக நல்லிணக்கத்தை ஏற்பட விடாமல் ஆயிரம் ஆயிரம் கற்பிதங்களை மாணவர்களின் மனதில் தொடர்ச்சியாக விதைத்துக் கொண்டிருந்தால் அது இந்த சமூக கட்டமைப்பையே குலைத்து விடாதா?. இந்த வெறுப்பு பிரச்சாரங்களில் இருந்து, மனதில் விதைக்கும் வன்மங்களில் இருந்து, சக மனிதர்களின் மீது பல்வேறு பாகுபாடுகளை கட்டமைத்து அதன் வழியாக அடிப்படைவாத பெருமிதங்களை ஊதிப்பெருக்குவதில் இருந்து நம் மாணவர்களையும், இந்த சமூகத்தையும் மீட்க என்ன வழி இருக்கிறது அவர்களுக்கு மானுட அறத்தை போதிப்பதை தவிர.

முன்னெப்போதையும் விட வாழ்க்கை நெறிகளையும், ஒழுக்கங்களையும், மானுட அறத்தையும் நம் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது இன்றைய காலகட்டத்தில்  அத்தனை அவசியமானது.அப்படி என்றால் மொழிப்பாடங்களின் தேவையும் முன்னெப்போதும் இருந்ததை விட இப்போது மிக அதிகமாகத் தானே இருக்கிறது. ஒருவர் பெறும் மதிப்பெண்ணை விட அவர் வாழும் வாழ்க்கை முக்கியமானது. அந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், அறம் நிறைந்ததாகவும் இருப்பதற்கு மொழிப்பாடங்களின் பங்கு அதிகமானது. அதை நிராகரிப்பது என்பது ஆரோக்கியமானதல்ல அதுவும் வளரிளம் பருவத்தில் மொழிப்பாடங்களை நிராகரிப்பது நிச்சயம் ஆபத்தான ஒன்று.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close