கட்டுரைகள்

இறந்தகாலத்தின் எதிர்காலம்- Mirai [திரைப்பட அனுபவம்]

- பிரசாந்த் கார்த்திக்

 

           ஜப்பான் அனிமே திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டுமானால் பக்கம் போதாது  என்பதோடு அவற்றை முழுவதும் கிரகித்து கொள்ள நமக்கு புத்தியும் போதாது என்பது என் எண்ணம். ஜப்பானிய அனிமே உலகம் ஒரு சமுத்திரம். அதிலிருந்து சில முத்துக்களை அரிதாக கண்டிருக்கிறேன். 

         அனிமே தொடர்களில் போக்கிமான், சின்சான், டிராகன் பால் போன்றவை இங்கே உள்ளவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம்தான். மேலும் சிலர், நரட்டோ ஒன்பீல் போன்ற ஆங்கிலத்தில் வரும் அனிமே தொடர்களையும் பார்க்கிறார்கள். உலகம் முழுவதுமே அனிமே தொடர்களைப் பார்க்கிறார்கள் என்பதாலும்,  அதற்கான வரவேற்பு கிடைப்பதாலும், பல படைப்பாளிகள் வணிக சமரசங்களோடு பல அனிமே திரைப்படங்கள் மற்றும் தொடர்களை எடுக்க தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவற்றை தாண்டி, தனக்கே உரிய படைப்பு சுதந்திரத்தை, தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் படம் எடுக்கும் படைப்பாளிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

mirai 3

       அப்படி அனிமே படத் தயாரிப்புகளில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்றால், அது ஹயாவூ மியாசகிதான். அனிமே குழந்தைகளுக்கானது என சொல்பவர்கள் அவரது ‘The  wind rises’, ‘Howls Moving Castle’ போன்ற படங்களை பார்க்க வேண்டும். அவருக்கு பிறகு அவரைப்போல அனிமேவை சிறப்பாக கையாளக்கூடியவராக நான் கருதுவது மமோரு ஹொசாடவைதான்.

 

    இப்போது புகழ்ப்பெற்றிருக்கும் ‘சின்சான்’ தொடரை இயக்கிக் கொண்டிருந்த ஹொசாடா அனிமே திரைப்படங்களை இயக்க தொடங்கினார். இவரது இயக்கத்தில் வெளியான “The Boy and the Beast” திரையில் பார்க்க கிடைத்தது முதலே இவரது மற்ற படங்களையும் தேடி பார்த்துவிட ஆவல் ஏற்பட்டது. தற்போது ஹொசாடாவின் சமீபத்திய படமான மிராய் திரையரங்கில் பார்க்க கிடைத்தது. முன்பே சொன்னதுபோல் மியாசாகிக்கு பிறகு அனிமேவை தனித்துவமாக கையாளும் திறன் ஹொசாடவுக்கு இருக்கிறது.

    குன், என்னும் சிறுவன் தன் தாய், தந்தையோடு வாழ்ந்து வருகிறான். அவனது பெற்றோருக்கு புதிதாக பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதற்கு பிறகு குன் கவனிப்பாரற்று போகிறான். அந்த பெண் குழந்தைக்கு மிராய் என பெயர் வைக்கிறார்கள். மிராய் என்றால் எதிர்காலம் என்று பொருள். அந்த குழந்தை வீட்டிற்கு வந்த பிறகு குன்னின் மூதாதையர்கள் காலத்திற்கு பயணிக்கும் பாதைகளும் திறந்துக் கொள்கின்றன.

mirai 4

 

அவன் ஒவ்வொரு முறையும் அழும்போதும் காலத்தின் சாவி திறந்து கொள்கிறது. ஒவ்வொரு முறையும் தன் மூதாதையர்களின் காலத்திற்கு சென்று திரும்பும்போதும் அதிலிருந்து தனது எதிர்காலத்திற்கான புரிதலை, நம்பிக்கையை பெறுகிறான் குன்.

எதிர்க்காலத்திலிருந்து மிராய், குன்னை சந்திக்க வருகிறாள். அவனுக்கு மிராயை மட்டும் எப்போதும் பிடிப்பதே இல்லை. தன் தாயை அவள் திருடிக் கொண்டதாகவே நினைக்கிறான். தன் தங்கையாக அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அடிக்கடி அழுகிறான். ஒவ்வொரு முறை அழும்போதும் வாழ்க்கைக் குறித்த புதிய அனுபவங்களை பெறுகிறான்.

ஒவ்வொரு முறை அழும்போதும் அவன் தனது ஒவ்வொரு மூதாதையரை சந்திக்கும் காட்சிகளும் வித்தியாசமாக இருக்கிறது. எதிர்க்காலத்திலிருந்து வரும் மிராயை சந்திக்கும்போது வயல்வெளியில் மீன்கள் மேய்ந்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற அதிபுனைவு மாயக்காட்சிகள், படம் நெடுகிலும் இழையோடிக்கொண்டிருக்கின்றன.

Mirai 2

 

இறுதியாக குன் மட்டுமல்ல, நாமும் புரிந்துக் கொள்கிறோம். இப்போது நாம் வாழும் இந்த வாழ்க்கை நமக்கு முன்னால் பலர் கண்ட கனவு. அதை அவர்களின் நீட்சியாக நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நமது கனவுகளை நமது நீட்சியாக வருபவர்கள் வாழ்வார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் கனவை செயல்படுத்துவது மட்டும்தான்.

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close