சிறுகதைகள்
Trending

மிளகாய் – மகாராஜா காமாட்சி

சிறுகதை | வாசகசாலை

தாசர்வகாலமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ஓடித் தேய்ந்து, அயர்ந்து போன நெடுஞ்சாலையை, செருப்புப் போடாத, வயதுக்கு மிஞ்சி காய்த்துப் போயிருந்த அந்தக் குழந்தைகளின் கால்கள் ஒத்தனம் கொடுத்த வண்ணம் ஊரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. இன்று காலை தெலுங்கானாவின் கன்னைகுடா கிராமத்திலிருந்து நடக்க ஆரம்பித்த பன்னிரண்டு வயதுக் குழந்தை சரோஜினி மக்டம், அவளது தம்பி பாபு மக்டம், தாய்மாமா மற்றும் இன்னும் சில குழந்தைகள், இப்பொழுது முப்பது கிலோமீட்டரைக் கடந்திருந்தார்கள். அசதியும், பசியும் அவர்களை ஒரே நாளில் அதன் எல்லை வரை ஆட்கொண்டுவிட்டது. இரவு ஓய்விற்காக சாலை ஓரமாய் இடம் பார்த்து, அவர்கள் அனைவரும் உட்கார்ந்தார்கள்.

“மாமா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும், காலெல்லாம் வலிக்குது” என்றாள் சரோஜினி.

“கொஞ்ச தூரம்தாம்மா, இதே மாதிரி இடையிடையே உட்கார்ந்து ஓய்வு எடுத்துட்டு மெல்ல நடந்து வீட்டுக்குப் போயிரலாம்”

“பசிக்கிது மாமா” என்றான் சரோஜினியின் தம்பி பாபு.

“இந்தா பிஸ்கட் இருக்கு, சாப்பிடு பாபு”

எல்லாக் குழந்தைகளுக்கும் கையிலிருந்த பிரட், பிஸ்கட் மற்றும் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட்டது.

“சரி பசங்களா, எல்லோரும் கொஞ்ச நேரம் தூங்குங்க, அப்புறமா எந்திரிச்சு திரும்ப நடக்க ஆரம்பிக்கலாம்”

எல்லாக் குழந்தைகளும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். மாமாவிற்குக் கூட கண் தன்னை அறியாமல் அப்படியே சொருகிக்கொண்டுதான் வருகிறது. இருப்பினும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது கண்களைத் திறந்து ஒரு நோட்டம் பார்த்துக்கொள்கிறார். உடல் அசதி, பசி, ஏக்கம் எனப் பல இருந்தாலும் சரோஜினிக்கு தூக்கம் மட்டும் வரவேயில்லை. அவளின் மனதில் பழைய நினைவுகள் கடலின் அலையாய் அடங்க மறுத்து ஆடிக்கொண்டிருந்தன.

ட்டீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினக் குடும்பங்களில் ஒன்று, சரோஜினினுடையது. அவளது குடும்பம் எளிமையானதாயினும், அவளின் அப்பா உயிரோடு இருக்கும்வரை குடும்ப வறுமையை குழந்தைகளான சரோஜினியும், பாபுவும் அறியாது போயிருந்தார்கள் அல்லது அப்பாவே எங்கோ கடினப்பட்டு வறுமையை மறைத்து வைத்திருந்தார் போல. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த மலேரியாவால் அப்பா, அவர் வாழ்வின் பாதி வழியிலேயே விடைபெற்றுக் கொண்டார். அதுமுதல் குடும்பம் சமாளிக்க முடியாத வறுமையின் கசப்பை சுவைக்கத் தொடங்கியது. அம்மாவும் போராடித்தான் பார்க்கிறாள், மூன்று வேளை சாப்பாட்டையும் குழந்தைகளுக்கு முழுவதுமாய் தந்துவிட. எல்லா நேரமும் போராடி ஜெயித்து விட, வாழ்க்கை  மேட்ச் பிக்சிங் விளையாட்டா என்ன. குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதில் அம்மாவின் ஆரோக்கியமும், அவளது உடையும் நைந்து போகத் தொடங்கின.

சரோஜினியின் தாய்மாமன், தனது அக்காளும், அவளது குழந்தைகளும் படும்பாட்டை எண்ணி வருந்தினான். அவ்வப்போது கோதுமை மாவும், அரிசியும் வீட்டில் போட்டு விட்டுப்போவான். தாய்மாமனின் பொருளாதாரத் தகுதியும் ஏதோ  அவ்வப்போது கொடுத்து உதவும் வகையில் அமைந்ததே தவிர, அக்காள் குடும்பத்தை முழுவதுமாய்த் தாங்கும் விதத்தில் அல்ல.

காரத்தின் சுவையில் முழுவதுமாய் லயித்துப் போகிற வழக்கம் கொண்ட ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா, அதற்கு அடிநாதமாய் இருக்கிற மிளகாயின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.  வருடந்தோறும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான, மூன்று மாதங்களும் மிளகாய் சீசனில்  களைகட்டிப் போயிருக்கும், அவ்விரு மாநிலங்களும். ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு, டன் கணக்கில் மிளகாய் அறுவடை ஆரவாரமாய் நடந்தேறும். அப்படிப்பட்ட அதிகளவு அறுவடையின்போது பக்கத்து மாநிலங்களான ஒடிசா மற்றும் சட்டீஸ்கரிலிருந்து கூட்டம் கூட்டமாய் மக்கள் வேலைக்கு அழைக்கப்படுவார்கள். அதிலும் முக்கியமாக வேலைவாய்ப்புகள் அருகிப்போன பழங்குடியின மக்களும், அதிக அளவில் அவர்களுடைய குழந்தைகளும், அறுவடைக்காகச் சிறுசிறு குழுக்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்குப் படையெடுத்து வருவார்கள். அப்படி வேலைக்கு வரக்கூடியத் தொழிலாளர்களுக்கு சொற்ப ஊதியமோ அல்லது அறுவடையில் சிறுபங்கு மிளகாயோ கூலியாகத் தரப்படும். பொதுவாக இப்படி வேலை செய்யக்கூடிய குழந்தைகள் மிளகாயை ஊதியமாகப் பெறுவதே லாபமெனக் கருதுவார்கள்.

மூன்று மாதங்கள் உழைத்தால் நூறு கிலோ மிளகாய் வரை சம்பாதிக்க முடியும். அதில் பதினைந்து முதல் இருபது கிலோ வரை குடும்பத் தேவைக்காக எடுத்துக்கொண்டு, மிச்சத்தை தனது ஊர்ச்சந்தையில் விற்றால் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் வரை, சந்தை மதிப்பிற்கு ஏற்றார்போல ஒரு நல்ல விலை கிடைக்கும். பல குழந்தைகள், இந்த வாய்ப்பை ஆண்டுக்கொருமுறை அடிக்கும் லாட்டரி பரிசாய் எண்ணி, தன் மொத்த உழைப்பை முழு வீச்சில் போடுவார்கள். முதலாளிகளும் பெரியவர்களை அதிக அளவில் வைத்து வேலை வாங்குவதை விட, குழந்தைகளிடம் வேலை வாங்குவது எளிது என நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அவ்வளவு வேண்டும், இவ்வளவு வேண்டும் என நூல் பிடித்தாற்போல கணக்குப் போட்டுக் கேட்கமாட்டார்கள் குழந்தைகள்.

சரோஜினியின் தந்தை உயிரோடு இருந்தவரை மிளகாய் அறுவடைக்குக் குழந்தைகளை அனுமதித்ததில்லை. அவளும் தம்பியும் பலமுறை அப்பாவிடம் கேட்டுப்பார்த்தார்கள்.

“அப்பா, எல்லாரும் போறாங்க, நாங்களும் போறோம்”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், பேசாம வீட்ல இருங்க”

“மாமாவும் போறாரு, அவரு கூடப் போயிட்டு பத்திரமா வந்தர்றோம்”

“முடியாதுன்னா முடியாது” என சரோஜினியின் வாயை அடைத்தார் அப்பா.

இரவு தூங்கப் போகும்பொழுது, கோபப்பட்டு முகத்தைத் தூக்கி வைத்திருந்த குழந்தைகளைத் தனக்கே உண்டான பொய்யான பலத்துடன் இழுத்து மடியில் போட்டு ஏதேதோ சொல்லி சாந்தப்படுத்தினார். குழந்தைகள், வேலைக்குப்போக வேண்டும் என்கிற ஆசை கொண்டிருந்தாலும், அப்பாவின் அன்பும், கண்டிப்பும் அணையெழுப்பி அவர்களின் ஆசையைத் தேக்கி வைத்திருந்தது.

அப்பா இறந்து போய் எட்டு மாதங்கள் ஆனபிறகு பிப்ரவரி மாதம் வந்தது. அறுவடைக்காகப் பல குழுக்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா நோக்கிய பயணத்தைத் தொடங்கின. வறுமையில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ளவும், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு இடமாற்றம் ஆறுதலாய் இருக்கும் எனவும் எண்ணி குழந்தைகளை மிளகாய் அறுவடைக்கு அழைத்துச்செல்ல அம்மாவும் முடிவெடுத்தாள். தனது தம்பியின் குழுவோடு இணைந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தெலுங்கானா வந்து சேர்ந்தாள். காட்டமாய் இருக்கும் மிளகாயைக் கொண்ட தோட்டத்தைப் பார்த்து, அதன் பசுமையிலும், வரிசையாய் அமைந்த செடியின்  அழகிலும் சரோஜினியும், பாபுவும் மகிழ்ந்து போய்த் துள்ளிக்குதித்தார்கள்.

திட்டமிட்டபடி சரோஜினிக்கும், பாபுவுக்கும் வேலை சொல்லித்தரப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களிலேயே மிளகாயை வேகமாகச் செடியிலிருந்து எடுக்கப் பழகிப்போயிருந்தார்கள் குழந்தைகள். பாபு ஒருமுறை தெரியாமல் தனது கையை முகத்தில் வைத்து நன்றாகத் தேய்த்துவிட, இரவு முழுவதும் மிளகாயின்  எரிச்சலில் சிணுங்கிக்கொண்டே இருந்தான். அவர்கள் வேகவேகமாய் மிளகாயைப் பிடுங்கி சாக்குப்பையில் சேர்க்கும் பொழுது, யாரையோ பார்த்து, எங்கள் சாமானிய மக்களுக்காக என்ன பெரிதாய் புடுங்கி விட்டீர்கள் என்று கேட்பது போல் இருந்தது. ஏப்ரல் மாதம் அறுவடை முடிந்து புறப்படுகையில் சரோஜினி குடும்பக் கணக்காக மூன்று மூட்டை மிளகாய் கூலியாகத் தரப்பட்டது. குடும்பத் தேவைக்கு எடுத்துவிட்டு மிச்சமிருந்த மிளகாய் அனைத்தையும் உள்ளூர்சந்தையில் விற்கப்பட்டது. குடும்ப உழைப்பால்  ஒரு நல்ல தொகை கிடைத்தது. ஊரில் வேலை இல்லாத சூழலிலும், அந்தப் பணம் அவர்களின் குடும்பத்தை நான்கைந்து மாதங்கள் ஒருவழியாக நகர்த்திக் கொண்டு போனது. மீண்டும் வறுமை வாட்ட ஆரம்பித்தது. எப்போது மீண்டும் அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாதம் வரும் என நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே கணக்கெடுக்கத் தொடங்கியது அந்தக் குடும்பம்.

தற்கிடையில் உலகின் ஒரு பகுதியில் டிசம்பர் மாதம், குறிப்பிட்ட மருத்துவரால் ஆளைக்கொல்லும் ஒரு புதுவகையான கொரோனா நோய் கண்டறியப்பட்டு எச்சரிக்கப்பட்டது. அவர் பொய்களைப் பரப்புவதாக அவரின் தாய்நாடு வன்மையாயகக் கண்டித்தது. பின்னர் நோய்த் தொற்றுக்கு மக்கள் ஆளாகி தொடர்ச்சியாக இறந்துபோக, கண்டித்த அதே மருத்துவரை கதாநாயகன் எனவும் வர்ணித்தது. எங்கள் நாட்டை இந்த நோய் எதுவும் செய்துவிட முடியாது என இன்னொரு நாடு மார்தட்டி, அதேவேகத்தில் நோயால் மக்களை லட்சக்கணக்கில் சாவிற்கு அள்ளிக்கொடுத்து செய்வதறியாது திகைத்து நின்றது. இப்படி உலகின் பல நாடுகள் நோயின் தாக்கத்தால் தனது நிலைப்பாட்டையும், அரசியல் கொள்கைகளையும் அமோகமாக மாற்றிக்கொண்டே இருந்தன. நாளுக்கு நாள் நோயின் வீரியமும், உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே போனது. இந்தியாவிற்குள்ளும், இந்த நோய் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. கோவிட்-19 என்றழைக்கப்படும் நோய்க்குக் காரணமான வைரஸ், பாஸ்போர்ட், விசா இல்லாமலேயே உலகம் முழுவதும் சுற்றி தனது சந்ததிகளை வளர்த்தெடுத்தது.

இந்நோய் பற்றி எதுவுமே தெரியாத சரோஜினியின் குடும்பம் போன்ற கோடிக்கணக்கான குடும்பங்கள், தன்னுடைய நிகழ்கால உணவுப் போராட்டத்தில் உறைந்து போயிருந்தார்கள். எனவே பிப்ரவரி மாதம் தொடங்கியதும் மிளகாய் அறுவடைக்கு ஆயத்தமாயினர். ஆனால் இப்போது, சரோஜினியின் அம்மாவால் சரியாக எழுந்து நடமாட முடியாத அளவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது. எனவே சரோஜினியும், பாபுவும் தாய்மாமாவுடன் மிளகாய் அறுவடைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். சென்ற வருடம் போல இந்த ஆண்டும் நிறைய வேலை செய்து மூன்று மிளகாய் மூட்டையையாவது சொந்தப்படுத்தி விடவேண்டுமென்று சரோஜினியும் பாபுவும் பேசிக்கொண்டார்கள். அறுவடை அமோகமாகத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தன்னுடைய கணக்கில் சம்பளமாக எவ்வளவு மிளகாயைச் சேர்ந்திருக்கிறோம் என, இரவு நேரங்களில் கணக்கிட்டுப் பார்த்து சிலாகித்துக் கொள்வார்கள் குழந்தைகள். அதில் சிறியதாய் அவ்வப்போது போட்டி கூட இருக்கும்.

இந்தியாவின் பல பகுதிகளில் தொற்று பரவி, நோய் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே இருந்தது. திடீரென ஒரு நாள், இன்று இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுதந்திரம் நள்ளிரவில் பெற்றதால் என்னவோ, ஆட்சியாளர்களுக்கு இரவைப் பிடித்துப் போயிருந்தது. பணம், வெற்றுக் காகிதமாவது தொடங்கி, இந்நாட்டின் இயக்கம் அடங்கிப்போகும் ஊரடங்கு வரை எல்லாமே நள்ளிரவில்தான் அமலுக்கு வந்தது. ஊரடங்கை அறிந்த மிளகாய் தோட்ட உரிமையாளர்கள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். பறிக்கப்பட்ட மிளகாயைக் கூட சந்தைப்படுத்துவதில் பல்வேறு சிக்கலைச் சந்தித்தார்கள். இது பற்றிய பெரிய பிரஞ்ஞை இல்லாக் குழந்தைகளிடம் இனியிங்கு வேலை இல்லை, மீண்டும் எப்பொழுது ஊரடங்கு தளர்கிறதோ அப்பொழுதுதான் வேலை எனத் தெரிவிக்கப்பட்டது.

தாய்மாமா மற்றும் குழந்தைகளால் கட்டமைக்கப்பட்ட அந்தக் குழு இப்பொழுது செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனது. இந்த ஊரடங்கு எவ்வளவு நாள் தொடரும், எல்லாம் எப்போது முடிவுக்கு வந்து ஒரு சாதாரண வாழ்வு வாழ்ந்து விட முடியும் என மனம்  குழம்பித் தவித்தது. ஏற்கனவே செய்த வேலைக்காகக் கொடுத்த சொற்ப பணமும் சிறிது சிறிதாய்ச் சிறுத்துக்கொண்டே போனது. இரண்டு வாரம் இப்படியே ஓடிய நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. வேலை செய்யும் இடமான கன்னைகுடாவிலிருந்து சொந்த ஊரான பிஜாபூருக்கு நூற்றைம்பது கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இங்கேயே இருந்து சமாளித்து விடலாமா, நடந்து ஊர் போய்ச் சேரலாமா, நடந்து போனால் இவ்வளவு தூரத்தைக் குழந்தைகள் நடந்து விடுவார்களா,  நம்மை நம்பித்தானே இவர்களது பெற்றோர்கள் நம்முடன் அனுப்பி வைத்தார்கள் எனப் பலப் பல சிந்தனைகள் ஓடிய வண்ணம் இருந்தது மாமாவிற்கு. ஒரு புள்ளியில், இப்படியே ஊருக்குப் போகாமல் பசியால் செத்து மடிந்து விடுவோமோ என்கிற பயம் தோன்றியது. இறுதியாய் ஊர் நோக்கி நடக்கலாம் என்று மாமா சொல்ல எல்லாக் குழந்தைகளும் ஒரு மாதிரியாய் ஏற்றுக்கொண்டார்கள்.

சித்திரை மாதக் கொளுத்தும் வெய்யிலும், குழுவின் ஊர் திரும்பும் பயணமும் சொல்லி வைத்தார் போல ஒரே நேரத்தில் தொடங்கித் தொலைத்தது. கையிலிருந்த சொற்பப் பணத்தில் கிடைத்த பிஸ்கட், பிரட், தண்ணீர் என முடிந்ததை வாங்கிக்கொண்டு காலையில் நடை பயணம் தொடங்கியது. ஒரு வழியாக முதல் நாள் பயணம் முடிந்து, தூங்குவதற்கு ரோட்டின் ஓரமாக ஓர் இடமும் கிடைத்துவிட்டது. அனைவரும் தூங்க, சரோஜினி மட்டும் தூங்காமல் எதையோ யோசிப்பதை மாமா கவனித்து விட்டார்.

“சரோஜினி, என்னமா இன்னும் தூங்கலையா?”

“இல்ல மாமா, அப்பா ஞாபகமா இருக்கு” எனக் கண்களைக் கலங்க விட்டாள்.

” பாப்பா அழக் கூடாது, மாமா இருக்கேன்ல தைரியமா இருக்கணும்”

” மாமா, ஒரு தடவ நானும் அப்பாவும் சந்தைக்குப் போனோம். எல்லாக் காய்கறியும் வாங்கிட்டு திரும்ப வீட்டிக்கு வரும்போது, அப்பாகிட்ட கால் வலிக்குதுன்னு சும்மாத சொன்னேன். உடனே தூக்கி தோளில் உட்கார வச்சு வீடுவரைக்கும் தூக்கிட்டே வந்தாரு, இப்ப நிஜமாவே கால் வலிக்குது”- உடைந்து அழுதாள்.

“அழாத பாப்பா, அழாத தைரியமா இரு”- இதைத்தவிர என்ன சொல்லி ஆறுதல் படுத்துவதென்று தெரியாமல் மாமனும் குழம்பிப் போயிருந்தான்.

“சரோஜினி சொல்வது அத்தனையும் நிஜம். பிள்ளைகளுக்கு ஒன்னுன்னா துடுச்சுப் போய்ருவாரு அந்த மனுஷன்”- மனதிற்குள் சொல்லிக் கொண்டார் மாமா.

இவர்களின் வாழ்வில் மற்றுமொரு விடியாத பொழுதான இன்று, பொழுது விடிந்திருந்தது. இரண்டாம் நாளின் நடையைத் தொடங்க ஆரம்பித்தார்கள். நடை தொடங்கிய சிறிது நேரத்தில் பசிப்பதாய் பல குழந்தைகள் சொன்னதும், இருப்பதைப் பகிர்ந்து கொண்டார்கள். அது அவர்களுக்குப் போதவில்லை. வாகனங்கள், கடைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள் என எல்லாமே ஊரடங்கின் அமைதியில் இயக்கமற்று சாந்தமடைந்தன. ஆனால் இந்த அறிவுகெட்ட வயிற்றுக்கு என்ன சொன்னாலும் புரிவதேயில்லை, பசித்துத் தொலைக்கிறது. அந்த வழியில் சமூகத்தொண்டு செய்துகொண்டிருந்த சாமானியர்கள் உணவு கொடுத்தார்கள். மேலும், அதில் பலர் தான் அணிந்திருந்த செருப்புகளைக் கழட்டி வெறும் காலுடன் இருந்த குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். அந்தச் சாமானியர்கள் குல்லா அணிந்திருந்தார்களா, சிலுவை போட்டிருந்தார்களா, திருநீறு பூசி இருந்தார்களா என்றெல்லாம் கவனிக்க முடியவில்லை. ஆனால் அன்பின் பரிமாற்றம், அவர்களின் இதயத்தை மட்டும் கண்ணுக்குப் புலப்படும்படி பெரியதாய் ஆக்கிவிட்டிருந்தது.

சொந்த ஊருக்குச் செல்ல காட்டுப்பகுதி வழியாகக் குறுக்கு வழியொன்று இருப்பதை அறிந்த மாமா, அதன் வழியாய்ச் செல்ல முடிவெடுத்தார். காட்டு வழிப்பாதை அவர்கள் நினைத்த அளவிற்கு அவ்வளவு எளிதாக இல்லை. கல்லும், முள்ளும், விலங்கின் பயமும், அரசால் அங்கீகரிக்கப்படாத செயல்கள் செய்பவர்களின் பயமும், திகிலும், விரக்தியும் நிறைந்ததாக இருந்தது. ஆங்காங்கே கிடைத்த பழங்கள் உணவாகின. இரண்டாம் நாளின் முடிவில் அறுபது கிலோமீட்டர் கடந்திருந்தார்கள். அநேகக் குழந்தைகளின் உடலின் நீர்ச்சத்து வெகுவாகக் குறைந்துபோயிருந்தது. குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டி சலிப்புற்ற சமூகம், இப்பொழுது மறைமுகமாக அவர்களின் உடலின் நீரை உறிஞ்ச ஆரம்பித்தது போலும். குழந்தைகள் தாகத்தாலும், பசியாலும், களைப்பாலும் நொந்துபோயினர். நீர் தேங்கிய குட்டையைப் பார்த்ததும் நீரை அள்ளியள்ளிக் குடித்தார்கள். இப்படியான போராட்டத்துடன் இரண்டாம் நாள் முடிந்தது.

மூன்றாம் நாளில் பல குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. குறிப்பாக சரோஜினி மதியத்திலிருந்து சரியாகச் சாப்பிடவில்லை. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்துக்கொண்டேயிருந்தாள். அவள் உடல்நிலை மிக மோசமாகிக் கொண்டிருப்பது மாமாவிற்குத் தெரிந்தது. நான்காம் நாள், எல்லாக் குழந்தைகளும், வாழ்வு இவ்வளவு கொடுமையானதா என எண்ணும் அளவிற்குப் பசியும், அசதியும் அவர்களை ஒரு மாதிரியாய் கசக்கிப்பிழிந்தது. இருப்பினும் “நூறு கிலோமீட்டர் கடந்து விட்டோம். இன்னும் கொஞ்சதூரம்தான், வீடு வந்துவிடும்” என்கிற மாமாவின் ஒற்றை வாசகம் ஏதோ ஒரு நம்பிக்கையை, பிடிப்பை அனைவருக்கும் தந்தது. சொந்த ஊருக்கு இன்னும் ஐம்பது கிலோமீட்டர் இருக்கும் இந்நிலையில், சரோஜினி மயக்கம் போட்டு விழுந்தாள். மாமா பதறியடித்து தண்ணீர் தெளித்தார். அசைவில்லாமல் அப்படியே கிடந்தாள். துவைத்து காயப்போட்ட துணியில், துணியை விட்டுவிட்டு அதன் ஈரத்தை மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் காற்றைப்போல, சரோஜினியின் உடலை மட்டும் விட்டுவிட்டு உயிரை இச்சமூகம் உறிஞ்சிக்கொண்டது. சிறுவயதிலிருந்தே ஆடிப்பாடி, அரவணைத்து திரிந்த அக்கா இப்பொழுது அசைவற்று கிடப்பதைப் பார்த்து பிரம்மை பிடித்தவன் போல ஆகிவிட்டான் பாபு. மற்ற குழந்தைகள் பயத்திலும், ஆற்றாமையிலும் அழத்தொடங்கினார்கள்.

அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொரோனா நோய்த் தடுப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரிடம் சரோஜினியின் நிலையை தெரிவித்தார், மாமா. செய்தி சொந்த ஊருக்கு போலீஸின் மூலமாகத் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சும், மற்ற குழந்தைகளை அழைத்துப்போக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒருவேளை, உலகை உலுக்கிய கொரோனா என்கிற கொடிய நோயால் சரோஜினி இறந்திருக்கக் கூடுமோ என சோதனை செய்யப்பட்டது. அவளைக் கொன்றது கொரோனோ நோய் இல்லையாம். உடலில் ஏற்பட்ட நீர்ச்சத்துக் குறைவும், தசைச்சோர்வும் தானாம். இங்கு செயற்கையாய் ஏற்படுத்திய வறுமையால், பஞ்சத்தால், பசியால், சமூக மற்றும் அரசியல் அலட்சியத்தால் இறந்த  சாமானியர்களை, விவசாயிகளை கணக்கில் கொண்டால், கொரோனா போன்ற ஆட்கொல்லி நோய் கொன்றது சொற்ப அளவிளான மக்களைத்தான். சரோஜினியின் அம்மாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை குழந்தைகள் இருவரும் முழுதாய் வேலை பார்த்து, கூலியாய்க் கொண்டு வந்திருந்தால் எவ்வளவு மிளகாய் கிடைத்திருக்குமோ, அவையனைத்தையும் அரைத்துத் தேய்த்திருந்தாலும் இவ்வளவு எரிந்திருக்குமா என்று தெரியவில்லை பெற்ற வயிறுக்கு.

*** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close