கட்டுரைகள்

மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?

இளம்பரிதி கல்யாணகுமார்

இசைத்தமிழின் ஓர் உன்னத இணைத்தமிழ் கண்ணதாசனும் MS.விஸ்வநாதனும். 1960,70 என்று ஒரு கால அளவைச்சொல்லி அவர்களை ஒரு காலத்திற்கானவர்கள் என்று அடக்குவது பெரும்பிழை. அவர்கள் காலமற்றவர்கள். காலமானவர்கள் என்று சொல்வதன் முழுப்பொருள் சிலருக்கு மட்டுமே பொருந்தும். அதில் இந்த இருவரும் அடக்கம். ஆம். தமிழ் சினிமாவின் ஒரு வசந்தகாலம்ஆனவர்கள். எத்தனை படங்கள்!  எத்தனை எத்தனை பாடல்கள் !!. தமிழ் பாடல்களின் இலக்கணத்தை வகுத்துக்கொடுத்த அகத்தியர்கள் இவர்கள். இருவருக்கும் இன்று பிறந்தநாள்.

கண்ணதாசனும் MS.விஸ்வநாதனும்  இணைந்து பணியாற்றிய பல வண்ணங்களில் ஒன்றுவறுமையின் நிறம் சிவப்பு

நான் ரங்கன ரொம்ப நேசிக்கிறேன். ஆனா என்னப்பத்தி அவர் மனசுல என்ன நினச்சுட்ருக்கார்னு தெரில. பார்வைக்கு ரங்கன் முரடன் தான் ஆனா கவிதை மாதிரி உள்ளம். அந்த உள்ளத்துல இருந்து என்னால ஒரு ராகம் கேக்க முடியுது. ஆனா அந்த ராகத்துக்கு வார்த்தைகள் இல்ல. அதனால அது பாசமா இல்ல நேசமா..புரில. புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நேருக்கு நேரா கேக்கலாம்னு நினச்சா வெக்கமாவும் இருக்கு. நான் என்ன பண்ணட்டும்

வாய்பேச இயலாத ஓவியரிடம் தேவி யோசனை கேட்கும் காட்சி இது.

படத்தின் நாயகர்களான ரங்கனும் தேவியும் வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டு காதலிக்காத காதலர்கள். திருத்தம், காதலை இன்னும் பரஸ்பரம் சொல்லிக்கொள்ளாத காதலர்கள்தேவியின் புரிதலுக்காக, “ஓவியன் ஊமையாக இருக்கலாம். ஆனால், காதலர்கள் இருக்கக்கூடாதுஎன்று வறுமையின் நிறத்தில் எழுதிக்காட்டுவார் அந்த ஓவியர்.

மேலே சொன்ன காட்சியில் பின்னிருந்து தேவியின் மனதை அவளுக்குத் தெரியாமல் அறிந்துகொள்வான் ரங்கன்

அவனுக்கும் அவள் மீதான காதல் சொல்லப்படாத நிலையிலே இருக்கும்.

அடுத்த காட்சி.

ஒரு பூங்கா.

தனிமையில் ரங்கன் கவிதை எழுதிக் கொண்டிருப்பான். பாரதி படித்த கவிஞன் அவன். சந்தோஷப்படும்போது கவிதை படிப்பதும் கோபப்படும்போது கவிதை எழுதுவதும் அவன் வாடிக்கை. அங்கு ஓவியரிடம் நம்பிக்கை உபதேசம் பெற்ற தேவி ரங்கனைக் காண வருவாள். இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்வார்கள். இருவருக்குள்ளும் காதல் இருக்கிறது. அவை சொல்லப்படாத காதலாக இருக்கிறது

சந்தத்திற்கு கவிதை செய்யும் போட்டி.

தேவி சந்தங்கள் வீச, அதற்கு கவிதை சமைக்கஜெய் பாரதிஎன்ற முழக்கத்தோடு தொடங்குகிறதுசிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடல்

வேலை இல்லை. வறுமை, பட்டினி பசி என்ற கோரங்களுக்கு நடுவே காதலுக்கு நேரமில்லாத காதலன். “சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்திஎன்று அவளது சந்தத்திற்கு பதிலைத் தொடர்வான். பாடலினூடே தொடரும் உரையாடல், அது பேசும் கவிதை.

காதலைச் சொல்ல காத்திருந்த ரங்கன் தனது பாஷையை தொடங்குவான். “சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்என்ற தன்னிலையின் முதல் படியை எடுத்துவைப்பான். மேலே தேவி சொன்ன ராகம் புலப்படும். அதனால் சந்தங்கள் காதலை நோக்கிச் சாயும்.

இப்பொழுது காதலைச் சொல்லிவிட வேண்டும். இதனிலும் காரியகாலம் கிட்டுவதற்கரிது. தேவி சந்தங்களைத் தொடுக்கிறாள்.

கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்

சொல்லப்பட்டது காதல். சுபம்.

இதுவரை தனித்தனியே நின்று பாட்டுரைத்த இருவரும் இந்த வரிக்குப்பிறகு தூரத்திலிருந்து நடந்து வருவார்கள். கேமெராவை நோக்கி இருவரும் நடந்து வர வர கைகள் உரசிக்கொள்ளும். ரங்கன் அவன் மனதிலிருந்து உரைத்ததை ஏற்றுக்கொள்ளும் விதமாக முதலில் தேவியின் விரல் ரங்கனின் விரலைப் பற்றிக்கொள்ளும். பின்னர் இருவரது விரல்களும் பிணைந்துகொள்ளும்.

frameல் இரண்டு கைகள் மட்டுமே தெரியும். இணைந்த கைகள். காதல் கைகூடியது.

இந்த பாடலில் ஒரு வரி வரும். மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?”

அது படி  மயக்கம் பெற்றது தமிழ். தந்தது இதன்கவிகண்ணதாசன்அமுது‘ MS.விஸ்வநாதன்.

ஒரு காதல் காட்சியைப் பாடலாக படமாக்கி பாடலுக்குள் காட்சியைப் பயணிக்க வைத்து அதற்கு மொழியையும் இசையையும் அளவாக செதுக்கி காதலை வெளிப்படுத்துவது ஒரு கவிதை. இந்த பாடல் காட்சி ஒரு கவிதை.

இந்த கவிதையின் இசைக்கும் வரிகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.

என்றும் மறந்துவிடக்கூடாத பொக்கிஷங்கள்  கவியரசு கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் MS.விஸ்வநாதனும்.

வாழ்க எம்மான்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close