சிறுகதைகள்
Trending

மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

சிறுகதை | வாசகசாலை

தெற்குப் பார்த்த அந்த வீடு கேட்பாரற்று அடைந்திருந்தது. இரவு அதன் இருளைஅந்த வீட்டிலிருந்து மட்டும் எடுத்துக்கொள்வதில்லை  போலும். பகற்பொழுதிலும் அப்படியொரு இருட்டு. கும்மிருட்டு. அணைந்து அணைந்து எரிந்த ஒரு டியூப் லைட் மட்டும் வீட்டுக்குள் கிடந்த  இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது. நாட்கணக்காகத் தூற்றாமல் விட்ட சுவடுகள் புழுதியும் குப்பையுமாக  வீடு முழுக்கப் படிந்திருந்தன. ஏதோ ஒரு மரணித்த உயிரின் வாசம் நாசிக்கு ஏறிக் குமட்டிக்கொண்டு வந்தது. திண்ணையில் விடப்பட்ட செருப்பு ஒன்றில் எட்டுகால் பூச்சிகள் கால்மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தன. நூலாம்படையில் நீந்திக்கொண்டுதான் வீட்டின் கதவை அடைய முடியும். அதில் சிலந்திகள் யாரோ ஒருவனுக்குத் தன்னம்பிக்கை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தன ஏறுவதும் இறங்குவதுமாக. கதவின் இருபக்கத்திலும் தீபம் ஏற்றி நின்று கொண்டிருந்தன கண்ணாடி பாவைகள். பக்கத்தில் சின்னதாக ஒரு விளக்கு மாடம். அதில் தினமும் விளக்கு ஏற்றப்பட்ட எண்ணெய் பிசுக்கு  அடையாளத்தைக் காலம்  வீட்டின் சுவற்றில் கருமையாகத் தீட்டியிருந்தது.

குடும்பம் நடத்த தேவையான எந்தப் பொருட்களும் அங்குக் கண்ணில் படவில்லை. பல நாட்களாகத் துலக்கப்படாத சமையல் கறைபடிந்த சாமான்கள். சிதறிக்கிடந்த காய்ந்த சோற்றுப் பருக்கைகளை எறும்புகள் இழுத்துச் சென்றன. ஐந்து மணியை எட்டிப் பிடிக்க நகரும் கடிகார முட்களின் ஓசை அந்த வீடு முழுக்க அதிர்ந்து கொண்டிருந்தது. மூலையில் ஒரு மண்பானை. அதில் பாதியளவு தண்ணீர். ஒரு மேசை நாற்காலி. சந்தன பொட்டிட்ட கண்ணாடி சட்டகத்தில் ஒரு அம்மாள் கறுப்பு வெள்ளையில் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுவரில் தொங்கிக் கொண்டே. வீட்டின் குறுக்கே கட்டப்பட்ட கொடிக்கம்பியில் வெளுத்த வேட்டிகள் தொங்கின. ஒரு மரக்கட்டில். அதில் புழுதியேறிய விரிப்பில் தூசி படிந்த உடலோடு கிடையில் கிடந்த முதியவர் ஒருவர்.

புத்தகரம் கிராமத்துக் கிளை தபால் ஆபீஸீன்  முதல் போஸ்ட்மாஸ்டராக பழநிமுத்து நியமிக்கப்பட்டிருந்தார். ஊருல தப்பிலித்தனம் பண்ணிக்கிட்டு இருந்தவன்லாம் இன்னைக்கு கவர்மெண்ட் அதிகாரியாம். போஸ்ட்மாஸ்டராம்… எல்லாம் நேரம்தேன் என்று அந்த ஊர் மக்கள் சலித்துக் கொண்டதிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

காரணம் ஒன்று.

ஊரில் பத்தாப்பு தேறியது அவன் மட்டும் தான் அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னமே. ஏதோ தட்டுத் தடுமாறிப் பாசாகி இருந்தான். அவனுடன் பள்ளிக்கூடம் சென்று வந்த எட்டுப் பேரில் அவன் மட்டும் தேறியதற்கு அவனின் அப்பா பஞ்சாயத்து போர்டு முன்னாள் பிரெசிடெண்ட் என்பது மட்டுமே  காரணமன்று, மற்ற விஷயங்களில் கொஞ்சம் அப்படி இப்படி பிசகினாலும், பழநியிடம் கொஞ்சம் படிக்கும் ஆர்வமும் இருந்தது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

காரணம் இரண்டு.

ஊரில் அவனுக்குச் சொந்தமாக ஒரு வீடும், கொஞ்சம் வயலும் இருந்தன. எல்லாம் பரம்பரை சொத்துதான். பின்ன…இவனா எங்கிருந்து சொத்து சேர்க்க? இருக்கும் சொத்தை அழிக்காம இருந்தால் போதாதா?

போஸ்ட் ஆபீஸ் திறக்க ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் முன்னால் பிரெசிடெண்ட்டைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரின் வீட்டுத் திண்ணையை ஒதுக்க சம்மதித்திருந்தார், மகனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு.

நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று ‘பழநிமுத்து கிளை போஸ்ட் மாஸ்டர், புத்தகரம்’ என்று வீட்டில் போர்டு மாட்டியாகிவிட்டது. அதுவரையில் பிரெசிடெண்ட் வீடு என்று இருந்த அடையாளம் போஸ்ட் ஆபீஸ் என்று ஆனது. காலப்போக்கில் போஸ்ட் ஆபீஸ் வீடு என்றே அதன் பெயர் நிலைத்து விட்டது.

கள்ளு, சீட்டு, பொம்பள என்று விட்டேத்தியா சுற்றித் திரிந்த பிரெசிடெண்ட் மொவன் பழநி,  இன்று போஸ்ட் மாஸ்டர் பழநிமுத்து சார் ஆகியிருந்தார். கல்யாணம், மனைவி என்று ஊர் மதிக்கும் பெரிய மனுசனாகவே மாறியிருந்தார் பழநிமுத்து. அவர் நடத்தையிலும் அத்தனை நேர்த்தி ஒட்டிகொண்டது. கஞ்சி போட்டு வெளுத்த முடப்பான அரைக்கை வெள்ளை சட்டைதான், சலவை வேஷ்டிதான், நெற்றியில் சின்னதாகக் குங்கும தீற்று வேறு,  அதிகாரிகள் வரும் நேரங்களில் முழுக்கால் பேண்ட் சட்டை. சார்,  இஸ்திரி செய்யப்படாத சட்டை போட்டிருக்கிறார் என்றால்  போஸ்ட் ஆபீஸ் லீவாகத்தான் இருக்கும் என்று புத்தகரம் மக்கள் பேசும் அளவுக்கு அவரின் நேர்த்தி மாறிப் போனது. அரசாங்க பதவியில் இருப்பதை ஒவ்வொரு நொடியும் ஊருக்கு அவர் வெளிப்படுத்திக் கொண்டார்.

போஸ்ட் மாஸ்டர் பழநிமுத்து சார் என்று ஊரில் மரியாதையாக நடத்தப்படும் பழநியைப் பற்றி அவரின் சிநேகிதர் ஒருவர்,  ”பாசான கையோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுக் கூட்டுக்காரங்களான எங்கக் கூடச் சேந்துகிட்டு பழநி செய்யாத அட்டூழியம் இல்ல…பாத்துக்க”  என்று ஆரம்பித்தார்.

ஊருக்குப் பெரிய மனுஷங்க தலையில் துண்டைப் போட்டுக்கிட்டு யாருக்கும் தெரியாம செஞ்ச எல்லாத்தையும்தான் அவனும் செய்தான். என்ன கொஞ்சம் அதிகமாகவே. வெளிப்படையாகவே. யாராவது என்னன்னு கேட்டாக்கா, ’எங்கப்பனே கேக்காது நீ என்னய்யா என்னைய கேக்குறா.. போ…போயி உம்மை வேலைய பாரும் போ.’ என்று எடுத்தெறிஞ்சிப் பேசுவான்.

”இவன் அப்பன் ஊரு பேரு தெரியாம அவ்ளோ பெரிய பதவியிலிருந்தான். போற வர இடம் தெரியாது. அவ்ளோ சாது. இந்தப் பயல் அப்படியே அப்பனுக்கு நேர். தாயில்லாத ஒத்தை பிள்ளைன்னு இவ்ளோ செல்லம் கொஞ்சாத னு எவ்ளோ தடவை சொல்லியாயிற்று. கேட்டாதானே?” என்று நொந்து கொண்டனர் ஊர் பெருசுகள்.

”ஊரில் பிரெசிடெண்ட் மொவன் பிரெசிடெண்ட் மொவன் என்று அவனை  நாங்க வேற  கொஞ்சம் அதிகமாகவே ஏத்திவச்சோம். பின்னே,  என்ன செய்ய எங்கக் கள்ளுக்கு அவன்தானே பாடு.”

காலை நேர கள்ளுக்குத் தொடங்கும் அவனின் நாள் மாலை நேர கள்ளில் சுணங்கி குப்புற விழும் பனங்கொல்லை தேங்காநார் கயித்துக் கட்டிலில். தேக்கு இலையில் பரிமாறப்படும் ஆவி பறக்கும் இட்லிகளை, பூண்டு துவையலோடு பிசைந்து அள்ளி எரிந்துக்கொண்டே  நெத்திலி கருவாடு தொக்கை ஆட்காட்டி விரலில் லாவகமாகத் தொட்டு உள்நாக்கில் தடவிக்கொள்வான். ட்டா…நாக்கை மேலண்ணத்தோடு ஒட்டிச் சுழட்டி ஒரு அலட்டல் தலையை ஆட்டிக் கொண்டே. பார்க்கவே லயமாக இருக்கும். குடிச்ச கள்ளு, நெஞ்சை எதுக்களித்து வாயிலெடுக்க எத்தனிப்பது போல அடிக்கடி ஏப்பமாகப் புளிக்கும் அவன் வாயில். அப்படிச் செய்வது அவனுக்குப் பிடித்துமிருந்தது. அடிக்கடிச் செய்வான்.

அதிகாலை கோட்டா முடிந்தபின் அரசமரத்தடியில்  கூடும் சபை  மூணு சீட்டுக்கும், நாலு தாளுக்குமாக இருக்கும். வெம்மைக்குக் கள்ளு, தொட்டுக்கொள்ள நெத்திலி, மதிய கொத்துக்குக்  கருவ முட்செடிகளை ஒடித்து உண்டாக்கிய நெருப்பில் வெந்து கொண்டிருக்கும் வண்ணாங்குட்டையில் பிடித்த மீன்கள்.

மொத்த உடலையும் மூட தொடையளவு டிராயர் போதுமென்று வேட்டியை உருவி கட்டிய தலைக்கட்டு, பித்தான்கள் களையப்பட்ட சட்டை. கள்ளின் அளவைப் பொறுத்தே பித்தான்கள் களையப்படும். சில வேளையில் சட்டையில்லாத வெற்று உடம்பில் கூட சபை நடக்கும் பாத்துக்க. நெஞ்சுக்குழியை உரசும் தங்க டிஸ்கொ செயின், பல்லில் கடித்த பற்று அணைந்த பீடி. ஆளு பாக்க மைனர் கணக்கா.

கள்ளிலும், சீட்டுகளிலும் ஏற்பட்ட அயற்சியைக் குட்டையில் மக்குடு கட்டிக்கொண்டு குளிக்கும் பெண்கள் கொண்டு நிரப்பிக் கொள்வோம்.  பாவாடையைப் பல்லில் கடித்துக் கொண்டு மாருக்கு சோப்பு தேய்க்கும் சலப் சலப் சப்தமும், இருகை கொண்டு பிரிஷ்டத்தையும் யோனியையும் அலம்பும் சத்தமும் எங்களை விறைத்துக் கொள்ளச் செய்யும். கிளர்ந்து நிற்கும் குறியைச் சாந்தப்படுத்த,  மறைய இடமில்லாத அந்தக் கருவ காட்டில் நாங்க தேர்ந்தெடுக்கும் இடம் வண்ணாங்குட்டைதாம். மாரளவு தண்ணீரில் வரிசையாக நின்று கொண்டு குட்டையைக் குழப்பிய பின் ஒவ்வொருத்தனாகக் கரையேறுவோம்.

சிலவேளைகளில் இருவராகக் குட்டையில் இறங்கிக் கொள்வதும் ஒருவன் வானத்தை அண்ணாந்தபடி நிற்க ஒருவன் குட்டையில் முங்கியிருப்பதும் பின் அந்த  நிலையை எங்களுக்குள் மாற்றிக்கொள்வதுமாகக் கழிந்தது பருவம்.

காலைக்கடனுக்குக் கருவ வயலில் உட்காரும் பெண்களின் குறியைப் பார்த்துச் சுயமைத்துனம் செய்வது எங்களின் வழக்கமாக இருந்தது. சுற்றும் முற்றும் நோக்கமிட்டவாறு சேலையைத் தொடைத்தெரிய வெளித்துக்கொண்டு நீர்க்கடுப்புக்குக் குந்தும்  பெண்கள் சர்ரென்று ஓசையோடு பொங்கி நுரைக்கும் மண்ணைப் பார்த்துக்கொண்டிருக்க, மூத்திர திறப்புக்கு வழிக் கொடுக்கும் யோனிப் பிளவை எங்கோ எதிரில் மண்டிக்கிடக்கும் முட்செடிகளுக்குப் பின்னால் இருந்து கொண்டு சில கண்கள் குறுகுறுப்பதையும், அவர்கள் கைகள் குலுக்கிக் கொள்வதையும் பாவம் அந்தப் பெண்கள் அறிவதில்லை. ”எங்களுக்கு ஊரில் உள்ள எல்லாப் பொம்பளைங்க அளவு மொதக்கொண்டு தெரிஞ்சிருந்தது …பாத்துக்க.”

”பாத்துக்க…பாத்துக்க” என்ற போதெல்லாம் க்கர்…க்கர்…னு குதப்பிய வெற்றிலை எச்சிலைக் கூட்டித் துப்பிக்கொண்டே தொடர்ந்தார்.

மேய்ச்சல் மாடுகளுக்குத் தண்ணி காட்டுவதாகச் சொல்லி புருசங்காரன ஏச்சுப்பிட்டு அவனுடன் காட்டில் ஒதுங்கும் பொம்பளைங்க அநேகம்.

வெளிக்குப் போயிட்டுக் கால் அலம்பாம வரும் பொம்பளைங்க பற்றியெல்லாம்  அவன் கவலை கொள்வதில்லை. மேய்ச்சலுக்கு வரும் பிள்ளைகளை ஒருமுறையேனும் அவன் ஏறி எறங்கியிருப்பான் என்று புத்தகரத்தில் பெண் எடுக்க அக்கம் பக்கத்து ஊர்காரர்கள் பயந்தனர், க்கர்…க்கர்…  என்று தங்கள் பால்யகாலங்களை நினைவாகச்  சொன்னார்.

விசாலத்துக்கு அப்போதுதான் பெண் குழந்தை பிறந்திருந்தது. பார்ப்பதற்கு அப்படியே அவளை உரித்து வைத்தாற்போல ஒன்றை ஒன்று நெருங்கிய  சின்ன சின்ன கண்கள், திம்மென்ற கறுத்த உடல், கவட்டை கால்கள். விசாலம் போஸ்ட் ஆபீஸ் வீடு அமைந்துள்ள மொட்டையாண்டி கோவில் கிழக்குத் தெருவில் உள்ள வீடுகளில் எல்லாம் வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தாள். அவளின் வீட்டுக்காரன் இரவு தள்ளுவண்டி இட்லிக் கடையில் வேலை செய்வதாகச் சொல்லிக் கொண்டாள்.  வீட்டைத் தூத்தி பெருக்கி, சமையல் சாமான்களை விளக்கி, துணிகளைத் துவைத்து விட்டு, கொல்லைநடையைக் கழுவிவிட வேண்டும் என்பது தினசரி வழக்கமாகவும்,  வாரமொரு முறை வீட்டை முழுவதும் ஒட்டடை அடித்து, தூத்தி பெருக்கி, மெழுகி விட வேண்டும் என்பதும் அவளின் உத்தியோக இலக்கு. அதற்கு மாதம் எண்ணூறு சம்பளம் என்றும் காலை மாலை  படியாக ஃகாபி தரப்படும் என்பதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எல்லா வீட்டு வேலையையும் மாங்கு மாங்குவென்று செய்யும் இறுமாப்பு உடம்பு அவளுக்கு வாய்க்கப்பட்டிருந்தது. இவ்ளோ இழுப்புக்கும் இந்த உடம்பு வருதே என்று அவளுக்குக் கூட ஆச்சரியம்தான்.

”அம்மாவ… மூணு மாசத்துப் பிள்ளையைத் தனியா விடமுடியாது தாயீ…நீங்க கொஞ்ச மனசு பண்ணினீங்கனா தூக்கிக்கிட்டு வரேன். வேலையைக் கெடுக்காது மா…அது பாட்டுக்கு அது கெடக்கும். கொஞ்சம் வேலை முடியிர வரையும் சித்த தரையில போடுறேனே, என்னமா சொல்றீங்க..”.என்று கெண்டைக்கால் தெரியுமளவுக்குக் கொத்தாகச் சேலையைச் சேர்த்துத் தொடையில் கை வைத்துச் சொரிந்துகொள்வாள்.

ஒத்துப் போறவங்க வீட்டு வேலைக்குத்தான் விசாலம் வருவாள் பிள்ளையோடு.

வீட்டைத் தூத்தி பெருக்கி,  நடு கூடத்தில்  எடுத்துவந்த பழைய சேலை விரித்துப் பிள்ளையைக் கிடத்திவிட்டு …”ஏங்…மகராணி இங்கேயே இருப்பீங்களாம்.. அம்மா இப்போ வந்துருவேணாம்…ஏங் சமத்துப்பிள்ளை…” னு பிள்ளை னு அடிவயிற்றில் கிள்ள, க்கே…க்கே..…க்கே னு கெக்கலிக்கும் குழந்தை.

”எம்மா…செத்த பிள்ளையை இங்க போடுறேன் மா, பாலு குடிச்சிரிச்சி, அடம் பண்ணாதுமா…” கொடியில் உலறவைத்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டே, ”ஏங்…வெளுத்தசட்டே…ஏங்…பட்டுபுடவே…ஏங்… வெள்ளைவேட்டீ”… என்றும்

சமையல் சாமான்களைத் துலக்கிக் கொண்டே, ”ஏங்… சில்வர் தட்டு…ஏங்…இட்லி குண்டான்…ஏன்…குத்துவிளக்கு” என்று கையில் கிடைக்கும் சாமான்களை வைத்து  ஏதேதோ பெயர் சொல்லிக் கொஞ்சுவதும் வேடிக்கையாக இருக்கும். பிள்ளையைக் கொஞ்சும் போதும் அவள் வறுமையும் கூட வந்து  ஒட்டிக்கொள்ளும் போல.

அடுக்களையிலிருந்து  தண்ணீர் சலசலக்கும் சத்தம் ஒருகணம் நின்ற உடன், அம்மா வந்துவிடுவாள் என்று குழந்தை புரிந்துகொண்டு வீறிடும். ”ஏங் …லட்சுமி விளக்கு… ஏங் பொங்குன சோறு…தோ வந்துட்டேன் ஏங் யம்மாடியோவ்! அம்மா வேலை முடிச்சத்தைத் தெரிஞ்சிக்கிட்டாங்க ஏங் ராசத்தீ…” னு தூக்கி முத்தி முத்திக் கொஞ்சுவாள்.

க்கே…க்கே..…க்கே னு சிரித்துக் குலுங்கும் குழந்தை.

”ந்த…உட்டுட்டுபோயி கொஞ்ச நாழியாவுல அதுக்குள்ளே பத்து வருசமா பிரிஞ்சமாதிரில கொஞ்சுர…பெருசா…இந்தா இதைப் பிடி” என்று ஃகாபி டம்ளரைக் கொடுத்துவிட்டு, அம்மா குடிச்சாலும் செரி பொண்ணு குடிச்சாலும் செரினு சொல்ல க்கே…க்கே…க்கே வென்று மீண்டும் கெக்கலிப்பு செய்தது குழந்தை.

”பாத்தியாடி இதே அறிவ… அம்மா…அம்மாவுக்கு ஏத்த பொண்ணுதான் நீயி..”  குழந்தையின் முகத்தை இரு கையால் வருடி நெட்டி முறித்து …”ப்பா அவ்ளோ திருஷ்டி…வீட்டுக்குப் போனதும் சுத்திபோடுடீ விசாலம்” என்று அடுப்படியில் நுழைந்தாவரே,

”ந்த …விசாலம்..”

”யக்கா..”

”நேத்திக்கு வச்ச மீன் குழம்பு இருக்குடீ, ஒருவா சாப்பிடுறீயா..” அந்த வீட்டம்மாள் வாஞ்சையோடு கேட்டாள்.

”ம்…அது சாப்பிடும்க்கா..கொஞ்சமா டப்பியில கொடேன்..”என்பாள்.

எப்படி எப்போனுட்டெல்லாம்  தெரியாது. ஆனாலும் அந்த மெத்தவீட்டுகார அம்மாளுக்கும்  விசாலத்துக்கும் ஏதோ ஒரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது. ஒருவேளை இருவரும் கறுத்த பெண்களாக இருப்பதலோ, மாதாமாதம் தீட்டுப்படுவதாலோ, அவர்களின் வீட்டாம்பிளைகள் நிதம் குடிப்பவர்கள் என்பதாலோ, அவனின் மொச்சை வாடையைச் சகித்துக் கொண்டு சொத சொதக்கும் வியர்வையுடன் நிதமும் எரவானத்தைப் பார்த்தபடி திறந்து கிடப்பதாலோ, மீசை என்ற  ஆதிக்கம் அவர்களைச் சுற்றி வலைப்பின்னல் விலங்கிட்டிருப்பதாலையோ, எதற்கு என்பதை அறியாமலேயே வாழ்ந்து பின்னொரு நாளில் பெருமாண்டி சுடுகாட்டு மண்ணாகிப் போகும்  ஜென்மங்கள் என்ற புரிந்ததாலோ  என்னவோ அந்தப் பிணைப்பு. அவர்களுக்குத்தான் தெரியும்.

மொட்டையாண்டி கோவில் கிழக்குத் தெருவில் உள்ள எல்லோர் வீட்டுச் சமாசாரமும் விசாலத்துக்கு அத்துப்பிடி. எல்லாமும் அவள் மனதில் பதிந்து கிடந்தன. சொல்லக்கூடியவைகளை  அந்த அம்மாளுடன் மட்டும் சொல்லுவாள்.

”ம்…வேணும்தான்…ஓம் பில்லிய இங்க தாங்கத்தேன் நாங்க வீடு கட்டிப் போட்டுருக்கோமாக்கும்…சர்தேன் போடீ நீ இல்லயினா இன்னொருத்தி” என்று தாவங்கட்டைய தோளில் இடித்துக் கொள்ளும் பெண்களும் அந்தத் தெருவில் இருக்கவே செய்தனர். எது எப்படியோ மாசம் ஒன்னாக்கா கிடைக்கும் இரண்டாயிரம் மூவாயிரம்  அவள் வீட்டுச் செலவுக்கும் சரியாக இருந்தது.

சில வீட்டுக்காரர்கள் சம்பளம் தர அழும்போது, ”போடா பொன்னப்பயல…எண்ணூறு தர வக்கில்ல இதுல பொண்டாட்டி மொலை போதாதுன்னு என் மொலை கேக்குத்தா…ப்தூ…இனி எவளுதையும் பெசைய முடியாதுடா…கஞ்சப்பயல். இவனுக்கு ஒரு பொண்டாட்டி, குடும்பம் …ஹாவ்…ப்தூ…” என்று எச்சில் கூட்டி தெருவில் மொழிவாள்.  அம்மாவுக்கு ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டதாக நினைத்து அவள் மாரைப் பிடித்துக்  கொண்டு அழுதது இடுப்பிலிருந்த  குழந்தை.

”அவங்களும் அவங்க பார்வையும். எப்போ சேலை விலகும் எப்போ தெரியும் னு. பொம்பள உடம்பு ஒரு பொட்டு அளவு தெரிஞ்சாலும்  கண்ணுல பாரு வெறிய…நாயிங்க மாதிரி…. ஏதோ காணாததை க் கண்டது கணக்கா. எனக்கு மட்டும் என்ன மூணா இருக்கு இப்படிப் பாக்குராணுங்க. இதையேதான அவுங்க வீட்டுப் பொம்பளைங்க கிட்டயும் இருக்கு.”

பல்லிடுக்கில் சிக்கிய கறித்துகள் போல ஏதோ ஒரு இனம்புரியாத உறுத்தல் அவளுக்கு இருந்துகொண்டே இருந்தது குனியும்போதும் நிமிரும் போதும்.

வியர்த்து நனைந்த ஜாக்கெட் முதுகையும் ரவிக்கை கிழிசலில் தெரியும் அக்குள் மயிரையும் பார்க்க அலையும் ஏரிக் கண்களில் நிதமும் முங்கி எழுந்தாள்.

”ஒருமுறை அரசிக் கடை மொதலாளி வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தப்ப, முதலாளி பையன் இருக்கான்ல பெரியவன்…அவன் தான், ஈ னு பல்ல காட்டிக்கிட்டு நின்னான். திடீர்னு வந்து கட்டிப் புடிச்சிக்கிட்டான். உடும்பு கணக்கா. நான் திமிருக்கிட்டுதான் நின்னேன். அந்தப் பயல் விடல. எங்கெங்கே கைய வைச்சான். எங்கே வாய வச்சானு கூட நியாபகம் இல்லை. அந்தக் கொஞ்ச நொடியில. மிருகமாட்டோம். நான் அவன் கொட்டையை எத்திவிட்டு பிள்ளையைத் தூக்கிக்கிட்டு ஓடியாந்துட்டேன். மறுநா ஒன்னுமே தெரியாதது போல அம்மா…விசாலம் வந்துட்டா விசாலம் வந்துட்டா னு குதிச்சு குதிச்சு கொல்லைக்கு ஓடினவன பாக்குறதுக்கு பரிதாபமா போச்சி க்கா” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டே.

”இருபது வயதாகியும் கூட அது இன்னும் வளருல,  அது சின்ன பிள்ளை” என்று முதலாளி அம்மா சொல்லும்போதே கொல்லையிலிருந்து, ”அம்மா…அம்மா…இங்க வாவேன்…இந்த வெள்ளைப் பூனை என் லவ் பேட்ஸ கொன்னுரிச்சுமா…அதுக்கு இனி சோறு வெக்காதமா…விசாலம் இங்க வந்து  பாரேன் ஒரே ரத்தம்…னு  தரையில் அழுது உருண்டு பிரண்ட அவன் உடம்பெல்லாம் பூனையின் நகக்கீறல்கள். அதன் கூடப் போராடியிருப்பான் போல…பாவம் அந்தப் பிள்ளையைப் பற்றித் தெரியாம நானும் அதே அடிச்சிப்பிட்டேன்க்கா” என்று சொல்லும்போது விசாலம் உடைந்து அழுவதை மெத்த வீட்டுகாரம்மா கண்களைச் சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்த வானில் சூரியன் மெல்ல மெல்ல ஏறி வந்தது. மொட்டையாண்டி கோவில் மணி ஓங்காரமாக ரீங்காரித்தது. கோபுரத்தில் அடைந்திருந்த புறாக்கள் சட சடவென எழுந்து கோபுரத்தை ஒரு முறை சுற்றிப் பறந்து மீண்டும் அமர்ந்தன. தேர்முட்டியில் படுத்துக்கிடந்த நாயொன்று தலை தூக்கிப் பார்த்தது. கோவில் வாசல் நடை இன்னும் திறக்கப்படவில்லை. ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. பெண்கள் தண்ணீர் தெளித்து வாசல் கூட்டி கிழக்குத் தெரு மண்ணை மணக்க செய்துகொண்டிருந்தனர். வாத்தியார் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வந்த விசாலம், யம்மா…யம்மா…வென்று போஸ்ட் ஆபீஸ் வீட்டுக்கு முன்னே நின்று கூச்சல் போட, கிழக்குத் தெரு பெண்கள் விளக்குமாரோடு அவளைச் சுற்றினர். சலசலப்பு. வீட்டு ஆம்பிளையைக் கூட்டு வர சில பெண்கள் வீட்டுக்குள் ஓடினர். விசாலம் மட்டும் போஸ்ட் ஆபீஸ் வீட்டை வெறித்து கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் தெரு மக்கள் கூடியிருந்தனர். ஒவ்வொருவராக வீட்டிற்குள் நுழைந்தவர்கள் துண்டால் வாயைப் பொத்தியபடி வெளிவந்தனர். வெளியே வந்த சிலர் கைகளை விரித்தபடி அண்ணாந்து பார்த்தனர். ஒருவர் வீட்டு திண்ணை சுவரில் முதுகு தேய சரிந்து உட்கார்ந்தார். என்ன செய்வதென்று யாரும் எதுவும் சொல்லாமல் விழித்தவாறே பற்களைக் கடித்துகொண்டு வாய் பிளந்தனர்.

”யப்பா. யாரும் போயி மெய்க்காவலை ஒடனே வரச் சொல்லு , கோவில் நடைய சாத்த சொன்னேன்னு சொல்லு” ஆள் அனுப்பினார் தெரு பட்டாமணியார்.   ”எப்போ நடந்திருக்கும்…எப்படி ஆச்சு…யாரு மொதல பாத்தது…”அடுத்தடுத்த கேள்விகள்.

”ஏய்…இந்தா…விசாலம்…சட்டுனு வீட்டைத் தூத்து. அந்தக் கடிகாரத்தை நிறுத்தி வையிப்பா. நிறுத்தி வைக்கப்பட்ட கடிகாரம் மணி ஏழு இருபது என்று காட்டியது.  கொஞ்ச பேரு போயி கொல்லையைச் சுத்தம் பண்ணி வீட்டை ஒழிச்சு வைங்க . மசமசவென யாரும் நிக்க வேண்டாம். ஆகுறத பாருங்க.மொதல்ல எல்லா ரைட்டயும் போடுங்க ஒரே இருட்டா கிடக்குது. வெளிச்சமே இல்ல.” ‘லயிட்’ என்று அவருக்குச் சொல்ல வரவில்லை.

”டேய் தம்பி…நம்ம வீட்டுத் திண்ணையில பெஞ்சு கிடக்கும் போயி தூக்கியா…பக்கத்தில் நின்று கொண்டிருந்தவனை விரட்டினார். அனோன்ஸ்மெண்ட் காரனுக்கு ஆள விடுப்பா…சுருக்கா…வேற யாரும் முந்திக்காம. பக்கிரி மொவனுக்குத் தகவல் சொல்லி அனுப்பு.…அப்படியே பச்சை மட்டையா சீவ சொல்லு…”வெத்துமார் உடம்போடு கண் பீளை கூட எடுக்காமல் சுற்றியிருந்த வேட்டியைக் கட்டிகொண்டே ஒவ்வொரு ஆளுக்கும் வேலை ஏவி கொண்டிருந்தார் அவர்.

விஷயம் இதுதான். போஸ்ட் மாஸ்டர் பழநிமுத்து சார் இறந்து விட்டிருந்தார்! ஊரில் பெரியபுள்ளி. பாவம் அனாதையாக ச் செத்துப் போயிருந்தார். அந்த அம்மா மட்டும் பிரசவத்துல பொழச்சி வந்திருந்தா இன்னைக்கு சாருக்கும் ஒரு புள்ளியோ பொண்ணோ இருந்திருக்கும் கடைசி அரிசி போட. அந்தக் குடும்பமே வாரிசு இல்லாம முடிஞ்சிபோச்சே, தெரு பெண்கள் புலம்பினார்கள்.

”யாரும் இல்லனா என்னய்யா.  நம்ம தான் அவருக்குச் சொந்தம். நாமதான் அவருக்கு அண்ணன் தம்பி மொறை. நாம தான் அவருக்கு மாமன் மச்சான்.  அவிங்க குடும்பம்தான் இந்தத் தெருவுக்கு மூத்த குடும்பம் னு எங்க அப்பாரு அடிக்கடி சொல்லுவாருய்யா. இந்த மொட்டையாண்டி கோயிலுக்கு அவிங்க குடும்பம் செஞ்சது கொஞ்சம் நஞ்சம் இல்ல டோய். சின்னதா ஏதோ ஒரு மூலையில இருந்த மூர்த்தியை வச்சி குச்சி கட்டி கூரைப் போட்டு இருந்தத கோவிலா மாத்தினாரு அவரு பாட்டன். நம்ம கொள்ளு தாத்தங்க கெட்டியெழுப்புன கோவிலு இது. கிழக்குத் தெரு ஜனங்க எல்லோரும் தலைமுறையா கொடுக்கல் வாங்கல் சொந்தம் உள்ளவங்கய்யா.  அதுல பரம்பரையா மணியம் செஞ்சுட்டு வந்தது அந்தக் குடும்பம் டோய்…பழனிசார் அப்பாரு ஊர் பிரெசிடெண்ட் ஆனபிறவுதான் நம்ம ஊருக்கு பஸ் வண்டி வந்தது. அப்போலாம் நாங்க சின்னபிள்ளைவோ. நம்ம தெரு அந்த வீட்டுக்கு கடமைபட்டிருக்கு டோய். அதனால நாம தான் அவரை நல்லடக்கம் செய்யணும் . என்ன சொல்றிங்கோ…”ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் பட்டாமணியார்.

”அட விடுய்யா… அவரு ஒன்னுமே செய்யலனாகூட நாமதா செய்யணும். நம்ம கூடவே இருந்து வாழ்ந்து செத்துப்போன ஒருத்தனுக்கு நாம  செய்யற மரியாதை இது. பழநிமுத்து சார் சாவும்போது நினைத்திருப்பார் இல்ல, நம்ம பிணத்தைத் தெருகாரவங்க தூக்கிப் போடுவாங்க னு. அந்த நம்பிக்கையை உண்மையாக்கணும் ப்பா. அதுதான் செத்துப்போன பழநிமுத்து சாருக்குச் செய்யும் மரியாதை. அதுதான் நம்ம மனுச பொறப்புக்கு னு சொல்றதுக்கு அர்த்தம்.” பட்டாமணியார் சொல்லி முடிக்க தெரு ஜனங்க ஆமோதித்தனர்.

மூன்று நான்கு நாட்கள் பராமரிக்கப்படாமல் கிடந்த போஸ்ட் ஆபீஸ் வீட்டில்தான் இன்று எளவு.  கிழக்குத் தெருவில் எல்லோர் வீட்டு வேலைகளையும் ஒழித்துவிட்டுக் கடைசியாகத்தான் போஸ்ட் ஆபீஸ் வீட்டிற்கு வருவாள் விசாலம். அவள் வரும் பொழுதுகளில் பெரும்பாலும் போஸ்ட் மாஸ்டர் பழனி/நிமுத்து உறங்கிக் கொண்டிருப்பார். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதுமே திரும்பிப் படுப்பார்.

”சார்…நான் தே விசாலம்.”

’…க்…கொர்…க் கொர்’ என்று அவரின் மூச்சு சத்தம் கூடத்து மதில்களில் மோதி எதிரொலிக்கும்.

”அம்மா…தோ வந்துட்டேன்…சமத்தா இருக்கணும்…” பிள்ளையைப் படுக்கப்போடுவாள். பிள்ளை கைகால்களை ஆட்டி கொண்டு அனுமதிக்கும்.

விசாலத்துக்கு அந்த வீட்டில் செத்தநேர வேலைதான். மளமளவெனப் பத்து நிமிஷத்துக்குள் செய்து விட்டுப் பிள்ளைய தூக்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடிவிடுவாள். ஒன்றோ ரெண்டோ சமையல் சாமான்கள் இருக்கும். பழ/நிமுத்து சாரின் வேட்டியும் சட்டையும். மேசை நாற்காலியைத் துடைக்கவேணும் அவ்ளோதான். வீட்டின் கூடம், திண்ணை, கொல்லை நடை வாசல் வரை கூட்டினால் போதும் புலங்காத இடங்களைச் சுத்தம் செய்ய தேவை இல்லை என்று ஒருமுறை சார் சொன்னது அவள் நினைவில் இருந்தது.

விசாலம் அந்த வீட்டுக்குக் கடைசியாக வந்த நாளிலும் பழநிமுத்து படுக்கையில்தான் இருந்தார்…ம்ம்…ம்மா…வென  முணகியவாறே. அவர் கண்களைத் திறக்காது கிடந்தார் தூங்காமல்.

”சார்…நான்தே விசா….”

’…ம்ம்…ம்மா.…’அவர் அனத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த விசாலம் பிள்ளையைத் தரையில் போட்டுவிட்டு அவர் நெற்றியில் கை வைத்தாள். லேசான காய்ச்சல் மாதிரி இருந்தது.

”சார்…சார்…என்ன செய்யிது சார்…”

”…ம்ம்…ம்மா”

”மருந்து இருக்கா…?”

”…ம்ம்…ம்மா.”

”யாரையும் கூட்டியாரவா?”

”…ம்ம்…ம்மா”

முணகிக் கொண்டிருந்தவர் படுக்கையிலேயே வாயிலெடுத்தார். இரவு விழுங்கிய செரிக்காத இறைச்சி துண்டுகள் சில அவரின் வாயோரம் கிடந்தன. வாயிலிருந்து கோழையும் எச்சிலும் வடிந்து கொண்டிருந்தன.

கட்டில் விரிப்பில் எங்கும் வாயிலெடுத்த சிதறல்கள் பச்சை பச்சையாக. அவரால் எழ முடியவில்லை.  அவர் சட்டையைக் களைந்து வெந்நீரில் நனைத்த துணியால் ஒற்றி எடுத்து அவள்தான் சுத்தம் செய்தாள். கட்டில் விரிப்பை மாற்றினாள். மாத்து வேட்டியை அணிவித்தாள். துவண்டு தொங்கிய குறியைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது. வருடக்கணக்கில் புலங்காத குறி. அடர்ந்த நரை மயிர்களுக்கூடாக மறைந்து கிடந்தது.

”சார்…கெடங்க நானு எதுனா ஜொர மாத்திரை வாங்கியாறேன்” என்று எழும்பியவளைக் கைபிடித்து நிறுத்தினார் அவர்.

அவர் முகத்தில் ஏதோ ஒரு சாயலில் அன்பின் யாசிப்பு தோய்ந்து வழிந்தது.  அரவணைப்புக்கோ தயவுக்கோ துடிக்கும் கைகள். சின்ன ஸ்பரிசத்துக்கு  ஏங்கும் ஒரு கெஞ்சல் பார்வை. பசியில் துடிக்கும் கன்று தாய்ப் பசுவை பார்ப்பது போல. அந்தப் பார்வையில் இருபது ஆண்டுகளுக்கான உறவாடல் பசி பொதிந்திருந்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். நெற்றிப் பொட்டோரம் வழிந்த அவரின் கண்ணீரை  உள்ளங்கையால் துடைத்து விட்டாள்.  அவரின் அடிமன ஆழத்திலிருந்து எழுந்த அந்த ஹீன ஓசை அவளுக்குக் கண்டிப்பாகக் கேட்டிருக்க வேண்டும். முகத்தை மாரோடு சேர்த்து அணைத்தாள்.

சட்டென எழுந்து அவரிடமிருந்து விலகி வந்தாள். பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அடுக்களைக்குள் சென்றாள். மாராக்கை விலக்கி பிள்ளைக்கு முலையூட்டினாள். கூடத்தில் பிள்ளையைப் போட்டாள். கதவைச் சற்றே ஒருக்களித்துத் தாழிட்டாள். சேலையைக் களைந்து அவருக்கு முன்னே வெற்றுமாரோடு நின்றாள். அவரின் கண்களைப் பார்த்தவாறே மேலிருந்து அன்பு செய்தாள். சற்றும் பதட்டமின்றி, சலனமின்றி! அமைதியாக, பொறுமையாக இயங்கினாள். அவரின் கண்களை ஊடுருவி கொண்டே. அந்த ஏற்ற இறக்க இயங்கல் எல்லாமுமே அவருக்கானதாக இருந்ததை அவர் புரிந்துக் கொண்டிருக்கக்கூடும். அவர் கண்கள் ஓரம் கசிந்து கொண்டே இருந்தது. நெற்றியில் முத்தினாள். இறங்கினாள். பிள்ளையைப் பார்த்தாள், பசியாறியதில்  கை கால்களை ஆட்டி கொண்டு க்…கே…க்…கே வெனக்  கெக்கலித்தது குழந்தை. பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நெடு நெடுவென வீட்டை நோக்கி நடந்தாள்.

கிழக்குத் தெருவில் தெருஜனங்கள் ஒன்றுகூடி போஸ்ட் மாஸ்டர் பழநிமுத்து சார் உடல் அடக்கத்துக்குத் தயாராகினார்கள். குறைகள் அனைத்தையும் ஒரு மனிதனின் இல்லாமை மறைத்துதான் விடுகிறது!

கொஞ்ச நேரம் போஸ்ட் ஆபீஸ் வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தாள். இடுப்புப் பிள்ளை குலுங்கக் குலுங்க முகத்தைத் திருப்பி கண்ணீரை மறைத்துக் கொண்டு நடக்கும் விசாலத்தை அங்கே இருந்த அமளியில் யாரும் கவனித்திருக்கவில்லை. மெத்த வீட்டுக்காரம்மாள் மட்டும் கலங்கிய கண்களோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button