கட்டுரைகள்
Trending

“மனோகர” மதுரை- சாம்ராஜ்

”உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்”                                        

…என்பது பரிபாடல்

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,           
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.

…மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார்

கடை கழி மகளிரின் பொழுதுபோக்கு
காலைப்பொழுதைக் கழித்தல்               

குட காற்று எறிந்து, கொடி நுடங்கு மறுகின்
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரோடு 
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை 
விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை   
ஓங்கு நீர்மாடமொடு நாவாய் இயக்கி              
பூம் புனை தழீஇ, புனல் ஆட்டு அமர்ந்து          

[குடகாற்று- கோடைக் காற்று கடை கழி மகளிர் – பொதுமகளிர். நீர்மாடம் – பள்ளி ஓடம். நாவாய்- தோணி]

 

கோவலன் நகரில் நுழைந்த முதற்பகுதி பரத்தையர் வாழுமிடமாகும். ஆங்கு இளங்காலைப் பொழுதில் குடதிசையிலிருந்து வீசும் கோடைக்காற்று வேகமாக வீசுவதால் அசைந்தாடும் கொடிகளையுடைய தெருவில் வாழ்கின்ற பொதுமகளிர், தாம் விரும்புகின்ற செல்வத்தோடு அழகும் மிக்கவராகிய காமுகரோடு கூடி வற்றாத வையை ஆற்றின் கரையிலுள்ள மருத மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் முன் துறைக்குச் சென்றனர். அங்கிருந்து பரந்து மலர்சூழ்ந்த ஆற்றிடைக் குறையில் குன்று போல் உயர்ந்து நிற்கும் வெண்மணற்பரப்பிற்கு உயர்ந்த பள்ளியோடத்திலும் தோணியிலும் ஏறிச் சென்றனர். போகும்போது அங்கிருந்த பொலிவு பெற்ற தெப்பங்களைத் தழுவியவாறே புனலாடி மகிழ்ந்தனர்.

-மதுரை காண்டம்-சிலப்பதிகாரம்
-ப.சரவணன் உரையிலிருந்து         
-சந்தியா பதிப்பகம்                           

பாண்டியன் கண்ணை மூடினான். போர் முடிந்தது, முதல் கப்பலில் ஊர். இந்தத் தடவை சென்னை வேண்டாம், நாகப்பட்டினம். சுங்க அலுவலகத்தில் ஆடை மடிப்புகளை கலைத்தும் தலையணைகளைக் கசக்கியும் பார்ப்பார்கள். நேரே திருச்சி. அங்கிருந்தே ஊர் போய் விடலாம். இல்லை, மதுரை வழியாகப் போக வேண்டும். மதுரை ரயிலடியிலிருந்து கிளம்பினால் எதிரே மங்கம்மாள் சத்திரம். அங்கேயே தங்கலாம் ஒரு நாள் இருந்து நண்பர்களைப் பார்க்க வேண்டும். மாலையில் ஒரு சுற்று. டவுன் ஹால் ரோடு, பீமவிலாஸ், மதுரையில் முதன்முதலாக மேசையில் வைத்துப் பலகாரம் தின்னும் பழக்கத்தைப் புகுத்திய கிளப்புக் கடை . மெஜுரா காலேஜ் ஹைஸ்கூல். பெருமாள் கோயில் தெப்பக்குளம் ஒரே நாற்றம். எச்சிலை-குப்பைக் கூளம்-பாசி. மாசி வீதியைக் கடந்ததும் மேலக் கோபுரத்தெரு. விக்டோரியா லாட்ஜ், மிலிட்டரி ஹோட்டல், முன் திண்ணை சுவரோரம் பாய்விரித்து, வட்டக்குடுமி-சந்தனப் பொட்டு -சிவப்புக்கல் கடுக்கன்- சாய வேட்டியராய் முதலாளி சாமிநாதப் பிள்ளை உட்கார்ந்திருக்கிறார். சிவந்த சிறு கண்கள். ஓயாத வெறுப்புப் புன்னகை, உண்டு வெளியேறுவோர் இடக்கையால் கொடுக்கும் பணத்தை ஏதோ முனகியவாறே வலக்கையில் வாங்கி, பாயைத் தூக்கி அதன் கீழே வீசுகிறார். இப்பால் உடுப்பி ரெஸ்டாரண்ட், அஜீஸ் அத்தர்க் கடை, அனுமந்தராயன் கோவில் தெருக்கள் பிரிகின்றன. டாப்பர் மாமாக்கள் மறுகுவர்: ஏப்பை சாப்பைகளை எதிர்பார்த்துச் சண்டியர்கள் வட்டமிடுவர். மூணு சீட்டுக்காரர்கள். பித்தளைச் சங்கிலிகளைத் தங்க நகையாக்கி அவசரத் தேவைக்காக குறைந்த விலைக்கு விற்கும் எத்தர்கள். பண்டாபீஸ். கோபுரவாசல், மார்வாடியின் வியாபார முழக்கம்.

”எத்தெடுத்தாலும் ஓர்ரணா! எத்தெடுத்தாலும் ஓர்ரணா!”

சித்திரை வீதிகள், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், பெரிய பயில்வான் படத்தைச் சுவரோரம் சாத்தி வைத்துக் கொண்டு சாலாமிசிரி ஹல்வா விற்பவர்கள்; ‘பொம்பளை சீக்கு’ மாத்திரை விற்பவர்கள்; நோய்க்கும் பேய்க்கும் மந்திரித்து தாயத்து விற்பவர்கள்;64 லீலைப் படங்கள் அடங்கிய அசல் சொக்கோக சாஸ்திரம் விற்பவர்கள்; தோள்கடி மருந்து விற்பவர்கள்………. கோயில் கூட்டம், பனியாவின் கூக்குரல்:

”ஏக் பனியன் தோ அணா! ஏக் பனியன் தோ அணா!” புதுமண்டபம் வாசல் அருகே ஆத்தூர் சாயபு பல்பொடி விற்கிறார். முன்னே, நகைச்சுவைப் பரவசமாய் வாய்பிளந்து நிற்கும் கூட்டம், சாயபு பேசுகிறார்:

  -பா.சிங்காரம்                                            
  -புயலிலே ஒரு தோணி (பக்கம் 88-89)  

போன நூற்றாண்டு சித்திரத்தில் பா.சிங்காரம் உருவாக்கும் சித்திரம் மிக துல்லியமானது. அபாரமானது, நுணுக்கமானது பிரமிப்பூட்டக்கூடியது.

ஜி. நாகராஜனின் ’நாளை மற்றுமொரு நாளே’ வழியாக நமக்கொரு மதுரை சித்திரம் கிட்டும்.

பாண்டியர்களின் இரண்டாம் தலை நகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் மட்ரா என்று காணப்படுவதும் ஆங்கிலத்தில் மதுரா என்று சொல்லப்படுவதும் கிரேக்கர்களால் மெதோரா என்று குறிக்கப்படுவதும் இத்தமிழ் மதுரையேயாம்”.

-கால்டுவேல் ஒப்பிலக்கணம்

சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை, ஆ.கே. காட்பாடிகள், எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள், ஹாஜி மூசா ஜவுளிக் கடை (ஜவுளிக்கடல்) 30.09.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.

மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போது போல் குழாய் அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் டெட்டானஸ் கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விறைப்பான கால்சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிடப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒரு வித ப்ரெளனியன் இயக்கம் போல் இருந்தது (பெளதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்)

கதர்ச் சட்டை அணிந்த மெல்லிய அதிகம் நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையின் இடப்புறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக் கட்டு ஜனங்கள், மீனாட்சிக் கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகைப்பாலம்… மதுரை!

– சுஜாதாவின் ’நகரம்’ சிறுகதையிலிருந்து

ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் ’காலச்சுவடு’க்கான நெடிய நேர்காணல் வைகை வடகரை சார்ந்த மிக நுணுக்கமான அவதானிப்புகளைக் கொண்டது. கோரிப்பாளையம் என்பது மருதுவின் குழந்தை பருவத்தில் அவரது தந்தையின்  தோழர்களான இலங்கையில் இருந்து வந்து தலைமறைவாயிருக்கும் ட்ராட்ஸ்கிஸ்ட் தோழர்கள் ஒளிந்து கொள்வதற்கு தோதுவான இடமாய் இருந்திருக்கிறது.
`
மனோகர் தேவதாஸின் இந்த ’மதுரை நினைவுகள்’ என்னும் நூல் முதலில் 1998 ஆங்கிலத்தில் ’க்ரீன் வெல் இயர்ஸ்’ என்ற பெயரில் வெளி வருகிறது.2008-ல் தமிழில் வருகிறது.

மனோகர் தேவதாஸ் அடிப்படையில் ஒரு பொறியாளர். தொழில்முறை அல்லாத ஓவியரும் கூட. பள்ளிக்காலங்களிலே அவரது ஓவியங்கள் புகழ் பெற்றவை. 1963-ல் மகிமா என்பவரை திருமணம் செய்கிறார். 1972-ல் நடந்த சாலை விபத்தில் அவரது மனைவிக்கு கழுத்துக்கு கீழ் முற்றிலும் செயல்பட முடியாமல் ஆகிறது. அதிலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து மனோகருக்கு லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் ”ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோஸா” என்ற குறைபாட்டினால் வலது கண்ணின் மையப்பார்வை பறிபோகிறது. இடது கண்ணிலும் பார்வை போய்விடும் என்று அச்சப்படுகிறார். தனது காரியதரிசி மாலினி உதவியுடன் தட்டச்சில் ’க்ரீன் வெல் இயர்ஸ்’ எழுதத் தொடங்குகிறார். ஆனால் இடது கண்ணின் மையப்பார்வை பறிபோகவில்லை. புத்தகத்திற்கான ஓவியங்களை அவரே வரைகிறார். இது சுயசரிதை அல்ல. நடந்த பல நிகழ்வுகளை நெருக்கமாக தழுவிய நாவல் என்றே சொல்கிறார் மனோகர் தேவதாஸ்

இந்தப் பின்னணியில் இந்த நாவலை வாசிக்கையில் நாம் வேறொரு புரிதலோடு வாசிக்கத் தொடங்குகிறோம்.

பின்னாளில் மனோகர் தேவதாஸ் தன் வாழ்வை தொகுத்து எழுதும் பொழுது துயரத்தின் சாயல் படாமல் எழுதுகிறார். ”’மேரி கஹானி’ பாடலை உணர்ச்சியுடன் பாடினான். அவன் மனசு மிகவும் நெகிழ்ந்து போயிருந்ததால் பாட்டை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று அப்போது ஜானகியும் அவன் பாடுவதை கேட்டு நெகிழ்ந்து போனாள். அவனுக்கு எம்.கே. தியாகராஜ பாகவதர் குருடனாகப் பாடிய பாடலும் நினைவுக்கு வந்தது. இப்போது அவன் ஜானகிக்கு இன்னொரு குருட்டுப் பாடகனின் பாட்டைப் பாடினான். அந்தச் சமயத்தில் தனக்கே பார்வை மெல்ல மெல்ல மங்கிப் போய் தானும் குருடாகி விடுவோம் என்பதை மனோகர் அப்போது அறிந்திருக்கவில்லை” என்று துயரத்தைக் கடந்து போகிறார்.
நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு நகரை பலவிதமாக அறிந்து கொள்ள முயலலாம். வரலாறாக, புவியியலாக , மானுடவியலாக, மொழி வழியாக, திருவிழாக்கள் வழியாக அறிய முயலலாம்.

மனோகர் தேவதாஸ்

மதுரை மிக தொன்மையான நகரம். கி.பி 2-ம் நூற்றாண்டிலேயே வெளி நாட்டின் யாத்ரீகர்களின் குறிப்புகளில் மதுரை இடம்பெற்றிருக்கிறது.

மதுரை நகரம் பத்தாம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என்பதற்கான தரவுகள் நம்மிடம் குறைவாக இருக்கலாம். ஆனால் அண்மையில் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் மதுரை எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரங்களும்கூட மிக சொற்பமாக இருப்பது நமது வரலாற்றுணர்வின் வறுமையே காரணம்.

இந்தப் புத்தகம் 1947-லிலிருந்து 1958 அல்லது 1960 வரைக்குமான மதுரையை நமக்கு வரைந்து காட்டுகிறது. பா.சிங்காரம், மனோகர் தேவதாஸ் வழியாகத்தான் நாம் அன்றைய மதுரையை கற்பனையில் விரித்துக் கொள்கிறோம்.

எழுபதுகளில் பிறந்த நான் பார்த்த மதுரையின் வரலாற்றுப் புகழ்மிக்க பழைய கட்டிடங்கள் இன்று இல்லை. இன்றைக்கு போத்தீஸ் இருக்குமிடத்தில் ஒரு பழைய வேலைப்பாடு மிகுந்த கட்டிடம் இருந்தது. வெள்ளைக்காரர்கள் அதன் எதிரே அமர்ந்து வரைந்துக் கொண்டிருப்பார்கள்.

புது மண்டபத்திற்கும், ஏழுகடல் தெருவிற்கும் நடுவில் பைரவசாமி கோவில் வாசலில் ஒரு பெரிய வட்டமான பள்ளம் இருந்தது. திடமான சுற்றுச்சுவர்களோடு கீழே பட்டியக்கல் பாவிய தரை. உள்ளே இரண்டு ஆள் நின்றாலும் வெளியே இருந்து பார்த்தால் தெரியாது. பழைய காலத்தில் ஏதோ ஒரு தேவைக்காக கட்டப்பட்டதாய் இருக்க வேண்டும். அந்த வட்டக்குழியில் சென்சார் அதிகாரிகள் தடை செய்ய முடியா கொக்கோக புத்தகங்களும், மருந்துகளும் விற்கப்படும். சிறுவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. மயக்குகின்ற மொழியில் சரளமாக ஒருவர் பேசிக் கொண்டே விற்பார். “இரும்பு கம்பியை அப்படியே தண்ணில விட்டா என்னாகும்? விரிசல் விட்டிரும் அது மாதிரி” ஏழுகடல் தெரு நுழைவில் இருக்கும் கற்தூண்கள் இருக்கும் யாழிகள் வாய்பிளந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும். இப்படியான ஓர் இடத்தை இதற்காக தேர்ந்தெடுத்தவன் ஞானவான். எத்தனை பேரை காப்பாற்றியிருக்கும் அந்த வட்டக்குழி. இன்றைக்கு அதை கான்க்ரீட் போட்டு மூடி மார்பில் இழைத்து குதிரை சிலை ஒன்றை உட்கார வைத்துவிட்டார்கள். குதிரை சிலைக்கு கீழே கிடக்கின்றன புராதன கொக்கோக புத்தகங்கள். வரலாற்றின் மீது டிஸ்டெம்பர் அடிப்பது நமக்கு அத்தனை பெருமிதம்.

எண்பதுகளின் தொடக்கத்தில் மதுரை கலெக்டர் பங்களாவை ஒட்டி எனது அத்தை வீடு கட்டினார்கள். நான் தல்லாகுளத்திலிருந்து அதற்கு போக முயன்று வழி தவறி போய் கண்ட கண்மாய்கள் கனவு போல் மனதில் நிற்கின்றன. சொக்கிக்குளம் தாண்டினால் கண்மாயும், கேணியும் தான். எல்லா கண்மாயும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. எல்லா கண்மாயிலும் சேர்ந்து உபரியான தண்ணீர் தல்லாகுளம் கண்மாய்க்குள் வர அங்கிருந்து வண்டியூர் கண்மாய்க்கு போய் மேலமடை வழியாக வைகை ஆற்றில் போய்ச் சேரும். துல்லியமான நீர் போக்குவரத்துப் பாதை. இது எண்பதுகளின் என்னுடைய சித்திரம்.
மனோகர் தேவதாஸ் 1946-ல் கோட்டையூரில் இருந்து மதுரைக்குள் நுழைகையில் ”மனோகருக்கு முதல் வரிசையில் சன்னல் ஓர இருக்கையில் அமர இடம் கிடைத்தது. அவன் சகோதரன் அடுத்த இருக்கையில் அமர்ந்து வந்தான். பஸ் பெரும் இரைச்சலுடன் மதுரையை நோக்கிச் செல்லும் போது தூரத்தில் தெரிந்த யானை மலையையும், சாலையோடு ஒட்டி வந்த நீரோடையும், எதிர்க்கரையில் தாழம்பூப் புதர்களையும் கண்டு ரசித்து மகிழ்ந்தான் மனோகர். பகலும், இரவும் சேரும் அந்தி மாலை நேரம். பஸ் மெதுவாக வளைந்தபோது கம்பீரமான மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை மனோகர் பார்க்க நேர்ந்தது. தூரத்து வானத்தை ஆலமரங்களின் பந்தல்கள் வழியாகப் பார்த்து பரவசத்துடன் “மதுரை” என்று கூவினான் மனோகர்”.

1950-ல் மதுரையின் ஒரு காலை எப்படி இருக்கும்?

”வடக்கு மாசி வீதியில் விடியத் தொடங்கியது. தூசி ஒரு மெல்லிய திரை போலிருக்க, அதன் வழியே சூரியக் கதிர்கள் விழத் தொடங்கின. இன்னும் ஆறு வாரங்களில் மதுரையும், குறிப்பாக நான்கு மாசி வீதிகளும், சித்திரைத் திருவிழாவுக்காக கலகலப்பாக ஆகிவிடும். காலையின் மந்தமான தொடக்கம் தெரிந்தது. வீடுகளின் முன்னே பெண்கள் கோலம் போடத் தொடங்கினர். பிடி அரிசிக்காக, ஏழைக் கீரைக்காரியான விதவைப் பெண்மணி கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீரை வகைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஜட்கா வண்டிகளின் மணி ஓசை அடிக்கடி கேட்டது. வெராந்தாவின் முன் பகுதியில் உட்கார்ந்து கொண்டு ஆண்கள் தினத்தந்தி பார்த்துக் கொண்டிருந்தனர். வேப்பிலைத் தோரணம் சில வீடுகளில் வாசற் கதவில் தொங்கியது.”

சின்னசின்ன நுட்பமான ஆர்வமூட்ட கூடிய தகவல்கள்.

“காந்தி இறந்த மறுநாள் மதுரையில் ஓர் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இஸ்லாமியர்களும் அதில் கலந்துக் கொள்கிறார்கள்.

காந்தி மியூசியம் என்று அறியப்படுவது இராணி மங்கம்மாவின் அரண்மனையாக இருந்திருக்கிறது.

செல்லூர் திருவாப்புடையார் கோவில் தாண்டினால் முழுக்க வயல் வெளிகள், கிணறுகள் மதுரை வைகையாற்றில் வந்து சேரும் நல்ல தண்ணீர் ஓடை.

மதுரைக்காரர்களிடமிருந்து விலகியே இருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் வசிக்கும் ரயில்வே காலனி அவர்களின் தனித்த கலாசாரம் பாடல், இசை, நடனம்.

வைகையாற்று ரயில்வே பாலத்தில் ரயில் இன்ஜினை துரத்தி ஓடும் சிறுவர்கள். அவர்களை ஆங்கிலத்தில் திட்டும் ஆங்கிலோ இந்தியன் டிரைவர்கள்.

வைகையாற்றில் பழைய கால நாணயங்களை சேகரித்த மனோகர் தேவதாஸின் ஆசிரியர். இவர்களும் நாணயம் தேடி வைகையாற்றுப் படுகையில் நடக்க ஒன்றும் கிடைக்காமல் இருட்டிப் போக இரண்டு பக்கமும் மின்மினி பூச்சிகள் மினுங்க மதுரை கோச்சடைப் பகுதியை கடக்கிறார்கள். தூரத்தே நகரம் வெளிச்சமாய் இருக்கிறது .

குதிரை வண்டிகளால் நிறைந்த மதுரை. அதன் சாணத்தின் வாடை நிரம்பிய மதுரை.
பியூ சின்னப்பா, கண்ணாம்பாள் நடித்த ’கண்ணகி’ திரைப்படம் ஐம்பதுகளில் மதுரையில் வெளியாகிறது. அப்பொழுது மதுரையில் ஒரு தீ விபத்து நடக்க, அந்தப் படம் வெளி வந்ததுதான அதற்குக் காரணம் என பேசிக் கொள்கிறார்கள்.பூட்டியே கிடக்கும் ஆயிரம் கால் மண்டபம் .

இந்த நுணுக்கமான தகவல்களின் ஊடாக ஒரு நான்கைந்து நண்பர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து பதின்மப் பருவத்திற்கு மாறும்பொழுது எதிர்கொள்ளும் இனிய சிக்கல்கள்.

நண்பர்களின் தங்கைகள் காரணமாக அவர்கள் வீட்டிற்குள் போவதற்கான கட்டுபாடுகள், சேதுபதி பள்ளி, ரீகல் தியேட்டர், வைகையாற்றுக்குள் இருக்கும் மைய மண்டபம்.

தேவதாஸும் அவரது நண்பர்களும் இளைஞர்களாய் செய்யும் சேட்டைகள், நண்பர்களின் பிரிவு, கால மாற்றம், கல்லூரி என அக்கம்பக்கமாக விரிகிறது இந்நூல்.

சாம்ராஜ்

ஆலப்புழை பயணம் போகும் அத்தியாயம் துயர்மிகு சித்திரம்; நேர்த்தியான சிறுகதை.
தமிழில் புகார்களற்ற குழந்தைப் பருவ சுயசரிதை அல்லது நாவல்கள் மிக குறைவு. பாரத தேவியின் ”நிலாக்கள் தூர தூரமாக” “மேகங்களே நிலாக்களை நகர்த்துகின்றன” இவையிரண்டும் முன்பின் சொல்ல முடியாத கொண்டாட்டமான குழந்தைப் பருவ சுயசரிதைகள். அதற்குபின் நான் மனோகர் தேவதாஸின் மதுரை நினைவுகளையே கொண்டாட்டமான, வசீகரமான, நுட்பமான சுயசரிதை தன்மையைக் காண்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஓவியங்கள் புத்தகத்தை வேறோர் உயரத்திற்கு கொண்டு செல்கின்றன.

மனோகர் தேவதாஸ் தன் எழுத்தின் வழியும், ஓவியங்களின் வழியும் ஒரு மதுரையை நம் கண்முன் விரிக்கிறார். அதன் ஊடுபாவாக நுட்பமாக கலாசார தகவல்கள். வெறுமனே குடும்பம் சார்ந்த ஒரு தகவல் குவியலாக அல்லாது அதை அன்றைய வரலாற்றோடும், கலாசாரத்தோடும் சேர்த்து சொல்கையில் நாம் மனோகர் தேவதாஸின் வீட்டையும், அவரது நண்பர்கள் குழுவையும் மாத்திரம் அறியவில்லை. அவர் எழுத்தின் ஊடாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், அன்றைய மதுரையும் ஒரு முப்பரிமாணச் சித்திரம் போல் எழுந்து வருகிறது. அதுவே இந்த நூலின் தனித்துவம்.

மனோகரும், ஜெயராஜும் பள்ளி பருவத்தில் யானை மலைக்கு போக முடிவு செய்கிறார்கள். யானை மலையை நெருங்குகையில் மழை  வந்து விடுகிறது. ஏற்றம் இறைக்கும் கிணற்றின் பின்னணியில் யானை மலையை பார்த்த வண்ணம் மலையேறாமல் திரும்புகிறார்கள். அதற்கு பின் யானை மலை போக முடியாமல் போய்விட்டது என்கிறார்.

நமக்கும் இந்த நூலை வாசித்து முடிக்கையில் ஞாபகங்கள் சுமையென மலையாய் அழுத்துகின்றன. லிபி ஆரண்யாவின் ஒரு கவிதை இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு தோதாய் இருக்கும் என்று கருதுகிறேன்.

உள்ளே வைத்து உடைப்பவர்கள்
தலைக்கு மேலே தண்ணீர்த் தொட்டிகள்
முளைவிடத் துவங்கிய பின்புதான்
நமது நிலத்தில்
கூரைகளின் கீழ் வசிப்பவர்கள்
ஒரு சோடிக் கூழாங்கற்களைச் சுமக்கும்படியாயிற்று
கூரையின் ஆகாச கங்கையிலிருந்து இறங்கும்
உப்படைத்த பி.வி.சி சர்ப்பங்களின்
தீண்டலுக்கு
நமது நீர்ப்பாதையின் போக்குவரத்து
சிக்கலாகிறது

வலிதாளாது
குப்புறப்படுத்துக் கொண்டவர்களை
அவர்கள்தான் மலர்த்தி ஆறுதல் சொன்னார்கள்
அவர்கள் வார்த்தைகளுக்கு
கண்கள் செருகிய கணத்தில்தான்
சகலமும் நிகழ்ந்திருக்க வேண்டும்

முற்பகல் செய்த ஹார்லிக்ஸ்கள்
திரும்பி வந்து மேசையில் புன்னகைக்க
முடிச்சிட்ட பாலிதீன் புழுக்கத்திற்கு
இழுப்பறையில் பழங்கள் திணற
ஒரு பகலில்
ஒருக்களித்துப் படுக்கும் நமக்கு
தூக்கிவாரிப் போடுகிறது.
அம்மருத்துவமனை அறையின் சன்னலூடே
விரல்களை நீட்டி
அத்திசையிலிருந்த மலைகளைப் பற்றி விசாரிக்கிறோம்
வெள்ளுடை தரித்த அவர்களோ
உள்ளே வைத்து உடைத்த நமது கற்களை
ஒரு கிண்ணியில் காட்டிச் சிரிக்கிறார்கள்.

-லிபி ஆரண்யா                                                       
-உபரி வடைகளின் நகரம் தொகுப்பிலிருந்து

யானை மலையை பற்றி பேசும் பொழுது இந்த கவிதை நினைவுக்கு வரவில்லையெனில் நான் என்ன மதுரைக்காரன்? சுற்றுச்சூழல்வாதிகள் யானையை ஓர் அழியும் பேருயிர் என்கிறார்கள்.

யானை மலையையேனும் அழியாமல் மதுரை காக்குமா? அதை யானை மலையே அறியும்.

நாவல்         :எனது மதுரை நினைவுகள்
ஆசிரியர்   :மனோகர் தேவதாஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close