சிறுகதைகள்

மனவெளி – ச.மோகன்

சிறுகதை | வாசகசாலை

அவர்கள் உடைந்த என்  சிதிலங்களை எடுத்து எனக்குள்ளே பொருத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் என் கணவரும்,  ஏழு வயது மகனும்தான். நான் ஏன் இப்படி உடைந்து போனேன் என்பதை யோசிப்பதற்குப் பதிலாக, என்னைப் போல் எத்தனைபேர் இப்படி உடைந்து சிதறியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவோ தலைக்குள் பிசகியது போல விட்டு, விட்டு வலித்துக்கொண்டிருந்தது.

17 வயது பள்ளி நாட்களின் இறுதியில் அல்லது கல்லூரி நாட்களின் தொடக்கத்தில் அனிச்சையாய் எழுகிற அந்த அசுரத்தனம், பிடித்தவருடனோ அல்லது பிடிக்காதவருடனோ நிகழ்ந்தேறும் திருமணத்திற்குப் பின்பான நாட்களில் அநேகமாய் அமர்த்தப்பட்டுவிடுகிறது. அந்த உணர்வானது ஒரு அற்புதமான நரம்பில் திறக்கிறது. ஆனால், அது நிகழ்ந்தேறுகிற அசமந்த சூழல், உடன்பாடற்ற மனநிலை, நாளின் அயர்ச்சி இவைகளெதுவும் ஆண்களுக்கு லட்சியமில்லை. அவர்களுடையதெல்லாம் ஐந்தாறு நிமிட தீவிரம். அவ்வளவுதான்.

அந்த மாதிரியான தருணங்களிலிருந்து மீள, நள்ளிரவு தொடங்கி பின்னிரவு வரையோ அல்லது அதிகாலை வரையோ நேரம் தேவைப்படுகிறது. அந்த மீட்சிக்கான நேரம், தூக்கத்தை வழித்தெறிந்து விட்டு, அந்த இரவுப்பொழுதுகளை இன்னும் கடுமையானதாக்குகிறது. வாய் கசப்பேறி உதடுகள் உலர்ந்து, புரண்டு புரண்டு, விடிகிற பொழுதும் உற்சாகத்தை நழுவவிட்டு விடிகிறது.

விரும்பி ஏற்கும் சம்போகத்தில் கூட, ஏதோவொரு நாடகத்தனம் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ இருப்பதாகத்தான் உணர்கிறேன். ஆனாலும் ஆனாலும் திருமணமான சமீபத்தில், அது தினசரி நிகழ்வுகளில் ஒன்றாய் நிகழ்ந்துகொண்டுதான் விடுகிறது. பின்கழுத்து பூனை மயிர் வருடவோ, மூடிய இமைகளில் முத்தமிடவோ, வெற்று முதுகில் விரல்களைப் படரவிடவோ அவகாசமின்றி அதிஅவசரமாய்ச் சில துளி இந்திரியம் எட்டிப்பார்த்து விசாரித்துவிட்டுப் போய்விடுகிறது. முட்டுச்சந்து, மூத்திரச்சந்து என மேடைகள் தோறும் பெண்ணியம் பேசினாலும், இன்றும்கூட சம்போக நிகழ்விற்கான ஆயத்தங்களைப் பெரும்பாலும்  ஓர் ஆண்தான் தொடங்க வேண்டியிருக்கிறது.

________________

பிடித்தமான இந்திப் பாடலொன்றைச் சத்தமாக ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த முற்பகல். சன்னல் கம்பிகளினூடே அந்த ஞாயிற்றுகிழமை வெயில் மந்தமாகத் தெரிந்தது. அனலற்ற நேரம். காலையில் வெளியில் சென்றிருந்த என் கணவர், ஒரு புதிய நபருடன் வந்துசேர்ந்தார். கணவருடன் வந்திருந்தவரை உபசரிக்க வேண்டுமே என்கிற கட்டாயம் என்னை எரிச்சலூட்டியது. பாடலை அமர்த்திவிட்டு முகநக அளவிலான ஒரு விருந்தோம்பலுக்கு ஆயத்தமானேன்.

அவர்தான், என் கணவரின் பணிமாற்ற நிமித்தமாய் வந்துசேர்ந்த புதிய ஊரில், இந்த வீட்டைத் தேர்ந்து வாடகைக்கு அமர்த்திக்கொடுத்தவரென்றும் உடன் பணிபுரியும் உயர் அலுவலரென்றும் என் கணவரால் அறிமுகப்படுத்தப்பட்டார். உதடு பிரியாமல் சிரித்து வைத்தார் அந்தப் புதியவர். தேநீர் நன்றாக  இருக்கிறதென்று பாராட்டிய அவர், என் கணவரைவிட இளையவராகத் தெரிந்தார். ஏறக்குறைய என் 35தான் அவருக்கும் இருக்கும்.

எனக்குக் கிஷோர்குமார் என்றால் ரொம்பப் பிடிக்குமென்று என் கணவர் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். என் சம வயதுதான் என்பதால் இனிமேல் அந்தப் புதியவர் அவர் இல்லை, அவன்தான். அவனோ தனக்குப் பிடித்ததெல்லாம் ஹரிஹரனின் கசல் மெட்டுக்கள்தான் என்று சொல்லியபடியே, உதடு பிரியாமல் மீண்டும் சிரித்தான். இசையைப் பற்றிய உரையாடல், என் எரிச்சலைச் சற்றே தணித்துவிட, இப்போது அவனது  சிரிப்பில் ஒரு மெல்லிய வசீகரம் தெரிந்தது எனக்கு.

அதற்குப் பின்னான நாட்களில் திட்டமிட்டோ அல்லது திட்டமிடப்படாமலோ ஏதேதோ நிகழ்ந்து விட்டது. என் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த அவன், உதடு பிரியாமல் சிரித்துக்கொண்டே, கிஷோர்குமாரின் பாடல்கள் அடங்கிய 3 இசைத் தட்டுகளைப் பரிசளித்தான். புதிய ஊரில், கணவரின் அலுவலக நண்பர்கள் சிலர் மட்டுமே  கலந்துகொண்ட அந்த விழாவில், எனக்குப் பரிசளிக்கப்பட்ட வழக்கமான கடிகாரம், பீங்கான், பூங்கொத்து ஆகியவைகளில் அவன் தந்த பரிசுதான் என்னை அதிகம் ஈர்த்திருந்தது. விழா முடிந்து விடைபெறும்போது, இப்போது நான் அவனைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்தேன். வேலையற்று வீட்டில் கிடந்த பொழுதுகளிலெல்லாம் அவன் பரிசளித்த இசைத்தட்டில் இருந்து கிஷோர்குமார், “மன்ஜிலே அப்னி ஜகான் பியார் கி அப் ராஸ் தே ” என்று உருகிப்போய்ப் பாடிக்கொண்டிருந்தார்.

கணவருடன் சேர்ந்து வெளிப்போந்த சில தருணங்களில் நகர வீதிகளில் அவனை சந்திக்க நேர்ந்தது. பிடிவாதமாய் ஒருமுறை உணவு விடுதியில் எங்களைச் சாப்பிட வைத்தான். பதிலுக்கு அவனைச் சாப்பிட, வீட்டிற்கு அழைக்கவேண்டிய மரபு அன்று நிகழ்ந்துவிட்டது. அதற்கான நாளாய் எதிர்வரும்  விடுமுறை தினமொன்று உறுதி செய்யப்பட்டது. விருந்திற்கான உணவுப் பட்டியலை முதல்நாளே திட்டமிட்டோம். தன்னுடைய பதவி உயர்வுக்கு அவன் பெருமளவில் காரணமாயிருப்பான் என்று என் கணவர் நம்பியதால், அவனுக்கு விருந்தளிப்பதில் என் கணவர் வெகுவாய் அக்கறை காட்டினார். ஆனால், என் ஆர்வம் வேறாக இருந்ததை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. விருந்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு வெகுநாட்களுக்குப் பிறகு அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்தினேன். என்னுடைய சமையல் அவனுக்குப் பிடிக்குமா?,  காரம் அதிகமாகச் சாப்பிடுவானா? குறைவாகச் சாப்பிடுவானா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன். அவனோடு எப்படி உரையாடுவது என்பதைக் கூட மனதிற்குள் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.

என் சமையலை விதந்து போற்றிய அவன், நீங்கள் கொடுத்துவைத்தவர் என்று என் கணவரிடம் எப்போதும் போலவே உதடு பிரியாமல் சிரித்தபடியே சொன்னான். இப்போது அந்த உதடுகளை உற்றுப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது; பார்க்கவும் செய்தேன். புகைப்பழக்கமில்லாதவன் என்பதை அந்த உதடுகளின் நிறமே சொல்லிக்கொண்டிருந்தது. படுக்கையறையில் எனது கணவரிடமிருந்து பரவிப் படர்ந்து கொல்லும் நிகோடின் நெடி, அப்போது என் நினைவிற்கு வந்துபோனது அனிச்சையானதுதானா? என்பது தெரியவில்லை.

ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று வேறொரு சந்தர்ப்பத்தில் கேட்டபோது, தான் ஒரு மிசோகேமிஸ்ட் ஆக இருப்பதால், இந்த வயதுவரை யாரும் திருமணம் செய்துகொள்ளவில்லை; இனி எப்போதும் செய்துகொள்ளப் போவதுமில்லை என்று காரணம் சொன்னான். அவனொரு மிசோகேமிஸ்ட்டாக இருந்தாலும் அவனது வெறுப்பு பெண்களின் மீதானது அல்ல என்பது பழகிய கொஞ்ச நாட்களிலே புரிந்தது. பாலியல் ஆசைகளைத் துறக்க முடிகிற மனித மனதால் ஒருபோதும் அதை வெறுக்கமுடியாதுதானே. அப்படி வெறுப்பவர்கள் இருப்பார்களேயானால் அவர்களிடம் நிச்சயம் வேறேதேனும் மனப்பிறழ்வுகள் இருக்கக்கூடும்.

________________

கல்யாண்ஜி – ஆனந்த்ஜியின் இசைக்கோர்ப்புகளை நான் வியந்து சொல்லும்போதும், எங்கே வாழ்க்கை தொடங்கும் … என்கிற கண்ணதாசன் வரிகளைப் பிரதிபலிக்கும் “ஜிந்ததி கா ஸபர்” பாடலைச் சிலாகித்துப் பேசும்போதும் சற்றும் கவனமில்லாமல் என் கணவர் அமர்ந்திருப்பார். இந்த மாதிரி ஆராய்ச்சிகளைத் தாண்டி, புனேவில் தங்கி வணிக நிர்வாகம் படித்தபோது கற்றுக்கொண்ட இந்தி மொழியறிவு, திருமணத்திற்குப் பின் வேறெதற்கும் உதவவில்லை. சிரத்தையாய்ச் சமைத்துப் பரிமாறும்  உணவு வகைகளைக் கூட, சலனமில்லாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்துபோகும் என் கணவருடனான பரஸ்பரத்தில் ஒரு தேக்கநிலை உருவாகிக்கொண்டிருந்தது. வாகனத் தவணை செலுத்தவேண்டிய தேதி வரம்பை எத்தனைமுறை நினைவூட்டினாலும் மறந்துவிட்டுக் கடைசி நாளில் சத்தம் போடுவார். சே! என்ன மனிதர் இவர்.

இந்த மனிதரிடமிருந்து விலகி,  வேறு யாரிடமாவது நிறைய பேசவேண்டும்; பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். ஆனால், அரிதாகச் சிலநேரங்களில் என்னுடன் அமர்ந்து உரையாடுவார். அந்த உரையாடலின் சாராம்சம் கூட அவருடைய பதவி உயர்வைப் பற்றியதாகவே இருக்கும். என்னுடைய சமையலோ இசையோ புத்தகங்களோ அங்கே எட்டிப் பார்க்கக்கூட  அனுமதியில்லை.

பேச்சுக்கு வடிகாலாக அந்த மிஸோகேமிஸ்ட்டைத் தேர்ந்து கொண்டேன். அவனுடன் பேசுவதில் ஒருவிதப் பரவசம் இருக்கத்தான் செய்தது. எங்கள் இருவருக்குமான அலைபேசி உரையாடலை முதலில் தொடங்கியது நான்தான். பிறகு அவன் அதைத்  தொடர்ந்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் கணவர் இருக்கும்போது, மெலிதாகப் பேசவும், குறுஞ்செய்திகள் அனுப்புவதுமான கள்ளத்தனங்களையெல்லாம் கூடச் செய்கிற அளவிற்கு நான் இயல்பாயில்லாமல் வேறாகிக்கொண்டிருந்தேன். தேடிக் கற்ற என் கல்வியறிவு, தேடாமல் கற்ற என் அனுபவ அறிவு, இவைகளிரண்டையும் முனை மழுங்கச்செய்துவிட்டு வேறேதோ ஒன்று என்னை இயக்கத் தொடங்கியிருந்தது. அதற்குப் பின் நான் எதிர்கொண்ட இரவுகள் என் மீது பெயரற்றதொரு நிறத்தைப் பூசிச்சென்றன. வேறு சில தினவுகள் திரண்டெழுந்து தணிந்துபோகத் தவித்துக்கொண்டிருந்தன.  என் மனதும் உடலும் சிலிர்த்துக்கொண்டிருந்தன. தனக்கான தட்பவெப்ப நிலையைத் தேடி கிளைகளை நீட்டும்  ஒரு செடியாக நான் மாறிக்கொண்டிருப்பதை என்னால் தடுக்கமுடியவில்லை.

அவனது பேச்சின் அரவணைப்பு அடிக்கடி தேவைப்பட்டது. அவன் அழைக்க மறந்த அல்லது தவறிய நாட்களில், தினசரி வேலைகளில் ஒரு சோம்பேறித்தனம் ஒட்டிக்கொண்டது. பாடல்களில்கூட மனம் ஒன்றவில்லை. பின்மதியத்தில் தூங்கும் நான், அந்தத் தூக்கத்தைத் தவறவிட்டுக்கொண்டிருந்தேன். அவனது அலைபேசி மணியொலி மட்டுமே என்னை உற்சாகப்படுத்துவதாக இருந்தது. இந்த அரவணைப்பில் வேறெதையேனும் என் மனம் எதிர்பார்க்கிறதா என்றுணரத் தெரியாமல் பெரிதாய்க் குழம்பிக் கிடந்தேன் நான்.

இந்த மாதிரியான உணர்வெழுச்சி, திருமணமான எல்லாப் பெண்களுக்கும் மீள்கொள்ளத்தான் செய்யும்.  தார்மீகச் சிக்கலான இந்த உணர்ச்சி நிலையை, கவனமாகக் கடந்து விடுகிற பல பெண்களுக்கு நடுவே,  சில பெண்கள் இந்தச் சிக்கலுக்குள் விழுந்துவிடுவதும் நிகழத்தான் செய்கிறது.

கணவரும் மகனுமான என் இல்லறத்தில் எனக்கிருக்கும் குறைகளெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள்தாம் என்று மனம் கிடந்து யோசித்தாலும், காற்றில் மிதக்கும் பறவையின் இறகு எங்கே சென்று விழுமென்று யாருக்குத் தெரியும்.

இடவலமாய் மிதந்துகொண்டிருந்த என் சிறகு, வெகுநாட்களாய் அடைந்து கிடந்த என் கனவுலகின் வாசலைத் திறந்துவிட்டுவிட்டது. உள்ளே துயிலாடிக் கிடந்த பட்டாம்பூச்சிகள் சிலிர்த்துப் பறக்கத் தொடங்கின. அங்கே நகராமல் உறைந்து கிடக்கும் நீரோடை நெகிழ்ந்து, அதன் பாறைகளில் படர்ந்திருக்கும் பாசிகளுக்கு அடியில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒளிந்துகொண்டிருந்தது. நீரோடைப் பாறைகளில் பாதம் பதித்து நான் நடக்கத் தொடங்குகிறேன். என்னைச் சுற்றிலும் ஏகாந்தம். பறவைகளின் சங்கீதம். ஓடை நீரின் சிலுசிலுப்பு. அந்த நொடியில் எனக்கும் றெக்கைகள் முளைத்துவிடும் போலிருந்தது.

குழந்தைகள் பிறந்ததற்குப் பின்னதான இல்லற நாட்கள், குழந்தைகளை வளர்ப்பதிலும் பொருளீட்டுவதிலுமான  தேவைகளுக்கு நடுவே தேய்ந்து போய்விடுகிறது. இடையில் அத்திப்பூத்தாற்போல் நிகழும் அதிர்வற்ற புணர்வுகளைக் கணக்கில் கொள்வதா வேண்டாமா? அதிலும் சில விநோத விருப்பங்கள் எல்லோருடைய அடிமனதிலும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தவகை பாலியல் தேட்டம்  மிகையானது என்றாலும், சராசரி விருப்பங்களே இங்கே சம்பிரதாயமாக நிதழ்ந்தேறிவிடுகிறபோது, விநோத விருப்பங்களைப் பற்றியெல்லாம்  பேச வாய்ப்பேயில்லை. பெண்களின் மீது இந்தச் சமூகத்தின் பார்வை நிறைய நேரங்களில் சலுகைகளற்றதாகவே இருக்கிறது. தினசரியிலிருந்து வாரம், வாரத்திலிருந்து மாதமென்றாகி,  பின் அரிதான தேவையாகிவிடுகிற பாலுணர்வுப் பகிர்தலைப் பற்றி விவாதிக்க இங்கே யாரெல்லாம் தயாராக இருக்கிறோம்.

இப்போதெல்லாம் என் மனவெளியில் அந்த உணர்வு, தனது ஆழத்திலிருந்து மீண்டு படிப்படியாய் மேலெழுந்துகொண்டிருக்கிறது. ஓயாத கடல் அலைகளைப் போல மீண்டும் மீண்டும் சுழன்றடிக்கிறது. அதுவொரு காற்றும் தீயும் நீரும் சேர்ந்த அதீத சுழல். இதற்குத் தகுந்தாற்போல், அந்த வாரத்தின் நடுநாளொன்றின் மதியப்பொழுதில் எதேச்சையாய் வீடேகினான் அவன். வீட்டில் என் கணவரில்லாத அந்த நேரத்தில், அவனோடு உரையாட நேர்ந்தபோது எனக்குள் ஏதோவொரு படபடப்பு. உடல் வியர்த்தது. என் குரல் நடுங்குவதாய்க் கூடத் தோன்றியது. நானும் அந்த தார்மீகச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.  இந்த நேரத்திற்கு என் மகன், அவனது பள்ளியில் அபாகஸ் சட்டத்தில் மணிகளை நகர்த்திக்கொண்டிருப்பான் என்கிற  நினைவு திடீரென வந்தது. ஆனால், என்னுடைய துடிப்பு எழுந்த வேகத்தில் அப்படியே அடங்கிப்போனது. எதற்காக நான் உணர்ச்சிவசப்படவேண்டும் ?

என் மீது என் கணவருக்கும் அவர் மீது எனக்கும் இருக்கிற நிதானமான காதல். ஏழு வயதிலும் என் மீது கால் போட்டு தூங்குகிற மகனின் குழந்தைமைத்தனம். யாருமில்லாதபோது என் காதோடு ஒலிக்கும் கிஷோர்குமார். கொஞ்சம்  பாலகுமாரன் புத்தகங்கள் இவைகளே எனக்குப் போதுமென்று தோன்றியது.

பாறைகளின் பாசிகளில் வழுக்கிவிடாமல் கவனமாக நடந்து திரும்பி, இறகு திறந்துவைத்துவிட்டுப்போன அந்தக் கனவுலகின் வாசலை அறைந்து சாத்தினேன். அந்த மிஸோகேமிஸ்ட் எப்போதோ போய்விட்டிருந்தான்.

என் வாழ்நாளில் முதன் முறையாக அழவேண்டும்போல் தோன்றியது. ஆனால், அப்படி நான் செய்யவில்லை. லேசாகக் காய்ச்சல் கண்டுவிட்ட மாதிரி உணர்ந்தேன். புறத்தில் நான் உடையாவிட்டாலும் அகத்தில் உடைந்துவிட்டேன்தானே. ஆனாலுமென்ன, அவர்கள் உடைந்த என் சிதிலங்களையெடுத்து எனக்குள்ளே பொருத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் என் கணவரும்  ஏழு வயது மகனும்தான்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close