கட்டுரைகள்
Trending

மகிழ்ச்சி என்பது யாதெனில்.. – ஜி.செல்வா

மகள்கள் கேட்கின்றனர், “மகிழ்ச்சி என்றால் என்ன?”
மார்க்ஸ் சொல்கிறார்,
‘போராட்டம்’

“நீங்கள் வெறுப்பது என்ன?”
மார்க்சின் பதில்,
“மார்ட்டின் டப்பர்”.

இன்று தோழர் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாள். இளவயதில் மார்க்சும், எங்கல்சும் கவிதையின் காதலர்களாக, கவிதையின் மீது அசாதாரணமான அக்கறை காட்டியவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் முதலில் எழுதியது கவிதைகள்தான். அதுமட்டுமல்ல, முதல் வெளியீடுகளும் கவிதை நூல்களே.

அது மட்டுமா, “தேளும் ஃபேலிக்கும்” என்ற தலைப்பில் மார்க்ஸ் நகைச்சுவை நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். இலக்கியத்தை ஏன் பயிலவேண்டும் என்பது குறித்தெல்லாம் மார்க்ஸ் விரிவாக எழுதியுள்ளார். அதன் காரணமாகவே இலக்கியத்தில் நடைபெற்று வரும் உரையாடல்களை கூர்ந்து கவனித்து விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்.

அதிகார வர்க்கத்தின் கையாட்கள், கூலிக்கு மாரடிக்கும் எழுத்தாளர்கள், அரசியல் சதிகாரர்கள் எனப் பலரால் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையான இன்னல்களுக்கு உள்ளான போதும், மார்க்ஸ் தான் வெறுக்கும் நபராகக் கூறியது, மார்ட்டின் டப்பர் என்னும் கவிஞரைத்தான்.

“அற்பவாதியின் கீழ்த்தரமான ஆசைகளுக்கு தீனி போடுகின்ற, மலிவான வெற்றியின், இலக்கிய ரீதியான அற்பவாதத்தின் உருவகம்” என அன்றைய காலகட்டத்தில் மிக செல்வாக்கு மிக்க கவிஞராக வலம் வந்த மார்ட்டின் டப்பரை மார்க்ஸ் சாடுகிறார்.

மார்க்ஸ் , எங்கல்ஸ்

“…. எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை. உதாரணமாக, ‘அகிலம்’ (உலகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் வழிகாட்டும் அமைப்பு) இருந்த காலத்தில் பல நாடுகளிலுமிருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு; நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால் இப்பாராட்டுக்களில் ஒன்றுகூட விளம்பரமாகப் பயன்படுவதற்கு நான் அனுமதித்ததில்லை; நான் அவற்றுக்குப் பதிலும் எழுதவில்லை, அப்படிப் பதிலளித்திருந்தாலும் அது அவர்களைக் குட்டுவதற்காகவே இருக்கும். எங்கெல்சும் நானும் முதன்முறையாக கம்யூனிஸ்டுகளின் இரகசியச் சங்கத்தில் சேர்ந்த பொழுது அதிகாரத்தை வகிப்பவர்களிடம் குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்க முற்படுகின்ற அனைத்தும் விதிமுறைகளிலிருந்து நீக்கப்படுவதை நிபந்தனையாக முன்வைத்தோம்.” என்கிறார் மார்க்ஸ்.

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்…” எனக் கவிபாடிய மண்ணில் பிறப்பின் அடிப்படையில் ஒடுக்குமுறை கருத்தோட்டத்தை உருவாக்கி வளர்த்தெடுத்து வக்கிரபுத்தியை, குழுமனப்பான்மையை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். வறுமை, பஞ்சம், நோய் நொடிகளும் உழைக்கும் மக்களின் வாழ்வியலை நாசமாக்கி நொந்து நொடிந்து போகும் மனங்களை வளர்த்தெடுத்து வருகின்றன.

பழமைவாத பிற்போக்கு கண்ணோட்டத்தில் ஊறித் திளைத்திருக்கும் நம்கால சமூகத்தை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அறிவியல் ரீதியாக அற ரீதியாக வளர்த்தெடுக்க மார்க்ஸ் முன்மொழிந்த தத்துவத்தை கைக்கொள்வதே சாலச்சிறந்தது.

இந்தத் தத்துவத்தின் முக்கியத்துவத்தை கைக்கொள்ள வேண்டியவர்கள் தெரிந்து கொண்டதைவிட இதற்கெதிராக களமாடுபவர்கள் மிக ஆழமாக இதனைப் புரிந்து வைத்துள்ளனர். இந்தியாவில் பகவத்கீதை நூலை பரந்த அளவில் கொண்டு சென்ற கீதை பதிப்பகம் தங்களது கருத்தோட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மார்க்சியத் தத்துவம், பொதுவுடமை கோட்பாடு ஆகியவை உள்ளதாக முடிவுக்கு வருகின்றனர். எனவே சுவாமி கற்பத்திரி மகராஜ் எழுதிய ‘மார்க்சியமும் ராமராஜ்யமும்’ நூலை வெளியிடுகின்றனர். 1957 இல் முதல் பதிப்பாக 28,500 படிகள் விற்பனையாகியுள்ளது இந்நூல். இதுவரை 7 பதிப்புகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து “இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்” நூலை எழுதியுள்ள அக்க்ஷய முகுல், “பொதுவுடமை இப்போதும் கூட இந்து வலதுசாரிகளுக்கு ஒரு குடைச்சலாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லெனினாக மாறுவோம்

“நெருக்கடியான காலகட்டங்களில் ஆலோசனை தேவைப்படும் தருணத்தில் லெனின் எப்போதும், மார்க்ஸ், எங்கெல்சிடமே செல்வார். தான் எதிர்நோக்கும் சூழலில் மார்க்ஸ் இருந்தால் என்ன செய்வார் எத்தகைய நிலைபாடு எடுப்பார்? என்ற அடிப்படையிலேயே லெனினும் செயல்படுவார். மார்க்சின் உண்மையான சீடன் லெனின்” என லெனினது வாழ்நாள் இணையரும் தோழருமான குரூப்ஸ்கயா தனது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.

இப்படியாகத்தான், மார்க்சியத்தை தனது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் வளர்த்தெடுத்து ரஷ்யப் புரட்சியை சாதித்தார் லெனின்.

இந்தியாவில் பெரும் பகட்டோடு உருவாக்கப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் கொடூரங்களும், பலவீனங்களும் பளிச்செனத் தெரிய ஆரம்பித்து விட்டன. இதைப்பார்த்து உருவான இளைய தலைமுறை இக்கொள்கையின் விளைவுகளுக்கெதிராய் அணிதிரள ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மார்க்சிடம் மார்க்சியம் பயில்வதும், லெனினிடம் லெனினியம் கற்பதும் நம் காலத்தின் அவசியத் தேவை.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. நவீன தாராளமயமாக்கலும், முதலாலித்துவமும், ஒரு பக்கம் காற்றிறக்கப்பட்ட இருசக்கர வாகனம் போன்றே செல்கிறது. அது முன் பக்கமா, பின் பக்கமா என்பதை பற்றின எந்த ஒரு கவலையையும் வெளிக்காட்டாமல் நகர்கிறது. இந்த மதிரியான சமத்துவமற்ற ஒரு சமூகத்தை தான் இந்த முதலாலித்துவம் உருவாகியுள்ளது. லெனின் எனும் மாபெரும் மனிதர் இரசியாவில் சோசலிச அரசை நிறுவினார் அதன் பிறகான வரலாறுகள் நாம் அறிந்தவையே. இன்றைய இந்திய சூழலில் படிநிலை மனப்பான்மை தான் நமது தடையாக இருக்கிறது. “ஓர் அடிமை தன்னை அடிமை என்று உணர்ந்துவிட்டால் அவன் புரட்சி செய்துவிடுவான்”, என்ற கூற்று ஒன்று இருந்தது. ஆனால் இன்று பன்னாட்டு நிறுவனங்களில் அடிமைத் தனமான தன் எந்தவொரு கருத்தையும், மறுப்பையும் தெரிவிக்கமுடியாத இடத்தில் ஒருவன் இருக்கிறான். வர்ணாசிரமம் நமக்கு கற்றுக் கொடுத்த, தினித்த ஒரு மனநிலை மேலிருப்போரை எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பதும், கீழிருப்போரை எந்த கேள்வியும் கேட்காதபடி வைத்திருப்பதுமாக இருக்கிறது. அதே மனநிலை நிறுவனங்களில், கார்பரேட் கம்பெனிகளில் நடக்கிறது. ஒரு மேனேஜர் தனக்கு கீழ் இருக்கும் ஒரு தொழிலாலிக்கு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்கிறான். ஒரு தொழிலாளியான மேனேஜரின் வழியாகவே அவனுக்கு கீழ் இருக்கும் தொழிலாளி அடக்குமுறையை அனுபவிக்கிறான். மேலே கேட்க தைரியமும் இல்லை, கீழே உதவக்கூடிய மனப்பான்மையும் இல்லை. பணிப்பாதுகாப்பை பற்றி முதலாலித்துவத்தின் மீது வைக்கப்படும் கேள்விகளுக்கு முதலாளித்துவம், தன்னையே ஒரு மிகவும் பாதிக்கக் கூடிய அல்லது பாதிக்கப்பட்ட ஒன்றாக பாவனை செய்கிறது.
    எனக்கிருக்கும் ஒற்றை கேள்வி, ஆதிப்பொதுவுடமை சமூகத்தில் தொடங்கி முதலாளித்துவ சமூகம் வரை, தன்னை ஒரு அரசனாக, நிலகிழாராக, முதலாளிகளாக தகவமைத்துக் கொண்டே இருக்கும் அந்த கூட்டம், அடுத்தக்கட்ட தகவமைப்பை ஏற்படுத்த சாத்தியம் இருக்கிறது தானே.
    தன்னை தானே தகவமைத்துக் கொள்ளாத ஒன்று டார்வின் கோட்பாடு படி வீழ்ந்திரும். ஆனால் மார்க்ஸ் முதலாளித்துவம் அழிந்து பொதுவுடமைச் சமூகம் தோன்றும் என்கிறார். அதற்கான செயல்திட்டம் இடதுசாரி, மார்க்ஸியவாதிகளிடம் உள்ளதா? இல்லையேல் அதுவொரு பகற்கனவாக போகும் வாய்ப்பு தானேஅதிகம் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close