கட்டுரைகள்

லா.ச.ரா வின் ‘அபூர்வ ராகம்’ சிறுகதை குறித்த வாசிப்பனுபவம் – வளன்

கட்டுரை | வாசகசாலை

‘அபூர்வ ராகம்’ கதையைக் குறித்து எங்கிருந்து எழுத ஆரம்பிப்பது என்பதே பிடிபடவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் லா.ச.ராவை கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவிதமான மாய மொழியில் கதைகளைப் புனைந்துகொண்டே செல்கிறார் லா.ச.ரா. அம்மொழி உண்மையில் மர்மமானது. இப்படியாக லா.ச.ராவின் எழுத்துகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் சிரமம் இருக்கிறது. மர்மமான மொழி என்றால் எல்லோரும் புரியாத மொழி என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படியல்ல. மாய மொழி அல்லது மர்ம மொழி என்று நான் சொல்ல வருவது அவரது எழுத்துகள் நமக்கு ஏற்படுத்தும் உணர்வுகள்.

சௌந்தர்யமான மொழி கதையின் ஆரம்பத்தில், ஜீவ ஊற்றாகப் பெருகெடுத்து ஓடத் துவங்கும். அதில் நாம் லயித்திருக்கும்போதே நம்மையறியாமல் ஒரு பெரும் கனவுக்குள் மாட்டிக்கொண்ட உணர்வு ஏற்படும். பின்னர் கனவு கலைந்து இயல்பு வாழ்வுக்குத் திரும்ப எத்தனிக்கும் போது லா.ச.ரா சொன்ன கதை நம்முள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி ஏதோ செய்துவிடும்.

லா.ச.ராவின் கதைகளை அறிமுகப்படுத்துவதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெறப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல அவரது கதைகள் ஜீவனுள்ளவை. அதை அறிமுகப்படுத்தினாலும், வாசிக்கும் வாசகர்களுக்கு வேறொரு உலகைத் திறந்து வைக்க அவை காத்திருக்கின்றன. எனவே அறிமுகமெல்லம் வெறும் பிதற்றல்களே.

பவா செல்லதுரை கதை சொல்வதில் வல்லவர். ஒருமுறை ஜெயமோகன் எழுதிய கதையை அவர் ஜெயமோகன் இருக்கும் சபையில் வாசித்துக் காட்டியபோது தான் எழுதிய கதையையே மறந்து யார் எழுதிய கதை என்று ஜெயமோகன் வியந்து கேட்டதாக கேள்விப்பட்டேன். பவா செல்லதுரையின் கதை சொல்லும் முறை கதைகளை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்பவை. ஆனால் ஒருமுறை லா.ச.ராவின் கதையைச் சொல்ல எடுத்துக்கொண்டு, அவர் தடுமாறி நின்ற காணொளியைப் பார்த்திருக்கிறேன். அதைத்தான் ஜீவனுள்ள கதைகள் என்று சொல்கிறேன். சொல்ல முடியாத கதையென்றால் வடிவம் இல்லாத கதைகளா என்றால் இல்லை. அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அது நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நமக்கு மட்டுமே தெரிந்த இருள்வெளி. தன் எழுத்துகளால் ஓர் அதீத வெளிச்சத்தை இருட்டில் வீசுகிறார்.

காலந்தோறும், காதலில் மாறாமல் இருப்பது ஒருவரையொருவர் வெல்ல நினைப்பது. பல எழுத்தாளார்களும் இந்த மனித சுயத்தை எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக காதலில் ஏற்படும் ஊடலை. ஆனால், லா.ச.ராவின் எழுத்தில் அது புனிதப்படாமல் வெகு இயல்பாய் நிகழ்கிறது.

‘அபூர்வ ராகம்’ அப்படியான ஒரு கதைதான். கணவனின் அன்பை வெல்ல நினைக்கும் மனைவி, தன் தாய் வீட்டுக்குப் போவதாகக் கூறுகிறாள். மனைவியின் அன்பை வெல்ல நினைக்கும் கணவன் அதை அனுமதிக்கிறான். தமிழ் சினிமாவின் காட்சிகளை நினைவு படுத்தும் கதையின் இந்தப் பகுதியில் மனித மனங்கள் எப்படியெல்லாம் வேஷம்கட்டி அலைகிறது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறார். லா.ச.ராவின் கதைகளைப் பெண்கள் கொண்டாட வேண்டும் என்று சொன்னேன் அல்லவா? ஏதோ வழக்கத்துக்காக இதைச் சொல்லவில்லை. பெண்களுக்கான இடம் எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதை உணர்வுகளுடன் பதிவு செய்தவர் லா.ச.ரா. தான் பார்த்து வளர்ந்த சூழ்நிலையை, லா.ச.ரா எழுதினார். இதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதைகளாகப் பார்க்கக்கூடாது. பார்க்க முடியாது. நூறு அல்லது ஐம்பது வருடத்திற்கு முந்தய காலத்தில் பெண்கள் இருந்த நிலை இப்போது மாறியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கேற்றார் போல அடக்குமுறைகளும் உருமாறியிருக்கிறது.

சில உதாரணங்களைத் தர விரும்புகிறேன். இந்த வருட ஆசிரியர் தினத்திற்கு எனக்குத் தெரிந்த ஆசிரிய தோழியிடம் வாழ்த்துத் தெரிவித்தேன். ”இந்த உலகத்திலே _ இல்லை, இல்லை _ இந்தப் பிரபஞ்சத்திலே உன்னைப் போன்ற நல்ல ஆசிரியை இல்லை.” என்று வாழ்த்தினேன். மிகவும் பதற்றத்துடன் என்னிடம், ”குடித்திருக்கிறாயா?” என்று கேட்டாள். ”அதெல்லாம் இல்லை” என்றேன். இங்கே பிரச்சனை என்னவென்றால், யாரும் யாரையும் பாராட்டுவதே இல்லை. வீட்டில் சமைக்கும் நம் வீட்டுப் பெண்களை, வீட்டில் உள்ள அனைவர் முன்னும் எப்போது நாம் கடைசியாகப் பாராட்டினோம் என்று நினைத்துப் பாருங்கள். குற்றம் கண்டுபிடித்திருப்போம், பாராட்டியிருக்கிறோமா? இதைத்தான் பெண்களுக்கான இடம் மறுக்கப்படுகிறது என்கிறேன். பாராட்டினால் எல்லாம் சரியாகிவிடுமா? என்று கேட்கக்கூடாது. அதுதான் அடிப்படை. பெண் செய்யும் ஒரு வேலை, அங்கீகரிக்கப்படுவதன் அடையாளம். அதிலிருந்துதான் எங்கும் செல்ல முடியும்.

மித்ரா அழகுவேலின் ‘முற்றா இளம்புல்’ கவிதைத்தொகுப்பு வெளிவர இருக்கிறது. மித்ரா இந்த நூற்றாண்டின் பெண். அவரது கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய சமர்பணத்தைச் சமீபத்தில் படித்தேன். இனி மித்ராவின் வரிகள்:

மேம்போக்காகப் பார்க்கையில் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை நான் வாழ்ந்து வருவதாகத் தோன்றினாலும் என் வாழ்வென்பது மிகப் பெரிய போராட்டம். குடும்ப அமைப்பிலிருந்து விலகி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திரமாக வாழ்தல் என்பது எத்தனை மகிழ்ச்சியானதோ, அத்தனை போராட்டங்கள் மிகுந்ததும் ஆகும். “சரிப்பா நீ அறிவாளிதான் ஒத்துக்குறேன். ஆனா அந்த அறிவால பத்து பைசாக்குப் பிரயோஜனம் இருக்கா?” என்று நான் எதிர் கொண்ட கேள்விதான் இன்னும் எனைத் துரத்திக் கொண்டிருக்கிறது. இவளுக்கு இருக்கும் திமிருக்கு நாசமாகத்தான் போவாள் எனத் தூற்றியவர்கள், நாசமாய்ப் போக வேண்டும் என விரும்புபவர்கள் ஏராளம்.

அதற்கெல்லாம் ஒரு சிறு பதிலாக, முதல் பதிலாக இதைப் பதிவு செய்கிறேன். இந்தப் புத்தகத்தையும், இனி வாழ்வில் நான் பெறப் போகும் அத்தனை வெற்றிகளையும், தொடப் போகும் அத்தனை உயரங்களையும் எனைத் தூற்றியவர்களுக்காகச் சமர்ப்பிக்கிறேன்.

இதுதான் யதார்த்தம். இப்படிக் குரலற்று தவித்த பெண்களின் குரலைத்தான் லா.ச.ரா எழுதினார். குரலற்ற பெண்கள் என்றால்  கண்ணீர் பிசுபிசுக்க அழுதுகொண்டே இருக்கும் பெண்கள் மட்டுமல்ல. வன்மம் நெருக்கடி காதல் இப்படி எல்லாம் கலந்த வாழ்வை வாழ்ந்த பெண்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு மரணம் என்னைப் பெரிதும் உலுக்கியெடுத்துவிட்டது. எண்பது வயது பெண்ணின் மகன் இறந்துவிடுகிறான், இந்தம்மாவின் இன்னொரு மகன் நாற்பது வருடத்திற்கு முன் இறந்துவிடுகிறான். அதன் பின், இப்போது அடுத்த மரணம். முதுமையில் மகனின் திடீர் மரணத்தை இந்தம்மாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகனைப் பார்த்து கதறி அழுகிறாள். அப்போது அந்த மகனின் மனைவி இந்தம்மாவிடம் தன் தாலியை கழட்டி கொடுத்துவிடவா என்று கேட்டிருக்கிறார்கள். இந்தச் செயலுக்குப் பின் இருக்கும் வன்முறை உங்களுக்குப் புரிகிறதா? இது நடந்தது இப்போது… போன மாதம். இப்படியான ஒரு கதைதான் லா.ச.ராவின் புகழ்பெற்ற ‘பாற்கடல்’. சொல்ல வந்த கதையைச் சொல்லாமல் வேறு எங்கெங்கோ சென்றுவிட்டேன். சரி கதைக்குத் திரும்புவோம்.

மிகவும் சுலபமான காதல் கதைதான் ‘அபூர்வ ராகம்’. ஏற்கனவே சொன்னது போல ஓர் எளிய சுனையிலிருந்து வார்த்தைகளால் கதை சுரக்கத் துவங்கி இறுதியில் படிப்பவரின் மனதில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ராகம் எப்படி ஒரு புள்ளியில் துவங்கி மற்றொரு புள்ளியில் நிறைவடைகிறதோ அதே போல ஒரு பெண் ஒருவனின் வாழ்வில் வருகிறாள். பெண்கள் எப்போதும் இசையைப் போன்றவர்களே. அவர்களின் இருத்தலை மறுக்கவும் முடியாது. அதேபோல, நிரூபிக்கவும் முடியாது. அவர்களுக்கு வேண்டியது பெரும் வெற்றிகளல்ல. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லம் ஓர் எளிய உடனிருத்தலை. ஓர் எளிய அரவணைப்பை. வார்த்தைகளால் தொடுக்கப்பட்ட ஆறுதல்களை. அது இல்லாமல் போகும் போது இசை எதோ ஒரு புள்ளியில் முற்று பெறுவதைப் போலக் காணாமல் போய்விடுகிறார்கள்.

கதையின் கருவைச் சொல்லிவிடுகிறேன். உடல்நிலை சரியானால் தன் மருமகளின் நீண்ட முடியை காணிக்கையாகத் தருவதாக ஒரு வயதான பெண் வேண்டிக்கொள்கிறாள். எவ்வளவு பெரிய வன்முறை! அதற்குத் தன் கணவன் ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருப்பதை அந்தப் பெண் கவனிக்கிறாள். அடுத்தநாள் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். கதையை இப்போது நான் சொல்லிவிட்டாலும் கடைசிக் காட்சியை நெருங்கும் போது கண்கள் பனிக்காமல் இருக்கவே முடியாது. அவள் எதிர்பார்த்ததெல்லாம் கணவனிடமிருந்து ஒரேயொரு மறுப்பு. கிடைக்கவில்லை. இவ்விடத்தில் இன்னொன்றையும் லா.ச.ரா அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். பெண்ணுக்கான அதிகமான அக்கிரமங்களைச் செய்வது, வேறு எந்த வகையிலோ பாதிப்புக்குள்ளான இன்னொரு பெண்தான்.

கதையைக் கணவனே இயம்புவதாகப் புனையப்பட்டுள்ளது. மனைவியை அவன் அபூர்வ ராகமாகவே பார்க்கிறான். அவளுக்குக் குறிப்பிட்ட எந்தப் பெயரையும் லா.ச.ரா. தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். கதையின் கடைசியில் இல்லாமல் போகும் அவளே, அதன்பிறகு இன்றுவரை தமிழில் எழுதப்படும் சிறுகதைகளின் நாயகிகளாக எனக்குத் தோன்றுகிறார்கள். இந்தப் பெண்ணின் இன்னொரு வடிவமாகவே ‘அபிதாவையும்’, ‘ஜனனியையும்’, ’அம்முலுவையும்’ இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ பெண்களாகப் பார்க்கிறேன். இந்தக் கதையைப் படித்தால் சமூகமே திருந்திவிடும் என்று சொல்ல வரவில்லை. நமக்குள் இருக்கும் பிரச்சனை என்ன என்பதை இந்தக் கதை பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறது. இதில் வரும் கணவன் அன்பே உருவானவன். ஆனால் சிகரெட்டால் மனைவியைச் சுடும் அயோக்கிய கணவர்களுக்குச் சற்றும் குறையாத வன்முறையைப் பிரயோகிக்கிறான். அதை மயக்கும் மொழியில் லா.ச.ரா நமக்குப் படிக்கத் தருகிறார். அந்த வகையில் அனைவரும் குறிப்பாகத் தம்பதியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை ‘அபூர்வ ராகம்’.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close