சிறுகதைகள்
Trending

குட்டி பூர்சுவா

லிவி

கன்னத்தில் அறைகிறது போல் சப்தம். ‘டப் டப் டப்’ என்று கால் பாதத்தில் ஓங்கி அடிக்கிற ரப்பர் செருப்பின் சத்தம். ஹேமா விழித்து விட்டாள். அந்த பெண்கள் விடுதியில் வேறெந்த அரவமும் இல்லை. ரப்பர் செருப்பின் சத்தம் இடைவெளி விட்டு ஒருவர் கைதட்டுவதைப் போல் கேட்கிறது. காலை நான்கு மணிக்குக் கழிவறைகளைச் சுத்தம் செய்யச் சென்று கொண்டிருக்கிறான், அந்த மெலிந்த உடலுடைய ரச்சித் என்கிற பெயர் கொண்ட வட மாநில இளைஞன்.

சில பெயர்கள், அள்ளித் தின்ற ஈரக் கோதுமைப் பருக்கைகளைப் போல், மெல்லும் போது வாய்க்குள் பசையாகி ஒரு தனிச் சுவை வந்து விடுகின்றன. ரச்சித். ரச்சித். ரச்சித்.

அவன் எதிர்பாராத விதமாகத் தென்படும் போதும், அவனைப் பார்த்து சின்ன சிரிப்பு சிரிக்க வேண்டும் என்று அவளுக்குள் ஆசை. அவன் ஆமோதிக்கும் படி தலையை அசைத்தால் மட்டும் போதும். ஆனால் எதிர்ப்படும் நேரத்தில், கொதிக்கும் தண்ணியில் கைவிட்டவன் போல், கண்களை படக்கென வெட்டிக் கொள்வான். அந்த நேரத்தில் ஒரு நாள் வழிமறித்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்’ என மனதுக்குள் சபதம் எடுப்பாள்.

அவளோடு பேசியும் நேரில் பேசாத, பிடித்தும் அவளுடன் நேரில் இயல்பாகப் பழகாத, அவளின் காதலைத் தெரிந்தும் ஏற்காத ஒருவனை நினைவுபடுத்துகிறான்.

இந்தக் காலையில் சிவாவின் ஞாபகம் அவளுக்குள் எழக் காரணம் ரச்சித் இல்லை. காலையில் மனதில் எழும் நினைவுகளுக்கு வலிமை அதிகம். வேறெந்த நேரத்தையும் போல் அல்லாமல், முன்னனுமானம் கொள்ளாமல் தீர்மானத்தோடு முடிவு எடுத்தது போல் மனது யோசிக்கும் வேளை. செல்போன் திரையில் மெதுவாக அவன் படங்களைத் தட்டிக் கொண்டு போனாள். வலதுகை மடிக்குள் போவதை உணர்ந்து விடுவித்துக் கொண்டாள்.

ஒட்டிய உடல், மெலிந்த தாடை, பருக்களால் வெடிப்பான கன்னங்கள். சீராகப் படராத முக மயிர்கள்-அங்கொன்றும் இங்கொன்றுமாக நாற்று நட்டதைப் போல் முகத்தில் குத்தி நிற்கும். தொள தொளத்த முழு நீள சட்டை, எண்ணை வாடையுடன் பிசுபிசுக்கும் தலை. ஏழ்மையென்று இல்லை. அவனே அவனுக்கு வழங்கிக் கொண்ட தோற்றம். அவன் அழகன். படித்து முடித்திருந்த பொறியியல் படிப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், ‘தமிழ்’, ‘இலக்கியம்’, ‘சினிமா’ என்று சுற்றி வந்து கொண்டிருந்தான்.

“மார்க்சுக்கும் ஜென்னிக்கும் பிள்ளை பிறந்திருந்தால், உன்னை மாதிரித்தான் இருந்திருக்கும் சிவா” மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அவளுக்கு மார்க்சையும் தெரியாது, ஜென்னியையும் தெரியாது. அவன் சொன்ன கதை மட்டும் தெரியும்.

புதிதாக மென்பொருள் வேலையில் சேர்ந்த நாட்கள். முதல் இரண்டு மாதங்கள் பயிற்சிக் காலங்கள். கல்லூரி முடித்து புதிதான உலகத்திற்குள் அடியெடுத்து வைத்த இன்பம், குறுகுறுப்பு, பயம். மனம் மந்த நிலையில் கனவுகளோடு கடந்து போய்க் கொண்டிருந்தது. அன்று வகுப்பறையில் பயிற்றுவிப்பவன் வரவில்லை. சிவா எழுந்து நான் உங்களுக்கு ‘மார்க்ச் ஜென்னி’ காதல் கதையைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.

“மார்க்ச் முரடர். அழகென்று இல்லை. வசதியில்லாதவர். ஜென்னி பணக்கார வீட்டில் பிறந்தவள். மிக அழகானவள்.…

இங்கிலாந்தில் ஒரு சிறிய வீட்டில் அவர்கள் வாழ்க்கை தொடங்குகிறது. இருவருக்கும் குழந்தைகள் பிறக்கிறது. இறக்கிறது. இப்படியே ஏழு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் இறக்கின்றன. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை, வறுமை. உலக தொழிலாளர்களின் வறுமையைப் போக்க அயராது சிந்தித்து, எழுதி, செயல்பட்டவரின் வறுமை. குழந்தைக்கு ஜென்னி பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அந்தச் சூழ் நிலையை தன் தோழிக்கு எழுதும் கடிதத்தில் விவரிக்கிறாள்.

‘என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் மார்பில் பால் சுரக்கவில்லை. குழந்தை இன்னும் வேகமாக உறிஞ்சுகிறது. மார்பின் காம்பில் பாலோடு இரத்தமும் சுரக்கிறது. பால் வற்றி இரத்தம் மட்டுமே வரத்தொடங்கிவிட்டது. அந்த வலியையும் தாங்கிக் கொண்டு குழந்தைக்கு நான் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது வீட்டிற்குச் சொந்தக்காரர் வந்து வீட்டிற்கு வாடகை தரவில்லையென வந்து ஏசுகிறார். மிகவும் மனதொடிந்து போனேன். இருந்தும் இந்த கவலைகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலும். இவை மார்க்சுக்கு தெரிந்து தன் எழுத்து வேலையில் கவனம் செலுத்த இயலாமல் தவிக்கிறார். அதை நினைத்தால் தான் மனது வேதனைப் படுகிறது’ ”

கதை கேட்கின்ற பொழுது கணந் தெரியாத நொடியில் ஹேமாவின் மார்பு விடைத்ததை இப்பொழுதும் அவளால் உணர முடிந்தது. முதல் முறை காமம் சுரக்க உடல் நெகிழ்வாகவும், குழைவாகவும், மூச்சு கணமாகவும் உணர்ந்ததைப் போல்.

வகுப்பறையைக் கட்டிப் போட்ட குரலில் அவன் பேசிக் கொண்டே போனான்.

மார்க்ச் எங்கல்ஸுக்கு எழுதுகிறார்.

“எனக்குத் தீராத வேலைப் பளுவாக இருக்கிறது. வருமானம் பெரிதும் இல்லை. இரவெல்லாம் கண்விழித்து எழுதி எழுதி எரிச்சலால் என் கண்கள் ஓய்வை நாடுகின்றன. இவ்வாழ்வு என்னை ஓய்வெடுக்கும்படி அனுமதிக்கவில்லை என்பதையும் அறிவேன். வீட்டை ஜென்னி தான் கவனித்துக் கொள்கிறாள். பாவம். எனக்கு அரசியல் மிரட்டல்கள் வருகின்றன. அதைப் பற்றிய கவலை எனக்கு இல்லை. சமாளித்துவிடுவேன். இந்த வறுமையிலும் வீட்டைக் கவனித்துக் கொண்டு, தன் உடல் நலத்தையும் வருத்தி, என்னைப் பற்றியே கவலை கொள்கிறாள். எவ்வளவு வேலைப் பளுவையும் மிரட்டல்களையும் சாமாளித்துவிடுவேன். ஆனால் எனக்கு ஜென்னியை நினைக்கும் போது தான் தாங்கவியலாத துன்பம் வந்து சேர்கிறது”

‘சிவா மார்க்ச்! நான் ஜென்னி!’ இந்த நினைப்பு ஹேமாவுக்கு கிளுகிளுப்பாக இருந்தது.

ஜென்னி டிஎல்எப் ஐடி பார்க்கில் மென்பொருள் வேலையில் தொடர்கிறாள். தேன் கூட்டில் ராணித் தேனீயாக இல்லாமல் போனாலும், அடிமைத் தேனீயைப் போலாவது நாளைக் கழித்துவிடலாம் என்பதில் திருப்தி. நாளெல்லாம் தேன் கூட்டுக்கு முதுகு வலிக்கத் தேன் சுமந்து இப்பொழுது டீம் லீடர் ஆகிவிட்டாள். அடிமைகளுக்கு தாங்கள் அடிமை என்பதை உணர்த்தப் படம் எடுக்கப் போகிறேன் என்ற மார்க்ச் ஒருவருடத்தில் தன் வேலையை உதறிவிட்டுப் போனார் . இப்பொழுதும் உதவி இயக்குநர்.

எப்பொழுதாவது தொலை பேசுவான். அவசரமாக இருந்தால் கைமாறாகக் கொஞ்சம் காசு கேட்பான். அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியும் கோபமும் சோர்வும் ஏக்கமும் இயலாமையும் மனதைப் பிழியும் போதெல்லாம் அவனிடம் பேச வேண்டும் போல் இருக்கும்.

போனை எடுத்தால் “சொல்லுங்க குட்டி பூர்சுவா” என்பான். அவளுக்குப் பதவி உயர்வு வந்திருந்த நாள், அவனுக்குத் தான் முதலில் சொல்ல வேண்டும் என அழைத்திருந்தாள்.

“ஹே நான் டீம் லீடர் ஆயிட்டேன்”

“ஓ அப்ப உனக்கு கீழே நிறைய பேர் வேலை செய்வாங்களா?”

“நிறைய பேர் இல்ல. குறைஞ்சது எனக்கு கீழே பத்து பேர் வேல செய்வாங்க. அவ்வளவு தான்”

“வாழ்த்துக்கள். குட்டி பூர்சுவா”

“அப்படினா?”

“குட்டி முதலாளி”

“ஹேமான்னு எவ்வளவு அழகான பேர். அதைக் கூப்பிடுடா”

“சரிங்க பூர்சுவா”

அதன் பிறகு ஒரு முறையேனும் அவளைப் பேர் சொல்லி அழைக்கவில்லை. அவளைச் சீண்டுவதில் அவன் இன்பம் கொள்வதாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

இந்த காலை ஏன் அவன் நினைவுகளால் அதிகம் மனம் கனக்கிறது என நினைத்துக் கொண்டாள். அவனை நினைவிலிருந்து வெளியேற்றுவது கடினம். அவன் உண்மையானவனாக இருந்தான். அல்லது, அவளிடம் அப்படி நடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டான்.

பொதுவான நண்பர்களுடன் கூடிச் சுற்றத் தொடங்கிய நாட்களில் அவளிடம் அதிகம் அவன் பேசியதில்லை. பேசியதெல்லாம் ஒற்றைப்படை இரட்டைப்படை வார்த்தைகள் தான். “வா, தா, போ, எடு, குடு”. மார்க்சும் ஜென்னியும் காதலைப் பரிமாறிக் கொண்டதில்லை. ஏன் என்ற கேள்விக்குள் நுழையும் போது தன் தலை கனப்பதை உணர்வாள். சாதி, வீடு, அப்பாவில்லாத அம்மா எதுவாகவும் இருக்கலாம். குற்ற உணர்ச்சிக்குள் போகும் முன் தப்பிப்பதே நனி நன்று. ஆறுதலாக இருக்கும் ஒரு விடயம், அவன் அவள் காதலைப் புறந்தள்ளச் சொன்ன காரணம்.

“நீ எதுக்கு அவளப் பார்த்து வெட்கப் படுற. நாலு அடி தள்ளியே நிற்கிற. அவளுக்கு உன் மேல ஒரு இதுன்னு இந்த உலகத்துக்கே தெரியும்.” பொதுவான நண்பன் ஒருவன் சீண்டினான்.

“அத உன்கிட்டயோ என்கிட்டயோ சொன்னாளா?”

“அவ பார்க்கிற பார்வை, உன்னைக் கடிச்சித் தின்னக் காத்திருக்கான்னு இந்த உலகத்துக்கே தெரியிற மாதிரி இருக்கு . நீ மட்டும் எதுக்கு தெரியாத மாதிரியே நடிக்கிற”

“அத நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையைப் பாரு”

“அதையும் பார்க்கலாம். ஹேமா! சிவா உன்ன லவ் பண்ற அளவு நீ ஒன்னும் பெறுமதி இல்லையாம்”

“வா ஹேமா கேக்கலாம்” என்று அவள் பின்னால் ஒரு குரல். ஹேமாவும் எழுந்து அவனிடம் போய் நின்றாள்.

வேலையிடம் கொஞ்சம் சுவாரசியம் கூடியதாக மாறத் தொடங்கி, அவன் இருந்த கதிரையைச் சுற்றிச் சிறு கூட்டம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்பது போல், அவன் காரணத்தைச் சொல்ல வேண்டும் என்று கூடி நின்றார்கள்.

என்னுடைய பெர்சனல் என்று கெஞ்சிப் பார்த்தான். முடியாது நீ இப்ப காரணத்தை சொல்லு.

“அவ என்னை பார்க்கிறதில இருப்பது மூச்சுத் திணறவைக்கும் அன்பு. வருடக் கணக்கில் குழந்தை இல்லாதவள் காத்திருந்து பெற்ற ஒரே குழந்தையை பார்ப்பதாக, குழந்தை தன் குழந்தையென நம்பி எப்பொழுதும் கையில் கொண்டு திரியும், குளிப்பாட்டும், உடுத்திப் பார்க்கும், தன்னுடனே உறங்க வைக்கும் பொம்மையாக, ஊரில் இருக்கும் தானபிரபு, அப்படியொருவன் இருந்தால், இறைஞ்சுபவர்களுக்காகப் பரிதவிப்பதைப் போல். நான் அவளிடம் எதையும் பெறத் தயாராக இல்லை. அவள் அன்பில் இருப்பது ஒரு பரிதாபம். கருணை. அவள் சில நேரங்களில் என்னைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளி விடுகிறாள். மற்றவர்கள் போல் நீ இல்லை, அதனால் உனக்காக நான் இருக்கிறேன் என்பதைப் போல். எல்லார் மாதிரியும் தான் நான் இருக்கிறேன். என்னை அவள் ஒரு விசேச பொருளாகப் பார்க்கிறாள். அதை மட்டும் நிறுத்திக் கொள்ளட்டும். என்னைப் பொருட்டாக மதிக்காத ஒருத்தி தான் எனக்கு வேண்டும்”

“அப்பா டேய். தல சுத்துது. அதிகமா படிச்சு, அத மாதிரியே சொல்லுற. பிடிக்கலைங்கிறதுக்கு இப்படி ஒரு விளக்கமா”

அன்றைய நாட்களில் நேரில் பேசாததையெல்லாம் சேர்த்துவைத்தது போல் இன்று தொலைபேசியில் பரிமாறிக்கொள்வான்.எப்பொழுதாவது பேசும் போதும், தன்னைப் பற்றி, தான் அறிந்த மனிதர்களைப் பற்றி, புத்தகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேசுவதைக் கேட்க அவளைத் தவிர யாரும் இல்லை என்பதாக. இல்லையென்றால், தான் நிரூபித்துவிட்ட ஒருத்தியிடம் பேசிக் கொண்டிருப்பதில் , அவன் சந்திக்கும் அவமானங்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது என்று எதுவாகவேனும் இருக்கலாம் என நினைத்துக் கொள்வாள்.

அவள் மணல் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென எழுந்த சின்ன சுழற் காற்று, மணலை வாரி அள்ளி அவள் உடலெங்கும் இரைத்ததைப் போல் இருக்கிறது அவன் நினைவு. கண்ணெல்லாம் எரிச்சல், வாய்க்குள் புகுந்த மண்ணை துப்பத் துப்ப புதுமணல் கடிபடுகிறது. நாக்கில் புழுதியின் எச்சம். இரவெல்லாம், உறக்கத்திலும் அவன் நினைவிலே கழிந்தது போல் இருந்தது. உயரத்தில் வீசியெறியப்பட்ட பாலிதீன் காகிதம், வலுவற்று தரையில் விழுவதாக மனம் அமைதியாகிக் கொண்டு வந்தது. இப்பொழுது கொஞ்சம் அவன் நினைவைத் தொலைக்க இயலாமல் இருப்பதற்கு நேற்றைய நாள் காரணம் எனத் தெளிந்தது. ஒரு வேளை அவனிடம் பேசி இருந்தால், அவன் நினைவுகள் துளைக்காமல் இருந்திருக்கலாம்.

***

அன்றைய வருடத்திற்கான தரவரிசைப்படுத்தல் நேரம். ஹெச்.ஆர் விளக்கினான்

“எல்லா மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் நடைமுறை தான். வருடா வருடம் தனக்குக் கீழ் இருப்பவர்களைத் தர வரிசைப்படுத்த வேண்டும். அதற்கு பட்ஜெட் ஒதுக்குவார்கள். முப்பது வீதம் என்று கணக்கிட்டிருந்தால் பத்து பேரில் மூவருக்கு மேற்பதவி. நான்கிலிருந்து ஒன்பது வரை சம்பளத்தின் அளவு – இறங்கு வரிசையில் இருக்கும். பத்தாவதாக வருபவனை/ளை வேலையிலிருந்து நீக்க வேண்டும்”

தன் வேலையை நினைத்து தன்னையே சபித்தாள். நொந்து கொண்டாள். என்ன பதில் வரும் என்று தெரிந்தும் எதிர்க் கேள்வி கேட்டாள்.

“அது எப்படிச் சரியாக இருக்கும்? அப்படி நீங்கள் ஒவ்வொரு டீமிலும் கடைசியாக வருபவனை நீக்குவகுது தவறு. ஒருவன் அவனுக்குக் கொடுத்துவிட்ட வேலையை முடித்துவிட்டால் போதும்”

ஹெச்.ஆர் பொறுமையாகக் கேட்டான். அதுவொரு பழக்கப்பட்ட கேள்வி என்பது போல் கேட்கும்போது இடையிடையே ‘ரைட்’ ‘ரைட்’ என்றான். அவள் பேசி முடித்துவிட்டாள் என்று உறுதி செய்த பின் தொடர்ந்தான்.

“ நல்ல கேள்வி ஹேமா. இது விதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. இது தவறு என்று வாதிட்டால் உங்களுக்கு டீம் லீடராகும் தகுதி இல்லை. கொஞ்சமும் மெச்சூரிட்டி இல்லாத உங்களை யார் இந்த இடத்திற்குக் கொண்டுவந்தது. இதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் தரவரிசைப் படுத்தியதற்கு நிச்சயம் காரணம் இருக்கும். நீங்கள் ஒரு ஜூனியர் ரிசோர்ஸைப் போல் நடந்து கொள்ளாதீர்கள். இது மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை செயல்படும் பெல் கேர்வ். கம்பெனி பெர்பாமன்ஸ் சைக்கிள் உலகெங்கிலும் இருக்கும் வழக்கம் தான். நாம் செய்கிற வேலை நம் மேனேஜர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கும் எனக்கும் அதே நிலை தான். நீங்கள் பரிதாபப்படுவதை விடுத்து, கடைசியாக வந்தவனுக்கு அவன் காரணத்தைச் சொல்லி நோட்டீஸ் பீரியடை அறிவித்துவிடுங்கள். நீங்கள் இதை என்னளவில் கொண்டுவந்தால் உங்கள் திறமையைத் தான் நான் சந்தேகிக்க நேரிடும்”

அவன் வேற்று கிரகவாசி போல் மனித உணர்வுகள் அற்றவனாகத் தான் பேசுவான். எதைக் கேட்டாலும் இது கம்பெனி பாலிசி. அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவன் கிளிப்பிள்ளை.

குறித்த நேரத்திற்கு வேலையிலிருந்து நீக்க வேண்டியவளை வரச் சொல்லியிருந்தாள்.

…….எதிரில் இருந்தவளின் கண்களில் நீர் திரையைப் போல் நின்றது. தளும்பவில்லை. அவள் எந்த நிமிடத்திலும் வெடிக்கத் தயாராயிருக்கும் நீர்க்குமிழியைப் போல் வெடித்து அழத் தொடங்கலாம். அவளுக்கு வயது இருபத்தாறைத் தாண்டி இருக்காது. அவள் தன் வேலையை முடித்துவிடுவாள். யாரிடமும் பிடி கொடுத்து உரையாட மாட்டாள். தனக்குக் கொடுக்கப்பட்டதைச் செய்துவிட்டு தன் வேலையுண்டு என்பது போல் இருப்பாள்.

அவளை இப்போது சமாதானப்படுத்தி(எப்படியாவது) அனுப்ப வேண்டும்.

“நீங்க பாருங்க, மத்த எல்லோருடன் தான் நான் ஒண்ணா வேலைக்குச் சேர்ந்தேன். என்னோட பெர்பார்மன்ஸ் எந்த விதத்திலயும் குறையல. என்னை மட்டும் எதுக்கு கடைசியா ரேட் பண்ணீங்க”

“நீங்க உங்களை மத்தவங்களோட ஒப்பிடக் கூடாது, ஒவ்வொருத்தரும் அவரவர் வேலைக்காகத் தனியே தரம் பிரிக்கப்படுகிறார்கள்”

“சரி. என்னிடம் என்ன பிழையை பாத்தீங்க”

“நீங்க இன்னும் ஒரு டீம் ப்ளேயரா இல்லை”

பெருமூச்சு விட்டுச் சிரித்தாள். ஹும் என்பதில் நக்கல் தொனி.

“என்னுடைய வேலையைச் செய்யாமல், என்றைக்காவது முடிக்காமல் போயிருக்கிறேனா?”

கண்ணீர் இப்பொழுது வறண்டிருந்தது. நீர்த் திரை காற்றில் ஆடி கரைந்திருக்கும். “நீங்க எத்தனை வார இறுதி நாட்களில் என்னை அலுவலகம் வர சொன்னீங்கன்றதையும் ஞாபகப்படுத்திப் பாருங்க. நான் மறுப்பில்லாம வந்திருக்கனே. உங்க ப்ரொடக்சன் டிப்ளாய்மெண்டுன்னு சொல்லி என்னைப் பல இரவுகள் முழிக்க வச்சிருக்கீங்க”

“நீங்க மட்டும் இல்ல. எல்லாரும் தான் வேலை செய்தார்கள்.”

“என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் உங்களிடம் பதில் இல்லை. என்னை எதற்குக் கடைசியாக ரேட் செய்து, வேலையை விட்டு அனுப்பப் பார்க்கிறீர்கள்.

“நீங்கள் உங்கள் திறன் சார்ந்து ஏதேனும் சர்டிபிகேஷன் முடித்தீர்களா-இல்லை. வேலை தவிர்த்து நீங்கள் செய்த வேல்யு ஆட்-எதுவும் இல்லை. உன்னை எவ்விதத்திலும் தனித்து ஹை பெர்பார்மராக காட்டிக் கொள்ளவில்லை”

நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெண்டுலத்தை போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்குக் கூடாத தீங்கொன்று நடந்து விட்டதாக. அவள் எழுந்திருக்கப் போவதில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

அரை மணி நேரம் பேச்சு இப்படியே கடந்திருக்கும். முன்பிருந்த குரலிலிருந்த பிடிவாதம் முற்றாகத் தேய்ந்து விட்டது. சோர்வாக இருக்கலாம். “எனக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்புக் கொடுங்கள். என்னுடைய குடும்பச் சூழல்…” அவள் பேச்சில் இப்பொழுது கனிவும் அமைதியும் சேர்ந்திருந்தது.

“உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை கடினம் தான். மறுமுறை வாய்ப்பு தருவது கம்பெனி பாலிசியில் இல்லை”

“நீங்க ஹெச்.ஆர் கிட்ட பேசிப்பாருங்க, இல்லன்னா நான் பேசிக்கிறேன்” எதற்கும் துணிந்துவிட்டது போன்ற தீர்மானத்துடன் சொன்னாள்.

ஹேமாவுக்கு இப்பொழுது இவள் தன் மடியில் கைவைப்பது பற்றிய கவலை எழுந்தது.

“என் வேலையைப் பற்றி நீ எனக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. உனக்கு இவ்வளவு நேரம் பொறுமையாகச் சொல்லி விட்டேன். இதற்கு மேலும் சொல்லி என்னால் புரிய வைக்க முடியாது “ ஹேமா வெடித்தாள். சொல்லிய வேகத்தில் அவளுக்குள் பதட்டம் தொடங்கியது. இதற்கு மேலும் அவள் பலவீனத்தை அடக்கிக் கொள்வது கடினம்.

“உனக்கு வேறு கேள்விகள் இல்லையென்றால் கிளம்பலாம். மற்றவைகளை இமெயிலில் அனுப்புகிறேன்” ஹேமா அவளை முறைத்தாள்.

அந்த பெண்ணுக்கு அடுத்த நிமிடம் கண்ணீர் வெடித்துக் கிளம்பியது. அப்பொழுது அவள் முகம் சிரிப்பதைப் போல் இருந்தது. எழுந்து கையிலிருந்த கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து. மூச்சை ஆழ்ந்து இழுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியே போனாள்.

****

சிவாவிடம் பேசியிருந்தால் என்ன சொல்லியிருப்பான். இப்பொழுது நீ முழு பூர்சுவா என்றா?

இன்னும் இரண்டு மூன்று அறைகள் தாண்டி கொக்கரக்கோ என்று கூவும் செல்போனின் அலாரம் குரல் தெளிவாகக் கேட்டது. இன்று அலுவலகத்திற்குச் செல்ல மனம் விரும்பவில்லை. இன்று எந்த நில நடுக்கமும் வந்து இந்த உலகம் அழியப்போவதில்லை. எப்போதையும் போல் அலுவலகம், மீட்டிங்ஸ், பிடிக்காத விடுதி உணவு, சம்பளம் அதிகம் உயர்த்தாததின் காரணம் வேண்டி மற்றவர்களின் முறைப்பாடு.

வாட்ஸப்பில் இருக்கும் ஸ்டேட்டஸ்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது. கழிவறைக் கதவுகளின் தகரம் கிறீச்சிட்டது. அழுத்திச் சாத்தப்படும் தாழ்ப்பாளிற்கு மூச்சை இழுத்து, யானை பலம் கொண்டு முயல வேண்டும். அவள் கைகளில் வெளித் தெரிந்து ஓடும் நரம்பு ஒன்று அதனால் வந்து விட்டதாகத் தான் இருக்கும். இருட்டிலே அதைத் தடவிப் பார்த்தாள். ரச்சித் நரம்புகள் முறுக்கேறியிருக்கும்.

தண்ணீர் குழாயிலிருந்து வெறும் ப்ளாஸ்டிக் வாளியில் விழும்போது எழும் தண்ணீரின் பெரும் இரைச்சல். நீரை வேகமாகப் பாய்ச்சி அடிக்கும் சத்தம்.

மீண்டும் ‘டப்’ என்ற செருப்புச் சத்தம். ரச்சித் வேலையை முடித்துவிட்டுத் திரும்பிச் செல்லப் போகிறான். அவன் அவள் அறையைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.

செருப்பின் ஓசை அதிகமாகிக் கொண்டு போனது, போர்வையை படக்கென விட்டெறிந்து கதவைத் திறந்தாள். வரண்டாவில் இருந்த ட்யூப்லைட், கதவு திறந்திருக்கும் அளவுக்கு ஏற்ப சிறிது ஒளியை அறைக்குள் உள்ளிட்டது. கையில் வெறும் வாளியுடன் வந்து கொண்டிருந்தான். அவன் முன்னால் போய் பாதையின் நடுவில் நின்றாள். உண்மையில் திடுக்கிட்டவன் , தலையைக் குனிந்து பாதைச் சுவரோரமாக அவளைத் தாண்டி நடக்கத் தொடங்கினான்.

ரச்சித் என்கிற குரலைக் கேட்டுத் தலை திருப்பியவனை இரண்டு கைகள் இறுக்க அணைத்துக் கொண்டிருந்தன.

——————————————

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close