சிறார் இலக்கியம்
Trending

குட்டியானை அழகன்- ஞா.கலையரசி

ஞா.கலையரசி

அந்தக் கிராமத்தின் பெயர் அகரம். அதன் பக்கத்தில், ஒரு பெரிய காடு இருந்தது.

ஒரு நாள் அதிகாலையில், அந்தக் காட்டிலிருந்து, அகரம் கிராமத்துக்குள் நுழைந்த நாலைந்து யானைகள், தோட்டத்தில் விளைந்திருந்த கரும்பையெல்லாம் முறித்துத் தின்று, பசியாறின…

அன்று காலை வழக்கம் போல், வேலைக்கு வந்த கிராம மக்கள், கரும்புத் தோட்டம் முழுக்கச் சேதமாகியிருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியுற்றனர்.
உடனே வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டு, யானைகளைப் பயமுறுத்தி, மீண்டும் காட்டுக்குள் துரத்தினர்.

யானைகளைத் துரத்திய போது, ஒரு குட்டியானையால், அம்மா யானையுடன் வேகமாக ஓட முடியவில்லை. அதனால் அதனிடமிருந்து பிரிந்து, வழி தெரியாமல், எங்கெங்கோ ஓடி, கடைசியில் பக்கத்து ஊருக்குள் நுழைந்து விட்டது.

தனியாக வந்த குட்டியானையைப் பார்த்தவுடன், அங்கிருந்த சிறுவர்களுக்கு, ஒரே கொண்டாட்டம். நாலாப் பக்கமும் நின்று, கூச்சலிட்டவாறு, அதனைத் துரத்தினர்.

சிலர் அதன் பக்கத்தில் நின்று கொண்டு, கைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் மீது ஏறி அமர்வதும், வாலைப் பிடித்து இழுப்பதுமாக, சித்ரவதை செய்தனர்.

மிரண்டு போன குட்டி, தாயைக் காணாமல், முதலில் பரிதாபமாகக் கத்தியது. அதன் குரல், கேட்பவர்களின் மனதைக் கலங்கச் செய்வதாக இருந்தது.

அதன் கதறலைக் கேட்டு, அங்கு ஓடி வந்த தமிழினி, கூடியிருந்த சிறுவர்களை அதட்டினாள். ஏழாவது படித்த தமிழினிக்கு, சிறு வயதிலிருந்தே, யானை என்றால் மிகவும் பிடிக்கும்.

“டேய்! நகருங்கடா, பாவம். அதை ஒன்னும் பண்ணாதீங்கடா,” என்று கத்தினாள். அவள் அதட்டியதைச் சட்டை செய்யாமல், குட்டியின் அருகில் நின்றவாறு, சிறுவர்கள் கூச்சல் போட்டனர்

மிரண்டு போன குட்டி, தன்னைச் சுற்றி நின்றவர்களைக் கோபமாகத் துரத்தி, முட்டத் துவங்கியது. எல்லோரும் ஆளுக்கொரு திசைக்கு ஓடினர். யாரும் அதன் பக்கத்தில் போக முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து, தமிழினி மெல்ல, அதனிடம் நெருங்க முயன்றாள். அவளை மட்டும் அது முட்டாமல், அமைதியாக நின்று, அருகில் வர அனுமதித்தது. அதைப் பார்த்து, அங்கிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்!. அவள். அதன் தலையை, மெதுவாகத் தடவிக் கொடுத்தாள். அழகாக இருந்த அந்தக் குட்டிக்கு, அழகன் என்று பெயர் சூட்டினாள்.

அழகனை எப்படியாவது, அதன் தாயுடன் சேர்க்க வேண்டும் என்று தமிழினி முடிவு செய்தாள். அதற்காக வனத்துறையில் வேலை செய்த, அவள் மாமா வேல்முருகனை அணுகினாள்.

அந்தக் காட்டைப் பற்றி, விரிவாக அறிந்திருந்த வேல்முருகன், அவளுக்கு உதவ முன்வந்தார். இருவரும் அழகனை அழைத்துக் கொண்டு, காட்டை நோக்கி நடக்கத் துவங்கினர். போகும் வழியில், யானைகளைப் பற்றிய விபரங்களை, வேல்முருகன் தமிழினிக்குச் சொல்லிக் கொண்டே வந்தார்.

“நம்ம மக்கள் தான், மரத்தையெல்லாம் வெட்டி, காட்டை அழிச்சித் தோட்டங்களா மாத்திட்டாங்க; யானைகளுக்குப் போதுமான தீனியும், தண்ணியும் கிடைக்காமத் தான், ஊருக்குள்ளாற வருதுங்க. வழக்கமா அதுங்கப் போற வழித்தடத்தையெல்லாம், வயலாகவும், போக்குவரத்துப் பாதையாவும் ஆக்கிட்டாங்க. அதுங்க ஊருக்குள்ளாற வராம, வேற என்ன செய்யும்?”
“உண்மை தான் மாமா,” என்றாள் தமிழினி..

“அதுங்களோட வழித்தடத்தையும், வாழ்விடத்தையும், நாம தான் அநியாயமா அபகரிச்சிட்டோம்; ஆனா ஊருக்குள்ள நுழைஞ்சி, யானைங்க அட்டகாசம் செய்யுதுங்கன்னு, நாம சொல்றது, எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?” என்று வேல்முருகன் சொன்ன போது தான், ‘தப்பு நம் மீது தான்; யானைகள் மீது இல்லை,’ என்ற உண்மை, தமிழினிக்குப் புரிந்தது.

இருவரும் காட்டின் நடுவில் இருந்த, ஓடைக்குப் பக்கத்தில், அழகனை நிறுத்தி வைத்துக் கொண்டு, மரத்தடியில் அமர்ந்தனர்.

“மனுஷனை விட, யானைகளுக்கு மோப்ப சக்தி ரொம்ப அதிகம்; ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ள, அதோட அம்மா இருந்தா, எப்படியும் குட்டியைத் தேடி வந்துடும்,” என்றார் மாமா.

“இது வாயைத் தொறந்து கத்தினா,, அதோட குரலைக் கண்டுபிடிச்சி, அம்மா வருமா, மாமா?” என்று கேட்டாள் தமிழினி.

“கண்டிப்பா வந்துடும்; ஆபத்துல இருக்கிறப்போ, இது கத்தறது வித்தியாசமாப் பதற்றமாக் கேட்கும்; அம்மாவுக்குக் காதுல விழுந்தா, தன் குட்டியோட குரலுன்னு கண்டுபிடிச்சி, ஓடோடி வந்துடும். ஆனா இது காலையிலேர்ந்து, அம்மாக்கிட்ட பால் குடிக்காம, ரொம்பச் சோர்வா இருக்கு; இப்ப இதால வேகமாக் கத்த முடியாதே,” என்றார் வேல்முருகன்.

“காலையில பசங்க துரத்தினப்போ, பரிதாபமா இது கத்தினதை, என்னோட போர்டபிள் டேப் ரெக்கார்டர்ல, பதிஞ்சி எடுத்துட்டு வந்துருக்கேன் மாமா. இது பாட்டரியில வேலை செய்றது தான். இது பயன்படுமா பாருங்க,” என்றாள் தமிழினி.

“வெரி குட் ஐடியா! நல்ல வேலை செஞ்சே!” என்று அவளைப் பாராட்டினார் மாமா.

டேப் ரெகார்டரை ஆன் செய்து, காசெட்டை ஓட விட்டார். அழகனின் அபயக்குரல், விட்டு விட்டுக் கேட்டது. உயரமான ஒரு மரத்தின் இரு கிளைகளுக்கிடையில், வடக்கு நோக்கி, அந்தப் பெட்டியை வைத்தார்.

திரும்பத் திரும்பக் காசெட்டை ஓட விட்டுக் கொஞ்ச நேரம், அவர்கள் காத்திருந்தார்கள். ஒன்றும் பலனில்லை என்றவுடன், பெட்டியைத் தெற்கு பக்கமாகத் திருப்பி வைத்தார்கள்.

கொஞ்ச நேரத்தில், யானைகள் ஓடி வரும் சப்தம் கேட்டது. வேல்முருகனும், தமிழினியும் பாதுகாப்பாக, ஒரு மரத்தின் மீது ஏறி, கிளைகளுக்கிடையில் மறைந்து, நின்று கொண்டார்கள். எதற்கும் இருக்கட்டுமென்று, மயக்க ஊசி நிறைந்த துப்பாக்கியையும், அவர் பாதுகாப்புக்காக எடுத்து வந்திருந்தார்.

திடீரென்று மூன்று யானைகள், வேக வேகமாக வந்து, அழகனைச் சூழ்ந்து கொண்டன.

அதில் ஒரு யானை மட்டும், தமிழினி மறைந்திருந்த மரத்தை நோக்கி, ஆவேசமாக வந்தது. மரத்தை முறித்துத் தன்னைக் கீழே தள்ளிக் கொன்று விடுமோ எனத் தமிழினி பயந்தாள். ஆனால் அழகன், அந்த யானைக்கு முன்பக்கமாக வந்து நின்று, அதைச் செய்யவிடாமல் தடுத்தது.

அதைப் பார்த்த அந்த யானை, தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, திரும்பி, அழகனை மற்ற யானைகளிடம் அழைத்துச் சென்றது.

அழகன் நடுவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, யானைகள் வந்த வழியே திரும்பத் துவங்கின. போகும் போது, அழகன் தமிழினியை நோக்கித், தன் தும்பிக்கையைத் தூக்கிக் காட்டியது. பதிலுக்குத் தமிழினியும், அதற்கு டாட்டா காட்டினாள்.

“என் அம்மாவிடம், என்னைப் பத்திரமாகக் கொண்டு வந்த சேர்த்த, உனக்கு ரொம்ப நன்றி!” என்று அழகன் சொன்னது போல், தமிழினிக்குத் தோன்றியது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close