சிறார் இலக்கியம்
Trending

குறள் சொல்லும் மணிக்கூண்டு

மு.பாலசுப்பிரமணியன்

புதுவை மாநில எல்லையிலே
புகழ்பெற்ற ஊராம் முத்தியால்பேட்டை
இதமாய் தென்றல் வீசிவரும்
இயற்கை நெய்தல் நல்லூராம்

சென்னை செல்லும் சாலைக்கு
தேசத்தந்தை நற்பெயராம்
அண்ணாந்து பார்க்கும் நிலையினிலே
அங்கே நிற்கும் மணிக்கூண்டு

அப்பாவோடு பள்ளிக்கு
அன்றாடம் செல்லும் போதினிலே
தப்பாமல் அப்பா சொல்வார்கள்
தவறாமல் மணிக்கூண்டு பெருமைகளை

மணிக்கொரு தரம் மணியடிக்கும்
மான்பு நிறைந்த மணிக்கூண்டு
தனியாய் இப்போது பராமரிப்பின்றி
பாழடைந்து கிடக்கிறது

அப்பா சொல்லும் போதெல்லாம்
அண்ணாந்து பார்ப்பேன் நானுந்தான்
எப்படி செப்பனிடுவதென்று
எண்ணி எண்ணி பார்த்திடுவேன்

இப்படியாக ஓவ்வொரு நாளும்
ஏக்கத்தோடு இருக்கையிலே
அப்ப்பா ஒரு யோசனை
அதிசயமாக வந்ததுவே

ஊரில் எந்த குறைகளையும்
உடனே சொல்லுங்கள் செய்கின்றேன்
உரத்த குரலில் ஓட்டு கேட்டார்
உற்சாகமாக மணிகண்டன்

சட்ட மன்ற உறுப்பினரிடமே நான்
சரிசய்ய சொல்லி கேட்டிட்டேன்
மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாரே
மளமளவெனவே உழைத்தாரே !

வேலைகள் நடக்கும் போதினிலே
வேண்டிய உதவிகள் நான் செய்தேன்
காலை மாலை நாள் முழுதும்
கடிகாரம் மணிக்கு ஒருமுறை ஒலிக்கும்

நினைக்க நினைக்க ஆனந்தம்
நிறைய நிறைய கொண்டாட்டம்
இனிக்கும் செய்தியை பகிர்கையிலே
இன்னொரு யோசனை தோன்றியதே

மெதுவாய் ச.ம.உ அண்ணனிடம்
மெல்ல காதில் நான் சொன்னேன்
இதுவே நல்ல யோசனையாய்
என்னைப் புகழ்ந்து அணைத்தாரே!

முதல்வரை அழைத்து திறப்பதற்கு
முழமூச்சாய் இறங்கி வேலைசெய்தார்
பதவி உயர்வு பார்க்காமல்
பம்பரமாய் வேலை செய்தார்

திறப்பு விழாவும் வந்ததுவே
திரளாய் மக்கள் கூடினரே
அற்புதமாக திறக்கையிலே
அடித்தது மணியும் அழகாக

மணியடித்து முடிந்ததுமே
மறுநொடி திருக்குறள் ஒலித்ததுவே
கணீரெனும் குரலில் குறள் விளக்கம்
கருத்தும் காதுகளில் ஒலித்தனவே

கைதட்டி மக்கள் புகழ்ந்தார்கள்
காரியம் நினைத்து வியந்தார்கள்
கைபிடித்து முதல்வர் எனையழைத்து
காரணம் நானென வாழ்த்தினாரே !

மணிகண்டன் அண்ணன் பெருமுயற்சி
மறுபடி மணிக்கூண்டு இயங்கியது
மணிக்குறள் ஒலித்து பரப்பியது
மக்கள் எல்லோரும் வாழ்த்தினரே !

ஊரில் இருக்கும் இளைஞரெலாம்
ஓன்றாய் இணைவோம் வாருங்கள்
தேர்வடம் பிடித்து இழுத்திடுவோம்
தேவைகள் செய்து வளர்ந்திடுவோம் !

பொதுப்பணி செய்தால் புகழ்கிட்டும்
பொறுப்பாய் செய்வோம் நண்பர்களே !
புதுமைகள் படைப்போம் வாருங்கள்
புதிதாய் சிந்தித்து செயல்படுவோம் !

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close